Tuesday, November 23, 2010
வலியின் குரல்
படைப்பாளிகளில் பலர் குறைந்த வருவாய் கொண்டவர்களாகவோ அல்லது வாழ்வை எதிர்கொள்ள முடியாத அளவுக்குப் பொருளாதார ரீதியாக வசதியற்றவர்களாகவோ இருந்தாலும் நேரடியாக உடல் உழைப்பில் ஈடுபட்டுக் கொண்டே தங்களின் உள்ளார்ந்த பிரச்னைகளை இலக்கியத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான். பல்வேறு தளங்களிலிருந்து நல்ல எழுத்தாளர்கள் வந்து கொண்டிருக்கும் சமகால இலக்கியத்தின், குறிப்பிடத்தகுந்த அம்சம் இது.
மினிடோர் ஆட்டோ ஓட்டுநராக தொழில் செய்துவரும் புதுகை சஞ்சீவியின் முதல் சிறுகதைத் தொகுப்பான வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்' ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் பசி, வலி, பிரத்யேக பிரச்னைகளை மிகச் சிறந்த முறையில் பதிவு செய்கிறது. தொகுப்பின் பெரும்பாலான கதைகள் தொழிலாளிகள் அன்றாடப் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் அல்லாடுவதை அவர்களின் எண்ணங்களின் குரலிலேயே பேசுகின்றன. இதன் மூலம் இது போன்று எழுதும் மற்றஎழுத்தாளர்களிடம் இருந்து தனித்து தெரிகிறார் சஞ்சீவி.
ஆட்டோ ஓட்டுநர்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்னையாக ட்ராஃபிக் போலீஸின் சட்டத்துக்குப் புறம்பான அதிகாரமீறல் பற்றி பேசுகிறது, வலி' சிறுகதை. இரவில் தன்னந்தனியாக காவலர்களிடம் மாட்டிக் கொள்ளும் எவர்க்கும் அந்த நேரத்து சம்பவங்கள் அவ்வளவு எளிதாக மறந்து போய் விடாது. பெட்ரோல் தீர்ந்து விடும் என்பதற்காக வேறுவழியின்றி ஒன்வேயில் வந்து காவலரிடம் மாட்டிக் கொள்ளும் அவன் (கடைசி வரை பெயர் சொல்லப்படவில்லை) காவலரின் அத்துமீறலான பேச்சை தன்மானத்தோடு எதிர்க்கிறான்; எனவே அவன் மேல் செய்யாத குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் கைதிகளின் நடுவே நிற்பதை அவமானமாக நினைக்கும் அவன், இறுதியில் கைதிகளில் ஒருவராக நிற்கும் பத்து வயது சிறுவனின் நிலை கண்டு கலங்குகிறான். எதையும் உரக்கப் பிரச்சாரம் செய்யாமல் காட்சியின் வழியே அதை உணர்த்தி விடுகிறார் சஞ்சீவி. ஆட்டோ ஓட்டுநரின் அன்றாட அசெகரியங்கள், வழிமறித்து நிற்கும் வீட்டு செலவுகள் பற்றிய கவலைகள் என பல விஷயங்களை இந்த ஒரே கதை சொல்கிறது. கதை மாந்தர்களிடையே நிகழும் உரையாடல்களும் உயிர்ப்புடன் சொல்லப்பட்டிருக்கின்றன. தொகுப்பின் சிறந்த கதையாக இதைச் சொல்லலாம்.
பிழைத்தல்' கதையில் வேலை தேடி திருப்பூர் செல்லும் ஒருவனின் எண்ணவோட்டத்தை பதிவு செய்கிறார் சஞ்சீவி. அங்கு மாலை நேர கையேந்திபவன் வைத்திருக்கும் தன் நண்பனை சந்திக்கும் அவனுக்கு, நண்பனும் அவன் மனைவியும் எதையும் நேரடியாக சொல்லாமலே பிழைத்தலின் சூட்சுமங்களை சொல்கின்றனர். பெரும்பாலான கதைகளில் நாயகனுக்கு ஒரு காதலி இருக்கிறாள் (அல்லது மனைவி). நாயகன் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று பதறுபவளாகத்தான் எல்லா கதைகளிலும் அவள் வருகிறாள். ஒரு குறும்பட இயக்குநரைப் போல அவர்களின் வாழ்வியல் கஷ்டங்களை நம் கண்முன் விரிக்கிறார் சஞ்சீவி. உடல் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தையும் ஜாதகத்தையும் நம்புகிறவனை தன் ஜாதகம்' கதையில் பதிவு செய்கிறார். பல சிரமங்களுக்கு இடையில் ஒரு தாய் பொறுப்பற்று திரியும் மகனுக்கு இறுதி வரை கஞ்சி ஊற்றுபவளாக' இருப்பது, அவள் படும் சிரமங்களில் பங்கெடுக்காமல் தன் போக்கில் ஜாதகத்தை நம்பி மகன் வாழ்க்கை நடத்துவது போன்ற வாழ்வின் புதிரான பக்கங்களை இந்தக் கதை எளிய நடையில் சொல்கிறது. இயல்பாக நடந்து கொள்ளும் கதைமாந்தர்களின் உடல்மொழியைக் கூட பதிவு செய்திருக்கிறார் சஞ்சீவி.
புதிராக நடந்து கொள்ளும் மனிதர்களின் போக்கை இப்படியாக' கதையில் சொல்கிறார் சஞ்சீவி. ஐஸ் விற்கும் தொழிலாளர்களுக்கு இடையே நிகழும் போட்டி, தொழில் ரீதியான சண்டைகள் இக்கதையில் பதிவாவதோடு மனதின் குரூர பக்கங்களையும் எந்த சலனமும் இல்லாமல் அதன் போக்கிலேயே சென்று நம்மை பதறவைக்கும்படி எழுதியிருப்பது அவருடைய நுண்ணிய பார்வைக்கு உதாரணம்.
தொகுப்பின் தலைப்பாக வெளியாகி இருக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்' கதை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. தொகுப்பிற்கான தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் போது கூடுதல் கவனம் தேவை. பிரதானப்படுத்தப்படும் தலைப்பின் கீழ் வரும் சிறுகதை சரியாக அமையவில்லை என்றால் தொகுப்பே தோல்வியடைய நேரிடலாம். மேலும் பல கதைகளின் தலைப்பும் கூட கதையின் வீரியத்துக்கு நிகராக வைக்கப்படவில்லை. சஞ்சீவி கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமாள விஷயம் இது. நீண்ட தலைப்புக்கள் சலிப்பேற்படுத்தும் வகையில் உள்ளன.
பெண்ணைப்போல் மார்பகம் வளர்ந்த ஆணின் பிரச்னைகளை சொல்லும் சுயம்' கதை, நண்பர்களாலேயே வார்த்தைகளாலும் செய்கைகளாலும் காயப்படும் அவனுடைய துயரத்தை ஆழமாகச் சொல்கிறது. எனினும் இறுதி வரியில் எதிர்க்காதவரை இவனெல்லாம் ஆம்பிளை' என்று நேரடியாக தன் கோபத்தைப் பதிவு செய்கிறார், ஆசிரியர். இது மொத்தக் கதையையும் நீர்த்துப்போக செய்து விடுகிறது. விஷயங்களை நேரடியாக சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்றநிலையில் தற்போதைய வாசகன் இல்லை என்பதை சஞ்சீவி உணர வேண்டும். விஸ்தாரமாக எழுதி கதைபுனைவதில் உள்ள சிரமம், அதன் சுவாரஸ்யம் கெடாமல் பார்த்துக் கொள்வது தான். சஞ்சீவியின் கதைகள் எவ்வளவு நீளமாக இருந்தாலும் சலிப்பேற்படுத்துவதில்லை. மாறாக கதையின் சாரத்தை இறுக்கி இறுதி வரை தொய்வில்லாமல் எழுதிச் செல்லும் கலை அவருக்கு இயல்பாக கைகூடி வருகிறது. ஒன்றிரண்டு கதைகள் தவிர மற்றவை தெளிந்த நடையோடும், புதிய கதைத் தளங்களோடும் அமைந்திருப்பதால், சமீபத்தில் வெளியான சிறுகதைத் தொகுப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மிளிர்கிறது இத்தொகுப்பு. சஞ்சீவியின் எழுத்துக்குக் கிடைக்கப்போகும் அங்கீகாரம் நேர்மையான எழுத்தாளனுக்கு கிடைக்கப்போகும் கெரவம் என்று நிச்சயமாக சொல்லலாம்.
நன்றி: வடக்கு வாசல்
வலியின் குரல்
வண்ணத்துப் பூச்சிகளும்
கண்ணாடி அறைகளும்
சிறுகதைகள்
புதுகை சஞ்சீவி
வெளியீடு: காவ்யா, 16, இரண்டாம் குறுக்கு வீதி, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை_24.
போன்: 044_23726882
விலை ரூ.80/
http://www.vadakkuvaasal.com/article.php?id=136&issue=50&category=11
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment