Sunday, October 14, 2012

கல்லாப்பெட்டி: நிறைந்த நகையுணர்வு


கறுத்து மெலிந்த தேகம், திகிலடைந்த ஆனால் சுயதைரியம் அளித்துக் கொள்வதன்மூலம் திடீர் பிரகாசமடையும் கண்கள், திறந்த வாய், தோரணையான நடை  என்ற அடையாளங்களுடன் நகைச்சுவை கலந்த குணச்சித்திரப் பாத்திரங்களில் வலம் வந்தவர் கல்லாப்பெட்டி சிங்காரம். காணாமல் போன குட்டியை தேடும் ஆடு  தமிழில் பேசி அழைத்தால்  வரும் குரல் அவருடையது. எண்பதுகளில் அவர் பங்கேற்ற படங்களில் நகைச்சுவை ஏரியாவை கலகலக்க செய்தவர். 

தமிழ் வணிக சினிமாவின் வெற்றிகரமான திரைக்கதையாளரான பாக்யராஜ் முதன் முதலில் இயக்கிய சுவர் இல்லாத சித்திரங்களில் கல்லாப்பெட்டி சிங்காரத்தை அறிமுகம் செய்தார். அந்தப் படத்தின் டைட்டில் இதை சொன்னாலும் கிட்டத்தட்ட நாற்பது வயதைத் தாண்டி அவர் சினிமாவில் வந்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. அறுபதுகளிலேயே  மோட்டார் சுந்தரம்பிள்ளை போன்ற படங்களில் சிறு வேடங்களில் சிங்காரம் வந்திருந்தாலும் முக்கியத்துவம் பெற்ற வேடம் என்ற வகையில் இது தான் முதல் படம் என்பதால், ஒருவேளை அறிமுகம் என்று பாக்யராஜ் குறிப்பிட்டிருப்பார் போலும்.  சில இயக்குனர்களுக்கு என்று கம்பெனி ஆர்டிஸ்ட் மாதிரி சில நடிகர்கள் உண்டு.பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சின்ன சின்ன வேடங்கள் அவர்களுக்குத் தொடர்ந்து தருவார்கள்.  மகேந்திரனுக்கு சாமிக்கண்ணு, குமரிமுத்து, வெண்ணிறாடை மூர்த்தி. பாரதிராஜாவின் பல படங்களில் அவரது உதவியாளர்கள் எங்காவது தலைகாட்டிக் கொண்டே இருப்பார்கள். பாலுமஹேந்திரா படங்களில் பெரியவர் சொக்கலிங்க பாகவதர் அடிக்கடி வருவார். அது போல் பாக்யராஜ், சிறு வேடம் என்றாலும் கதையுடன் ஒட்டிய பாத்திரங்களை கல்லாப்பெட்டிக்கு தன் பல  படங்களில் தந்தார். அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே இயக்குனர் பாக்யராஜ் தான் என்று சொல்லவேண்டும். அவர் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, டார்லிங் டார்லிங் டார்லிங், இன்று போய் நாளை வா போன்ற படங்களில் கல்லாப்பெட்டி  ஏற்று நடித்தப் பாத்திரங்கள் தனித்த நகைச்சுவைக்காக இன்றும் பேசப்படுகின்றன. 

சோகமயமான க்ளைமாக்ஸ் கொண்ட சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் முதல் பாதி முழுவதும் நகைச்சுவையால் நிரம்பியிருக்கும். கல்லாப்பெட்டி சிங்காரம், காந்திமதி இவர்களுடன் கவுண்டமணியும் நடித்திருந்த அந்தப் படத்தில் சிறு நகரம் ஒன்றில் வாழும் மனிதர்களின் அன்றாட நிகழ்வுகளில் தெறிக்கும் நகைச்சுவைத் தருணங்களை மிக இயல்பாகக் காட்டியிருப்பார் பாக்யராஜ். அமெச்சூர் நாடகம் போடும் கதாநாயகனின் அப்பாவாக காக்கி டவுசரும் கைவைத்த பனியனும் அணிந்து படம் முழுக்க வருவார் கல்லாப்பெட்டி . வெளியிடங்களில் சரளமாகப் பேசி சிரித்தாலும் மனைவியைப் பார்த்ததும் சப்த நாடியும் அடங்கி நிற்கும் பாத்திரம் அவருக்கு. கவுண்டமணியின் கடையில் உட்கார்ந்து "கண்ணடிச்சா வராத பொம்பளை..கையப் புடிச்சி இழுத்தா மட்டும் என்ன வந்துடவா போறா?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் காந்திமதி வந்து நிற்க வெலவெலத்துப் போய் அவரைப் பார்க்கும் காட்சியில் தியேட்டர் சற்று இடைவெளி விட்டு சிரித்து மாயந்திருக்கும். படத்தில் பாக்யராஜ் நடத்தும் நாடக ஒத்திகையின் போது நடிகையின் அம்மாவை சைட் அடித்து பாக்யராஜை வெறுப்பேற்றுவார். அந்த அம்மாவுக்கு கலர் வாங்கிக் கொடுப்பார். அந்தப் படத்தில் மறக்க முடியாத பல நகைசுவு காட்சிகள் உண்டு. கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம் இருவரும்  வெவ்வேறு வகைகளில் பாக்யராஜை வெறுப்பேற்றுவார்கள். சரியாக நடிக்க வராத ஒருவனை 'தகுதி நீக்கம்' செய்து விட்டு தானே அந்த பாத்திரத்தை பாக்யராஜ் நடிதுக்காட்டும்போது கவுண்டமணி அந்த நடிகரிடம் சொல்வார், " அவென் நடிப்புக்கு ஒன்நடிப்பு எவ்வளவோ தேவலை!" போதாதக் குறைக்கு சொந்தத் தந்தை இப்படி நடிகையின் அம்மாவிடம் வழிவதைக் கண்டு நொந்து விடுவார் பாக்யராஜ். அந்தக் காட்சியில் மகனின் கண்டிப்புக்கு பயந்தாலும் தன் காதல் உணர்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத பாத்திரத்தின் பாவனைகளை அருமையாகச் செய்திருப்பார் கல்லாப்பெட்டி சிங்காரம். 

எண்பதுகளில் குறிப்பிட்ட சில இயக்குனர்களால் கீழ் மத்தியத் தர மக்களின் வாழ்க்கை திரையுலகில் அசலாய் கொண்டு வரப்பட்டபோது எதார்த்தமான முகம் கொண்ட புதிய நடிகர்களின் வருகை முக்கியத்துவம் பெற்றது. அன்றாடம் எதிர்ப்படும் முகங்கள் அறிமகமான சமயத்தில் திரையில் தோன்றிய கல்லாப்பெட்டி மிக அருமையாக அந்த மக்களின்  வாழ்க்கையை திரையில் பிரதிபலித்தார். எளிய மக்களின் மொழியை திரைக்கு ஏற்றவாறு சற்று மெருகேற்றிப் பேசி நடித்த நடிகர்களில் அவரும் ஒருவர். முதல் படத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் பாத்திரத்தில் நடித்த அவருக்கு பின்னாளில் தோரணையான குஸ்தி வாத்தியார் வேடம் கொடுத்தார் பாக்யராஜ் . மனிதர் அதிலும் வெளுத்து வாங்கினார். 

தமிழில் வந்த நகைச்சுவைப் படங்களில் மிக முக்கியமானப் படமான 'இன்று போய் நாளை வா' வில் அவர் செய்த பாத்திரம் இன்று வரை யாராலும் பிரதி கூட எடுக்க முடியாதது. உடற்பயிற்சி ஆசிரியர்களின் உடல்மொழியை உள்வாங்கிக்கொண்டு அதை இயல்பாக அதே சமயம் நகைச்சுவை கலந்து நடித்து அந்தப் பாத்திரத்தை மெருகேற்றினார். படத்தில் ராதிகாவை காதலிக்கும் வெங்கிட்டு, அதற்காக ராதிகாவின் தாத்தா கல்லாப்பெட்டியைக் கவர முடிவு செய்து அவரைப் பற்றி அந்த ஏரியாவின் துணி வெளுக்கும் தொழிலாளியிடம் விசாரிக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. அந்தத் தொழிலாளி சொல்வார் "காலையிலயும் சாயங்காலமும் இந்தாளு லொங்கு லொங்குன்னு ஓடுறாரு..எங்கே ஓடுறாரு..எதுக்கு ஓடுறாரு ன்னே புரியல". திருச்சி நகரத்தில் இருந்து உடுமலைப்பேட்டை போன்ற டவுனுக்குள் குடிவந்த பயில்வான் ஜாகிங் செய்யும் விஷயம் அந்தூர் தொழிலாளிக்கு எப்படித் தெரியும்? அப்பாவித்தனமான அதே சமயம் குறும்பான அந்த விவரிப்பு வார்த்தைகளாக செல்லும்போதே  கல்லாப்பெட்டி 'எங்கோ' ஓடிக்கொண்டிருக்கும் காட்சி விரியும். இயக்குனரின் புத்திசாலிதனமான காட்சியமைப்பு என்றாலும் அதற்கு முன் கல்லாப்பெட்டி சிங்காரம்  ஒரு கண்டிப்பான ஆனால் நகைப்பு தரக்கூடிய பாத்திரம் என்று பார்வையாளர்களுக்கு  முன்கூட்டியே பதிவாகி இருப்பதால் அந்தக் காட்சி இன்றும் வெடிச் சிரிப்பைப் பார்வையாளர்களிடம் தோற்றுவிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. 

அவரை அடிக்க அடியாட்கள் ஏற்பாடு செய்து 'காப்பாற்ற' வெங்கிட்டு காத்திருக்க, கல்லாப்பெட்டி அந்த உள்ளூர் ரவுடிகளை பந்தாடும் காட்சியில் அவரே சண்டையிட்டு நடித்திருப்பார் போலும் . பாய்ந்து பாய்ந்து அவர் தரும் உதை தாளாமல் ரவுடிகள் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு தலைதெறிக்க ஓடும் காட்சி அபாரமான ஒன்று. தன்னை சந்திக்க வந்து விட்டு தன் பேத்தி ராதிகாவிடம் விடைபெறும் வெங்கிட்டுவிடம்  ' ஏன் எனக்கு பை சொல்லலை?' என்று அதட்டுவார். 'சாரி ஸார்..பை ஸார்' என்று பம்மி விடைபெறும் அவனிடம் 'ஓக்கே பை..ஓக்கே பை' என்பார் பிரகாச முகத்துடன். தன்னை மதித்து விடைபெற்ற  குதூகலத்தில்  நாற்காலியில் அமர்ந்து கொண்டே கைகளை முழங்கால்களில் பெருமையுடன்  வைத்து கண்களை மகிழ்ச்சியுடன் உருட்டுவார். காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் சோமா பயில்வானான  தனக்கு உரிய மரியாதையை மிரட்டியாவது வாங்கி விடும் பாத்திரம் அது. அதற்கு அத்தனை நியாயம் செய்யும் நடிப்பு கல்லாப்பெட்டியுடையது. 

தன்னிடம் குஸ்தி கற்க வைத்தவனை தலைகீழாக நிற்கவைத்து வயிற்றில் குத்தி அவனைப் படாத பாடு படுத்தும்போது முகத்தில் இருக்கும் கண்டிப்பு. அத்தனை தோரணையுடன் அதிகாரம் செய்யும் அவர் தன்னிடம் 'பாடம்' கற்ற மாணவனிடமே அடிவாங்கிப் பிச்சைக்காரனைப் போல் வரும் காட்சியில் அவரது உடல்மொழி அனாயாசமாக இருக்கும்.  'நீ நாசமாகப் போக' என்று யாரிடமும் எரிந்து விழுந்தாலும் எதிராளி வாய் விட்டு சிரித்துவிடும் வகையிலான நகைப்பூட்டும் குரல் அவருக்கு. எனவே அந்தக் காட்சி நகைச்சுவையின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும். ராதிகாவை காதலித்து ஏமாந்த மற்றொரு வாலிபன் ராஜேந்திரனிடம் (புகழ் பெற்ற 'ஏக் காவ் மேய்ன் ஏக் கிஸ்ஸ்ஸ்ஸ்ஸான்' வசனம் நினைவிருக்கும்!) அடிபட்டு கட்டிலில் படுத்திருக்கும் தன் ஹிந்தி பண்டிட் மருமகனைப் பார்த்து ' இவன் அந்தப் பயல அந்தத் தூண்ல வச்சி ச்சொத்து ச்சொத்து னு மோதும்போதே நெனச்சேன்..இப்படி ஏதாவது நடக்கும்ன்னு' என்று சொல்வார். வார்த்தைகளை கடித்து அவர் உச்சரிக்கும் விதம் சிறப்பாக இருக்கும். பிற நடிகர்களிடம் இருந்து நகைச்சுவை நடிகர்கள் பார்வையாளனை நெருங்கி வரக் காரணம், எழுதப்பட்ட வசனங்களை அப்படியே ஒப்பிக்காமல், சாதாரண மக்களின் மொழியிலேயே பேசி நடிப்பதால் தான். சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்துப் படங்களில்  நாயகர்கள் "கடவுளே..இவ்வாறு நடந்து விட்டதே... இனி என் எதிர்காலம் என்ன ஆகுமோ?" என்று தூய தமிழில் துக்கப்படும்போது  நகைச்சுவை நடிகர்கள் "அட இதுக்கெல்லாம் கவலைப்படாதய்யா..எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாப்போவும்" என்று எளிய வார்த்தைகளில் ஆறுதல் தருவார்கள். முக்கியத்துவம் பெற்ற நடிகர் இல்லையென்றாலும் கல்லாப்பெட்டி சிங்காரம் இன்றும் நினைவுகொள்ளப்பட அவரது வசன உச்சரிப்பும் முகபாவனையும் பிரத்யேகக் குரலுமே காரணம். 

டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் இன்னும் உச்சமாக என்னியோ மோரிக்கொன் இசையமைத்த    த குட் த பேட் த அக்லி தீம் இசை பின்னணியில் ஒலிக்க குளியல் தொட்டியில் இருந்து கம்பீரமாக எழுந்து சென்று கோட் சூட் அணியும் காட்சியில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த புதுப் பணக்காரர் போலவே இருப்பார். அடுத்த காட்சியில் அவர் வெறும் வாட்ச்மேன் தான் என்று பார்வையாளர்களுக்குப் போட்டு உடைத்து விடுவார் மகன் பாக்யராஜ். " அப்பா..மொதலாளி கோட்டை போட்டு சேரில் உக்காந்தாலும் நீ வாட்ச்மேன் தான்" என்று சொல்லும்போது குட்டுடைந்த கல்லாப்பெட்டியின் முகபாவனை சிறப்பாக இருக்கும். உண்மை தான் என்றாலும் 'அதுக்கென்ன' என்பது போலும் ஒரு பார்வைப் பார்ப்பார் முழித்துக் கொண்டே. அந்தப் படத்தில் மகன் முதலாளியின் மகளைக்  காதலிக்க வேண்டுமே என்று எதிர்பார்க்கும் அல்ப அப்பா பாத்திரத்தை தன் நடிப்பால் மிளிரச் செய்தார். மகனுக்கும் முதலாளி மகளுக்கும் திருமணம் நடக்கும் என்ற பெரு நம்பிக்கையில் சேட்டிடம் கடன் வாங்கி விடுவர் கல்லாப்பெட்டி. ஏற்கனவே கடன்வாங்கி சேட்டிடம் 'கைதியாக' இருக்கும் வாய் பேச முடியாதவரைப் பார்த்து கல்லாப்பெட்டி கேட்பார் " என்ன தைரியத்துலே நீ எல்லாம் கடன் வாங்கணும்? ஒண்ணு கடன் திரும்பக் குடுக்க வக்கிருக்கணும்..இல்லேன்னா அதுக்கான அதிர்ஷ்டமாவது இருக்கணும்  " என்பார் எகத்தாளமாக . சேட்டிடம் சிக்கிய கைதி இவரைப் பார்த்து ஒரு கெக்கலிப்பு சிரிப்பார். "அடுத்து நீதான்" என்ற பொருள்படும்படியாக. 

ஒரு காட்சியில் பூர்ணிமா அறையில் எதையோ தேடும் பாக்யராஜை அவர் பூர்ணிமாவுடன் சரசத்தில் இருப்பதாக நினைத்து எல்லையில்லா  சந்தோஷமும் பொய்க்கோபமும் கொப்பளிக்க அவர்கள் இருவரையும் கண்டிக்கும் காட்சி அவரது நடிப்புத் திறனுக்கு ஒரு சான்று. ஒருபுறம் முதலாளியின் மகள் தன் மகனுக்குத் தான் என்ற குதூகலம்,  அதே சமயம் தான் பொறுப்பான தகப்பன் என்பதைக் காட்ட வேண்டிய ஆர்வம் இரண்டும் கலக்க துள்ளலுடன் முன்னும் பின்னும் நடந்து திட்டிக்கொண்டே இருப்பார். பெரும்பாலான படங்களில் மகனின் செயல்கள்  மீது எரிச்சல் கொண்ட தகப்பனாகவே தோன்றினார் கல்லாப்பெட்டி. உதயகீதத்தில் கவுண்டமணியின் தந்தையாக வந்து அவரைக் கரித்துக் கொட்டிக்கொண்டே இருப்பார். அப்படி திட்டிய பின்னர்,  உத்திரத்தில் இருந்து  தொங்கும் கால்களையும் சிந்திக் கிடக்கும் சிவப்பு பெயின்டையும் வைத்து கவுண்டமணி தன் கண்டிப்பால் தற்கொலை செய்துகொண்டு விட்டாரோ என்று அதிர்ச்சியடைவார். கவுண்டமணியின் ஜெயில் சிநேகிதத்தை வைத்து செந்தில் கல்லாப்பெட்டி வீட்டில் கன்னம் வைத்து பொருட்களைக் களவாடி சென்ற  பின்னர், கட்டிய துண்டுடன்  சிறையில் இருக்கும் மகனை சந்திக்க வருவார் "நல்லவேளை துண்ட விட்டுட்டுப் போய்ட்டான்..இல்லேன்னா என் கதி என்ன?" என்பார். பாக்யராஜின் வீட்டு ஓனராக நடித்த அந்த ஏழு நாட்களிலும் தன் தனிச் சிறப்பை அவர் பதிவு செய்தார். வீடு பார்க்க பாக்யராஜிடம் அவரது உயர்த்திய வேட்டியை கீழே சொல்லும் காட்சி இயல்பான நகைச்சுவைக்கு ஒரு சான்று. "பொண்ணை மட்டுமில்லாமல் பொண்ணோட அம்மாவையும் சேத்துத் தள்ளிக்கிட்டுப் போய்விடுவானுங்கள்" என்ற பயத்தில்  பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கும் வீடு சொந்தக் காரர் வேடம். சிறிய வேடங்கள் என்றாலும் தனக்குரிய பாணியில் முத்திரை பதிக்க கல்லாபெட்டி தயங்கியதே இல்லை. காக்கிசட்டையில் கமலுக்கு அப்பாவாக நடித்திருந்தார். கவுண்டமணி கதாநாயனாக நடித்த ஒரு படத்தில் அவருக்குத் தந்தையாக வருவார். தன் மகனைப் புறக்கணிக்கும் பணக்காரத் தந்தையாக எதிர்மறையான வேடத்தில் நடித்தார். 

ஒரு படத்தில் காது கேளாத பாத்திரத்தில் கல்லாப்பெட்டியும் கரிக்கோல் ராஜும் வருவார்கள். சுற்றி பூகம்பமே வந்தாலும்  காதுகளுக்கு சத்தம் எட்டாமல் தங்களுக்குள் சந்தோஷமாக உரையாடிக்கொண்டே இருப்பார்கள். எங்க ஊருப் பாட்டுக்காரன் படத்தில் அதிர்ஷ்டமற்ற செந்தில் எங்கு வேலைக்கு சென்றாலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும். அந்தப் படத்தில் பண்ணையார் வேடத்தில் வரும் கல்லாப்பெட்டி சிங்காரத்திடம் வேலைக்கு சேர்வார் செந்தில். சேர்ந்த முதல் நாளே வாயில் மாங்காயைக் கடித்தபடியே இறந்து விடுவார் கல்லாப்பெட்டி சிங்காரம். அவர் மனைவி செந்திலை ஆத்திரத்தில் அடிபின்னிவிடுவார். பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் இருவரும் நடித்த, மலையாள ரீமேக் படமான் கதாநாயகன் என்ற படத்தில் அவர்களின் வீட்டு உரிமையாளராக  வருவார். கோனார் வேடத்தில் நடித்த கல்லாப்பெட்டியிடம் சேகர் கேட்பார் " நீங்க தானே கோனார் நோட்ஸ் எழுதுனீங்க?". ஏற்கனவே வாடகை தராமல் இழுத்தடிக்கும் அவர்களின் கிண்டலை கேட்டு கடுப்பாகி திட்டுவார் கல்லாப்பெட்டி. இது போன்ற சிறு பாத்திரங்களில் பல படங்களில் நடித்தார்.  என்றாலும் அவரது பிரத்யேகக் குரல் அந்த சிறு பாத்திரங்களையும் மிளிரச் செய்தது. 

இன்றும் டீக்கடைகளில் நேற்றைய மனிதர்கள் தங்கள் வயதையொத்த மற்றவர்களுடன் எஞ்சிய தங்கள் வாழ்க்கையின் நினைவுகளை தேநீருடன் பகிர்ந்துகொண்டிருக்கும்போது கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். சுற்றியிருப்பவர்கள் வெடித்து சிரிக்கும்படி பேசி விட்டு சிரிக்கும் நண்பர்களைப் பெருமிதத்துடன் பார்த்து ரசிக்கும்  ஏதேனும் பெரியவரிடம்  கல்லாபெட்டியின் சாயலைக் காணலாம்.

-காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை 

Wednesday, October 10, 2012

ஒ மை காட் - ஒரு பார்வை -1

கோவில்களை விட கழிப்பறைகளே முக்கியம் என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பேசியிருக்கும் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது சமீபத்திய செய்தி.

'கோயில்கள் கூடாது என்று சொல்லவில்லை. அவை கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது' என்று திராவிட இயக்கத்தின் வழி வந்த கருணாநிதி பராசக்தி திரைப்படத்தில் வசனம் எழுதினார். கடவுளே இல்லை என்று சொல்கிறீர்களே ஒரு வேளை கடவுள் உங்களுக்கு காட்சி கொடுத்தால் அப்போது என்ன சொல்வீர்கள் என்று பெரியாரிடம் கேட்கப்பட்டபோது  'அப்போ இனி கடவுள் இருக்கார்னு சொல்வேன்..பாத்தா ஒத்துக்க வேண்டியது தானே' என்று பெரியார் பதிலளித்ததாக சொல்வார்கள்.

தமிழர்கள் கடவுளின் இருப்பு பற்றி கடும் கேள்வி எழுப்பி பழக்கமுள்ளவர்கள். கடவுளே இல்லை என்று சொன்ன இயக்கத்தின் வழி வந்த அரசியல் கட்சிகளின் ஆட்சியில் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலிச் சாமியார்களின் குட்டு உடைந்த பின்னரும் அவர்கள் சுதந்திரமாகவும் முன்னை விட குதூகலத்துடனும் உலா வருவது ஒரு நகை முரண். வட இந்தியாவில் கடவுள் பற்றிய கருதுகோள் வேறானது.  இங்கு கடவுள் இருப்பு பற்றிய பிரச்சனையை விட எந்தக் கடவுள் உயர்ந்தவர் என்ற சர்ச்சை தான் வழக்கமான புழக்கத்தில் உள்ளது. தவிர கோவில்கள் எக்கச்சக்கம். பெரும்பாலானவர்கள் மிகுந்த பக்தி கொண்டவர்கள் இங்கே. மதப்பற்றும் அதன் அடிநாதமாக சாதிப்பற்றும் கொண்ட வட இந்தியாவில் கடவுளை கேள்வி  செய்து படம் எல்லாம் வந்ததில்லை. வரவும் முடியாது. ஆனால் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் ஹிந்தி படம் 'ஓ மை காட்' (OMG). என்றாலும் படத்துக்கு பல இடங்களில்ருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பஞ்சாபில் இந்தப் படம் திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அங்கு படம் தடை செய்யப்பட்டிருக்கிறது. மத அமைப்புகள் தங்கள் மத நம்பிக்கைகளை இந்தப் படம் கேலி செய்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. வழக்கமான இந்திய சினிமா மரபுப் படி இந்தப் படத்தின் கருவும் கடன் வாங்கப்பட்டது தான். திருடப்பட்டது போல் தெரியவில்லை. The man who sued God என்ற ஆஸ்திரேலியப் படத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட படம். முதலில் மராத்தியில் '' என்ற பெயரிலும் பின்னர் 'Krishan Vs Kanhaihya' என்ற பெயரிலும் மேடை நாடகமாக இந்தக் கதை வட இந்தியர்களுக்கு அறிமுகமானது தான். என்றாலும் அப்போதெல்லாம் இல்லாத எதிர்ப்பு இப்போது ஏன் என்கிறார் படத்தில் காஞ்சியாக நாத்திகர் வேடத்தில் நடித்திருக்கும் பரேஷ் ராவல். அவர் தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. நாடகத்திலும் அதே வேடத்தில் அவர் நடித்திருக்கிறார். மிகச் சிறந்த மேடை நாடக நடிகரான அவர் படு அனாயாசமாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். எதிர்ப்பையும் மீறி படம் ஓடுவதற்கு அவர் நடிப்பு ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

மும்பையில் தெய்வச் சிலைகள் மற்றும் பக்தி சமாசாரங்களை விற்கும் பரேஷ் ராவல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். பக்தர்களின் பலவீனத்தை காசாக்கும் ஆன்மீக நிறுவனங்களை கிண்டல் செய்பவராகவும் அதே சமயம் தன்னிடம் வந்து மாட்டும் பக்திமான்களிடம் அதே முறையைப் பயன்படுத்தி ஏமாற்றி பணம் செர்ப்பவராகவும் அதன் மூலம் இந்த பக்திப் பாமரர்களை கிண்டல் செய்பவராகவும் வருகிறார்  பரேஷ்.  ஒரு பணக்கார என்.ஆர்.ஐ மறைந்த தன் அம்மாவின் நினைவாக புனித யாத்திரைக்கு பக்தர்களை அழைக்கும் போது தானும் போக வேண்டும் என்று விரும்பும் தன் கடை ஊழியரும் உறவினனுமான மகாதேவை கடுமையாக கிண்டல் செய்கிறார் பரேஷ். 'அந்தம்மா ஆஸ்பிடலில் கிடக்கும்போது அந்தப் பக்கம் தலைக்காட்டாத மகன் அவன்..அவன் புனிதப் பயணத்துக்கு அழைப்பது தன் அம்மாவின் நினைவுக்காக அல்ல. சுய விளம்பரத்துக்காக' என்று சொல்கிறார். அவர் மனைவியோ நம் திராவிட இயக்கத் தலைவர்களின் மனைவிமார்கள் போலவே தீவிர பக்தை. பரேஷ் ராவல் கடவுளை கிண்டல் செய்யும்போதெல்லாம் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் அப்பாவி பக்தை. தன் குழந்தைகள் ஆன்மீக நடவடிக்கையில் இறங்கும்போது அவர்களை ஊக்கவிக்கும் அம்மா அவர்.

மனைவியின்  வற்புறுத்தலின் பேரில் ஹரித்துவார் செல்லும் அந்தக் குழுவுடன் இணைந்து பரேஷ் ராவலும் செல்கிறார். பயணம் முழுதும் அவர் அடிக்கும் கமெண்டுகளால் பக்தர் குழு பதறுகிறது. நமக்கு தெரியும். இது போன்ற பயணங்கள் முற்றிலும் வியாபார நோக்கம் கொண்டவர்களால் ஏற்பாடு செய்யப்படுவது என்று. வாகன ஏற்பாட்டளர்களுக்கும் வழியில் உள்ள உணவகங்கள், கடைகள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கும் இடையில் ஒரு மறைமுக ஒப்பந்தம் இருக்கும்.  நம் விருப்பமில்லாமேலேயே அங்கு அழைத்து சென்று விடுவார்கள் ஏஜென்ட்டுகள். ஒரு முறை தாஜ் மகால் செல்ல ஆக்ரா இறங்கி அங்கு ஒரு பேட்டரி காரில் சென்றுகொண்டிருந்தபோது அதன் டிரைவர் வழியில் ஒரு கலைப் பொருட்கள் அங்காடிக்கு எங்களை அழைத்து செல்ல முயற்சித்தான். அதெல்லாம் முடியாது நேரே தாஜ்மகாலுக்கு போ என்ற போது அவன் எங்களிடம்  'பத்திலிருந்து பனிரெண்டு மணிவரைக்கும் தாஜ் மகால் மூடியிருக்கும். அந்த நேரத்தை இங்கு செலவிடுங்கள்' என்று சிரிக்காமல் சொன்னான். பிறகு அவனிடம் தமிழில் கெட்டவார்த்தைகளும் ஹிந்தியில் நல்ல வார்த்தைகளும் சொல்லி அவனை நல்வழிப் படுத்தி மேற்கொண்டு பயணம் செய்ய  வேண்டி வந்தது. நம் காஞ்சி(பரேஷ் ராவல்) தெய்வச் சிலை வியாபாரி என்பதால் அவர் அங்கு சென்று சிலைகளுக்கு ஆர்டர் கொடுக்கும் காட்சி நல்ல நகைச்சுவை. 'அந்த பாடி பில்டர் அனுமார் சிலை ஒரு பத்து, அந்தப் புலி மேல உக்காந்திருக்கிற காளி சிலை ஒரு பத்து' என்று அவர் ஆர்டர் செய்ய, கடைக்காரன் திகைத்து நிற்கிறான். கடைசியில் பரேஷ் கேட்கிறார் ' ஏம்பா இவ்ளோ வாங்குறேன் ஒரு சாய்பாபா சிலை ப்ரீ யா ' தரமாட்டியா?'.
திரும்பி வரும் வழியிலும் அவரது கலாட்டா தொடர்கிறது. புனித கங்கை  நீர் ஊற்றும்  சொம்பில் சரக்கை கலந்து அடித்து விட்டு அதை மகாதேவுக்கு கொடுக்க அவன் குடித்து விட்டு அதை மற்ற ஆண்களிடம் தர சொம்பு ஒரு ரவுண்டு வருகிறது பஸ்சுக்குள். கடைசியில் புனிதப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தவனின் மனைவி அதை குடித்து விட்டு 'என்ன ஒரே காரமாக இருக்கிறது' என்று கேட்க பரேஷ் சொல்கிறார் ' கங்கையில அழுக்கு ஜாஸ்தியாகி  விட்டது அல்லவா?'

இப்படியாப்பட்ட பரேஷ் ராவலின் பையன் கணேஷ் ஒரு லோக்கல் ஆன்மீகவாதி தலைமையில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு உறியடிக்கும் விளையாட்டில் ஈடுபடுவதை டி.வியில் பார்த்து விட்டு அங்கு வருகிறார் பரேஷ். கூட்டத்தை கலைக்க ஒரு தந்திரம் செய்கிறார். இசை நிகழ்ச்சி நடக்கும் மேடையில் ஏறி மைக்கை பிடித்து 'இது சுவாமிகளின்(விழா நடத்தும் சாமியார்) ஆணை. இன்னும்  பத்தே நிமிடங்களில் எல்லா கிருஷ்ணன் சிலைகளும் வெண்ணையும் ரொட்டியும் தின்னவிருக்கின்றன. எல்லோரும் ஓடிப் போய் கிருஷ்ணன் சிலைகளுக்கு வெண்ணெய் ஊட்டுங்கள்' என்று சொல்ல கிருஷ்ணன் கோவில்கள் இருக்கும் திசை நோக்கி கூட்டம் பஞ்சாய்ப் பறக்கிறது. கீழே இறங்கும் மகனை ஒரு சாத்து சாத்தி கிளம்பும் போது சாமியார் காஞ்சிக்கு சாபம் விடுகிறார். 'நீ கடவுளை அவமதித்து விட்டாய்..உனக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்'. சொன்ன வினாடி மழை பெய்கிறது. லேசான நிலநடுக்கம் வேறு. வீட்டுக்கு திரும்பினால் மும்பையில் வேறெங்கும் சேதமில்லை காஞ்சியின் கடை இருக்கும் சோர் பஜாரில் ஒரு கடை மட்டும் இடிந்து விட்டது என்று செய்தி வருகிறது. பழுதடைந்துள்ள கடையின் மராமத்து வேலைக்கு செலவு செய்யாமல் ஹஜ்ஜுக்கு போகிறேன் என்று சொன்ன முஸ்லிம் நண்பர் ஒருவரின் கடை தான் இடிந்திருக்க வேண்டும் என்று காஞ்சி நினைக்க, செய்தி சேனல் நிலநடுக்கத்தில் இடிந்த கடையைக் காட்டுகிறது. அது காஞ்சியின் கடை. 

நாத்திகரான அவர் கடவுளை நிந்தித்து பேசியதால் தான் அவர் கடை மட்டும் இடிந்தது என்று அவருக்கு சாபம் விட்ட சாமியார் முதல்  மனைவி மற்றும் உறவினர்கள் வரை பேசத் தொடங்குகின்றனர். அவற்றை பொருட்படுத்தாத காஞ்சி கடைக்குள் புத்திசாலித்தனமாக பாதுகாப்பாக வைத்திருந்த இன்ஷூரன்ஸ் ஆவணங்களை எடுத்துக்கொண்டு இன்ஷூரன்ஸ் அலுவலகத்துக்கு போகிறார். ஸ்லோமோஷனில் தாத்தா நடப்பது, பாட்டி சிரிப்பது போன்ற பல காட்சிகளை மெதுவாக காட்டிவிட்டு கடைசியாக Terms & Condition ஐ படபடவென்று வாசிக்கும் குரல் கொண்ட இன்ஷூரன்ஸ்,பங்குச் சந்தை பற்றிய விளம்பரங்கள் நமக்கு தெரியும். விண்ணப்பங்களிலும் கண் வலிக்கும் வகையில் சிறிய எழுத்துகளில் தான் அவை எழுதப்பட்டிருக்கும். ஏஜென்ட் சொன்னதை நம்பி நம் காஞ்சி அவற்றைப் படிக்காமல் கையெழுத்திட்டுருக்கிறார். . விளைவு, அவரது கடைக்கு மனிதர்களால் ஏற்படும் அழிவுகளுக்கு மட்டும் தான் காப்பீடு கிடைக்கும். இந்த பூகம்பம் அந்த category யில் வராது என்கிறார் இன்ஷூரன்ஸ் கம்பெனி அதிகாரி. ஏனென்றால் இந்த பூகம்பம் கடவுளின் செயல். Act of God! வெகுண்டெழும் காஞ்சி அந்த அலுவலகத்தில் கலாட்டா செய்து அதிகாரியின் கன்னம் பழுக்க அறை ஒன்று விடுகிறார். இதற்கு என்ன வழி என்று யோசிக்கும்போது எல்லாவற்றுக்கும் காரணமான கடவுளை இழுத்தால் என்ன என்று தோன்றுகிறது. மிக முக்கியமாக அவருக்கு கடவுள் மீதான நம்பிக்கை இல்லை என்றாலும் தனக்கு நேர்ந்த இழப்புக்கு காரணம் கடவுள் என்று சொல்லப்படுவதால் அந்த கடவுள் மீதே கேஸ் போட முடிவெடுக்கிறார்.  ஆனால் இந்த விபரீத வழக்கை எடுத்துக்கொள்ள வக்கீல்கள் மறுத்து அவரைக் கண்டாலே தலைதெறிக்க ஓடுகின்றனர். கடைசியில் ஒரு ஏழை முஸ்லிம் வக்கீலை(ஓம் புரி) அணுகுகிறார். அவர் தன்னால் இந்த கேசை நடத்த முடியாது என்று சொல்கிறார். காரணம் இந்துக்களின் கேஸ் ஒன்றை எடுத்து நடத்தியதால் சில மதவாதிகள் அவரைத் தாக்கி நடக்க முடியாத நிலையில் இருப்பதால் தன்னால் வழக்குக்கு உதவ முடியும். ஆனால் அதை எடுத்து நடத்த முடியாது என்று சொல்லி விடுகிறார். ஆனால் காஞ்சியே தனக்காக கோர்ட்டில் வாதாட முடியும் என்று சொல்கிறார். கருப்பு கோட்டுடன் காஞ்சி கோர்ட்டுக்குப் போகிறார். தான் சம்மன் அனுப்பிய சாமியார்களை கோர்ட்டில் சந்திக்கிறார். கதை சூடுபிடிக்கிறது.

நாட்டில் உள்ள பக்தர்கள் மத்தியில் காஞ்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. கோர்ட்டை விட்டு வெளியில் வந்தால் அகோரிகளும் இன்னபிற சாமியார்களும் வழி மேல் வேல் வைத்துக் காத்திருக்கிறார்கள். எப்படி வெளியில் போகிறாய் பார்க்கிறோம் என்று அவரை மிரட்டுகிறார் முக்கிய சாமியார் (மிதுன் சக்கரவர்த்தி). அவரது வீட்டை மதவாதிகள் தாக்க மனைவி பயந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விடுகிறார். கடவுளுக்கு எதிரான வழக்கை நடத்தும் அவரை செல்லும் இடமெல்லாம் மத வெறியர்கள் துரத்த அவரைக் காப்பாற்ற பைக்கில் வந்து சேருகிறார் - கடவுள்.

Friday, October 5, 2012

பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்


நம்மிடம் சரித்திரம் பற்றிய பிரக்ஞை இல்லை


வரலாறு மற்றும் சமகாலப் பிரச்சனைகளின் பின்னணியில் புலிநகக்கொன்றை மற்றும் கலங்கிய நதி ஆகிய நாவல்கள் எழுதியிருக்கும் பி.ஏ.கிருஷ்ணன், சமூகம் பற்றிய ஆழமான பார்வை கொண்டவர். மேற்கத்திய ஓவியங்கள், சினிமா, பயண அனுபவங்கள் என்று பலதரப்பட்ட தளங்களில் எழுதி வரும் அவர்  தசஇ-க்காக அளித்த நேர்காணல்...
 உங்கள் இளமைப் பருவம், கல்வி பற்றி சொல்லுங்கள்..

நான் படித்தது திருநெல்வேலியில் தான். அங்குள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பின்னர் பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலையும் சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் முதுகலையும் பயின்றேன்.

எந்த வயதில் இலக்கியத்துடன் பரிச்சயம் ஏற்பட்டது? தங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார்?

நான் பிறந்தது இலக்கியத்தோடு என்று சொல்வேன். என் தந்தை பட்சிராஜன் ஒரு புகழ்பெற்ற தமிழ் அறிஞர். கம்பன் புகழ் பாடியே தன் வாழ்நாள் முழுவதும் கழித்தவர். அவர் மூலம் இலக்கியத்துடன் இயல்பாகவே பரிச்சயம் ஏற்பட்டு விட்டது. எனக்கு ஏழெட்டு வயது இருக்கும்போது என் தந்தை மகாபாரதத்தின் சுருக்கமான மகாபாரத வசன சங்கிரகம் என்ற புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார். அதன் விலை ஐந்து ரூபாய் என்று நினைக்கிறேன். தமிழில் நான் படித்த முதற் பெரிய புத்தகம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சிறுவர்களுக்கான புத்தகங்களைக் பதிப்பித்துக் கொண்டிருந்த காலம் அது. கழகக் கதைக் கொத்து, கழகக் கதைப் பூங்கா போன்ற புத்தகங்கள். எனது அறுபத்தைந்தாவது வயதிலும் என்னால் அந்தக் கதைகளை நினைவுகூர முடிகிறது. மிக அருமையான புத்தகங்கள் அவை.

மீசை முளைக்கும் முன் நான் விரும்பிய எழுத்தாளர்கள், கல்கி, தேவன், பகீரதன், லக்ஷ்மி. முளைத்த பின் என்னை ஈர்த்த எழுத்தாளர்கள் புதுமைப் பித்தன், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் அப்புறம் ஜானகிராமன். ஜானகிராமனை இப்போது படிக்கும்போது சற்று ஏமாற்றமளிக்கிறது என்றாலும் அந்த வயதில் அவர் எழுத்து மிகவும் பிரமிப்பூட்டியது. அவரது சிறுகதைகளில் இன்னும் உயிர்ப்பு இருப்பதாக உணர்கிறேன். ஜெயகாந்தனுடைய சிறுகதைகளும் இப்போது ஆகச் சிறந்த படைப்புகளாகத் தோன்றவில்லை. ஆங்கிலத்தில் எனக்கு ஷேக்ஸ்பியர் பிடித்தமானவர். எனது ஆசான் . ஈவ்லின் வா, எலிசபெத் போவன், பிஜி உட் ஹவ்ஸ் போன்ற எழுத்தாளர்கள் பிடித்தமானவர்கள்.

இளம் வயதிலேயே ஆங்கிலத்தில் படிக்கும்படியான சூழல் இருந்ததா?

இல்லை. நான் எஸ்.எஸ்.எல்.சி வரை தமிழ் மீடியத்தில் பயின்றவன். எனக்கு ஆங்கிலத்தில் அப்போது பெரிய ஆர்வம் இல்லை. பி.யூ.சி படிக்கும்போது ஒரு சம்பவம். எனது முதல் ஆங்கில ஆசிரியர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் சானட் ஒன்றை பாடமாக எடுத்தார். ஒரு மூன்று மணிநேரம் பாடம் நடத்திவிட்டு கடைசியில் எங்களைப் பார்த்து 'புரிகிறதா?' என்று கேட்டார். எனக்கு என்னடா இது ஆங்கிலம் இதன் பக்கத்திலேயே செல்லக் கூடாது என்று தோன்றியது. ஆங்கில இலக்கியத்தின் பால் எனக்கு நாட்டம் ஏற்பட ஊக்கம் அளித்தவர் எனது தந்தையின் நண்பர் திரு கோபால பிள்ளை அவர்கள். அவர் படிக்கத் தந்த புத்தகங்கள் காட்டிய உலகத்தில்தான் நான் இன்று வரை பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

ஒரு அரசு அதிகாரியாகவும் பின்னர் தனியார் துறையில் உயர்ந்த பொறுப்பிலும் இருந்து வரும் நீங்கள் எழுத வேண்டும் என்று நினைக்க எது காரணமாக இருந்தது?

முன்பே சொன்னபடி இலக்கியம் என் வாழ்க்கை சூழலிலேயே இருந்தது. என்றாலும் வாழ்க்கையின் பல அனுபவங்கள், தருணங்கள் என்னை பிற்பாடு எழுதத் தூண்டியது எனலாம்.

உல்பாவால் கடத்தப்பட்ட அதிகாரியை மீட்க நீங்கள் எடுத்த முயற்சிகள் பற்றி கலங்கிய நதி சொல்கிறது என்று அது தொடர்பான மற்றப் பதிவுகளில் சொல்லியிருக்கிறீர்கள். அந்த சம்பவங்கள் நடக்கும்போதே இதை ஒரு கட்டத்தில் படைப்பாக வெளியிடலாம் என்று நினைத்திருந்தீர்களா? அல்லது பின்னர் அது பற்றிய எண்ணம் வந்ததா?

இல்லை. அந்த நாட்களில் எனக்கு கடத்தல் விவகாரம் எப்படி முடியும் எங்கு என்னைக் கொண்டு செல்லும்..என்பவைப் பற்றிய பதட்டம் தான் இருந்தது. சொல்லப்போனால் நான் திரும்பிவருவேனா என்றெல்லாம் யோசிக்க வைத்த சம்பவம் அது. எல்லாம் முடிந்த பின்னால் அசாமில் இருந்து வரும் சென்டினல் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையில் அந்த மீட்புப் பணியில் எனக்கு உதவிய அசாம் மாநில முன்னாள் முதல்வர் சரத் சந்திர சின்ஹா பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். இக்கட்டுரையின் மற்றொரு வடிவம் தமிழில் ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள் என்று வந்தது. அதற்குப் பிறகு தான் இந்தச் சம்பவத்தை ஒரு நாவலாக்கலாம் என்ற எண்ணம் எழுந்த்து. 2002 ஆம் ஆண்டில் நாவலை எழுதி முடித்தேன். ஆனால் படித்துப் பார்த்த்தில் மிகவும் தட்டையாக இருந்தது போல் தோன்றியது. சில வருடங்கள் கழித்து பல மாற்றங்கள் செய்து நாவலுக்கு புது வடிவம் கொடுத்தேன..

அசாமில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரங்கள் உங்களிடம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?

எனது நாவலின் களமான கோக்ரஜார் மாவட்டத்தில் தான் சமீபத்தில் கலவரம் நடந்தது. இது போன்ற கலவரங்களுக்கு நிலம் தான் முக்கியக் காரணம் என்று சொல்வேன்.கலவரங்களுக்கு எந்த வண்ணமும் பூசப்படலாம். வங்காளக் வண்ணம், முஸ்லிம் வண்ணம், போடோ வண்ணம்என்று எது வேண்டுமானாலும் பூசலாம். ஆனால்அடிப்படை காரணம் மனிதனுக்கு நிலத்தின் மீது இருக்கும் ஆசை தான். அது அவனுக்கு மிக முக்கியத் தேவை என்பதில் சந்தேகமில்லை. இதற்கு தீர்வு என்ன என்று கேட்டால்..தீர்வு இல்லை என்றே சொல்வேன். இந்தியாவில் நிலத்தை சார்ந்து மனிதன் இருக்கும் வரை இது போன்ற கலவரங்கள் முடிவுக்கு வருவது கடினம் தான்.

பங்களாதேஷில் இருந்து குடிபெயரும் முஸ்லீம்கள் இதற்கு காரணமா?

அது நிச்சயமாக ஒரு காரணம். அது தான் முக்கியக் காரணம் என்று சொல்ல முடியாது. அசாமில் களத்தில் இறங்கி கடுமையாக உழைத்தவர்கள் வங்க முஸ்லீம்கள் . அசாமியர்கள் அவ்வளவு கடுமையாக உழைக்காத காலம் இருந்தது. அவர்களுக்கு தேவையும் இருந்திருக்கவில்லை. நதியில் வெள்ளம் வரும் சமயங்களில் அந்த நீரைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் விவசாயம் செய்வதில் வங்க முஸ்லீம்கள் தேர்ந்தவர்கள். எஅவர்கள் உழைத்து கொஞ்சம் பணம் சேர்த்தவுடன் மற்றவர்களுக்கு பொறாமை வந்து விட்டது என்று சரத் சந்திர சின்ஹா என்னிடம் கூறியது நினைவிற்கு வருகிறது. அவர் சிரித்துக் கொண்டே அப்படிச் சொன்னாலும் அதன் பின்னால் ஓர் உண்மை இருக்கிறது.

தீவிரவாதத்துக்குத் தள்ளப்படும் மக்களுக்கு மாற்று வழிகள் உள்ளனவா? அரசு இதுபற்றி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அரசால் இதற்குத் தீர்வு தர முடியும் என்று எனக்குத் தோன்றவில்ல. அரசுக்கு காது இல்லை, கண் இல்லை. அதற்கு வாய் பேசவும் தெரியாது. பேசினாலும் என்ன இழவு சொல்கிறது என்பது புரியாது பெரும்பாலும்.எல்லா நாடுகளிலும் அரசு இவ்வாறுதான் இயங்குகிறது. இந்த நிலைமையில் தீவிரவாதம் பற்றி அரசு எடுக்கும் எந்த நிலைப்பாடும் மக்களுக்கு நம்பிக்கை தராது. . அப்படியே அரசு தவறி சில சரியான முடிவுகளை எடுத்தாலும் அவற்றின் மீது குறைகள் சொல்வது மிகவும் எளிதாக இருக்கும். இது இருந்தால் அது இல்லை என்று எதைப் பற்றியும் சொல்ல முடியும். அசாமை எடுத்துக்கொண்டால் பிரச்சனைகள் முற்றும் வரை குறட்டை விட்டுக் கொண்டிருந்து விட்டு உல்பா அடித்து எழுப்பிய பின் விழித்துக்கொண்டால் என்ன பயன்? ஆனாலும் தீவிர வாதம் வலுவாக இருக்கும் இடங்களில் அதன் பிடியிலிருந்து வெளியே வருவதற்கான வழிமுறைகளை அங்கிருக்கும் மக்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். வழிமுறை வன்முறை சார்ந்து இருந்தால் ஏழை மக்கள் ஆயிரக் கணக்கில் பலி கொடுக்கப் படுவார்கள். வன்முறை காய்ச்சலைக் குறைக்கும் மாத்திரை மாதிரி. எல்லாம் சரியாகி விட்டது என்ற மாயையை ஏற்படுத்தும். இந்த மாயையிலிருந்து விடுபடுவது கடினம். காந்தி மருந்து உடனே குணம் தராத மருந்து. குணம் தருமா என்ற சந்தேகத்தையும் பலரிடம் ஏற்படுத்துவது.

ஒரு படைப்பை ஆங்கிலத்தில் வெளியிட்டு அதை அந்த எழுத்தாளரே மொழிபெயர்ப்பது என்பது வழக்கமில்லாத ஒன்று. உங்கள் படைப்பை நீங்களே மொழிபெயர்க்க வேண்டும் என்று நினைக்க காரணம் என்ன?

நான் தமிழ் மாணவன். தமிழில் ஓரளவு நன்றாக எழுதக் கூடியவன். . I need not to be modest about it. அதனால் எனக்கு என்னுடைய நாவலைத் தமிழில் மற்றொருவரைக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்யலாம் என்ற எண்ணமே தோன்றவில்லை.

இந்திய ஆங்கில எழுத்துக்கும், இந்திய பிராந்திய எழுத்துக்கும் உள்ள வித்தியாசம் எப்படியானது?

ஆங்கிலத்தில் இந்தியன் எழுதும்போது சில தடுமாற்றங்கள் ஏற்படலாம். ஆங்கிலத்தில் ஆங்கிலேயன் எழுதினாலும் பல தடுமாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக பதினேழாம் நூற்றாண்டு பற்றிய ஆங்கில நாவலை இன்று எழுதும் போது எந்த ஆங்கிலத்தைக் கையாளுவது? இன்றைய மொழியையா அல்லது அன்று புழக்கத்தில் இருந்த மொழியையா?

இந்திய ஆங்கிலம் என்று ஒன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. I don't like the word 'Indian English'. எழுதுபவர்கள் ஆங்கிலத்தை வெவ்வேறு விதமாக பயன்படுத்துகிறார்கள். என் ஆங்கிலம் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆங்கிலங்களின் கலவையாக இருக்கலாம். எனக்குத் தெரியாது.

என்றாலும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. ஆங்கிலேயன் ஆங்கிலம் எழுதும் போது ஏற்படும் தடுமாற்றமும் அதிலிருந்து மீள்வதும் இயற்கையாக நிகழும். எனக்கும் அந்த மீட்சி இயற்கையாக நிகழ்கிறது என்று கூற தயக்கமாக இருக்கிறது. என்னுடைய ஆங்கிலம் ஏர் கண்டிஷன் அறையில் வளரும் ஒரு potted plant மாதிரி என்று எனக்கே சில சமயம் தோன்றுகிறது.

தமிழில் எழுதுவது அவ்வாறு அல்ல. அது என்னுடைய மொழி. என்னுள்ளேயே இருக்கும் மொழி. அது எனக்கு பல உரிமைகளைத் தயக்கமின்றித் தருகிறது.

இளமையில் மார்க்சிஸ்ட்டுகளாக இருந்த பலர் ஒரு கட்டத்தில் ஆன்மிகம் பக்கம் நெருங்கி வருவதைப் பார்த்திருக்கிறோம். உங்கள் எழுத்தில் இன்னும் மார்க்சியம் மீதான ஆதரவு இருந்தாலும் ஆன்மீகத் தரப்புகளின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்ற பார்வை உங்களிடம் தற்போது இருப்பதாகப்படுகிறது. தற்போதைய உங்கள் நிலை என்ன?

ஆன்மீகத் தரப்பின் உரிமைகளை மதிக்கக் கூடாது என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. என் தந்தை மிகப் பெரிய ஆன்மீகவாதி. அவரது தரப்பு நியாயங்களை என்றும் நான் மதித்து வந்தேன்.

என்னைக் கேட்டால் ஆன்மீகவாதிகளை மலினமான முறையில் கிண்டல் செய்வது மிகவும் எளிதானது. மக்களின் நம்பிக்கைகளை கேலி செய்து புகழ் பெறுவது அதைவிட எளிதானது. இதனாலேயே பல மூன்றாம் தரப் எழுத்தாளர்கள் இவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். படைப்பின் மீது மதிப்புக் கொண்ட எந்த எழுத்தாளனும் இதைச் செய்யச் சிறிது கூச்சப்படுவான்.

நான் ஆன்மீகவாதியாக மாறிவிடவில்லை. மார்க்சியத்தின் மீதான மதிப்பு இன்றும் மாறவில்லை. ஆனால் விமரிசனங்கள் இல்லாமல் இல்லை.

புலிநகக் கொன்றையில் மார்ச்கிய புத்தகங்களை உடலுறவு சமயத்தில் பயன்படுத்துவது போல் ஒரு காட்சி உண்டே..

அந்த சம்பவத்திற்கும் மார்க்சியத்திற்கும் என்ன சம்பந்தம்? அது எந்தப் புத்தகமாகவும் இருக்கலாம் அல்லவா? அந்த நேரத்தில் கிடைத்த்து லெனின் எழுதிய புத்தகம் . அங்கு வில்லி பாரதப் புத்தகம் இருந்திருந்தால் அது கூட பயன்பட்டிருக்கலாம்...

கல்லூரி ஆசிரியராக இருந்தபோது இயற்பியலை சொல்லிக்கொடுக்கவும் மாணவர்களிடம் நெருங்கவும் தமிழ் தான் உதவியாக இருந்தது என்று சொல்லி இருக்கிறீர்கள். அறிவியல் பிரிவில் மொழி மிகவும் முக்கியமான ஒன்றா?

நிச்சயமாக. அதில் சந்தேகமே இல்லை. .தாய் மொழியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது தான் நல்லது. ஆங்கிலமும் தமிழும் கலந்து அவர்களுக்குப் புரியும்படி சொல்லிக்கொடுத்தால் அவர்களுக்கு பாடம் நிச்சயம் புரியவரும். என்னைப் போல பலர் அவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இது நானாக நினைத்து செயல்படுத்திய விஷயம் அல்ல. என் துறைத்தலைவர் ஒருவர் -அவரைப் போர்வை என்று அழைப்பார்கள் - ரொம்பக் கண்டிப்பானவர். அவர் நான் புத்தகங்கள் வாசிக்கும்போது சொல்வார். 'நீங்களெல்லாம் ஃபிராடு பசங்கள். உன் தொழில் என்ன? மாணவர்களுக்குப் புரியும்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டியது. இங்கே உட்கார்ந்து மார்க்சியம் படித்துக்கொண்டிருந்தால் மாணவர்களுக்கு என்ன பயன்?' என்றார். கடுமையாகச் சொல்லவில்லை. உறைக்கும்படியாக சொன்னார்.அது எனக்கு பெரிய தூண்டுதலாக இருந்தது.

பயணம் சார்ந்த உங்கள் கட்டுரைகள் மற்ற எவரையும் விட மிக வித்தியாசமாக உள்ளன. அந்த அனுபவங்கள் வாழ்வின் சட்டகத்தில் பொருந்தும் விதமனான எழுத்து உங்களுடையது. தன்முனைப்பு இல்லாதது. இப்படித் தான் இருக்க வேண்டும் அல்லது சிலவற்றைப் போல் இருக்கக் கூடாது என்ற தீர்மானம் உங்களிடம் இருந்ததா?

எனக்கு ஆங்கிலத்திலேயே travel writing ரொம்பப் பிடிக்கும். ......பால் தோரோ, காலின் தப்ரான், பில் ப்ரைஸன் போன்ற எழுத்தாளர்கள் பிடித்தமானவர்கள்.அவர்களைப் போல, ஒரு நாட்டைப் பற்றி எழுதும்போது அதன் சில பரிமாணங்களையாவது தமிழர்களுக்குக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. இந்த வகையில் சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டும்.

காந்தியம் பற்றிய அப்போதைய சிந்தனைக்கும் தற்போதைய சிந்தனைக்கும் என்ன மாற்றம் காண்கிறீர்கள்?

காந்தியம் முன்பை விட வலுப் பெற்றிருக்கிறது என்று சொல்வேன். எழுபதுகளில் மார்க்சியவாதிகள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் காந்தி என்றாலே கெட்ட வார்த்தை என்று நினைத்தார்கள். இப்போது உலகம் மாறிவிட்டது. காந்தி சொன்னது சரியாக இருக்குமோ என்று மக்கள் நினைக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இளமையில் காந்தியின் மேல் கோபமாக இருந்ததாக கூறியிருக்கிறீர்கள்..

பகத்சிங் விஷயத்தில் காந்தி நடந்து கொண்டது தவறானது என்று அப்போது நினைத்தேன்.

அப்புறம் ஆர்.பி தத் .பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் பார்ட்டியில் ஜெனெரல் செகரட்டரியாக இருந்தவர். இந்தியா டுடே என்ற புத்தகம் எழுதியவர். அவர், எம்.என். ராய் போன்றவர்கள் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். போராட்டத்துக்கு மக்களைத் தயார்படுத்தி விட்டு பிறகு ஒரு கட்டத்தில் விலகியவர். போராட்டத்தை முழுமையாக முன்னெடுத்து செல்லாதவர் என்றெல்லாம் சொன்னார்கள். அவர் பணக்காரர்களின் கைக்கூலி என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இக்குற்றச்சாட்டுகள் உண்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதவை என்பது புரிய எனக்கு அதிக நாட்கள் எடுக்கவில்லை.

ஜெகந்நாதன்-கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் பூதான இயக்கங்கள் பற்றி மார்க்சியர்கள் விமர்சித்தார்கள் என்று கூறியிருக்கிறீர்கள்..ஒரு மார்க்சிய ஆதரவாளராக நீங்கள் எவ்வாறு இதை பார்க்கிறீர்கள்?

அப்போது கூர்மையாகிக் கொண்டிருந்த வர்க்கப் போராட்டத்தை இவர்கள் மழுங்கடித்து விடுவார்கள் என்று மார்க்ஸிஸ்டுகள் நினைத்தார்கள். அவர்கள் பார்வையில் அது சரியாக இருக்கலாம். என்றாலும் இந்த காந்தியவாதிகள் முயற்சியால் மக்களுக்கு நிலம் கிடைத்தது மறைக்க முடியாத உண்மை. சர்வோதயா இயக்கங்களால் மக்கள் பிரச்சினைகளுக்கு முழுத் தீர்வு கொடுக்க முடியாது என்று மார்க்சிஸ்டுகள் சொன்னார்கள். அது உண்மையாக இருக்கலாம்.ஆனால் மக்களின் வாழ்வாதாரத்துக்கு கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் உதவினார்கள் என்பது உண்மை. இத்தகைய நிகழ்வுகள் நாடு முழுவதும் பரவலாக நடக்காமல் இருக்கலாம். ஒரு இடத்தில் நடந்தாலும் அது நல்ல விஷயம்தான்..

ஆரம்பத்தில் திராவிட இயக்கங்களால் ஈர்க்கப்பட்டதாக சொல்லி இருக்கிறீர்கள். அதன் பாதிப்பில் வெண்பாக்கள் எழுதிப் பழகியதாகவும் சொல்லி இருக்கிறீர்கள். திராவிட இயக்கம் உங்களை ஈர்க்க சமூக அடுக்குகள் காரணமாக இருந்தனவா?

இல்லை..நான் திராவிட இயக்கங்களால் ஈர்க்கப்படவே இல்லை. விடலைப் பருவத்தில் சில விஷயங்கள் நடந்தன. பதினைந்து வயதில் எம்.ஜி.ஆர் படம் பார்ப்பதும், வெண்பா எழுத முயற்சிப்பதும், ஆசிரியைகளின் மேல் காதல்வயப்படுவதும் அந்தக் காலத்தில் பலருக்கு இயல்பாக நடந்தவை. இதை ஈர்ப்பு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல!

திராவிட இயக்கங்கள் அரசாட்சிக்கு வந்த பின்னர் நடந்த விஷயங்களைப் பற்றி..

எல்லோருக்கும் தெரிந்த. வெட்ட வெளிச்சமான விஷயத்தைப் பற்றி நான் என்ன சொல்ல? இருந்தாலும் தமிழ் நாட்டின் பிற்படுத்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு மூலம் அரசாங்க வேலை கிடைத்து முன்னேறியது என்பது அவர்கள் ஆட்சியில் நடந்தது. அவர்களுக்கு முன்பே காங்கிரஸ் அரசு இதை செய்யத் துவங்கி விட்டது. என்றாலும் அதை செயல்படுத்தியது திராவிட இயக்கங்களின் ஆட்சி தான் என்பதில் சந்தேகமில்லை....தமிழ் சினிமாவின் இன்றைய நிலைமைக்கு எம்ஜியார் ஒரு முக்கியமான காரணம் என்ற எண்ணம் உறுத்திக் கொண்டிருந்தாலும் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் அவர் என்பதை என்னால் மறக்க முடியாது.

உலக சினிமா பற்றி எழுதி வருகிறீர்கள்..அந்த அளவீட்டில் இந்திய சினிமாவின் தரம் எவ்வாறு உள்ளதாக நினைக்கிறீர்கள்?

இந்திய சினிமாவில் சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் போன்றவர்கள் இல்லையா? அடுத்த தளத்தில் ம்ருளால் சென், ஷ்யாம் பெனகல் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள். தமிழில் எண்பது ஆண்டுகளாக திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த ஊடகத்தைப் பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. தொழில்நுட்பம் என்ற வகையில் .நல்ல முன்னேற்றம் இருக்கிறது. தமிழில் வெற்றி பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் உலகத்தரத்தைத் தொட்டவர்கள் என்று என்னால் கூற முடியாது. (திரை இசையமைப்பாளர்கள் சிலர் இதற்கு விதி விலக்கு. அவர்களைப் பற்றி இன்னொரு நாள் விரிவாகப் பேசலாம்.) பொழுதுபோக்குப் படங்கள், நகைச்சுவைப் படங்கள் என்ற விதத்தில் தமிழில் நல்ல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் இந்த எல்லைகளைத் தாண்டி வெகுதூரம் சென்றிருக்க வேண்டும். செல்லவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு முக்கியமான ஒரு காரணம் நமது நாயகர்கள். மற்றொரு காரணம் எதையும் மலினப்படுத்தி விடலாம்- வரலாறு, இலக்கியம், புராணம், கலாச்சரம் போன்றவைகளைக் கூட – என்ற உறுதி - தடித்தனம் என்றும் சொல்லலாம் - தமிழர்களிடம் மற்றவர்களை விட கொஞ்சம் அதிகம் இருப்பது.

உதாரணமாக கட்டபொம்மன் , மருது பாண்டியர் வரலாறு சிறிது சிக்கலானது. சுதந்திர போராட்ட்த்திற்கு பல அடுக்குகள் இருக்கின்றன.

சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் கட்டபொம்மன் பக்கிங்ஹாம் அரண்மணை போன்ற ஒரு இடத்திலிருந்து கோலோச்சுவது போலவும், ஜாக்ஸனை மஞ்சள் அரைக்க அழைப்பு விடுவது போலவும் படம் எடுத்த்தை நாம் மன்னித்து விடலாம். தூக்கு மேடையில் நின்று பெருக்கல் வாய்ப்பாட்டை ஒப்பிப்பது போல மருது பாண்டியர் வசனம் பேசுவதையும் மன்னித்து விடலாம். சிதம்பரம் பிள்ளை Ministry of Defence என்ற பட்டை எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருக்கும் கப்பலில் நின்று கொண்டு சுதேசிக் கப்பல் விடுவதைப் பற்றிப் பாட்டுப் பாடுவதையும் மன்னித்து விடலாம். ஆனாலும் அறுபது வருடங்கள் கழித்தும் நமது வரலாறு, கலாச்சாரம் சார்ந்த ஒரு நல்ல படம் இது வரை ஏன் வரவில்லை? நான் உளியின் ஓசை, எலியின் மீசை போன்ற படங்களைப் பற்றிப் பேசவில்லை என்பது உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். காரணம் நமக்கு சரித்திரம் பற்றிய பிரக்ஞையே இல்லை.

1908ல் திருநெல்வேலி கலவரம் நடந்தது. சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான சம்பவம் அது. வ.உ.சிக்கு நாற்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. தமிழன் சுரணையுடன் இருந்தால் 2008 இல் அந்த நிகழ்வின் நூற்றாண்டு விழாவை பெரிதளவில் கொண்டாடியிருக்க வேண்டாமா?

மருதுபாண்டியர்கள் பற்றிய உங்கள் கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது..

ஆமாம். மருதுபாண்டியர்கள் பற்றி கோர்லே என்ற ஆங்கில எழுத்தாளர் எழுதிய புத்தகம் தொடர்பான கட்டுரை அது. காலச்சுவட்டில் வெளியானது . வரவேற்பிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. அது தேவர் சமூகத்தை உயர்த்தும் விதமாக தொனித்ததால் அக்கட்டுரைக்கு வரவேற்பு கிடைத்தது என்றும் சொல்கிறார்கள். தமிழர்களுக்கு சரித்திரத்தில் மீது திடீரென்று ஏற்பட்ட ஈடுபாட்டால் இந்த வரவேற்புக் கிடைத்த்து என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறது.

1857 சிப்பாய் கலகத்தில் தென்னகத்தை சேர்ந்தவர்கள் ஏன் பங்கேற்கவில்லை என்பது பற்றிய கட்டுரையும் அந்த வகையில் வரும்..

    ஆமாம். அது சம்பந்தமான ஆவணங்களைப் பார்த்தாலே எளிதாகத் தெரியும். அன்றைய மெட்ராஸ் ஆர்மியில் தலித்துகள் நிறைய இருந்தார்கள். படை செல்லும் இடங்களுக்கு எல்லாம் குடும்பத்தோடு சென்றார்கள்.. ஆங்கிலேயர்கள் அவர்களை ஓரளவு நன்றாக வைத்திருந்தார்கள்... ஆங்கிலேயர் வீட்டுக்குள் அவர்கள் போக முடியும். சமையல் செய்ய முடியும். பின்னர் எதற்காக அவர்கள் போராடவேண்டும்? வடக்கில் கதை வேறு மாதிரி. நிலம் இருந்த உயர்சாதிக்கார்ர்கள் அங்கு பெருமளவில் ராணுவத்தில் சேர்ந்திருந்தனர். இவையெல்லாம் என்னுடைய புரிதல்கள். இவை சரியா இல்லையா என்று சரித்திர ஆசிரியர்கள் தான் சொல்ல வேண்டும்.

தனியார் துறையில் எங்கு வேலை பார்க்கிறீர்கள்? அரசுத் துறைக்கும் தனியார் துறைக்கும் வேறுபாடுகள் எந்த அளவில் உள்ளன?நீங்கள் எழுதிய The Muddy River நாவலில் வரும் சந்திரன் டீ விஷயத்தில் அவரது மேலதிகாரியின் விரோதத்தை சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான். உங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் உண்டா?

Intellectual Ventures என்ற பன்னாட்டு நிறுவனத்தில் பணி செய்கிறேன். அரசுத் துறையில் இந்தியா முழுவதிலும் ஏற்படக் கூடிய பல பிரச்சினைகளக் கையாளக் கூடிய பதவிகளில் இருந்தேன். அதனால் எனக்கு ஓர் அகன்றப் பார்வை கிடைத்தது என்று சொல்லலாம். தனியார் துறையில் இந்த அனுபவம் கிடைக்க சாத்தியம் இல்லை. எனக்கு அரசுத் துறையில் வேலை பார்த்தது பிடித்திருந்தது. தனியார் துறை தரும் பணம் மிகவும் பிடித்திருக்கிறது. தனியார் துறையில் நீங்கள் நன்றாக வேலை பார்த்தீர்கள் என்றால் அதன் பலன் உங்களுக்கு உடனடியாக தெரியவரும். குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில். அதே சமயம் உங்களைப் பிடிக்கவில்லையென்றால் உடனே வெளியேத் தள்ள தயங்கவும் மாட்டார்கள். ஆனால் அங்கேயும் முட்டாள்கள் உண்டு. முட்டாள்கள் உலகெங்கிலும் பரவி விரிந்திருக்கிறார்கள். அவர்களைச் சலித்து ஒதுக்கும் வலை இன்று வரை கண்டுபிடிக்கப் படவில்லை. என்னைப் பொறுத்தவரையில் எனக்கு அரசுத் துறையிலும் சரி, தனியார் துறையிலும் நல்ல சுதந்திரம் கிடைத்தது கிடைத்து வருகிறது. சந்திரனுக்கு நடந்த்து போன்ற மோசமான சம்பவங்கள் என் வாழ்வில் நடக்கவில்லை.

பல்வேறு நகரங்களில் பணி, பயணம் என்று தங்கி இருப்பீர்கள். மனதுக்கு நிறைவு தந்த நகரம் எது?

இந்திய நகரங்களில் எனக்குப் பிடித்தது, கொல்கத்தா தான். அதன் கவர்ச்சி வார்த்தைகளுக்கும், அந்த நகரத்தின் அழுக்குகளுக்கும் அப்பாற்பட்டது. தமிழகத்தில் எனக்குப் பிடித்த ஊர் காரைக்குடி. பழைய அழகுகள் சிறிது மிஞ்சியிருக்கும் ஊர். காரைக்குடியைச் சுற்றி மிக அருமையான இடங்கள் உண்டு. திருமயம், ராமேஸ்வரம் போன்ற இடங்கள். நாங்குநேரிக்கு அருகில் உள்ள திருக்குறுங்குடி கிராமம் மிக அழகியது. உலக அளவில் என்று பார்த்தால் எனக்கு மிகவும் படித்த நகரம் லண்டன் . நகரம் முழுவதும் உலகப் புகழ் பெற்றஅருங்காட்சியகங்கள்,ஓவியக் காட்சியகங்கள். . முக்கியமான விஷயம எல்லா இடங்களுக்கும் அனுமதி இலவசம். எனக்குப் பிடித்த மற்றொரு நகரம் சான்பிரான்ஸிஸ்கொ.

எழுத்தாளர்களை நேரில் காண்பதில் விருப்பமில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். டெல்லியில் பல எழுத்தாளர்கள் இருந்தார்கள்.அவர்களுடன் நட்பு இருந்ததா?

ஆமாம். எனக்கு எழுத்தாளர்களை சென்று சந்திக்க வேண்டும் என்று எண்ணம் இருந்த்தில்லை. என்றாலும் டெல்லியில் சில நண்பர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள்.வெங்கட் சாமிநாதன் எனக்கு நண்பரானது Tiger Claw Tree வெளியான பின்னர் தான். அதற்குப் பின்னர் தான் பல எழுத்தாளர்கள் எனக்கு நண்பர்களானார்கள்.. இந்திரா பார்த்தசாரதியை வாசந்தி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்திரா பார்த்தசாரதி இன்று எனக்கு தந்தை ஸ்தானத்தில் இருப்பவர். வெங்கட் சாமிநாதன் எனது கடுமையான விமர்சகர். அவர் என்ன சொன்னாலும் அதை நான் மதிப்பேன். முன்பு டெல்லியில் இருந்த பாரதிமணி, டெல்லியில் வசிக்கும் யதார்த்தா பென்னேஸ்வரன் போன்றோர் நல்ல நண்பர்கள். தி.ஜானகிராமனை ஒரு முறை பார்த்திருக்கிறேன். டெல்லியில் க.நா.சு வை பார்த்திருக்கிறேன்என்றாலும் அவரிடம் பழக்கம் கிடையாது. அவர் டெல்லியில் இருக்கும்போது நானும் இருந்தேன்.

டெல்லியில் தமிழ் இலக்கிய வாசிப்பு, நூலகங்கள் பற்றி சொல்லுங்கள்..

டெல்லியில் இருக்கும் வாசகர்களை விட நூலகங்கள் அதிகம் என்று நினைக்கிறேன். இங்கு புத்தகங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. தமிழ் இலக்கிய வாசிப்பு என்பது மிக அரிதாக நடக்கக் கூடிய ஒரு விஷயம். தில்லிகை என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக மாதம் ஓர் இலக்கியச் சந்திப்பை தவறாமல் நடத்தி வருகிறது. இதுவரை இலக்கிய பரமார்த்த குருக்கள் அங்கு பேச அழைக்கப்படாதது நல்லதொடக்கத்தின் அறிகுறி என்று சொல்ல வேண்டும். தில்லியில் சமீபத்தில் நடந்த ஒரு பெரிய இலக்கிய இழப்பு வடக்கு வாசல் பத்திரிகை நின்று போனதுதான். பென்னேஸ்வரனின் நண்பர்களாகிய நாங்கள் பிடிவாதமாக பத்திரிகையை நிறுத்தச் சொன்னோம். சொந்தப் பணத்தைப் போட்டு அவர் பத்திரிகை நடத்துவது எங்களுக்குச் சரியாகப் படவில்லை. தில்லியிலிருந்து வடக்கு வாசல் மீண்டும் வரும் சூழ்நிலையை இலக்கியத்தில் நம்பிக்கை கொண்ட தமிழர்கள் சீக்கிரம் உருவாக வேண்டும்.

தற்போது எழுதி வரும் படைப்புகள் பற்றி சொல்லுங்களேன்..

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளைச் சார்ந்த நாவல் ஒன்றிற்கான வரைவைத் தயாரித்திக்கிறேன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வரும். இந்த முறை மூலம் தமிழில் இருக்கும் என்று தோன்றுகிறது. இதைத் தவிர ‘மேற்கத்திய ஓவியங்கள் –ஓர் எளிய அறிமுகம்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று எழுதி வருகிறேன்..

உங்களுக்குப் பல முகங்கள் உண்டு. இவற்றில் எந்த முகம் மக்களுக்கு அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஓர் எழுத்தாளனாக, அதுவும் தமிழ் எழுத்தாளனாக அறியப்படவேண்டும் என்பது தான் என் ஆசை.

த சன்டே இந்தியன் நேர்காணல்