
இன்று எந்திரன் பார்த்தேன். சினிமா ரசிகர்களிடமும் , சீரியல் ரசிகர்களிடமும் (சன் உபயம்) அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்ற காரணத்தாலும் , எரிச்சலூட்டும் வகையிலான விளம்பர யுக்திகள், படம் வெளிவருவதற்கு முன்பே எல்லை மீறி புகழப்பட்ட படம் என்பதாலும் ...ஆரவாரம் விமர்சனங்கள் எல்லாம் ஓய்ந்த பின் ஒரு நாள் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் பாருங்கள் ..சாருவிற்கு கூட டிக்கெட் கிடைக்கவில்லை. எனக்கு என் தம்பி நண்பர்கள் மூலமாக கிடைத்தது. பார்க்கலாம் என்று கிளம்பி விட்டோம். டெல்லி PVR தியேட்டர் ஒன்றின் முன்பு.. 'சார் கொஞ்சம் தள்ளிக்கோங்க ..','மாப்ளே சும்மா... கொல்றாளேடா', 'இது என்ன தியேட்டர் .. நொய்டாவிலே ஒரு தியேட்டரில் படுத்துண்டே படம் பார்க்கலாம்..' போன்ற செந்தமிழ் உரையாடல்கள் காதை நிறைக்கும் அளவுக்கு நம் மக்களின் கூட்டம். எல்லோரும் படத்தை பற்றிய எதிர்பார்ப்போடு வாயில் பாப்கார்னும் கையில் குளிர்பானத்தோடும் 'ஆலய' வாசல் முன் அமர்ந்திருந்தார்கள். முனிர்காவில் இருக்கும் எனக்கு தெரிந்த தமிழர்களில் பாதி பேர் அங்கிருந்தார்கள். குசல விசாரிப்புகள் குதூகல முகங்கள்.
படம் டைட்டில் தொடங்கியவுடன் ஒரே ஆரவாரம். என் தம்பியின் நண்பன் ஒருவன் அடித்த முதல் விசிலுக்கு பல எதிரொலிகள் அரங்கில் ஆங்காங்கு கிளம்பி 'ரஜினி' என்ற பெயர் வரும்போது காது ஜவ்வு கிழிந்து விட்டது. இத்தனை வயதுக்கு பிறகும் தனக்கு அடுத்த தலைமுறையே சற்று தளர்ந்து போய் விட்ட பிறகும் இந்த மனிதருக்கு கிடைக்கும் இத்தனை வரவேற்பும் ..அவர் தனது ஆரமபகாலத்தில் போட்ட பலமான அஸ்திவாரம் தான் என்று தோன்றியது. (எனினும் நம் தமிழக இளைஞர்கள் ரஜினி கட்- அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதெல்லாம் அதீத முட்டாள் தனமின்றி வேறில்லை. இங்குள்ள மீடியாக்கள் அந்த அபத்தங்களை டி.வி.யில் காட்டும் போதெல்லாம் கடுமையான எரிச்சல் வருகிறது. )
படம் ரஜினி படத்துக்குரிய அநியாய அலட்டல் இல்லாமல் தொடங்கியதே ஒரு நல்ல சகுனம் என்று நினைத்தேன். உண்மை தான். நிறைய flaws இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் செதுக்கம் தேவையாய் இருக்கிறது தான் என்றாலும்.. நேர்மையாக சொல்கிறேன். இந்திய சினிமாவில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு மைல்கல் படம் எந்திரன். விஞ்ஞானி வசீகரனின் படைப்பில் உருவான ரோபோவான சிட்டி ஒரு அசத்தல் அறிமுகம். ஆனால் அதை தயாரிக்கும் பணியில் இருக்கும் சந்தானமும் கருணாசும் ஏதோ மோட்டார் மெக்கானிக் போல் காமெடி பண்ணுவது ஷங்கரின் வழக்கமான சொதப்பல்.அதற்கும் அரங்கில் சிரிப்பலை. இன்னும் நம் ரசிகர்களை 'சிறுவர்களாகவே' வைத்திருக்கிறது சினிமா.
கதைப்படி வசீகரன் தயாரித்த எந்திரனை மனித உணர்வுகள் அற்ற , அதை புரிந்து கொள்ள முடியாத 'வெறும் இயந்திரம்' என்று நிராகரிக்கிறார் டேனி டி சோஸா. தனது முயற்சிக்கு கிடைக்காத வெற்றி தனது மாணவன் ஒருவனுக்கு போகக்கூடாது என்ற பொறாமை. அந்த ரோபோவை இந்திய ராணுவத்துக்கு தந்து தந்து தேசப்பற்றை உறுதி செய்ய விரும்பும் வசீகரனும் தனது தயாரிப்புக்கு உணர்வுகளை புரிந்து கொள்ள பயிற்சி தருகிறார். அதுவே அவருக்கு வினையாய் மாறி ,அவரது காதலியான ஐஸ்வர்யாவையே காதலிக்கும் அளவுக்கு 'எந்திரன்' மாறிவிட , டி சோஸாவே சொல்வது போல் , அப்போது தான் படத்தின் கதையே தொடங்குகிறது, அதுவரை அப்பாவி ரோபோவின் குறும்புகளை ரசிக்க முடிகிறது. ரஜினி ரசிகர்கள் விசிலடித்து களைத்தே விட்டார்கள் என்று சொல்லலாம். ரஜினியும் 'எடுப்பார் கை பிள்ளை' என்பது போல் , இயக்குனர் சொல்வதை எல்லாம் நிறைவேற்றி 'பாபா' ரசிகர்களின் வயிற்றுக்கு பால் வார்க்கிறார்.

பிற்பாதியில் ஐஸ்வர்யா தனக்கு கிடைக்காத கோபத்தில் தனது 'கடவுளுக்கே' எதிராய் கிளம்பி விடும் சிட்டி ரோபோ சிட்டியையே புரட்டிப்போடுகிறது. தனது பிரதிகளை தானே உருவாக்கி ( copy-paste!) தனது சாம்ராஜியத்தை அமைத்து அதகளம் செய்யும் சிட்டி & சிட்டீசை தொழிநுட்பம் கொண்டு அடக்குகிறார், வசீகரன். இடையில் திருமண மேடையில் இருந்து வசீகரனை தாக்கி சனா (ஐஸ்வர்யா) வை தூக்கி வந்து தனது 'அசோகவனத்தில்' சிறை வைத்து விடுகிறது எந்திரம் (ன்). வழக்கமான கதை தான் என்றாலும் ஷங்கர் வெளிநாட்டு மற்றும் நம் நாட்டு தொழிநுட்ப கலைஞர்களின் துணையோடு கடுமையாக உழைத்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார். என்னை பொறுத்தவரையில் அவர் தனது ஜென்டில் மேன் படத்துக்கு பிறகு நல்ல திரைக்கதையோடு தந்த ஒரே படம் இது தான் என்று சொல்வேன். இது நாள் வரையில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி வந்த அவர், இந்த படம் மூலம் இந்திய சினிமாவுக்கே (தொழிநுட்ப ரீதியாக !) ஒரு நம்பிக்கையை அளிக்கிறார். மிக பிரமாண்ட கற்பனை. ஆனால் நம் குட்டி பிசாசு போன்ற தமிழ் அபத்த முயற்சிகள் போல் அல்லாமல் நிஜமாகவே அபாரமாக உழைத்திருக்கிறார்கள். படம் முடிந்த பின் வரும் டைட்டிலில் வரும் வெளிநாட்டு தொழிநுட்ப கலைஞர்களின் எண்ணிக்கை வியக்க வைத்தது.
முதல் பாதியில் லவுட் -ஸ்பீக்கரில் அலறவிடும் மேல் தட்டு மற்றும் கீழ்தட்டு (இது ஷங்கரின் வழக்கமான நுண்ணரசியல்!) ரௌடிகளை ரஜினி காமெடியாய் மிரட்டும் காட்சிகளில் அரங்கம் துள்ளுகிறது. தன்னை தாக்க வரும் ரவுடிகளிடம் இருக்கும் 'பொருள்களை' நொடியில் கவர்ந்து கிட்டத்தட்ட அம்மன் கோலத்தில் காட்சி அளித்தவுடன் ..அங்கிருக்கும் பக்தைகள் 'அம்மனே' வந்து விட்டதுபோல் அருள்வந்து ஆடுவது சுவையான கற்பனை. அதே போல் ரோபோ ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து குழந்தை வெளிவந்தவுடன் அதை தூக்கி 'வெல்கம்' சொல்வதும் அருமை. விஞ்ஞானி ரஜினியை 'கவுக்க' ராணுவ தேர்வின்போது ரோபோ ரஜினி வைரமுத்து போல் 'காதல் பெருமை' பேசும் காட்சியில் தியேட்டர் ஆபரேட்டர் கூட சிரித்திருப்பார். பாவ-புண்ணியங்கள் தெரியாத ரோபோவாக அவர் நடிப்பு பல இடங்களில் நன்றாகவே இருக்கிறது. அதே போல் பிற்பாதியில் வில்லனான பின்பு அவர் செய்யும் மேனரிசங்களும் படத்துக்கு பெரிய பலம். தனது ரோபோ படையில் கலந்து விட்ட பொய் ரோபோவை(வசீகரன்) கண்டுபிடிக்க சந்தேகத்துக்குரிய ஒரு ரோபோ உடலில் கத்தியை பாய்ச்சி அது மனிதன் இல்லை என்று தெரிந்தவுடன் 'ரோபோ' என்று கோணவாய் சிரிப்போடு சொல்வது அசத்தல். ஆனால் சில் காட்சிகள் பழைய ஜெய்ஷங்கர் -அசோகன் பட காட்சிகளின் நெடியுடன் இருக்கின்றன.
குறைகள், எரிச்சல்கள் நிறைய இருந்தாலும் உறுத்தும்படி இல்லை என்பதே பெரும் ஆறுதல். சில குறைகளை மட்டும் குறிப்பிடலாம்.
பத்து வருடங்களாக உழைத்து உருவாக்கும் ஒரு அதிசக்தி மிக்க ரோபோவை தனது காதலி கேட்டாள் என்பதற்காக ஒரு பொம்மையை தருவது போல் விஞ்ஞானி வசீகரன் தருவது ஏன்?
தவிர எல்லா கலைகளையும் மொழிகளையும் அறிந்த ஒரு ரோபோவை தயாரிக்கும் விஞ்ஞானி அது குறிப்பிட்ட பிரத்யேக சமிஞைகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற ஒரு அடிப்படை உணர்வோடு உருவாக்காதது ஏன்?
சனாவை ரயிலில் கற்பழிக்க முயலும் 'கயவர்களிடம்' இருந்து காப்பாற்ற உணர்வுள்ள ஒரு ரோபோ , ஏன் தான் தீயிலிருந்து காப்பாற்றும் ஒரு பெண்ணின் நிர்வாண நிலையை உணரவில்லை..?
ரோபோவை அப்ரூவ் அல்லது தடை செய்யும் கமிட்டியின் தலைவரான (?) டி சோஸா ஒரு வெளிநாட்டு ( அவர்கள் பேசும் முறையை பார்த்தால் ரஷ்யர்கள் போல் இருக்கிறது..) தீவிரவாத கும்பலுக்கு 'கெட்ட எந்திரர்களை' தருவதாக உறுதி அளிக்கிறார். அவர்கள் பின்பு சீனிலேயே இல்லை ஏன்?
தனது கனவை , 'பொருந்தா காதல்' கொண்ட ரோபோ தகர்த்தவுடன் கோபத்தில் அதை மனிதனை வெட்டுவது போல் வெட்டியா வீழ்த்துவான் ஒரு விஞ்ஞானி? அதை dismantle செய்யவேண்டியது தானே? அதை வெட்டி குப்பையில் போடுவது பெரிய லாஜிக் ஓட்டை.
ரோபோவால் கடத்தப்பட்ட ஐஸ்வர்யா , ஏதோ காமன்வெல்த் கிராமத்தில் சுகாதாரம் அற்ற தங்கும் அறையில் தங்க வைக்கப்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீராங்கனை போல் அப்செட்டாக இருக்கிறாரே தவிர ஒரு பதற்றம் அல்லது கவலை இல்லை. இது ஷங்கரின் கதாநாயகிகள் தரும் பெரும் எரிச்சல்.
இன்னும் சில திரைக்கதை ஓட்டைகள் - தவறுகள் இருந்தாலும் , ரஜினி-ஐஸ்வர்யா ராய்- ஷங்கர் -மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் அபார உழைப்புக்காகவே இந்த படத்தை ஒரு சினிமா ரசிகனாக வரவேற்கிறேன், படத்தின் தயாரிப்பில் சிறப்பை காட்டி இருந்தாலும் மலிவான விளம்பர முயற்சிகளுக்காக சன்னின் தலையில் ஒரு நறுக் கொட்டு வைத்தபடிதான்..