Wednesday, January 4, 2012

எக்ஸைல்:புனைவின் நிஜம்




தமிழில் காமத்தை வெளிப்படையாகப் பேசும் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான சாரு நிவேதிதாவின் புதிய படைப்பு 'எக்ஸைல்' நாவல். கவரும் அட்டைப்படத்துடன் நல்ல லே அவுட்டில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந் நாவல் வெளிவருவதற்கு முன்பே இணைய தளங்களில் சாரு நிவேதிதாவாலும் அவரது வாசகர்களாகவும் ஒரு நட்சத்திர நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்குரிய பரபரப்புக் கிளப்பப்பட்டது. யூடியூபில் அதன் ட்ரைலர் வேறு வந்து வாசகர்களின் இதயத் துடிப்பை அதிகரித்தது. தமிழில் முதன் முறையாக ஆட்டோ பிஷன் என்ற புது வகை எழுத்துமுறையில் வந்திருப்பதாக வேறு அறிவிப்பு வர புதுமையை எப்போதும் விரும்பி வரவேற்கும் வாசகர்கள் மத்தியில் பரவச உணர்வு தோன்றி பரவியது. ட்ரெயிலரிலும் அவ்வகை எழுத்தில் இயங்கி வரும் மிகக் குறைந்த எழுத்தாளர்களில் உலகில் தான் இரண்டாவது எழுத்தாளர் என்ற பெருமிதமற்ற முகபாவனையுடன் கூடிய சாரு நிவேதிதாவின் அறிவிப்பும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. நாவல் ஆட்டோ ஃபிக்ஷன் என்ற எழுத்து வகையில் அமைந்திருக்கிறது என்ற முன்னறிவிப்போடு வந்திருப்பதால் வாசகன் தான் அறிந்த சாருவை மனதில் வைத்துக்கொண்டே தான் நாவலை அணுகுகிறான். நாவல் பேசும் உதயா என்ற எழுத்தாளன், அவனது பாலியல் தோழியான ( கடைசியில் அப்படித் தான் முடிகிறது) மூன்று குழந்தைகளின் தாயான , இடையிடையில் வந்து நாவல் பற்றிய தன் கருத்துகளை சொல்லும் கொக்கரக்கோ என்று மூன்று பிரதானப் பாத்திரங்களுடன் தடங்கல் இல்லாத மொழி நடையில் பயணிக்கிறது. உதயாவின் உலக வாழ்க்கை செக்ஸ் என்ற ஒரே வார்த்தையோடு முடிந்து விடுவதால் அவனது சமூகப் பார்வை, அதன் மீதான தன் விமர்சனம் எல்லாமே பாலியல் சார்ந்தே அமைந்து விடுகிறது.எப்படிஎன்றால் ரத்தம் வழிய அடிபட்டு நிற்கும் நாயைக் கண்ட உதயாவுக்கு உணவுக்கும் உறைவிடத்துக்குமான அதன் தேவை பற்றிய எண்ணத்தை மீறி அதன் கலவி வாழ்க்கை மீதான விரிவான பத்தி எழுதும் அளவுக்கு யாரை அல்லது எதைக் கண்டாலும் அவற்றின் கலவி வாழ்க்கை குறித்தான எண்ணங்கள் உதயாவிடம் நிரம்பி ததும்புகின்றன. நாவலில் எழுத்தாளன் என்ற சுய ஆக்கிரமிப்பை உடைத்து அவ்வப்போது தோன்றும் கதாபாத்திரங்களை தன் போக்கில் பேச அனுமதிருப்பது ஆசிரியரின் தைரியமான அணுகுமுறை எனலாம்.

பொதுவாக இணையத்தில் ஆசிரியரின் எழுத்துகளைப் படித்தவர்களுக்கு நாவலில் புதுமையைக் கண்டறிய முடியாது. புதிதாக படிக்கும் வாசகர்களை ஆசிரியர் நேரடியாக சென்றடைந்து விடுவார். இது போன்ற வகை எழுத்துகளில் இருக்கும் சவுகரியம் அப்படி.உதாரணத்துக்கு சாரு பொதுவாக எழுதும்போது தான் தமிழக எல்லைகளைத் தாண்டிய எழுத்தாளர் என்றாலும் தனக்கான மரியாதையை உலக இலக்கியம் தரவில்லை என்ற 'நியாயமான ஆதங்கம்' எப்போதும் வெளிப்படும். நாவலிலும் உதயா அடிக்கொரு தடவை இப்படிப் புலம்பிக்கொண்டே இருக்கிறான். எப்போதும் வெளிநாட்டு எழுத்தாளர்களின் வாழ்க்கை தரமும் அவர்களுக்கு அங்கு கிடைக்கும் மரியாதையும் உதயாவின் மனதில் பெரும் சஞ்சலத்தையும் ஆற்றாமையையும் தான் வாழும் சமூகத்தின் மீதான அசூசையையும் ஏற்படுத்துகிறது. நாற்பதாண்டுகளாக எழுதியும் ஆட்டோவில் தான் பயணிக்க வேண்டி இருக்கிறது. அதுவும் இல்லையென்றால் தன் ஏழை மகன் கார்ப்பரேட் கம்பெனியில் சம்பாதித்து வாங்கிய காரில் தான் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது என்று புலம்பும் போது இன்றைய வாசகனுக்கு உதயா மேல் பரிதாபம் தோன்றுகிறது. ஏனென்றால் வாசகன் கடைசி வரை எழுத்துக்காகவே வாழ்ந்து வெறும் அவலை உணவாக உண்டு எத்தனை தொலைவேன்றாலும் நடந்தே சென்று மறைந்து போன எழுத்தாளர்களை அறிந்தவனில்லை. இது உதயாவுக்கு பெரும் சவுகரியமாகப் போய் விடுகிறது. என்றாலும் அவனைச் சுற்றி இருக்கும் நெருங்கிய வாசகர்கள், ஆத்மார்த்தமான நண்பர்கள் எல்லோருடனுமான நேரடி நட்பினால் உயர் ரக மதுவகைகள், ஆடம்பர வாழ்க்கை என்று கிடைத்தாலும் அவன் மனது அதைத் தாண்டிய வசதி வாய்ப்புகளுக்கு ஏங்குவது அப்பட்டமாகத் தெரிகிறது. எப்பாடுபட்டாவது எல்லைகளைக் கடந்து விடத் துடிக்கும் எழுத்தாளனான உதயா தன் சொந்தப் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறான்.


சுந்தரராமசாமியின் ஜே.ஜே யை சேங்கான் என குறிப்பிடும் சாரு தன் பாத்திரமான உதயாவை பெரும் சென்கானாகப் படைத்திருப்பது ஒரு நகை முரண். உதாரணத்துக்கு ஆடம்பர வாழ்க்கை, கார்பரேட் பாணி நடைமுறைகள், சுற்றிலும் பக்திகளின் நடமாட்டம் , அடிமைத்தனமான சீடர்கள் என்று இருக்கும் ஆன்மீக குரு குஷால் தாஸ் (நாவல் ஆட்டோ பிக்ஷன் என்பதால் நிஜ வாழ்வில் யார் அந்த குரு என்பதை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்) பற்றி ஒரே ஒரு சாமான்யப் பார்வையில் அறிந்துகொண்டிருக்க வேண்டிய விஷயங்களை சுத்தமாக அறிந்துகொள்ளாத அப்பாவியாக ,'ஞானம்' வேண்டி செல்லும் பக்தனாக சென்று மாட்டிக்கொள்கிறான். எப்படி என்றால் தலைக்கு சராசரியாக மூவாயிரம் ருபாய் வாங்கி குஷால் தாஸ் நடத்தும் ஆன்மீக சொற்பொழிவுக்கு சென்று மாட்டிக்கொண்டு , குஷாலின் அமெசூர்தனமான உரையைக் கேட்டு சகிக்காமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் பார்க்கும் உதயாவை குஷாலின் வாலண்டியர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள். நல்ல பருமனான ஆறேழு பேர் நிறுத்தியும் தடுத்தும் அவர்களோடு சண்டையிட்டு ..இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு ..ஆம் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு வெளியில் வந்து விழுகிறான் உதயா. 'ஆன்மீகத்தையும் அன்பையும் போதிக்கும் ஒரு நிறுவனம் இது போன்று வன்முறையில் இறங்கலாமா' என்று 'பட்ட பின்' கிடைத்த தெளிவுடன் அறுபது வயதான பைபாஸ் சர்ஜரி செய்துகொண்ட ஏழை எழுத்தாளன் உதயா இதயம் படபடக்க நியாயம் வேறு கேட்டு குமுறுகிறான்.

இது போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் வசமாக எதிலும் மாட்டாதவரை அவர்கள் பெயரில் பத்திரிக்கைகளில் வெளிவரும் ஆன்மீக மறுமலர்ச்சி தொடர்களின் பேய் எழுத்தாளர்களாக (ghost writers) இருக்கும் எழுத்தாளர்கள் பிரச்னை என்று வந்த பின் புலனாய்வுப் பத்திரிக்கைகளில் பரபரப்பான வெளிவராத திடுக்கிடும் உண்மைகளை எழுதுவார்கள் என்ற வழக்கத்தின் பேரில் உதயாவும் செய்து அதற்கான 'விலையை' பெறுகிறான். அவனுக்கு குஷால் தினமும் முகமன் செய்வது போல் பொழுதொரு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறான். குஷாலுடன் தொலைக்காட்சியில் தோன்றி மக்களை மகிழ்வித்த முன்னாள் நடிகையும் உதயாவின் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை என்று மிரட்டுவதால் தினமும் பயந்து நடுங்குகிறான் உதயா.பரிதாபமாக இருக்கிறது. நாவலின் ஒரு முக்கியமான கட்டத்தில் உதயாவின் மனைவி பெருந்தேவி தொலைநோக்குப் பார்வை மற்றும் திடீர் ஞான திருஷ்டி இவற்றின் கலவையாக சொல்லும் வாக்கியம் இந்த நாவலில் முக்கியத்துவம் பெறுகிறது. 'குஷால் தாஸ் சரியில்லை.அவன் பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்ளப்போகிறான்' என்று அவள் சொன்ன மூன்றாம் நாள் தொலைக்காட்சிகளில் குஷாலும் நடிகையும் செய்யும் அந்தரங்க ஆன்மீக பூஜைகள் வெளிவந்து உண்மை வெட்டவெளிச்சமாகிறது. கடைசி மூன்றாம் நாள் வரை குஷாலின் நடவடிக்கையில் உதயாவும் அவன் மனைவியும் கொண்டிருக்கும் நம்பிக்கை எப்பேர்பட்ட சேங்கான்தனம் என்பது வாசகனுக்குப் புலப்படுகிறது.


தவிரவும் இந்த நாவலில் முகநூலில் (Facebook) ஒரு முகமறியாப் பெண்ணுடன் அந்தரங்க சாட் செய்து ஒரு முறை மாட்டிக்கொள்கிறான் உதயா. நாற்பது வயதைக் கடந்து விட்டால் 'அதை' வெட்டி எறிந்துவிட வேண்டுமா என்ற தார்மீக கோபத்துடன் பெண்களை பார்த்த கணத்தில் இருந்தே காமத்தில் வீழ்ந்து அவர்களுடன் பாலியல் மொழி பேசும் உதயா அந்த முகமறியாப் பெண்ணுடன் அந்தரங்கமாக காதல் மொழிப் பேச அந்த உரையாடலின் தொகுப்பு ஒரு நாள் அம்பலமாகி விடுகிறது. (Facebook இல் Friend Request அனுப்பினால் அதை எப்படி accept செய்ய வேண்டும் என்று அறிந்திராத அப்பாவி எழுத்தாளரான உதயா இது போன்ற இணைய அபாயங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்). உடனே அதை கையில் எடுத்துக்கொள்ளும் பெண்கள் அமைப்பினர் நாள் தோறும் அவன் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் நடத்தி வருவதால் மனக் கிலேசம் கொள்ளும் உதயா அந்தப் பெண் அனுமதிக்காமல் நான் அப்படி பேசி இருப்பேனா என்று பரிதாபத்துடன் கேட்கும்பொழுது மனதைப் பிசைகிறது. உதயா மீது அளவற்ற அன்பு கொண்ட கொக்கரக்கோ அந்தப் பெண்ணின் ஐ.டி. ஐ நோண்டி அவளது அந்தரங்க வாழ்க்கையின் ரகசியங்களைக் கண்டுபிடித்து அந்தப் பெண்ணும் பெரிய உத்தமமில்லை என்ற பேருண்மையை சொல்வதால் இந்த உண்மை தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் உதயா மீது மீண்டும் வாசகனுக்கு அளவற்ற இரக்கம் தோன்றுகிறது.அபலைப் பெண்கள் துயர் துடைக்க அந்தரங்க சாட்டிங்குகள், காதல் கணவனாலும் சரியாக 'கவனிக்கப் படாத' அஞ்சலி போன்ற பெண்களின் துயரம் போக்கும் வகையில் உடலுறவு மூலம் திருப்திப் படுத்துதல் போன்ற உதயாவின் செயல்களில் உள்ள முற்போக்குத் தனத்தை தவறாகப் புரிந்துகொள்ளும் அறிவற்றவர்கள் உதயாவை தினம் கடுமையாகத் தாக்கி மின்னஞ்சல்கள் அனுப்புவதைக் கண்டு மனம் வெதும்பும் உதயா தன் நிலையை உத்திரப் பிரதேசத்தில் ஜாதிய ஆதிக்கக்காரர்களால் துரத்தி துரத்தி வன்புணர்வு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட தலித் குடும்பத்தின் நிலையுடன் ஒப்பிடுவது சாலப் பொருத்தம் என்று ஆசிரியர் நினைக்கிறார் போலும். பரிதாபம்.


முரணாக வேறு யாருக்கும் இல்லாத துணிச்சலுடன் இந்தியாவின் பெரிய ஊழலில் சிக்கி சிறையில் இறக்கும் ஒரு அரசியல் வாதியின் செயலாளராக இருந்து தற்கொலை செய்துகொண்ட பக்கிரிசாமியின் ஆவி சொல்லும் திடுக்கிடும் உண்மைக் கதைகள் நாவலின் சீரியசானப் பக்கங்கள். ஆட்டோ பிக்ஷன் என்பதால் அது யாராக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் பிறப்பது இயல்பு தான். ஆனால் வழமையாக தமிழ் அரசியல் குற்ற புலனாய்வுப் பத்திரிக்கைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு அது பெரிய ரகசியமாகத் தெரிய வாய்ப்பில்லை. பக்கிரிசாமியும் உதயாவின் பெருமைகளை எடுத்துரைப்பதில் தவறவில்லை. உதயா குடிப்பதில் கூட புதுமை விரும்பி, நுங்கு நீரை வோட்காவில் கலந்து குடிப்பதைக் கண்டுபிடித்த விஞ்ஞானி, கடவுளே உதயா முன் தோன்றி வரம் என்ன வேண்டும் எனக் கேட்டாலும் 'தன் பத்திரிக்கைக்கு விளம்பரம் தான் கேட்பான் என்று தன்னால் முடிந்தவரை புகழ்கிறான். என்ன தான் ஆட்டோ பிஷன் என்றாலும் ஏன் தன்னை புகழ்ந்து பேசுபவர்களின் குரலை மட்டும் உதயா எடிட் செய்வதில்லை என்ற எண்ணம் தலைதூக்குகிறது.


உதயாவை விட பிரதானமாக நாவலில் வரும் அஞ்சலியின் பாத்திரப் படைப்பில் ஆசிரியர் பல புதுமைகளை நாவல் நெடுகிலும் புகுத்திக்கொண்டேப் போகிறார். உதயாவுக்கு பிரான்சில் அறிமுகமாகும் மூன்று குழந்தைகளுக்கு தாயான ஆனாலும் குலையாத உடல்கட்டுடன் இருக்கும் அஞ்சலியின் பாத்திரத்தின் மூலம் தன் பெண் வாசகிகள் தங்கள் உள்ளார்ந்த குரலை எழுத்தாளர் வெளிப்படுதிவிட்டாதாக சொல்கிறார்கள் என்று சாரு பெருமையாகப் பேசக்கூடும். நாவலின் ஒரு இடத்தில உதயா பேரிளம் பெண்களின் பாலுறவு வேட்கையை அந்தரங்க சட மூலம் தீர்த்து வைப்பதாகவும் அப்படி செய்திராவிட்டால் அப்பெண்கள் வேறு முடிவுகளுக்கு சென்றிருக்கக் கூடும் என்பதால் அது போன்ற பாலியல் மொழி சாட்டிங்குகள் பெண்களின் அந்தரங்க ஆசைகளுக்கு ஒரு வடிகால் என்ற உண்மையை போட்டு உடைப்பதின் மூலம் பெண்களின் உள்ளார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு தரும் மேன்மையான எழுத்தாளனாக உதயா அறியப்படுகிறான்.


அஞ்சலியின் பாத்திரம் பேசப்பேச அவளுக்குள் உறைந்திருந்த இருட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருவது நாவலின் முக்கியமான தளம் என்றாலும் அதில் இருக்கும் நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகவும் நாவலை தொடர தொடர ஆசிரியர் மேலும் மேலும் அஞ்சலி மீது பரிதாபத்தை ஏற்படுத்த முயல்கிறார் என்ற எண்ணம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. அஞ்சலியின் இளமைப் பருவத்தில் அவளது குடும்பத்தில் நுழையும் திவாகர் நாய் (அப்படித் தான் அஞ்சலி அழைக்கிறாள்) அவளது கல்லூரிக் காலம் வரையிலும் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை தமிழ் நெடுந்தொடர்களில் வரும் காட்சியமைப்புகளுக்கு எந்த விததில்லும் குன்றாத குரூரத்துடன் நம் முன் வைக்கிறார் ஆசிரியர். ஆன்மீக பித்துக்கொண்ட அஞ்சலியின் அம்மாவையும் அப்பாவையும் திவாகர் ஆன்மீகம் என்ற போர்வையில் பில்லி சூன்யம் (black magic) செய்து வசியம் செய்து விட்டதால் அவர்கள் இவள் மீதான திவாகரின் பாலியல் தொந்தரவுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் என்று ஆசிரியர் சொல்லிவிடுவதால் தைரியம் கொள்ளும் திவாகர் இன்னும் வித விதமாக அவளை சித்ரவதை செய்ய துவங்குகிறானோ என்று கூட தோன்றுகிறது.


சுரேஷை காதலித்து திருமணம் செய்து மூன்று குழந்தைகளையும் பெற்ற பின்னும் அஞ்சலி போன்ற பெண் உதயாவுடன் கட்டுப்பாடற்ற பாலுறவு கொள்வதற்கு உள்ளீடான காரணம் சிறு வயதில் அவள் மீதான அந்த பாலியல் தாக்குதல்கள் தான் என வாசகர்களை எண்ண வைக்க ஆசிரியர் அளவுக்கு மீறி பிரயத்தனப் படுவதாக தோன்றுகிறது. கடைசியில் அவர் கிண்டல் செய்யும் ஜன ரஞ்சக எழுத்தாளரான ரமணி சந்திரனின் குடும்ப உறவுச் சிக்கல் கதை போலாகிறது. ஆனாலும் ரமணிக்கும் சாருவுக்கும் இதில் பெரிய வித்தியாசம் இருக்கத் தான் செய்கிறது. அவர் தைரியமில்லாமல் மார்பகம் என்று சொல்வார் ..சாரு துணிச்சல்காரர் என்பதால் முலை என்று எழுதிவிடுவார். இது போன்ற விஷயங்களை கூட இருந்தே கிண்டல் செய்யும் கொக்கரக்கோ பாத்திரமும் சுவாரஸ்யம். உன்னை காதலிக்கும் பெண்கள் மட்டும் என் கூடை நிறைய சோகக்கதைகளை சுமக்கின்றனர் என்று உதயாவை உரிமையுடன் கிண்டல் செய்கிறான். ஜே.ஜே. தன் மனைவி பிரம்பால் தன் மகளின் புட்டத்தை வெளுப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் என்ற விமர்சனம் வைத்த சாரு அஞ்சலியை திவாகர் சவுக்கு மிளாரால் அடித்து சித்ரவதை செய்தான் என்று எழுதுகிறார்.அது அஞ்சலியின் அம்மாவுக்கு தெரிவதே இல்லை. பில்லி சூன்யம் வைத்தால் ஒரு தாய்க்கு தன் மகள் உடலில் சவுக்கு மிளார் அடித்துப் பிளந்த காயங்கள் தெரியாமல் போகுமா என்ன? இத்தனைக்கும் அஞ்சலியின் அம்மாவே இளம் வயதில் தன் சொந்த சகோதரனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானவள். ஆனாலும் இவற்றை கொக்கரக்கோவே கேட்டு விடுவதால் எல்லாம் சரி என்று நினைத்து விடுகிறார் ஆசிரியர்.


நாவலில் குறிப்பிடத்தக்க விஷயம் நாகூர் பற்றிய குறிப்புகள். ஆசிரியர் தன் ஊரின் தெருக்களைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்.நடிகரும் பேச்சாளருமான சிவகுமார் எப்படி பூக்களின் பெயரை சொல்லி முடிக்க மணிக்கணக்கில் ஆகுமோ அது போல தெருக்களின் பெயர் மட்டும் இரண்டு மூன்றுப் பக்கங்களுக்கு ஓடுகிறது.( இது போன்ற பட்டியல்கள் நாவலில் அடிக்கடி தென்படுவது வேறு விஷயம்) என்றாலும் எந்த ஒருவனுக்கும் தன் சொந்த ஊரைப் பற்றி சொல்ல சலிக்கவே சலிக்காது என்பதும் உண்மை தானே.கொசத்தேருவில் இருந்து ரயிலடி வரை செல்லும் தூரம் தன் இளம் வயதில் வட துருவத்தில் இருந்து தென் துருவத்துக்கு செல்வது போல் இருக்கும் எனும்பொழுது இளமையில் அவரவர்க்குள் தத்தம் தெருக்கள் எத்தனை பிரமாண்டமாய் உறைந்து போயிருக்கின்றன என்று தோன்றுகிறது. அதே போல் அன்பு ஒன்றை மட்டும் காட்டத் தெரிந்த தன் பெரியம்மா பற்றி உதயாவின் விவரிப்பும் நெகிழ்வு. ஆனால் தன் பெரியம்மா பிம்பத்தை அஞ்சலியில் கண்டேன் என்று உதயா சொல்வது புருடா. அவன் அவளிடம் கண்டது பெற்றது எதிர்பார்த்தது எல்லாம் உடல் சுகம் மட்டுமே. அத்துடன் நாகூர் கதை முடிந்த விடுவதால் நாவலின் கனம் திரும்பவும் குறைந்து விடுகிறது.


நாவலில் சுய முரண்கள் அடிக்கடி தென்படுகின்றன. குறிப்பாக பாலுறவு சிந்தனையில் முற்போக்கு தீவிரம் கொண்ட உதயா அவ்வப்போது பாலியல் நியாயம் பேசுகிறான். அடுத்தவனின் மனைவியான அஞ்சலி உறவு கொள்ளும்போது அவளது கணவன் சத்தமெழுப்ப அனுமதிப்பதில்லை என்று தெரிந்தவுடன் கொதிக்கிறான் உதயா.'படுக்கையில் கூட ஒருத்திக்கு சுதந்திரம் இல்லையா?' அதே சமயம் அவள் முத்தமிடப் போகிறாள் என்று நினைக்கையில் அவள் வேறொன்றை அவனுக்கு சுவைக்க தர முயல்கிறாள். அதுவும் பொது இடத்தில். உதயா திடீர் இனச்சிந்தனையுடன் தமிழ் பெண்ணா நீ ராஸ்கல் என்று கண்டிக்கிறான். அதற்கு அஞ்சலி தரும் பதில் இன்னும் அட்டகாசம்' என்னை இப்படிக் கெடுத்ததே நீதான்'. அதே போல் ஒழுக்கக் கோட்பாடுகளில் எந்த வித நம்பிக்கையும் இல்லாத பக்கிரிசாமியின் ஆவி ஒரு இடத்தில் ஒரு நடிகையைப் பற்றிப் பேசுகிறது. பக்கிரிசாமி தான் செயலாளராக வேலை பார்க்கும் அரசியல்வாதிக்கு சேவை செய்ய வந்திருக்கும் அவள் முன்பு ஒருமுறை தன் பிறப்புறுப்பு தெரியும்வண்ணம் உள்ளாடை அணியாமல் வந்து மீடியாவில் பரபரப்பை ஏற்றி பின் நிறைய சான்ஸ் பெற்றுக்கொண்டவள் என்பதால் அவள் மீது கடும் கோபத்தில் இருக்கிறான்.கோபத்துக்கு அது மட்டும் காரணமில்லை 'நீ எதை வேண்டுமானாலும் அணியாமல் இரு. தமிழ் நாட்டுக்கு வந்தவுடன் யோகா, பரதநாட்டியம் என்று பேசாதே' என்கிறான். விபச்சாரம் செய்தால் நேரடியாக செய் ஏன் பத்தினி வேஷம் போடுகிறாய்?
அதே போல் மூன்று வயதிலேயே சுய இன்பம் செய்யத் தொடங்கி விட்ட உதயாவுக்கு அப்படியென்றால் என்னவென்று கல்லூரிக் காலத்தில் தான் தெரியவே வந்தது என்று மாபெரும் புருடா ஒன்றை விடுகிறான். பல இடங்களில் இது போன்ற அபத்தங்கள்.

இது வரைக்கும் இருந்த நடைமுறையை உடைக்கிறேன் பேர்வழி என்று எழுதுபவர்களுக்கு ஒரு பெருத்த சவுகரியம் உண்டு. யார் யாரிடம் என்ன பேசுகிறார்கள். முற்றுப்புள்ளி, கம்மா போன்ற வஸ்துகளை தூக்கி ஓரங்கட்டி விட்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். இந்நாவலில் அப்படி இருக்கும் சமாச்சாரங்கள் நிறைய. சமையல் குறிப்புகள், மதுபான விருந்துக்கு தேவையான பொருட்களின் பட்டியல், நீண்ட நேரம் கலவியில் ஈடுபட தேவையான அறிவுரை, பெண்களின் உள்ளாடை பற்றிய தகவல்கள், உணவு மற்றும் உணவகங்கள் பற்றிய விவரணைகள் ...இத்தியாதிகள் நிச்சயம் பக்கம் நிரப்புவதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. இவற்றை எல்லாம் விடாமல் கோர்த்துப் பார்த்து நாவலின் போக்கை வாசகனே தீர்மானிக்க வேண்டும் என்ற என்னமன்றி வேறேதும் இல்லை. அதே போல் கதைக்கு எந்த வித தொடர்புமில்லாத பிரெஞ்சு. முதலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைந்த ஆங்கிலமோ என்று தான் நினைக்க வைத்தது . அதிலும் உதயஆம் அஞ்சலியும் பேசிக்கொள்ளும் காதல் கடிதங்களில் ' கண்ணே மணியே...உன்னைப் பார்க்காமல் எனக்கு தூக்கம் வரவில்லை' என்ற காவிய வார்த்தைகளே தமிழிலும் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் (!) தென்படுவதால் சுவாரசியம் குறைவு.லகுவான நடை நாவலின் ஓட்டத்தை தடை செய்யவில்லை என்றாலும் உள்ளீடான கட்டமைப்பு ஆட்டோ ஃபிக்ஷன் என்ற பெயரில் இருந்தாலும் பெரிய அளவில் அர்த்தங்களோ முடிச்சுகளோ இல்லாததால் தொக்கி நிற்பது தெரிகிறது. இது போன்ற 'முயற்சிகள்' உண்மையில் தாங்கள் எழுதும் வகையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்த்தவல்ல பொய்மையும் ஆர்ப்பாட்டங்களும் சுய தம்பட்டங்களும் அற்ற நேர்மையான எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்பட்டால் தமிழில் நிச்சயம் இன்னும் புதிய வகை எழுத்து வளரும்.

நன்றி: வடக்குவாசல்.

15 comments:

  1. சுவாரசியமான விமர்சனம்.....நூலை படிக்காததால் சில இடங்களில் ஒன்ற முடியவில்லை!!!!எந்த காலத்திலாவது படித்தால் மீண்டும் இதை தேடி படிக்கவேண்டும்!

    ReplyDelete
  2. சரியான விமர்சனம் ...... சாருவுக்கு சவுக்கடி

    ReplyDelete
  3. நல்லாயிருந்தது விமர்சனம்!

    ReplyDelete
  4. உங்கள் விமரிசனம் தெளிவாக இருந்தது. சற்று புரியாத இன்னொரு விமரிசனமும் படித்தேன்.அவர் எழுதிய பதிவுகளின் தொகுப்புதான் இது என்றும் கேள்விப்பட்டேன்...உண்மையா சந்திரமோகன்?
    நான் அவருடைய ஜீரோ டிகிரி (ஆங்கிலம்) படித்திருக்கிறேன். இதுவும் ஜீரோ டிகிரி புத்தகம் மாதிரி non-linear narrative style இல் இருப்பதாக கேள்விபட்டேன்.
    உங்களுடைய பதிவை படித்த பின்புதான் தெரிகிறது அவருடைய வழக்கமான ஒன்றுதான் இந்த நூலும் என்று. நன்றி சந்திரமோகன்....

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம்...! இன்னும் கூட காரத்தை கூட்டியிருக்கலாம். ஆனால் குஷால் தாஸ் என நீங்கள் புரிந்து கையாண்டிருக்கும் சாமியார் அவர் அல்ல இது வேறு சாமியார். நடிகையோடு தொடர்புடைய சாமியரை மதிப்பிற்குரிய.. ஸ்ரீ ஸ்ரீ.. உலகின் இரண்டம் தலை சிறந்த எழுத்தாளர் ஜிம்கா சாமியர் என்ற பெயரில் கையாண்டிருக்கிறார்.

    ReplyDelete
  6. "இது போன்ற 'முயற்சிகள்' உண்மையில் தாங்கள் எழுதும் வகையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்த்தவல்ல பொய்மையும் ஆர்ப்பாட்டங்களும் சுய தம்பட்டங்களும் அற்ற நேர்மையான எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்பட்டால் தமிழில் நிச்சயம் இன்னும் புதிய வகை எழுத்து வளரும்."

    super... sir, i think you wasted your time by reading .we all know what he is upto.. and what is he ...

    ReplyDelete
  7. இது போன்ற 'முயற்சிகள்' உண்மையில் தாங்கள் எழுதும் வகையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்த்தவல்ல பொய்மையும் ஆர்ப்பாட்டங்களும் சுய தம்பட்டங்களும் அற்ற நேர்மையான எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்பட்டால் தமிழில் நிச்சயம் இன்னும் புதிய வகை எழுத்து வளரும்.correct version

    ReplyDelete
  8. // பொய்மையும் ஆர்ப்பாட்டங்களும் சுய தம்பட்டங்களும் அற்ற நேர்மையான எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்பட்டால் தமிழில் நிச்சயம் இன்னும் புதிய வகை எழுத்து வளரும்." //

    உண்மை

    நல்ல விமர்சனம் :-)))

    ReplyDelete
  9. Chandramohan is a guy who tries to get some attention by writing anything. He will associate himself with Charu or Jeyamohan or whoever is famous for his bit of fame for two days.

    ReplyDelete
  10. This was not very different from Raasa Leela. He is just stereo typed. This is Chanru's last novel I will ever buy. I am just sick and tired of all the hype, and then the novel is just the same like his previous one.

    ReplyDelete
  11. //Chandramohan is a guy who tries to get some attention by writing anything. He will associate himself with Charu or Jeyamohan or whoever is famous for his bit of fame for two days//haa..haa!!

    ReplyDelete
  12. Everyone writes for the attention of others only...thats why it is published, advertised and sometimes grand functions too held with fancy dress too...and just because of this writing, Chandramohan gets this attention...write more !!!!!

    ReplyDelete
  13. ”சீ... தூ... அந்த மாமா அம்மணக்குண்டியா போறார்” என்று ராஜாவைப் பார்த்துக் கூச்சல் போட்ட குழந்தையைப் போன்ற விஷயம் சந்திரமோகன் செய்திருப்பது. என்னுடைய பத்திரிகையிலேயே இதனை வெளியிட்டு இருப்பதால் இன்னும் அதிகம் சொல்ல முடியவில்லை. பெயரிலிகள் வெளியிட்டுள்ள கருத்து ஒன்றும் அதி பயங்கரமானது அல்ல. தங்கள் பெயரிலேயே இதனை வெளியிட்டு இருக்கலாம். எனக்குத் தெரிந்து சந்திரமோகனிடம் பினாமி வலைத்தளங்களும் பினாமி மின்னஞ்சல் முகவரிகளும் இல்லை. பயப்படாமல் தங்கள் பெயரிலேயே அவரைத் திட்டலாம். ஒன்றும் பிரச்னை இருக்காது.

    ReplyDelete
  14. சீ... தூ... இந்த மாமா அம்மணக்குண்டியாப் போறார்” என்று ராஜாவைப் பார்த்துக் கத்திய காரியம்தான் சந்திரமோகன் செய்திருப்பது. இந்தக் கட்டுரையை என்னுடைய இதழில் பிரசுரித்து இருப்பதால் அதிகம் சொல்ல விருப்பம் இல்லை. அப்புறம் வடக்கு வாசல் விற்பனை அதிகரிக்க இதனை வெளியிட்டிருப்பதாக சொல்வார்களோ என பயமாக இருக்கிறது. பெயரிலிகள் தைரியமாக தங்கள் பெயரிலேயே கருத்துக்களை வெளியிடலாம். எனக்குத் தெரிந்து சந்திரமோகனிடம் பினாமி வலைத்தளங்களோ பினாமி அஞ்சல் முகவரிகளோ இல்லை. கருத்துக்கள் வெளியிடுபவர்கள் மீது ஆபாசமான திட்டுக்களை எல்லாம் ஏற்பாடு செய்ய மாட்டார். தன்னுடைய வலைப்பூவில் தனக்கே கடிதம் எழுதிக் கொள்ள மாட்டார். அத்தனை மட்டமான ஆளும் கிடையாது. ஜீவாவின் கருத்துடன் எனக்கு முழுக்க உடன்பாடு உண்டு. இதற்கு முந்தைய என்னுடைய பின்னூட்டம் சரியாக சேர்ந்ததா என்று புரியாததால் இதனை மீண்டும் இங்கு பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  15. ரத்தம் வழிய அடிபட்டு நிற்கும் நாயைக் கண்ட உதயாவுக்கு உணவுக்கும் உறைவிடத்துக்குமான அதன் தேவை பற்றிய எண்ணத்தை மீறி அதன் கலவி வாழ்க்கை மீதான விரிவான பத்தி எழுதும் அளவுக்கு யாரை அல்லது எதைக் கண்டாலும் அவற்றின் கலவி வாழ்க்கை குறித்தான எண்ணங்கள் உதயாவிடம் நிரம்பி ததும்புகின்றன///.
    .
    .அவுரு தெருவில் இருக்கும் பன்றியை கூட அதன் கலவி வாழ்வின் வழியேதான் பார்ப்பார்!மண்புழுவ பார்த்தால் என்ன நினைப்பாரோ?

    *
    அதுவும் இல்லையென்றால் தன் ஏழை மகன் கார்ப்பரேட் கம்பெனியில் சம்பாதித்து வாங்கிய காரில் தான் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது என்று புலம்பும் போது///
    .
    .
    ஹா ஹா ஹா!!சூப்பர் பஞ்ச!
    *
    ஆடம்பர வாழ்க்கை என்று கிடைத்தாலும் அவன் மனது அதைத் தாண்டிய வசதி வாய்ப்புகளுக்கு ஏங்குவது //
    .
    .
    ஆமா அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் -கும்மாங்கோ!
    *
    சுத்தமாக அறிந்துகொள்ளாத அப்பாவியாக ,'ஞானம்' வேண்டி செல்லும் பக்தனாக சென்று மாட்டிக்கொள்கிறான்///
    .
    .
    சிக்கிடீன்களே!அண்ணாத்த விரிச்ச வலையில்!இப்படிதான் தான் ஒரு அப்பாவி என சொல்லி மடக்குவார்!ஆண் என்றால் சரக்கு வாங்கி சாப்பிட இந்த "அப்பாவித்தனம்" பயன்படும்!பெண் ஆக இருந்தால் செக்ஸ் சேட் செய்ய ஜி ஸ்ட்ரிங் பத்தி கேட்க உதவும்!
    *
    இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு///.
    .
    ஏய்!!!எல்லாரும் ஒரு தபா ஜோரா கை தட்டுங்க!அண்ணாத்த ஹார்ட் ஆபரேசன் பண்ணிகினதா சொன்னாரு!இது எப்படி சாத்தியமோ!
    *
    நாற்பது வயதைக் கடந்து விட்டால் 'அதை' வெட்டி எறிந்துவிட வேண்டுமா///
    .
    .
    இயல்பான காம உணர்ச்சி எண்பது நாப்பது வயசுக்கு மேல் குறையும்!அது இயக்ற்கை!ஆனா அன்னத்த சிட்டுகுருவி லேகியம் முதல் சின்சினாட்டி தைலம் வரை பயன்படுத்தி செயற்கையாக காம உணர்வு மேலிட செய்து கொண்டு அந்த வலையில் தானே மாட்டிகொள்வது எந்த விதமான "அப்பாவி"தனம்னு தெரியல!
    *
    கடைசியில் அவர் கிண்டல் செய்யும் ஜன ரஞ்சக எழுத்தாளரான ரமணி சந்திரனின் குடும்ப உறவுச் சிக்கல் கதை போலாகிறது////
    .
    .
    உண்மையில் எனக்கும் அதேதான் தோன்றியது!பத்து ரூவா கொடுத்தா "குடும்ப நாவல்" "பாக்கட் நாவல்" கதைய படிச்சாலே போதும்!எதுக்கு 250 ஓவா?
    *
    முற்றுப்புள்ளி, கம்மா போன்ற வஸ்துகளை தூக்கி ஓரங்கட்டி விட்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம்//
    .
    .
    அதாவது "யாரோ" வாந்தி எடுத்தது போல இருக்கு!
    *
    முதலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைந்த ஆங்கிலமோ//
    .
    .
    ஹா ஹா !நெத்தியடி!இவுரு பிரெஞ்சு புலவராம்!
    ***************************************************
    குடும்ப நாவல் பத்து பக்கம்,ஐயப்பன் சரணம் பத்து பக்கம்,கூகுள மேப் நாலு,செக்ஸ் சேட் பத்து,புலனாய்வு பத்திரிகையில் வரும் அரசியல் கட்டுரைகள் ஒரு நாலு,சித்த வைத்திய குறிப்புகள் ஒரு பத்து,அர்த்தம் தெரியாத பிரெஞ்சு இத்தாலி ஸ்பானிய கவிதைகள்(!!??) ஒரு பத்து சேத்தா எக்சைல்!

    ReplyDelete