Monday, November 29, 2010

மூலம்: நகல்- ஒரு அலசல்சில விஷயங்கள் நடக்கும்போது வியப்பாகவும் கோபமாகவும் ஆச்சர்யமாகவும் சம நேரத்தில் மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் கூட இருக்கும். அப்படியான ஒரு சமீபத்திய நிகழ்வு நந்தலாலாவின் வருகை. மிஷ்கின் தனது சிறந்த படைப்பாக பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ளும் இந்த படத்தை திரை உலகமும் இலக்கிய உலகமும் ( சாரு நிவேதிதா போன்ற 'ஒலக மேதைகள்' உட்பட) கொண்டாடுகின்றன. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. டெல்லியில் அது இன்னும் வெளியாகவில்லை. நான் ஆர்வத்துடன் கவனித்து வருவது படம் பற்றி பதிவர்களும் எழுத்தாளர்களும் எழுதும் விமர்சனங்களையும் இந்த படத்தின் 'திரை மூலம்' என்று Kikujiro படத்தை பற்றி பலர் சொல்லி வருவதையும் அது தொடர்பான விஷயங்களையும் தான்.

படத்தை பற்றி நல்லவிதமான விமர்சனங்களே படிக்க கிடைக்கின்றன. எல்லோரும் இந்த படம் நல்ல சினிமாவின் ஒரு தொடக்கம் என்றே சொல்கிறார்கள். உறுத்தும் ஒரே விஷயம் இந்த படத்தின் கதை ' Kikujiro' கதையின் தழுவலாக இருந்தாலும் ஒரிஜினலை விட சிறப்பாக எடுத்திருப்பதால் பாராட்டலாம் என்று பலர் சொல்வது. இது என்ன மாதிரியான மன நிலை என்று புரியவில்லை. இந்திய சினிமாவின் பல 'சாதனைகள்' வெளியில் சொல்லிக்கொளும்படியான 'உண்மை தன்மை' கொண்டவை அல்ல என்பதே உண்மை. டைம்ஸ் இதழ் தேர்ந்தெடுத்த சிறந்த நூறு படங்களில் ஒரு படமாக வந்த நாயகன் (காட்பாதர்) ஆகட்டும் பாலுமகேந்திராவின் மூடுபனி (சைக்கோ) ஆகட்டும் இங்கு கொண்டாடப்படும் கலைஞர்களின் சாதனைகள் வெளிநாட்டு வாசம் வீசுவதில் என்ன பெருமை இருக்க முடியும்? சினமாவின் சகல பிரிவிலும் இந்த 'எடுத்தாளுதல்' (திருட்டின் திருந்திய சொல்வடிவம்) நடக்கிறது. சமீபத்தில் வெளிவந்த 'மைனா'வில் இடம்பெற்ற 'கையப்புடி' பாடலின் இசையும் பாடல் வரிகளும் கூட ஒரு ஆங்கில பாடலில் ('take my hand' ) இருந்து 'எடுத்தாளப்பட்டது' என்று படிக்கும்போது சோர்வாகத்தான் இருக்கிறது. சில கலைஞர்கள் மட்டுமே தாங்கள் சுட்ட பழத்தின் கிளையை காட்டுகிறார்கள். பலர் அது தன சொந்த கதை என்று சொல்லியே சமாளித்து விடுகிறார்கள். மிஷ்கின் தனது சமீபத்திய பேட்டிகளில் இது தான் எழுதிய கதை என்றே சொல்லி வருகிறார். வேடிக்கை என்னவென்றால் 'நான் உலக சினிமா பார்ப்பதில்லை' என்று சொல்வதை தற்போதைய இயக்குனர்கள் பேஷனாக கருதுகிறார்கள். பருத்திவீரன் வெற்றி பெற்ற பிறகு தீராநதி நேர்காணலில் அமீர் 'நான் உலக சினிமா பார்ப்பதே இல்லை' என்று முழங்கிய பின் வந்தது தான் 'யோகி'. அதன் மூலம் என்னவென்று இப்போது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும் .

மிஷ்கின் மிக தைரியமாக இது தன் கதை என்று சொன்னாலும் , சற்று முன் நான் கண்ட பேட்டி ஒன்றில் மேம்போக்காக அகிரா குரோசவா மற்றும் டகேஷி கிடானோ இயக்கிய ஒரு படத்தால் (அதே கிகுஜிரோ தான்!) உந்துதல் பெற்றதாக சொல்கிறார். அனால் இது தமிழ் கதை ..தானே எழுதியது என்றும் சாதிக்கிறார். இதை அவர் டைட்டில் கார்டில் போட்டாரா என்பதை படம் பார்த்தவர்கள் தான் சொல்ல வேண்டும். கதைகள் பொதுவாக எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கும் என்று 'சொல்லப்பட்டாலும்' பிரத்யேக ஐடியா என்பது நிச்சயம் ஒருவருக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். அப்படியே பலருக்கு ஒரே சமயத்தில் ஒரே மாதிரியான 'சிந்தனை' வந்தாலும் முதலில் வெளிவந்து பரவலாக வெற்றி பெற்ற அல்லது தெரியவந்த ஒரு படைப்பை அப்படியே பிரதிபலிக்கும் மற்றொரு படைப்பை நீங்கள் 'ஒரிஜினல்' என்று ஒத்துக்கொள்வீர்களா?

மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்தில் ஒரு காட்சி: பிரசன்னா ஒரு alien போல் முழங்காலிட்டு நடந்து மூடிய கதவுக்கு பின் உடை மாற்றும் பெண்ணை கதவின் கீழ் உள்ள இடைவெளிக்கு அருகே ஒரு சிறு கண்ணாடி கொண்டு 'பார்க்கும்' காட்சி , மனோஜ் நைட் ஷ்யாமளனின் சைன்ஸ் (signs) படத்தில் மெல் கிப்சன் கதவுக்கு பின்னிருக்கும் ஒரு Alien ஐ தன கையில் இருக்கும் கத்தியை கதவின் கீழ் செலுத்தி அதில் தெரியும் பிம்பத்தை பார்க்கும் காட்சியின் அப்பட்ட நகல்.

நந்தலாலா தொடர்பான சிரிப்பூட்டும் 'கருத்து' ஒன்றை படிக்க 'நேர்ந்தது'. படம் ஒலக தரமாம். இசை மட்டும் ராமராஜன் பட இசையாம். இந்த மாதிரி ஒரு கருத்தை உலகத்தில் வேறு யார் தான் சொல்ல முடியும்?

சுரேஷ் கண்ணன் கிகுஜிரோ படத்தின் சிறப்பான விமர்சனம் ஒன்றை எழுதி இருக்கிறார். அடுத்த பதிவு இரு படங்களையும் ஒப்பிடப்போவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
வெறுமே சூப்பர் (அ) சுமார் என்று சப்பை கட்டும் சிலரிடம் இருந்து விலகி எழுதும் சுரேஷின் அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Tuesday, November 23, 2010

வலியின் குரல்


படைப்பாளிகளில் பலர் குறைந்த வருவாய் கொண்டவர்களாகவோ அல்லது வாழ்வை எதிர்கொள்ள முடியாத அளவுக்குப் பொருளாதார ரீதியாக வசதியற்றவர்களாகவோ இருந்தாலும் நேரடியாக உடல் உழைப்பில் ஈடுபட்டுக் கொண்டே தங்களின் உள்ளார்ந்த பிரச்னைகளை இலக்கியத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான். பல்வேறு தளங்களிலிருந்து நல்ல எழுத்தாளர்கள் வந்து கொண்டிருக்கும் சமகால இலக்கியத்தின், குறிப்பிடத்தகுந்த அம்சம் இது.

மினிடோர் ஆட்டோ ஓட்டுநராக தொழில் செய்துவரும் புதுகை சஞ்சீவியின் முதல் சிறுகதைத் தொகுப்பான வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்' ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் பசி, வலி, பிரத்யேக பிரச்னைகளை மிகச் சிறந்த முறையில் பதிவு செய்கிறது. தொகுப்பின் பெரும்பாலான கதைகள் தொழிலாளிகள் அன்றாடப் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் அல்லாடுவதை அவர்களின் எண்ணங்களின் குரலிலேயே பேசுகின்றன. இதன் மூலம் இது போன்று எழுதும் மற்றஎழுத்தாளர்களிடம் இருந்து தனித்து தெரிகிறார் சஞ்சீவி.

ஆட்டோ ஓட்டுநர்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்னையாக ட்ராஃபிக் போலீஸின் சட்டத்துக்குப் புறம்பான அதிகாரமீறல் பற்றி பேசுகிறது, வலி' சிறுகதை. இரவில் தன்னந்தனியாக காவலர்களிடம் மாட்டிக் கொள்ளும் எவர்க்கும் அந்த நேரத்து சம்பவங்கள் அவ்வளவு எளிதாக மறந்து போய் விடாது. பெட்ரோல் தீர்ந்து விடும் என்பதற்காக வேறுவழியின்றி ஒன்வேயில் வந்து காவலரிடம் மாட்டிக் கொள்ளும் அவன் (கடைசி வரை பெயர் சொல்லப்படவில்லை) காவலரின் அத்துமீறலான பேச்சை தன்மானத்தோடு எதிர்க்கிறான்; எனவே அவன் மேல் செய்யாத குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் கைதிகளின் நடுவே நிற்பதை அவமானமாக நினைக்கும் அவன், இறுதியில் கைதிகளில் ஒருவராக நிற்கும் பத்து வயது சிறுவனின் நிலை கண்டு கலங்குகிறான். எதையும் உரக்கப் பிரச்சாரம் செய்யாமல் காட்சியின் வழியே அதை உணர்த்தி விடுகிறார் சஞ்சீவி. ஆட்டோ ஓட்டுநரின் அன்றாட அசெகரியங்கள், வழிமறித்து நிற்கும் வீட்டு செலவுகள் பற்றிய கவலைகள் என பல விஷயங்களை இந்த ஒரே கதை சொல்கிறது. கதை மாந்தர்களிடையே நிகழும் உரையாடல்களும் உயிர்ப்புடன் சொல்லப்பட்டிருக்கின்றன. தொகுப்பின் சிறந்த கதையாக இதைச் சொல்லலாம்.

பிழைத்தல்' கதையில் வேலை தேடி திருப்பூர் செல்லும் ஒருவனின் எண்ணவோட்டத்தை பதிவு செய்கிறார் சஞ்சீவி. அங்கு மாலை நேர கையேந்திபவன் வைத்திருக்கும் தன் நண்பனை சந்திக்கும் அவனுக்கு, நண்பனும் அவன் மனைவியும் எதையும் நேரடியாக சொல்லாமலே பிழைத்தலின் சூட்சுமங்களை சொல்கின்றனர். பெரும்பாலான கதைகளில் நாயகனுக்கு ஒரு காதலி இருக்கிறாள் (அல்லது மனைவி). நாயகன் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று பதறுபவளாகத்தான் எல்லா கதைகளிலும் அவள் வருகிறாள். ஒரு குறும்பட இயக்குநரைப் போல அவர்களின் வாழ்வியல் கஷ்டங்களை நம் கண்முன் விரிக்கிறார் சஞ்சீவி. உடல் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தையும் ஜாதகத்தையும் நம்புகிறவனை தன் ஜாதகம்' கதையில் பதிவு செய்கிறார். பல சிரமங்களுக்கு இடையில் ஒரு தாய் பொறுப்பற்று திரியும் மகனுக்கு இறுதி வரை கஞ்சி ஊற்றுபவளாக' இருப்பது, அவள் படும் சிரமங்களில் பங்கெடுக்காமல் தன் போக்கில் ஜாதகத்தை நம்பி மகன் வாழ்க்கை நடத்துவது போன்ற வாழ்வின் புதிரான பக்கங்களை இந்தக் கதை எளிய நடையில் சொல்கிறது. இயல்பாக நடந்து கொள்ளும் கதைமாந்தர்களின் உடல்மொழியைக் கூட பதிவு செய்திருக்கிறார் சஞ்சீவி.

புதிராக நடந்து கொள்ளும் மனிதர்களின் போக்கை இப்படியாக' கதையில் சொல்கிறார் சஞ்சீவி. ஐஸ் விற்கும் தொழிலாளர்களுக்கு இடையே நிகழும் போட்டி, தொழில் ரீதியான சண்டைகள் இக்கதையில் பதிவாவதோடு மனதின் குரூர பக்கங்களையும் எந்த சலனமும் இல்லாமல் அதன் போக்கிலேயே சென்று நம்மை பதறவைக்கும்படி எழுதியிருப்பது அவருடைய நுண்ணிய பார்வைக்கு உதாரணம்.

தொகுப்பின் தலைப்பாக வெளியாகி இருக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்' கதை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. தொகுப்பிற்கான தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் போது கூடுதல் கவனம் தேவை. பிரதானப்படுத்தப்படும் தலைப்பின் கீழ் வரும் சிறுகதை சரியாக அமையவில்லை என்றால் தொகுப்பே தோல்வியடைய நேரிடலாம். மேலும் பல கதைகளின் தலைப்பும் கூட கதையின் வீரியத்துக்கு நிகராக வைக்கப்படவில்லை. சஞ்சீவி கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமாள விஷயம் இது. நீண்ட தலைப்புக்கள் சலிப்பேற்படுத்தும் வகையில் உள்ளன.
பெண்ணைப்போல் மார்பகம் வளர்ந்த ஆணின் பிரச்னைகளை சொல்லும் சுயம்' கதை, நண்பர்களாலேயே வார்த்தைகளாலும் செய்கைகளாலும் காயப்படும் அவனுடைய துயரத்தை ஆழமாகச் சொல்கிறது. எனினும் இறுதி வரியில் எதிர்க்காதவரை இவனெல்லாம் ஆம்பிளை' என்று நேரடியாக தன் கோபத்தைப் பதிவு செய்கிறார், ஆசிரியர். இது மொத்தக் கதையையும் நீர்த்துப்போக செய்து விடுகிறது. விஷயங்களை நேரடியாக சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்றநிலையில் தற்போதைய வாசகன் இல்லை என்பதை சஞ்சீவி உணர வேண்டும். விஸ்தாரமாக எழுதி கதைபுனைவதில் உள்ள சிரமம், அதன் சுவாரஸ்யம் கெடாமல் பார்த்துக் கொள்வது தான். சஞ்சீவியின் கதைகள் எவ்வளவு நீளமாக இருந்தாலும் சலிப்பேற்படுத்துவதில்லை. மாறாக கதையின் சாரத்தை இறுக்கி இறுதி வரை தொய்வில்லாமல் எழுதிச் செல்லும் கலை அவருக்கு இயல்பாக கைகூடி வருகிறது. ஒன்றிரண்டு கதைகள் தவிர மற்றவை தெளிந்த நடையோடும், புதிய கதைத் தளங்களோடும் அமைந்திருப்பதால், சமீபத்தில் வெளியான சிறுகதைத் தொகுப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மிளிர்கிறது இத்தொகுப்பு. சஞ்சீவியின் எழுத்துக்குக் கிடைக்கப்போகும் அங்கீகாரம் நேர்மையான எழுத்தாளனுக்கு கிடைக்கப்போகும் கெரவம் என்று நிச்சயமாக சொல்லலாம்.

நன்றி: வடக்கு வாசல்வலியின் குரல்
வண்ணத்துப் பூச்சிகளும்
கண்ணாடி அறைகளும்
சிறுகதைகள்
புதுகை சஞ்சீவி
வெளியீடு: காவ்யா, 16, இரண்டாம் குறுக்கு வீதி, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை_24.
போன்: 044_23726882
விலை ரூ.80/
http://www.vadakkuvaasal.com/article.php?id=136&issue=50&category=11

Saturday, November 20, 2010

இசை வெளிச்சம்..


பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக எதிர்பார்த்திருந்த கால கட்டத்தில் எனக்கு சுகந்தி அக்கா பழக்கமாகி இருந்தார். என் அண்ணனின் நண்பர் வட்டத்தில் இருந்த ஒரே பெண்ணான அவருக்கும் எனக்கும் இருந்த ஒற்றுமை இசை ரசனை தான். வி.குமார், ஷ்யாம், ஜி.கே.வெங்கடேஷ் என்று அதுவரை நான் கேள்விப்பட்டிராத இசை மேதைகளின் பாடல்களை நான் சுகந்தி அக்காவின் லேபில் தான் அறிந்துகொண்டேன். அக்கா ரத்தப்பரிசோதனை நிலையம் ஒன்றை அறந்தாங்கியில் நடத்தி வந்தார். என் வாழ் நாளில் இன்று வரை அவ்வளவு துணிவான, ரசனையான,இயல்பான பெண்ணை நான் பார்த்ததில்லை. தன் கிராமத்தில் முதன் முறை மோட்டார் சைக்கிள் ஓட்டியவர், தன் தந்தையுடன் வேட்டைக்கு சென்று வருவதை மிக இயல்பான செயலாக கொண்டவர் என்று அவரிடம் நான் வியந்த விஷயங்கள் நிறைய. அவரது லேபின் உள்ளே சென்று அங்கு இருக்கும் மியூசிக் சிஸ்டத்தை எந்த நேரத்திலும் உபயோகிக்க எனக்கு உரிமை தந்திருந்தார் அக்கா.

இளையராஜாவின் காலம் தொடங்குவதற்கும் விஸ்வநாதனின் காலம் முடிவதற்கும் இடைப்பட்ட காலத்தில் வந்த பாடல்கள் பொக்கிஷங்கள். விஸ்வநாதன் எஸ்.பி.பி இணைப்பில் வெளிவந்த பாடல்கள், வி.குமார்,ஷ்யாம், வெங்கடேஷ், எம்.பி.சீனிவாசன் போன்ற கலைஞர்களின் இசையில் வந்த அபூர்வ பாடல்கள் என்று சுகந்தி அக்காவின் ரசனை தொகுப்பே அலாதியானது. மருந்து வாசனை, குதிரைகள் புளுதிப்பறக்க ஓடும் ஓவியம் என்று அந்த சின்ன அறையில் என் ரசனை என்னை அறியாமலே வளர்ந்து கொண்டிருந்தது. நான் அப்போதிலிருந்து பாடுவதற்கு முயற்சி செய்து வருகிறேன். (இன்று வரை நான் ஒரு தோல்விப்பாடகன்..!)
எஸ்.பி.பி தன் மிக இளமையான குரலில் பாடும் 'ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்து பாடினேன்' என்ற பாடலை நான் அடிக்கடி பாடுவேன். அதே போல் 'பொன்னை நான் பார்த்ததில்லை' என்ற பாடலும் என் மனம் கவர்ந்த பாடல். கேள்விப்படாத பாடல்களை நான் மட்டுமே முதன்முறயாக கேட்கிறேன் என்ற அந்தரங்க பரவசத்தோடு கேட்டு ரசித்த பாடல்கள் அவை. மோகனுக்காக கமல் பாடிய 'பொன் மானை தேடுதே' என்ற பாடல் மிக அபூர்வமானது. (இணையத்தின் சாதனை: இன்று அத்தனை 'அபூர்வ' பாடல்களும் அவற்றின் வீடியோவும் கூட இன்று மிக பரவலாக கிடைக்கின்றன. தவிர இணையத்தில் நான் படித்து ரசித்த, ரசிக்கும் தளங்கள், forum கள் இவற்றை பற்றியும் மிக சிறப்பாக இசை பற்றி எழுதும் ரசிகர்கள் பற்றியும் நிறைய எழுத நினைத்திருக்கிறேன். லக்ஷ்மி நாராயண், லலிதா ராம் தொடங்கி Orkut இல் பெரிய அளவில் எழுதி வரும் ராஜேந்திரன், நாராயணன் சுவாமிநாதன், ஹார்ட்டா, அலெக்ஸ், இணையத்தில் மிக அற்புதமான இசைக்கட்டுரைகள் வெளிவரும் சொல்வனம் இணைய இதழில் எழுதும் கிரிதரன் என்று எத்தனை பேர்....இவர்களை இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியுடன் நினைக்கிறேன்..!)

நான் ரசித்த பாடல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்வுறுவதை விட உண்டா வேறு ஒரு இன்பம்..

1. பாடல் நான் பாட ..என் பார்வை தான் தேட..
2. ஆசை .. அது யாரை கேட்டும் வருவதே இல்லை..
3. பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே..
4. ஈரத்தாமரை பூவே..உன் இதழில் எத்தனை சாரங்கள்.. (இந்த பாடலை சமீபத்தில் தான் 'பார்த்தேன்'. மெல்லிய புன்னகை அரும்பியது..!)
5. ஸ்விம் ..ஸ்விம் உனது ஊஞ்சல் நான்..
6. மதனோற்சவம்..ரதியோடு தான்..
7. எனக்கு பிடித்த ரோஜாப்பூவை எடுத்து செல்லலாமா..
8. ராஜா பொண்ணு அடி வாடியம்மா..
9. நந்தா..நீ என் நிலா..
10.பூவே.. நீ ..யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்..
11. மழை தருமோ இம்மேகம்..
என்று பல பாடல்களை எனக்கு அறிமுகப்படுத்தினார் சுகந்தி அக்கா. அந்த நேரத்தில் ஏனோ எனக்கு எஸ்.பி.பி.- எம்.எஸ்.வி இணை பாடல்கள் தான் மிகவும் பிடித்தன. அந்த பாடல்களை கேட்கும் மதிய நேரமும், மெளனமாக வியாபித்திருக்கும் வெயிலும், ஊருக்கு வெளியே மொட்டைப்பாறைகளும், வாழ்வில் துயருறும் மனிதர்களும், பிரச்சனைகளை மனதில் தாங்கி புன்னகையுடன் வளைய வரும் பெண்களும், நான் இது வரை நேரில் கண்டிராத ஆனால் கண்டது போல் புழங்கியது போல் நினைவில் மிளிரும் தூர பிரதேசங்களும் இந்த பாடல்களுடன் எதோ ஒரு விதத்தில் தொடர்புடையன என்று தோன்றுகிறது. சில விஷயங்களை வார்த்தையில் விவரிக்க முடியாது.. அப்படியான உறவு இப்பாடல்களுடன் எனக்கு.. .ருஷ்ய இலக்கியம், மேன்மையான இசை ரசனை என்று எனக்கு பெரும் ஊக்கம் தந்த சுகந்தி அக்கா இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை...அவருடன் அமர்ந்து நான் கேட்டு ரசித்த பல பாடல்கள் மட்டும் இன்றும் என்னுடன்..

Wednesday, November 17, 2010

சில ஓவியங்கள்


அலையும் நிழல்


உரையாடல்


யுகத்தின் தனிமை

Tuesday, November 16, 2010

டெல்லியில் தமிழ் விழா

வரும் டிசம்பர் 10,11,12 ஆகிய தேதிகளில் டெல்லி தமிழ் சங்கம் ஒரு சிறந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் மிக முக்கிய பங்காற்றும் திரு ஷாஜஹான் மற்றும் தமிழ் சங்க நண்பர்கள் முனைப்புடன் எடுத்து வரும் முயற்சிகள் வெற்றிபெறும் என்று உறுதியாக நம்புகிறேன். குறிப்பாக நான் டெல்லி வந்த பிறகு (கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ) இப்போது தான் தமிழகத்தின் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கள ஆய்வாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இங்கு நடைபெறுவது பற்றி கேள்விப்படுகிறேன். என் மனம் கவர்ந்த பல எழுத்தாளர்கள் இதில் பங்கேற்கிறார்கள். தலைநகரில் இருக்கும் நண்பர்கள் அவசியம் வரவும். தமிழக நண்பர்கள் வருவதற்கு வாய்ப்பிருந்தால் கூடுதல் சந்தோஷம்.

கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் பதிவு செய்து கொள்ள
sangamtamil2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
( இத் தகவலை தங்கள் வலைப்பூவிலும் வெளியிடலாம் )

அஞ்சலின் பொருள் பகுதியில் - Registration for Participation - என்று குறிப்பிட வேண்டுகிறோம்.
பங்கேற்க விரும்புவோர்
பெயர்
முகவரி
தொலைபேசி எண்
அவசியம் தர வேண்டும்.

ஆர்வமுள்ள துறை(கள்)
விவரங்களைத் தருவது எதிர்கால நிகழ்ச்சிகளுக்குப் பயன்தரும்.

நிகழ்ச்சி பற்றி டெல்லியில் வசிக்கும் எழுத்தாளர் எம்.ஏ.சுசிலா அவர்கள் எழுதிய பதிவு..