Thursday, August 11, 2011

கார்லிடோஸ் வே: நிழலில் கரையும் நியாயங்கள்


வீட்டில் எந்த வேலையும் இல்லாமல் தரையில் படுத்துக்கொண்டு டி.வி. பார்த்துக்கொண்டிருக்கும் சுகத்தின் மேன்மையை என்னை போன்ற சோம்பேறிகள் அறிவார்கள். அதிலும் எதிர்பாராதவிதமாக ஏதாவது நல்ல படங்களோ அல்லது நிகழ்ச்சிகளோ காணக்கிடைத்தால் ஒரு இன்ச் கூட நகராது உடல். திரையில் நானா படேகரோ, டென்சல் வாஷிங்க்டனோ , ஜான் ட்றவால்டோவோ தோன்றினால் அடுத்த சேனல் பட்டனுக்கு விரலும் நகராது. படம் சாதாரணமாய் இருந்தாலும் தங்களது தனித்த நடிப்பால் படத்தை தாங்கி நிற்பார்கள். அலட்சியமான அதே சமயத்தில் தீவிரத்தன்மை குறையாத நடிப்பு திறன் கொண்ட இந்த நடிகர்களின் வரிசையில் எனக்கு மிகவும் படித்தவர் அல் பசினோ. அவர் படங்களில் எனக்கு காட்பாதர் வரிசை படங்கள் மிக விருப்பமானவை. பேசும் கண்களும் உயர்ந்து தாழும் புருவங்களும் போதும் ; எந்த வசனமும் தேவைப்படாது காட்சியின் சூழலை புரிந்து கொள்ள. அற்புத நடிகர்.நமக்கெல்லாம் நன்கு பரிச்சயப்பட்ட நடிப்பு, உடல்மொழி , முகபாவனை என்று நம்மிடம் இருந்து அதிகம் அந்நியப்படாத ஒருவராக அல் பசினோ காட்சி தர கமல்ஹாசனே காரணம். நகல் நாயகனுக்கு நன்றி.

என்ன தான் ஒலக சினிமா ரசிகர் என்றாலும் ஹாலிவுட் படங்களில் "இட் சீம்ஸ் டு பீ டெட்" என்ற எளிய (!) வாக்கியம் கூட காதில் விழும்போது புரிபடாது. "இட் சிம் டு பீடேட்" என்று அமெரிக்க தோரணையில் உச்சரிப்பு மிரட்டும் . என்னை போன்ற 'ஆங்கிலப்புலமை' கொண்ட பாமரர்களுக்கு என்றே நல்லுள்ளம் கொண்ட ஆங்கில திரைப்பட சேனல்காரர்கள் ஆங்கிலத்திலேயே சப் டைட்டில் போடுகிறார்கள். (மணிரத்னம் , கௌதம் மேனன் போன்ற மேதைகளின் படங்களில் தமிழிலேயே சப் டைட்டில் தேவைப்படுவது வேறு விஷயம்!). எனவே படத்தின் கதையையும் வசனங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

போன வாரம் ஹோம் பாக்ஸ் ஆபீசில் Carlito's way என்ற படம் வந்தது. அல் பசினோவும், தற்போது லஜ்ஜையின்றி நகல் எடுக்கப்பட்டு தலை தெறிக்க ஓடி தமிழகத்தின் தரைகளை கண்ணீரால் கழுவிக்கொண்டிருக்கும் "தெ. தி. மகள்" படத்தின் மூலப்பட நடிகர் சீன் பென்னும் நடித்தது. சீன் பென்னின் "Dead man walking" திரைப்படம் என்னை உறைய வைத்த படங்களில் ஒன்று. பின்னணி இசையில் நம் பக்கத்துக்கு வீட்டு வித்வான் மறைந்த நுஸ்ரத் பதே அலிகானின் ஆலாபனைகள் நம்மை உலுக்கி எடுக்கும். மரண தண்டனை கைதிக்கும் அவரை தண்டனையில் இருந்து காப்பாற்ற போராடும் கிருஸ்துவ பாதிரிப் பெண் ஒருவருக்கும் நடக்கும் பாசப்போராட்ட கதை. கூடிய சீக்கிரத்தில் இதை நம் தமிழ் சினிமா மேதைகளான விஜய், கௌதம் மேனன் அல்லது கமல்ஹாசனே கூட தமிழ் மொழி கொண்டு தழுவி தன் சொந்தப்படம் என்று தம்பட்டம் அடிக்கலாம்.(இந்த தழுவல் விஷயங்கள் பற்றி சில இணைய மேதைகள் குத்தங்கொறை சொல்லி அக்கப்போர் செய்து வருவதாக இன்னொரு இணைய மேதை ஒருவர் ஆர்ப்பரிதுக்கொண்டிருப்பது வேறு விஷயம்..!)

Carlito's way யின் பல காட்சிகளை ஏற்கனவே நம் திரைப்பெருமக்கள் உருவி எடுத்து உண்டு வாழ்கிறார்கள் என்ற தகவலை எனது நண்பர் ஒருவர் தெரிவித்தார். உண்மை. எளிய கதை. ஏற்கனவே நாவலாய் வந்த கதை என்று நண்பன் விக்கி சொன்னான். நாவலின் இரண்டாவது பாகத்தை சார்ந்து எடுக்கப்பட்ட படம் என்கிறான் அவன்.

படம் குண்டு காயங்களுடன் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்படும் கார்லிடோ வின் (அல் பசினோ) க்ளோஸ் அப்புடன் ஆரம்பிக்கிறது. அவனது பார்வையில் படும் ஓவியம் ஒன்றில் ஒரு பெண் கடற்கரையில் நடனமாடுகிறாள்.அவனது நினைவலைகள் காட்சிகளாய் விரிகின்றன. ஒரு காலத்தில் போதை மருந்து போன்ற தொழில்களில் தேர்ந்த தாதாவான கார்லிடோ அவனது வழக்கறிஞரும் நண்பனுமாகிய க்லீன்பெல்டின் (சீன் பென்) சாதுர்யத்தால் நீண்ட தண்டனைக்காலத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறான்.தன்னை காப்பாற்றிய நண்பன் என்பதால் அவன் மேல் அளவற்ற நன்றி கொண்டிருக்கிறான். விடுதலைக்கு பிறகு தன் சிறைக்காலத்தில் நிழல் உலகத்தில் பெரிய மாற்றம் வந்திருப்பதை பார்க்கிறான். அவனது சொந்தக்கார பையன் ஒருவன் கூட இப்போது தொழிலில் இருக்கிறான். போதை மருந்து கடத்தும் குமபல் ஒன்றுக்காக வேலை பார்க்கும் அந்த இளைஞன் கார்லிடோவையும் பேச்சு துணைக்கு அழைக்கிறான்.அவன் கையிலோ முப்பதாயிரம் டாலர்கள்.சம்பளப்பணம். " ஒரு காலத்தில் நீங்க எவ்ளோ பெரிய ஆள்.. நீங்க என்கூட வந்தா ஒரு கெத்தா இருக்கும்" என்று அவன் சொல்ல விருப்பம் இல்லாமல் அவனுடன் செல்கிறான் கார்லிடோ. எதிர்பாராத விதமாய் அங்கு அந்த இளைஞனை அந்த கும்பல் கொலை செய்ய, கூட சென்ற கார்லிடோ கும்பலையே கொன்று குவிக்கிறான். முப்பதாயிரம் டாலர் கார்லிடோ கையில். அதை வைத்து செட்டில் ஆகி விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் அவனுக்கு வேறு விதமான பிரச்சனை வருகிறது.

வழக்கறிஞரான க்லீன்பெல்டின் க்ளையன்ட் ஒருவன் சிறையில் இருக்கிறான். அவன் க்லீன்பெல்ட் தன் பணமான ஒரு மில்லியன் டாலரை திருடி வைத்திருக்கிறான் என்று குற்றம் சாட்டுகிறான்.அதோடு தன்னை சிறையில் இருந்து தப்ப வைக்குமாறு கேட்கிறான். க்லீன்பெல்ட் செய்ய வேண்டியது..அந்த கைதி தப்பிக்கும்போது சிறைக்கு அருகில் இருக்கும் ஆற்றுக்கு படகுடன் வந்து இவனை கொண்டு செல்ல வேண்டும். பதறிப்போகும் க்லீன்பெல்ட் தன் ஒரே நம்பிக்கைக்கு உரியனான கார்லிடோவிடம் விஷயத்தை சொல்ல. அவன் உதவி செய்ய முன்வருகிறான்.தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றியவன் என்பதால் பணம் வாங்கக்கூட மறுக்கிறான் கார்லிடோ.

ஆனால் அவனை காதலிக்கும் டான்சரான கெய்ல் உள்ளுணர்வு உறுத்த க்லீன்பெல்டுடன் படகில் செல்ல வேண்டாம் என்று மன்றாடுகிறாள். கார்லிடோவுக்கோ இது ஒரு கடமை.அவள் வேண்டுகோள்களை புறக்கணித்து க்லீன்பெல்டுடன் செல்ல , அங்கு அவனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தான் படத்தின் திருப்பு முனை. அந்த காட்சி படமாக்கப்பட்ட விதம், இசை இரண்டும் அற்புதம். பிறகு இந்த விஷயங்களில் இருந்து விடுபட்டு தன் காதலியுடனும் அவள் வயிற்றில் வளரும் தங்கள் குழந்தையுடனும் மியாமிக்கு தப்பிக்க திட்டமிடும் கார்லிடோ திரும்பவும் வஞ்சகத்தால் வீழ்கிறான். தனக்குப்பிறகு கெய்ல் தன் குழந்தையுடன் புது வாழ்க்கைக்கு தயாராவாள் என்ற நம்பிக்கையுடன் இறக்கும் கார்லிடோவின் குரல் கரைய அவன் கண்ணில் படும் ஓவியம் உயிர்பெறுகிறது. அலைபாயும் கடலோரத்தில் கெய்ல் நடனமாடிக்கொண்டு இருக்கிறாள்.

படத்தில் நிழலுகத்தில் நட்பு என்ற ஒன்று கிடையாது என்ற செய்தி பல முறை முன்வைக்கப்படுகிறது. கார்லிடோவின் உறவினனான அந்த இளைஞன் தான் சரக்கு கொண்டு போய் கொடுக்கும் இடத்தில இருப்பவர்கள் எல்லாம் என் நண்பர்கள் என்கிறான். பின்னர் அவன் கழுத்தறுபட்டு கிடக்கும்போது "இந்த தொழிலில் நண்பர்களே இல்லை..பார் உன் நிலைமையை " என்று வருந்துகிறான் கார்லிடோ. அதே போல் தனக்கு துரோகம் செய்த க்லீன்பெல்ட்டின் துப்பாக்கியை எடுத்து அவன் கைக்கெட்டும் வகையில் வைத்து விட்டு "எதிரி வரும்போது எடுத்து சுட வசதியாக இருக்கும்" என்று சொல்லி வெளியேற, க்லீன்பெல்டை பழி தீர்க்க வருகிறான் அவனால் கொல்லப்பட்ட கைதியின் மகன். பதறி துப்பாக்கியை இயக்கும் க்லீன்பெல்டின் துப்பாக்கி வெடிப்பதில்லை.. வெளியில் சென்றுகொண்டிருக்கும் கார்லிடோ துப்பாக்கி ரவைகளை குப்பையில் வீசும் காட்சி இடையில் வந்து மறைய ..எதிரியின் துப்பாக்கி குண்டு க்லீன்பெல்ட் மேல் பாய்கிறது. தன் காதலி தடுத்தும் உதவிக்காக போன தனக்கு துரோகம் செய்த க்லீன்பெல்டை கார்லிடோ மன்னிக்கவில்லை. அதே சமயம் அவனது மன்னிப்புக்கும் அர்த்தம் இல்லாமல் போகிறது. நைட் க்ளப்பில் தகராறு செய்யும் ஒருவனை அடித்து துவைத்தாலும் அவனை கொல்லாமல் விட்டு விடுகிறான் கார்லிடோ.கடைசியில் அவனும் கார்லிடோவின் நம்பிக்கைக்கு உரிய நண்பனும் இவன் இறப்புக்கு காரணமாகிறார்கள். அதே போல் கார்லிடோ ஒளித்து வைத்திருக்கும் பணத்தை க்ளப்பின் இன்னொரு உரிமையாளனான சாசோ திருடிக்கொள்கிறான்..இப்படி படம் முழுக்க நிழல் உலகின் துரோகங்கள், வஞ்சகங்கள் விரவிக்கிடக்கின்றன. பலர் முன்னிலையில் ஸ்ட்ரிப்டீஸ் ஆடும் கெய்ல் தன் குழந்தையின் தந்தையான காதலன் எந்த பிரச்னையிலும் மாட்டிக்கொள்ளாமல், போலீஸ் கையால் சுடப்பட்டு சாகாமல் இருக்க வேண்டும் என்று பதறுகிறாள். ஒரு ஒப்புமை தான் இது. இன்ஸ்பிரேஷன் (!) ஆதரவாளர்கள் கொதிக்க வேண்டாம். விருமாண்டியில் தனக்கு தெரியாமல் நடக்கும் சதியை அறியாமல் நெப்போலியன் ஆட்கள் இருக்கும் இடத்துக்கு மன்னிப்பு கேட்க கமல் செல்வதற்கு முன், கிணற்றுக்குள் அமர்ந்து விருமாண்டியிடம் அவனது காதலி பேசும் காட்சி நினைவுக்கு வருகிறது.

அதே போல் தனக்காக தன் காதலியை ரயில்வே ஸ்டேஷன் வரை கூட்டி வரும் நண்பனே கடைசி தருணத்தில் துரோகம் செய்வது போன்ற காட்சிகளை தமிழ் சினிமாவில் அரைத்து மாவாக்கி பலமுறை (புளித்த!) ஆப்பம் சுட்டிருக்கிறார்கள். படத்தில் வழக்கறிஞர் க்லீன்பெல்டாக வரும் சீயான்.. ஸாரி சீன் பென்னின் நடிப்பும் அபாரம். அப்பாவி போல் இருந்து கொண்டு பின்பு தனது கொடூர குணத்தை காட்டும் கதாபாத்திரத்தில் மின்னுகிறார். படம் எடுக்கப்பட்டது 1993 இல்.ஆனால் கதை நடப்பது '75 இல். அந்த காலகட்டத்தை சேர்ந்த உடை, சிகை அலங்காரம் எல்லாம் அவ்வளவு நேர்த்தியாக இருப்பதால் சீன் பென்னின் வயதை நினைத்து குழம்பி விட்டேன். படம் ப்ளாஷ்பேக்கில் தொடங்கினாலும் ஒரே நேர்கோட்டில் செல்கிறது. எளிய உறுதியான திரைக்கதை. நம்பகத்தன்மை இருக்கும் பட்சத்தில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை நாமும் சுமக்கிறோம், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர்கள் எப்படி கையால்வார்களோ என்று பதறுகிறோம். உண்மையான கலையின் வெளிப்பாடே இது தான். கலையே போல செய்தல் என்றாலும் அதிலும் ஒரு நம்பக தன்மை அவசியம்..ஒன்றுக்கொன்று உறுதியாக பிணைக்கப்பட்ட கதை சம்பவங்கள் ஒரு நல்ல திரைக்கதைக்கு முக்கியம். அந்த வகையில் ஒரு சில குறைபாடுகளுடன் இருந்தாலும் தேர்ந்த திரைக்கதை மற்றும் நடிப்பு மூலம் படம் பலம் பெறுகிறது.

படத்தை மிஷன் இம்பாசிபிள், அன்டச்சப்ல்ஸ் படங்களின் இயக்குனர் ப்ரையன் டி பால்மா எடுத்திருக்கிறார். எந்த சண்டைக்கும் போகாமல் இருக்க முடிவு செய்த பின் , தன் சொல்லுக்கு அடங்காமல் துள்ளும் பென்னி ப்ளாங்கோவை புரட்டி எடுத்து விஸ்வரூபம் எடுக்கும் காட்சி, தன்னை வசமாக ஏமாற்றிய சீன் பென்னை அடையாளம் காணும் காட்சி என்று அல் பசினோ நடிப்பில் மிளிர்கிறார். தமிழில் இது போன்ற படங்கள் அவ்வப்போது வருகின்றன. தெளிவான திரைக்கதை இல்லாமல் காணாமல் போகின்றன. சமீபத்தில் நான் பார்த்த ஆரண்ய காண்டம் இந்த வரிசையில் தமிழின் சிறந்த படம் என்பேன்.

Sunday, June 19, 2011

அவன் இவன்: ஏக வசனம்


சேது படத்தின் வெற்றிக்கு பிறகு சிவாஜி- அஜித்தை வைத்து எடுக்கப்படவிருந்து பின்னர் சூர்யா-ராஜ்கிரண் நடித்த நந்தா திரைப்படத்தின் திரைக்கதை போதும் பாலாவின் திறமையை பறைசாற்ற. படம் வந்த சமகாலத்தில் வெளிவந்த - தமிழ் அறிவுஜீவி இயக்குனர் மணிரத்னம் எடுத்த- கன்னத்தில் முத்தமிட்டால் போலவே அரைகுறை புரிதலுடன் இலங்கை தமிழர் வாழ்வை ஒரு துணைக்களமாக வைத்து எடுக்கப்பட்ட படம். தான் நேசிக்கும்(!) மனிதரின் இறப்பு தவிர உலகத்தில் வேறெந்த விஷயத்தாலும் பாதிக்கப்படாத தன்மையுடைய நாயகர்களை தமிழ் சினமாவில் உருவாக்கிய பெருமை பாலாவுக்கு தான் சேரும். அவரது பாதிப்பில் படம் எடுத்த பலர் இதை தான் தம் கதை நாயகர்களின் முக்கிய அடையாளமாக முன்வைத்தார்கள்.சூர்யா முதன்முதலாக 'நடித்த' அந்த படம் பாலாவின் வழக்கமான க்ளிஷேக்களை ஆரம்பித்து வைத்தது .தன் நெருங்கிய நண்பனை கூட அற்பமான விஷயங்களுக்கு முரட்டு தனமாக அடிப்பது; ,பெண்களை தலையில் ஓங்கி அடிப்பது; அடித்த கையோடு அடுத்த நொடியே தன் காதலியை நினைத்து உருகுவது (ஊரே கொண்டாடிய மைனா திரைப்படத்தில் ஒரு பெண்ணை தலையில் ஓங்கி ஓங்கி அடித்துவிட்டு உடனே ஒரு ரொமான்சு லுக்கு விடுவார் அந்த தலைசீவாத நாயகன்) ,பெண்களை தலையில் ஓங்கி அடிப்பது, ஆண் என்ற ஒரு தகுதி இருந்தாலே எந்த பெண்ணையும் 'காதலிக்கலாம்' என்ற தற்போதைய தமிழ் சினிமா (தலை) விதியை ஆரம்பித்து வைத்த காட்சிகள் என்று பாலா செய்த தவறுகள் கணக்கில் அடங்காதவை.

பிதாமகனில் கிட்டத்தட்ட ஓநாய் மனிதன் போல் பிணம் எரிப்பவராக நடித்த விக்ரம் பாத்திரத்தை சித்தரித்திருப்பார். ஒரு பாடல் காட்சியில் அவருக்கு சவரம் செய்ய வருபவரின் கையில் கத்தி பார்த்து திடுக்கிட்டு அவரை தள்ளி விட்டு ஓடுவார்.சுடுகாட்டிலேயே இருக்கும் மனிதனுக்கு சவரம் செய்வது பற்றி தெரியாதா என்ன?பாலாவிடம் அப்படியான ஒரு கதாபாத்திரம் நிஜத்தில் இருக்க முடியுமா என்று கேட்டபோது அது எனது கற்பனை மட்டுமே என்றார். அதே போல் கஞ்சா கேசில் உள்ளே போகும் விக்ரமை பொட்டி கேசில் ஜாமீன் வாங்குவது போல் வெளிக்கொண்டு வருவது; நான் கடவுள் படத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அகோரி சாதுவை கடவுள் ரேஞ்சுக்கு ஒரு நீதிபதி நடத்துவார். போலிஸ் அவர் கக்கா போய் கழுவும் வரை காத்திருக்கும்.

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலில் அவர் சித்தரித்த விளிம்பு நிலை மனிதர்களின் இருட்டு உலகம் 'நான் கடவுளில்' ஓரளவுக்கு வெளிப்பட்டது எனினும், சம்பந்தமே இல்லாமல் அகோரி (அதிலும் சித்தர் பாடல் சொல்லும் அகோரி!) கதாபத்திரத்தை பிச்சைக்காரர்களின் வாழ்வோடு எந்த இடத்தில சேர்ப்பது என்பதில் மூன்றரை வருடம் குழம்பி ஒரு படமாய் தந்து நம்மை குழப்பினார்.பிச்சைக்காரர்களின் சோக வாழ்வில் பங்கெடுத்து அவர்களை காப்பாற்ற எதற்கு காசி போய் ஒரு காவியை (இதில் கருப்பு!) கூட்டி வரவேண்டும்? அதே ஊரில் இருக்கும் உடல் வலிவுள்ள மனிதர்கள் அல்லது மனம் உள்ள மனிதர்கள் போதாதா? ஒருவரை கொன்று தான் அவரை 'காப்பாற்ற' முடியும் என்ற புது தத்துவத்தை சொன்ன அந்த படம் பாலாவிடம் ஸ்டாக் தீர்ந்து போனதை அப்பட்டமாக சொன்னது. அதற்கும் தேசிய விருது கிடைத்தவுடன் பாலாவுக்கு அதீத நம்பிக்கை வந்து விட்டது போலும். அதன் விளைவு தான் அவன் இவன்.

ஒரு ஜமீந்தாருக்கு பாசமிகு அடிமையாக இருக்கும் கிராமம். திருட்டு பிராதன தொழில் என்று வாழும் அம்மக்களோடு கொஞ்சி குலவும் அந்த ஜமீந்தார் அடிக்கும் கூத்துகள் ஆபாசத்தின் உச்சம். முதல் காட்சியில் ஜமீந்தாருக்கு திருநங்கைகள் அலங்காரம் செய்து கூட்டி வருகின்றனர் . 'விலாவை சிறப்பிக்க' பெண்கள் மட்டுமே பங்கு பெறும் (ஆரம்பத்தில் பெண்கள் மட்டும் தான் பார்க்கவே முடிகின்ற நடனம் என்று நினைத்தேன்!) நடனம். "நாங்கள் மட்டும் தான் கலந்துக்குவோம்" என்று அந்த பெண்கள் பற்களை தேவையில்லாமல் கடித்துக்கொண்டு மிரட்டுவது எதற்கு என்று தெரியவில்லை. எரிச்சல் அப்போதே தொடங்கி விட்டது. பழைய எம்ஜியார் படங்களில் பொதுவாக எல்லா தமிழ் நாயகர்களின் படங்களிலும் பெண்கள் ஏதோ காரணத்துக்காக ஆண் வேஷத்தில் வருவார்கள். நம் நாயகர்கள் அவர்களை பெண்கள் என்று அறியாமல் (!?) தொட்டு தொட்டு பேசுவார்கள். கிட்டத்தட்ட ஓரின சேர்க்கை விருப்பம் உள்ளவர்கள் போல் தேவையில்லாமல் அந்த ஆணின் (!) அந்தரங்க அங்கங்கள் வரை தொட முயல அந்த பெண்கள் (!) அசடு வழிய விழிப்பார்கள். அதே போல் இந்த பெண்கள் கூட்டத்தில் விஷால் பெண் வேடமிட்டு அந்த பெண்கள் ஆடும் அதே ஸ்டெப் போட்டு ஆடுகிறார். அவரை கடைசி வரை பெண் என்று நம்பி 'இந்த குத்து குத்துறாளே...யாருடி இவ ?" என பொருமுகிறார்கள். அவரோ வெறி வந்து ஆடும் பேய் போல் இருக்கிறார். கடைசியில் அவர் தலைமுடி கீழே விழும்போது தான் அவர் பெண்ணென்றே மற்ற பெண்கள் கண்டுபிடிக்கிறார்களாம்! எந்த காலத்தில் இருக்கிறீர்கள் பாலா? பாடல் காட்சிஎன்றோ நகைச்சுவை என்றோ இதை விட்டு விட முடியாது. பெரிய இயக்குனர் என்ற பேர் பெற்ற பிறகு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த அரிய காட்சியை வடிவமைத்தீர்கள்? முதல் கோணல் என்பது போல் படம் முழுவதும் அபத்தம். நகைச்சுவை என்ற பெயரில் மூன்றாம் தர கூத்துகள்.

விளிம்பு நிலை மனிதர்கள் தங்கள் வாழ்வியல் கஷ்டங்களை நகைச்சுவை உணர்வுடன் கடக்க முயல்வார்கள் என்பது உண்மை தான். அதற்காக தம் வாழ்வில் எந்த விஷயத்தையும் நகைச்சுவையாய் எடுத்துக்கொண்டு நகர்வார்களா என்ன? விஷால் - ஆர்யா இருவரின் அம்மாக்கள் செய்யும் அட்டூழியங்கள் பேசும் வசனங்கள் ஆபாசம் என்றால் அவர்களை டி போட்டு கூப்பிடும் மகன்கள் ஆபாசத்தின் உச்சம்.இயல்பில் இதை விட கேவலமாக பேசிக்கொள்ளும் விளிம்பு நிலை மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் பாலா காட்டுவது வெற்று ஆபாசம். "குஞ்சுமணியை புடிச்சிக்கிட்டு ஒண்ணுக்கு கூட சரியா போக தெரியாத பயல்" என்று தன் சக்களத்தியின் மகனை ஒரு பெண் சொல்கிறாளாம். அதுவும் பீடி புகை வாயிடுக்கில் கசிய. இது தான் ஒரு படைப்பாளியின் படைப்பு சுதந்திரமா? கதைக்கு அது எந்த விதத்தில் தான் பயன்படுகிறது? "இப்பெல்லாம் ராத்திரி தண்ணியடிக்காம தூக்கம் வர மாட்டேங்குது" என்று தன் மகனிடம் புலம்பும் தாய் தான் தமிழ் சினிமா தற்போது முன்வைக்கும் தாய்-முகம்.

கரகாட்டக்காரன் என்றொரு மகத்தான வெற்றிப்படம் வந்தது. படத்தின் வெற்றிக்கு முப்பது சதவீதம் இசை,முப்பது சதவீதம் நகைச்சுவை காரணம் என்றால் மீதி நாற்பது சதவீதம் கதை-முக்கியமாக திரைக்கதை இருந்தது. பாலாவின் படங்களில் திரைக்கதை என்ற ஒரு அம்சமே கிடையாது. பிதாமகனில் சிம்ரன் கடத்தல் நடனம் என்ற படத்தின் கருவுக்கு துளியும் சம்பந்தமில்லாமல் ஒரு நீண்ட காட்சி. அதே போல் கமல் நடித்த 'அன்பே சிவம்' படத்தின் காட்சிகள் ஒரு அளவை மீறி அந்த படத்தில் காட்டப்படும். எல்லாம் நேரத்தை கடத்த தானே ஒழிய வேறெந்த 'வித்தியாச கண்ணோட்டமும்' இல்லை. நான் கடவுளில் அதே போல் ஆர்யாவின் கதாபாத்திரம் பிச்சைக்காரர்களின் வாழ்வோடு எப்படி பொருந்துகிறது என்ற கவலை சிறிதும் இல்லாமல், மிக சில வினாடிகளே காட்டப்பட வேண்டிய காவல் நிலைய நடன காட்சி பல ந்மிடங்களுக்கு நீள்கிறது . அதில் எந்த சம்பந்தமும் இல்லாமல் நடனமாடும் திருநங்கை ஒருவர் பயத்தில் சிறுநீர் கழிக்கும் காட்சி. அருவெறுப்பின் உச்சம்.

சினிமாவுக்காக என்று வைத்துக்கொண்டாலும் காவல்துறையை இத்தனை காமெடி துறையாக காட்டுவது எந்த வகை கண்ணோட்டம் என்று தெரியவில்லை. பல இடங்களில் எரிச்சல் தான் வருகிறது. போலீஸ் அதிகாரி குற்றவாளிகளிடம் கெஞ்சுவதும் குற்றவாளிகளோ உலகில் எந்த விஷயத்துக்கும் பயப்படாதவகள் போல் அவர்களை நக்கல் செய்து வெறுப்பேற்றுவதுமான காட்சிகளை நந்தா படத்திலிருந்து இந்த படம் வரை ஒரு கொள்கையாக கடைப்பிடித்தே வைக்கிறார் என்று நினைக்கிறேன். அதே போல் ஒரு பிராமண ஜட்ஜ். அவரை ஏமாற்றி தங்களுக்குள் அதை நகைச்சுவையாய் பேசிக்கொள்ளும் குற்றவாளிகள் என்று க்ளிஷேக்களின் தொகுப்பு. ஒரு காட்சியில் 'தேவையான' இடத்தில சதை குறைவான கதாநாயகி 'தான் அடித்துபிடித்து கோட்டாவில் இந்த வேலைக்கு சேர்ந்ததாக சொல்கிறார்'. என்ன தான் சொல் வருகிறீர்கள் பாலா? சத்தியமாக சாதிப்படி நிலைகளை கிண்டல் செய்யும் நோக்கு தங்களிடம் இருக்கவே முடியாது என்பது தெளிவு. அப்படி இருக்க இது போன்ற காட்சிகள், வசனங்கள் படத்தின் திரைக்கதைக்கு எந்த விதத்தில் தான் துணை புரிகின்றன?

அதே போல் பெண்களை மிரட்டி அவர்களிடம் பணம் நகையை பிடுங்கி அந்த பெண்ணை குட்டிக்கரணம் வேறு போட செய்கிறார் ஆர்யா. அந்த பெண்ணின் தலையில் பலமுறை ஓங்கி அடிக்கிறார். இருபது வருடங்களுக்கு முன் இப்படியெல்லாம் ஒருவன் பெண்களிடம் நடந்துகொண்டால் தமிழ் சினிமாவில் அவன் கொடூர வில்லன். இப்போது இப்படி நடந்துகொண்டால் தான் அவன் ஹீரோ. என்ன ஒரு பரிணாம வளர்ச்சி பாருங்கள். அதற்கும் திரையரங்கில் கைதட்டல், சிரிப்பு. தான் சொல்வதையெல்லாம் பயந்து கேட்டு அதன்படி நடந்து கொண்டால் நாயகனுக்கு நாயகி மேல் காதல் வேறு பிறக்கிறது.அதாவது 'பாறையிலும் நீர்க் கசிகிறதாம்'! அந்த பெண்ணும் இவரது 'குறும்புகளை' ரசித்து அவர் மீது மையல் கொள்கிறாராம். பெண்களை இவ்வளவு இழிவாக சித்தரிக்க பாலாவால் மட்டுமே முடியும். அந்த பெண் படிக்கும் டுட்டோரியல் காலேஜுக்கு சென்றும் அங்கும் பல பெண்களின் தலையில் தட்டி விளையாடுகிறார் ஆர்யா. நாம் இதை நகைச்சுவையாய் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஏனெனில் என்ன தான் முரடன் என்றாலும் நல்ல மனசுக்காரன் அல்லவா நாயகன்? பிதாமகனில் தன்னை சிறையில் சந்திக்கவரும் லைலாவிடம் 'பாவாடையை கழட்டி விடுவேன்' என்று சூர்யா மிரட்டியதும் அவருக்கு சூர்யா மீது வெட்கம் கலந்த காதல் பிறக்கிறது. இந்த படத்திலும் அந்த 'கோட்டா பெண் போலீசிடம்' அவர் அணிந்திருக்கும் பேண்டின் ஜிப் பற்றி அடிக்கடி விஷால் கேட்க வெட்கம் தாளாமல் அந்த பெண் இந்த மாண்புமிகு திருடரை காதலிக்க தொடங்குகிறார். எப்பேர்பட்ட புரட்சி பாருங்கள்.

அதே போல் எந்த வாழ்வியல் ஒழுக்கங்களிலும் தேறாத விஷால் , ஒரு கிறிஸ்துவ பெண்ணிடம் நகையை திருடிக்கொண்டு வர, அவரிடம் 'விசாரணை' செய்யும் அந்த பெண் போலீஸ் அந்த கிறிஸ்துவ பெண் ஒழுக்கம் தவறியவள் என்று சொல்லி 'அந்த நாத்தம் புடிச்சவளோட நகை நமக்கெதுக்கு' என்று கேட்கிறாள். தன் அம்மாக்களின் ஒழுக்கம் பற்றி நன்கு தெரிந்த விஷால் 'ஆமாமா அவ வயசுக்கு வர்றதுக்கு முன்னாலேயே நிறைய பேரை கரெக்ட் பண்ணியவள்' என்கிறார். இந்த காட்சிக்கும் வசனத்துக்கும் என்ன அர்த்தம் திருவாளர்கள் பாலா-எஸ்.ரா அவர்களே? வேற்று மதத்தை சேர்ந்தவள் செய்யும் செயல்கள் அசிங்கம். குடித்துவிட்டு கெட்ட வார்த்தை பேசி மகனுடனே ஆபாச நடனம் ஆடும் இந்து (அவர்கள் தலித் என்ற போர்வையில் காட்டப்பட்டிருந்தாலும்) பெண்கள் உத்தமமானவர்கள் என்று சொல்கிறீர்களா நீங்கள் இருவரும்?

கிடைக்கும் இரண்டரை மணி நேரத்தில் முக்கால் பகுதியை இப்படி வீணாகவும் விஷமாகவும் கழித்து விட்டு படம் முடிய அரை மணிநேரம் இருக்குபோது தான் 'கதைக்கே' வருகிறார் பாலா. அடிமாட்டு விற்பனை செய்யும் ஆர்.கே தான் வில்லன். பாருங்கள் கார்ப்பரேட் கனவான்கள், நீதி துறை கறுப்பாடுகள் செய்யும் அத்துமீறல்கள் எல்லாம் கணக்கில்லை.வாழ்வின் அடிமட்டத்தில் இருக்கும் ஒருவன் வில்லன். வில்லன்களை வித்தியாசமாக கட்ட வேண்டும் என்ற பெரும் முனைப்பு தான் இந்த கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருக்க வேண்டும். இத்தனைக்கும் அவர் இந்த உத்தம கூட்டாளிகளிடமோ ஊர்க்காரர்கள் யாரிடமோ எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருப்பவர். ஆனால் அடிமாடுகளை மாட்டுக்கறி பிரதான உணவாக விற்கப்படும் கேரளாவுக்கு 'கடத்தும்' கொடூர வில்லன்.(சட்ட விரோதமாக என்று பல முறை அழுத்தி சொல்லி (அ)நியாயம் வேறு கற்பிக்கிறார்கள்). நம் ஜமீன் தன் சமஸ்தானத்தில் இப்படி ஒரு கெட்ட காரியமா என்று கொதித்து ஜனநாயத்தின் தற்போதைய ஒரே தூணான டி.வி. மீடியாக்கள், ப்ளூ க்ராஸ் சேவகர்கள் போன்றோரை அந்த அடிமாட்டு பண்ணைக்கு கூட்டி வந்து சமூகத்துக்கு இந்த கொடூர செயலை எக்ஸ்போஸ் செய்கிறாராம். அந்த காட்சியின் பின்னணி இசையின் சோகம் நிச்சயம் வில்லன் என்று இவர்கள் காட்டும் ஆர்.கேவுக்கானது என்றே தோன்றியது. சொல்ல வார்த்தைகள் ஏதுமின்றி வெறித்து பார்க்கும் அவரை காட்டிக்கொடுத்த சந்தோஷத்தில் இவர்கள் வெற்றியுடன் வெளியேறுகிறார்கள்.

பரம்பரை பரம்பரையாய் ஆண்டானாக இருந்த ஜமீன் இப்படி செய்வதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் குற்ற பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த ஆர்யா-விஷால் சகோதரர்கள் ஊழலுடன் படுத்து ஒழுங்கீனத்தில் திளைத்து வளர்ந்த கும்பல் அன்னா ஹசாரே கும்பலுடன் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் உத்தமத்துடன் - தம்மை விட உத்தமமான செயல் செய்யும் வில்லனை காட்டிக்கொடுக்க துடிப்புடன் துள்ளி வருகிறார்கள். ஒரு முறை தன் வெளி நாட்டு நண்பர்கள் முன்னிலையில் வெற்று ஜம்பம் அடிக்க காட்டிலாகா அதிகாரி ஒருவரிடம் காட்டை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று அதிகாரத்துடன் சொல்ல அவர் ஹைனசின் அருமை தெரியாமல் - சட்டத்துக்கு புறம்பாக யாரையும் காட்டுக்குள்ளே அனுப்ப மாட்டேன் என்று மறுக்கிறார். உடனே உத்தம சிகரமான நம் ஜமீன் தன் அடியாட்கள் விஷால்-ஆர்யாவை ஏவி அந்த அதிகாரியை அடித்து துவைப்பதோடு கதைக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு கோடி ரூபாய்க்கு சொந்தமான மரங்களை விஷால் கடத்தியது அறிந்தும் மௌனம் காக்கிறார். (இந்த காட்சி ஒரு மகா ஓட்டை என்பதும் படத்தில் அதை பற்றி வேறு யாருமே பேசவில்லை என்பதும் வேறு விஷயம்!)

இத்தனை உத்தமமான கும்பல் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் ஒரு தொழிலை செய்யும் ஒருவனை சிறைக்கு அனுப்புகிறது. பிறகு பழிவாங்குவானா மாட்டானா? ஆனால் அதிலும் தனது கொடூர எண்ணங்களை பதிவு செய்கிறார், பாலா. ஹைனசை வீட்டில் இருந்து கடத்திக்கொண்டு வந்து நிர்வாணமாக்கி சவுக்கால் அடித்து கொல்கிறார் ஆர்.கே. பின்பு அத்தனை பெரிய உருவமுள்ள அந்த உடலை வேலையற்று உயர்ந்த மரத்தில் தொங்கவிட்டு வேறு போகிறார்களாம். கோபத்தில் ஒருவன் கொலை செய்வான் என்றே காட்டினாலும் இப்படி ஒரு செயலை அடிமட்டத்தில் இருக்கும் ஒருவன் செய்வானா? அதன் தேவை தான் என்ன அவனுக்கு? சத்தம்போடாமல் காரியத்தை முடித்து உடலை மறைத்திருக்க மாட்டனா என்ன? காட்சிகளை விதவிதமாக சிந்தித்து வைக்கலாம் என்ற எண்ணம் இன்றி இது போன்ற அதிர்ச்சி தரும் கொடூரங்களை மட்டும் ரூம் போட்டு யோசித்து வைப்பார் போலும் பாலா. நான் கடவுளில் நாயகனின் பராக்கிரமத்தை சொல்லும் 'ஓம் சிவோகம்' பாடலில் ஒருவனை அடித்து கீழே தள்ளி அவன் மேல் குதித்து சம்மணமிட்டு அமரும் ஆர்யா, கழிவறையில் ஒருவனின் ஆண் குறியை அறுத்து கொலை செய்யும் சூர்யா(நந்தா),தன்னால் கடுமையாக தாக்கப்பட்டும் சிறிது உயிர் மிச்சமிருக்கும் வில்லனின் குரல்வளையை கடித்து குதறும் விக்ரம்(பிதாமகன்) என்று பாலா காட்டும் உக்கிர காட்சிகள் உண்மையில் வக்கிரமானவை. வெறும் அதிர்ச்சி மதிப்பு தருபவை ; கதைக்கு எந்த விதத்திலும் அவசியமில்லாதவை. பிறகு எப்படி நாம் மற்ற இயக்குனர்கள் மத்தியில் தனித்து அறியப்பட முடியும் என்ற தாகம் ஒரு வேளை காரணமாய் இருக்கலாம்.

அதே போல் விஷாலின் முரட்டு தாக்குதலுக்கு ஆளாகி வலி தாளாமல் தன்னை கொன்று விட சொல்லி கதறும் ஆர்.கேயை இந்த சகோதரர்கள் வித்தியாசமாய் கொன்று பழி தீர்க்கிறார்களாம். இந்த கொடூரங்களுக்கு பின் அழுதுகொண்டே சில்-அவுட் ஷாட்டில் நாயகர்கள் நடந்து போனால் நாம் எழுந்து நின்று கைதட்டுவோம் என்று நினைத்து விட்டார் போலும் பாலா. இதில் விஷாலுக்கு பெண்போன்ற நளினம், மாறு கண் போன்ற அவசியமற்ற அலட்டல்கள் வேறு. விஷாலுக்கு விருது நிச்சயம் என்று பத்திரிக்கைகள் புகழாரம் வேறு செய்யும். தனுஷ் போன்ற மகா நடிகர்களே தேசிய விருது வாங்கும்போது விஷாலுக்கு என்ன குறைச்சல்? பல இடங்களில் ஆபாசமாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கும் வசனங்களை எழுத 'நெடுங்குருதி' போன்ற நாவல்களை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் தேவையா? அவரும் சினிமாவுக்கு வந்து எந்த சாதனையும் இது வரை செய்யவில்லை. சண்டைக்கோழி, உன்னாலே உன்னாலே போன்ற கமர்ஷியல் படங்களே தேவலாம் என்றிருக்கிறது.

இது போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தவோ நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவோ கிஞ்சித்தேனும் உதவப்போவதில்லை. மாறாக மேலும் மேலும் வன்முறையை,ஆதிக்க வெறி,சாதிவெறியை மட்டுமல்லாமல் கொலைவெறியையும் தூண்டும் இந்த படங்கள் ஒரு வேளை வெற்றி பெறும் பட்சத்தில் தமிழ் சினிமா இனி என்ன ஆகும் என்ற கவலை மட்டும் மிஞ்சுகிறது.

Saturday, May 28, 2011

Friday, May 27, 2011

வார்த்தைகளில் மிளிரும் வண்ணங்கள்: ஜீவானந்தன்


தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நாள். செறந்த நடிகர் விருதை மிகப்பெரும் நடிகர் திலகமான தனுஷுக்கு வழங்கி பேரதிர்ச்சி கொடுத்தது தேசிய விருது தேர்வுக்குழு . என்ன நிர்பந்தமோ முந்தைய ஒப்பந்தமோ தெரியவில்லை!!! திரைக்கதை என்றே பார்த்தாலும் மிக சுமாரான படமான ஆடுகளத்துக்கு ஆறு விருதுகள் என்று அபத்த தேர்வுகள் ஆத்திரத்தை விட ஆச்சர்யத்தை தான் தந்து கொண்டிருந்தன. திடீரென்று முகநூல் நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி கிடைத்தது. ஓவியரும் எழுத்தாளருமான ஜீவானந்தம் எழுதிய 'திரை சீலை' என்ற புத்தகத்துக்கு சினிமா பற்றிய சிறந்த புத்தகத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நண்பர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிழ்ச்சிக்கு காரணம் எப்போதாவது மலரும் அரிய தருணம் போல் உண்மையில் தகுதியானவருக்கு அந்த விருது கிடைத்திருப்பது. 'ரசனை' இதழ்களில் சினிமா பற்றி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அந்த புத்தகம்.

ஜீவானந்தம் என் ஓவிய, எழுத்துலக வளர்ச்சியில் மிக பெரிய ஆதர்சமாக இருப்பவர். என்னை போன்ற ஓவியம், இலக்கியம் ஆர்வம் கொண்ட எத்தனையோ பேருக்கு பெரும் வழிகாட்டியாக இருப்பவர். புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான மணிகண்டன் இவரது சகோதரர். ஜீவாவின் மகனான ஆனந்தும் ஒரு ஒளிப்பதிவாளர் தான். மிக சிறந்த ஓவியரான ஜீவாவின் சினிமா அறிவு வெறும் ரசனை சார்ந்தது மட்டும் அல்ல. அது சுவாசம் போல் அவருக்கு இயல்பிலேயே இருப்பது. கோவை நகரின் பிரசித்தி பெற்ற ஓவியரான ஜீவாவின் தனித்தன்மை மிக்க சினிமா பேனர்கள் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதையல். வெறுமே நாயகன் நாயகிகளை பிரதானபடுத்தாமல் படத்தின் முக்கிய காட்சிகளை இயக்குனர்களை தன் கற்பனை கலந்து பிரமிக்கத்தக்க ஓவியமாய் படைப்பவர். கோவை நகரின் பல ஓவியர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர்.

அவருடனான என் நட்புக்கு காரணம் இளையராஜாவின் இசை தான். சில வருடங்களுக்கு முன் ஒரு இணையத்தில் நான் தத்துபித்தென்று ராஜா பற்றி எழுதிய பதிவுக்கு பிறகு அவரது அறிமுகம் கிடைத்தது.ராஜா மட்டும் அல்ல பல சிறந்த இசைக்கலைஞர்களை ஆராதிப்பவர். முக்கிய ஓவியர் (பல இலக்கிய படைப்புகளுக்கு தன் ஓவியங்கள் மூலம் உயிரூட்டியவர்) எண்பதுகளிலேயே பத்திரிக்கைகளில் சினிமா விமர்சனம் எழுதியவர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாய் பழகுபவர். திறமைசாலிகள் பலரிடம் இல்லாத குணம் அது. ஒரு சுவாரசியமான விஷயம். அவர் பள்ளியிலோ கல்லூரியிலோ தமிழை பாடமாக படிக்காதவர். அவரது கட்டுரைகளை வாசித்தவர்களுக்கு இது நிச்சயம் ஆச்சர்யமாய் தான் இருக்கும். சரளமான, நேரடியான சந்திப்புகளில் பகிரப்படும் தொனியில் அதே சமயத்தில் உள்ளார்ந்ததாகவும் அமையும் ஜீவாவின் எழுத்து.

முகநூலில் அவரது பல பதிவுகள் கருத்துகள் ஆராதிக்கப்படுபவையாயும் விவாதத்துக்கு உரியவையாயும் இருப்பவை. எனினும் எந்த காலத்திலும் எதிராளி மனம் நோகும்படி பேசியதே இல்லை அவர். நானெல்லாம் 'கருத்து மோதல்' செய்கிறேன் பேர்வழி என்று என் ஆதர்சங்கள் பலரிடம் சற்று அதிகப்படியாய் பேசி புண்படுத்தி இருக்கிறேன். ஜீவாவிடமே அப்படி சில விவாதங்களில் 'கருத்து சுதந்திரத்தோடு' பேசி இருக்கிறேன். அவர் சிறு புன்னகையுடன் " கருத்து மோதல் என்ற பெயரில் நண்பர்களை நான் காயப்படுத்துவதில்லை " என்பார். மேன்மக்கள் மேன்மக்கள் தானே!

ஜீவாவுக்கு கிடைத்த விருது பற்றி ஆங்கில தினசரிகளில், பத்திரிக்கைகளில், எழுத்தாளர்களின் இணைய தளங்களில் கட்டுரைகள் வெளியாகின்றன. சந்தோஷம் என்பது சாதாரண வார்த்தை. அதற்கு மேல் ஒரு வார்த்தை இருக்கும் எனில் அது என் எண்ணத்தின் பிரதிபலிப்பாக தான் இருக்கும்.
அவரது ஓவியங்களில் சில:



ஜீவாவின் வலைப்பூ
http://jeevartistjeeva.blogspot.com/

Saturday, May 14, 2011

தேர்தல் தரும் பாடம்..



ஜெ.க்கு கிடைத்த வெற்றி உண்மையில் எதிர்பார்த்தது தான் என்றாலும் உணர்ச்சி வேகத்தில் 'அந்த பக்கம்-இல்லேன்னா-இந்த பக்கம்' என்று மாற்றி மாற்றி குத்தும் வாக்களர்கள் இம்முறை அவர் பக்கம் சாய்ந்ததன் பலனை வெகு சீக்கிரத்தில் அனுபவிக்கவும் இருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவராய் எந்த துரும்பையும் கிள்ளி போடாமல் 'மைனாரிட்டி தி.மு.க அரசு' என்று செயற்கை பணிவு குரலில் ஜெயா டிவியில் பேசியதோடு சரி. தமிழ் நாட்டுக்கு என்ன பிரச்சனை வந்தால் எனக்கென்ன என்று கொடநாட்டில் ஓய்வு எடுத்து கொண்டுதான் இது நாள் வரை இருந்தார், ஜெ. உண்மையில் மக்களை பற்றி கவலைப்படாத அரசை மட்டும் குறை சொல்லி பயனில்லை. அதற்கு சரியான முறையில் குரல் எழுப்பி தம் எதிர்ப்பை பதிவு செய்வதன் மூலம் ஆட்சியாளர்களை கட்டுக்குள் கொண்டு வராத எதிர்க்கட்சி தலைவரையும் தான். ஈழப் பிரச்சனயில் காங்கிரசோடு சேர்ந்து தி.மு.க செய்த துரோகம் மன்னிக்க முடியாதது என்றால், "போர் என்றால் மக்கள் மடிய தான் செய்வார்கள்" என்று திருவாய் மலர்ந்த ஜெ. செய்ததும் துரோகம் தான்.

அதே போல் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரியாமல் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது என்பது போன்ற தொனியிலேயே பேசி வருபவர்கள் அதன் உள்விவகாரங்களை கருத்தில் கொள்ளாமல் ராஜா மாட்டினாரா..அப்படி தான் வேண்டும். கனிமொழி கைதாவது எப்போது? போன்ற திண்ணை பேச்சுகளிலேயே திருப்தி அடைகின்றனர்.

மேலும் ஊழல் பெருச்சாளிகளை விரட்டுகிறோம் என்ற எண்ணத்தில் அதில் ஊறி திளைத்த மலைப்பாம்புகளை ஆதரிக்கின்றனர். சாதரணமாக பேசும் நம் மக்கள் "அவன் கொஞ்ச நாள் கொள்ளையடிச்சான் ..இப்போ இவனுங்க அடிச்சிட்டு போகட்டுமே "என்பார்கள். என்ன செய்வது நமக்கு இருக்கும் இரண்டு ஆப்ஷன்களில் எது தற்சமயம் சரியாய் இருக்கிறதோ அதற்கு போடுவோம் என்று சொல்வது தவிர்க்க முடியாததாய் ஆகி விட்டது. ஆனால் ஜெ.வின் ஆணவ போக்கை கடந்த காலங்களில் கவனித்தவர்கள் தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் இருந்தால் மட்டுமே ஜெ. தனது ஆணவ போக்கை (சற்று!) தளர்த்தி கொள்வார் என்கிறார்கள். இப்போதோ மெஜாரிட்டி. இனி என்னென்ன செய்வார் என்பதையெல்லாம் தமிழகம் பார்க்க தான் போகிறது.

அதே சமயத்தில் இது நாள் வரை ஒரு ராஜா போலவும் தனது வாரிசுகள் இளவரச-ரசிகள் போலவும் எண்ணிக்கொண்டு பல தவறுகள் செய்த கருணாநிதிக்கும் அவரது கட்சி (அதாவது குடும்பம்!) யினருக்கும் கிடைத்த சம்மட்டி அடி இது என்பதில் பேரு மகிழ்ச்சி. ஆங்கிலம் ஹிந்தி ரெண்டும் தெரியாத அழகிரியை மத்தியில் ஆட்சிக்கு கொண்டு வந்தது, ஈழ பிரச்னை உச்சகட்டத்தில் இருக்கும்போது டெல்லிக்கு வந்து வாரிசுகளுக்காக பதவி பேரம் நடத்தியது, இலவசங்கள் மூலம் புது கடன்களை ஏற்படுத்தியது, சினிமா உள்ளிட்ட எல்லா துறைகளையும் வளைத்து போட்டது ..போன்ற பட்டியலில் அடங்கா பாவங்களுக்கு கிடைத்த தண்டனையன்றி இது வேறு அல்ல. அதுவும் விஜயகாந்தின் கட்சியிடம் எதிர்க்கட்சி தலைமையை பறி கொடுத்தது அதன் உச்சகட்டம்.

மேலும் காங்கிரஸ் தமிழ் நாட்டில் தோற்றது என்றால் , என்ன என்று கூட கேட்க வேண்டியதில்லை. அது அப்படி தான். ஆனால் அறுபத்தி மூன்று சீட் கேட்க அவர்களுக்கு வந்த தைரியத்தின் பின்னணி ஜெ. டெல்லி வந்து சோனியாவை சந்திக்க்ம்போது தெரியவரும்.
நேற்று ஜெயா டி.வி.யில் ரபி பெர்னாட் சந்தோஷத்தில் குழைந்தபடி ஜெ,விடம் கேட்கிறார்.
"எப்போ டெல்லிக்கு போறீங்க?".ஜெ. சிரித்தபடி கேட்கிறார் "எதுக்கு?" கேட்டவருக்கும் கேட்க சொன்னவருக்கும் தெரியாதா எதற்கு என்று? அடுத்த அறிவிப்பு டெல்லியில் இருந்து வரும் என்று எதிர்பார்ப்போம்.

Saturday, April 30, 2011

நினைத்தாலே இனிக்கும்- அனுபவம்



சிறுவயதில் அறந்தாங்கி யில் நாங்கள் இருந்தபோது வீரமாகாளியம்மன் கோவில் தெப்ப திருவிழாவில் ஒவ்வொரு சமூகமும் மண்டகப்படி நடத்தும். ஒவ்வொரு இரவும் வெவ்வேறு இசைக்குழுக்கள் கச்சேரி நடக்கும். திண்டுக்கல் அங்கிங்கு போன்ற புகழ்பெற்ற இசைக்குழுக்கள் எங்கள் ஊர் இரவுகளை இசையால் நிரப்பி ததும்ப ததும்ப பாடல்களை காதுகளில் ஊற்றி அனுப்புவார்கள். ஒன்பதாம் வகுப்பு வரை அம்மாப்பா கூடவே சென்று தெப்பத்திருவிழாவையும் கோயில் முன்பாக நடக்கும் இசைக்கச்சேரிகளையும் பத்திரமாய் பார்த்துவிட்டு பாய்ஸ் ஹைஸ்கூல் கிரவுண்டு வழியாக வீடு திரும்புவோம். வரும்போது என் சகோதரிகள் மற்றும் பக்கத்துக்கு வீட்டு பெண்கள் கச்சேரியில் கேட்ட பாடல்களை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டு வருவார்கள். "தொட்டால் பூ மலரும் ." .பாட்டை இவங்க பாடி கேக்கும்போது இன்னும் இனிமையா இருந்திச்சில்லக்கா" எனும்போது நான் ஆவென்று கேட்டுக்கொண்டே வருவேன். பாடகர்களின் பெர்சனாலிட்டி பற்றி பெர்சனல் கமென்ட் பறக்கும். "அந்த கிர்தா வச்சவனுக்கு என்னம்மோ மோகன்னு நினைப்பு , மைக்கை அப்படி இப்படி சுத்தி சுத்தி பாடுறான்.." என்பாள் மேல் வீட்டு சாந்தி அக்கா. "என்னக்கா.." என்று ஆர்வமாய் கேட்டால் .."வாய் பாக்கதடா" என்று தலையில் செல்லக்கொட்டு ஒன்று விழும். தொல்லைக்காட்சி அவ்வளவு புழக்கத்துக்கு வராத காலம் அது. இசை கேட்க காதுகள் திறந்திருக்கும். மனதும்.

அந்த இசைக்கலைஞர்கள் பற்றிய நினைவு வீடு வரை தொடரும். நீலக்கலர் சட்டை போட்டு ஒரு பெரிய கீபோர்டை வாசித்துக்கொண்டிருந்த ஒருவர் இடையில் மேடையை விட்டு கீழிறங்கி கூட்டத்துக்கு நடுவே நின்று யாரோடோ பேசிக்கொண்டிருக்கும்போது எப்படியாவது அவர் கையை தொட்டு விட வேண்டும் என்று நினைத்தது இன்றும் நினைவில் இருக்கிறது. "மருதமலை மாமணியே" முருகையா பாடலை பாடுவதற்கென்று ஒரு பாடகர் உண்டு. அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. அதே போல் " சங்கீத ஜாதி முல்லை " பாடலுக்கு ஒருவர். அறந்தை கோட்டை வீதிகளில் ரவுடிகள் போல் திரியும் சிலரை அப்போது பார்த்திருக்கிறேன். பாடலில் உருகி கைதட்டி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அவர்கள் பாடலை ரசிக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். அவர்களுக்குள் இப்படி ஒரு ரசனையா என்று வியப்பேன். எப்படியாவது பெரிய ஆளான பிறகு ஒரு மேடைப்பாடகனாக ஆக வேண்டும் என்று மனம் துடிக்கும். பள்ளி நாட்களில் விக்ரம் படத்தின் டைட்டில் பாடலான "விக்ரோம் ..விக்ரோம் " பாடலை அதன் பின்னணி இசை , ஜானகியின் ஹம்மிங் ஒன்று விடாமல் அச்சு அசலாக (!) பாடுவேன். "துடிக்குது புஜம்..டுகுடு டுகுடு டுடு டுடு " என்று பாடும்போது எனக்கும் கூட்டம் கைதட்டும்.

பின்னாளில் புதுக்கோட்டை இசைக்குழு ஒன்றில் பாட சந்தர்ப்பம் கிடைத்தது. காரைக்குடி பக்கம் ஒரு கிராம திருவிழாவில் எனது முதல் கச்சேரி. வருங்கால முதல்வர் விஜய காந்த் நடித்த "வானத்தை போல " படத்திலிருந்து " காதல் வெண்ணிலா " பாடலை அவ்வளவு பெரிய ஜனத்திரளுக்கு முன்னால் பாடினேன். நம்ப மாட்டீர்கள் நண்பர்களே..'விஜயகாந்த்' நற்பணி குழு ஒன்று நூறு ரூபாய் அன்பளிப்பு அனுப்பி ஒன்ஸ் மோர் பாட சொன்னார்கள். இசை மீதான காதலும் பாராட்டுக்கு ஏங்கும் சிறு மனதும் சுமந்து அலைந்த நாட்கள் அவை. முக்கியமாக நான் கிராம திருவிழா கச்சேரிகளை மிஸ் பண்ணவே மாட்டேன். ஒளிரும் அலங்கார விளக்குகளில் பளீரென்று மின்னும் கிராம தெருக்களில் உற்சாக முகங்களுடன் தென்படும் முகங்கள் தரும் பரவசம். அங்கு சென்றதும் ஊர் தலைகள் எங்களுக்கு தரும் அநியாய மரியாதை ஒரு புறம். ஊர் தலைவர் வீட்டிலோ அல்லது அருகில் இருக்கும் மண்டபத்திலோ விருந்து நடக்கும். சுடச்சுட இட்லி வைத்து அதற்கு மேல் கறிக்குழம்பு ஊற்றுவார்கள். அந்த சுவை கிராமங்களில் அல்லாமல் வேறு எங்குமே கிடைக்காதது. அந்த சுவைக்கு சுழலும் நாவுக்காக என்றே நான் அந்த கச்சேரிகளுக்கு செல்வேன். ஓரிரண்டு பாடல்களும் , அவ்வபோது மெயின் சிங்கர் பாடும் போது மற்றவர்களுடன் இணைந்து " ஆ..ஆ.." என்றோ " லாலா " என்றோ ஆலாபனை ( கோரஸ் தான் :) பாடக்கிடைக்கும். அதுவரை மற்றவர்கள் பாடும்போது மேடையில் பின் வரிசை நாற்காலிகளில் அமர்ந்து கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். தமக்கு விருப்பமான பாடல் பாடப்படும்போதும் பாடல் சிறப்பாக அமைந்து விடும்போதும் கண்கள் விரிய சிரித்து கைதட்டும் கிராம பெண்களின் அழகை பாட இனி மேல் தான் ஒருவர் பிறந்து வரவேண்டும்.
டெல்லி வந்த பின், அறை நண்பர் குமரன் தந்த ஊக்கத்தில் இங்குள்ள ஆர்கெஸ்ட்ரா குழுவில் ஒன்றிரண்டு பாடல்கள் பாடினேன். அது பற்றி ஒரு தனிப்பதிவே எழுதலாம். நான், வரதராஜன், குமரன் என்று எங்கள் அறையின் பிரத்யேக இசைக்குழு நடத்திய கச்சேரிகளுக்கு கணக்கே இல்லை. முனிர்காவின் ஒரு பகுதியை தூங்கவிடாமல் அடித்தோம் சில காலம்.



தமிழ் சினிமாவில் இசைக்குழுக்கள் பற்றி சரியான படம் இன்னும் வரவில்லை. முழுக்குழுவும் மேடையேறி ஒரே ஒரு பாடல் பாடிவிட்டு புறப்படுவதாக தான் எல்லா படங்களும் அமைகின்றன.இதற்காகவா அவ்வளவு கூட்டம் காத்திருக்கும். இடையில் கதாநாயகனோ- கியோ பாடலை மறந்து திணறினால் அவரது ஜோடி மீதிப்பாடலை கூட்டத்துக்கு நடுவில் இருந்து பாடிக்கொண்டே மேடை நோக்கி நடந்து வரும். இருக்கும் படங்களில் இது போன்ற அபத்தங்கள் ஏதுமில்லாமல் மிகுந்த முதிர்ச்சியான நகைச்சுவையுடன் அருமையான காதல் பயண அனுபவமாக இன்றும் நினைத்தால் இனிக்கும் படம் ஒன்றே ஒன்று தான். கமல், ரஜினி, ஜெயப்ரதா பின்னியெடுத்த படம். உண்மையில் இந்த பதிவு எழுதும்போது கே.பிக்கு பால்கே விருது அறிவிக்கப்படிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. பாலச்சந்தர் படங்கள் மீது வெவ்வேறு கோணங்களில் விமர்சனம் வைக்க முடியும் என்றாலும், கதாபாத்திரங்களை அவர்களுக்குண்டான பிரத்யேக பிரச்னைகள், அவற்றை எதிர்கொள்ளும் தீவிரம் என திரையில் காட்டி தமிழ் திரையுலகில் தனித்த அடையாளங்களை அழுந்த பதித்தவர். எனக்கு அவரது நகைச்சுவை உணர்வு தான் மிகவும் பிடித்தது. நினைத்தாலே இனிக்கும் ஒரு உதாரணம்.

இளையராஜா ஒரு வேகம் கொண்ட தென்றலாய் தமிழ் திரை இசையுலகில் நுழைந்து ரசிகர்களை ஈர்த்துகொண்டிருந்தபோது தன் இருப்பை அழுத்தமாய் பதிவு செய்ய மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இந்த படம் பெரும் வாய்ப்பாக அமைந்தது. தன் நீண்டகால நண்பரின் இசையாற்றலை ரசிகர்களுக்கு காட்டவென்றே இந்த படத்தை எடுத்தார் போலும் கே.பி. டைட்டிலிலேயே எம்.எஸ்.வி மியூசிகல் என்று எழுதி இருப்பார். என்ன அருமையான இசை. என்ன ஒரு modernity! எனக்கு பாடல்களை கேட்கும்போது ராஜா-ஸ்ரீதரின் 'இளமை ஊஞ்சலாடுகிறது' பாடல்களுக்கு மெல்லிசை மன்னரின் பதிலோ என்று தோன்றும். "ஒரே நாள் உனை நான்" - "பாரதி கண்ணம்மா", " நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா "- "ஆனந்த தாண்டவமோ" , "என்னடி மீனாட்சி" - "எங்கேயும் எப்போதும்". நண்பர்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். என்னளவில் நான் நினைத்தது அப்படி தான்.
படத்தின் இசை ராஜாவுக்கும் மக்களுக்கும் மன்னர் தந்த பதில் என்றே நினைக்க தோன்றுகிறது. அதே போல் ரஹ்மானுக்கு பதில் சொல்ல இன்னும் ராஜா மனதளவில் தயாராகவில்லை என்பது தான் என் எண்ணம்.

படத்துக்கு கதை-வசனம் சுஜாதா என்று ஞாபகம். ஒவ்வொரு பிரேமிலும் இளமை தெறிக்கும். கமல் தன் குழுவை அறிமுகப்படுத்தும்போது தொடங்கும் சிரிப்பு சூட்கேஸ் மேல் நின்று கமலாகர் ராவ் தன் உயர்ந்த மனைவியிடம் 'உத்தரவு' வாங்கும் காட்சி, ரஜினி இங்கிலீசு பேசி டபாய்க்கும் காட்சி என்று அமர்க்களமாய் இருக்கும். இப்போது பார்த்தாலும் அர்த்த்ம் உணர்ந்து சிரிக்க வைக்கும் காட்சிகள். இந்த படத்தின் மிக முக்கிய அம்சம், வெளிநாடு செல்லும் தமிழ் மனதின் வெளிப்பாடு. அந்த ஊர் ஆச்சர்யங்களை அனுபவித்தபடி சொந்த அறியாமைகளை நகைச்சுவையாக்கி ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொள்வதை அதன் இயல்பிலேயே படமாக்கி இருப்பார் கே.பி. கழிவறை வாசலில் ஆண்-பெண் படங்களின் வேறுபாடு புரியாமல் விழித்து தவித்து , ஒருவர் ஆண்களுக்கான கழிவறையில் நுழைவதை பார்த்து அவர் பின்னாலே ஓடும் காட்சி ஒரு உதாரணம்.

இலக்கிலாமல் பயணித்தாலும் ஜெயப்ரதாவின் மரணம் பற்றிய எண்ணத்தை சிம்பாலிக்காக காட்டும் காட்சிகளும் , அவரது நடிப்பும் படத்தின் நாடியை கைவிடாமல் கொண்டுசெல்லும் . மாற்றி மாற்றி அவர் செய்யும் குழப்படிகளை பொறுக்காமல் கமல் வெறுப்பில் பொருமுவதும் அருமை. ஒரு காட்சியில் கோபத்தில் முதலை குட்டையில் ஜெய்ப்ரதாவை தள்ளிவிடுவது போல் பயமுறுத்தும் காட்சியில் கமல் முகபாவனை அவ்வளவு நிஜமாய் இருக்கும். "நான் சொன்னால் ஹெலிகாப்டரில் இருந்து அப்படியே குதித்து நடிப்பார் " என்று ஜேம்ஸ் கேமரோன் ஆர்னால்டை பற்றி சொன்னதாய் படித்திருக்கிறேன். அது போல் ரஜினியும் பாலசந்தர் சொன்னார் என்பதற்காக "டேப்- சுந்தரியை" தேடும் காமெடி பாத்திரத்தில் வெளுத்து வாங்கி இருப்பார். துரு துருவென பேசி சிரிக்கும் ஜெயசுதா (தானே?) பாத்திரம் அருமை. அவரது கணவனாய் வந்து காரோட்டும் நபரின் முகத்தில் என்னவொரு முரண்நகை சிரிப்பு.

முன்பே சொன்னது போல் இது எம்.எஸ்.வி.யின் படம். எனவே சண்டைக்காட்சியில் கூட "டிஷ்யூம் டிஷ்யூம் " என்று ஒரு பாட்டு. ஆஹா. எஸ்.பி.பி தான் என்னமாய் பாடி இருப்பார் ஒவ்வொரு பாடலையும். என்ன ஒரு பாவம் குரலில். "நிழல் கண்டவன்" என்று கமலுக்கு பாடும்போதும் "ராஜாவை பார்க்காமல் ரோ......ஜா" (இடையில் ஒரு பிர்கா!) என்று ரஜினிக்கு பாடும்போதும் தான் என்னவொரு வெரைட்டி. இப்போதெல்லாம் ஒரே பாடலை போர்ஷன் போர்ஷனாக பத்து பேர் பாடுகிறார்கள். ரஹ்மான் செய்த புண்ணியங்களில் புதிய பாடகர்கள் அறிமுகம் ஒரு திறப்பு என்றாலும் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தராமல் "பரிசோதனைகளை" மேற்கொண்டே இருப்பதால், எவரும் இங்கே நிலைக்கவில்லை. தொண்ணூறுகளின் இறுதி வரை நிறைய படங்கள் இசை அமைத்த தேவா தான் ரஹ்மான் அறிமுகப்படுத்தும் பாடகர்களை கப்பென்று பிடித்து வாய்ப்பு தருவார். ரஹ்மான் ஒரு பாடல் தந்தால் தேவா பத்து பாடல்களுக்கு வாய்ப்பு தருவார். இப்போது அதுவும் இல்லை. சமீபத்தில் விகடனில் மதன் பதில்களில் இந்த தலைமுறை பாடகர்கள் பற்றிய ஒரு பதில் நூற்றுக்கு நூறு உண்மை.

நினைத்தாலே இனிக்கும் நன்றாக ஓடவில்லை என்று சிலரும் இரண்டாவது ரிலீசில் படம் சக்கை போடு போட்டது என்று சிலரும் சொல்கிறார்கள். ஆனால் இன்றும் நான் சோர்வாக இருக்கும் சமயங்களில் பார்த்தால் இழந்த உற்சாகத்தை மீட்டுக்கொடுக்கும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்ற வகையில் எப்போது நினைத்தாலும் இனிக்கும் படம், of course ! இசை அனுபவம். "யாதும் ஊரே" பாடலின் கம்பீர முகப்பு இசைக்கு சிங்கப்பூரின் கடற்கரையும் இயற்கை அழகும் காட்டப்படும் போது மனம் சிலிர்க்கும். அதே போல் ஜெயப்ரதாவின் மரணம் உறுதியாகி விட்ட பின்பு அவரும் கமலும் தாங்கமுடியாத துயரம் தோய்ந்த முகங்களோடு தாம் முன்பு சுற்றி பார்த்த இடங்களை பார்த்தபடி உறைந்து நிற்க பின்னணியில் எம்.எஸ்.வி. விரலசைவில் எஸ்.பி.பி.- ஜானகியம்மா பாடும் 'நினைத்தாலே இனிக்கும்' பாடலுக்கு ஒரு மாற்று உண்டா?

கே.பிக்கு வாழ்த்துகள்..

சொல்வனம்-வடக்குவாசல் ஓவியங்கள்..









Thursday, April 28, 2011

ஓவியங்கள்..!







ஓவியங்களின் மீது கிளிக் செய்யவும்..

Friday, April 22, 2011

அவன் இவன் யுவன்..


அரவிந்தன் இசை வெளியான நாட்கள். ரஹ்மானின் ராஜ்ஜியம் பிரதேச எல்லைகளை பிளந்துகொண்டுவியாபித்திருந்த நேரம் .குறுநில மன்னனாக தேவா கோலோச்சிய காலகட்டம்(ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!) . ராஜாவின் பாடல்கள் அவ்வளவாக ஒலிக்காத நேரத்தில், கார்த்திக் ராஜா வாரிசாக வந்து உல்லாசம் தந்தார். மாணிக்கம் எல்லாம் அப்படியொன்றும் நன்றாக அமையவில்லை. வெறும் டெம்ப்ளேட் இசை போல் அடுத்து வந்த படங்களில் பாடல்கள் இருந்ததால் கார்த்திக்கால் முன்னுக்கு வர முடியவில்லை. ஆனால் பின்னணி இசையில் கார்த்திக் கெட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். அரவிந்தனில் 'ஆல் தெ பெஸ்ட்' பாடல் மூலம் ஒரு நம்பிக்கையை யுவன் தந்தார். 'ஈர நிலா' எனக்கு இன்று வரை பிடித்த பாடல்களில் ஒன்று. பெருந்தன்மையுடன் யுவன் நன்றாக வருவார் என்று முன்பே ஒருமுறை ரஹ்மான் சொன்னார். யுவனும் ரஹ்மான் தனது விருப்பத்துக்குரியவர் என்று சொன்னார். (இது ராஜாவின் தீவிர ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது!)
'வேலை' படம் வரைக்கும் யுவனுக்கு பெரிய ப்ரேக் இல்லை. செல்வராகவனின் 'துள்ளுவதோ இளமை' தான் யுவனின் முதல் முத்திரை. (செல்வராகவனுக்கும் யுவனுக்கும் என்ன தான் பிரச்சனை என்று யுவனை திடீரென்று சேர்ப்பதும் நீக்குவதுமாக செல்வா குழப்புகிறார்!). அதற்குப்பிறகு நிறைய ஹிட் கொடுத்து முக்கிய இசையமைப்பாளராக இருப்பது மகிழ்ச்சி தந்தாலும், திரும்ப திரும்ப ஒரே மாதிரி இசை தருவது ஒரு குறையாக தான் தெரிகிறது. அவ்வப்போது வியாபார வெற்றிகளையும் தாண்டி சில அற்புதங்களை யுவன் தருவார். குறிப்பாக நந்தாவில் ' முன் பனியா ' என உருக வைத்தார். பாலாவின் புதிய படமான ' அவன் இவன்' பாடல்கள் கேட்ட போது யுவனுக்கு இசையில் ஒரு முதிர்ச்சி வந்திருப்பதை உணர முடிந்தது. பாலாவின் morbid மனதை பிரதிபலிக்கும் பாடல்கள். 'ராசாத்தி போல' பாடல் கதாநாயகன் ரெண்டு கையையும் தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு அவ்வப்போது நெஞ்சில் குத்திக்கொண்டு ஆடும் பாடல் வகையை சேர்ந்தது என்றாலும், பின்னணி இசையில் யுவனின் முத்திரை இருக்கிறது. 'ஒரு மலையோரம்' பாடல் மென்மையாய் வருடுகிறது. எல்லாப் பாடல்களிலும் தாள வாத்தியங்கள் தாண்டவமாடுகின்றன. 'டியா டோலே' பாடல் தாள இசையின் உச்சம். இது தீம் மியூசிக் என்று நினைக்கிறேன். கேட்டுப்பாருங்கள். உட்கார்ந்திருப்பவர்களை எழுந்து கொள்ளவும், நின்று கொண்டிருப்பவரை ஆடசொல்லும் தாளக்கட்டு. அருமை.
எனக்கு பிடித்தது 'முதல் முறை என் வாழ்வில் மரணம் பார்க்கிறேன்' என்ற பாலாவின் பிரத்யேக சோகப்பாடல். விஜய் பிரகாஷ் உருகி இருக்கிறார். நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளில் துயரம் வழிகிறது.ஆர்யாவோ - விஷாலோ யாரை பாலா கொன்றார் என்பதை வெண் திரையில் தான் பார்க்க வேண்டும்.

பாடல்களை நன்றாக கேட்டு வாங்கி விட்டு உபயோகப்படுத்தாமல் விட்டு விடுவதில் பாலாவுக்கு நிகர் அவரே. எனக்கு பிடித்த ' ஒரு காற்றில் அலையும் சிறகு' பாடலை 'நான் கடவுளில்' காணாமல் அடித்தது ஒரு பெரும் குறையாக இன்றும் எனக்குப்படுகிறது. இந்த படத்தின் பாடல்கள் சரியாய் படத்தில் உபயோகிப்பட்டால் நிச்சயம் பெரிய அளவில் சென்று சேரும்.

பி.கு: தலைப்பு என்னுடையதில்லை முகநூல் நண்பர் ஒருவர் அடித்த கமென்ட்.

Tuesday, April 19, 2011

அது.. - சிறுகதை


இருளை ஒரு பெரும்போர்வை ஆக்கி அதை குளிர்ந்த நீரில் முக்கி எடுத்து வானம் முழுதும் பரப்பி விட்டது போல் இருந்தது. மணி எப்படியும் பதினொன்றை தாண்டி இருக்கும். பைக்கின் வேகத்தில் கிழிந்த குளிர் உடலெங்கும் அப்பியது.. உடல் தோல் ஜாக்கெட்டுக்குள் நடுங்கியது. விபுல் ஏன் தான் இந்த மாதிரியெல்லாம் செய்கிறான் என்று கோபமாய் வந்தது. அவனால் தான் இந்த பேய் குளிரில் உறைந்தபடி பறக்க வேண்டியிருக்கிறது. ஆபீசிலும் அப்படி தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளில் பாதியை நானே செய்ய வேண்டி வரும். திடீரென்று ஆபீசுக்கு மட்டம் போட்டு விடுவான். புதிதாய் கல்யாணமானவன். வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி போன்ற இடங்களில்கூட பையன்களுக்கு இருபதுகளின் ஆரம்பத்திலேயே கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள். விபுலுக்கு 24 வயது தான் ஆகிறது. பார்ப்பதற்கோ பதினெட்டு வயது பையன் போல் தோற்றம். பீகாரில் தன்னுடைய கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தான் இவன் மணந்திருந்தான். அவள் இவனுக்கு சித்தி மாதிரி இருப்பாள். ஆனாலும் மற்ற எந்த பெண்ணையும் விட ஒரு அதீத கவர்ச்சி. பையனோ ஆபீஸ் என்று ஒரு சமாசாரம் இருக்கிறது என்பதை எல்லாம் மறந்து விட்டு புது பொண்டாட்டி கூடவே சுற்றிக்கொண்டிருந்தான்.

ஐந்தாறு மாதம் கழித்து எனக்கு அடுத்து தங்கியிருந்த வீட்டை காலி செய்து விட்டு..ஷாத்ரா வை தாண்டி எங்கோ வீடு பார்த்து போய்விட்டான். போன ஒன்றிரண்டு வாரத்திலேயே அவனுக்கும் அவளுக்கும் சண்டை வர ஆரம்பித்து விட்டது. தினமும் ஏதாவது பிரச்சனை. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சண்டை போடுகிறாள் என்பான். சில சமயம் அடிக்கவும் செய்திருக்கிறாள். ஒரு சண்டையில் அவன் கன்னத்தை வலுவாகஅறைந்திருக்கிறாள் . முகம் வீங்கியிருந்ததை பார்த்து எங்கள் பாஸே ஒரு மாதிரியாகிவிட்டார். உண்மையில் அவள் திருமணத்திற்கு முன்போ எங்கள் வீட்டருகில் இருக்கும்போதோ அதிர்ந்து கூட பேச தெரியாதவளாய் இருந்தாள். அங்கு போனவுடன் எப்படி இப்படியானாள் என்று புரிபடவில்லை. ரெண்டு நாட்கள் முன்பு அவள் வீட்டார் வந்து இவனை சமாதானப் படுத்தி அவளை கொஞ்ச நாட்கள் கிராமத்தில் இருக்கட்டும் என்று கூட்டி சென்று விட்டார்கள். விபுல் தனியாக தங்க ஒரு மாதிரியாய் இருக்கிறது என்று சில நாட்கள் மட்டும் கூட தங்குமாறு தொந்தரவு செய்து விட்டான்.

அலுவலகத்தில் வேலை முடிந்து கிளம்புவதற்குள் க்ளையண்ட் சொன்னான் என்று இன்னும் சில வேலைகளை முடித்து விட்டு போ என்று விட்டார் எங்கள் பாஸ். இவன் முன்கூட்டியே வீட்டுக்கு சென்று விட்டான். எல்லாம் முடிந்து கிளம்பவே பத்தரைக்கு மேலாகி விட்டது. அங்கு போய் சேர எத்தனை நேரமாகுமோ தெரியவில்லை.

இடமும் பயங்கரமாக தான் இருந்தது. டிசம்பர் குளிரில் டெல்லியே பெரும் ரஜாய்க்குள் சுருண்டு கிடந்தது. பாவி இப்படி என்னை போட்டு வதைக்கிறானே என்று தோன்றியது.அவன் வீட்டை கண்டு பிடிப்பதற்குள் உடல் உண்மையிலேயே மரத்து போய்விட்டது. நல்லவேளை பையன் வோட்கா சிக்கன் என்று தடபுடலாய் வரவேற்றான். வீடு தான் பூகம்பத்தில் தப்பிய கட்டிடம் போல் இருந்தது. வீட்டின் வெளிச்சுவர்களில் ஏதோ பச்சையம் பரவி இருந்தது போல் இருந்தது. இவன் வீட்டின் மேல் தலத்தில் இருந்தான். கீழ் வீட்டில் வீட்டு ஓனர் இருந்தார். அவரே பாதி நாட்கள் அங்கு இருப்பதில்லை என்றான். அவருக்கு ஏகப்பட்ட வீடுகளாம். அதனால் பெரும்பாலும் கீழ் வீடு பூட்டியே தான் இருக்கும் என்றான்.

சரி தான் இது நன்றாய் தான் இருக்கிறது. கொஞ்ச நாட்கள் இங்கு தங்கலாம் என்று முடிவு செய்தேன். பையன் குடிக்கவே தெரியாதவன். பெருங்குடி மகன் போல் வீட்டில் நான்கு பாட்டில்கள் வைத்திருந்தான். சந்தோசம் என்று தங்கிவிட்டேன். இரவு குடி சாப்பாடு பேச்செல்லாம் முடிந்து அதிகாலையில் தான் தூங்கவே ஆரம்பித்தோம். எத்தனை நேரம் தூங்கினேன் தெரியவில்லை. என்னவோ ஒரு கனவு. கனவை தொடர்ந்து தொந்தரவு. உடலெல்லாம் மரத்து விடுவது போல் இருந்தது. குழிக்குள் இருந்து மேலே தாவுபவன் போல் கட்டிலில் இருந்து எழுந்து விட்டேன். நைட் லாம்பின் வெளிச்சத்தில் யாரோ உட்கார்ந்திருந்தது போல் இருந்தது. திடுக்கிட்டு பார்த்தால் விபுல். ரஜாயை தலைக்கு மேல் போர்த்திக்கொண்டு தன கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தான். உண்மையிலேயே பயந்து விட்டேன். என்னை மௌனமாக பார்த்துக்கொண்டே எனக்கு பின்னால் இருந்த ஜன்னலை கை காட்டினான். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பயத்தில் 'என்னடா' என்றேன் தமிழில்.

"இந்த வீட்டில் பேய் இருக்கு .." என்றான் அவன் தெளிவான ஹிந்தியில்.கை நீட்டியபடியே இருந்தது.

"இப்ப தான் ஜன்னலை தட்டியது " என்றான் நடுங்கும் குரலில்.

திரும்பி பின்னால் பார்த்தேன். அந்த ஜன்னலுக்கு அருகில் தான் நான் படுத்திருந்தேன். மெதுவாக எழுந்து அவன் கட்டில் பக்கம் நகர்ந்தேன். அவனே பேய் மாதிரி தான் இருந்தான். அவன் பக்கத்தில் போகவும் பயம். மெல்ல அவன் கட்டிலின் மறு முனையில் அமர்ந்து கொண்டு அவனை பார்த்தேன். எனக்கு உண்மையில் நடப்பது நிஜமா கனவா என்று புரிபடவில்லை. சற்று நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தோம். குளிரா பயமா தெரியவில்லை உடல் கட கட வென்று நடுங்கியது. இத்தனை நாளாக இவன் பயந்தது இவன் மனைவிக்கா இல்லை இவன் சொல்லும் பேய்க்கா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

இவனுக்கு மட்டும் ஜன்னலை தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. அதனருகிலே படுத்திருந்த எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு வேளை அந்த சத்தத்தில் தான் நானும் எழுந்து விட்டேனோ என்று யோசித்தேன்.
"எப்பவும் இப்படி தான் நடக்குமா?" என்றேன்.
"வந்த ரெண்டாவது நாளில் இருந்தே இந்த சத்தம் கேட்கிறது.." என்றான். போனவாரம் ஒரு பக்கம் ஜன்னலையும் ஒரு பக்கம் கதவையும் மாறி மாறி தட்டியதாம். பயத்தில் மனைவியை கட்டிப்பிடித்தபடியே தான் கிடந்தானாம்.

நான் வீட்டின் ஜன்னலை மாடிப்படியில் ஏறும்போது பார்த்ததை நினைத்து பார்த்தேன். மடிப்படியிலோ அல்லது அதன் கைப்பிடி சுவற்றிலோ நின்று கொண்டு கை நீட்டினாலும் தொட முடியாத உயரத்தில் தான் இருந்தது ஜன்னல். பிறகு எப்படி இந்த மாதிரி சத்தம் வரும் என்று நினைத்தேன். என்ன தான் பேய் பிசாசை நம்பாதவன் என்றாலும் பக்கத்தில் படுத்திருந்தவன் இருட்டில் இப்படி எழுந்து உட்கார்ந்து நடுங்கி கொண்டிருந்தான் என்றால் யார்க்கு தான் பயம் வராது. அவன் பயத்தை நானும் பங்கு போட்டுக்கொண்டேன்.



விடியும் வரை அப்படியே அமர்ந்த படி தூங்கி போய் இருந்தோம். காலையில் கிளம்பும்போது கேட்டேன்." ஸாலா ..இவ்வளவு பிரச்னை இருக்கும்போது இந்த வீட்டை ஏன்டா காலி பண்ணாமல் இருக்கே?"
"இல்லை மோகன்ஜி என் மனைவி தான் வேண்டாம்..இந்த வீடு நல்லா தான் இருக்கு என்று சொல்லிவிட்டாள் " என்றான். சரிதான் அவளுக்கு பேய் தான் பிடித்திருக்கிறது. அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் தான் பையன் அல்லாடிக்கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொண்டேன்.

அதை தொடர்ந்து வந்த ஆறு நாட்களுக்கு நான் அங்கு தான் தங்கியிருந்தேன். இரவில் சரியாக பனிரெண்டு ஒரு மணிக்கெல்லாம் விழிப்பு தட்டிவிடும். ஆனாலும் எந்த சததத்தையும் நான் கேட்கவில்லை. அவனோ முதல் நாள் பார்த்த மாதிரியே தான் பயந்து போய் உட்கார்ந்திருந்தான் ஒவ்வொரு முறையும். நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று அவனை தேற்றி தூங்க வைத்து கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக ஊரில் இருந்து அவள் மனைவியும் வந்து விட்டாள். அவள் வந்தவுடன் எனக்கு முன்பாகவே அவளை தழுவிக்கொண்டான். அவளும் அவன் மேல் உயிரே வைத்திருந்தை போல் கண்ணீர் விட்டாள்.
அப்புறம் ரெண்டு மூன்று நாட்களில் வேறு வீடும் பார்த்து போய் விட்டார்கள் இருவரும். அதற்கு பிறகு அவள் சண்டை எல்லாம் போடுவதில்லை ரொம்ப அன்பாக இருக்கிறாள் என்று சொல்வான் விபுல். நான் தான் அவன் பயந்து போய் உட்கார்ந்திருந்ததை நடித்துக்காட்டி அலுவலகத்தில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தேன். விபுல் ஆபிஸ் வேலையாக இரண்டு நாள் வெளியில் சென்றிருந்த போது நான் அவன் வீட்டுக்கு சென்று வந்ததை மட்டும் யாரிடமும் சொல்லவில்லை. அழுத்தக்காரி. சுலபத்தில் உடன்படவில்லை. பிறகு தான் அவள் கட்டாயப்படுத்தி அவனை ஷாதிராவில் வீடு பார்க்க சொன்னாள் எனபதும் நான் மட்டுமே அறிந்தது.

ஒரு மாதம் கழித்து எனக்கு குர்கானில் வேறு வேலை கிடைத்து அங்கு வீடெடுத்து தங்கிவிட்டேன். நல்ல வீடு. .
மேல் தளத்தில் இருந்தது . சுற்றிலும் அழகான மரங்கள் வேறு. வேலை முடிந்து வீடு திரும்ப நேரமானாலும் பயமே இருக்காது. ரம்யமான இடம். இடையில் ஒரு முறை விபுல் தன் மனைவியுடன் இங்கு வந்து பார்த்து விட்டு " வீடு அருமையாய் இருக்கிறது மோகன். குர்கானில் ஒரு வேலை கிடைத்தால் நான் உங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே வந்து விடுவேன்.." என்றான். அவள் எதுவும் பேசவில்லை. ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த என் சட்டையை பார்த்துக்கொண்டே இருந்தாள். அன்று அணிந்திருந்தது.

போன மூன்றாவது வாரத்தில் ஓர் இரவில் ஏதோ சத்தம் கேட்டு விழித்துக்கொண்டேன். நல்ல வெயில் காலம். காற்றே இரவில் கூட கடும் வெப்பமாய் இருக்கும். எல்லா ஜன்னலையும் திறந்து வைத்திருந்தேன். யாரோ என்னை பெயர் சொல்லி அழைத்தார்கள். மெல்ல எழுந்து ஜன்னலை பார்த்தேன். ஜன்னலின் கம்பியை பிடித்துக்கொண்டு தலை முடி காற்றில் அசைய ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். " இருக்கீங்களா மோகன் பையா " என்றாள்.சற்று ஊடுருவிய பார்வையில் தெரிந்தது விபுலின் மனைவி. அவள் குரலோடு இன்னொரு ஆணும் சேர்ந்து பேசுவது போல் இருந்தது. இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாள் என்று ஒன்றுமே புரியவில்லை. அவள் தான் என்றாலும் தலைமுடியெல்லாம் கலைந்து பார்க்கவே பயங்கரமாய் இருந்தாள். என்னவோ ஆர்வமும் மித மிஞ்சிய காமமும் உந்தித்தள்ள கதவை திறந்தேன். நீண்ட நாள் திறக்கப்படாமல் இருந்த சவக்கிடங்கு திறந்தது போல் நாசிஎங்கும் ஒரு வித நாற்றம் நிறைந்தது. கதவு திறந்த வேகத்தில் ஒரு மின்னலைப்போல் பாய்ந்தவள் என்னை அணைத்துக்கொண்டு அப்படியே தரையில் சாய்த்தாள். புடைவையின் தலைப்பு சரிய, பளீரென தெரிந்த மார்புகள் மேலும் கீழும் மூச்சுக்கு ஏறி இறங்கின. " நான் வேணும்னு தானே பையா விபுலை அன்னிக்கு வெளியூருக்கு அனுப்புனீங்க ..?" என்றாள். ஆண் குரலும் கலந்திருந்தது.
அவள் என் மேல் இயங்க தொடங்கும்போது தலையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் திடீரென்று ஜன்னலுக்கு கீழே வெளிப்புறத்தில் நிற்பதற்கு இடமே இல்லை என்பது நினைவுக்கு வந்தது.

ஓவியங்கள்..


எரியும் தேகம்..


தலைமுறை..

சொல்வனம்- ஓவியங்கள்

சொல்வனம் இந்த இதழில் திருமலை ராஜன் எழுதிய வெங்கட் சாமிநாதன் பற்றிய கட்டுரைக்கு வரைந்த ஓவியங்கள்..





solvanam.com/?p=14096

Thursday, April 14, 2011

ஜே. எஸ். அனார்கலி எழுதிய கவிதை-ஒரு கடிதம்


ஜே. எஸ். அனார்கலி எழுதிய காலம் கவிதை குறித்து கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் இருந்து வந்த கடிதம்..

காலம்

கதை கேட்டுகொடிருக்கிறது.
விதவிதமான மனிதர்களுடையதும்
விலங்குகளுடையதும்கவியின் பருக்கையில் பசியாறிய பறவையினத்தினுடையதுமான கதைகள்
வளர்மரங்களினுடையதும்
அவற்றிலிருந்து கைவிடப்பட்ட
இலைகளினுடையதும் நகர சந்துகளில்
குத்த வைத்திருக்கும் குல தெய்வங்களினதும்
கதைசொல்லிகளின் கதைகளையும்
கூட
காலம் கேட்டுகொண்டிருக்கிறது.
பார்க்கையில்
காலம்
கதைகளால்
நிரம்பியிருக்கிறது.

அண்மையில் வாசித்த என் மனசில் வேர்பதித்த கவிதைகளை அனார்க்கலி எழுதியிருக்கிறர்.பிரபஞ்சமளாவிய ஆடுகளத்தில் செளிக்கிறது அனார்க்கலியின் கவி மனசு. ஆர்வம் மிக பாராட்டுகிறேன் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Tuesday, April 12, 2011

கிரிக்கெட்: ஒரு கடிதம்


கிரிக்கெட் பற்றிய என் கட்டுரைக்கு நண்பர் அகஸ்டஸ் எழுதிய கடிதம்:

பால்யகால கிரிக்கெட்: இன்றும் கூட இந்தியா வென்றுவிட்டது என்று சொன்னால் நான் அவர்கள் மனம் வருந்தக்கூடாது என்று சற்று சிரிப்பேன். மற்றபடி எனக்கு லியண்டர் பீஸ், மஹேஷ் பூபதி, சானியா மிர்ஸா, அபினவ் பிண்ட்ரா, சமீப குத்துச்சண்டை வீரர்கள் வென்றால் கிடைக்கும் மகிழ்ச்சி/புல்லரிப்பு கிரிக்கெட் வீரர்கள் பெயரில் கிடைப்பதில்லை.ஏனென்று யோசித்தபோது கிடைத்ததிந்த நதிமூலம். நான் அப்போது St. Xaviers High School, Tuticorin ல் படித்துக் கொண்டிருந்தேன். 1979-80. அங்கு football team, volleyball team, strong basket ball team எல்லாம் இருந்தது எனக்குத் தெரியும். Even Navy, NCC, NSS, etc. க்களுக்கு மாணவர்களைச் சேர்க்க அந்த அந்த வாத்தியார்கள் அலைவதைப் பார்த்திருக்கின்றேன். அவர்கள் ஒவ்வொரு வகுப்பறைக்கும் வந்து மாணவர்களை தேர்வு செய்வார்கள். Cricket Team பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். சூசை மாணிக்கம், என் தமிழ் வாத்தியார், முதல் வகுப்பு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். 1 மணிநேரம் சென்றிருக்கும். வகுப்பறை வாசலில் நின்று உட்புறமும் வெளிப்புறமும் பார்த்தபடி பாடம் எடுத்துக்கொண்டிருந்தவர், அய்யா, எல்லாரும் சத்தமின்றி எட்டிபாருங்கள் என்றார். பார்த்தோம். எங்களது சரித்திர வாத்தியார், பெயர் சொன்னால் உங்களுக்கு விஷயம் புரிந்துவிடும், ஒரு கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்தபடி தலை குனிந்தபடி ஸ்கூல் சுவரையொட்டி நடந்தபடி உள்ளேவர, அவர் பின்னே சுமார் 10 மாணவர்கள் தலை குனிந்தபடி வந்துகொண்டிருந்தனர். அத்தனை மாணவர்களூம் சின்னவர்களாக, நன்றாக டெரிகாட்டன் சட்டை டவுசர் போட்டவர்களாக இருந்தனர் (அப்போது தான் டெரிகாட்டன் துணிகள் தூத்துக்குடிக்கு வந்திருந்தன. பாலியெஸ்டர் வரவில்லை) மட்டை, பந்து, பேட் என்று ஒவ்வொருவரும் ஏதேதோ தூக்கியபடி, ஒரு போலித்தனமான துக்கத்துடன் சுவர் ஓரமாக நடந்து ஸ்கூலுக்குள் நுழைந்தனர். ’நேற்றைக்கே தோத்திட்டாங்கடா. காலைலே வந்திருக்கலாம். என்னமோ விளையாண்டு களைச்சமாதிரி இவ்வளவு நேரம் கழிச்சு வந்திருக்கான்வ. வாங்கிட்டுப்போன துட்டை கொஞ்சமாவது செலவு பண்ணனும்னு உடிப்பி ஹொட்டல்லெ காலைலே சாப்பிட்டு வந்திருக்கான்வ (உடுப்பி ஹோட்டல் ஸ்கூல் வாசல்லெ இருந்தது)என்றவர் சட்டென்று கோபத்துடன் நேராக அந்த சரித்திர வாத்தியாரை சுட்டியபடி (எங்களுக்கு மட்டுமே கேட்கும் குரலில்) ஐயா, உன்னைத்தான் கேட்கேன், ஜேம்ஸ், விக்டர், ஜெரொம், கிரியெல்லாம் பாத்தா உனக்கு எப்படித் தோணுது? (இவர்களெல்லாம் என் சக மாணவர்கள். அப்போதே 5 அடிக்கு மேலிருப்பார்கள்) விளையாடமாட்டங்கனான்னா. போய்யா, போ. பேட் உயரம்கூட இல்லை இந்த சிறுசுகள் தான் கிடைச்சதா என்று புலம்பியபடி பாடம் நடத்த ஆரம்பித்தார். சுமார் 3 வருடமாக அந்த சரித்திர வாத்தியார் எங்களுக்கு பாடம் எடுத்திருக்கின்றார். ஒருமுறை கூட cricket என்ற வார்த்தை அவரது வாயிலிருந்து வந்ததில்லை. உயரமான மாணவனை வேறு யாரும் கொத்துமுன் கொத்திக்கொள்ளும் Basketball Master மாதிரியோ, கிட்டத்தட்ட 50 மாணவர்களை மாறி மாறி விளையாடவிட்டு 5 மாணவர்களை வாலிபாலுக்குத் தேர்ந்தெடுக்கும் PT Master Xavier மாதிரியோ இல்லை. மற்ற எல்லா விளையாட்டும் PT Masters கையிலிருக்க, இவர் எப்படி இந்த விளையாட்டை மட்டும் கையிலெடுத்துக்கொண்டார் என்பது எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று. அதுவும் சர்வ வல்லமையுடன், கிரிஸ்தவ பாதிரிகள் ஆட்சி செய்யும், சேவியர்ஸ் ஸ்கூலில்.

அவர் நினைத்திருக்கலாம். என்னுடைய கிரிக்கெட் டீம் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டின் புனிதத்தைக் காப்பற்றுவது அதைவிட முக்கியமானது என்று.

இருக்கலாம். ஆனால் என்னால் அந்த நினைப்பைக் கழற்றிவுட்டு அந்த ஒரு விளையாட்டை மட்டும் பார்க்க முடியவில்லை.

---செல்வக்குமார்(அகஸ்டஸ்)

Friday, April 8, 2011

கிரிக்கெட்: நினைவில் பறக்கும் பந்துகள்


உலகக்கோப்பையை இந்தியா வென்ற நாளின் கொண்டாட்டத்தை என்னால் மறக்கவே முடியாது. அன்று எனது அறைநண்பர் டாக்டர். மணிகண்டனுக்கு பிறந்த நாள். எங்கள் குல வழக்கப்படி ஒவ்வொரு சனிக்கிழமையின் இரவை கொண்டாட்டமாய் அனுபவிப்பது ஒரு சடங்கு போல் மாறிவிட்டது. மணிகண்டனுக்கு புதன்கிழமை தான் பிறந்த நாள். எனினும் எங்கள் சட்ட நிபுணர்கள் கலந்தாலோசித்து அதை சனிக்கிழமை இரவு நாள்மாற்றம் செய்து விட்டார்கள். முநிர்காவில் தமிழர்கள் அதிகம். அதிலும் நான் தங்கியிருக்கும் கட்டிடத்தில் மட்டும் பதினைந்து தமிழ் நண்பர்கள். வெளியிலிருந்து வந்து செல்லும் நண்பர்களை கணக்கிட்டால் தொகை முப்பதை தொடும். அனைவரும் ஒரு சேர ஒரே அறையிலிருந்து சத்தம்போட்டபடி கீழ்வீட்டு காரர்கள் கூரை அவர்கள் தலை மீது விழுந்துவிடும் போல் 'தொம் தொம்மென்று' குதித்துக்கொண்டு மேட்சை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவின் ஒரே அமைதிப்புறாவான ராம் அடிக்கடி 'தடப் தப்பென்று' அமர்ந்திருப்பவர்களின் தலை கால் என்று எல்ல பாகங்களின் மீதும் கால்வைத்து தாவியபடி முன்னேறி டி.வி முன் நின்று இலங்கை வீரர்கள் (குறிப்பாக மலிங்கா!) ஐ பார்த்து 'யார்ரா நீ ..யார்ரா நீ ..' என்று சாத்வீக முறைப்படி கேட்டு சலம்பிக்கொண்டிருந்தான். வெற்றி நிச்சயம் என்ற போதே வெடி சத்தம் வெளியில் கிளம்பி விட்டது. தோனி பந்தை எல்லைக்கு அப்பால் அடித்து மட்டையை சுழற்றியதும் இந்தியா..இந்தியா என்று திடீர் தேசப்பற்று தொற்றிக்கொள்ள உற்சாகம் கரைபுரண்டு ஓடத்துவங்கியது. எத்தனை சந்தோஷம் அன்று இந்தியர்கள் முகங்களில்!

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பிறந்த பெரும்பாலோருக்கு இந்த விளையாட்டு பால்ய நாட்களின் பிரிதகற்ற முடியாத நினைவுகளை தந்து தானிருக்கிறது. பள்ளி நாட்களில் எங்கள் அறந்தாங்கி ஹவுசிங் போர்ட் கிரிக்கெட் போர்டு என்ற நாமம் கொண்டு Atonomous Body அளவுக்கு தனி சுதந்திரம் பெற்று திகழ்ந்த கிரிக்கெட் அணி உள்ளூர் பிரசித்தம். விடுமுறை நாட்களில் வேகாத வெயிலில் நாங்கள் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்டம்பை ஊன்றி விளையாட தொடங்குவோம். பந்து ஜன்னல் வழியாக வந்து விழாத வீடுகள் எனக்கு தெரிந்தவரை இல்லை என்றே சொல்வேன். அரசு ஊழியர் குடியிருப்பு என்பதால் மூடாத சாக்கடைகள் அதிகம். அங்கு விழும் பந்துகளை எந்த கூச்சமும் இல்லாமல் வலது கையாலேயே எடுத்து குடிநீர்க்குழாயில் கழுவி டவுசரில் அழுந்த துடைத்துவிட்டு நாங்கள் விளையாடுவதை கொலைவெறியுடன் பெற்றோர் பெருமக்கள் 'கவனிதுக்கொண்டிருப்பர்கள்'. இது தவிர சாலை வழியாக செல்லும் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் பயந்து பயந்து எங்கள் 'பிட்சை' கடப்பார்கள். "சீக்கிரம் போங்க அண்ணே" என்று சிரித்தபடி சொல்லும் எங்கள் நன்னப்பா கடப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டால் " போடா டேய் சட்டிதலையா " என்று பொறுமை இழந்துவிடுவான். ரோட்டின் நடுவில் ஒரு முனையில் செங்கல்லை ஸ்டெம்ப் போல் அடுக்கி எதிர்முனையில் இருந்து எறியப்படும் பந்துகள் அவர்கள் முதுகிலோ மண்டையிலோ பட்டால் சங்கம் பொறுப்பேற்காது என்று அவர்களுக்கு தெரியும். பந்து எங்கெங்கோ மாயமாய் மறைந்தாலும் எங்கள் மீட்புக்குழு அதை எப்படியேனும் எடுத்துவந்து விளையாடும். எடுக்கவே முடியாத இடங்களில் பந்து சென்று விழும் வரை எங்கள் அப்பழுக்கற்ற கிரிக்கெட் தொடரும்.

விடுமுறை நாட்களில் வருகை புரியும் பையன்களின் எண்ணிக்கையை பொறுத்து இருப்பவர்களை இரு பிரிவாகவோ அல்லது இருப்பதிலேயே சாதுவான பையனை குனியவைத்து அவன் முதுகுக்கு மேல் விரல்களை காட்டி எந்த நம்பர் வரும்போது அவன் யாரை கை காட்டுகிறானோ அதே வரிசைக்கிரமதிலோ விளையாட துவங்க்வோம். கடைசி நம்பர் பையன் பந்து வீசுவான். முதலாமவனுக்கு மட்டை பிடிக்கும் பாக்கியம் கிடைக்கும். பத்தே பத்து கட்டிடங்கள் கொண்ட அந்த சின்ன பிரதேசத்துக்குள் மட்டும் நாங்கள் ஐந்து விளையாட்டு 'மைதானங்களை' பராமரித்து வந்தோம். பம்ப்ரூம் தேவசங்கர் வீட்டு ஜன்னலுக்கு கீழ் நிறைய இடம் இருப்பதால் அந்த சுவற்றில் மூன்று கோடுகளை கரிக்கட்டையில் வரைந்து அதற்கு பத்து தப்படிகள் எதிர்முனையில் ஒரு செங்கல்லை அடையாளத்துக்கு வைத்துவிட்டு (ரன்னர் எண்ட்!) விளையாடுவோம். எங்கள் குழுவின் ஆஸ்தான Off Spinner ஜெகதீஷ் பாபு பெருமுயற்சியுடன் வீசும் சில பந்துகள் அதீத சுழற்சிக்குட்பட்டு சமையலறை ஜன்னல் வழியாக உள்ளே சென்று அங்கு இருக்கும் தட்டில் பட்டு மறுபடியும் சுழன்று கரண்டிகள் மாட்டியிருக்கும் ஸ்டாண்டை கிளீன் போல்டாக்கி கீழே விழும்போது நாங்கள் அவரவர் வீடுகளில் சாவகாசமாய் அமர்ந்து வீட்டுப்பாடம் செய்து கொண்டிருப்போம். அந்த இடத்தில் ஒரு மாபெரும் கிரிக்கெட் போட்டி நிகழ்ந்ததற்கான தடயமே இருக்காது. அதே போல் ஒன்றுக்கொன்று எதிர் எதிராக வளர்ந்திருந்த இரு மரங்களின் இடைவெளியை பிட்சாக்கி ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்துக்கு (அதில் ஸ்டெம்ப் செதுக்கப்பட்டிருக்கும் !) எறிந்து விளையாடுவோம். மேல் நோக்கி அடிக்கபப்டும் பந்துகள் சில சமயம் மரங்களில் மாட்டிக்கொள்ள பீல்டிங் அணியினர் அந்த மரத்தின் கிளைகளைப்பிடித்து உலுக்கி அதகளம் பண்ணி பந்து கீழே விழும்போது பச்சக்கென்று பிடித்துவிடுவார்கள். அதுவரை இப்போதைய 'Review' முடிவு கேட்டு காத்திருக்கும் மட்டையாளர்கள் போல் பரிதவிப்புடன் மேல் நோக்கி பார்த்தபடி நின்றிருப்பார்கள். சில சமயம் பந்து நியூட்டனாவது ஒன்றாவது என்று அலட்சியமாக மாட்டிய திசைக்கு நேரெதிர் திசையில் வேறொரு கிளையிலிருந்து படக்கென கீழே தரையில் விழுந்து விடும். அப்போது களிப்பில் மட்டையாளன் கிரண் மோரேயை கிண்டல் செய்யும் ஜாவிட் மியாண்டட் போல் தவ்விக்குதிப்பான்.

மொகாலி போன்ற ஒரு முக்கிய 'மைதானம்' இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில் இருந்தது. அதன் இடைவெளி சற்று அதிகம். எனவே பெரிய போட்டிகள் அங்கு தான் நடத்தப்பட்டன. அந்த மைதானத்தில் ரெண்டு சிக்கல்கள். ஒன்று லெக் சைடில் சற்று தள்ளி இருந்த ஹவுசிங் போர்டுக்கு தண்ணீர் சப்ளைக்கு முக்கியமான கிணறு. இன்னொன்று விக்கெட் கீப்பருக்கு பின்னால் இருந்த என் சக மாணவி கவிதா வசித்த வீட்டின் பால்கனி. பெரும்பாலும் அந்த பால்கனியில் அவள் பாட்டி அமர்ந்திருப்பாள்.எழுபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும் அந்த பாட்டிக்கு. லெக் சைடில் தூக்கி அடிக்கப்படும் பந்துகள் அந்த கிணற்றில் போய் விழுந்துவிடும். எனவே அந்த கிணற்றில் விழும்படி அடித்தவன் அவுட் என்று அறிவிக்கப்படும். கிணற்றை தாண்டி தான் முருகேசன் வீடு. அவன் வீட்டு காம்பவுண்டை தொட்டால் Four! ஒருவேளை சிக்சர் அடித்தால்? பந்தே திரும்பவராது. முருகேசன் அம்மாவுக்கு இந்த 'கிரிக்கெட் எழவெல்லாம்' ஆகவே ஆகாது. எடுக்கப்போனவன் அர்ச்சனைகளுக்கு ஆளாக நேரும் என்பதால் ஆட்டம் பாதியில் முடிந்து விடும். அல்லது அடுத்த பந்து கிடைத்த பின்பு தொடரும். அந்த கிணற்றில் விழுந்த பந்தை யார் எடுப்பது? அது நல்ல பெரிய கிணறு. அதன் உட்புற சுவற்றில் பெரிய பாறைகள் சற்று இடைவெளியில் அமைக்கப்பட்டு படிகளாக கீழிறங்கும். கிணற்றில் ஒரு ஆமை ஒன்று இருக்கும். அவ்வப்போது அது படிகளில் படுத்து ஓய்வெடுக்கும். ஹவுசிங் போர்ட் பெற்றோர்கள் கண்டிப்பானவர்கள் என்பதால் எங்களில் யாரும் இறங்க மாட்டோம். பக்கத்துக்கு தெருவில் இருந்து வரும் செந்தில் தான் அதை எடுப்பான். படிகளில் அனாயாசமாக இறங்கி கையில் ஒரு நீண்ட கம்பொன்றை வைத்து தண்ணீரின் மேற்பரப்பை அடித்து அடித்து பந்தை தன்னருகில் வரவைத்து எடுத்துவிடுவான். அதை ஒரு சாகசம் போல் பார்த்துக்கொண்டிருப்போம். அவனுக்கு நீச்சல் தெரியும் தான் என்றாலும் அவனை பந்தை எடுக்க நாங்கள் பயன்படுத்திக்கொண்டது இன்னும் ஒரு குற்றவுணர்வாக எங்கள் நினைவுகளில் படிந்திருக்கிறது. இந்த சாகசத்துக்கு பரிசாக சில சலுகைகள் அவனுக்கு கிடைத்தன. ஒப்பனிங் ஓவர் அவன் தான் போடுவான். அவன் சேட்டன் ஷர்மாவின் தீவிர ரசிகன். ஆனால் பந்து வீசுமுறை பேட்ரிக் பேட்டர்சன் (நினைவிருக்கிறதா?) போல் தான் இருக்கும். அவன் போடும் பந்துகள் பேட்ஸ்மேனின் தொப்பியை கழற்றி விட்டு ஒரு முறை பூமியில் பட்டு எழுந்து கவிதா வீட்டு பலகணி வழியாக வீட்டு வரவேற்பறைக்குள் சென்று விடும். ஒருமுறை டி.வி.யில் கிரிக்கெட் ஹைலைட்ஸ் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது போல. எங்கள் சேட்டன் வீசிய பந்து அவர்கள் வீட்டு டி.வியில் பட்டு கீழே விழ, கவிதாவின் பாட்டி பந்து டி.வி.குள்ளிருந்து தான் வெளியே வந்து விட்டது என்று பயந்து அலறி சத்தமிட , 'சங்கம் ஒடனே' கலைக்கப்பட்டு அவனவன் அடுத்த தெருக்களில் தென்பட்ட திசைகளில் ஓடிக்கொண்டிருந்தான்.

அணியின் முக்கிய வீரர்கள் என்றால் நாகராஜ் , அவன் தம்பி தேனிமலை, யோகானந்த் அவன் தம்பி கௌதமன்.. நான் என் தம்பி சிவா என்று ஸ்டீவ் - மார்க் வாவ் சகோதரர்கள் போல் எக்கச்சக்கமாய் இருந்தோம். எனவே எங்கள் டீம் A மற்றும் B என இரு அணிகளாக பிரிக்கப்பட்டது. எங்கள் டீம் பிரசத்தி பெற்றது என்று சொன்னேனே! உண்மையில் சில மேட்சுகளில் ஜெயித்திருந்தாலும் பல மேட்சுகளில் மண்ணைக்கவ்விக்கொண்டு வரும் சிறப்பணி அது. எனவே உள்ளூரில் டோர்னமென்ட் நடத்துபவர்கள் தங்கள் சொந்த அணிக்கு எதிராக லீக் மேட்சுகளில் விளையாட எங்களை தான் அழைப்பார்கள். அப்போது தானே அவர்களால் அடுத்த சுற்றுக்கு போக முடியும். ஒரு முறை நாங்களே டோர்னமென்ட் நடத்த வேண்டும் என்று அரந்தாங்கியின் புகழ்பெற்ற அரசியல்வாதி திருநாவுக்கரசுவிடம் சென்று நிதி வாங்கி போட்டி நடத்தினோம்.அப்போது தான் முதன் முறையாக கிரிக்கெட் பால் வாங்கி விளையாடினோம். அதுவரை ரப்பர் அல்லது டென்னிஸ் பந்துகள் தான். கிரிக்கெட் பால் என்பதால் 'பாதுகாப்புக்கு' அப்டமன் கார்டு , ஹெல்மெட் என்று அமர்க்களப்படுத்தியது இன்னும் நினைவிருக்கிறது. சில சமயம் B டீமில் இருந்து சிலரை சேர்த்துக்கொண்டு நாங்கள் எதிர்கொண்ட மேட்சுகளில் தம்பிகள் அணி தளராமல் விளையாடி ஜெயிக்க வைத்தது மறக்க முடியாதது. சிவா , கௌதமன் , தேனிமலை போன்றோர் எதிரணியின் மலிங்கா மண்டையர்கள் கொலைவெறியோடு வீசும் அதிவேக பந்துகளை எதிர்கொண்டு தரையோடு தரையாக படுத்தபடி பேட்டிங்கில் பின்னியெடுத்து பிழைக்க வைத்தார்கள்.

நாங்கள் விளையாட வெளியிலிருந்து கிடைத்த தொந்தரவுகளை விட அணியின் 'நெஹ்ராக்கள்' பண்ணிய சேட்டைகள் மறக்க முடியாதவை. நாகராஜிடம் சொந்தமான பேட் ஒட்ன்று இருந்தது. அவன் தான் அதை அப்படி அழைத்தானே ஒழிய அது எங்களை பொறுத்தவரை ஆப்பை(அகப்பை) தான். அதை பிடித்துக்கொண்டு அவன் பேட்டிங் செய்தான் என்றால் ஷெர்லக் ஹோம்ஸ் வந்தாலும் ஸ்டெம்ப் இருக்குமிடத்தை கண்டு பிடிக்க முடியாது. எனவே நாகராஜை அவுட் செய்வதென்பது வேர்ல்ட் கப்பில் ஹாட்ரிக் எடுப்பது போல் பெரும் சாதனை தான். அதையும் மீறி பந்து ஸ்டெம்ப் (சுவற்றில் வரையப்பட்ட கரிக்கோடுகள்) மீது மிக துல்லியமாக பட்டாலும் அவன் ஒத்துக்கொள்ளவே மாட்டான். துக்க நாளன்று துலாபாரம் படம் பார்த்தவன் போல் கண்ணீர் அருவியாக ஓட அழுது புலம்பிவிடுவான். பந்து அவன் தலைக்கு மேல் பத்தடி உயரத்தில் பறந்து சுவற்றில் பட்டதாக சொல்லி அவன் நடத்தும் 'சீரியலை' சகிக்காமலேயே நாட் -அவுட் என்று அறிவித்து நொந்து போய் விளையாடுவோம். அதே போல் நன்னப்பன் பேட்டிங் செய்து விட்டு பில்டிங் செய்ய லாங் ஆனுக்கு அனுப்பினால் சில பல நிமிடங்களில் காணாமல் போய் விடுவான். அங்கு தான் அவன் வீடு இருக்கிறது. அவனை அவன் குகையிலேயே சந்தித்து திரும்ப கொண்டு வருவது என்பது இயலாத காரியம். அவன் அம்மா ' கொதிக்கிற வெயில்லே அவனை ஏண்டா விளையாட கூப்புடுறீங்க.. போங்கடா ' என்று விரட்டி விடுவார். 'அவன் இவ்வளவு நேரம் பேட்டிங் செய்தான் அம்மா .. பீல்டிங் செய்யும் முறை வரும்போது இப்படி வீட்டுக்குள் புகுந்து வரமறுப்பது தர்மமாகுமா?' என்று நெடுநேரம் கெஞ்சி அவனை திரும்ப பெறுவதற்குள் மாலை மங்கி விடும். சண்முகவேல் என்றொரு நண்பன் இருந்தான். பெரிய தலைக்கு கீழ் காற்றிலாடும் சட்டையும் தொங்கும் கால்சட்டையும் தான் இருக்கும். அவ்வளவு ஒல்லியாக இருப்பான். ஆனால் காற்றோடு காற்றாக அவன் ஓடிவந்து வீசும் பந்துகள் உய்ரதரமானவை. அறந்தாங்கியின் பெரிய கிரிக்கெட் வீரர்களே அவனை பாராட்டி பேசுவார்கள். அவர்களோடு சேர்ந்து விளையாடவும் செய்தான், சில மேட்சுகளில்.

எப்போதும் ஆச்சர்யங்களுக்கும் சுவாரசியங்களுக்கும் குறைச்சலில்லாத கிரிக்கெட் இடையில் சூதாட்டம் -மேட்ச் பிக்சிங் என்று மலிந்து விட அதன் மீதான ஈர்ப்பு சற்று குறைந்தது என்னவோ உண்மை தான். நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு சவால் விட்டுக்கொண்டு விரல் நகங்களை பல்லுக்கு கொடுத்து பார்த்த பல மேட்சுகள் அரங்கேற்றப்பட்டவை என்ற தகவல்கள் வந்த பின்பு நான் கிரிக்கெட் அவ்வளவாக பார்ப்பதில்லை. சமீப காலமாக குதிரை ஏலம் போல் வீரர்களை விலைக்கு வாங்கி , பணம் கொழித்தவர்கள் நடத்திக்கொள்ளும் ஐ. பி. எல் போட்டிகள் ஏனோ என்னை கவரவில்லை. எனவே சில ஆண்டுகளாக அணியில் யார் விளையாடுகிறார்கள் என்றெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இந்த உலகக்கோப்பையில் முதற்கட்ட மேட்ச் ஒன்றை பார்க்கும்போது டி.வி.யில் கோட் போட்ட படி பிட்சின் நடுவில் நின்று பேசிக்கொண்டிருந்த கங்குலியை பார்த்ததும் ' ஏன்டா தம்பிகளா ..நம்ம தாதா என்ன கோட் போட்டு நிக்கிறான்.. ஒபெனிங் அவன் இல்லையா ? " என்று கேட்டு தொலைத்துவிட்டேன். சற்று நேரம் அமைதி நிலவியது. திரும்பி நம் தமிழ் நண்பர்களின் முகங்களை பார்த்தேன். பல முகங்களில் பளீரென்று எரிந்து கொண்டிருந்தது ... ரத்த வெறி!!