அன்புள்ள சந்திரமோகன்
உங்கள் சொல்வனம் கட்டுரைகளைப் படித்து விட்டு தொடர்ந்து இந்த ப்ளாகிற்கு வந்தேன். ஒரு நல்ல ரசனையுள்ள பதிவரை அறிமுகப் படுத்தியதற்கு சொல்வனத்திற்கு நன்றி.
உங்களது தற்பொழுதைய கல்மாடி கட்டுரையைப் போன்ற முழுமையான உண்மைகள் கொண்ட கட்டுரைகள் நம் தமிழ் பத்திரிகைகளில் வருவது இல்லை. உங்கள் சினிமா விமர்சனங்களும் என் ரசனையை முழுமையாக பிரதிபலிப்பவையே. ஒரு நண்பரிடம் தமிழில் நல்ல நகைச்சுவைப் படங்கள் வெகு அரிதாகவே வருகின்றன என்று சொன்ன பொழுது “என்ன அப்படிச் சொல்லிப் போட்டீங்க? உடனே தமிழ் படமும், இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கமும்” பாருங்க என்றார். அவர் மட்டும் அல்ல பொதுவாகவே எந்தவொரு சராசரி தமிழருடன் பேசினாலும் இப்படித்தான் சொல்கிறார்கள். ஏற்கனவே இம்சை அரசனைப் பாதி பார்த்து விட்டு கடும் எரிச்சலில் இருந்ததினால் எச்சரிக்கையாக அவர் சொன்ன எந்த படங்களின் அருகிலேயே போகக் கூடாது என்று முடிவு செய்தேன். பருத்தி வீரன், சு புரம், களவாணி என்று இவர்களது சினிமாப் புரட்சிக்கு எல்லையே இல்லை. களவாணியில் ஒரே ஆறுதல் அந்த லும்பன் வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு தண்ணி அடிக்கிறான் கைலி தஞ்சாவூர் பக்கம் கிடையாதாம் ஆகவே ஆத்தெண்ட்டிக் தஞ்சாவூர் மூவி :) சமீபத்தில் ஒரு வித்தியாசமான தமிழ் பட இயக்குனருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது “தமிழில் சமீப காலத்தில் வேலைக்குப் போகும் இளைஞனைக் காட்டி எத்தனை படங்கள் வந்துள்ளன?” என்று கேட்டார். யோசித்ததில் ஒன்றிரண்டு தென்பட்டது. அவ்வளவுதான். தமிழின் ட்ரெண்டே வேலை வெட்டி இல்லாமல் பீடி குடித்து தண்ணி அடித்து காதலுக்காக அல்லது காதலர்களைச் சேர்த்து வைக்க அல்லது ரவுடிகளுக்காக அலையும் விடலை லும்பன்கள்தான். இவர்கள் மட்டும்தான் தமிழ் நாடா? நம் சம காலச் சமூகத்தின் பிரச்சினைகள் இவை மட்டும் தானா அல்லது இவர்கள்தான் நம் சமூகத்தின் கண்ணாடி பிம்பங்களா? காதலும், அருவாளும், copyயும் இல்லாமல் வந்த உருப்படியான தமிழ் படங்கள் மொத்தம் ஒரு பத்து கூடத் தேறாது. 75 வருடங்களாக காதலை மட்டும் சொல்லி இன்னும் தீர்ந்தபாடில்லை. இருந்தும் ஒரு உன்னதமான காதல் சினிமாவும் வந்த பாடில்லை. இப்பொழுது காதலுடன் கூடவே தொட்டுக் கொள்ள அருவாளும் வேண்டி உள்ளது, இல்லாவிட்டால் இ கோ மு சி போன்ற அசட்டுப் படைப்புக்கள். நம் மன அமைதிக்கு இவற்றில் இருந்து தள்ளி நிற்பதே நல்லது. பருத்தி வீரனையும், சு புரத்தையும், நாடோடியையும், களவாணியையும், வி தா வருவாயாவையும் நாம் இன்று விமர்சித்தால் தமிழ் பண்பாட்டின் எதிரிகளாக காலத்துடன் ஒட்டாத் பெருசுகளாக அடையாளம் காணப் பட்டு இகழப் படுகிறோம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையைச் சொல்ல உங்களைப் போல ஒருவர் இருப்பது கண்டு ஒரு திருப்தி. தொடருங்கள்
அன்புடன்
ச.திருமலைராஜன்
..........
மிக்க நன்றி ராஜன்,
உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும் தொடர்ந்து எழுதுவதற்கான உத்வேகத்தையும் தருகின்றன. நானும் உங்கள் கட்டுரைகளை சொல்வனத்திலும் மற்ற இணைய பக்கங்களிலும் படித்திருக்கிறேன். விஷய ஞானமும் அதை வீரியம் குறையாமல் அதே சமயம் மிரட்டாமலும் விஷயங்களை எங்களுக்கு தரும் முக்கிய எழுத்தாளரான நீங்கள் என்னை கவனித்திருப்பதற்கு நான் நண்பர் சேதுபதி அருணாசலத்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். என் கட்டுரைகளை அவர் சொல்வனத்தில் வெளியிட்ட பிறகு தான் என்னை நிறைய வாசகர்களும் உங்களை போன்ற எழுத்தாளர்களும் கவனித்து இருக்கிறார்கள்.
நீங்கள் மிக சரியாக சொன்னது போல் இங்கு பெரும் அளவில் வெற்றி பெரும் படங்களை பற்றி நாம் விமர்சனம் செய்தால் 'பினாத்தல் பெருசுகள்' என்று பெயர் பெற்று விடுகிறோம். எனது களவாணி பற்றிய கட்டுரையை படித்து விட்டு ஜீரணம் செய்ய முடியாத 'உயர் ரசனை' குழு (துரதிருஷ்ட வசமாக நல்ல உலக சினிமா பற்றி தெரிந்த சிலரும் இதில் அடக்கம்.) என்னை தமிழகத்தின் 'உண்மை நிலை தெரியாத' ஒருவன் என்று கிண்டல் செய்ததை அறிந்தேன். சிலர் என்னிடம் அந்த படத்தை பற்றி விவாதமும் செய்கிறார்கள். காதலியை மணக்கப்போகும் மாப்பிள்ளையை கடத்தி வைத்து கொண்டு அவள் அண்ணனிடம் ' இப்போ என்ன பண்ணுவே உன் தங்கச்சி கழுத்தில் நீயே தாலி கட்டுவியா..?' என்று கேட்கும் 'பண்புள்ள' ஒருவனை நம் தமிழ் சினிமா கொண்டாடுவதுடன் அதை நம் ரசிகர்கள் பார்த்து இந்த மாதிரி படம் வந்து எத்தனை நாள் ஆகிறது என்று சிலாகிக்கிறார்கள். இந்த படம் மட்டும் இல்லை. விருந்தாளி , பெருச்சாளி என்று யதார்த்த படங்களின் வருகை பெருத்துக்கொண்டே போகிறது. இவ்வளவு மோசமான ரசனையை நான் போஜ்புரி ரசிகர்களிடம் கூட பார்த்ததில்லை. ( பீகார் போன்ற மாநிலங்களில் தயாராகும் படங்களை பார்க்கும் துரதிருஷ்டம் உங்களுக்கு நேர வேண்டாம், நான் முன்பு வேலை பார்த்த இடத்தில அந்த மாநில மக்கள் பார்த்து ரசிக்க தயாராகும் படங்களின் எடிட்டிங் வேலை நடக்கும்..) ரசனை மேம்படாமல் படைப்பு மெருகு அடையாது.
மேலும் நம் elite இயக்குனர்களான மணிரத்னம் , கௌதம் மேனன் போன்ற மேதைகள் எடுக்கும் படங்களில் வரும் கதாபாத்திரங்களின் அலட்டலை சகிக்க முடியாது. மணியின் படங்களில் இந்த எரிச்சலூட்டும் elite lumban களை பார்க்க முடியும். நம் ரசிகர்களுக்கு இந்த படங்களை பிரித்து பார்க்கும் பக்குவமும் இருப்பதில்லை. பெரும்பான்மையான பேர் சினிமாவை வெறும் பொழுதுபோக்கு என்று தான் நினைக்கிறார்கள். இந்த படங்களின் அபத்தங்களை பற்றி பேசினால் 'எங்களுக்கு இது தான் வேலையா..போனமா பாத்தோமான்னு இல்லாம அத போட்டு நோண்ட எங்களுக்கு எது நேரம் என்று கேட்டு விட்டு' அன்றாட வேலை பார்த்து அடுத்த அபத்த படத்துக்கு தயாராகி விடுவார்கள்.
பாப்போம். ரசனையில் ஏதேனும் மற்றம் நிகழும்படியான உண்மை படங்கள் தமிழில் வருமா என்று..
மிக முக்கியமான கருத்து என்பதால் உங்கள் பின்னூட்டத்தை கடிதமாக பிரசுரித்திருக்கிறேன். கருத்துக்கும் கடிதத்துக்கும் நன்றி ராஜன்..