Sunday, October 31, 2010

இளையராஜா:வாழ்வோடு தொடரும் பந்தம்


ஜென்டில்மேன் வந்த புதிது. அப்போது டெல்லியில் இருந்து வந்திருந்த என் அண்ணனை பார்க்க அவரது டெல்லி தமிழ் நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ராஜாவின் இசையில் ஒரு பிடிப்பு இருந்தாலும் மைக்கேல் ஜாக்சன் பித்து பிடித்து திரிந்து கொண்டிருந்த நேரம். கிட்டத்தட்ட மைக்கேல் தமிழில் பாடுவது போன்ற உச்சரிப்புடன் சுரேஷ் பீட்டர்ஸ் பாடும் 'சிக்கு புக்கு ரயிலின்' ரசிகன் அப்போது நான். அதே போல் 'வீர பாண்டி கோட்டையிலே' பாடலின் கம்பீர இசையும் என்னை ரஹ்மான் பக்கம் இழுத்துக்கொண்டிருந்தது. அப்பொழுது வெளியாகி இருந்த ' உழைப்பாளி' A சைடும் 'திருடா..திருடா' B சைடும் இருந்த கேசட்டில் A சைடு பக்கமே போகாமல் ஏ.ஆர்.ரஹ்மானை கேட்டு மகிழ்ந்து கொண்டிருப்பேன். என் அண்ணனின் நண்பர் ரவி என்பவர் 'இந்த கேசட்டை கேட்டிருக்கியா? இளையராஜா நாலைந்து வருடங்களுக்கு முன் போட்ட ஆல்பம்..' என்று கொடுத்த கேசட்டில் ராஜா தன முகவாயை கையால் தாங்கியபடி இருக்கும் படம். 'How to name it!'. கர்நாடக இசை நன்கு அறிந்த அவர் 'இதை கேள்..அப்புறம் பேசலாம்' என்றார். அன்றைய இரவு இசையின் ஒரு மாபெரும் அதிசயத்தை உணர்ந்தேன். ஒற்றை வயலின் உயிரை உருக்கும் இசையில் தொடங்க , காத்திருந்தது போல் இன்னும் பல வயலின்கள் சேர்ந்து இசைக்க அந்த இரவில் ஒலித்த இசை இன்றும் என் பல இரவுகளில் ஒரு பெரும் துணையாய். ரவி அண்ணனிடம் ராஜா பற்றிய பல தகவல்கள் இருந்தன. கேட்க கேட்க அதிசயமாய் இருக்கும். பிரபலமாகாத பல பாடல்களை எனக்கு அறிமுகப்படுத்தினார் அவர்.

உண்மையை சொன்னால் ரஹ்மான் வந்த பிறகு தான் தீவிர ராஜா ரசிகனானேன். பாலச்சந்தருக்கும் மணிரத்னத்துக்கும் நன்றி. ஒரு மாபெரும் கலைஞனை காலமும் அவரின் 'நண்பர்களும்' சேர்ந்து வீழ்த்த ஆரம்பித்த நேரம். ராஜாவின் இசையில் வெளிவந்த பல பாடல்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தவறிய காலம், என்னை போன்ற எல்லோரையும் போலவே அப்போது தான் அவரது இசையை நேசிக்க ஆரம்பித்தேன். அவரது பழைய இசையை, திரும்ப கிடைக்க முடியாத பொக்கிஷ இசையை.

தொண்ணூறுகள் ரஹ்மானின் பொற்காலம் என்றாலும், ராஜாவின் (வணிகரீதியான) சரிவுக்கு மிக முக்கிய காரணம், 'ஏழைகளின் இளையராஜா' தேவா தான் என்பேன். ராஜாவின் நகலாகவே உள்ளே நுழைந்த தேவா, பின்னர் ராஜாவுக்கு ஒரு எளிய மாற்றாகவே மாறினார். ராஜாவின் ரசிகர்கள் தான் என்றாலும் நண்பர்கள் என் இந்த கருத்தை மறுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். என்ன காரணம் சொன்னாலும் 'ரோஜாவில்' ரஹ்மான் வந்ததில் இருந்து ராஜா கொஞ்சம் கொஞ்சமாக தன பிடியை விட துவங்கினார் என்பது உண்மையே. உண்மையில் 'சின்ன சின்ன ஆசை' பாடலை கேட்கும்போது அது இளையராஜாவின் இசை என்றே நினைத்தேன். மணிரத்னத்தின் 'வித்தியாச' படங்களுக்கு ராஜா புதுவித இசை தருவது வழக்கம் என்பதால் எனக்கு அப்படி தான் தோன்றியது. பிறகு தான் இருபத்தி நான்கே வயதான ஒரு இளைஞன் தந்த இசை என்று தெரிந்த போது மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. 'புது வெள்ளைமழை' இன்றும் என் பெரு விருப்பப்பாடல். பிறகு ஓரிரு வருடங்கள் ராஜா முனைப்புடன் இயங்கினாலும் பிறகு அவரது இசையில் ஒரு தொய்வு ஏற்பட துவங்கியது. தேவர் மகன் போன்ற படங்களில் அவரது இசையின் கம்பீரம் மற்ற படங்களில் இல்லாதது ஒரு பெரிய எதிர்பாராத (ஏ)மாற்றம். ஓரிரு வருடங்களுக்கு முன் வெற்றியடைந்த சின்ன தம்பி, சின்ன கவுண்டர் போன்ற படங்களின் பாதிப்பிலேயே பல கிராமியம் சார்ந்த படங்கள் வெளியாகின அப்போது . இசைக்கு எந்த முகாந்திரமும் இல்லாத வறண்ட கற்பனை படங்கள். ஒரு சில நகரம் சார்ந்த கதைகள் வந்தாலும் பெரும்பாலானவை இவ்வகை படங்களே. நான் என் நெருங்கிய நண்பர்களிடம் 'பி. வாசு- பிரபு' போன்ற தரமற்ற கூட்டணிக்கு இசை அமைத்தே ராஜா தன் இனிய இசையை குறைத்துக்கொண்டார்' என்று குமுறுவதுண்டு. அவ்வளவு வறட்சியான காலம் அது.

காலம் தனது மாற்றத்துக்கு தகுந்தாற்போல் புதியவர்களை அறிமுகம் செய்யும் எனது போல் சாட்டிலைட் தொலைக்காட்சிகளும் கணினி வசதிகளும் அறிமுகமாகி தொடர்ந்து வளர்ந்து வந்த நேரத்தில் வந்த ரஹ்மான் வரவு ஒரு புதிய திறப்பாகவே இருந்தது. (ஆனால் அந்த வழியில் உள்புகுந்தவை தரமுடைய இசைகோலங்களா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான்!). ராஜாவின் கூட்டணியில் இருந்து முன்பே வெளிவந்து விட்ட பாரதிராஜா முதல் தன்னை 'இளையராஜாவின் வெறியை' என்று சொல்லிக்கொள்ளும் சுஹாசினி வரை பலர் ரஹ்மானுடன் கூட்டணி அமைக்க ராஜா திடீரென தனியானார். கமல் ரஜினி மட்டும் அவருடன் மிஞ்சி இருந்தார்கள். கமலுடன் மகாநதி போன்ற படங்களில் பாடல்களை விட பின்னணி இசைக்கே முக்கியத்துவம் தர ஆரம்பித்தார் ராஜா. ரஜினி படங்களுக்கு அவர் தந்த இசை ஈடுபாட்டோடு செய்தவை போல் இல்லை. அவரது கவனம் அப்போது சிம்பனியில் இருந்தது ஒரு காரணம் எனலாம். துரதிருஷ்ட வசமாக அந்த சிம்பனியும் வராததில் இன்று வரை பலருக்கு வருத்தம். இது தொடர்பான பல சர்ச்சைகள் இன்றும் இணையத்தில் நடக்கின்றன.

மெல்ல மெல்ல நம் கண் முன்னே ராஜா பாடல்கள் கவனம் இழந்தன. பாலுமகேந்திரா-கமல் காம்பினேஷன் என்று எதிர்பார்த்த 'சதிலீலாவதி' படத்திலும் ஒரே ஒரு பாடல் கேட்கும்படி இருந்தது. காதலனுக்கு பிறகு பிரபுதேவா நடித்த படம் என்பதாலும், இசை தளபதி க்கு பிறகு பம்பாயில் பதிவு செய்யப்பட்டது என்பதாலும் 'ராசையா' பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் அந்த படத்தில் இருந்து தான் ராஜா தன் வழக்கமான பாணியை மாற்றி இசை அமைக்க ஆரம்பித்தார். 'மஸ்தானா' பாடல் தான் சன் டிவியில் டாப் டென்னில் நம்பர் ஒன்னாக வந்த ராஜாவின் முதல் பாடல் என்றாலும், ராஜா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது அந்த படம். தனது நடன அசைவுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இளையராஜாவின் இசை அமையவில்லை என்று பிரபு தேவா என்று 'வருந்தினார்'.ரஹ்மானின் மே மாதம் ஆடியோ வெளியீட்டுக்கு வந்த தமிழ் சினிமா பிரபலங்கள் 'யாருடைய' மிரட்டலுக்கும் பயப்படாமல் தொடர்ந்து இசை அமைக்கும்படி ரஹ்மானுக்கு 'உற்சாகம் ஊட்டினார்கள்'.

அந்த சூழலில் ரஹ்மான் தவிர வித்யாசாகர், தேவா, மரகதமணி போன்றோர் பிரகாசிக்க துவங்கினர். ராஜாவுக்கு பிறகு கதைக்களனை உணர்ந்து இசை அமைப்பதில் வித்யாசாகர் உண்மையில் சிறந்து விளங்குகிறார். இவை அனைத்துமே அந்த கால கட்டத்தில் நிகழ்ந்தவற்றை நேரடியாகவும் நண்பர்கள் மூலமாகவும் பத்திரிக்கைகள் வாயிலாகவும் நான் அறிந்துகொண்ட விஷயங்கள்.

அப்போது இலங்கை வானொலி நிலையத்தில் வைரமுத்து பல இசை பிரபலங்களையும் சினிமா ஜாம்பவான்களையும் நேர்காணல் செய்வார். அவர் குரலில் ஒரு சந்தோசம் இருக்கும். ராஜாவுடன் இருந்த பிணக்கால் சில காலம் வனவாசம் இருந்து விட்டு ரஹ்மான் வரவால் புத்துயிர் பெற்ற கவிஞருக்கு இயல்பாகவே அது மகிழ்ச்சி தந்திருக்கும். 'பாடலுக்கு முக்கியம் இசையா பாடல் வரிகளா?' என்ற கேள்வியை அவர் எல்லோரிடமும் கேட்பார்.ராஜாவுக்கும் அவருக்குமான பிணக்கில் இது தான் மையமாக இருந்தது என்று சொல்வார்கள். அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீது ராஜாவை பற்றி பேசும்போதெல்லாம் எதோ ஊழல் செய்த மந்திரியை பற்றி நேர்மையான பத்திரிக்கை ஆசிரியர் பேசும் தொனியிலேயே பேசுவார். கேட்க எரிச்சலாக இருக்கும். ராஜாவின் பாடல்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன என்றே சொல்லலாம். நிறைய பேர் கவனித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ரஹ்மான் வருடத்துக்கு ஐந்து படம் என்றால், தேவா வாரத்துக்கு ஒன்று என்று productivity யின் உச்சத்தில் இருந்த சமயம். ராஜாவின் புது பாடல்கள் சொல்லிக்கொள்ளும் விதமாக இருக்காது என்பதால் நான் அவரது ஆரம்ப கால பாடல்களில் தஞ்சம் அடைந்தேன். புதுக்கோட்டை 'பாஸ்' ரெக்கார்டிங் கடைக்கு சென்று ராஜாவின் பழைய பாடல்களை பதிவு செய்து வந்து வீட்டில் கேட்பேன். உல்லாசப்பறவைகளில் ஜானகி பாடும் 'நான் உந்தன் தாயாக வேண்டும்' பாடலில் ராஜா தந்திருக்கும் முகப்பு இசை மற்றும் நிரவல் இசை உள்ளார்ந்த விஷயங்களை நுணுக்கமாக எழுதும் தேர்ந்த எழுத்தாளனின் எழுத்தை ஒத்தது. ராஜாவின் இசை ஒரு போதை மருந்தாகியது, மியூசிக்கல்ஸ் வைத்திருந்த என் நண்பர்கள் கடையிலேயே பழியாய் கிடப்பேன். எனக்காக ராஜாவின் பழைய ரெக்கார்டுகளை ஒலிக்க விடுவார்கள். ஆர்வத்துடன் ராஜா பற்றி பேசிக்கொண்டிருப்போம். 'எனக்காக காத்திரு', 'ஈர விழி காவியங்கள்' போன்ற படத்தின் பாடல்களை நான் கேட்டது அப்படி தான். ஒரு நண்பன் கடையில் 'ராஜ பார்வையின்' தீம் இசையை ஒலிக்க சொல்லி கேட்டு விட்டு ஏகாந்தமாய் அமர்ந்திருந்த என்னை கடையில் வேலை பார்த்த பெண் விசித்திரமாய் பார்த்ததை இன்னும் மறக்க முடியவில்லை. கால யந்திரத்தில் நான் பின்னோக்கி போய்க்கொண்டிருக்கிறேன் என்று நினைத்தாளோ என்னவோ. !

மேலும்..

17 comments:

  1. அப்பாவைப் பற்றியும் ராஜாவைப் பற்றியும் பேசுவும் நினைக்கவும் ஆயிரம் விசயங்கள் உண்டு..ஆம்.. நாம் வாழ்வோடு தொடர்புடைய பந்தங்கள்..

    ReplyDelete
  2. என்னவே ஒரே ராசாப்புராணமா இருக்கு..... வயசாயிருச்சுல்ல :)

    ReplyDelete
  3. @அ.வெற்றிவேல்

    உண்மை தான் வெற்றிவேல் சார்..ராஜாவின் இசை நம்முள் அப்படித்தான் விரவியிருக்கிறது. உறவுகளில் வருத்தங்கள் கூட இருக்கும், இதன் தொடர்ச்சி ராஜா மீதான என் வருத்தம் பற்றி இருக்கும்.

    @மரா
    பழைய நெனப்புடா பேராண்டி... :)

    ReplyDelete
  4. இப்பவும் சொல்றேன் டீகடையில் நடக்கும் இசை ஆராய்ச்சியை இன்னும் நீ எழுதவே இல்லை :)

    ReplyDelete
  5. என்ன அப்துல்லா ! அதை எழுதாமல் இருப்பேனா? அடுத்த பகுதியில் அதை எழுதி இருக்கிறேன் :)

    ReplyDelete
  6. இளையராஜா பற்றிய உங்கள் இந்த பகிர்வு நன்றாக உள்ளது நண்பரே. நல்ல ஆராய்ச்சி. தொடருங்கள்.

    ReplyDelete
  7. அன்புள்ள நண்பரே,
    தாங்கள் இளையராஜாவின் ரசிகர்தானா என்று மீண்டும் ஒருமுறை சந்தேகிக்க வைத்துவிட்டீர்கள். ஷாஜி போன்ற ஃபிராடுகள் மற்றும் சாரு போன்ற கோமாளிகள் எழுதும் இசைகுறித்த விமரிசனங்களையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது உங்களின் இந்த உசத்தியான பதிவு. தொடரட்டும் தங்களின் மேலான இசைப்பணி.

    அன்புடன்
    ஹெச்.சி.ஸ்டீஃபன்
    களியக்காவிளை

    ReplyDelete
  8. சாரு,ஷாஜி.. ராஜா மீது வைத்த அர்த்தமற்ற குற்றசாட்டுகளை நான் கடுமையாக எதிர்த்து எழுதியதை படிக்கவில்லையா?
    ராஜாவை தரம் தாழ்ந்து எங்காவது விமர்சிதிருக்கிறேனா? அவரது ரசிகனாக நான் எதிர்கொள்ளும் பெறுதல்களை, இழப்புகளை பதிவு செய்யக்கூட எனக்கு உரிமை இல்லையா? என்ன ஸ்டீபன் இது? என் முந்தைய பதிவுகளை தயவு செய்து படியுங்கள்.

    ReplyDelete
  9. நீண்ட நாட்களாக என் மனதில் ஓடிகொண்டிருக்கும் விசயம்தான் இது. இளையராஜாவின் இசை என்பது ஆன்மாவை சிலிர்க்க வைப்பது. ஆனால், அந்த கலைஞனுக்கு, கோபம், பிடிவாதம் போன்றவை சிறிது அதிகமாக இருந்துவிட்டது. அதுவே, கூட இருப்பவர்களின் சுயமரியாதையை பாதிப்பதாக அவர்கள் நினைத்ததால், அவர் சிறிது சிறிதாக ஓரங்கட்டப்பட்டார். அந்தகாலகட்டத்தில், தங்கள் கூறியுள்ளது போல் அவரது இசையிலும் ஈர்ப்பு இல்லை. நீங்கள் கூறியுள்ள அனைத்து கருத்துக்களும் சரிதான். வாசு, அவரை ஒரே மாதிரியான இசைக்குள் இழுத்து சென்று விட்டார். இன்றைக்கும், ராஜப்பார்வையில் வரும் "அழகோ அழகு" பாடல் கேட்க அத்தனை ஆனந்தமாக இருக்கும். சமீபத்திய "எந்திரன்" படப் பாடல்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் கொடுக்கும் பில்ட் up சகிக்கவில்லை. ௨ மணி நேரம் தான் அவர் தூங்கினாராம். இதையெல்லாம் தாண்டி, அந்தப் பாடல்கள் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை . எங்கள் இளையராஜா எந்த ஒரு கம்போசின்கையும் அனாயாசமாக செய்தார் என்று கேள்வி.

    என்னை பொறுத்தவரை, இளையராஜா ஒரு சகாப்தம். அவர் ஒரு தனித்தன்மை வாய்ந்தவர். தமிழ் திரைப்பட உலகின் பொற்காலம் என்பது அவருடைய காலம்தான். அவருன் யாரையும் அருகில் வைத்து வாதிப்பதே அந்த மகா கலைஞனை அவமானப் படுத்துவதாக உணர்கிறேன். என்னுடைய கருத்துக்களுக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. ரகுமானின் வருகைக்குப் பின்புதான் ராஜாவின் இசை பிடிக்க ஆரம்பித்து விட்டது என்பது சுவாரசியமான அவதானிப்பு. ஆனால் எனக்கு இது நேர்மாறாக நிகழ்ந்தது. நான் அப்போதுதான் ராஜாவிடமிருந்து நகரத் துவங்கினேன். ஆனால் இப்போது மீண்டும் ராஜாவிடம் திரும்பத் துவங்கியிருக்கிறேன். :-)

    ராஜாவின் எளிய மாற்றாக தேவா விளங்கினார் என்பது மிகையான ஸ்டேட்மெண்டில்லையோ? :-)

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  11. //என் முந்தைய பதிவுகளை தயவு செய்து படியுங்கள்//

    இந்த ஒருபதச்சோறே போதும் நண்பரே. மிக்க நன்றி.

    அன்புடன்
    ஹெச்.சி.ஸ்டீஃபன்
    களியக்காவிளை

    ReplyDelete
  12. Hello Chandru,

    Good analysis. Also, share the experience we have in UG times.

    Regards,
    Ramesh V

    ReplyDelete
  13. நல்லதொரு பதிவு, அழியாத கோலங்கள்

    ReplyDelete
  14. 1993 இல் ராஜாவின் இசையில் வெளிவந்த படங்கள் 50 என்று நினைக்கிறேன்.மேலும், 1994 ஆம் ஆண்டு வெளிவந்த 'வீரா' படத்தின் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    இசை இன்னொரு புது அவதாரம் எடுத்து தென்றலாக நம்மைத் தீண்டியது 1995 இல்.. மோகமுள்ளாக நம்மைத் தைத்தது 1995 இல் .காதலர்களை மட்டுமன்றி நம் எல்லோரையும் மரியாதையுடன் தாலாட்டி பட்டாம்பூச்சி போல நம்மை பறக்க வைத்த படம் வெளிவந்தது 1997 இல். 'குருவே சரணம் ' என்று மலையாளிகளை வணங்க வைத்த வருடம் 1997. 'ஹே ராம்' என்று நாத்திகர்களையும் புலம்ப வைத்து அவர் பார்த்த பார்வையையும், தொடங்கி வைத்த இசையினையும் வணங்க வைத்தது 1999 இல்..

    இன்னும் அந்த சமயத்தில் அவரது இசையினில் வெளிவந்து நம் இதயங்களை கொள்ளை கொண்ட பல பாடல்களை இங்கு வரிசைப்படுத்தி சொல்ல முடியும்.அதற்கு முன் இருந்ததுபோல் அவ்வளவு படங்களை செய்யாததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.குறிப்பிட்ட ஒருவரின் வருகைக்கும், அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.அம்மாதிரி இருப்பதாக ஒரு மாயையை அந்த இசையமைப்பாளரின் ரசிகர்கள் வேண்டுமானால் உருவாக்கலாம்.ராஜாவின் ரசிகர் என்று கூறிக்கொள்ளும் நீங்களுமா?

    ஆம்..இளையராஜாவின் பாணி கண்டிப்பாக மாறியிருக்கிறது.. 1976 முதல் அவரது இசையினைக் கேட்கும் என்னைப் போன்ற பலருக்கும் அவரது இசைப்பாணி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி மாறிக்கொண்டே வந்திருக்கிறது என்பது நன்றாகவே தெரிந்த உண்மை.ஆனால், மாறியது பாணி மட்டும்தான்.ஆத்மாவை நேராகச் சென்றடையும் அந்த இனிமை மற்றும் தனித்துவம் அப்படியே தான் இருக்கிறது. அது அன்று வெளியான 'நான் பேச வந்தேன்'(பாலூட்டி வளர்த்த கிளி) ஆகட்டும்.இன்று வெளியான 'பூவைக் கேளு'(அழகர்சாமியின் குதிரை) ஆகட்டும்.

    நன்றி!

    ReplyDelete
  15. கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக திரைஇசை என்ற பெயரில் நம் செவிகளில் அறையும் இரைச்சலிலிருந்து தப்பிக்க ஒரே புகலிடம் அந்நாளைய எம்.எஸ்.வியும், ராஜாவும் தான்.

    ReplyDelete