Thursday, August 23, 2012

நீரில் கரையாத கறைகள்:சிறுகதை

கனகு அக்கா அந்தச் சுவரில் என்றோ படிந்து விட்ட பெரும் கறையைப் போல அசையாமல் நின்றுகொண்டிருந்தாள். நீண்ட நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தவளிடம் சரியாகப் பேச முடியாதபடி அலுவலகத்துக்குக் கிளம்ப வேண்டிய அவசியத்தில் அங்குமிங்கும் அலைந்து உடைகளைத் தேடிக்கொண்டிருந்தேன். மணிகண்டன் இன்னும் குளித்துக் கொண்டிருந்தான். இந்த அறைக்கு வந்து மூன்று நாட்கள் தான் ஆகின்றன. வந்த நாளிலிருந்து வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருந்ததால் புதிய அறையில் பொருட்களை அவற்றுக்குரிய இடங்களில் வைக்க நேரமே இருக்கவில்லை. ஏதாவது ஒரு காரணம். களைப்பு. குடி. சோம்பேறித்தனம் என்று நானும் மணிகண்டனும் கிடைத்த நேரத்தில் ஓய்வாக சந்தோஷமாக இருப்பதையே விரும்பியதால் உடைகளும் போர்வைகள் ரஜாய்களும் சுருண்டு குவிந்து ஒரு ஜவுளிக்கடையின் பழைய ஸ்டோர் ரூம் மாதிரி இருந்தது அறை. வீட்டுக்காரன் மாட்டி வைத்திருந்த பழைய விளக்கில் அந்தப் புதிய அறை புராதனத் தன்மையுடன் மங்கிப் போய் தெரிந்தது. நெருக்கமான சந்துகளுக்குள் இருக்கும் வீடுகளின் அறைகள் என்பதால் பகலிலும் விளக்கு எரிந்தாகவேண்டும். நீங்கள் ஒரு இரண்டு வாரம் ஒரு சந்துப் பக்கம் போகாமல் இருந்து விட்டு, மீண்டும் சென்று பார்த்தால் அங்கு ஒரு புதிய கட்டிடம் உங்களை வரவேற்கும். எங்களைப் போல் பிழைப்புக்காக இங்கு வருபவர்களைத் தங்கவைத்து காசு பார்க்கவென்றே புறாக்கூண்டு முதல் நவீன வசதிகொண்ட அறைகள் வரை கட்ட , முனிர்கா கிராம மக்கள் எந்நேரமும் சிமென்ட் மூட்டைகளை கழுதைகளின் மேலேற்றி வருடம் முழுதும் அலைந்துகொண்டே இருப்பார்கள்.

காலையில் சீக்கிரமே வேலைக்குச் சென்று இரவு நேரம்கழித்து அறை வந்து சேரும்போது உடலே அசதியாகிவிடும். கனகு அக்கா தான் எங்கள் துணிகளைத் துவைப்பதுடன் வீட்டைக் கூட்டிப் பெருக்கி வைப்பாள். வாரம் நான்கு நாள். எல்லாவற்றுக்கும் சேர்த்து மாதம் அவளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுவோம். நான் டெல்லி வந்த புதிதில் இருந்தே அவள் தான் எனக்குத் துணி துவைக்கிறாள். டெல்லியில் தமிழர்கள் கணிசமாக வாழும் பகுதிகளில் ஒன்றான முனிர்காவில் கனகு அக்கா போல் பல தமிழ்ப் பெண்கள் வேலை செய்கிறார்கள். பழக்கத்தைப் பொறுத்து சம்பளம் தருவார்கள் இங்கு வேலை கிடைத்து தங்குவதற்கு முனிர்காவுக்கு வந்து விட்ட தமிழ் இளைஞர்கள். எனக்குத் தெரிந்து இவ்வளவு தான் தர வேண்டும் என்று கெடுபிடி செய்யும் பெண்களைப் பார்த்ததில்லை. தினமும் காலை கதிர்வேல் மெஸ்சுக்கு சாப்பிடப்போகும்போது இந்தப் பெண்கள் மெஸ்சுக்கு வெளியே சுவரில் சாய்ந்து டீ குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இன்று எந்த வீட்டுக்கு வேலைக்குப் போவது என்று முடிவெடுப்பது முதல் வேலை செய்யும் வீடுகளில் நடக்கும் விவகாரங்கள் வரை தணிந்த குரலில் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். ஓரிருவர் தரையில் குந்தியபடி அமர்ந்திருப்பார்கள். பெரும்பாலும் சேலம் பக்கத்திலிருந்து பிழைப்புக்காக வந்தவர்கள்.
“இல்லீங்..ஆமாங் ..” என்று தான் பேசுவார்கள்.

கோடை காலத்தில் வியர்வையும் குளிர்காலத்தில் எலும்பில் வலியெடுக்க வைக்கும் குளிர் நீரும் எங்களைப் போன்ற சோம்பேறிகளை துணி துவைக்கும் பணியில் இருந்து தள்ளி வைக்கும். எங்கள் அழுக்குகளைத் துவைக்கத் தெரிந்த இந்தப் பெண்களுக்கு மட்டும் வியர்வையும் குளிரும் ஏன் ஒன்றுமே செய்வதில்லை என்று தோன்றும். பிழைப்புக்காகத் தான் அவர்களும் நாங்களும் இரண்டாயிரம் கிலோமீட்டர்களை உறவுகளின் விசும்பல்களுக்கு இடையில் கடந்து வந்திருக்கிறோம்.

எங்களால் முடிந்தவரைத் துணிகளை அழுக்காக்கி அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் திரும்பவும் சுத்தமாக்கி எங்களுக்குத் தருவார்கள். சில சமயம் ஊருக்குப் போக நேர்ந்தால் தங்களுக்கு பதில் வேறு பெண்கள் யாரையாவது அறிமுகப்படுத்தி விட்டுப் போவார்கள். தற்காலிக ஏற்பாடு. எனக்கு கனகு அக்காவை விட சரியாகத் துணி துவைக்கும் பெண்ணாக யாரும் ஏனோ அமையவில்லை. அவள் எத்தனை துணி என்றாலும் முகம் சுளிக்காமல் தன் சகோதரன் துணியைத் துவைப்பவள் போல் அக்கறையுடன் நேரம் எடுத்துக்கொண்டு துவைப்பாள். சட்டையின் காலரில் அழுக்கைத் தேட வேண்டி இருக்கும். எங்கள் உள்ளாடைகள் தவிர்த்த மற்ற எல்லாத் துணிகளும் அவள் கை பட்டு ஒளிரும். நானும் மணியும் ஆளுக்கொரு சாவியை எடுத்துக் கொண்டு அவளிடம் ஒரு சாவியைக் கொடுத்து வைத்திருந்தோம். அவள் நாங்கள் அலுவலகம் சென்ற பின் வந்து துணிகளைத் துவைத்து அறையை சுத்தமாக்கி வைப்பாள். இரண்டே நாளில் அறை மீண்டும் குப்பையாகி விடும். சிகரட் துண்டுகள், மிச்சமிருக்கும் நம்கீன் பாக்கெட்டுகள் அறையெங்கும் விரவிக் கிடக்கும். நான் எடுப்பேன் என்று மணியும் அவன் எடுப்பான் என்றும் நானும் நினைத்து கடைசிவரை அங்கேயே கிடக்கும் பொருட்களை கனகு அக்கா தான் எடுத்து வைப்பாள். கட்டாயமாக வார இறுதியிலும் அவ்வப்போது வார நாட்களிலும் குடி இருக்கும் என்பதால் எங்கள் அறையில் பாட்டில்களுக்குப் பஞ்சம் இருக்காது. ஒரு முறை, உபயோகிக்கப்படாமல் கிடக்கும் எங்கள் கிச்சனுக்குள் நுழைந்து பார்த்த சதீஷின் மனைவிக்கு மயக்கம் வராத குறை. ” என்னண்ணா ..இவ்வளவா குடிப்பீங்க ?” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தாள். சொல்லாமல் சதீஷும் அவளும் வருவார்கள் என்று நாங்கள் நினைக்கவே இல்லை.

கனகு அக்கா அந்த பாட்டிலகளை எடுத்துக் கொள்வாள். நிறைய இருக்கும் என்பதால் அவற்றை வெளியில் கொடுத்து காசு வாங்கிக்கொள்ளட்டும் என்று அவளுக்கு அவற்றைக் கொடுத்து விடுவோம். அதே போல் பழைய துணிகளையும் அவளுக்குக் கொடுத்து விடுவோம். மற்றப் பெண்களாவது ஹோலி தீபாவளி சமயத்தில் போனஸ் பணம், புதுத் துணி கேட்பார்கள். கனகு அக்கா அதையும் கேட்கமாட்டாள். நாங்களாகக் கொடுத்தால் மறு பேச்சிலாமல் வாங்கிக் கொள்வாள்.அது அவள் சுபாவம். அதிர்ந்து பேச மாட்டாள். அவளிடம் ஒரு செல்போன் உண்டு. ஆனால் அவளாக போன் பண்ணிப் பேசத் தெரியாது. படிக்கத் தெரியாதவளுக்கு ஆட்களின் பெயர்களுடன் நம்பரை சேமித்துவைத்துக்கொள்ள என்று இங்கு யார் மொபைல் தயாரிக்கிறார்கள்? ஏதோ அழைப்புகளை எடுத்துப் பேசும் அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறாள்.

சம்பளம் கொடுக்கிறார்கள் என்றோ மரியாதைக்கோ அவள் தம்பி அல்லது மகன் வயதுள்ள எங்களை அண்ணே என்று தான் அழைப்பாள்.
யார் வீட்டிலாவது அதிகத் துணிகள் ஊற வைத்துத் துவைக்க சொன்னால் எதுவும் பேசாமல் துவைத்து விடுவாள். இங்கு வந்து அழுவாள். “அப்பிடி என்ன அவசியம்…துவைக்க முடியாதுன்னு சொல்லவேண்டியது தானே?” என்றால் பேசாமல் இருப்பாள். பல இடங்களில் துவைக்க வேண்டிய கட்டாயம். அவள் இருக்கும் ஜுக்கி குடிசைப் பகுதிக்கு அவளுக்கு இருக்கும் கடன் அதிகம் தான். மூன்று லட்சம் கடன் வைத்திருந்தாள். பையன் கல்யாணத்துக்கு செலவு செய்ய இன்ன பிற தேவைகளுக்கு என்று வெளியில் வாங்கி வாங்கி இந்த அளவுக்கு கடன் சேர்ந்திருந்தது. அந்தப் பையன் கல்யாணமான இரண்டாவது நாளில் தூக்குமாட்டிகொண்டு இறந்து போனான். ஏதோ மெக்கானிக் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவனை நம்பி கனகு அக்கா வாங்கிய கடன் அவளை ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து வீடுகளுக்காவது கை ஒடியத் துவைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இனி எத்தனை முறை பிறந்தாலும் அவள் சம்பாத்தியம் கடனை அடைத்து விடுமா தெரியவில்லை. அவளது கணவனும் ஆதரவாக இருப்பது போல் தெரியவில்லை. சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அவன் குடிக்கே செலவு செய்துவிடுவான் என்று அவ்வப்போது சொல்வாள். வாரத்துக்கு எட்டுநாள் குடிக்கும் எங்களால் என்ன நியாயம் சொல்லி விட முடியும்?
மணிகண்டன் குளித்து முடிக்க வழக்கத்தை விட அதிக நேரமானது. என் நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு கிடைத்த சாக்சின் அடிப்பாகம் நூல் பிரிந்து தொங்கியது. அதை வீசியெறிந்து விட்டு வேறொன்றைத் தேட அந்த துணிக் குவியலுக்குள் கைவிட்டபோது தான் எதேச்சையாக அறையின் மூலையில் அந்தப் பையைப் பார்த்தேன். திடீரென்று அந்த இடத்தில அது முளைத்திருந்தது போலிருந்தது. அதற்குள் நேற்று கைலி பனியன் உள்ளிட்ட சில துணிகள் தெரிந்தன. கனகு அக்கா அதன் அருகில் தான் நின்று கொண்டிருந்தாள். அப்போது தான் ஏதோ விஷயம் புரிந்தவன் போல் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் முகம் அழுது அழுது வீங்கியிருப்பது தெரிந்தது. சந்தேகம் கலந்த குற்றவுணர்ச்சி மனதின் சுவர்களில் அழுத்தமாய் படிய ” என்ன ஆச்சு அக்கா?” என்றேன். இதுவரை அவள் மணிகண்டன் குளித்து முடித்தவுடன் துணிகளை ஊறவைக்கக் காத்திருந்தாள் என்றே நினைத்திருந்தேன்.
“இத வச்சிக்கிங்க அண்ணே” என்றாள், வெடித்துவிடத் தயாராய் இருக்கும் அழுகையின் மேல் வார்த்தைகளை ஒட்டவைத்து. “நான் இதை திருடிட்டுப் போகலைண்ணே” அந்தப் பையை எடுத்து என்னிடம் நீட்டினாள். நடுக்கத்தை மறைக்க அவள் உடலை விறைப்பாக்கி நிற்க முயல்வது போலிருந்தது.
“அதான் இத வேணாம்னு சொல்லிட்டனே ..எதுக்கு இதக் கொண்டாந்தீங்க” என்றேன். குற்றவுணர்வை சமாளிக்க குரல் சற்று உயர்ந்தது.
“எம்புருஷன் என்ன வீட்டுக்குள்ள சேக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு..ஊரான் வீட்டுலே திருடுற தேவடியான்னு என்னை போட்டு அடிச்சிட்டாருண்ணே” என்றவள் கண்களில் அதுவரை தேக்கப்பட்டிருந்த கண்ணீர் அந்தக் கறுத்த முகத்தில் பாறையில் கசியும் நீரைப் போல் வழியத் தொடங்கியது.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. விஷயம் மெள்ள மெள்ள நினைவுக்கு வந்து சம்பவத்தின் தீவிரம் ஒரு கனத்த இருள் போல் என் மனதுக்குள் படிந்தது. முன்பிருந்த அறையை காலி செய்யும்போது பழைய உபயோகப்படாத துணிகள் பேப்பர்கள் உள்ளிட்ட பொருட்களை அங்கேயே விட்டு விட்டோம். எப்படியும் சுத்தம் செய்ய வரும் கனகு அக்கா அவளுக்கு உபயோகப்படும் என்று நினைக்கும் பொருட்களை எடுத்துக்கொள்வாள் என்பது எங்களுக்குத் தெரியும். ஒவ்வொருமுறை அறை மாறும்போதும் இது தான் வழக்கம். அன்றும் இப்படித் தான் நடந்தது. இத்தனைக்கும் அவள் பக்கத்துக்கு அறைக்காரனிடம் எனக்கு போன் பண்ண சொல்லிப் பேசி பழையப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கவும் செய்தாள்.
சரியென்று விட்டு அவசரமாக என் பாஸ் அழைத்ததின் பேரில் லீவ் போட்ட நாளில் அலுவலகம் சென்று விட்டேன். இரவு எட்டுமணிக்கு வந்து பார்க்கும்போது தான் அந்தப் பழைய அறைக்கு வெளியில் உள்ள கொடியில் காய்ந்து கொண்டிருந்த என் பனியன்கள் இரண்டு கைலி மற்றும் வீட்டுக்குள் அணியும் டீஷர்ட் போன்றவை இல்லாதது உறைத்தது. எல்லா துணிகளையும் கிடைத்தவாக்கில் அள்ளி வெவ்வேறு பைகளில் அடைத்து விட்டதால் ஷார்ட்ஸ்,கைலி போன்றவை எந்தப் பையில் இருக்கின்றன என்று குழம்பி நின்றுகொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் என் கையாலாகதத் தனமும் அவசரமும் உருமாறி அக்கா மேல் எரிச்சல் தோன்றியது. அந்தக் கைலியும் பனியனும் நான் வழக்கமாக அணிவது தானே. அதை எதற்காக எடுத்துச் சென்றாள் என்று கணநேரம் கோபம் தோன்றியது. நேரம் பார்க்காமல் அவள் நம்பருக்கு போன் செய்தேன். அவள் கணவன் தான் பேசினான். இந்த நேரத்துக்கு என்ன போன் என்று கேட்கும் குரலில் “சொல்லுங்க ஸார்..என்ன விஷயம்..அவ சமச்சிக்கிட்டிருக்கா” என்றான்.
“இல்ல ..அவுங்க கிட்டே ஒண்ணு கேக்கணும்” என்றேன்.
“இந்தா..சாரோருத்தர் பேசுறாரு..பேசு” என்று அவளிடம் கொடுத்தான் அந்தாள்.
எடுத்தவுடன் “என்னைக் கேட்காமல் ஏன் என் கைலியை எடுத்துட்டுப் போனீங்க ?” என்றேன். என் குரலில் கலந்திருந்த கோபம் அவளை எப்படி உறுத்தி இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.
“இல்லேண்ணே ..ஒங்க கிட்டே கூட போன் பண்ணிக் கேட்டேனே..நீங்க தானே எடுத்துக்க சொன்னீங்க ” என்றாள் குழம்பிய குரலில். அந்தக் கைலி பனியன் பற்றி அவள் போன் பண்ணிக் கேட்கும்போது எனக்கு நினைவே இல்லை. சரி ஏதோ குழப்பம் என்று தோன்றியது.
“சரி ..பரவால்லே..நா வேற கைலி தேடிக்கிறேன்..அத நீங்களே வச்சிக்குங்க” என்றேன்.
“சரிண்ணே” என்றவளின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிறகு மணிகண்டன் வந்த பின் புது அறைக்கான சந்தோஷத்தில் குடிக்க ஆரம்பித்ததில் எல்லாமே மறந்து விட்டது. அது ஒரு விஷயமே இல்லை என்பதால் நான் வழக்கமான வேலைகளில் தொலைந்திருந்தேன்.

அக்கா இரண்டு நாளும் இங்கு வந்திருக்கிறாள். இரண்டு நாளும் எனக்கும் மணிக்கும் சீக்கிரமே அலுவலகம் செல்ல வேண்டி வந்ததால் அவள் வரும் நேரம் முன்பே கிளம்பிவிட்டிருந்தோம். புது அறைக்கு கதவிலேயே பொருத்தப்பட்ட பூட்டு என்பதால் பழைய சாவி அவளுக்கு பயன்படவில்லை. இன்று வீட்டில் நாங்கள் இருக்கும்போது வந்து விட்டாள்.
“என்னக்கா ..அவரு என்ன சொன்னாரு? நீங்க திருடினீங்கன்னு நான் சொல்லவே இல்லையே?” என்றேன் அடைக்கும் குரலில்.
அந்தாள் அக்கா போனில் பேசும்போதே மொபைலுக்கு அருகில் காதை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான்.
நான் பேசியதை அவன் வேறு மாதிரி எடுத்துக்கொண்டு அவளைத் திருடி என்று சொல்லி அடித்திருக்கிறான். தான் திருடவில்லை என்று திரும்பத் திரும்ப கண்ணீர் மல்க சொன்ன போதும் அவளைக் கெட்ட வார்த்தைகளில் திட்டி உதைத்திருக்கிறான்.
“இன்னிக்கு.. கைலியக் காணோம்னு சொல்லுவானுங்க..நாளைக்கி செயினைக் காணோம்னு போலீசோட வருவானுங்க..ஏண்டி இப்படிப் பண்ணின தேவடியா” என்று கேட்டுக் கேட்டு அடித்ததாக அவள் அழுதபடி சொன்னபோது நான் உறைந்திருந்தேன்.
அன்று இரவு முழுவதும் அவளை வீட்டிற்கு வெளியிலேயே நிறுத்தி வைத்தானாம் அவன்.
“அவர் அடிச்சது கூட பரவாயில்லண்ணே ..என்ன திருடின்னு சொல்லி சொல்லி திட்டுனதத் தான் என்னாலே தாங்கவே முடியல” என்றாள் விசும்பல்களுக்கு இடையே. தாயை ஒத்த வயதுடைய ஒருத்தி ஒன்றுமே செய்யாத குற்றத்துக்கு பழி சுமந்து என் முன் நின்று கொண்டிருக்கிறாள். பேச்சு மறந்தவன் போல் நின்றுகொண்டிருந்தேன்.

எத்தனை வருடங்களாக என் அழுக்குகளைத் துவைப்பவள். எத்தனை முறை நான் பாக்கெட்டுகளில் மறந்து வைத்து விட்ட பணத்தை எடுத்து டேபிளில் வைத்து விட்டுப் போயிருக்கிறாள். எத்தனை முறை சம்பளம் தர தாமதமானாலும் அதைப் பற்றி கேட்காமலேயே துணி துவைத்து சென்றிருக்கிறாள். அந்த அழுக்கு கைலியை வைத்து அவள் எந்த ராஜ்ஜியத்தை ஆளப் போகிறாள். அவசரப்பட்டு நான் செய்த முட்டாள் தனம் அவள் வாழ்க்கையில் எத்தனை வலி தரும் கொடூரத்துக்குக் காரணமாகி விட்டது என்று குமைந்து கொண்டிருந்தேன். அதற்குள் குளித்து விட்டு வந்திருந்த மணிகண்டன் நடந்ததை யூகித்தவனாக என்னையும் அவளையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.

“இத உங்க கிட்டே குடுத்துட்டு வந்தா தான் என்ன வீட்டுக்குள்ளாற விடுவேன்னு சொல்லிட்டாரு” என்று அந்தப் பையை என் கைபிடித்துக் கொடுத்தாள். நான் அசூசையாக அதை உதறி ” தயவு செஞ்சி நீங்களே வச்சிக்கிங்கக்கா..நா அந்தாளு கிட்டே பேசிக்கிறேன்” என்றேன்.
பலமுறை வற்புறுத்திய பின் அந்தப் பையை அவள் தன் கையில் எடுத்துக்கொண்டாள். வீட்டுக்குக் கொண்டு செல்வாளா தெரியவில்லை. செல்லும் வழியில் எங்காவது வீசி எறியும் அளவுக்குக் கூட எதிர்மறையாக யோசிக்கத் தெரியாதவள்.

“நா பேசிக்கிறேன்..எடுத்திக்கிட்டுப் போங்க ” என்றேன் உறுதியான குரலில். அந்தப் பைக்குள் ஒரு ஐநூறு ரூபாயை வைத்தேன். அவள் கணவனிடம் நான் என்ன பேசி அவளை நிரூபிக்க முடியும் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. அந்த நேரத்துக்கு எப்படியாவது அவளை சமாதானம் செய்துவிட வேண்டும் என்று மட்டும் தோன்றியது. போகும் போது இனிமேல் வருவாளா என்று கேட்க எனக்குத் தோன்றவில்லை. என்னைப்போல எத்தனை அற்பர்களிடம் துணி துவைத்து சம்பாதிப்பவள். இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு வராமல் இருந்தால் அவளால் என்ன செய்து கடனை அடைக்க முடியும். சாவியை வீட்டுக்காரனிடம் கொடுத்து வைக்கிறேன் என்று மட்டும் சொன்னேன். மன்னித்து விட்ட முகத்தோடு தலையை அசைத்து விட்டு சென்றாள்.

பிறகு மணியிடம் நடந்ததை முழுவதுமாக சொன்னேன். என்னை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு “பரவால்லே விடுங்க..அதான் செலவுக்கும் கொஞ்சம் பணம் குடுத்துட்டீங்கள்ளே ” என்றான். திட்டியிருக்கக் கூடாதா என்று தோன்றியது. அவ்வளவு தான். திரும்பவும் வேலை களைப்பு என்று நேரம் ஓடி இரவில் நண்பர்களுடன் சேர்ந்து குடி தொடங்கியது. சில விருந்தினர்கள் வேறு. பின்னணியில் இளையராஜாவின் வயலின் கம்பிகள் வழியாக பால்யமும் பருவமும் திரும்பவும் உருவாகி உருவாகி கண்முன் கரைந்துகொண்டிருந்தன. பள்ளி முடிந்து வீடு வரும் வழியில் எப்போதும் எதிர்ப்படும் சர்வேயர் வீட்டு ஆடு, சின்ன சின்ன மணிகள் கட்டப்பட்டு காற்றெங்கும் மணியின் ஓசையைப் பரப்பும் தேவசகாயம் வீட்டு வாசல்படி, எந்நேரமும் அடுக்களை ஜன்னலில் தெரியும் வெள்ளையக்காவின் முகம் என்று காட்சிகள் மங்கலாக மறைந்துகொண்டே போகையில் அத்திரைச்சீலைகளுக்குப் பின் மறைக்கப்பட்டு மறக்க நினைத்துப் புதைக்கப் பட்ட அல்லது புதைத்து விட்டதாய் நினைத்த அவ்வளவும் ….ஒரு முறை அப்பா மஞ்சள்காமாலை வந்து படுத்தது, சித்தப்பாக்கள் ஒதுங்கிக்கொள்ள வீட்டுப் பொருள் ஒவ்வொன்றும் அடமானமாய் ஆனது, ஒரு கட்டத்தில் அம்மா தெரிந்தவர்களின் வீடுகளுக்கு பாத்திரம் தேய்க்கப் போனது, ஒரே வாரம் தான், அதற்குள் அப்பாவுக்கு உடல்நிலை சரியாகி அவர் விண்ணப்பித்திருந்த வேலையும் கிடைத்தது, வீட்டு வேலைக்கு சென்று வந்த ஒரு நாளில் அம்மா யாரிடமும் பேசாமல் சாமி விளக்கைப் பார்த்துக்கொண்டே அழுதது என மறையாமல் நினைவில் உறைந்து விட்ட காட்சிகள் மெல்ல நகரும் சலனப்படம் போல் அழிக்கவொட்டாமல், மறக்கவொட்டாமல் மீண்டும் தோன்ற…அக்காட்சியின் தொடர்ச்சி போல் இரவில் ஒற்றை உருவமாய் கனகு அக்கா தனது குடிசைக்கு வெளியே அழுதபடி நின்றிருக்கும் தோற்றம் கண்முன் வந்தது. அடர்ந்திருந்த இருளில் மின்னும் கண்கள் அவளைச் சுற்றிலும் சிமிட்டியபடி இருந்தன .என்னென்னவோ சொல்லிப் புலம்பியபடி நடுங்கிக் கொண்டே அவள் சாத்தப்பட்டிருக்கும் கதவை பார்த்துக் கொண்டே நின்றுகொண்டிருந்தாள்.
என்னை அறியாமல் கண்களில் நீர் பெருகி வழிந்தது.

மணி சொன்னான். ” நம்மாளு ..சரக்கடிக்கும்போது ராஜா பாட்டு கேட்டா போதும் ..உருகி ஊத்திடுவாப்புலே”. நண்பர்கள் கேலியாக சிரித்துக்கொண்டே என்னை நோக்கி கோப்பைகளை உயர்த்தினார்கள். இசையை மீறி சிரிப்பு சத்தம் எழுந்து அறையை நிறைத்தது.

-சொல்வனம் இணைய இதழில் வெளியான சிறுகதை
http://solvanam.com/?p=21475

Monday, August 20, 2012

கவுண்டமணி : கோபக்காரக் கோமாளி

கிராமங்கள்  மற்றும் சிறுநகரங்களில் பெட்டிக்கடைகளில் யாவாரம் பார்த்துக்கொண்டே , கடைக்கு வருபவர்களிடம் உலக விஷயம் பேசும் நடுத்தர வயது ஆட்களைப் பார்க்கலாம். அரசியல், சமூகம் தொட்டு எல்லாவற்றின் மீதும் எள்ளலானப் பார்வையுடன்  கேட்பவர்களைப் புன்னகைக்க வைக்கும்படி பேசிக்கொண்டு இருப்பார்கள் . அவ்வப்போது கடையில் வேலை பார்க்கும் பையன்களைக் கிண்டல் செய்துகொண்டும்  இருப்பார்கள்.  இவர்களின் திரையுலகப் பிரதிநிதியாகப் பரிமளித்தவர்களில் முதன்மையானவர் கவுண்டமணி.

நடிகர்களுக்கு  நிரந்தர திரைப்பணியை அவர்கள் கேட்காமலேயே அளிக்கும் தமிழ் சினிமா, கவுண்டமணிக்கு சைக்கிள் ரிப்பேர் கடை பெட்டிக்கடை இவற்றை வைத்துக் கொடுத்து பிழைப்புக்கு உதவியது. பித்தலாட்டம் செய்வது, சுற்றியிருப்பவர்களின் கோபத்துக்கு ஆளானாலும் வாய்ப்பேச்சால் சூழலை வெல்வது என்று போலித் தோரணைகளுடன் திரிபவர்கள் கவுண்டமணியால் நகலெடுக்கப்பட்டனர். அறுபதுகளிலேயே திரையுலகுக்கு வந்து விட்டதாக சொல்லப்பட்டாலும் பதினாறு வயதினிலே தொடங்கி மெல்ல பயணித்து எண்பதுகளின் மத்தியில் விஸ்வரூபம் எடுத்தார் கவுண்டர். இன்றுவரை விடைதெரியாத மர்மங்களில் அவரது வயதும் ஒன்று. பதினாறு வயதினிலே படத்திலேயே அவர் நாற்பதுகளின் மத்தியில் இருப்பவர் போல் தெரிந்தார். பிறகு ஒருபோதும் சொந்த சிகையுடன் அவரை திரையில் பார்த்தவர்கள் யாருமில்லை. மேட்டுக்குடியில் அவர் முப்பதுகளின் இறுதியில் இருப்பவரைப் போல் தோற்றமளித்தார்.

தமிழ் நடிகர்களில் கேமராவின் இருப்பை உறுத்தலாக எடுத்துக் கொள்ளாத மிகச் சில நடிகர்களில் இவரும் ஒருவர். அவரது பாத்திரத் தேர்வு எப்போதும் எரிச்சலுடன் அலையும் முரட்டுத் தனம் கொண்ட, அதே சமயம் தனக்கான கொள்கைகளில் சமரசம் கொள்ளாத மனிதனாகவே அமைந்தது. பொதுவாக இந்த குணங்கள் ஒரு வில்லனின் பாத்திரத்துக்கானவை. அவற்றை ஒரு நகைச்சுவை நடிகனாக கையாண்டு வெற்றி பெற்றது தான் கவுண்டமணியின் பிரத்யேக சாதனை. எம்.ஆர்.ராதா இதற்கு முன் இதைக் கையாண்டு இருந்தாலும் அவரது பாத்திரங்கள் எப்போதும் எதிர்மறையானவை. கவுண்டமணி பல படங்களில் நாயகனின் மாமா, நண்பன், சித்தப்பு என்றே நடித்தார். அந்த பாத்திரங்களின் மூலம் எந்த இடத்திலும் எந்த நடிகர் முன்னிலையிலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற உரிமையை ஒப்புமையில்லாத தன் நடிப்பு மூலமே அவர் பெற்றார்.

தகுதிக்கு மீறி ஒரு செயலை செய்பவனை அந்த இடத்திலேயே கண்டித்து, கடுமையான கிண்டலும் கோபத்தைப் பொறுத்து அடி உதையும் வழங்கும் பாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் கவுண்டமணிக்கு ஒரு ஆன்டி ஹீரோ எனும் அளவுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தன  என்று சொல்லலாம். உரத்த குரலும் கொச்சை வார்த்தைகளும் அவரது பிரபல்யத்துக்கு வழிவகுத்தாலும் விமர்சகர்களின் கண்டிப்புக்கும் புறக்கணிப்புக்கும் அந்த அம்சங்களே காரணமாயின.  நாடக மரபில் இருந்து வந்த நமது சினிமாவில் திலக நடிகர்கள் உட்பட  எல்லோருமே சத்தமாகப் பேசியே நடித்துப் புகழ்பெற்றனர் என்பதை விமர்சகர்கள் மறந்துவிடுகிறார்கள். அவரது பலமே அவரது பலவீனமாக குறிப்பிடப்பட்டாலும் எந்த காலத்திலும் தன் நடிப்பு முறையை  அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை.

பின்னாளில் மணிவண்ணன், விவேக் மற்றும் அதற்குப் பிறகான காலங்களில் பெரிய அளவில் வெற்றி பெற்ற வடிவேலு ஆகியோரின் வருகை கவுண்டமணியின் திரைவாழ்வில் தேக்கம் வர காரணமாயின என்று சொல்லலாம். தவிர தொண்ணூறுகளின் தொடக்கம் வரை கிராமம் மற்றும் சிறு நகரங்களையே  மையமாகக் கொண்டு இயங்கி வந்த தமிழ் சினிமா ரஹ்மானின் இசை, உலகமயமாக்கல் ஆகியவற்றின் பாதிப்பில் நகரங்களை சார்ந்து உருவாகத் தொடங்கியபோது மாற்றத்துக்கேற்ப கவுண்டமணி தன் பாத்திரத் தேர்வுகளை மாற்றிக் கொண்டார்.  கல்லூரி கணினித்துறை பேராசிரியராக வந்தாலும் முழங்கைகளில் டைப் அடித்து சாட் செய்ததன் மூலம்  தனது முத்திரையை பதிக்க அவர் தயங்கவில்லை.

கவுண்டமணியின் பெயர் காரணங்களில் ஊர்க் கவுண்டர் என்று அவர் நடித்த பாத்திரமும் யார் என்ன பேசினாலும் உடனுக்குடன் முரண் கேள்விகளை முன்வைத்த பாத்திரத்தில் நடித்ததால் counter மணி என்று பெயர் பெற்று அது மருவி கவுண்டமணியானது என்றும் இருவேறுக் கருத்துகள் நிலவுகின்றன. 'காட்ட வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன் தான்' என்று சலம்பினாலும் அவர் உண்மையில் கவுண்டர் இல்லை என்று சொல்பவர்கள் உண்டு.

பாரதிராஜா,கமல்,ரஜினி ,மணிரத்னம் போன்ற பெரிய கைகளின் படங்களில் ஆரம்பகாலத்தில் நடித்துவந்த  கவுண்டமணி  அவர்கள் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தவுடன் அருகில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. திரையில் எத்தனை பேர் நின்றாலும் தனித்து தெரியக்கூடிய முரட்டுத் திறமைக் கொண்ட கவுண்டரை சேர்த்துக்கொள்ள அவர்கள் அஞ்சியதில் நியாயம் இல்லாமல் இல்லை. மிஸ்டர் பாரத் போன்ற படங்களில் அவருடன் நடித்த ரஜினி பின்னர் பல படங்களில் கவுண்டரிடம் அடிவாங்கும் செந்திலைத் தான் நடிக்க வைத்தார். பல வருடங்கள் கழித்து மன்னன் படத்தில் கவுண்டமணி தொழிலதிபர்களைக் கிண்டல் பண்ணும்போது அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார் ரஜினி. பி.வாசுவின் முந்தைய வெற்றிப் படமான சின்னத் தம்பியின் வெற்றியில் கவுண்டரின் பங்கு அதிகம் என்பதால் இந்தப் படத்தில் அவரை சேர்த்துக்கொள்ள ரஜினி சம்மதித்திருக்கலாம். பிறகு எஜமான், உழைப்பாளி போன்ற படங்களில் தொடர்ந்து அவருடன் கவுண்டமணி நடித்தார். என்றாலும் ரஜினிக்கு தன்னை தாண்டிப் போய்விடாத நகைச்சுவை நடிகன் வேண்டும் என்பதால் செந்தில் தான் அவரது பொதுத் தெரிவாக இருந்தார். வறண்டு போன முகங்களில் விக் வைத்து  ரஜினியும் கவுண்டமணியும் பாபாவில் வந்தாலும் படம் படுத்தது என்னவோ படுத்தது தான். அதில் ரஜினிக்கு தன் கடையை எழுதி வைப்பதாக ஒருவர் சொல்லும்போது கவுண்டர் பக்கத்தில் இருப்பவரிடம் ரகசியமாக கேட்பார் "கடை அவருது தானே?"

கமலைப் பொறுத்தவரை தன்னை தாண்ட அவர் யாரையுமே அனுமதிக்க மாட்டார் என்பதால் கவுண்டமணி பலகாலம் அவரிடம் இருந்து தூரத் தான் வைக்கப்பட்டார்.  சின்னக் கவுண்டர் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்த அவரை உதயக்குமார் சிபாரிசின் பேரில் சிங்காரவேலனில் கமல் சேர்த்துக்கொண்டார் போலும். படத்தில் கமலை பல இடங்களில் முந்தி நிற்பார் கவுண்டமணி.  "நா ஒரு லட்சியத்தோட இங்க வந்திருக்கேன்" என்று சொல்லும் கமலிடம் "அப்போ நாங்க என்ன துணி தொவைக்க வந்திருக்கோமா?" என்று கண்டனக் குரல் எழுப்புவார். கடுப்பான கமல் "உன்னை கண்டிக்க ஆளில்லாமத் தான் இப்படி ஆகிட்டே" என்று இந்தியனில் கண்டிப்பார். தொன்னூறுகளில் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததால் கவுண்டமணிக்கு ஏற்ற பாத்திரம் தர கமலால் முடியவில்லை.

அதே போல் ஒரு காலத்திலும் தன் மதிப்பைப் பெறாத செந்திலிடம் உதவி என்று கேட்டு நிற்க கவுண்டமணி திரையில் கூட எப்போதுமே ஒப்புக்கொள்ளமாட்டார். விற்காத இளநீர்  தென்னங்கன்றாக முளைத்து நொடித்துப் போய், ஆள் தெரியாமல் கடன் வாங்க செந்திலிடமே போய் நிற்க நேரும்போது கவுண்டமணி கோபத்தின் உச்சத்துக்கே போய் விடுவார். கூட்டிப் போன வடிவேலுவுக்கு கன்னம் பழுக்க அறை விழும். அது கவுண்டமணியின் சுபாவம். தனக்குப் படங்கள் இல்லாதபோது யாரிடமும் போய் நிற்கவில்லை அவர். அந்தத் தேக்கத்தை ஜீரணித்துக்கொண்டார். 

கவுண்டமணியின் நடிப்பில் இயல்பான உடல்மொழி புத்திசாலித்தனம் இவற்றை எதிர்பார்க்கவே முடியாது. நின்ற இடத்தில் கைகால்களை விசித்திரமாக அசைத்தபடி  வசனம் பேசியே ரசிகர்களை சிரிக்க வைப்பார். கருவாடை கொண்டு வந்து வைக்கும் ஆட்டோக்காரரை திருடன் என்று துரத்தி விடும் கவுண்டமணி  கமல் கேட்கும்போது "ஆட்டக்காரனா இருந்தா என்ன ..பாட்டக்காரனா இருந்தா என்ன? மூக்கு மேல துணியக் கட்டிக்கிட்டு வரலாமா?" என்று எதிர்கேள்வி கேட்பார். அப்போது முழங்காலை மடக்கித் தூக்கி கையால் ஒரு தட்டு தட்டுவார். கமல் தன் தார்மீகக் கோபங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவரையேப் பார்த்துகொண்டு நிற்பார். என்றாலும் அடுத்தவர் வசனம் பேசும்போது அவர் முகத்தை தேமேயென்று பார்த்துக்கொண்டு தன் முறைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மூன்றாம் தர நடிகர்களுடன் கவுண்டமணியை சேர்த்துவிட முடியாது. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பதில் அவர் வாயிலிருந்து விழும். அத்தருணத்தில் சிரிக்கத் தான் தோன்றுமே தவிர யோசிக்கத் தோன்றாது. அதே போல் அவரது முகபாவம். தன்னை சீண்டும் செந்திலை அடிக்கத் தயாராகும்போது தலையைத் தூக்கி வாயைக் குவித்து வைத்துக் கொள்வார். அடி எப்போது வேண்டுமானாலும் விழலாம்.

அவர் மீது இருக்கும் விமர்சனங்களில் முக்கியமானது  மற்றவர்களின் உடல்குறைகளை கிண்டல் செய்து சிரிக்க வைக்கிறார் என்பது தான். ஏறத்தாழ இந்தக் குற்றசாட்டில் சிக்காத நடிகர்களே இல்லை எனலாம். ஏதாவது ஒரு விதத்தில் யாரையாவது புண்படுத்தித் தான் அவர்கள் பல முறை சிரிக்க வைத்திருக்கிறார்கள். 'படித்தவர்களுக்கான நகைச்சுவை நடிகர்களான' கிரேசி மோகன், எஸ்.வி.சேகர் போன்றோர் ஊனமுற்றவர்களை அடிக்காத நக்கலா? கவுண்டமணி புதுப்புதுப் பட்டப் பெயர்கள் சொல்லி செந்திலைக் கூப்பிடும்போது திரையுலகம் அதிரத் தான் செய்தது.  ஒரு படத்தில் புகைப்படக் கலைஞராக வரும் கவுண்டமணி பிலிம் டெவெலப் பண்ணும் வேலை செய்யும் கருப்பு சுப்பையாவை அடிக்கும் கிண்டல்  புண்படுத்தும்படி இருந்தாலும்  நுணுக்கமானது. "நெகட்டிவ் கழுவி கழுவி நீ நெகட்டிவ் மாதிரியே ஆயிட்டய்யா" என்பார். கருப்பு முகமும் வெள்ளை முடியுமாக அவரைப்பார்த்து வெட்கச் சிரிப்பு சிரிப்பார் சுப்பையா. தன்னைக்  கவிழ்க்க  ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் செந்திலையும் வடிவேலையும் பார்த்து "என்னடா ..கருப்பர்கள் மாநாடா?" என்று கேட்பார். "அண்ணன் சிவப்புடா..பாரு செவப்பு சட்டை போட்டிருக்காரு" என்று செந்தில் தரும் உடனடி பதில் முக்கியமானது. அதே போல் வழுக்கையாக இளநீர் கேட்கும் ஒருவரின் வழுக்கைத் தலையை அரிவாளால் சீவும் அளவுக்கு கடுப்பாகும் கவுண்டமணி அந்த காட்சியில் நடிக்கும்போது தன் தலையைப் பற்றி நினைத்தே இருக்க மாட்டார். நினைத்தால் நடிக்க முடியுமா?

ஆரம்ப நாட்களில் தான் இசை அமைத்த மேடை நாடகம் ஒன்றில் கவுண்டமணியும் செந்திலும் சிறு வேடங்களில் நடித்ததாக இளையராஜா கூறியிருக்கிறார். செந்திலுடன் முன்பே நல்ல பழக்கம் கவுண்டமணிக்கு இருந்திருக்க வேண்டும். இருவருக்கும் இடையிலான அந்த கெமிஸ்ட்ரி நிச்சயம் ஒரே நாளில் வந்திருக்க வாய்ப்பில்லை. இருவரும் முன்பே பல படங்களில் நடித்திருந்தாலும் வைதேகி காத்திருந்தாள் இந்த இணையை எங்கோ கொண்டு சென்றது.மேன்டிலை உடைத்து விட்டு செந்தில் நிற்கும்போது ஒரு பெண் வந்து பெட்ரோமாக்ஸ் லைட் கேட்பாள். அப்போது செந்திலை ஒரு முறை பார்த்து விட்டு ஆடியன்சை ஒரு முறைப் பார்ப்பார் கவுண்டமணி. அந்த காட்சி தங்கள் இருவருக்கும் ஒரு பெரிய தொடக்கத்தைக் கொடுத்தது என்றார் விகடனுக்கு அளித்த ஒரு நேர்காணலில். செந்தில் பல முறை பத்திரிக்கை தொலைக்காட்சி நேர்காணல்களில் வந்தாலும் கவுண்டமணி அதற்கு நேர்மாறாக இருக்கிறார். அவர் தொலைக்காட்சியில் தோன்றியது ஒரே முறை தான். இளையராஜா சிம்பனி செய்ததற்காக நடந்த பாராட்டு நிகழ்ச்சி ஒன்றில் கவுண்டமணியும் தோன்றி அவருக்கு வாழ்த்து சொன்னார். முழு ஒப்பனையுடன்  "இசைன்னா ராஜா. .ராஜான்னா இசை" என்ற வார்த்தைகள் தான் அவர் தொலைக்காட்சி முன் தோன்றிப் பேசியவை. பெரும்பாலும் பொதுவில் வெளியே வரத் தயங்கும் கவுண்டமணி தன் குடும்பம் பற்றிய விஷயங்களையும் அப்படியே தான் வைத்துக்கொண்டார்.  விளம்பரத்துக்கு அலையும் சினிமா உலகில் கவுண்டமணி நிச்சயம் வேறுபட்டவர் தான். விகடனுக்கு அளித்த அந்தப் பேட்டியில் கதாநாயகனை விட நகைச்சுவை நடிகன் தான் ஃப்ரெஷாக இருக்க வேண்டும் என்றார் அதிரடியாக. தவிர தன்னைப் பார்க்க வேண்டுமென்றால் ரசிகன் திரையரங்குக்கு தான் செல்ல வேண்டும் என்றார். நீண்டகாலம் கழித்து பெப்சி தொழிலாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். எதிர்பார்த்ததற்கு மாறாக  தெளிவாகவே அமைந்தது அவர் பேச்சு.

நகைச்சுவை வேடங்கள் தந்த வெற்றியில் சில படங்களில் கதாநாயகனாகக் கூட நடித்தும் பார்த்தார். ஜீவிதா, ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகள் அவருக்கு இணையாக நடித்தனர். அவை வெற்றி பெறாத காரணத்தால் திரும்பவும் நகைச்சுவைக்கு திரும்பிய அவருக்கு கைகொடுத்தது கரகாட்டக்காரன் தான். படத்தின் பெரிய வெற்றிக்கு செந்திலுடன் இணைத்து அவர் தந்த நகைச்சுவையும் முக்கியக் காரணமாக அமைந்தது. தொடர்ந்து ராமராஜன், பிரபு, சத்யராஜ் போன்றவர்களுடன் இணைந்து மிகப் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தார்.படத்தில் செந்திலுடன் இணைந்து அவர் கொடுத்த வெற்றி உள்ளத்தை அள்ளித்தா  வரைக்கும் தொடர்ந்தது. ஜீன்ஸ் படம் தொடங்கும்போது நாசர் நடித்த இரட்டை வேடத்தில்  கவுண்டமணி தான் நடிப்பதாக இருந்தது. என்ன காரணத்தினாலோ அதில் அவர் நடிக்கவில்லை. பிறகு மேட்டுக்குடி போன்ற படங்களில் உச்சபட்ச நகைச்சுவையுடன் நடித்தாலும் அவரது உடல் நிலை திடீரென்று சரியில்லாமல் போக பல வாய்ப்புகள் கைநழுவின. பிறகு மெலிந்த உடலுடன் சில படங்களில் நடித்தாலும் அவரது பேச்சில் வழக்கமான நகைச்சுவை உணர்வு இல்லாமல் வெற்று இரைச்சலாக இருந்ததால் ரசிகர்களைக் கவர முடியவில்லை. தவிர மாறிவிட்ட  தமிழ் சினிமாவின் போக்கில் தனி நகைச்சுவை நடிகன் என்பவனுக்கு அவசியமில்லாமல் போக கதையுடன் பெருமளவு சமபந்தப்பட்டவராக பல படங்களில் நடித்த மணிவண்ணன் சிறிதுகாலம் கோலோச்சினார். தொன்னூறுகளில் அவர் இல்லாத படங்களை எளிதாகக் கணக்கிடலாம். கவுண்டமணி மெல்ல ஒதுங்கலானார். மேலும் கவுண்டமணியின் வெற்றிக்கு மிகப் பெரிய தூணாக இருந்த நடிகர், வசனகர்த்தா ஏ. வீரப்பன் வயதாகி ஒதுங்கியதால் கவுண்டமணிக்கு என்று எழுத சரியான ஆட்களும் இல்லாமல் போயிற்று. வீரப்பன்,  கவுண்டமணிக்காக பிரத்யேகமாக நகைச்சுவை பகுதி எழுதியதுடன், ஆரம்பத்தில் எழுதி நாகேஷ், ஏ.கருணாநிதி போன்றோருடன் நடித்த காட்சிகளை கவுண்டமணிக்காக மாற்றியமைக்கவும் செய்தார். கரகாட்டக்காரனில் கவுண்டமணி வெறியுடன் தவில் வாசிக்கும்போது செந்தில் தூங்கும் காட்சி, வீரப்பன் எழுதிய 'பொண்ணு மாப்பிள்ளை' என்ற ஜெயஷங்கர்-காஞ்சனா நடித்த படத்தில் இருந்து எடுக்கப்பட்டது. படத்தில் தவில் வித்வானாக ஏ.கருணாநிதி நடிக்க  சிஷ்யனாக வரும் டைப்பிஸ்ட் கோபு தூங்கி கருணாநிதியிடம் அடிவாங்குவார். உதயகீதம் படத்தில் கவுண்டமணிக்கு மாமனாராக போலீஸ் வேடத்தில் வீரப்பன் நடித்திருந்தார். அவரால் கவுண்டமணியிடம் இருந்து வெளியேக் கொண்டு வர வேண்டிய விஷயங்கள் என்னவென்று இனங்காண முடிந்தது. பல படங்களில் நகைச்சுவைப் பகுதி ஏ.வீரப்பன் என்று தனியாக வரும். எல்லாப் படத்துக்கும் பொருந்தும்படி காட்சிகளை எடுத்துவிட்டால் பின்னர் எந்தப் படத்துடனும் இணைத்துக்கொள்ளலாம் எனும்படி காட்சிகள் வடிவமைக்கப்பட்டன. கவுண்டமணி-செந்தில்-வீரப்பன் கூட்டணி தமிழ் சினிமாவின் பெருவெற்றிப் பெற்ற கூட்டணி என்று சொல்லலாம்.

கதாநாயக நடிகர்களில் சத்யராஜுடன் கூட்டணி அமைத்த படங்கள் பெரிய அளவில் வெற்றியடைந்தன. இன்றும் அந்த இணை அதன் தனித்த நகைச்சுவைக்காகப் பேசப்படுகிறது. அவர்கள் இருவரும் நடித்த நடிகன் படம் தந்த வெற்றி குங்குமப் போட்டு கவுண்டர் வரை தொடர்ந்தது. பிரம்மா, திருமதி பழனிச்சாமி உட்பட பல படங்களை சொல்லலாம்.  மாமன் மகள் அவர்கள் நகைச்சுவைக் கூட்டணியின் உச்சபட்ச வெற்றி என்று சொல்ல வேண்டும். அதில் ஒரு காட்சியில் போலிப் பணக்காரர் சத்யராஜ் நாயகி மீனாவை கவர ஏராளமான ஆட்களுடன் ஜாக்கிங் செல்வார். அப்போது அவரது பி.ஏ வாக வரும் கவுண்டமணி திமிறிக்கொண்டிருக்கும் சில வேட்டை நாய்களின் சங்கிலிகளை பிடித்தபடி நின்று  கொண்டிருப்பார். அதீதமானப் பொய்களுடன் மீனாவிடம் சத்யராஜ் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது பொறுமையிழந்த  கவுண்டர் குரல் கொடுப்பார் " சீக்கிரம் பேசி முடிங்கடா. புது நாய் இழுக்குது"

தனது படங்களில் தனியாக 'மெசேஜ்' எதுவும் கொடுக்க வேண்டும் என்ற மெனக்கெட மாட்டார் கவுண்டமணி. என்றாலும் போகிறப் போக்கில் அவர் சொல்லிப்போகும் விஷயங்கள் சுருக்கென்று இருக்கும். வைதேகிக் காத்திருந்தாள் படத்தில் வேலை தேடி வந்து செந்தில் சொன்னார் என்பதற்காக தரையில் உள்நீச்சல் அடிக்கும்  பக்கத்துக்கு ஊர் பையனிடம் " வந்து சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டு. அப்போ தான் ஒங்களுக்கெல்லாம் அறிவு வரும்" என்பார். கீதாஞ்சலி படத்தில் குதிரைக்காரனாக வரும் கவுண்டமணி  திருமணமாகிப் பிரியும் நடிகர் நடிகைகளை கடுமையாகக் கிண்டல் செய்வார். "கல்யாணம் பண்ணிக்கிறது. அழகும் கிளாமரும் தீந்தவொடனே எங்களுக்குள்ளே 'கருத்து வேறுபாடுன்னு' பிரிஞ்சிறது" என்பார் கடுப்புடன். சூரியன் படத்தில் அவர் பேசிய "அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா" என்ற வசனம் எந்தக் கால அரசியலுக்கும் பொருந்தக் கூடியது.

பிரபலமான  படங்களை விடவும் அவ்வளவாக அறியப்படாத பல படங்களில் அந்த இணை அருமையான நகைச்சுவையை அளித்திருக்கிறது. பெயர் தெரியாத பல படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் தற்போது சமூக வலைத் தளங்களில் காணக் கிடைக்கின்றன. ஒரு படத்தில் ஷர்மிலி வீட்டுக்குள் புகுந்துக் கொள்ளும் கவுண்டமணி செந்திலின் கால்கள் மட்டும் திகிலுடன் காட்டப்படும். கூடவே ஷர்மிலியின் அப்பா அவர்கள் இருவரையும் தேடி அலைவார்.ஒரு கட்டத்தில் காலில் அடிபட்டு விட கவுண்டமணி " ஆ" என்று அலறுவார். அந்தக் குரலைக் கேட்டுவிட்ட ஷர்மிலியின் அப்பா அடுத்தநாள் செந்திலுடன் வருவார். காலில் கட்டுப்போட்டு அமர்ந்திருக்கும் கவுண்டமணியை மாட்டிவிட செந்தில் தன் கையில் இருக்கும் மூட்டையை கவுண்டர் காலில் போடுவார். புத்திசாலிக் கவுண்டர் "ஊ" என்று கத்தி விட்டு செந்திலை ஒரு பார்வைப் பார்ப்பார். அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். பொதுவாக பலத்தில் குறைந்த செந்திலை விரட்டி விரட்டி அடிக்கும் கவுண்டமணி தன்னை விட பெரிய பலசாலிகளைக் கண்டால் அடங்கி நடப்பார். டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனில் கிட்டத்தட்ட இதே போல் ஜெர்ரியை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அடித்து நொறுக்கும் டாம் தன்னை விடப் பெரிய மிருகங்களுக்கு அஞ்சி பணிந்து நடக்கும்.  டாமை கவுண்டமணியாகவும் செந்திலை ஜெர்ரியாகவும் ஒப்புமை செய்தால் சரியாகப் பொருந்தும். நடிகர்களைப் பொறுத்தவரை, உலக அளவில் இது போன்ற நகைச்சுவை இரட்டையர்களில் லாரல் ஹார்டியை தான் வேறு வழியின்றி ஒப்புமைக்காக சொல்ல முடியும். என்றாலும் அவர்கள் தான் தரம் வாய்ந்தவர்கள்.நம்மவர்கள் நகைச்சுவையில் தரம் கம்மி என்று கருதுபவர்கள் உண்டு. ஒருமுறை மதனிடம் இவர்களை ஒப்பிட சொல்லி வாசகர் ஒருவர் கேட்டபோது கவுண்டமணி செந்தில் இணை அடித்து உதைத்து தான் நகைச்சுவை வழங்கமுடியும். வசனம் பேசாமல் அவர்களால் சிரிக்க வைக்கமுடியாது என்றார். லாரல் ஹார்டி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு தான் புகழ்பெற்றனர். இருந்தாலும் நம்மவர்களைப் பாராட்ட நமக்கு மனம் வருமா என்ன?
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் பிரபலங்களின் விருப்ப நகைச்சுவை நாயகனாக அவ்வளவாக கவுண்டமணி குறிப்பிடப் படுவதில்லை. என்றாலும் மாண்டலின் சீனிவாசன் ஒருமுறை நாட்டாமை படத்தின் கடைசி காட்சியில் செந்திலின் மனைவியாக கவுண்டமணி வந்து மலேயா பாஷை பேசும் கவுண்டமணியைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்ததாகக் கூறினார். அதேபோல் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், தான் ஒரு கவுண்டமணி ரசிகன் என்று தொலைக்காட்சிப் பேட்டிகளில் குறிப்பிட்டார்.

நகைச்சுவை மட்டுமல்லாமல் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நன்றாக நடிக்கவும் செய்தார். ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் படத்தில் மகன் இறந்தவுடன் கதறியபடி கொள்ளிவைக்கும் வெட்டியானாக நடித்தபோது ஒரு பத்திரிக்கை இத்தனை நல்ல நடிகனை வெறும் நாம் வீணடிக்கிறோமோ என்று கேள்வி எழுப்பியது. உண்மைதான். ஒரு கட்டத்துக்கு மேல் நாகேஷ் நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடங்களில் நடித்ததைப் போல் நகைச்சுவை வட்டத்தைத் தாண்டி நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க எல்லா தகுதிகளும் கொண்டவர் தான் கவுண்டமணி. உருவம் சற்று மாறியிருந்தாலும் வயதான வேடங்களில் இயல்பாக அவரால் நடிக்க முடியும்.  என்றாலும் நாகேஷை திரும்பக் கொண்டுவர ஒரு கமல் இருந்தது போல் கவுண்டமணிக்கு யார் இருக்கிறார்கள்? 
-காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை

Friday, August 17, 2012

காட்சிப்பிழையில் கவுண்டமணி பற்றிய என் கட்டுரை..


திரைப்படம் பற்றிய ஆழமான கட்டுரைகளை வெளியிட்டு வரும் காட்சிப்பிழை திரையின் சமீபத்திய இதழில் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவரான கவுண்டமணி பற்றி நான் எழுதிய ' கவுண்டமணி: கோபக்காரக் கோமாளி' எனும் கட்டுரை வெளியாகி இருக்கிறது.
பிரசுரித்த ஆசரியர் குழுவுக்கு நன்றிகள்..

சொல்வனத்தில் என் சிறுகதை...

சொல்வனம் இந்த இதழில் என் சிறுகதை 'நீரில் கரையாத கறைகள்' வெளியாகியிருக்கிறது. உங்கள் பார்வைக்கு..
http://solvanam.com/?p=21475

பிரசுரம் செய்த சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு நன்றிகள்..

Tuesday, August 7, 2012

எலி, மை எனிமி !!

ஹேங் ஓவர் படத்தில் பல் தேய்க்கப்போனால்  பாத்ரூமுக்குள் புலி ஒன்று இருக்கும். அது போல் என் வீட்டு பாத்ரூமில் புலியை விட சற்றே சிறிய அளவில் (!) எலி ஒன்று இருந்தது. என் மனைவி தான் முதலில் பார்த்து சொன்னாள். லைட்டைப் போட்டு கதவைத் திறப்பதற்குள் அது டாய்லெட் ஓட்டைக்குள் புகுந்து ஓடிவிட்டது. அதன் வால் நெளிவது என்னவோ பாம்பு நெளிவதுப் போல் இருந்தது.

தினமும் அந்த பெரிய எலி (பெருச்சாளி?) வர ஆரம்பித்து விட்டது. என் வீட்டு பாத்ரூமுக்கு நான் போவதற்கு முன் கதவைத் தட்டி அந்த எலியிடம் பெர்மிஷன் கேட்டுத் தான் போக வேண்டும் எனும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. லைட்டைப் போடாமல் கதவைத் தட்டாமல் திறந்து விட்டால் அது வழி தெரியாமல் நம் மீது பாய்ந்து விடுமோ என்ற அச்சம் வேறு. அததுக்கு உரிய மரியாதை என்று ஒன்று இருக்கிறதல்லவா? புதுமைப் பித்தனின்  வேதாளம் சொன்ன கதையில் வேதாளம் சொல்லும்  " மனுஷனுக்கு இப்போதெல்லாம் பயப்படக் கூட திராணி இல்லை. அந்தக் காலத்துலே ராமன் கிருஷ்ணன் எல்லாம் எங்க கிட்டே நல்லத் தனமா பயப்படுவா!" நமக்கு புழுவைக் கண்டாலே பயம் தான். ஒரு முறை என் ஜீன்சுக்குள் என்னவோ ஓடி காலில் இருந்து தொடை வரை வந்து விட்டது. "பூச்சி  ..பூச்சி.." என்று கதறிப் பதறி அதை அப்படியே பிடித்து நசுக்கி விட்டேன் பயத்தில். பார்த்தால் கரப்பான் பூச்சி. உள்ளே இருந்தது கரப்பான் பூச்சியாக இல்லாமல் தேளாக இருந்தால் என்ன ஆகும்? பயப்படாமல் எப்படி இருக்க முடியும்?

எங்கள் வீடு இருப்பது தரைத் தளத்தில். முனிர்காவில் வீடுகள் எப்படி இருக்கும் என்று இங்குள்ளவர்களுக்குத் தெரியும்.  ஒன்றின் மீது ஒன்று ஏறி முட்டி நிற்கும். நீங்கள் நடந்து போக எப்படியும் வழி கிடைத்து விடும் என்றாலும் இரண்டு மூன்று பேராக போக வேண்டுமானால் ஒருவர் வாலை ஒருவர் பிடித்துக்கொண்டு ரயில் ஓட்டிக்கொண்டு தான் செல்லவேண்டும். அதனால் எங்கே என்ன ஜீவன் இருக்கிறது என்று எளிதில் புரிபட்டு விடாது.

இந்த பெருச்சாளியின் வரவுக்கு முன்னால் சில எலிக்குட்டிகள் வந்து போயின. உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அளவு சிறிசு. ஆனால் என்ன அழிச்சாட்டியம். கடுப்
பாகித் துரத்தினால் படு வேகத்தில் ஓடி மறைந்து விடும். உணவுப் பொருட்களை எல்லாம் ப்ரிட்ஜுக்குள் அடைத்து வைக்க வேண்டிய நிலை. விஷம் வைத்துக் கொன்று விடலாம் என்றால் மனைவி வேண்டாம் என்று விட்டாள். வீட்டுக்குள்ளேயே எங்காவது இறந்து விட்டால் நாற்றமடிக்கும் என்று மறுத்தாள். சரி விட்டுப் பிடிப்போம் என்று இருக்கையில் தான் அந்தப் பெரிய எலியின் பிரவேசம் நடந்தது.

எலியைக்  கொல்ல எளிய வழிகள் பல உண்டு. கட்டையை எடுத்து மடேரென்று மண்டையில் அடித்துக் கொல்வது, விஷம் வைப்பது, பொறி வைத்துப் பிடித்து காக்காவுக்கு ட்ரீட் வைப்பது என்று எக்கச்சக்க வழிமுறைகள் உண்டு. என் நண்பன் குமார் காலாலேயே மிதித்துக் கொன்று விடுவான். படு பயங்கரமாக இருக்கும். எனக்கு இயல்பிலேயே வன்முறை உடம்புக்குச் சேராது என்பதால் விஷம் வைக்கலாம் அல்லது பொறி வைத்துப் பிடித்து இனிமேல் இந்தப்பக்கமெல்லாம் வரப்படாது என்று எச்சரித்து அனுப்பலாம் என்று நினைத்தேன். சரியென்று எலிப்பொறி வாங்கப் போகலாம் என்று முனிர்கா கடைவீதிக்குள் வந்தால் எதிர்த்தாற்போல் ஷாஜஹான் ஸார்.

"என்ன வாங்கப்போறீங்க" என்றார். விஷயத்தை சொன்னதும்  "என்னைய்யா ..இதுக்குப் போய் எலிப்பொறி வாங்குறீங்க..பாத்ரூம் கதவைச் சாத்திவிட்டு ஒரே அடியா அடிக்க வேண்டியது தானே ..இப்பக் கூட ஒரு எலியைக் கொன்னு போட்டுத் தான் வர்றேன் " என்றார். ராவண வதம் செய்த ராமன் போல் எனக்குக் காட்சியளித்தார்.

எலி என்னை விட இரண்டு கிலோ தான் கம்மியாக இருக்கும் என்று என் உடம்பை சுட்டிக்காட்டி சொன்னதும் அரண்டு விட்டார். "பாத்ரூம் கதவை மூடினால் பலியாவது எலியல்ல நான் தான்" என்று அவருக்கு விளக்கினேன். "அந்த சைசுக்
கெல்லாம் எலிப்பொறி கிடைக்காது..சர்க்கசிலே சொல்லி ஏதாவது கூண்டு வாங்கிட்டுப் போங்க" என்று விட்டு நடையைக் கட்டினார். கையறு நிலையில் தவித்த எனக்கு ஒரு கடைக்காரன் வழி சொன்னான். "பிடிங்க ..மார்ட்டீன் ராட் கில்லர். இதை சாப்பிட்டால் எலி ஒரு கிலோ மீட்டர் ஓடிச் சென்று உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே உயிர் விடும். எடுத்துச் செல்லுங்கள். உங்கள் வீட்டில் சாந்தி நிலவட்டும்" என்றான். பத்துரூபாய்க்கு இரண்டு வில்லைகள். கவனமாக மூலைக்கொன்றாக வைத்து விடுங்கள் எல்லாம் சரியாகி விடும் என்று அவன் கொடுத்த எலி விஷத்தை வாங்கி பாத்ரூமுக்குள் வைத்து விட்டோம். மூலைக்கொரு பீஸ். காலையில் பார்த்தால் எலியையும் காணோம். வில்லையையும் காணோம். சரி இன்றோடு பிரச்னை தீர்ந்தது என்று பார்த்தால். நேற்றும் பாத்ரூமுக்குள் சத்தம். போய்ப் பார்த்தால் அதே போல் ஆனால் சைசில் கொஞ்சம் சிறிய இன்னொரு எலி " எங்கப்பனையா விஷம் வச்சிக கொன்னே..உன்னை சும்மா விடமாட்டேண்டா" என்று எச்சரித்து விட்டு டாய்லெட் ஓட்டைக்குள் ஓடி மறைந்து விட்டது.

அதற்கு நான் வைக்கும் வில்லை விஷம் என்று தெரிந்து விட்டது. இனி என்ன வழி என்று தெரியவில்லை. ஒன்று அது இருக்க வேண்டும் இல்லை நான் இருக்க வேண்டும். அது தான் ஏரியாவுக்கு சீனியர் என்பதால் நாங்கள்
வேறு வீடு பார்க்க வேண்டியது தான்.

குமுதத்தில் வந்த ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது.
கணவன்: எங்கேடி எலி விஷத்தைக் காணோம்..
மனைவி: எலி தூக்கிட்டுப் போயிடுச்சுங்க..