Wednesday, December 15, 2010
கவிதைகள்..
அகதி
அறைக்கு வெளியே
இரவின் தடம் பதிந்திருக்கிறது.
என் வெளிச்ச அறைக்கு வெளியே
காத்திருந்து திரும்பியிருக்கிறது
இரவு
தேடிய இரை கிட்டாமல்.
பகல் முடிந்த தருணம் முதல்
பதுங்கியபடி இருந்தேன் அறைக்குள்.
விடியும் வரை இரவின்
வெறி கொண்ட அமைதி
அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தது.
கோபம் கொண்ட இரவு
என் வெளிச்சத்தைப் பிடித்திழுத்து
மென்று உமிழ்ந்தது.
ஒருவரை ஒருவர் அணைத்தபடி
நடுங்கிக்கொண்டிருந்தோம்
நானும்
என் நிழலும்.
என்னுடலின் ஒருபாகமும்
சிக்கவில்லை
கதவிடுக்கின் வழி துழாவிய
இரவின் நாவுகளுக்கு.
இன்றும் வருவதாய் சொல்லிச்சென்ற
இரவுக்கு பயந்து
வெளியில் செல்லாமல் கிடக்கிறது
என்னுலகம்.
-வடக்கு வாசல்
பிப்ரவரி 2008
புதிய வாடிக்கையாளன்
வனாந்திர இரவொன்றில்
தனித்து விடப்பட்டேன்.
இருளின் முடிச்சுகளை
தடவி முன்னேறுகிறேன்.
தலைவிரிகோலமாய் பறந்து
காட்டு மரங்கள் ஒன்றையொன்று
புணரும் காட்சியில்
ஒட்டமெடுத்தன பயங்கொண்ட
பேய்கள்.
நான் கொன்றவர்களின் பேய்கள்
என்னை பார்த்தபடியே
கடந்து போயின,
கையசைத்து
குட்டிப்பேயொன்று.
பயந்து வியர்த்ததில்
உடலெங்கும் பூத்தன
உதிரத்துளிகள்.
செத்த யானையொன்றை
இழுத்துச்சென்ற எலி
மரப்பொந்திற்குள் இட்டு
மறைத்தது.
இரவின் நீள் கரங்கள்
நடுங்கும் என் கரங்களைப்
பற்றின.
உதறி ஓட முனைகையில்
பிணங்கள் எழுந்து வந்தன
பிணக்கு தீர்க்க.
பேயின் ஒப்பாரி போல்
கேட்டுக்கொண்டே இருந்தது
அவள் குரல்,
வீடு நோக்கி செல்லும் என்
நேர்பாதை முழுதும்.
-வடக்கு வாசல்
ஜூலை 2006.
என் உலகின் மீச்சிறு கூட்டில்
புழுவொன்று நெளிந்திட
வேறொரு பறவையின் கூர் அலகு
பசியின் நெடி வீச
கொத்த முயல்கிறது
தன் சிறகு
என் வானம் கிழிபடும் வேகம் அதிர.
முன்னெப்போதோ நான் இட்ட எச்சங்களை
என் விந்தாய் உருவகித்து
தன் யோனிக்குள் சொட்டி
மூடிக்கொள்கிறது தன்
விரக ரெக்கைகளை.
நானில்லாத என் அறைக்குள்
அங்குமிங்கும் அலையும்
பறவை
என் நிழல் படிந்து கறையான
தரையில் சிறகதிரப் புரள்கிறது.
என் படுக்கையில்
எச்சமிடுகிறது.
நான் விட்டுச்சென்ற
தனிமையை
கேலி செய்கிறது.
என்னுலகக் கதவு திறக்கும்வரை
காத்திருக்கும் அது
திறந்தவுடன் பறந்துசெல்கிறது
என்
பழைய காதலியாகி.
-உயிரோசை
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி வெங்கட்.
ReplyDeleteநல்ல பகிர்வு ..
ReplyDeleteகவிதை அருமை ...
நல்லதோர் கவிதை.
ReplyDelete@கோவை2தில்லி
ReplyDeleteமிக்க நன்றி! உங்கள் தளம் படித்தேன், நன்று.
ம்.
ReplyDeleteஓ..
ReplyDelete