டெல்லியில் உள்ள சாஹித்ய அகாடமி கட்டிடத்துக்கு வெளியே, சாலையோரத்தில் உயரமான பீடத்தின்மீது நின்றபடி விரையும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அலெக்ஸாண்டர் புஷ்கின். கைகளைப் பின்னால் கட்டியபடி முதுகை சற்று முன்னோக்கி சாய்த்தது போன்ற நிலையில் அந்த ரஷ்யக் கவிஞனின் சிலையைக் கடந்துசெல்லும் டெல்லிவாசிகளில் எத்தனைபேர் அவரை அறிந்திருப்பார்கள். ‘கேப்டன் மகளை’ அவர்கள் தரிசித்திருப்பார்களா என்று எண்ணம் அவ்வப்போது வந்துபோகும்.
கருப்பு நிறத்திலான அந்த சிலையை முதலில் பார்த்தபோது மனதுக்கு நெருக்கமான ஒரு ஆளுமையை முதன்முதலாக நேரில் பார்த்ததுபோன்ற பரவசம் ஏற்படுவது நிஜம். சாகித்ய அகாடமி அருகே அமைக்கப்பட்டுள்ள இலக்கியவாதியின் சிலை புஷ்கினுடையது மட்டும் தான். 1988-ல் ஒன்று பட்ட இந்தியாவுக்கு வந்திருந்த சோவியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இந்த சிலையைத் திறந்துவைப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் வராமல் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் எடுவர்ட் ஷெவர்ட்னாட்ஸே அந்த சிலையைத் திறந்துவைத்தார் என்று ஒரு குறிப்பு சொல்கிறது. யார் திறந்துவைத்தால் என்ன? ரஷ்ய இலக்கிய பிதாமகரின் உருவச்சிலை இந்திய மண்ணில் நிலைகொண்டிருப்பதே பெருமை தானே! அந்த அற்புத எழுத்தாளனின் நினைவு நாள் இன்று.
அடிப்படையில் கவிஞரான புஷ்கின் ரஷ்ய நவீன இலக்கியத்தின் முன்னோடியாகக் கொண்டாடப்படுபவர். ரொமான்டிசிஸ காலத்திய இலக்கியப் படைப்பாளி. நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த ‘கேப்டன் மகள்’ நாவல் புஷ்கினின் மகத்தானப் படைப்புகளில் ஒன்று. அவர் எழுதிய இறுதி நாவலும் அது தான். வெள்ளையான வழவழப்பான தடித்த அட்டையில் பதிப்பிக்கப்பட்ட அந்தப் புத்தகத்தில் 18-ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் வெடித்த விவசாயப் புரட்சியின் பின்னணியில் ஒரு அற்புதமான காதல் கதை ஒளிந்திருந்தது. பிறப்பதற்கு முன்னரே தனது தந்தையால் ராணுவத்துக்கு கிட்டத்தட்ட ‘நேர்ந்துவிடப்பட்ட’ இளைஞன் பியோத்தர் ஆந்திரேயிச் தான் கதையின் நாயகன். செல்வச்செழிப்பு மிக்கக் குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளரும் அவன் தன் தந்தையின் கண்டிப்பான உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து ஓரென்பெர்க்குக்கு அருகில் உள்ள பெலகோர்ஸ்க் கோட்டையின் படைப்பிரிவில் சேர்வதற்காக, விசுவாசமிக்க முதிய வேலைக்காரனுடன் தனது பயணத்தைத் தொடங்குவான். செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் ராணுவ உயரதிகாரியாக உல்லாசமான வாழ்க்கை வாழலாம் என்று கற்பனையில் மிதந்தவனை, ஒரு அரதப்பழசான கோட்டைக்கு அவனது தந்தை அனுப்பிவிடுவார். அந்தக் கோட்டையில் அவனுக்கு அழகான காதலி கிடைப்பாள். கேப்டனின் மகள்!
பனிபடர்ந்த நிலத்தில் பியோத்தர் தொடங்கும் பயணத்தில் விவசாயப் புரட்சியின் தலைவன் புகச்சோவ், கேப்டனின் மகளும் நாயகியுமான மாஷா, வஞ்சக மனம் படைத்த ஷ்வாப்ரின், கேப்டனின் மனைவி என்ற பெருமையுடன் படைப்பிரிவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்மணி என்று பலரும் நம்முடன் பயணிப்பார்கள். பனிப்புயலில் சிக்கிக்கொள்ளும் பியோத்தரின் ஸ்லெட்ஜ் வண்டியை வழிநடத்தி ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லும் நாடோடி தான் பின்னாட்களில் விவசாயப் புரட்சிக்குத் தலைமையேற்று ரஷ்யாவின் பல இடங்களைக் கைப்பற்றி ஜார் மன்னனுக்கு பெரும் சவாலாக இருந்த புகச்சோவ். பத்திரமான இடத்தைக் காட்டிய அந்த நாடோடி யாரென்று தெரியாமல் விலையுயர்ந்த ஒரு மேலங்கியை அவனுக்குப் பரிசளிப்பான பியோத்தர். அந்த நன்றிக்கடனை மறக்காத புகச்சோவ், தான் கைப்பற்றும் பெலகோர் ஸ்க் கோட்டை படைப்பிரிவில் இருக்கும் பியோத்தரை அடையாளம் கண்டு அவனைக் கொல்லாமல் விடுவிப்பதுடன், சதிகார ஷ்வாப்ரினிடமிருந்து பியோத்தரின் காதலி மாஷாவையும் மீட்டுக் கொடுப்பான். ஒரு பெரும் புரட்சிக்கே தலைவனான புகச்சோவ், பியோத்தரிடம் இத்தனை கருணை காட்ட அந்த மேலங்கி தான் காரணம். எதற்கும் அஞ்சாத ஒரு வீரனுக்குள் கருணையும் நன்றியும் கலந்திருப்பதை புஷ்கின் அற்புதமாக விவரித்திருப்பார்.
கேப்டன் மகள் மாஷா மீது காதல் கொள்ளும் பியோத்தர் அவளை வர்ணித்து எழுதிய கவிதையை ஷ்வாப்ரின் கிண்டல் செய்வதுடன் அவளது நடத்தை பற்றி இழிவாகப் பேசுவதைக் கேட்டு வெகுண்டெழும் பியோத்தர் ஷ்வாப்ரினுடன் வாட்சண்டைக்குப் போவான். அந்தக் காலத்தில் தங்கள் தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்ள எதிரிகள் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சண்டை Dual எனப்பட்டது. இருவரும் சண்டைக்குத் தயராகும்போதே, படைப்பிரிவின் மற்ற அதிகாரிகள் வந்து தடுத்துவிடுவார்கள். இருவரின் வாட்களும் பறிமுதல் செய்யப்படும். இதுவரையான சம்பவங்களை யாராலும் எழுதிவிட முடியும். அதற்குப் பிறகு பியோத்தரும் ஷ்வாப்ரினும் நடந்துகொள்வதை எழுத புஷ்கினால் தான் முடியும். தாங்கள் இருவரும் எப்படியாவது சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்று இருவரும் ரகசியமாகத் திட்டமிடுவார்கள். ஒருவரையொருவர் கொல்ல வேண்டும் என்று மனதுக்குள் பகைமை கொண்ட இருவரும் மீண்டும் சண்டையிட்டுக் கொள்வதற்காக சந்தித்து ரகசியமாகத் திட்டமிடுவார்கள். பகைவர்கள் தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்ள தாங்களே திட்டமிடுவது வழக்கத்தை விட எத்தனை முரணானது.அது தான் புஷ்கினின் தனித்தன்மை. அதனால் தான் “புஷ்கின் எழுத்துக்கு முன்னால் யதார்த்தம் கூட செயற்கையாகத் தான் தெரியும்” என்று நிக்கலாய் கோகல் குறிப்பிடுகிறார். நாவலில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் மொழிபெயர்ப்பாளர் தர்மராஜன். அந்நிய நிலத்தின் வாசனை என்றாலும் அதை உறுத்தலில்லாமல் முகரச்செய்யும் மொழி அவருடையது. இதனால், நேரடி தமிழ் நாவலைப் படிக்கும் உணர்வு தான் வாசகர்களுக்கு ஏற்படும்.
கதையில் வருவதுபோலவே, புஷ்கினும் அடிக்கடி வாட்சண்டையில் ஈடுபட்டவர்தான். 20-க்கும் மேற்பட்ட வாட்சண்டையில் அவர் ஈடுபட்டதாக ஒரு குறிப்பு சொல்கிறது. இறுதியாக தனது மனைவியின் மீது மையல் கொண்ட பிரபுவுடன் வாட்சண்டையில் ஈடுபட்ட புஷ்கின் அந்த சண்டையிலேயே மரணமடைந்தார். ஒரு எழுத்தாளர் உடல்வலிவுடன் சண்டைத்திறனும் கொண்டிருந்தார் என்பது முற்றிலும் நம்பமுடியாத விஷயம் அல்ல. தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதியும் உடற்பயிற்சிகளில் ஆர்வம் காட்டியவர் தான். எனினும் யாருடனும் சண்டைக்கெல்லாம் சென்றதில்லை. புஷ்கின் எழுதிய பல கவிதைகள் ரஷ்ய இலக்கியத்தில் கொண்டாடப்படுகின்றன.
புஷ்கினின் முன்னோர்கள் பற்றிய தகவல்கள் ஆச்சரியம் தருபவை. அவரது தாயின் தாத்தா ஆப்ராம் பெத்ரோவிச் கேனிபல், கருப்பின அடிமையாக இருந்தவர். அவரை 17-ம் நூற்றாண்டின் புகழ்மிக்க பேரரசரான முதலாம் பீட்டர் அடிமை வாழ்விலிருந்து மீட்டெடுத்து வளர்த்தார். பின்னாட்களில் ரஷ்ய ராணுவத்தில் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தார் ஆப்ராம் பெத்ரோவிச். அவரது வழிவந்த புஷ்கினுக்கு அடிமைகள், விவசாயிகள் உள்ளிட்ட விளிம்புநிலை மனிதர்கள் மீது கரிசனம் இருப்பதில் ஆச்சரியமில்லை. விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுபவர்கள் பற்றிய அவரது பரிவான குரல் ‘கேப்டன் மகள்’ நாவலில் ஒலிக்கிறது. “குற்றம்சாட்டப்பட்ட ஒருவன் தான் நிரபராதி என்று எத்தனை முறை சொன்னாலும் அது ஏற்கப்படுவதில்லை. ஆனால் பல சித்திரவதைகளுக்குப் பின்னர், தான் குற்றவாளி என்று அவன் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மட்டும் அது ஏற்கப்பட்டு அவனுக்கு தண்டனை வழங்கப்படுவது என்ன நியாயம்?” என்று புஷ்கினின் கேள்வி இன்றைய சூழலிலும் பொருத்தமானதாக இருப்பது துரதிருஷ்டமானது.
அதேபோல், ரஷ்ய அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடும் புகச்சோவ் தன்னைக் கொல்லாமல் விட்டாலும் அவனைப் பாசாங்குக்காரன் என்றே கடைசிவரை சொல்கிறான் பியோத்தர். எனினும் ஒரு கட்டத்தில் புகச்சோவை அனைத்து அபாயங்களில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் என்று அவன் மனம் துடிக்கிறது. பியோத்தர் எழுதிய குறிப்புகளை அடிப்படையாக வைத்து எழுதியது தான் என்றாலும் நேர்மையும் துணிச்சலும் நிறைந்த பியோத்தரின் மன ஓட்டத்தை அதே குணங்கள் கொண்ட புஷ்கினால் தான் புரிந்துகொண்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது.
’கேப்டன் மகள்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 4 திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய மொழியிலேயே வெளியான அந்தத் திரைப்படங்களில் ஒன்றான Kapitanskaya Dochka என்ற ரஷ்ய மொழித் திரைப்படம் யூடியூபில் காணக்கிடைக்கிறது. நாவலை முழுமையாக உள்வாங்கி எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் நடிகர்கள் தேர்வு பிரமிக்க வைக்கிறது. பொதுவாக நாவல்கள் திரைப்படமாக்கப்படும்போது அதுவரை ஒவ்வொரு வாசகனின் பிரத்யேகக் கற்பனையுலகில் உலாவந்த பாத்திரங்க்ளைத் திரையில் சித்தரிப்பது என்பது திரைக்கலைஞர்களுக்கு சவாலான விஷயம். ஹாலிவுட் முதல் தமிழ் சினிமா வரை இதற்கு உதாரணங்கள் உண்டு. ஒரே நேரத்தில் பலர் காணும் கனவான சினிமாவில் அது சிரமமான காரியம் தான். வாசகன் ரசிகனாகும்போது திருப்தியடையாமல் போவதும் உண்டு. சில சமயம், தங்கள் படைப்புகள் திரையில் சரியாக சித்தரிக்கப்படவில்லை என்று அங்கலாய்க்கும் எழுத்தாளர்களும் உண்டு.
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக், அமானுஷ்யமான கதைகளுக்குப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஸ்டீஃபன் கிங்கின் ‘தி ஷைனிங்’ நாவலை அதே பெயரில் திரைப்படமாகத் தந்தபோது அப் படத்தை ஸ்டீஃபன் கிங் முற்றிலுமாகப் புறக்கணித்தார். ஆனால் அந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதுபோல் பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், புஷ்கினின் கேப்டன் மகளின் திரைவடிவம் நேர்த்தியான இயக்கம், அற்புதமான நடிகர்கள், உயிர்ப்பான பின்னணி இசை போன்ற அம்சங்களால் நாவலுக்கு முடிந்த அளவுக்கு நேர்மை செய்திருக்கிறது. 1959-ல் வெளியான இந்த கறுப்பு வெள்ளைப் படத்தில் நாவலில் வரும் பல காட்சிகள் வாசகனின் கற்பனைக்கு உயிர்கொடுத்திருக்கின்றன. குறிப்பாக ஓடன்பெர்க் கோட்டையைக் கைப்பற்றும் புகச்சோவ் கேப்டன் உள்ளிட்டவர்களைத் தூக்கிலிட்ட பின்னர் அந்த உடல்கள் கயிற்றில் ஊசலாடும் காட்சி, ஜார் படையினரால் கைதுசெய்யப்படும் புகச்சோவ் கம்பிகளாலான கூண்டுக்குள் சிறைவைக்கப்பட்டு வண்டி ஒன்றில் வைத்து எடுத்துச்செல்லப்படும் காட்சி போன்றவை நாவலின் ஜீவனைக் கண்முன் நிறுத்துகின்றன. அதேபோல், சிரச்சேதம் செய்வதற்காகக் கொண்டு செல்லப்படும் புகச்சோவ், பலிபீடத்தின் அருகே நிற்கும் பியோத்தரைக் கண்டு தலையை உயர்த்திப் புன்முறுவல் செய்யும் காட்சியும் அற்புதம். புஷ்கின் இருந்திருந்தால் படத்தின் இயக்குநர் விளாதிமிர் கப்லுநோவ்ஸ்கியைப் பார்த்து, உடலில் செருகப்பட்ட வாளுடன் அதேபோன்றதொரு ஸ்னேகப் புன்னகையை சிந்தியிருப்பார்.
(இன்று ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடியான அலெக்ஸாண்டர் புஷ்கினின் நினைவுநாள். அதை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.)