அனல் காற்றும் கண்ணைக்கூசும் சூரிய ஒளியும் அலைந்து திரியும் அரவமற்ற வறண்ட மலைப்பகுதிகள். மஞ்சளும் பழுப்பும் அப்பிக்கிடக்கும் பிரதேசத்தில் புழுதி பறக்க விரையும் குதிரைகளின் மேல் அழுக்கு முகம், பரட்டை தலை கசங்கிய உடைகளுடன் பாய்ந்து செல்லும் மனிதர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் மரத்தாலான கட்டிடங்கள் கொண்ட அகன்ற தெருக்களில் நேருக்கு நேர் நின்று துப்பாகியால் சுட்டுக்கொண்டு பழிதீர்த்துக்கொள்ளும் வீரர்கள், கொலைகாரர்கள், வயதான கடைக்காரர்கள், ரயில் பாதை அமைக்கும் பணிக்காக அமேரிக்கா சென்ற சீனர்கள், அழகிய வேலைப்பாடமைந்த கோச்சுகள் கொண்ட ரயில்கள், பழுப்பு நிலத்தில் விழும் தொப்பியின் நிழல், விலை மாதர்களின் பிதுங்கும் மார்பகங்கள் என்று நீளும் western உலக பின்னணியில் வெளியான ஹாலிவுட் மற்றும் ஸ்பாகெட்டி வெஸ்டெர்ன் படங்கள் (இவ்வகை படங்கள் குறித்து தேசிய விருது வென்ற 'திரைச்சீலை' புத்தகத்தில் ஜீவானந்தன் விரி வாகவே எழுதியுள்ளார்) எத்தனை முறை எடுக்கப்பட்டாலும் பார்க்க சலிக்காதவை. அந்த வகையில் இந்த ஆண்டு இரண்டு முக்கியமான வெஸ்டேர்ன் திரைப்படங்கள் வெளிவந்தன. குவெண்டின் டாரண்டினோ இயக்கத்தில் ஜாமி ஃபாக்ஸ், கிறிஸ்டோபர் வால்ட்ஸ் நடித்த Django Unchained மற்றும் தற்போது திரையரங்கங்களில் ஓடிக் கொண்டிருக்கும் The Lone Ranger.
படம் ரயிலில் துவங்கி ரயிலில் முடிகிறது. இடையில் கரடுமுரடான, மலை நிலங்கள், வெள்ளிக்கட்டிகள் கொண்ட நதிகள் என்று எங்கெங்கோ நம்மை கூட்டி செல்கிறது. ஆனால் இந்தப்பயணத்தில் லாஜிக் மூட்டைகளை இறக்கி வைத்து விட்டால் தான் நாம் மன பாரமின்றி படத்தை ரசிக்க முடியும்.
1933ல் ஒரு பொருட்காட்சிக்கு செல்லும் சிறுவன் பழைய அமெரிக்கா பற்றிய கண்காட்சி கூடத்துக்கு செல்கிறான். அங்கு பாடம் செய்யப்பட்ட பைசன் உடல் போன்ற அதிசயங்களை கண்கள் விரிய பார்க்கும் சிறுவன், வருடங்கள் உடலில் வரைந்த கோடுகளுடன் தொண்டு கிழமான செவ்விந்திய சிலையை உற்று பார்க்கிறான். பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த சிலையின் விழிகள் அசைகின்றன. சிறுவன் திடுக்கிடுகிறான். பின்னர் அம்மனிதனுடன் உரையாடத் துவங்குகிறான். தான் கேள்விப்பட்ட Lone Ranger பற்றி அறியும் ஆவல் கொண்ட அச்சிறுவனிடம், கிட்டத்தட்ட தொண்ணூறு வயதை தாண்டிய அந்த செவ்விந்தியன் உண்மையான அந்த ஒற்றை ரேஞ்சருடனனான தன் சாகசக் கதையை சொல்கிறான். கதை காட்சியாய் நம் கண் முன் விரிகிறது. ஜானி டெப் தான் அந்த செவ்விந்திய வயோதிகன். வினோதமான உடல்மொழிகளுடன், உடலில் தொங்கும் ஆபரணங்களும், முகத்தில் நிரந்தரமான வெண்ணிறப் பூச்சும், தலைக்கு மேல் இறக்கை விரிந்த நிலையில் இறந்த காகத்தின் உடலுமாக செவ்விந்தியராக ஜானி டெப்(ப்!) வாழ்ந்திருக்கிறார் , சற்று அம்மாஞ்சியான நேர்மை குணம் படைத்த இளம் வழக்கறிஞர் பாத்திரத்தில் ஆர்மீ ஹாமர். ரயிலில் கொண்டு செல்லப்படும் ஒரு பயங்கர குற்றவாளியை (William Fichtner) காப்பாற்ற குதிரையில் வரும் கொள்ளை கும்பல், வில்லனை வெற்றிகரமாக காப்பாற்றி செல்கிறது. அதை முறியடிக்க மற்றொரு கைதியான ஜானி டெப் முயன்றாலும் நேர்மை வழக்கறிஞர் சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையால் அது பிசுபிசுப்பதுடன், ரயில் பெட்டிகளில் இருந்து பிரிக்கப்படும் எஞ்சின் விபத்துக்குள்ளாகிறது. நம்பவே முடியாத வகையில் அவ்விபத்தில் இருந்து ஜானி டெப்பும் ஆர்மி ஹாமரும் தப்புகின்றனர்.
ரயில் கட்டுப்பாட்டை இழந்து நிற்க வேண்டிய ஸ்டேஷனில் நிற்காமல் ஓடுவதால் , தன் சகோதரன் ஆர்மீ ஹாமருக்காக காத்திருக்கும் அவரது அண்ணன் தலைமையிலான Ranger குழுவும், தறிகெட்டு ஓடும் ரயிலை தொடர்ந்து வந்து அவர்களை மீட்கிறது. ஜானி டேப் சிறையில் அடைக்கப்படுகிறார்.
காவல் அலுவலகத்தில் தன்னை பார்க்க வரும் தன் அண்ணனின் மனைவியிடம் தனக்கு இருக்கும் அதீத அன்பை (காதல்!) ஆர்மீ காட்டுகிறார்.
ரேஞ்சர் அண்ணன் ஆர்மீயையும் தன் குழுவில் சேர்த்துக் கொள்கிறார். தப்பிச்சென்ற வில்லன் கும்பலை தேடி செல்லும் அக்குழுவில் உள்ள மூத்த ரேஞ்சர் ஒருவர் துரோகம் செய்ய, குன்றுகள் சூழ்ந்த இடத்தில வைத்து அக்குழுவை வில்லன் கும்பல் தீர்த்துக்கட்டுகிறது. ஆர்மீ யும் சுடப்படுகிறார். நீண்டநாள் பகையை பழிதீர்க்க வரும் வில்லன், குற்றுயிராய் கிடக்கும் ஆர்மீயின் அண்ணனின் இதயத்தை வெட்டி எடுத்து ருசிக்கிறார். அரைமயக்க நிலையில் அதை பார்க்கும் ஆர்மீ அதிர்ச்சியடைகிறார். இறந்த ரேஞ்சர் குழுவை வில்ல்லன் கும்பல் விட்டு செல்ல, சிறையில் இறந்து தப்பிய ஜானி டெப் அங்கு வந்து சேர்கிறார். இறந்தவர்களை புதைக்க ஏற்பாடு செய்கிறார். இறந்தவர்கள் உடையில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வதுடன், பண்ட மாற்றாக தன்னிடம் உள்ள இறகு போன்ற பொருட்களை உடலில் வைக்கிறார்(படம் முழுவதும் இந்த பண்ட மாற்று காட்சிகளில் திரையரங்கில் உள்ளவர்களை சிரிப்பால் அதிரவைக்கிறார் டெப்!) கடைசியில் ஆர்மீ கண் விழித்து எழ முயற்சிக்க, என்னவோ ஏதோ என்று பயந்து 'பிணத்தை' அடித்து மீண்டும் படுக்க வைக்கிறார் டெப். அங்கு வந்து சேரும் (செவ்விந்தியரான டெப் பின் கணிப்பு படி ) அற்புத சக்தி கொண்ட வெள்ளை குதிரை, இறந்து போன ஆர்மீ மீண்டும் உயிர்பிழைத்ததாக டெப் புக்கு உணர்த்துகிறது. பிறகென்ன, அவரை காப்பாற்றும் டெப், வில்லன் கும்பலை அழிக்க நீதிமான் ஆர்மீ க்கு உதவுகிறார். இடையில் எக்கச்சக்க சண்டை காட்சிகள், சாகச நிகழ்ச்சிகள்.
படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்னைப் பொருத்தவரை, ஜானி டெப் பின் அட்டகாசமான நடிப்புக்காகவே இப்படம் குறைந்தபட்சம் ஹிட் அடிக்க வேண்டும். மனிதர் ரெண்டு நிமிடம் அசையாமல் நின்று கொண்டு உதட்டை பிதுக்கி கண்ணை சுருக்கினாலே அரங்கில் விசில் பறக்கிறது. பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் படத்தின் இயக்குனர் தான் இப்படத்துக்கும் இயக்குனர் என்பதால் இருவரின் கெமிஸ்ட்ரியும் நன்றாக வேலை செய்திருக்கிறது. பல காட்சிகளில் ஜானி டெப் எளிதாக ஸ்கோர் செய்கிறார். அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம் இது. தனது முன்னோர்கள் செவ்விந்திய இனத்தை சார்ந்தவர்கள் என்பதால் இப்பாத்திரத்தில் அர்ப்பணிப்புடன் நடித்ருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அவர் பேசும் செவ்விந்திய பாஷை பிரமாதம் இல்லை என்றாலும் திரைக்கு போதுமானது என்று செவ்விந்திய பேராசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார்.
படம் பல இடங்களில் முன்னோடி வெஸ்டெர்ன் படங்களுக்கு tribute செய்திருக்கிறது. ஆற்று நீரில் நின்றுகொண்டு, டெப்பும் ஆர்மீயும் பாலத்துக்கு குண்டு வைக்கும் காட்சி , The Good, the bad and the ugly யில் வரும் காட்சியை நினைவுப்படுத்துகிறது. ரயில் பாதை அமைக்கும் காட்சிகள், Once upon a time in the west உள்ளிட்ட பல படங்களில் வரும். 1850 முதல் 1880 வரையிலான காலப் பின்னணி கொண்ட படங்கள் தான் வெஸ்டெர்ன் படங்களில் பெரும்பாலானவை. இப்படமும் அப்படியே.
படத்தின் பலவீனம் என்னவென்றால் அளவுக்கு மீறிய சாகச காட்சிகள் என்று தோன்றுகிறது. க்ளைமாக்சில் எந்த ரயிலில் யார் போகிறார் என்றே தெரியவில்லை. நம்ப முடியாத அளவிலான சாகசம். கொஞ்சம் நம்பும்படியாய் எடுத்திருந்தால் படம் நின்றிருக்கும். இப்படம் தோல்வி என்றாலும் 'அழகான தோல்வி' என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இசை. Hans Zimmer ஒவ்வொரு காட்சியையும் இசையால் மொழிபெயர்த்து கலக்கியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு Grand Symphony. நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள திரையரங்கில் பார்த்தால் கண்ணுக்கு மட்டும் அல்ல காதுக்கும் விருந்து தான். கதையை சிறுவனிடம் சொல்லி முடிக்கும் வயதான டெப், அகன்ற திரையில் End title credits மெல்ல ஊறி செல்ல, தடுமாறியபடி நடந்து சென்று மறையும் வரையில் நான் நின்று இசையை ரசித்துக்கொண்டு நின்றேன். The lone music lover!!