Showing posts with label ஜானகி. Show all posts
Showing posts with label ஜானகி. Show all posts

Sunday, October 17, 2010

இளையராஜா : உயிரில் கலந்த இசை..



ராஜாவின் இசையுடனான உறவு எப்போது துவங்கியது தெரியவில்லை.பள்ளி செல்லும் நேரங்களில் விவிதபாரதி ஒலிபரப்பும் பாடல்கள் என்னை அறியாமலே என்னுள் கலக்க ஆரம்பித்த நேரம். பழைய பாடல்களை இனம்பிரிக்க தெரிந்து வைத்திருந்தேன். சில குறிப்பிட்ட பாடல்கள் மட்டும் இன்னதென்று சொல்ல முடியாத அளவு இனிமையாய் இருப்பதை கவனிக்க ஆரம்பித்தேன்.

அப்போது இசை அமைப்பாளர் யார் யார் என்றெல்லாம் தெரியாது. 'இளமை இதோ இதோ' என்ற மேற்கத்திய இசை சாயல் பாடலும் 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற துள்ள வைக்கும் நாட்டுப்புற இசை பாடலும் இந்த பாடல்களுக்கு பின் யார் தான் இருக்கிறார்கள் என்று தேட வைத்தன. வானொலியில் பாடல் பற்றி அறிவிப்பாளர் சொல்லும் விஷயங்களை கேட்க ஆரம்பித்தபோது ஒளிபரப்பாகும் பாடல்களில் எண்பது சதவீதம் உச்சரிக்கப்படும் பெயர் 'இளையராஜா'. இப்போது நினைத்து பார்த்தால் அந்த அறிவிப்பாளர் ராஜாவின் பெயரை ஒரு கனிவுடன் உச்சரித்து போல் தோன்றும். எத்தனை பாடல்கள்.

என் வீட்டில் என் சகோதரிகளும் அண்ணனும் ராஜாவின் மிக தீவிரமான ரசிகர்கள். அவர்கள் தான் ராஜாவின் பாடல்கள் இவை என எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள். மிக பிரபலமாய் இருந்த பாடல்கள் தவிர அவ்வப்போது திருச்சி வானொலி நிலையமும் இலங்கை வானொலி நிலையமும் ஒலிபரப்பும் அரிதான பாடல்கள் தான் என்னை மிகவும் கவர்ந்தன. 'மெட்டி ஒலி காற்றோடு' பாட்டுக்கு முன் ஜானகியும் ராஜாவும் பாடும் ஆலாபனை என்னை ஒரு மயக்க நிலைக்கு தள்ளியது என்றே சொல்வேன். அந்த படத்தில் அவ்வளவு பிரபலமாகாத இன்னொரு பாடல் 'சந்த கவிகள் பாடிடும் மனதினில்' . அந்த பாடலின் முன்னால் வரும் வயலின் இசை , ராஜா இன்று வரை அமைத்த வயலின் இசைக்கோர்வைகளில் மிக சிறந்தது என சொல்வேன். இசை வெள்ளம் என்று சொல்வார்களே.. அதை அந்த பாடலில் கேட்கலாம். அதே போல் மாலை நேரங்களில் எங்கிருந்தோ ஒலிக்கும் 'ஆசைய காத்துலே தூது விட்டு' பாடலின் முகப்பு இசை , அந்த புல்லாங்குழல் முணுமுணுப்பு.....இப்போதும் சிலிர்க்க வைக்கும் 'ராஜ கற்பனை'. ஜானியின் இன்னொரு மிக சிறந்த பாடலான 'காற்றில் எந்தன் கீதம்' இன்றும் பலர் இரவுகளில் இதயம் தொட்டு தூங்க வைக்கும் பாடல். அந்த பாடலின் இடைஇசையின் அற்புதமாக ஒரு புல்லாங்குழல் சற்று சிணுங்கி விட்டு பின்பு இசைக்க தொடங்கும்...ஆஹா என்ன ஒரு கற்பனை.

ராஜாவின் மிக பெரும்பலம் வார்த்தைகளில் கூட வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை தனது இசை மூலம் தருவது தான். அவரது யுகம் முடிந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆன பின்னும் அவரது ரசிகர்கள் இன்றும் அவரை ஆராதிப்பதே அதற்காக தான் என்று நம்புகிறேன். மெல்லிய இழை போன்ற உணர்வுகளை அவரது பெரும்பாலான பாடல்களில் , பின்னணி இசையில் கேட்கலாம். அந்த வகையில் எனக்கு பிடித்த பாடல்களை (இப்போது நினைவுக்கு வருபவை) : உறவுகள் தொடர்கதை (அவள் அப்படி தான்) , பனி விழும் பூ நிலவில் (தைப்பொங்கல்) , ஞான் ஞான் பாடணும் (பூந்தளிர்) , வசந்த கால கோலங்கள் (தியாகம்) , மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே (நண்டு) , வான் மீதிலே (ஜானகி பாடியது..) என்று அவரது பாடல்களை பட்டியலிட ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது. என்னை பொறுத்தவரை ராஜா எண்பதுகளின் இறுதிவரை தந்த பாடல்களை இனி அவரால் கூட தரமுடியாது என்று தான் நினைக்கிறேன். குறிப்பாக '76 முதல் '86 வரை அவர் இசையில் உருவான பாடல்கள் நிகரற்றவை. இவை எல்லா இசை ரசிகரும் அறிந்த விஷயங்கள். தவிர இசை ரீதியாக ராஜாவின் படைப்பாற்றலை ஆராய்ந்து சொல்லும் இசை அறிந்த ரசிகர்களின் பதிவுகளுக்கு முன்னால் நான் சொல்வது எதுவும் இல்லை. இருந்தாலும் ஒரு கடைக்கோடி ரசிகனாக ராஜாவின் இசை பற்றி எழுத நீண்ட நாட்களாக இருந்த விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஒரு சந்தோஷம்.

அவரை சந்தித்த அனுபவத்தை இந்த பதிவில் எழுதுகிறேன் . ராஜா தீபாவளி நாட்களில் தனது அம்மா சமாதி இருக்கும் கம்பம்-தேனி பகுதிக்கு வருவார் என்று என் இசை நண்பர்கள் புதுக்கோட்டையிலிருந்து ஒரு ஆன்மீக பயணம் போல் கிளம்பி ராஜாவை தரிசித்து விட்டு வருவார்கள். என்னையும் ஒரு முறை அழைத்து சென்றார்கள்.நிர்மல் என்ற ஒரு நண்பரின் வேனில் தான் பயணம். அவரிடம் மிக அரிதான ராஜ பாடல்களின் தொகுப்பு நிறைய இருக்கும். வழியெங்கும் ராஜாவின் இசையில் வந்த அற்புதங்கள் செவிகளை நிறைக்க ..அதிகாலையில் அந்த பகுதி சென்று சேர்ந்தோம். அங்கு ஒரு கண்மாயில் குளித்து விட்டு ராஜாவை பார்க்க அவர் அம்மா சமாதியை அடைந்தோம். அங்குள்ள தனது விருந்தினர் மாளிகையில் ராஜா ஒரு அரைக்கை சட்டையும் வேட்டியும் அணிந்து புதுக்கோட்டையை சேர்ந்த புலவர் வெண்ணரசுவுடன் பேசிக்கொண்டிருந்தார். எங்களுக்கு முன்னாலேயே புலவர் அங்கு வந்திருப்பார் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை . பேசிக்கொண்டே எங்களை திரும்பி பார்த்த ராஜா "எல்லோரும் டிபன் சாப்பிடுங்கள்' என்றார். அந்த நேரத்திலும் அங்கு வருபவர்களுக்காக அருமையான காலை உணவு தயாராய் இருந்தது. அருகில் கேமராவும் கையுமாக அமர்ந்து சாப்பிட்டுகொண்டிருந்த ஒருவரிடம் பேசியபோது அவர் ஆனந்த விகடன் நிருபர் பொன்ஸீ என்று தெரியவந்தது. அவரும் எங்களை போன்றே தீவிர ரசிகர். பிறகு ராஜா தன் அம்மா சமாதிக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியதை மெளனமாக பார்த்துகொண்டு நின்றோம். அவரது வெளிநாட்டு நண்பர்கள் இருவர் அந்த நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்துகொண்டிருந்தனர்.

பிறகு ராஜாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள எல்லோரும் முண்டியடித்தார்கள். எனக்கென்னவோ அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. சில சமயம் அவர் இப்படி போய் நிற்கும் ரசிகர்களிடம் கடிந்து கொள்வார் என்று கேள்விபட்டிருந்ததால் நான் அவரை நெருங்கவில்லை. ஏதாவது நடந்து அவர் என் மனதில் நான் அவரை அமர வைத்திருக்கும் சிம்மாசனத்தில் இருந்து இறங்கி விடக்கூடாது என்ற பயம் தான் காரணம். என் மனதிற்கு பிடித்த ஒரு மனிதனை , இணையில்லா கலைஞனை தூரத்தில் இருந்தே தரிசித்துவிட்டு திரும்பினோம். வழி முழுவதும் ....அவர் இசை. 'எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்'.