Monday, September 28, 2009

ஐந்து பாட்டில் பீரும் அழுக்கடைந்த பாரும்

நாங்கள் ஆறுபேர், எம்.ஸி.ஏவின் கடைசி செமஸ்டர் ப்ராஜெக்ட்டுக்காக கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தோம் அப்போது. ஐந்தாவது செமஸ்டருக்கான மினி புராஜக்ட்டை சீனியர் மாணவன் ஒருவனின் பழைய ப்ராஜெக்ட்டை வைத்து தலைப்பு சம்பந்தப்பட்ட இடங்களை find and replace செய்து அவரவர் பெயர்களில் தனித்தனி ப்ராஜெக்ட்டாக சமர்ப்பித்து தப்பித்திருந்தோம். கடைசி செமஸ்டரில் அப்படி முடியாதாகையால் வேறு வழியின்றி சென்னையில் செய்வதென்று முடிவெடுத்து அவரவர் அப்பாக்கள் வட்டிக்கு வாங்கிய காசுடன் ட்ரஸ்ட்புரம் வந்து சேர்ந்தோம். அந்த இடத்தில் அது புதிய வீடு. கீழ் போர்ஷனில் வீட்டுக்காரரும் அவரது அழகான மனைவியும் சுமாரான அவர்களது மகளும் வசித்தனர். அவள் கல்லூரி மாணவி. ஆனால் இந்தக்கதை அந்த வீட்டைப் பற்றியதோ அவளைப் பற்றியதோ அல்ல.தலைப்பில் குறிப்பிட்டதுபோல் நாங்கள் அவ்வப்போது தாகசாந்தி செய்து கொண்ட பாரைப் பற்றியது தான். தங்கியிருந்த மூன்று மாதத்தில் நாங்கள் ப்ராஜெக்ட் செய்த தி.நகர் அலுவலகம் சென்றதை விட இந்த பாருக்கு சென்றது தான் அதிகம். ஆளுக்குத் தகுந்தாற்போல் குவார்ட்டர் அல்லது கட்டிங்குடன் அண்டை பிரேமா காண்டீனில் முட்டை பிரியாணி அல்லது சிக்கன் பிரியாணி அல்லது குஸ்கா சாப்பிடுவோம். லிபர்ட்டி தியேட்டர் செல்லும் வழியில் சாலையின் வலது புறத்தில் உள்ளடங்கினாற் போல் இருந்த ஒயின் ஷாப் அது. அதன் பார் ஒரு மர்மக் குகை. நுழைந்தவுடன் கவுண்டரில் காசு கொடுத்து ஓ.ஸி.யை வாங்க வேண்டியது. எதிர்படும் குடியானவர்களை இடித்துவிடாமல் இடது புறத்திலிருந்து இருட்டான வராந்தாவைக் கடந்து மங்கிய வெளிச்சத்துடன் மிதக்கும் விளக்கொளிப் பகுதிக்குள் நுழைந்தால் அது தான் பார். இடது வலது புறங்களில் கருங்கல் மற்றும் இன்ன பிறவஸ்துகளால் கட்டப்பட்ட பெஞ்சு. பானங்களை வைத்து சாப்பிட அதே கல் மற்றும் இன்ன பிறவற்றால் கட்டப்பட்ட நீளமான மேஜை. எப்போதும் ஒருவிதமான வாசனை மிதந்து கொண்டிருக்கும். பீர், பிராந்தி, ஜின் என்று பலவகை பானங்களுடன் அசைவ வகை உணவுகளின் நெடி நாசியை அடைக்கும். அழுக்கான, ஜன்னல்களே இல்லாத செவ்வக அறைஅது. டேபிளில் கிடக்கும் காலி பாட்டில்களையும் தண்ணீர் பாக்கெட்டுகளையும் அப்புறப்படுத்தி சுத்தமாகத் துடைத்துக் கொடுப்பான் பீட்டர். சின்ன பையன். பதினைந்து தாண்டியிருக்க மாட்டான். எங்களைத் தனியே ஸ்பெஷலாக கவனிப்பவன். எப்போதும் ஒரே பார்வை, ஒரே நடை வேகம். மதுரைப் பக்கம் ஏதோவொரு கிராமத்திலிருந்து வந்தவன் என்றும் வயதான தாயும் ஒரு தங்கையும் உண்டென்றும் ஒரு முறைசொன்னான். அவ்வப்போது ஐந்து பத்து என்று டிப்ஸ் தருவோம்.எங்களுக்கு ரொம்பவும் பிடித்தமான பையன் அவன். அவன் அம்மா ஒரு ஆஸ்த்மா நோயாளி யென்றும் மதுரையில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார் என்றும் சொல்லிருந்தான். கொஞ்சம் திக்குவாய். சரியாகக் காதும் கேட்காது சில சமயங்களில் என்ன சொன்னாலும் என்ன வென்று திரும்பக் கேட்பான். ஆரம்பத்தில் கோபம் வந்தாலும் போகப் போக அவனுக்கு இந்த மாதிரி பிரச்னை இருப்பது தெரிந்ததும் நாங்கள் அவனிடம் ஒட்டுதலாய் இருந்தோம். கார்த்தி அவனுக்கு தெரிந்த டாக்டர் ஒருவரிடம் கூட்டிச் செல்வதாக வந்த நாளிலிருந்து சொல்லிக் கொண்டிருந்தான். பீட்டருக்கு ஓய்வு நேரம் கிடைப்பதே பெரும்பாடாய் இருந்தது. எனவே, இது சாத்தியமில்லாமல் போயிற்று. ஹோட்டல், பார்களில் இவனைப் போன்று பல பையன்களைப் பார்த்திருந்தாலும் இவனின் வேகம், ஒழுங்கு இவற்றை வேறெவனிடமும் கண்டதில்லை. எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாலும் கண்களைச் சுற்றி ஒருவித சோகம் பசையைப் போல் அப்பியிருக்கும். அவனது கிழிந்த உடைகளில் அவனது வாழ்க்கை பரிதாபமாய் படர்ந்திருக்கும்.நாங்கள் சென்ற பொழுதுகளில் கூட்டம் அதிகம் இருந்ததில்லை. எனவே, குடித்த பின்பு கார்த்தி பொழியும் தத்துவங்கள் ஜனங்களுக்கு பயன்படாமல் காற்றிலேயே கரைந்து விட்டன. ஒரு பீரு விழுங்கியவுடன் அவன் சமீபத்தில் கேள்வியுற்ற ஏதாவது பிரபலமாக அவதாரமெடுத்து விடுவான். ஓரிரண்டு ரவுண்டுகளுக்கு அப்புறம் அவன் தனக்குத் தானே பேச தொடங்கி விடுவதால் தொந்தர வில்லாமல் பிறகு நாங்கள் ஆரம்பிப்போம்.அந்த சமயத்தில் எல்லோரும் ஏதேனும் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருந்தோம். ஆகையால் தண்ணியடித்தால் எங்கள் பேச்சு தத்தமது காதலியைப் பற்றியதாய் தொடங்கும் அல்லது வேறெதிலோ தொடங்கி இதில் முடியும்.ரமணன் ஒருவன் தான் எங்களில் பதிலுக்கு பதில் காதலித்துக் கொண்டிருந்தான். அதாவது இருதலைக் காதல். எஞ்சிய எங்களின் காதலிகள் உள் மனசுக்குத் தெரிந்தவரை தோழிகள் தான். ஆர்வமிகுதியாலும் தன்னம்பிக்கைக் குறைவாலும் அவர்களை காதலிகளாக சித்தரிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் நாங்கள் இருந்தோம்.எங்களில் சேகர் நல்ல அழகன். ரமணன் அவனுக்கு நேரெதிர். மிகச் சாதாரணமான தோற்றம் கொண்டவன். ஒல்லியாக அறுபதுகளின் இளைஞர்களைப் போன்றஉடலமைப்பு தலைமுடியுடன் இருப்பான். அவனுக்கு ஒரு காதலியும் காதலும் இருப்பது இயற்கையின் விநோதம் என்று தான் நினைத்தோம். அவன் பி.எஸ்.ஸி. ஃபிஸிக்ஸ் படிக்கும் போதிலிருந்தே சின்ன அளவிலான கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றைஅவன் வீட்டு மாடியில் நடத்தி வந்தான். கணிப்பொறி அறிவியலில் எங்களை விட அறிவும் அனுபவமும் கொண்டவன் அவன். ஒருமுறைஎங்கள் வகுப்புத் தோழி நிஷா வீட்டிற்கு சிஸ்டம் ஃபார்மேட் செய்ய என்று போயிருந்தானாம். நிஷாவின் தம்பி தொடங்கி மொத்தக் குடும்பத்தையும் ஒரே நாளில் கவர்ந்து விட்டானாம். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு நிஷாவும் அவனும் காதலிக்கிறார்கள் என்றசெய்தி கேட்டு எங்களுக்கு மயக்கம் வராத குறைதான். எனினும், தோழனாகையால் அவனுக்கு அவன் காதல் விஷயத்தில் நாங்கள் ஆதரவாயிருந்தோம். அவ்வப்போது அவன் அவன் தோற்றத்தைப் பற்றி நாங்கள் கிண்டல் செய்யாமலில்லை. ரமணன் இவற்றை அதிகமாக பொருட் படுத்தமாட்டான்.

பேச்சு ஒரு வழியாக நிஷாவைப் பற்றி திரும்பியது. சேகர்தான் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாக கிண்டல் செய்பவன். அவள் பற்றிய பேச்சு வந்தவுடன் ரமணன் அமைதியாகி விட்டான். போதையின் உச்சம் நெருங்க நெருங்க காதுகளில் சப்தம் அதிகமாவதையும் பார்வை நிலை கொள்ளாது அலைபாய்வதையும் கடந்து சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் மேஜைக்கு எதிரில் ஒரு வயசானவர் குடித்துக் கொண்டிருந்தார்.நிஷாவின் பெயரைக் குறிப்பிடாமல் ரமணனைக் குறிவைத்து தன் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருந்தான் சேகர். ஆதரவு வேண்டும் கண்களுடன் ரமணன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் ஏமாளிகள் என்றும் எல்லா அழகான பெண்களும் ஏன் அசிங்கமான ஆண்களையே விரும்புகிறார்கள் என்றும் எங்களைக் கேட்காமல் நேராக ரமணனையே கேட்டுக் கொண்டிருந்தான் சேகர். எக்காளச் சிரிப்பு எங்களில் யாரிடம் தோன்றியது என்று தெரியவில்லை.ரமணன் பெஞ்ச்சை விட்டு தடுமாறி எழுந்தான். வாஷ் பேசின் சென்று காறி துப்பி விட்டு முகத்தைக் கழுவிக் கொண்டு மேஜைக்குத் திரும்பினான். சேகர் இன்னும் சிரிப்பை விடவில்லை.""என்ன ரமணா... உண்மை கசக்குதா?'' என்றான்.ரமணன் முகத்தைச் சுளித்து சிரித்தான்.""நான் உண்மையைச் சொன்னா.... உனக்கு வாந்தியே வந்துடும்....''""என்ன உண்மை... சொல்லு பாப்போம்''எங்களுக்கெல்லாம் வேடிக்கைதான். சூழலை மறந்து விஷயம் எந்த எல்லைக்குப் போகும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் போல் அமைதியாயிருந்தோம்.""சொல்லட்டுமா... சொன்னா இன்னிலேருந்து நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸô இருக்க முடியாது தெரிஞ்சுக்க...''கார்த்தி பொறுமை இழந்தான்.""அப்படி என்ன தாண்டா ஒங்களுக்குள்ள விஷயம்...? சொல்லத் தொலைங்கடா.''ரமணன், சேகரை ஒருமுறை பார்த்து விட்டு புகார் சொல்லும் தோரணையில் எங்களைப் பார்த்து சொன்னான்.""இவன் என்ன பண்ணிருக்கான் தெரியுமா? போன மாசம் செமினார் அப்ப ஏதோ டவுட் கேட்டுருக்கா நிஷா. இவன் பக்கத்துல உக்காந்து சொல்லிக் குடுத்தவன் எந்திருக்கும் போது அவ கன்னத்தைக் கிள்ளிருக்கான். சண்டே ஃப்ரீயா இருந்தா ஏதாவது சினிமா போலாமான்னு கேட்டுருக்கான். நிஷா என்கிட்ட சொல்லி எவ்ளோ அழுதா தெரியுமா?'' கடைசி வார்த்தை முடியுமுன் அருகில் பட்டாசு வெடித்தது போல் சத்தம் கேட்டது. சேகரின் வலுவான கை ரமணனை அறைந்த வேகத்தில் பீட்டர் ஓடி வந்து விட்டான்.""அண்ணே... வேணாம்ணே.... அடிச்சுக்கா தீங்கண்ணே... சேகரண்ணே.... வுடுங்க வுடுங்க பேசிக்கலாம்.''ரமணனுக்கு கோபம் தலைக்கேறியது. எழுந்த வேகத்தில் ஒல்லியான ஆனால் உறுதியான காலால் சேகரின் விலா எலும்பில் மொத்தென்னு உதைத்தான். விஷயம் இந்த எல்லைக்கு வந்து விடுமென்று அறிந்திராத நாங்கள் இருவரையும் தனித்தனியே இழுக்க வேண்டியதாயிற்று. பீட்டர் இருவரின் நடுவில் நின்று கொண்டு என்னவோ தான் தவறு செய்தது போல் கும்பிட்டுக் கொண்டிருந்தான்.

சேகர் ரமணன் மேல் பாய்ந்தான். பீட்டர் அவன் கை பிடித்து இழுத்தான். "வுடுடா டேய்.. அவன கொல்லாம வுட மாட்டேண்டா" என்று எகிறினான் சேகர். நாங்கள் அவனை இழுப்பதற்குள் பீட்டர் அவன் முன்னால் நின்றபடி "வுடுண்ணா..சேகரன்னா சொன்னா கேளு" என்றான். சேகர் ஒரு கணம் அமைதியானவன் போல் நின்று , உடம்பை சற்று பின் தள்ளி , கையை ஓங்கி பளீரென பீட்டர் கன்னத்தில் அறைந்தான். ஒரு நொடி தான். பீட்டரின் கடைவாயில் ரத்தம் துளிர்த்தது. அவன் அசையாமல் நின்றான். சேகருக்கு ரத்தம் பார்த்தவுடன் பதற்றமாகி விட்டது. தான் என்ன செய்தோம் என்பதை தாமதமாய் உணர்ந்தவனாய் , " பீட்டர் .. ஸாரிடா தம்பி ..வேணும்னு அடிக்கலை டா .." என்றான். அவன் உடம்பு முன்னும் பின்னும் ஆடியது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பீட்டர் வாயை துடைத்தவாறு நகர ஆரம்பித்தான். சேகர் பாக்கெட்டில் கை விட்டு ஐம்பது ரூபாய் நோட்டொன்றை பீட்டர் கையில் திணித்தான்.

பீட்டர் அதை பொருட்படுத்தவேயில்லை. கீழே கிடந்த பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு வேகமாய் நடந்தான். கடைசி வரை அவன் கண்ணில் கண்ணீரை பார்த்ததாக நினைவில்லை. நாங்கள் கூப்பிட கூப்பிட காதில் விழாதவன் போல் போய்க்கொண்டே இருந்தான். ரமணனும் சேகரும் ஒருமுறை பரஸ்பரம் பார்த்துகொண்டார்கள்.

அதற்கடுத்து வந்த இருபது நாட்களில் நாங்கள் கடைசி நாள் மட்டும் அந்த பாருக்குப் போயிருந்தோம். பீட்டரைக் காணவில்லை. அவனைப் பற்றிய தகவலும் யாருக்கும் தெரியவில்லை. உள்ளே மற்றபையன்களுடன் புதியவன் ஒருவன் இருந்தான். பீட்டரை விடச் சின்னவன்.""தம்பி இங்க பீட்டர்ணு ஒரு பையன் இருந்தானே...''""எனக்குத் தெரியாதுங் கண்ணா. என்னண்ணா வேணும்.... மானிட்டரா.... நெப்போலியனா?''நாங்கள் அன்று குடிக்கவில்லை. அழுக்கடைந்து இருள் கலந்த அந்த பாரில் எதுவும் குடிக்காமல் ஐம்பது ரூபாய் டிப்ஸ் தந்தவர்களை ஆச்சர்யம் தாளாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
-vadakkuvaasal