Tuesday, August 6, 2013

காபூலிவாலா: தூய அன்பின் நாயகன்

தெருவில் செல்லும் அந்நிய தேசத்து வியாபாரிகளை பார்க்கும்போது குழந்தைகளிடம் ஏற்படும் பிரமிப்பும் பயமும் பார்க்க அலாதியானவை. அந்த பயத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று வளர்ந்தவர்களான நமக்கு தெரியும் என்பதால் குழந்தைகளின் பரபரப்பு ரசிக்க வைக்கும். இப்போதெல்லாம் தெருவில் குழந்தைகளை கவரும் பொருட்களை விற்றுச் செல்லும் வியாபாரிகளை காண்பதே அரிதாகி விட்டது. அந்த மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் பற்றி பெரிதாக தெரியாமல் அம்மனிதர்கள் எங்கிருந்தோ உதித்தவர்கள் என்ற எண்ணம் பெரியவர்களுக்கே இருக்கும். குழந்தைகளுக்கு கேட்கவா வேண்டும்? தன்னை ஒருநாள் சாக்கு மூட்டையில் கட்டி அந்நிய தேசத்தில் விற்க தான் அந்த மர்ம மனிதன் வந்திருக்கிறான் என்று மனதுக்குள் பயம் கொள்ளும் அதே சமயம் உலகின் பத்திரமான இடமான தன் வீடு அல்லது தெருவில் இருந்துகொண்டு அந்த விசித்திர மனிதனை நோட்டம் இடவும் குழந்தைகள் தயங்குவதில்லை. அப்படியான ஒரு தொலைதூர தேசத்து வணிகனின் கதை தான் 'காபூலிவாலா' !
வறண்ட மலைகளும் மண் கட்டிடங்களும் நிறைந்த ஆப்கானிஸ்தான் மூலையில் எங்கோ ஒரு கிராமத்தில் தன் செல்ல மகளை விட்டுப் பிரிந்து வந்து பிழைப்புக்காக நெரிசலான கல்கத்தா வீதிகளில் திரியும் காபுலிவாலாவின் கதை அது. ரவீந்திரநாத் தாகூர் முத்திரை பதித்த கதைகளில் ஒன்று .. கதை சொல்லியின் ஐந்து வயது மகள் மினி திறந்த தன் குட்டி வாயை மூடாமல் பேசிக்கொண்டே இருப்பவள். எழுத்தாளரான தன் தந்தையிடம் ஒரு கேள்வி கேட்டு அதற்கு பதில் வரும் முன்னரே அடுத்த கேள்வியை வீசுபவள். தன்னையொத்த குழந்தைகளை போலவே தெருவில் திரியும் வித்தியாசமான மனிதர்கள் மேல் ஒரு விசித்திரமான பயத்தை கொண்டவள். ஆப்கனில் தான் விட்டு வந்த தன் மகள் வயதுள்ள மினியை பார்த்ததும் பாசம் கொள்கிறான் காபுலிவாலா அப்துர் ரஹ்மான் கான். கதையின் நாயகர்கள் இவர்கள் தான்.
மினியின் அம்மாவுக்கு எங்கே அம்மனிதன் தன் மகளை கடத்திச் சென்று விடுவானோ என்ற பயம். தாகூர் வார்த்தைகளிலேயே சொல்வதானால் "தெருவில் ஏதாவது உரத்த சத்தம் கேட்டால் இந்த உலகத்துக் குடிகாரர்கள் எல்லோரும் ஒன்று கூடி தன் வீட்டை நோக்கித் தான் ஓடிவருகிறார்கள் என்று கதி கலங்கிப் போகும் பயந்தாங்கொள்ளி !" எழுத்தாளரான மினியின் தந்தை காபூல்காரன் நல்ல மனிதன் என்பதை அறிந்தவர். தன் மகளுடனான அம்மனிதனின் நட்பையும் அவர்களது உரையாடல்களையும் ரசிப்பவர்.தான் சுமந்து செல்லும் மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று ஆர்வத்துடன் கேட்கும் மினியிடம் ரஹ்மத் சொல்வான் "அதுவா மூட்டைக்குள் பெரிய யானையை அடைத்து வைத்திருக்கிறேன் !"
நொடி தாமதிக்காமல் மினி சொல்வாள் " ஏமாற்றுக்காரா ..சின்ன மூட்டைக்குள் அவ்வளவு பெரிய யானை யை எப்படி அடைக்க முடியும்?" "சின்னப் பொண்ணு.. நீ எப்போ மாமனார் வீட்டுக்கு போவே?" "நீ எப்போ போவே காபூலிவாலா?" "நானா ..நான் மாமனாரையே கொன்று போடுவேன்" அக்குழந்தை இடி இடியென சிரிக்கும். பிழைப்புக்காக, தான் விற்கும் உலர்திராட்சை, பேரீச்சம் பழம் போன்றவற்றை தன் குட்டி சசிநேகிதிக்கு அன்பளிப்பாக தருவான் ரஹமத். அவற்றை தன் பாவாடையில் முடிந்து வைத்து பாதுகாப்பாள் அந்த குட்டி. அவளுடனான அந்த நட்பு ஊரில் உள்ள தன் மகளின் நினைவின் வலி மறக்க வைப்பதாக உணரும் ரஹமத் மிகவும் சந்தோஷமாக உணர்வான்.அப்பழுக்கற்ற அந்த நட்பில் எதிர்பாராத பிரிவு ஏற்பட்டு விடும். தன்னிடம் கடனுக்கு பொருட்கள் வாங்கிய உள்ளூர்காரன் கடன் வாங்கியதை மறுப்பதுடன் தன் குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்து அவனை கத்தியால் குத்திவிடுகிறான் ரஹமத். போலீஸ் அவன் கைகளில் விலங்கிட்டு அழைத்து செல்லும்போது மினியும் அவள் தந்தையும் அவனை கடைசி முறையாக சந்திப்பார்கள். அவ்வளவு தான். ஆறு வருடங்கள் கழித்து விடுதலையாகி வரும் ரஹமத் , மற்றொரு காபூல் வியாபாரி நண்பனிடம் கொஞ்சம் உலர்பழங்களை வாங்கிக் கொண்டு தன் சினேகிதியை பார்க்க வருவான். அந்தக் கால வழக்கப்படி சுமார் பனிரெண்டு வயதுள்ள மினிக்கு திருமணம் நடக்கும் நாள் அது. அவனை பார்த்து பரிதாபப்பட்டாலும் விசேஷ நாளில் அவன் வருகை ஒரு சங்கடத்தி உண்டுபண்ணிவிடும் என்று நினைக்கும் எழுத்தாளர், அப்புறமாக வரச் சொல்லி அவனை கேட்டுக்கொள்கிறார். உடைந்த மனதுடன் திரும்பிச் செல்லும் ரஹமத், எதோ நினைவு வந்தவனாக திரும்பி வந்து தன் அன்புப் பரிசை மினியிடம் கொடுக்குமாறு அவரிடம் கேட்கிறான். அந்த தூய அன்பை கண்டு நெகிழும் மினியின் தந்தை, உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி மினியை வரச் செய்து அவளது இளம்பிராயத்து நண்பனை சந்திக்க வைக்கிறார். சிறைத்தண்டனையின் கடுமையும் முதுமையும் மாற்றிவிட்ட தன் பரிதாபமான தோற்றத்தோடு அந்த இளம்பெண் முன் நிற்கிறான் ரஹமத். பழைய நண்பர்கள் இருவரும் காலத்தின் வலியை உணர்ந்து ஒருவர் எதிரில் ஒருவர் நிற்கின்றனர். "இப்போ நிஜமாவே மாமனார் வீட்டுக்கு போகப் போறியா ?" என்று ரஹமத் கேட்க, இளம் மணப்பெண் வெட்கத்துடன் வேறுதிசை பார்த்து நிற்கிறாள். ரஹமத்தின் அன்புக்கு பரிசாக தன் மகளின் திருமணத்துக்காக செலவிட வைத்திருந்த பணத்தின் ஒரு பகுதியை அவனுக்கு அளிக்க முடிவு செய்கிறார் எழுத்தாளர். எங்கோ தூர தேசத்தில் இருக்கும் தன் மகளை அவன் விரைவில் சந்திக்க தன்னாலான உதவியை செய்த திருப்தி அவருக்கு. அந்த தூய ஆத்மாவின் ஆசியே தன் மகளுக்கு போதுமானது என்று பூரிக்கிறார். இந்தக் கதையை வாசிக்காத இலக்கிய வாசகர்கள் இருக்க முடியாது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கதை அது. காபூலிவாலாவின் கதை, பெங்காலியில் 1951இலும், ஹிந்தியில் 1961இலும் திரைப்படமாக வெளியானது. பிமல் ராய் தயாரிப்பில் ஹேமன் குப்தா இயக்கத்தில் வெளிவந்த ஹிந்தி படத்தை சில நாட்களுக்கு முன் பார்க்க நேர்ந்தது என் வாழ்நாள் பாக்கியங்களில் ஒன்று. கதையில் வருவதை போல் அல்லாது, படம் ஆப்கானிய கிராமத்தில் ரஹமத்தின் வாழ்க்கைப் பின்னணியில் இருந்து தொடங்குகிறது. வயதான தாய், ஐந்தாறு வயதான தன் செல்ல மகளுடன் வசிக்கும் ரஹமத், கடன் தொல்லை நெருக்குவதால், வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க இந்தியாவுக்கு செல்வது என்று முடிவெடுக்கிறான். அன்னையை இழந்ததால் தந்தையின் மீது அதீத பாசத்துடன் இருக்கும் அவன் மகள் தன்னையும் இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று அடம்.பிடிக்கிறாள். ஒரு நாள் அதிகாலையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தன் மகளின் கைகளில் மை தடவி அதை ஒரு தாளில் பதிய வைத்து அதை பத்திரமாக மடித்து வைத்துக்கொள்ளும் ரஹமத், சந்தடியின்றி வெளியேறுகிறான். மகளின் கைவிரல்களின் அச்சு படிந்த அந்த காகிதம் தான் அவளை நினைவுபடுத்த அவனிடம் இருக்கும் ஒரே பொருள். தன் மகளை பிரிந்து செல்லும் அக்காட்சியில் இசைக்கும் சலில் சவுத்திரியின் இசை மனதை கனக்க செய்யும். கொல்கத்தாவில் தன்னை போன்ற மற்ற ஆப்கன் குடிமக்கள் தங்கியிருக்கும் அறையில் ரஹமத் தங்குகிறான். கதையில் இந்த விஷயம் சொல்லப்படுவதில்லை. அவன் மினியை சந்திக்கும் காட்சியும் கதையில் இருந்து வேறுபட்டது. கதையில் அவனை தன் வீட்டுக்குள் இருந்து சாலையில் செல்லும் ரஹமத்தை 'காபூலிவாலா!' என்று அழைப்பாள்.அவன் தன் வீட்டை நோக்கி வருவதை பார்த்ததும் குடுகுடுவென்று வீட்டுக்குள் ஓடி மறைந்து கொள்வாள். படத்தில் காபூளிவாலாவை மினி தெருவில் மிக அருகில் பார்ப்பாள். அவன் பேசத் தொடங்கியதும் பயந்து வீட்டுக்குள் ஓடி விடுவாள். இது போன்ற பல மாற்றங்கள் படத்தில்.
ஆனால் கதையை படிக்கும்போது நம் மனதில் உருவகம் கொள்ளும் பாத்திரங்களை மிளிரச் செய்யும் நடிகர்கள் தான் மிகப்பெரிய பலம். நம் மனதில் குடுகுவென்று ஓடி அதே வேகத்தில் வார்த்தைகளையும் கொட்டி மழலையில் கொஞ்சும் குழந்தையாக பேபி ஃபரிதா. நெடுநெடுவென்ற உயரமும் அதை விட உயர்ந்த வெள்ளை மனதும் கொண்ட காபூலிவாலாக நடிகர் பால்ராஜ் சஹானியும். அவர்கள் இருவரும் உரையாடும் காட்சிகள் யார் மனதையும் இளக வைத்துவிடும். அத்தனை தேர்ந்த நடிப்பு அது.
அதே போல் எழுத்தாளராக வரும் நடிகரும் நிறைவாக செய்திருப்பார். சிறுகதையை எப்படி திரைக்கதையாக மாற்ற வேண்டும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். அதற்கு இயக்குனர் வெகு நேர்த்தியான முறையை கையாண்டிருக்கிறார். பாத்திரங்களின் தனிப்பட்ட குணாதியம்சங்கள், அவர்கள் வாழும் சூழல் போன்ற விஷயங்களை கதையை ஒட்டியே விஸ்தரித்தால் போதுமானது. அதை மிக அழகாக செய்திருக்கிறார்கள் படத்தின் திரைக்கதை எழுத்தாளர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும் பாத்திரங்களுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

குறிப்பாக கதையில் ஒரே வரியில் வரும் வீட்டு வேலைக்காரன் தான் படத்தின் நகைச்சுவை நடிகன். காபூலிவாலாவை பார்த்ததும் பயந்து நடுங்கி ஏற்கனவே பீதியில் இருக்கும் மினியின் அம்மாவை மேலும் கலவரப் படுத்திவிடுவான்.
எங்கே குழந்தையை காபூல்காரன் கடத்திவிடுவானோ என்று அஞ்சும் தாயின் சந்தேகம் மேலும் வலுவடையும் வகையில் ஒரு காட்சி படத்தில் உண்டு. கதையில் இல்லாதது. ரஹமத் வராததால் அவனைத் தேடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவாள் மினி. அவளது வழக்கமான மறைவிடமான தந்தையின் மேஜைக்கு அடியிலும் அவளை காணாத பெற்றோர் பதறிப் போய் தேடுவார்கள். தகவல் அறிந்த ரஹமத்தும் சாலையெங்கும் "மினி பாச்சே..மினி பாச்சே.." என்று கத்திக் கொண்டே தேடியலைவான். எங்குமே அவள் கிடைக்கமாட்டாள். களைத்துப் போய், ஒரு மண்டபத்தில் அமர்ந்திருக்கும் அவன் குழந்தை மழை நீரில் பாதி நனைந்து மண்டப படிக்கட்டின் அடியில் உறங்குவதை கண்டு பதறி அவளை தூக்குவான். அதற்குள் அங்கு கூடும் அறிவற்ற கூட்டம் அவன் குழந்தையை கடத்த முயன்றான் என கூறி அவனை கடுமையாக தாக்கும். அதைப் பார்த்து குழந்தை அழுவாள். அங்கு வரும் அவள் தந்தை உண்மையை உணர்ந்து கூட்டத்தை விலக்கி ரஹமத்திடம் மன்னிப்பு கேட்பார். பெருந்தன்மையுடன் அங்கிருந்து சென்று விடுவான் ரஹமத். அற்புதமான காட்சி அது.
படத்துக்காக இயக்குனர் செய்த மாற்றம், ரஹமத் பாத்திரத்தை மேலும் வெகுளியாக காட்டியது. அது பொருத்தமாகவும் இருந்தது. ஏமாற்றிய வாடிக்கையாளனை கத்தியால் குத்தியதால் கைது செய்யப்பட்ட ரஹமத்தை காப்பாற்ற ஒரு வக்கீலை ஏற்பாடு செய்வார்கள் அவனுடன் தங்கி இருந்த மற்ற ஆப்கானியர்கள். நடந்த சம்பவத்தை அந்த வக்கீல் கோர்ட்டில் மாற்றி சொல்லும்போது பொய் சொல்ல விரும்பாத ரஹமத் தான் அம்மனிதனை கத்தியால் குத்தியதை ஒத்துக் கொள்வான். அவனது நேர்மையை கண்டு வியக்கும் நீதிபதி மரண தண்டனைக்கு பதிலாக பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கிறார். கதையில் இக்காட்சி இல்லை. அதே போல் கதையில் மினியின் தந்தையுடன் ரஷ்யர்கள் ஆங்கிலேயர்கள் மற்றும் அரசியல் பற்றியெல்லாம் பேசுகிறான் ரஹமத். கதையில் தன் முன்னே வந்து நிற்கும் இளம்பெண் தான் பத்து வருடங்களுக்கு முன் தான் பார்த்து நட்பு கொண்ட மினி என்பதை அறியாதவனாக இருக்கிறான். அவள் இன்னும் சிறு குழந்தையாகவே இருப்பாள் என்று நினைக்கும் அளவுக்கு அப்பாவியாக படத்தில் சித்தரிக்கப் படுகிறான்.
படத்தின் நாயகன் வேடத்தில் நடித்த பால்ராஜ் சஹானியின் நடிப்பை பற்றி எழுத வார்த்தைகளே இல்லை. அத்தனை யதார்த்தம் அத்தனை உருக்கம். படத்துக்கு தன் இசையால் ஜீவன் அளித்திருக்கிறார் சலில் சவுத்ரி. புகழ் பெற்ற பாடலான "கங்கா ஆயே கஹான் ஸே " இடம்பெற்ற படம் இது. கதையை படித்தவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். படத்தை பார்க்காதவர்கள் முதலில் கதையை படித்து விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். படத்தின் பல காட்சிகளில் என் மனைவி முன்னாலேயே தேம்பி அழுததை வெட்கமின்றி ஒத்துக் கொள்கிறேன். நீங்களும் அவ்வாறே செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

Wednesday, July 17, 2013

The lone ranger - இசை வழியும் சாகசம்

அனல் காற்றும் கண்ணைக்கூசும் சூரிய ஒளியும் அலைந்து திரியும் அரவமற்ற வறண்ட மலைப்பகுதிகள். மஞ்சளும் பழுப்பும் அப்பிக்கிடக்கும் பிரதேசத்தில் புழுதி பறக்க விரையும் குதிரைகளின் மேல் அழுக்கு முகம், பரட்டை தலை கசங்கிய உடைகளுடன் பாய்ந்து செல்லும் மனிதர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் மரத்தாலான கட்டிடங்கள் கொண்ட அகன்ற தெருக்களில் நேருக்கு நேர் நின்று துப்பாகியால் சுட்டுக்கொண்டு பழிதீர்த்துக்கொள்ளும் வீரர்கள், கொலைகாரர்கள், வயதான கடைக்காரர்கள்,  ரயில் பாதை அமைக்கும் பணிக்காக அமேரிக்கா சென்ற சீனர்கள், அழகிய வேலைப்பாடமைந்த கோச்சுகள் கொண்ட ரயில்கள், பழுப்பு நிலத்தில் விழும் தொப்பியின் நிழல், விலை மாதர்களின் பிதுங்கும் மார்பகங்கள் என்று நீளும் western உலக பின்னணியில் வெளியான ஹாலிவுட் மற்றும் ஸ்பாகெட்டி வெஸ்டெர்ன் படங்கள் (இவ்வகை படங்கள்  குறித்து தேசிய விருது வென்ற 'திரைச்சீலை' புத்தகத்தில்  ஜீவானந்தன் விரிவாகவே எழுதியுள்ளார்)  எத்தனை முறை எடுக்கப்பட்டாலும் பார்க்க சலிக்காதவை. அந்த வகையில் இந்த ஆண்டு இரண்டு முக்கியமான வெஸ்டேர்ன் திரைப்படங்கள் வெளிவந்தன. குவெண்டின் டாரண்டினோ இயக்கத்தில் ஜாமி   பாக்ஸ், கிறிஸ்டோபர் வால்ட்ஸ்  நடித்த  Django Unchained மற்றும் தற்போது திரையரங்கங்களில் ஓடிக் கொண்டிருக்கும் The Lone Ranger. 
படம் ரயிலில் துவங்கி ரயிலில் முடிகிறது. இடையில் கரடுமுரடான, மலை நிலங்கள், வெள்ளிக்கட்டிகள் கொண்ட நதிகள் என்று எங்கெங்கோ நம்மை  கூட்டி செல்கிறது. ஆனால் இந்தப்பயணத்தில் லாஜிக் மூட்டைகளை இறக்கி வைத்து விட்டால் தான் நாம் மன பாரமின்றி படத்தை ரசிக்க முடியும். 
1933ல் ஒரு பொருட்காட்சிக்கு செல்லும் சிறுவன் பழைய அமெரிக்கா பற்றிய கண்காட்சி கூடத்துக்கு செல்கிறான். அங்கு பாடம் செய்யப்பட்ட  பைசன் உடல் போன்ற அதிசயங்களை கண்கள் விரிய பார்க்கும் சிறுவன்,  வருடங்கள் உடலில் வரைந்த கோடுகளுடன் தொண்டு கிழமான செவ்விந்திய சிலையை உற்று பார்க்கிறான். பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த சிலையின் விழிகள் அசைகின்றன. சிறுவன் திடுக்கிடுகிறான். பின்னர் அம்மனிதனுடன் உரையாடத் துவங்குகிறான். தான் கேள்விப்பட்ட Lone Ranger பற்றி அறியும் ஆவல் கொண்ட அச்சிறுவனிடம், கிட்டத்தட்ட தொண்ணூறு வயதை தாண்டிய அந்த செவ்விந்தியன் உண்மையான அந்த ஒற்றை ரேஞ்சருடனனான  தன் சாகசக் கதையை சொல்கிறான். கதை காட்சியாய் நம் கண் முன் விரிகிறது. ஜானி டெப்  தான் அந்த செவ்விந்திய வயோதிகன். வினோதமான உடல்மொழிகளுடன், உடலில் தொங்கும் ஆபரணங்களும், முகத்தில் நிரந்தரமான வெண்ணிறப் பூச்சும், தலைக்கு மேல் இறக்கை விரிந்த நிலையில் இறந்த காகத்தின் உடலுமாக  செவ்விந்தியராக ஜானி  டெப்(ப்!) வாழ்ந்திருக்கிறார் , சற்று அம்மாஞ்சியான நேர்மை குணம் படைத்த இளம் வழக்கறிஞர் பாத்திரத்தில் ஆர்மீ ஹாமர். ரயிலில் கொண்டு செல்லப்படும் ஒரு பயங்கர குற்றவாளியை (William Fichtner) காப்பாற்ற குதிரையில் வரும் கொள்ளை கும்பல், வில்லனை வெற்றிகரமாக காப்பாற்றி செல்கிறது. அதை முறியடிக்க மற்றொரு கைதியான ஜானி டெப் முயன்றாலும் நேர்மை வழக்கறிஞர் சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையால் அது பிசுபிசுப்பதுடன், ரயில் பெட்டிகளில் இருந்து பிரிக்கப்படும் எஞ்சின் விபத்துக்குள்ளாகிறது. நம்பவே முடியாத வகையில் அவ்விபத்தில் இருந்து ஜானி டெப்பும் ஆர்மி ஹாமரும் தப்புகின்றனர்.
ரயில் கட்டுப்பாட்டை இழந்து நிற்க  வேண்டிய ஸ்டேஷனில் நிற்காமல் ஓடுவதால் , தன் சகோதரன் ஆர்மீ ஹாமருக்காக காத்திருக்கும் அவரது அண்ணன் தலைமையிலான Ranger குழுவும், தறிகெட்டு ஓடும் ரயிலை தொடர்ந்து வந்து  அவர்களை மீட்கிறது. ஜானி டேப் சிறையில் அடைக்கப்படுகிறார். 
காவல் அலுவலகத்தில் தன்னை பார்க்க வரும் தன் அண்ணனின் மனைவியிடம் தனக்கு இருக்கும் அதீத அன்பை (காதல்!) ஆர்மீ காட்டுகிறார்.
ரேஞ்சர் அண்ணன் ஆர்மீயையும் தன் குழுவில் சேர்த்துக் கொள்கிறார். தப்பிச்சென்ற வில்லன் கும்பலை தேடி செல்லும் அக்குழுவில் உள்ள மூத்த ரேஞ்சர் ஒருவர் துரோகம் செய்ய, குன்றுகள் சூழ்ந்த இடத்தில வைத்து அக்குழுவை வில்லன் கும்பல் தீர்த்துக்கட்டுகிறது. ஆர்மீ யும் சுடப்படுகிறார். நீண்டநாள் பகையை பழிதீர்க்க வரும் வில்லன், குற்றுயிராய் கிடக்கும் ஆர்மீயின்  அண்ணனின் இதயத்தை வெட்டி எடுத்து ருசிக்கிறார். அரைமயக்க நிலையில் அதை பார்க்கும் ஆர்மீ அதிர்ச்சியடைகிறார். இறந்த ரேஞ்சர் குழுவை வில்ல்லன் கும்பல் விட்டு செல்ல, சிறையில் இறந்து தப்பிய ஜானி டெப் அங்கு வந்து சேர்கிறார். இறந்தவர்களை புதைக்க ஏற்பாடு செய்கிறார். இறந்தவர்கள் உடையில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வதுடன், பண்ட மாற்றாக தன்னிடம் உள்ள இறகு போன்ற பொருட்களை உடலில் வைக்கிறார்(படம் முழுவதும் இந்த பண்ட மாற்று காட்சிகளில் திரையரங்கில் உள்ளவர்களை சிரிப்பால் அதிரவைக்கிறார் டெப்!) கடைசியில் ஆர்மீ கண் விழித்து  எழ முயற்சிக்க, என்னவோ ஏதோ என்று பயந்து 'பிணத்தை' அடித்து மீண்டும் படுக்க வைக்கிறார் டெப். அங்கு வந்து சேரும் (செவ்விந்தியரான டெப் பின் கணிப்பு படி ) அற்புத சக்தி கொண்ட வெள்ளை குதிரை, இறந்து போன ஆர்மீ மீண்டும் உயிர்பிழைத்ததாக டெப் புக்கு உணர்த்துகிறது. பிறகென்ன, அவரை காப்பாற்றும் டெப், வில்லன் கும்பலை அழிக்க நீதிமான் ஆர்மீ க்கு உதவுகிறார். இடையில் எக்கச்சக்க சண்டை காட்சிகள், சாகச நிகழ்ச்சிகள். 
படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்னைப் பொருத்தவரை, ஜானி டெப் பின் அட்டகாசமான நடிப்புக்காகவே இப்படம் குறைந்தபட்சம் ஹிட் அடிக்க வேண்டும். மனிதர் ரெண்டு நிமிடம் அசையாமல் நின்று கொண்டு உதட்டை பிதுக்கி கண்ணை சுருக்கினாலே அரங்கில் விசில் பறக்கிறது. பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் படத்தின் இயக்குனர் தான் இப்படத்துக்கும் இயக்குனர் என்பதால் இருவரின் கெமிஸ்ட்ரியும் நன்றாக வேலை செய்திருக்கிறது. பல காட்சிகளில் ஜானி டெப் எளிதாக ஸ்கோர் செய்கிறார். அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம் இது. தனது முன்னோர்கள் செவ்விந்திய இனத்தை சார்ந்தவர்கள் என்பதால் இப்பாத்திரத்தில் அர்ப்பணிப்புடன் நடித்ருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அவர் பேசும் செவ்விந்திய பாஷை பிரமாதம் இல்லை என்றாலும் திரைக்கு போதுமானது என்று செவ்விந்திய பேராசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார். 
படம் பல இடங்களில் முன்னோடி  வெஸ்டெர்ன் படங்களுக்கு tribute செய்திருக்கிறது. ஆற்று நீரில் நின்றுகொண்டு, டெப்பும் ஆர்மீயும்  பாலத்துக்கு குண்டு வைக்கும் காட்சி , The Good, the bad and the ugly யில் வரும் காட்சியை நினைவுப்படுத்துகிறது. ரயில் பாதை அமைக்கும் காட்சிகள், Once upon a time in the west உள்ளிட்ட பல படங்களில் வரும். 1850 முதல் 1880 வரையிலான காலப் பின்னணி கொண்ட படங்கள் தான் வெஸ்டெர்ன் படங்களில் பெரும்பாலானவை. இப்படமும் அப்படியே. 
படத்தின் பலவீனம் என்னவென்றால் அளவுக்கு மீறிய சாகச காட்சிகள் என்று தோன்றுகிறது. க்ளைமாக்சில் எந்த ரயிலில் யார் போகிறார் என்றே தெரியவில்லை. நம்ப முடியாத அளவிலான சாகசம். கொஞ்சம் நம்பும்படியாய் எடுத்திருந்தால் படம் நின்றிருக்கும். இப்படம் தோல்வி என்றாலும் 'அழகான தோல்வி' என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இசை. Hans Zimmer ஒவ்வொரு காட்சியையும் இசையால் மொழிபெயர்த்து கலக்கியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு Grand Symphony. நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள திரையரங்கில் பார்த்தால் கண்ணுக்கு மட்டும் அல்ல காதுக்கும் விருந்து தான்.  கதையை சிறுவனிடம் சொல்லி முடிக்கும் வயதான டெப், அகன்ற திரையில் End title credits மெல்ல ஊறி செல்ல, தடுமாறியபடி நடந்து சென்று மறையும் வரையில் நான் நின்று இசையை ரசித்துக்கொண்டு நின்றேன். The lone music lover!!

Saturday, January 5, 2013

கும்கி: அன்பைக் கொல்லும் காதல்


பிரமாண்டங்களின் மீது மனிதனுக்கு பிரமிப்பும் அச்சமும் எப்போதும் உண்டு. அதை தொலைவில் இருந்து ரசிக்கவும் அதன் ஆபத்திடம் இருந்து விலகி ஓடவும் மனிதன் என்றோ கற்றுக்கொண்டு விட்டான். என்றாலும் அந்த பிரமாண்டங்களை தன் கட்டுக்குள் கொண்டு வரவும் சிலருக்கு முடிந்திருக்கிறது. நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப்பெரிய மிருகமான யானையை மையமாக வைத்து தேவர் பிலிம்ஸ் காலத்தில் இருந்தே திரைப்படங்கள் வந்திருக்கின்றன. பாடலுக்கு ட்ரம்ஸ் வாசிக்கவும் காதலுக்கு தூது செல்லவும் திரைப்படங்களில் பயன்பட்ட அந்த பெரும் விலங்கு  தொடர்பான உருப்படியான படங்கள் தமிழில் மிகக் குறைவு. ஆகட்டும்டா தம்பி ராஜா என்று ஆரஞ்ச் கலர் கோட்டணிந்த எம்.ஜி.ஆர் குட்டிக்கரணமடிக்கும் யானைகளை வழிநடத்திச் செல்லும் படங்களை பார்த்து வந்த தமிழ் ரசிகர்களின் பார்வைக்கு காட்டு யானைகளை பழக்கவும் அவற்றிடம் இருந்து மனிதர்களை காக்கவும் பழக்கப்பட்ட கும்கி யானையை வைத்து குறிப்பிடும்படியான படத்தை தந்திருக்கிறார் பிரபு சாலமன். தலைப்பு தான் கும்கியே தவிர இந்த யானை கும்கிக்கு மாற்றாக கூட்டி செல்லப்பட்ட குழந்தை யானை என்பது தான் கதையின் சுவாரஸ்யம்.  யானைக்கும் சிவாஜி குடும்பத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது போலும். சிவாஜியின் அண்ணனான வி.சி.கணேசனின் மகன் தரன் மன்றாயர் இயக்கிய எலி மை ஃப்ரெண்ட் (1992) என்ற ஆங்கிலப்படம் யானையை மையமாகக் கொண்டது  என்பது கூடுதல் சுவாரஸ்யம். படம் பெரிதாகப் பேசப்படவில்லை.கும்கி மூலம் அறிமுகமாயிருக்கும் சிவாஜியின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுக்கு திரையுலகில் உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது. பிரபு சாலமன் கலந்து கொள்ளும் படம் தொடர்பான நிகழ்சிகளில் நாயகனின் தந்தை பிரபுவும் கலந்துகொள்கிறார். தொலைபேசியில் வாழ்த்து சொல்கிறார். குரலில் ஏக மகிழ்ச்சி அவருக்கு.

படத்தின் தொடக்கத்திலேயே யானைக்கும் நாயகனுக்கும் இருக்கும் பாசப்பிணைப்பை காட்டும் வகையிலான காட்சி ஒன்றை வைக்கிறார் இயக்குனர். பாகனான நாயகனின் தாய்மாமன் பழக்கப்படுத்திய படி கடைகளில் இருந்து சிப்ஸ் பாக்கேட்டுகளை யானை திருடுவதை கண்டுபிடிக்கும் நாயகன் யானையிடம் கடும்கோபம் கொண்டு இனி ஒரு வாரத்துக்கு தாய்மாமனே யானையைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று கோபத்துடன் அதை நடுரோட்டில் விட்டுவிட்டு சென்று விடுகிறான். பாசம் உள்ள அந்த பிராணி அவனை பின்தொடர்ந்து  சாலையில் நடந்து வருகிறது. பாகன் இல்லாமல் தனியே வரும் யானையைக் கண்டு பொதுமக்கள் பதறி ஓடுகிறார்கள் (யானை தாக்குதல்களுக்கு புகழ்பெற்ற கேரளாவில் இந்த காட்சி நடைபெறுகிறது).கடைசியில் கோபத்தோடு பேருந்தில் அமர்ந்திருக்கும் நாயகனிடம் யானை மன்னிப்பு கேட்கும் விதமாக துதிக்கையால் அவனை வருடுகிறது. ஒரு வகையில் இந்தக் காட்சி விலங்குகள் மனிதர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை காட்டுவது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் இத்தனை 'பொறுப்புடன்' ஒரு பாகன் நடந்துகொள்வானா என்ற தவிர்க்க முடியாத கேள்வி எழுகிறது. இந்த காட்சியிலேயே இந்த உறுத்தல் ஆரம்பித்து விடுகிறது. பின்னர் உரிய ஆவணங்கள் இல்லாமல் அதிகாரிகளுடன் யானை மாட்டிக் கொண்ட போது உதவிய யானை ஏஜெண்ட், கொம்பன் யானையால் பாதிப்புக்கு உள்ளாகும் கிராமத்துக்கு கும்கி யானை ஒன்றை ஏற்பாடு செய்து  அது குறித்த நேரத்துக்கு வரமுடியாமல் போக அவருக்கு உதவும் விதமாக நாயகன் தன்  யானையை அந்த மலைகிராமத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளிக்கிறான்.தற்காலிகமாகத் தான். இரண்டு நாளில் உண்மையான கும்கி யானை வந்ததும் நாங்கள் (யானையோட சேர்த்து நாங்க நாலு பேருங்க) அங்கிருந்து வெளியேறிவிடுவோம் என்று ஏஜென்டிடம் சொல்கிறான். அங்கு சென்றதும் கதை மாற காதல் காரணமாக அமைவது தான் படத்தின் முடிச்சு.

யானையும் அது சார்ந்த மலைவனப் பகுதியும்  பின்னணி என்பதால் படத்தின் நம்பகத்தன்மை கூடிவிடுகிறது. கடுமையாக உழைத்திருக்கும் தனது படக்குழுவினரின் துணையுடன் அதை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார். வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் பெண்களை  கொம்பன் யானை  தாக்கும் காட்சி மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. படம் தொடக்கத்திலேயே யானை சண்டை காட்சிகள் விஷூவல் எஃபெக்ட்ஸ் துணையுடன் உருவாக்கப்பட்டவை என்று டைட்டலில் சொல்லிவிடுகிறார்கள். தொழில்நுட்பத் தவறுகளை தவிர்க்கும் விதமாக காட்சிகளை இரவு நேரத்தில் நடைபெறுவதாகக் காட்டி யிருப்பது  பிரபு சாலமனுக்கு இருக்கும் புத்திசாலித்தனத்தைக்காட்டுகிறது. மலைகிராமத்தை சேர்ந்த ஆதிகுடிகள் கொம்பனால் தாக்கப்பட்டு இறந்துபோன பெண்களை வேதனையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யும்போது  அங்கு வரும் வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் யானை அபாயம் இருப்பதால் இங்கிருந்து காலி செய்யவேண்டியது தானே என்று கேட்கும்போது ஆதிகுடிகளின் தலைவர் கேட்கும் கேள்வி நிதர்சனமானது." நீங்கள் வனப்பகுதியில் கட்டிடங்களை கட்டி வைத்திருப்பதால் தான் யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதுவரை வன எல்லைக்கு வெளியில் வராத யானைகள் ஊருக்குள் வருகின்றன  என்றால் என்ன அர்த்தம்?" என்று அவர் கேட்கும் கேள்வி திரைக்கும் வெளியே ஒலிக்க வேண்டிய முக்கியமானக் கேள்வி. அதிகாரவர்க்கத்தின் செவிட்டு காதுகளுக்கு விழும்படி அறைந்து கேட்கப்படவேண்டிய கேள்வி அது. ச. பாலமுருகனின் சோளகர் தொட்டி நினைவு தான் வந்தது. நாவலில் தற்காப்புக்காக கரடி ஒன்றை கொன்று விட்டு பின்னர் வனக்காவலர்கள் வலையில் சிக்காமல் இருக்க என்று கடன் வாங்கி அதற்காக வாழ்ந்த இடத்தையே இழக்க நேரும் பரிதாபத்துக்கு உரிய வனக்குடியினர் போல் அல்லாது இந்த ஊர் ஆதிகுடிகள் அரசு அதிகாரிகளை கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டியிருப்பது உண்மையோ இல்லையோ ஒரு வகையில் ஆசுவாசமாக இருக்கிறது. வனப்பகுதிகளில் வெறுமே சுற்றிக்கொண்டு இருக்கும் வனத்துறையினர் கொம்பன் யானையை வைத்து ஆதிகுடிகளை மிரட்டுவது அதிகாரவர்க்கம் ஒன்றுமறியாத பழங்குடியினரை ஏமாற்ற முயல்வதை தெளிவாகக் காட்டுகிறது. என்றாலும் அதிகாரவர்க்கத்துக்கும் அப்பாவிகளுக்கும் இடையிலான போராட்டம் இல்லை இந்தக் கதை. முன்பே சொன்னது போல் காதல் தான் மையம் படத்தில்.

கொம்பன் யானையிடம் இருந்து கிராமத்தைக் காக்க வந்த கும்கி யானைக் குழுவினருக்கு அதிகபட்ச மரியாதை காட்டுகிறார்கள்  ஆதிகுடி மக்கள். அவர்கள் காலில் சந்தனம் குங்குமம் வைத்து வணங்குகிறார்கள். தாங்கள் போலி கும்கிக் குழு என்பதால் உள்ளுக்குள் சற்று கலங்கியபடியே இருக்கும் பாகன்களின் தலைவனான நாயகன் தமிழ் சினிமா வழக்கப்படி ஒரு பெண்ணைப் பார்த்த முதல் நொடியே காதலில் விழுவதாகக் காட்டியிருப்பது தான் படத்தின் மிகப்பெரிய உறுத்தல். அந்தப் பெண்ணை அடைவதற்காக தான் வளர்த்த யானை, தன் தாய்மாமன், உதவியாளன் ஆகியோரின் உயிரை பணயம் வைக்க அந்த நொடியே முடிவெடுத்து விடுகிறான். ஆனால் அந்த உறுத்தல் மீது தான் திரைக்கதையே கட்டமைக்கப் படுவதால் நாம் மேற்கொண்டு ஒன்றும் சொல்வதற்கில்லை.

கொம்பன் யானையின் தாக்குதலை நேரில் கண்டதால் யானையைக் கண்டாலே பயந்து அலறும் நாயகி 'கும்கி' யானையைக் கண்டதும் பயந்து குளத்துக்குள் விழ அவளைக் காப்பாற்ற நாயகனும் நீரில் விழ, தமிழ் சினிமாத்தனம் தன் தலையை விரித்துக் காட்டுகிறது. "ய்யேஏஏ  ...." என்று அடிவயிற்றில் இருந்து கத்துவதை பின்னணி இசையாக மாற்றிய புண்ணியவான் யாரென்று தெரியவில்லை. காதல் வந்தால் எப்போதும் இந்த "ய்யேஏஏ  ...." தான். உடனே அரங்கில் காதல் உணர்வு திரையரங்கில் பரவத் தொடங்குகிறது. துயரம் தான், வேறென்ன சொல்ல! உடுமலைப்பேட்டையில் ஒரு சாதாரணத் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தேன். காலைகாட்சிக்கு திரையரங்கம் நிரம்பி வழிந்தது. தொண்ணூறு சதவீதம் கல்லூரி மாணவர்கள். ஒரு வரிசையில் ஐந்து ஜோடிகள் வேறு. எல்லோரும் மடியில் தங்கள் புத்தகப் பைகளை வைத்திருந்தார்கள். காதல் உணர்வுக்குக் கேட்கவும் வேண்டுமா? நாயகன் உண்மையான கும்கி யானையே வந்தாலும் இங்கிருந்து போகப்போவதில்லை என்று சொல்லும்போது உடன் இருப்பவர்கள் பதறுகிறார்கள். தாய்மாமனான தம்பி ராமையா கொம்பன் யானை வந்தால் இந்த கோவில் யானையை வைத்து எப்படி சமாளிப்பது என்று கேட்கும்போது காதல் பித்தம் ஏறிய நாயகன் சொல்கிறான் "அந்தப் பொண்ண பாத்தவுடன் நூறு யான வந்தாலும் அதை கையாலப் புடிச்சி இந்தப்பக்கம் ரெண்டு அந்தப் பக்கம் ரெண்டுன்னு வீசிடலாம் போல இருக்கு"(எண்ணிக்கை கூட குறைய இருக்கலாம்!) . உடனே அரங்கத்துக்குள் குதூகலக் கூச்சல். கொம்பன் யானை வந்தால் பெரிய ஆபத்தாகி விடும் என்று சொல்லும் யாரிடமும் அந்தப் பெண்ணை தான் தீவிரமாகக் காதலிப்பதாகவும் அவளுக்காக இங்கேயே இருக்கப்போவதாகவும் சொல்கிறான் நாயகன். குறைந்தபட்சம் கும்கியா குமரியா என்று மனதுக்குள் ஒரு சிறு போராட்டம் கூட நடப்பதில்லை அவனுள். பாலாவின் சேது திரைப்படம் வந்த பின்னர் நாயகியை மிரட்டியாவது தங்கள் காதலை வெளிப்படுத்தும் நாயகர்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்து விட்டார்கள். அதன் பாதிப்பு சமீப காலமாக நடைபெறும் காதல் கொலைகளில் தெரிகிறது. தன்னை விரும்பாத காதலியைக் கொன்றே விடுவது அல்லது ஆசிட் வீசி அவள் அழகை சிதைத்து விடுவது என்று தன் 'உள்ளுலகம்' சார்ந்து வெறிப்பிடித்து அலையும் இளைஞர்களை உருவாக்கியதில் இதுபோன்ற படங்களுக்கு பங்கில்லாமல் இல்லை. முன்பெல்லாம் நாயகர்கள் காதலியிடம் காதலை சொல்லி அவள் மறுத்து விட்டால் கலங்குவார்கள். காத்திருப்பார்கள். இப்போது டாஸ்மாக்கில் குடி. நடனக் குழுவினரிடம் சேர்ந்து வெறி பிடித்த ஆட்டம். ஆறுதல் சொல்பவனை அடித்து விரட்டுவது என்று 'கொல வெறியுடன்' அலைகிறார்கள். திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இது தான் நடப்பு. இங்கே நாயகன் தன்னை நம்பி வாழ்பவர்களின் உயிருடன் விளையாடுகிறான்.

படத்தில் யானைக்கும் நாயகனுக்குமான உறவு அருமையானதாக இருந்தாலும் சிறுவயது முதல் இருவரும் சகோதரர்கள்  போல் பழகி வந்தாலும் ஒரு பெண்ணுக்காக அன்பான தன் யானையின் உயிரை பணயம் வைப்பது ஏன் என்ற கேள்விக்கு எந்த விடையும் இல்லை. அதேபோல் வறுமை காரணமாக சற்று இழிவான குணம் கொண்ட தன் தாய்மாமன் தலையில் யானை மீதிருந்து செருப்பை வேண்டுமென்றே தவற விடுவது
என்ன மனநிலை என்று புரியவில்லை. தொடர்ந்து நாயகர்கள் இதுபோல் சித்தரிக்கப்படுவது ஏன் என்பது புரியாத புதிர். இதெல்லாம் நகைச்சுவையா என்ன? படத்தில் நாயகனை விடவும் அதிகம் பேசுவதும் இயக்குனரை விட அதிகம் சிந்திப்பதும் தாய்மாமனாக வரும் தம்பி ராமையா தான். கிட்டத்தட்ட அறுபது சதவீத காட்சிகளில் அவரது 'மைண்ட் வாய்ஸ்' ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதே போல ஆதிகுடிகளைக் காணும்போது என்னவோ நரமாமிசப் பட்சிணிகளைக் கண்டது போல் அவர் பதறுவது எரிச்சல். இத்தனைக்கும் அந்த மக்கள் போலியான இந்தக் குழுவினர் மீது மிகுந்த மரியாதை காட்டுகிறார்கள். நம் சினிமாவில் திரைக்கதை என்பது செழித்து வளராமல் போனதற்கு இது போன்ற அர்த்தமற்ற காட்சிகள் தான் காரணம். நாயகனின் காதலை கேலிசெய்யும் வசனங்கள், நாயகியை நாயகன் பார்த்துக்கொண்டே நடப்பது, பிறகு ஒரு கட்டத்தில் நாயகியும் இவனைப் பார்த்துக்கொண்டே நடப்பது, கடைசியில் இருவரும் சேர்ந்தாற்போல் எங்காவது நடப்பது என்றே காட்சிகளை உருவாக்கி அறுபது சதவீத படத்தை நிறைத்து விடுகிறார்கள். கதைக்கு கால் பங்கு கூட இடம் இருப்பதில்லை. இந்தப் படத்தில் சொல்லப்படவேண்டிய பல விஷயங்கள் தவிர்க்கப்பட்டே விட்டன என்று சொல்லலாம். வெற்றியை குறிக்கோளாக கொண்டவர்கள் மத்தியில் இத்தனை தூரம் கதை சொன்ன கருணைக்காக நாம் பிரபு சாலமனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தார்மீக ரீதியாக நிறைய கேள்விகள் கேட்கலாம் என்றாலும் தர்க்க ரீதியாகப் படத்தில் பெரிய குறைகள் இல்லை என்பது பாராட்டுக்குரிய விஷயம். நாயகனும் நாயகியும் நெருங்கிப் பழகுவதை பெண்ணின் தந்தையான ஊர்த்தலைவரிடம்  வனக் காவலர்கள் சொல்லிவிட அதை அவர் அணுகும் விதம் அருமை. "வனக் காவலர்கள் தவறுதலாக சொல்லிவிட்டார்கள். நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம்" என்று நாயகனிடம் அவர் சொல்வது  எதிர்பாராத அருமையான காட்சி. மேலும் முன்புபோலவே நாயகனிடம் பேச வேண்டும் என்று தன் மகளிடம் அவர் சொல்வதும் உயர்வான விஷயம். எதிர்பாராத இந்த அன்புத் தாக்குதலால் நாயகன் தவித்து விடுகிறான். "என்னை தாக்க வந்திருந்தால் கூட எதிர்த்திருப்பேன். என் மீதான நம்பிக்கையை என் முன்னாலேயே வைத்து விட்டார் உன் தந்தை" என்று நாயகன் சொல்லும்போது பிரம்பித்து விடுகிறோம். இந்தப் படத்தின் மிக முக்கியக் காட்சி இது தான். மனித உணர்வுகளைத் துல்லியமாக கணிக்க தெரிந்த ஒருவரால் தான் இப்படியான காட்சியை அமைக்க முடியும். இருநூறு ஆண்டுகளாக வெளியாட்கள் யாரிடமும் திருமண உறவு கொண்டிராத அதற்கு எந்த விதத்திலும் சம்மதிக்காத அந்த ஆதி குடி தலைவன் புத்திசாலித்தனமாக அவர்கள் காதலை தவிர்க்கப் பார்க்கிறானா இல்லை இயல்பாகவே அத்தனை தூரம் நல்லவனா என்பது சிந்திக்க வைக்கும் கேள்வி.

அதே போல் கடைசி காட்சியில் கொம்பன் யானை தாக்க வரும்போது நாயகனின் சாதுவான யானைக்கு சங்கிலியை அறுக்கும் வலிமை எப்படி வருகிறது என்ற கேள்விக்கும் முன்பே பதில் வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த யானைக்கு சில நாட்களாக மத நீர் வடியத் தொடங்கி விட்டது என்று காட்சி வைத்திருப்பது தர்க்க ரீதியாக சரியான காட்சி. கொம்பன் யானை இவர்கள் தங்கியிருக்கும் அந்த மரப் பரணை தாக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்து வரும் யானை சண்டைக் காட்சியும் தமிழ் திரைப்படம் இதுவரை கண்டிராதது. புத்திசாலித்தனமாக அதையும் இரவு நேரக் காட்சியாக வைத்து வெற்றிபெற்றிருக்கிறார் பிரபு சாலமன். படத்தின் நாயகனான விக்ரம் பிரபு பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். நெடுநெடுவென்ற உயரமும் அம்பு போன்ற உடலும் பாகனுக்கு நல்ல பொருத்தமாக இருக்கிறது. என்றாலும் அளவுக்கு மீறி விடைத்த நாசி மற்ற படங்களில் உறுத்தலாகத் தெரிய வாய்ப்பு உண்டு. ஸ்ரீதேவி வழி சென்றால் ஜெயம் நிச்சயம். நாயகி வழக்கம் போல் மிரள்கிறார், காதல் புரிகிறார், கண்ணீர் வடிக்கிறார். இயல்பான அழகுடன் தமிழுக்கு கிடைத்திருக்கும்  இன்னொரு நாயகி. ஆதிகுடிகளின் தலைவர் மிக இயல்பாக நடித்திருக்கிறார். தொழில்நுட்பம் தான் படத்தின் பலம். ஒளிப்பதிவாளர் சுகுமார் வனத்தின் அழகை அருவியின் பிரமாண்டத்தை நம் கண்ணுக்கு அருகில் கொண்டு வந்திருக்கிறார். வனத்தின் கரும்பச்சை பின்னணியில் யானை மீதமர்ந்து நாயகன் வரும் காட்சியின் கோணமும் ஒளியமைப்பும் மிகச் சிறப்பு. இமானின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. அழகான வரிகளுடன் நிறைவான இசை தந்திருக்கிறார். "சொய்..சொய்" பாடல் தொடங்கியவுடன் மாணவச் செல்வங்கள் திரைக்கு அருகில் மேலேறி நடனமாடத் தொடங்க அவர்களை தியேட்டர்காரர்கள் அதட்டி விரட்ட வேண்டி வந்தது.என்றாலும் பின்னணி இசை என்பதில் மவுனத்துக்கும் முக்கியத்துவம் உண்டு என்பதை இமான் இன்னும் உணரவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மரங்கள் அடர்ந்த புள்ளினங்கள் நிறைந்த அந்த கானகத்தின் உண்மையான சத்தம் ஒருமுறை கூட கேட்கவில்லை. எதற்கெடுத்தாலும் "ய்யே" என்ற ஓலக்குரல். 

என்றாலும் தமிழில் நிலம் சார்ந்து வந்த படங்களில் முக்கியமானப் படம் இது என்பதில் சந்தேகம் இல்லை. காதல் காதல் என்பதையும் தாண்டி கதை சொல்ல முயற்சி செய்தால் இது போன்ற படங்களை மேலும் சிறப்புறச் செய்யலாம். இறுதியில் தன்னை நேசித்த அப்பாவி உயிர்களை  இழந்து நாயகன் தவிக்கும்போது தன் சுயநலம் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று புலம்பும்போது அந்த செய்தியைத் தெரிந்துகொள்ள திரையரங்கில் யாரும் இல்லை. எல்லோரும் காதலைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறி விடுகிறார்கள்.

- காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை