’தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான ஜி. குப்புசாமி நேர்காணலின் விரிவான பதிவு..
மொழிபெயர்ப்பை ஒரு படைப்புச் செயலாகக் கருதும் மிகச் சில மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் ஜி. குப்புசாமி. மூலப்படைப்பின் பொருளை மட்டுமல்லாமல் அதன் தொனியையும் கொண்டுவருவதற்கு மெனக்கெடுபவர். ஓரான் பாமுக்கின் நூல்கள், ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள், அருந்ததி ராயின் நாவல் என்று தமிழுக்கு அவர் கொண்டுவந்த புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ஓரான் பாமுக்கின் ‘வெண்ணிறக் கோட்டை’ மொழிபெயர்ப்பை முடிக்கும்தறுவாயில் இருக்கும் அவருடன் ஒரு நேர்காணல்…
இலக்கியம்,
மொழிபெயர்ப்பில் ஆர்வம் உருவானது எப்படி?
மொழிபெயர்ப்பு பற்றிப்
பேசத் தொடங்குவதற்கு முன், வாசிப்பில் நான் மிகுந்த ஆர்வமுள்ளவன் என்பதை
முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். மிக இளம் வயதிலேயே வித்தியாசமானவனாக
இருக்கவேண்டுமென்ற ஆசையில், புரிகிறதோ இல்லையோ, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி,
ஜி.நாகராஜன் என்று படித்துக்கொண்டிருந்தேன். உண்மையான மனத்திறப்பு பதினேழு வயதில்
ஜெயகாந்தனால் ஏற்பட்டது. கூடவே பி.ஜி.வோடவுஸ், ஹெய்லி, சுஜாதா என்றும்
படித்துக்கொண்டிருந்தேன். வயசுக்கோளாறு காரண்மாக பல நோட்டுப் புத்தகங்களை
கவிதையால் நிரப்பியிருக்கிறேன். சில சிறுகதைகளையும் எழுதினேன். எதையும்
பிரசுரத்துக்கு அனுப்பாமல் எனக்கே எனக்கானவையாக
வைத்துக்கொண்டேன்.
ஏன் தொடர்ந்து
எழுதவில்லை?
அதற்கு ஒரு விநோதமான
காரணம் உண்டு. வண்ணதாசனைப்போலவே எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு வண்ணதாசன்
இருக்கும்போது நானும் எதற்கு என்று
நிறுத்திவிட்டேன்.
மொழிபெயர்ப்பின் பக்கம்
உங்களை இழுத்துவந்தது எது?
முப்பதுகளின் இறுதியில்
தீவிரமான மன அழுத்தத்தில் இருந்தேன். என் இறுக்கத்தை மொழிபெயர்ப்புதான் தளர்த்தியது என்பேன். 2002
குஜராத் கலவரத்தை எதிர்த்து திருவண்ணாமலையில் கே.என். பணிக்கர், ஆ.இரா.
வேங்கடாசலபதி, ஞாநி போன்றோர் கலந்துகொள்ளும் கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது குஜராத் கலவரம் தொடர்பாக அவுட்லுக் இதழில் அருந்ததிராய் எழுதிய நீண்ட
கட்டுரையை மொழிபெயர்த்து கூட்டத்தில் சிறு நூலாக வெளியிடலாம் என்று தீர்மானித்து
பவா செல்லதுரை என்னை மொழிபெயர்க்கச் சொன்னார் அதுதான் ஆரம்பம் பல வருடங்களாக
வாசித்து, வாசித்து மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருப்பதை விட மொழிபெயர்த்து
மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதின் இன்பம் அப்போதுதான் புரிந்தது. புதிய
பிறப்பெடுத்ததுபோல என் அபிமான சிறுகதைகளைத் தொடர்ந்து மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்.
அருந்ததி ராயின் ‘காட்
ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவலையும் நீங்கள்தான் மொழிபெயர்த்தீர்கள். அது தொடர்பாக அவருடனான உரையாடல்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதாவது...
அருந்ததிராய் என்
ஆதர்சஎழுத்தாளர். ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவலை ஆகச்சிறந்த நாவல் என்று நான்
சொல்லிக்கொண்டிருந்தது சில நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், பலருக்குச்
சாதாரணமாகத் தோன்றும் சில பாடல்கள் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்
அல்லவா! இந்த நாவல் எனக்கு அப்படித்தான். உண்மையில், இந்நாவலின் எஸ்தா பாத்திரத்தை
வாசிக்கும்போது அது நான்தான் என்று தோன்றியது. எனக்கே தெரியாமல் எனக்கு இன்னொரு
வாழ்க்கை இருப்பதாக உணரவைத்த பாத்திரம் அது.
அந்நாவலின் மொழிபெயர்ப்பு
பணிகள் முடிவடையும் வரை அவருடன் தொடர்பு இருந்ததேயில்லை. அருந்ததிராய் 2012 ஜனவரியில் சென்னை வந்திருந்தபோதுதான் கண்ணன்
அவரிடம் என்னை அறிமுகப்படுத்திவைத்தார். என்னுள் கலந்துவிட்டிருந்த அந்நாவலைப்
பற்றி அருந்ததிராயிடம் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். அதன்பின்னர் எனக்கு
அனுப்பும் மின்னஞ்சல்களில் ’டியர் குப்புசாமி எஸ்தப்பன்’ என்று என்னைக்
குறிப்பிட்டு, அருந்ததி ராஹேல் என்றுதான் கையெழுத்திடுவார். என் குடும்பத்தில்
ஒருவராக, என் சகோதரியாக இருப்பவர் அவர்.
மொழிபெயர்ப்பு விஷயத்தில்
உங்களுக்கான கோட்பாடு என்ன?
‘கேட்சிங் தி லெட்டர் பை
தி ஸ்பிரிட் ஆஃப் இட்’ என்பதுதான் எனது தாரக மந்திரம். மூலப்படைப்பில் இருந்து எதையும் திருத்துதல்,
மாற்றுதல், வாசகங்களை இடம் மாற்றிப் பயன்படுத்துதல் போன்றவற்றைச் செய்ய
மொழிபெயர்ப்பாளருக்கு உரிமையே கிடையாது. மூல ஆசிரியருக்கு மொழிபெயர்ப்பாளர் தன்னை
முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட வேண்டும். அவரது தொனி, மொழி, நடை என்று
எல்லாவற்றையும் அப்படியே கொண்டுவர வேண்டும். அதே சமயம், மொழிபெயர்ப்பு என்பது 100%
முழுமையானதாக வருவதற்கு வாய்ப்பில்லை என்றுதான் சொல்வேன். ஆனால், அந்த 100%-ஐ
நோக்கிய பயணம்தான் மொழிபெயர்ப்பாளர் செய்ய வேண்டியது. அடிக்குறிப்புகளில் எனக்கு
உடன்பாடு கிடையாது.மூலப் படைப்பை விட மொழிபெயர்ப்பு நன்றாக இருப்பதாக யாரேனும்
சொன்னால் அவர் மூலப் படைப்பைச் சரியாகப் படிக்கவில்லை என்று அர்த்தம். ஆனால்,
தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை கொண்ட எழுத்தாளர் அ. முத்துலிங்கம், ’என்
பெயர் சிவப்பு’ மொழிபெயர்ப்பைப் பற்றி எழுதும்போது ஆங்கிலத்தைவிட தமிழில் நன்றாக
இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். சில விஷயங்களை, ஆங்கிலத்தைவிட தமிழில் உயிப்போடு
எழுத முடிவதுதான் இதற்குக் காரணம், அந்தப் பெருமை தமிழுக்குத்தான் என்று
அவருக்குச் சொன்னேன்.
படைப்புகளை மொழிபெயர்ப்பதிலும்,
அல்புனைவுகளை மொழிபெயர்ப்பதிலும் இருக்கும் வேறுபாடுகள் என்னென்ன?
அயல் மொழிகளில்
எழுதப்பட்ட புனைவுகளை மொழிபெயர்க்கும்போது, முற்றிலும் புதிய நிலப்பரப்புகள்,
புதிய கலாச்சாரத்தை நம் மொழிக்கு அசலாகக் கொண்டு வரவேண்டிய சவால் இருக்கிறது.
எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா போன்ற நடிகர்களைப் போலவே ஆங்கிலத்தில் பேசிக் காட்ட
வேண்டும் என்றால், அவர்கள் பேசும் பாணியை அப்படியே கொண்டுவரவேண்டியிருக்கும்
இல்லையா! அப்படித்தான், புனைவுகளை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்கள் மிமிக்ரி
ஆர்டிஸ்ட் போல செயல்பட வேண்டும். மூலப் படைப்பின் தனித்தன்மை, அதன் சாரத்தை
முழுமையாகக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். நான் – ஃபிக்ஷன் எனப்படும்
அல்புனைவுகளை மொழிபெயர்க்கும்போது ஆசிரியரின் தொனி, நடை போன்றவற்றைவிட சொல்லவரும்
கருத்தைத் தெளிவாக, தேவைப்பட்டால் கூடுதல் விவரத்தையும் அளித்து , ‘ஆம்பிக்யுட்டி’
எனப்படும் தெளிவற்றத் தன்மை இல்லாமல் மொழிபெயர்க்கவேண்டும். ராமச்சந்திர குஹா, கே.
என். பணிக்கர், பி. சாய்நாத் போன்றவர்கள் எழுதும் கட்டுரைகளில் கருத்துகள்தானே
முக்கியம். ஆனால் படைப்பாளிகள் எழுதும் அல்புனைவுகளுக்கு இது பொருந்தாது. அருந்ததி
ராயின் கட்டுரைகளையும், பாமுக்கின் ‘இஸ்தான்புல்’லையும் கலைப் படைப்புகளாகத்தான்
கருதி மொழிபெயர்க்க வேண்டும்.
மொழிபெயர்ப்பின்போது
அந்நிய மொழியின் மரபுத் தொடர்கள் என்னென்ன சவால்களைத் தரும்?
அயல்மொழி மரபுத்
தொடர்களின் சொற்களை நேரடியாக
மொழிபெயர்ப்பதை விட அபத்தம் வேறில்லை. அச்சொற்றொடர் உணர்த்தும்
பொருளுக்குத் தக்கவாறு வாக்கியத்தை அமைப்பதே உத்தமம். அந்தந்த வாழ்வியல்,
கலாசாரத்துடன் தொடர்புடைய அயலக மரபுத் தொடர்களை நம் நிலத்துடன் வலுக்கட்டாயமாகப்
பொருத்திவிட முடியாது.
அப்படி விட்டுவிட்டால்
கதைக்கு நடுவே இடைவெளி இருப்பதாக வாசகர்களுக்குத் தோன்றாதா?
அதுதான் இதில் இருக்கும்
சவால். ஒரு மொழிக்கே உரிய பிரத்யேக மரபுத்
தொடர்களை வேறொரு மொழியில் எழுதும்போது, அதற்கு இணையான உள்ளூர் மரபுத் தொடர்களைப்
பயன்படுத்தினால் பொருத்தமாக இருக்காது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஓரான் பாமுக்
எழுதிய ‘தி ஒயிட் கேஸில்’ துருக்கிய நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும்
விக்டோரியா ஹால்புரூக், நாவலில் பயன்படுத்தியிருக்கும் மரபுத் தொடர்களில்
பெரும்பாலானவை துருக்கிய மண்ணுக்குத் தொடர்பில்லாதவை போலத் தோன்றுகின்றன. அவை
ஆங்கில மரபுத் தொடர்களாகவே தெரிகின்றன. எனக்குத் துருக்கிய மொழி தெரியாது.
எனினும், துருக்கிய பண்பாட்டுக் கூறுகள் தொடர்பாக இருக்கும் பரிச்சயத்தை வைத்து
இதைச் சொல்கிறேன். நுட்பமான வாசகர்கள் இதுபோன்ற வேறுபாட்டைப்
புரிந்துகொண்டுவிடுவார்கள். மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருப்பது மிகக் குறுகலான சுதந்திர
வெளிதான்.
மொழிபெயர்ப்பில் உங்கள்
முன்னோடி யார்?
தமிழில் ஆர். சிவகுமார்,
வெ.ஸ்ரீராம், சி. மணி போன்றொர் மிகவும் சிரத்தையான மொழிபெயர்ப்பாளர்கள். ஆனால்
மொழிபெயர்ப்பில் எனது மானசீக குரு என்றால், சா. தேவதாஸைத்தான் சொல்வேன். என்
ஊரிலேயே எனக்குக் கிடைத்த குரு அவர்.
மொழிபெயர்ப்பு குறித்த நுட்பங்களை, உத்திகளை கற்றுத்தந்த நண்பர், வழிகாட்டி அவர்தான். அவரது மொழிபெயர்ப்புகளை விடவும், நேரடியாக அவரிடம் நான் கற்றுக்கொண்ட
பாடங்கள்தான் என்னைச் செழுமைப்படுத்தின என்பேன். மற்றொரு குரு, வேறு யார்
க.நா.சு.தான்! மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அவர் செய்யாத விஷயங்களே இல்லை. அவர்
100% முழுமையான மொழிபெயர்ப்பாளர் இல்லை என்று இன்று சொல்லலாம். ஆனால், அவரது
நோக்கம் அயல் பிரதேசங்களின் படைப்புகளை முடிந்தவரை பரிந்துரை செய்வதாகத்தான்
இருந்தது.
மொழிபெயர்ப்பு படைப்புகளைப் பொறுத்தவரை, தமிழ்
சரளமாக இருப்பதில்லை என்று பொது வாசகர்களின் ஒரு தரப்பு கருதுகிறதே. அதுபற்றி என்ன
நினைக்கிறீர்கள்?
மொழிபெயர்ப்பு கடினமாக
இருப்பதையும், எளிதாக இருப்பதையும் தீர்மானிப்பது மூலப்படைப்புதான் என்பதை பல
தீவிர வாசகர்கள்கூட புரிந்துகொள்ளாமல் இருப்பது ஆயாசமளிக்கிறது. ஓர் இலக்கியப்
படைப்பை மொழிபெயர்ப்பது என்பது மறுகூறலாக இருக்கக்கூடாது. சிக்கலான வாக்கிய
அமைப்பிலும், நனவோடை உத்தியிலும் எழுதப்படும் எழுத்தை, நீர்த்துப்போன எளிமையான
நடையில் பள்ளி ஆசிரியன் வேண்டுமானால் பாடம் நடத்தலாம். மொழிபெயர்ப்பு என்பது ஓர் இணையான படைப்பாக்கம். வாசகனை
படைப்பாளியிடம் மொழிபெயர்ப்பாளன் கொண்டுசேர்க்க வேண்டும். படைப்பாளியை வாசகனிடம்
கொண்டுவருதல் இலக்கிய மொழிபெயர்ப்பாகாது.
ஓரான் பாமுக் படைப்புகளை
மொழிபெயர்ப்பதில் தனி ஆர்வம் காட்டுகிறீர்கள். உங்களை அவர் எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறார்?
ஓரான் பாமுக்கை எனக்கு
அறிமுகப்படுத்தியவர் எஸ். ராமகிருஷ்ணன்தான். வாசிக்கத் தொடங்கியதும் அவரது
எழுத்துகள் என்னை முழுமையாகப் பீடித்துக்கொண்டுவிட்டன என்றுதான் சொல்வேன்.
எந்தெந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்க்கலாம் என்று காலச்சுவடு கண்ணன்
என்னிடம் கேட்டபோது நான் ஓரான் பாமுக்கின் பெயரைத்தான் சொன்னேன். அவரது ‘மை நேம்
இஸ் ரெட்’ நாவலை முதலில் மொழிபெயர்த்தேன். துருக்கிக்கும் இந்தியாவுக்கும் ஆன்ம
ரீதியாகப் பிணைப்பு இருக்கிறது. இரு நாடுகளின் நிலப்பரப்புகள் முற்றிலும்
வேறானவையாக இருக்கலாம். ஆனால், துருக்கியர்களின் மனப்பரப்பு இந்தியத் தனமானது
என்றே சொல்வேன். பாமுக்கின் மன உலகம் இயங்கும் விதம் எனக்குப் பரிச்சயமாக இருக்கிறது.
உண்மையில் பாமுக்கை விட என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் ரேமண்ட் கார்வர்தான்.
மொழிபெயர்ப்பு படைப்புகள்
சமூகத்தில் எந்த விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
ஒவ்வொரு மொழியிலும் அயல்
மொழிப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகின்றன.
தமிழில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புகளால் இலக்கியப் படைப்புகள்
செழுமையடைந்திருக்கின்றன. க.நாசு., பிரம்மராஜன், ஸ்ரீராம் என்று வெவ்வேறு
காலகட்டங்களில் பலர் அயல் மொழிப்படைப்புகளை மொழிபெயர்த்தளித்ததால்தான் தமிழில் நவீனஇலக்கியம்
தனது அடுத்தடுத்த அடியை எடுத்துவைத்திருக்கிறது. சமீபத்திய உதாரணம் ஒன்றைச்
சொல்கிறேன். தேவிபாரதி சமீபத்தில் எழுதிய ‘நிழலின் தனிமை’ எனும் குறுநாவல்
சர்வதேசத் தரத்திலானது. இந்த நாவலுக்கான வடிவமும், குரலும் நீண்டகாலமாகப்
பிடிபடாமல் இருந்ததாகவும், ஜான் பான்வில் எழுதிய ‘கடல்’ நாவலின்
மொழிபெயர்ப்பைப் படித்த பின்னர்தான் நாவலின் தொனி பிடிபட்டதாகவும் என்னிடம்
சொன்னார்.
நேரடியாகப் புத்தகங்கள்
எழுதும் திட்டம் இருக்கிறதா?
இதுவரை அந்தத் திட்டம்
இல்லை. ஏனெனில் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய என் அபிமான புத்தகங்கள் இன்னும்
எத்தனையோ இருக்கின்றன. ஓரான் பாமுக்கையோ, பான்வில்லையோ, கார்வரையோ
மொழிபெயர்க்கும்போது அவர்களுடைய ஆன்மாவில் கலந்திருக்கும் இன்பமே எனக்குப்
போதுமானதாக இருக்கிறது. எனினும் ஒரு நாவல் மனதுக்குள் இருக்கிறது. ஆனால் அதை
எழுதக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறேன்.