Monday, August 20, 2012

கவுண்டமணி : கோபக்காரக் கோமாளி

கிராமங்கள்  மற்றும் சிறுநகரங்களில் பெட்டிக்கடைகளில் யாவாரம் பார்த்துக்கொண்டே , கடைக்கு வருபவர்களிடம் உலக விஷயம் பேசும் நடுத்தர வயது ஆட்களைப் பார்க்கலாம். அரசியல், சமூகம் தொட்டு எல்லாவற்றின் மீதும் எள்ளலானப் பார்வையுடன்  கேட்பவர்களைப் புன்னகைக்க வைக்கும்படி பேசிக்கொண்டு இருப்பார்கள் . அவ்வப்போது கடையில் வேலை பார்க்கும் பையன்களைக் கிண்டல் செய்துகொண்டும்  இருப்பார்கள்.  இவர்களின் திரையுலகப் பிரதிநிதியாகப் பரிமளித்தவர்களில் முதன்மையானவர் கவுண்டமணி.

நடிகர்களுக்கு  நிரந்தர திரைப்பணியை அவர்கள் கேட்காமலேயே அளிக்கும் தமிழ் சினிமா, கவுண்டமணிக்கு சைக்கிள் ரிப்பேர் கடை பெட்டிக்கடை இவற்றை வைத்துக் கொடுத்து பிழைப்புக்கு உதவியது. பித்தலாட்டம் செய்வது, சுற்றியிருப்பவர்களின் கோபத்துக்கு ஆளானாலும் வாய்ப்பேச்சால் சூழலை வெல்வது என்று போலித் தோரணைகளுடன் திரிபவர்கள் கவுண்டமணியால் நகலெடுக்கப்பட்டனர். அறுபதுகளிலேயே திரையுலகுக்கு வந்து விட்டதாக சொல்லப்பட்டாலும் பதினாறு வயதினிலே தொடங்கி மெல்ல பயணித்து எண்பதுகளின் மத்தியில் விஸ்வரூபம் எடுத்தார் கவுண்டர். இன்றுவரை விடைதெரியாத மர்மங்களில் அவரது வயதும் ஒன்று. பதினாறு வயதினிலே படத்திலேயே அவர் நாற்பதுகளின் மத்தியில் இருப்பவர் போல் தெரிந்தார். பிறகு ஒருபோதும் சொந்த சிகையுடன் அவரை திரையில் பார்த்தவர்கள் யாருமில்லை. மேட்டுக்குடியில் அவர் முப்பதுகளின் இறுதியில் இருப்பவரைப் போல் தோற்றமளித்தார்.

தமிழ் நடிகர்களில் கேமராவின் இருப்பை உறுத்தலாக எடுத்துக் கொள்ளாத மிகச் சில நடிகர்களில் இவரும் ஒருவர். அவரது பாத்திரத் தேர்வு எப்போதும் எரிச்சலுடன் அலையும் முரட்டுத் தனம் கொண்ட, அதே சமயம் தனக்கான கொள்கைகளில் சமரசம் கொள்ளாத மனிதனாகவே அமைந்தது. பொதுவாக இந்த குணங்கள் ஒரு வில்லனின் பாத்திரத்துக்கானவை. அவற்றை ஒரு நகைச்சுவை நடிகனாக கையாண்டு வெற்றி பெற்றது தான் கவுண்டமணியின் பிரத்யேக சாதனை. எம்.ஆர்.ராதா இதற்கு முன் இதைக் கையாண்டு இருந்தாலும் அவரது பாத்திரங்கள் எப்போதும் எதிர்மறையானவை. கவுண்டமணி பல படங்களில் நாயகனின் மாமா, நண்பன், சித்தப்பு என்றே நடித்தார். அந்த பாத்திரங்களின் மூலம் எந்த இடத்திலும் எந்த நடிகர் முன்னிலையிலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற உரிமையை ஒப்புமையில்லாத தன் நடிப்பு மூலமே அவர் பெற்றார்.

தகுதிக்கு மீறி ஒரு செயலை செய்பவனை அந்த இடத்திலேயே கண்டித்து, கடுமையான கிண்டலும் கோபத்தைப் பொறுத்து அடி உதையும் வழங்கும் பாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் கவுண்டமணிக்கு ஒரு ஆன்டி ஹீரோ எனும் அளவுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தன  என்று சொல்லலாம். உரத்த குரலும் கொச்சை வார்த்தைகளும் அவரது பிரபல்யத்துக்கு வழிவகுத்தாலும் விமர்சகர்களின் கண்டிப்புக்கும் புறக்கணிப்புக்கும் அந்த அம்சங்களே காரணமாயின.  நாடக மரபில் இருந்து வந்த நமது சினிமாவில் திலக நடிகர்கள் உட்பட  எல்லோருமே சத்தமாகப் பேசியே நடித்துப் புகழ்பெற்றனர் என்பதை விமர்சகர்கள் மறந்துவிடுகிறார்கள். அவரது பலமே அவரது பலவீனமாக குறிப்பிடப்பட்டாலும் எந்த காலத்திலும் தன் நடிப்பு முறையை  அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை.

பின்னாளில் மணிவண்ணன், விவேக் மற்றும் அதற்குப் பிறகான காலங்களில் பெரிய அளவில் வெற்றி பெற்ற வடிவேலு ஆகியோரின் வருகை கவுண்டமணியின் திரைவாழ்வில் தேக்கம் வர காரணமாயின என்று சொல்லலாம். தவிர தொண்ணூறுகளின் தொடக்கம் வரை கிராமம் மற்றும் சிறு நகரங்களையே  மையமாகக் கொண்டு இயங்கி வந்த தமிழ் சினிமா ரஹ்மானின் இசை, உலகமயமாக்கல் ஆகியவற்றின் பாதிப்பில் நகரங்களை சார்ந்து உருவாகத் தொடங்கியபோது மாற்றத்துக்கேற்ப கவுண்டமணி தன் பாத்திரத் தேர்வுகளை மாற்றிக் கொண்டார்.  கல்லூரி கணினித்துறை பேராசிரியராக வந்தாலும் முழங்கைகளில் டைப் அடித்து சாட் செய்ததன் மூலம்  தனது முத்திரையை பதிக்க அவர் தயங்கவில்லை.

கவுண்டமணியின் பெயர் காரணங்களில் ஊர்க் கவுண்டர் என்று அவர் நடித்த பாத்திரமும் யார் என்ன பேசினாலும் உடனுக்குடன் முரண் கேள்விகளை முன்வைத்த பாத்திரத்தில் நடித்ததால் counter மணி என்று பெயர் பெற்று அது மருவி கவுண்டமணியானது என்றும் இருவேறுக் கருத்துகள் நிலவுகின்றன. 'காட்ட வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன் தான்' என்று சலம்பினாலும் அவர் உண்மையில் கவுண்டர் இல்லை என்று சொல்பவர்கள் உண்டு.

பாரதிராஜா,கமல்,ரஜினி ,மணிரத்னம் போன்ற பெரிய கைகளின் படங்களில் ஆரம்பகாலத்தில் நடித்துவந்த  கவுண்டமணி  அவர்கள் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தவுடன் அருகில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. திரையில் எத்தனை பேர் நின்றாலும் தனித்து தெரியக்கூடிய முரட்டுத் திறமைக் கொண்ட கவுண்டரை சேர்த்துக்கொள்ள அவர்கள் அஞ்சியதில் நியாயம் இல்லாமல் இல்லை. மிஸ்டர் பாரத் போன்ற படங்களில் அவருடன் நடித்த ரஜினி பின்னர் பல படங்களில் கவுண்டரிடம் அடிவாங்கும் செந்திலைத் தான் நடிக்க வைத்தார். பல வருடங்கள் கழித்து மன்னன் படத்தில் கவுண்டமணி தொழிலதிபர்களைக் கிண்டல் பண்ணும்போது அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார் ரஜினி. பி.வாசுவின் முந்தைய வெற்றிப் படமான சின்னத் தம்பியின் வெற்றியில் கவுண்டரின் பங்கு அதிகம் என்பதால் இந்தப் படத்தில் அவரை சேர்த்துக்கொள்ள ரஜினி சம்மதித்திருக்கலாம். பிறகு எஜமான், உழைப்பாளி போன்ற படங்களில் தொடர்ந்து அவருடன் கவுண்டமணி நடித்தார். என்றாலும் ரஜினிக்கு தன்னை தாண்டிப் போய்விடாத நகைச்சுவை நடிகன் வேண்டும் என்பதால் செந்தில் தான் அவரது பொதுத் தெரிவாக இருந்தார். வறண்டு போன முகங்களில் விக் வைத்து  ரஜினியும் கவுண்டமணியும் பாபாவில் வந்தாலும் படம் படுத்தது என்னவோ படுத்தது தான். அதில் ரஜினிக்கு தன் கடையை எழுதி வைப்பதாக ஒருவர் சொல்லும்போது கவுண்டர் பக்கத்தில் இருப்பவரிடம் ரகசியமாக கேட்பார் "கடை அவருது தானே?"

கமலைப் பொறுத்தவரை தன்னை தாண்ட அவர் யாரையுமே அனுமதிக்க மாட்டார் என்பதால் கவுண்டமணி பலகாலம் அவரிடம் இருந்து தூரத் தான் வைக்கப்பட்டார்.  சின்னக் கவுண்டர் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்த அவரை உதயக்குமார் சிபாரிசின் பேரில் சிங்காரவேலனில் கமல் சேர்த்துக்கொண்டார் போலும். படத்தில் கமலை பல இடங்களில் முந்தி நிற்பார் கவுண்டமணி.  "நா ஒரு லட்சியத்தோட இங்க வந்திருக்கேன்" என்று சொல்லும் கமலிடம் "அப்போ நாங்க என்ன துணி தொவைக்க வந்திருக்கோமா?" என்று கண்டனக் குரல் எழுப்புவார். கடுப்பான கமல் "உன்னை கண்டிக்க ஆளில்லாமத் தான் இப்படி ஆகிட்டே" என்று இந்தியனில் கண்டிப்பார். தொன்னூறுகளில் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததால் கவுண்டமணிக்கு ஏற்ற பாத்திரம் தர கமலால் முடியவில்லை.

அதே போல் ஒரு காலத்திலும் தன் மதிப்பைப் பெறாத செந்திலிடம் உதவி என்று கேட்டு நிற்க கவுண்டமணி திரையில் கூட எப்போதுமே ஒப்புக்கொள்ளமாட்டார். விற்காத இளநீர்  தென்னங்கன்றாக முளைத்து நொடித்துப் போய், ஆள் தெரியாமல் கடன் வாங்க செந்திலிடமே போய் நிற்க நேரும்போது கவுண்டமணி கோபத்தின் உச்சத்துக்கே போய் விடுவார். கூட்டிப் போன வடிவேலுவுக்கு கன்னம் பழுக்க அறை விழும். அது கவுண்டமணியின் சுபாவம். தனக்குப் படங்கள் இல்லாதபோது யாரிடமும் போய் நிற்கவில்லை அவர். அந்தத் தேக்கத்தை ஜீரணித்துக்கொண்டார். 

கவுண்டமணியின் நடிப்பில் இயல்பான உடல்மொழி புத்திசாலித்தனம் இவற்றை எதிர்பார்க்கவே முடியாது. நின்ற இடத்தில் கைகால்களை விசித்திரமாக அசைத்தபடி  வசனம் பேசியே ரசிகர்களை சிரிக்க வைப்பார். கருவாடை கொண்டு வந்து வைக்கும் ஆட்டோக்காரரை திருடன் என்று துரத்தி விடும் கவுண்டமணி  கமல் கேட்கும்போது "ஆட்டக்காரனா இருந்தா என்ன ..பாட்டக்காரனா இருந்தா என்ன? மூக்கு மேல துணியக் கட்டிக்கிட்டு வரலாமா?" என்று எதிர்கேள்வி கேட்பார். அப்போது முழங்காலை மடக்கித் தூக்கி கையால் ஒரு தட்டு தட்டுவார். கமல் தன் தார்மீகக் கோபங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவரையேப் பார்த்துகொண்டு நிற்பார். என்றாலும் அடுத்தவர் வசனம் பேசும்போது அவர் முகத்தை தேமேயென்று பார்த்துக்கொண்டு தன் முறைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மூன்றாம் தர நடிகர்களுடன் கவுண்டமணியை சேர்த்துவிட முடியாது. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பதில் அவர் வாயிலிருந்து விழும். அத்தருணத்தில் சிரிக்கத் தான் தோன்றுமே தவிர யோசிக்கத் தோன்றாது. அதே போல் அவரது முகபாவம். தன்னை சீண்டும் செந்திலை அடிக்கத் தயாராகும்போது தலையைத் தூக்கி வாயைக் குவித்து வைத்துக் கொள்வார். அடி எப்போது வேண்டுமானாலும் விழலாம்.

அவர் மீது இருக்கும் விமர்சனங்களில் முக்கியமானது  மற்றவர்களின் உடல்குறைகளை கிண்டல் செய்து சிரிக்க வைக்கிறார் என்பது தான். ஏறத்தாழ இந்தக் குற்றசாட்டில் சிக்காத நடிகர்களே இல்லை எனலாம். ஏதாவது ஒரு விதத்தில் யாரையாவது புண்படுத்தித் தான் அவர்கள் பல முறை சிரிக்க வைத்திருக்கிறார்கள். 'படித்தவர்களுக்கான நகைச்சுவை நடிகர்களான' கிரேசி மோகன், எஸ்.வி.சேகர் போன்றோர் ஊனமுற்றவர்களை அடிக்காத நக்கலா? கவுண்டமணி புதுப்புதுப் பட்டப் பெயர்கள் சொல்லி செந்திலைக் கூப்பிடும்போது திரையுலகம் அதிரத் தான் செய்தது.  ஒரு படத்தில் புகைப்படக் கலைஞராக வரும் கவுண்டமணி பிலிம் டெவெலப் பண்ணும் வேலை செய்யும் கருப்பு சுப்பையாவை அடிக்கும் கிண்டல்  புண்படுத்தும்படி இருந்தாலும்  நுணுக்கமானது. "நெகட்டிவ் கழுவி கழுவி நீ நெகட்டிவ் மாதிரியே ஆயிட்டய்யா" என்பார். கருப்பு முகமும் வெள்ளை முடியுமாக அவரைப்பார்த்து வெட்கச் சிரிப்பு சிரிப்பார் சுப்பையா. தன்னைக்  கவிழ்க்க  ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் செந்திலையும் வடிவேலையும் பார்த்து "என்னடா ..கருப்பர்கள் மாநாடா?" என்று கேட்பார். "அண்ணன் சிவப்புடா..பாரு செவப்பு சட்டை போட்டிருக்காரு" என்று செந்தில் தரும் உடனடி பதில் முக்கியமானது. அதே போல் வழுக்கையாக இளநீர் கேட்கும் ஒருவரின் வழுக்கைத் தலையை அரிவாளால் சீவும் அளவுக்கு கடுப்பாகும் கவுண்டமணி அந்த காட்சியில் நடிக்கும்போது தன் தலையைப் பற்றி நினைத்தே இருக்க மாட்டார். நினைத்தால் நடிக்க முடியுமா?

ஆரம்ப நாட்களில் தான் இசை அமைத்த மேடை நாடகம் ஒன்றில் கவுண்டமணியும் செந்திலும் சிறு வேடங்களில் நடித்ததாக இளையராஜா கூறியிருக்கிறார். செந்திலுடன் முன்பே நல்ல பழக்கம் கவுண்டமணிக்கு இருந்திருக்க வேண்டும். இருவருக்கும் இடையிலான அந்த கெமிஸ்ட்ரி நிச்சயம் ஒரே நாளில் வந்திருக்க வாய்ப்பில்லை. இருவரும் முன்பே பல படங்களில் நடித்திருந்தாலும் வைதேகி காத்திருந்தாள் இந்த இணையை எங்கோ கொண்டு சென்றது.மேன்டிலை உடைத்து விட்டு செந்தில் நிற்கும்போது ஒரு பெண் வந்து பெட்ரோமாக்ஸ் லைட் கேட்பாள். அப்போது செந்திலை ஒரு முறை பார்த்து விட்டு ஆடியன்சை ஒரு முறைப் பார்ப்பார் கவுண்டமணி. அந்த காட்சி தங்கள் இருவருக்கும் ஒரு பெரிய தொடக்கத்தைக் கொடுத்தது என்றார் விகடனுக்கு அளித்த ஒரு நேர்காணலில். செந்தில் பல முறை பத்திரிக்கை தொலைக்காட்சி நேர்காணல்களில் வந்தாலும் கவுண்டமணி அதற்கு நேர்மாறாக இருக்கிறார். அவர் தொலைக்காட்சியில் தோன்றியது ஒரே முறை தான். இளையராஜா சிம்பனி செய்ததற்காக நடந்த பாராட்டு நிகழ்ச்சி ஒன்றில் கவுண்டமணியும் தோன்றி அவருக்கு வாழ்த்து சொன்னார். முழு ஒப்பனையுடன்  "இசைன்னா ராஜா. .ராஜான்னா இசை" என்ற வார்த்தைகள் தான் அவர் தொலைக்காட்சி முன் தோன்றிப் பேசியவை. பெரும்பாலும் பொதுவில் வெளியே வரத் தயங்கும் கவுண்டமணி தன் குடும்பம் பற்றிய விஷயங்களையும் அப்படியே தான் வைத்துக்கொண்டார்.  விளம்பரத்துக்கு அலையும் சினிமா உலகில் கவுண்டமணி நிச்சயம் வேறுபட்டவர் தான். விகடனுக்கு அளித்த அந்தப் பேட்டியில் கதாநாயகனை விட நகைச்சுவை நடிகன் தான் ஃப்ரெஷாக இருக்க வேண்டும் என்றார் அதிரடியாக. தவிர தன்னைப் பார்க்க வேண்டுமென்றால் ரசிகன் திரையரங்குக்கு தான் செல்ல வேண்டும் என்றார். நீண்டகாலம் கழித்து பெப்சி தொழிலாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். எதிர்பார்த்ததற்கு மாறாக  தெளிவாகவே அமைந்தது அவர் பேச்சு.

நகைச்சுவை வேடங்கள் தந்த வெற்றியில் சில படங்களில் கதாநாயகனாகக் கூட நடித்தும் பார்த்தார். ஜீவிதா, ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகள் அவருக்கு இணையாக நடித்தனர். அவை வெற்றி பெறாத காரணத்தால் திரும்பவும் நகைச்சுவைக்கு திரும்பிய அவருக்கு கைகொடுத்தது கரகாட்டக்காரன் தான். படத்தின் பெரிய வெற்றிக்கு செந்திலுடன் இணைத்து அவர் தந்த நகைச்சுவையும் முக்கியக் காரணமாக அமைந்தது. தொடர்ந்து ராமராஜன், பிரபு, சத்யராஜ் போன்றவர்களுடன் இணைந்து மிகப் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தார்.படத்தில் செந்திலுடன் இணைந்து அவர் கொடுத்த வெற்றி உள்ளத்தை அள்ளித்தா  வரைக்கும் தொடர்ந்தது. ஜீன்ஸ் படம் தொடங்கும்போது நாசர் நடித்த இரட்டை வேடத்தில்  கவுண்டமணி தான் நடிப்பதாக இருந்தது. என்ன காரணத்தினாலோ அதில் அவர் நடிக்கவில்லை. பிறகு மேட்டுக்குடி போன்ற படங்களில் உச்சபட்ச நகைச்சுவையுடன் நடித்தாலும் அவரது உடல் நிலை திடீரென்று சரியில்லாமல் போக பல வாய்ப்புகள் கைநழுவின. பிறகு மெலிந்த உடலுடன் சில படங்களில் நடித்தாலும் அவரது பேச்சில் வழக்கமான நகைச்சுவை உணர்வு இல்லாமல் வெற்று இரைச்சலாக இருந்ததால் ரசிகர்களைக் கவர முடியவில்லை. தவிர மாறிவிட்ட  தமிழ் சினிமாவின் போக்கில் தனி நகைச்சுவை நடிகன் என்பவனுக்கு அவசியமில்லாமல் போக கதையுடன் பெருமளவு சமபந்தப்பட்டவராக பல படங்களில் நடித்த மணிவண்ணன் சிறிதுகாலம் கோலோச்சினார். தொன்னூறுகளில் அவர் இல்லாத படங்களை எளிதாகக் கணக்கிடலாம். கவுண்டமணி மெல்ல ஒதுங்கலானார். மேலும் கவுண்டமணியின் வெற்றிக்கு மிகப் பெரிய தூணாக இருந்த நடிகர், வசனகர்த்தா ஏ. வீரப்பன் வயதாகி ஒதுங்கியதால் கவுண்டமணிக்கு என்று எழுத சரியான ஆட்களும் இல்லாமல் போயிற்று. வீரப்பன்,  கவுண்டமணிக்காக பிரத்யேகமாக நகைச்சுவை பகுதி எழுதியதுடன், ஆரம்பத்தில் எழுதி நாகேஷ், ஏ.கருணாநிதி போன்றோருடன் நடித்த காட்சிகளை கவுண்டமணிக்காக மாற்றியமைக்கவும் செய்தார். கரகாட்டக்காரனில் கவுண்டமணி வெறியுடன் தவில் வாசிக்கும்போது செந்தில் தூங்கும் காட்சி, வீரப்பன் எழுதிய 'பொண்ணு மாப்பிள்ளை' என்ற ஜெயஷங்கர்-காஞ்சனா நடித்த படத்தில் இருந்து எடுக்கப்பட்டது. படத்தில் தவில் வித்வானாக ஏ.கருணாநிதி நடிக்க  சிஷ்யனாக வரும் டைப்பிஸ்ட் கோபு தூங்கி கருணாநிதியிடம் அடிவாங்குவார். உதயகீதம் படத்தில் கவுண்டமணிக்கு மாமனாராக போலீஸ் வேடத்தில் வீரப்பன் நடித்திருந்தார். அவரால் கவுண்டமணியிடம் இருந்து வெளியேக் கொண்டு வர வேண்டிய விஷயங்கள் என்னவென்று இனங்காண முடிந்தது. பல படங்களில் நகைச்சுவைப் பகுதி ஏ.வீரப்பன் என்று தனியாக வரும். எல்லாப் படத்துக்கும் பொருந்தும்படி காட்சிகளை எடுத்துவிட்டால் பின்னர் எந்தப் படத்துடனும் இணைத்துக்கொள்ளலாம் எனும்படி காட்சிகள் வடிவமைக்கப்பட்டன. கவுண்டமணி-செந்தில்-வீரப்பன் கூட்டணி தமிழ் சினிமாவின் பெருவெற்றிப் பெற்ற கூட்டணி என்று சொல்லலாம்.

கதாநாயக நடிகர்களில் சத்யராஜுடன் கூட்டணி அமைத்த படங்கள் பெரிய அளவில் வெற்றியடைந்தன. இன்றும் அந்த இணை அதன் தனித்த நகைச்சுவைக்காகப் பேசப்படுகிறது. அவர்கள் இருவரும் நடித்த நடிகன் படம் தந்த வெற்றி குங்குமப் போட்டு கவுண்டர் வரை தொடர்ந்தது. பிரம்மா, திருமதி பழனிச்சாமி உட்பட பல படங்களை சொல்லலாம்.  மாமன் மகள் அவர்கள் நகைச்சுவைக் கூட்டணியின் உச்சபட்ச வெற்றி என்று சொல்ல வேண்டும். அதில் ஒரு காட்சியில் போலிப் பணக்காரர் சத்யராஜ் நாயகி மீனாவை கவர ஏராளமான ஆட்களுடன் ஜாக்கிங் செல்வார். அப்போது அவரது பி.ஏ வாக வரும் கவுண்டமணி திமிறிக்கொண்டிருக்கும் சில வேட்டை நாய்களின் சங்கிலிகளை பிடித்தபடி நின்று  கொண்டிருப்பார். அதீதமானப் பொய்களுடன் மீனாவிடம் சத்யராஜ் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது பொறுமையிழந்த  கவுண்டர் குரல் கொடுப்பார் " சீக்கிரம் பேசி முடிங்கடா. புது நாய் இழுக்குது"

தனது படங்களில் தனியாக 'மெசேஜ்' எதுவும் கொடுக்க வேண்டும் என்ற மெனக்கெட மாட்டார் கவுண்டமணி. என்றாலும் போகிறப் போக்கில் அவர் சொல்லிப்போகும் விஷயங்கள் சுருக்கென்று இருக்கும். வைதேகிக் காத்திருந்தாள் படத்தில் வேலை தேடி வந்து செந்தில் சொன்னார் என்பதற்காக தரையில் உள்நீச்சல் அடிக்கும்  பக்கத்துக்கு ஊர் பையனிடம் " வந்து சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டு. அப்போ தான் ஒங்களுக்கெல்லாம் அறிவு வரும்" என்பார். கீதாஞ்சலி படத்தில் குதிரைக்காரனாக வரும் கவுண்டமணி  திருமணமாகிப் பிரியும் நடிகர் நடிகைகளை கடுமையாகக் கிண்டல் செய்வார். "கல்யாணம் பண்ணிக்கிறது. அழகும் கிளாமரும் தீந்தவொடனே எங்களுக்குள்ளே 'கருத்து வேறுபாடுன்னு' பிரிஞ்சிறது" என்பார் கடுப்புடன். சூரியன் படத்தில் அவர் பேசிய "அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா" என்ற வசனம் எந்தக் கால அரசியலுக்கும் பொருந்தக் கூடியது.

பிரபலமான  படங்களை விடவும் அவ்வளவாக அறியப்படாத பல படங்களில் அந்த இணை அருமையான நகைச்சுவையை அளித்திருக்கிறது. பெயர் தெரியாத பல படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் தற்போது சமூக வலைத் தளங்களில் காணக் கிடைக்கின்றன. ஒரு படத்தில் ஷர்மிலி வீட்டுக்குள் புகுந்துக் கொள்ளும் கவுண்டமணி செந்திலின் கால்கள் மட்டும் திகிலுடன் காட்டப்படும். கூடவே ஷர்மிலியின் அப்பா அவர்கள் இருவரையும் தேடி அலைவார்.ஒரு கட்டத்தில் காலில் அடிபட்டு விட கவுண்டமணி " ஆ" என்று அலறுவார். அந்தக் குரலைக் கேட்டுவிட்ட ஷர்மிலியின் அப்பா அடுத்தநாள் செந்திலுடன் வருவார். காலில் கட்டுப்போட்டு அமர்ந்திருக்கும் கவுண்டமணியை மாட்டிவிட செந்தில் தன் கையில் இருக்கும் மூட்டையை கவுண்டர் காலில் போடுவார். புத்திசாலிக் கவுண்டர் "ஊ" என்று கத்தி விட்டு செந்திலை ஒரு பார்வைப் பார்ப்பார். அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். பொதுவாக பலத்தில் குறைந்த செந்திலை விரட்டி விரட்டி அடிக்கும் கவுண்டமணி தன்னை விட பெரிய பலசாலிகளைக் கண்டால் அடங்கி நடப்பார். டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனில் கிட்டத்தட்ட இதே போல் ஜெர்ரியை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அடித்து நொறுக்கும் டாம் தன்னை விடப் பெரிய மிருகங்களுக்கு அஞ்சி பணிந்து நடக்கும்.  டாமை கவுண்டமணியாகவும் செந்திலை ஜெர்ரியாகவும் ஒப்புமை செய்தால் சரியாகப் பொருந்தும். நடிகர்களைப் பொறுத்தவரை, உலக அளவில் இது போன்ற நகைச்சுவை இரட்டையர்களில் லாரல் ஹார்டியை தான் வேறு வழியின்றி ஒப்புமைக்காக சொல்ல முடியும். என்றாலும் அவர்கள் தான் தரம் வாய்ந்தவர்கள்.நம்மவர்கள் நகைச்சுவையில் தரம் கம்மி என்று கருதுபவர்கள் உண்டு. ஒருமுறை மதனிடம் இவர்களை ஒப்பிட சொல்லி வாசகர் ஒருவர் கேட்டபோது கவுண்டமணி செந்தில் இணை அடித்து உதைத்து தான் நகைச்சுவை வழங்கமுடியும். வசனம் பேசாமல் அவர்களால் சிரிக்க வைக்கமுடியாது என்றார். லாரல் ஹார்டி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு தான் புகழ்பெற்றனர். இருந்தாலும் நம்மவர்களைப் பாராட்ட நமக்கு மனம் வருமா என்ன?
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் பிரபலங்களின் விருப்ப நகைச்சுவை நாயகனாக அவ்வளவாக கவுண்டமணி குறிப்பிடப் படுவதில்லை. என்றாலும் மாண்டலின் சீனிவாசன் ஒருமுறை நாட்டாமை படத்தின் கடைசி காட்சியில் செந்திலின் மனைவியாக கவுண்டமணி வந்து மலேயா பாஷை பேசும் கவுண்டமணியைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்ததாகக் கூறினார். அதேபோல் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், தான் ஒரு கவுண்டமணி ரசிகன் என்று தொலைக்காட்சிப் பேட்டிகளில் குறிப்பிட்டார்.

நகைச்சுவை மட்டுமல்லாமல் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நன்றாக நடிக்கவும் செய்தார். ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் படத்தில் மகன் இறந்தவுடன் கதறியபடி கொள்ளிவைக்கும் வெட்டியானாக நடித்தபோது ஒரு பத்திரிக்கை இத்தனை நல்ல நடிகனை வெறும் நாம் வீணடிக்கிறோமோ என்று கேள்வி எழுப்பியது. உண்மைதான். ஒரு கட்டத்துக்கு மேல் நாகேஷ் நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடங்களில் நடித்ததைப் போல் நகைச்சுவை வட்டத்தைத் தாண்டி நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க எல்லா தகுதிகளும் கொண்டவர் தான் கவுண்டமணி. உருவம் சற்று மாறியிருந்தாலும் வயதான வேடங்களில் இயல்பாக அவரால் நடிக்க முடியும்.  என்றாலும் நாகேஷை திரும்பக் கொண்டுவர ஒரு கமல் இருந்தது போல் கவுண்டமணிக்கு யார் இருக்கிறார்கள்? 
-காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை

33 comments:

 1. தலைவரைப் பற்றிய மிக அருமையான பதிவு. கவுண்டமணியும், வடிவேலும் குணச்சித்திரவேடங்களிலும் பின்னுபவர்கள். அதனால் தான் இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு இருக்கும் எவனுக்குமே கவுண்டமணி தான் ஆதர்ச ஹீரோ! கவுண்டமணியின் சகாப்தத்துக்கு மீண்டும் ஒரு கிக் ஸ்டார்ட் கொடுக்க முடியுமானால் இப்போதைக்கு அது சுந்தர்.சி யால் மட்டுமே முடியும்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி டான்!
   உண்மை தான். சுந்தர் சியிடம் இயல்பான நகைச்சுவை உணர்வு உள்ளது. ஒரு வகையில் கவுண்டமணி யைத் திரும்பவும் திரையில் பார்க்க ஆசைப்படுவது சரிதானா என்ற கேள்வி இருந்தாலும், மற்ற மொழிகளில் நன்கு நடிக்கத் தெரிந்தவர்களுக்கு வயதும் வேடத் தேர்வும் பெரிய விஷயமாக இருப்பதில்லை. நம்மூரில் எவ்வளவு வயதானாலும் 'ஒரே மாதிரி' வேடத்தில் நடிக்க வேண்டுமென்றால் நீங்கள் நட்சத்திர நடிகராக இருக்க வேண்டும்.
   பாலா மாதிரியான இயக்குனர்கள் கூட கவுண்டமணியை முற்றிலும் வித்தியாசமாகக் காட்ட முடியும். கவுண்டமணி ஒத்துழைத்தால் தான் அதுவும் நடக்கும்!

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றி கோவை நேரம்...

   Delete
 3. என்றுமே என் தலைவன் கவுண்டமணி தான்... அருமையான கட்டுரை சார், ஒவ்வொரு வரியும் ரசிச்சு ரசிச்சு படிச்சேன்...........ஒரு சில சரத்குமார் படங்கள் கூட அவரோட காமெடியின் உச்ச கட்டமா அமஞ்சுது... மகா பிரபு ஒரு உதாரணம்.. அதே மாதிரி மன்னன் படத்துல போற போக்குல, ரஜினிய "இந்த கைய தூக்குற பழக்கத்த நீ விட மாட்டியா பா" ன்னு நக்கல் அடிப்பாரு.. அந்த தைரியம் இன்னைக்கு உள்ள காமெடி நடிகங்களால நினச்சு கூட பாக்க முடியாது....

  Goundamani, is a greatest iconoclast, this indian cinema had ever seen !!! Bow to him !!

  ReplyDelete
 4. அருமையான நகைச்சுவை நடிகர், கவுண்டமணியை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது, ஒருபடத்தில் உங்க அப்பன் என்ன பண்ணுரான்? என கேட்பார், அதற்கு பன்னி மேய்க்கிறார் என எதிரில் நிற்பவர் சொல்லுவார், அதற்கு கவுண்டர், அப்புறம் உங்க ரேஞ்சுக்கு கனரா பேங்குல மேனேஜர் வேலையா கிடைக்கும்னு டைமிங்கா சொல்லுவார் , எனக்கு மிகவும் பிடித்த காமெடி காட்சி அது, இவ்வளவு விலாவரியாக கவுண்டரை பற்றி இதற்கு முன்பு எந்தவொரு கட்டுரையும் படித்ததில்லை, அருமை நண்பரே

  ReplyDelete
 5. விவேக்கை போல அதிமேதாவித்தனமான நகைச்சுவயில்லாமல், வடிவேலை போல மிதி வாங்கி சிரிக்க வைக்காமல் , நமது பக்கத்துக்கு வீட்டு சித்தப்பா தோற்றத்தில் ஆளுமையின் உச்சகட்டமாக மிளிரும் அவரின் காமெடி ( உதாரணதிற்கு... ரஜினியிடமே '" ஏப்பா இந்த கைய தூக்குறத நீ விடமாட்டியா ) தனித்துவமானது . சிறப்பாக தொகுத்து கூறி இருந்தீர்கள் . அருமை

  ReplyDelete
 6. கவுண்டரைப் பற்றி ஒரு அற்புதமான பதிவு. வீராப்போடும்,அதிகாரத்தோடும் பார்த்து பழகிய கவுண்டரை குணச்சித்திர வேடங்களில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அந்த அதிகார தொனிதான் அவருடைய ஸ்பெசாலிட்டியே.

  ReplyDelete
 7. மன்மதன் படத்திலும் அவர் மீண்டும் எழ முயற்சிததார் ஆனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப் பட்டன. "என்டயும் சைக்கிள் இல்லாதப்ப வா 1 ரூபாய்க்கு தரேன்"

  ReplyDelete

 8. நிறைய மெசேஜ் சொல்லுவார்...வீட்டுல சோறு இல்ல கிரிக்கெட் கமண்டரி கேட்கறது ரொம்ப அவசிம் என ஓ.நரசிம்மனை போட்டு சாத்துவார்.... ஓமக்குச்சி தலை கவுண்டரால்தான் வழக்கையானது என்றால் அது மிகையல்ல:)

  ஊனமுற்றவர்களை கிண்டல் செய்வது மட்டுமே அவரிடம் ஒரு குறையாக இருந்தது.

  ReplyDelete
 9. அருமையான பதிவு .ஜெயராமுடன் அவர் இணைந்து நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் காமெடி!

  ReplyDelete
 10. நீங்க எங்களை விட பெரிய ரசிகராக இருப்பீங்க போல இருக்கு ...............
  http://goundamanifans.blogspot.in/

  ReplyDelete
 11. "ஆவாரம்பூ" ஆசாரி கேரக்டரை ("தகரா" நெடுமுடிவேணுவை விட) கவுண்டமணி சிறப்பாகச் செய்து இருக்கிறார் என்பது என் கருத்து.

  ReplyDelete
 12. அருமையான பதிவு. பெரிய நடிகர்கள் யாரும் கூட வைத்துக்கொள்ளாமல் இல்லை, அவருடைய சம்பளமே அப்படியாப்பட்ட நிலைக்குத் தள்ளியது.

  ReplyDelete
 13. கவுண்டமணி தனது கொள்கைகளால் என்றுமே ஒரு பெரியாரிஸ்ட் ஆகத்தான் திரைப்படங்களில் மிளிர்ந்திருக்கிறார்,அவரது நகைச்சுவைகளில் மெசேஜ் என்று எதுவும் கிடையாது என்று பொதுவில் சொல்லிவிட முடியாது.பெருவாரியான அவரது நகைச்சுவைக் காட்சிகளில் பின்புலமாக பெரியாரியல் கருத்துக்கள்தான் இருக்கும்.கவுண்டமணி இல்லாத தமிழ் சினிமாவின் வெற்றிடத்தை அவரன்றி வேறு யாரும் நிரப்ப இயலாது.

  ReplyDelete
 14. நல்ல அலசல்...

  ரசித்துப் படித்தேன்...

  படத்தில் மட்டுமல்ல... நேரிலும் அவரின் பேச்சு அப்படித்தான் இருக்கும்... (பேசி உள்ளேன்...)

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...  ReplyDelete
 15. நிறைய இடங்களில் என்ன கருத்துக்கு முரணாக இருக்கிறது இந்த பதிவு. சொல்லப்போனால் என்பது சதவிகித கருத்துக்கள் சுத்த உளறல்/பேத்தல். எனினும் கவுண்டமணியை பற்றி பதிவு செய்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 16. A real and wonderful article about Indian cinema's comedian histories. Well you were really bold to speak about the hero's who are really scared to work with Gounder because of their image damage. Well done and thank you so much for remembering Gounder once again for tamil people.

  ReplyDelete
 17. அட்ரஸ்..அட்ரஸ்..!! அசத்தலான பதிவு நண்பரே..நீங்க சொன்ன பல விஷயங்கள் புதுசா இருந்துது..குறிப்பா வசனம் எழுதுபவர் வீரப்பன். கண்டிப்பா அவரோட பங்கு கவுண்டரோட வெற்றிக்கு முக்கிய காரனம இருந்திருக்கும்னு நெனைக்கறேன். நீங்க சொன்னது போலவே, ஹீரோக்கள திரையில "டா" போட்டு ரொம்ப சாதாரணமா பேசக்கூடிய ஒரே நகைச்சுவை நடிகர் கவுண்டர் தான்.
  சிங்காரவேலன்..கௌண்டஸ் - "சார் உங்களுக்கு கோயம்புத்தூர் காளி அன்ன கவுண்டர் தெரியுமா??"
  கமல் "டே யார் த அது??"
  "டே சும்மா இருடா..உனக்கு தெரியாது, அவர் தாண்டா உங்க அப்பா.."

  ReplyDelete
 18. "அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா

  ReplyDelete
 19. பெட்ட்ரமக்ஸ் லைட்டே தான் வேணுமா ? ஏன்டா நான் என்ன டாக்டர். ஆல் இன் ஆல் அழகு இராஜா எம் பீ பீ எஸ் ன்னு போர்டு போட்டு இருக்கேன் ?

  ReplyDelete
 20. நிறைய சொல்லாமல் விடப்பட்டுள்ளது...அது சரி தலைவரை பற்றி பல வால்யூம் புத்தகம் எழுதுவதுதான் முறை.
  ஒரு சில சேம்பில்
  கோயமுத்தூர் மாப்ளே படத்தில் செய்தி தாளை புரட்டி பார்த்து "எந்த நாய் எவன் கூட உட்காந்திருக்குன்னே தெரியல கேப்மாரிதனதுக்கு ஒரு அளவே இல்லையா" என அரசியல் நிலவரத்தை நச்சென்று சொல்லி இருப்பார்.
  தொண்ணூறுகள் என்பது இந்திய அரசியலில் மிக முக்கிய கட்டம் அந்த நேரத்தில் அரசியல் நையாண்டி செய்ய செம தில்லு வேணும் இப்போது உள்ள சந்தானம போன்றோர் டாஸ்மாக்கை தாண்ட தைரியம் இல்லாதவர்கள்..தலைவர் தலைவர்தான்

  ReplyDelete
 21. மிக சரியான தலைப்பு கோபக்கார கோமாளி! கவுண்டமணியிடம் இருந்த power அளவிட முடியாதது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸார்..
   உங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது..
   கவுண்டமணி பற்றி தனி புத்தகமே போடலாம்..அவ்வளவு திறமைசாலி அவர்..

   Delete
 22. கவுண்டமணி நல்ல குணச்சித்திர நடிகரும் கூட என்பதை பல படங்களில் உணர்த்தியிருப்பார்.

  ReplyDelete
 23. wonderful article. great Chandra
  suresh subramaniam

  ReplyDelete
 24. கவுண்டரை குறித்து இவ்வளவு நுணுக்கமான கட்டுரையை வாசித்ததில்லை.அட்டகாசமான இடுகை.இந்த கட்டுரையை முன்பே படித்த நினைவும் இருக்கிறது.

  தொடருங்கள் நண்பரே.

  ReplyDelete
 25. 'ராமசாமிக்கு குடுத்த பணம்...ஊஊஊஊ.., " ஏங்க கொட புடிச்சிட்டு போற பெரியவரே', 'சத்திய சோதனை' போன்ற காட்சிகளை மறக்க முடியுமா? கவுண்டர் காமெடிய பார்த்தால்.. அந்த எகத்தாளத்தில் எல்லா கஷ்டத்தையும் ஈசியா எடுத்துக்க முடியுது.நல்ல பதிவு. இன்னும் கவுண்டரபத்தி டீப்பா எழுதுங்க பாஸ்.

  ReplyDelete
 26. சரியான, முறையான அலசல். பாத்துட்டான்...பாத்துட்டான்..., அவன் அங்கேயே கூச்சண்டி..,எல்லோரும் சிரிச்சா நாம சிரிக்கிறதில்லையா எல்லோரும் கைதட்டினா நாம கைதட்றதில்லையா எல்லோரும் வெளிய வந்தா நாமளும் வர்ரதில்லையா, போன்ற வசனங்களில் கவுண்டரை மிஞ்ச ஆளில்லை. நல்ல பதிவு. நன்றிகள்.

  ReplyDelete