Monday, September 27, 2010

ஒரு அற்புதமும் இரு அபத்தங்களும்..சனிக்கிழமை என் நண்பர் வரதராஜன் வீட்டுக்கு சென்றிருந்தேன். முனிர்காவில் வீடெனப்படுவது 'ரூம்' என கருத்தில் கொள்க. மிக சிறந்த இசை ரசிகரும் அரசியல் மீது தனித்த பார்வை கொண்டவருமான வரதராஜனின் அறையில் தான் நான் முன்பு தங்கி இருந்தேன். எங்களுடன் குமரன் என்ற மறக்க முடியாத நண்பர் ஒருவரும் இருந்தார். மேடை பேச்சிலும் நகைச்சுவையிலும் சிறந்த அவர் நல்ல நாடக நடிகர். இப்போது விசாகப்பட்டினத்தில் இருக்கிறார்.

சனிக்கிழமை இரவு என் நண்பன் ஓவியன் விஜயராகவனும் வந்திருந்தான். இன்னொரு ஓவிய நண்பன் முத்துசாமி எனக்கு கொடுத்த The Pianist, Perfume மற்றும் Clint Eastwood இன் கிளாசிக் அதிரடியான Pale Rider ஆகிய படங்களை திரும்பவும் ஒருமுறை நண்பர்களோடு பார்க்கலாம் என்ற ஐந்தாண்டு திட்டத்தோடு ஆசையாய் சென்றிருந்த நாங்கள் பேசிப்பேசியே இரவைப்போக்கி பிறகு தூங்கியும் விட்டோம்.

அதிகாலை (எங்களை பொறுத்தவரை )ஒன்பது மணி இருக்கும். திடீரென்று முனிர்காவே நடுங்கும்படி 'எந்திர்றா...எந்திர்றா' என்று ஒரே அலறல். ஆளாளுக்கு விலுக் விலுக்கென்று பதறியபடி எழுந்து ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்து பயந்து (!) அலறி ..பிறகு குரல் வந்த திசை பார்த்தால்..வரதராஜன் வீட்டு டி.வி. ஆன் ஆகி இருந்தது. எந்திரன் என்ற இந்தியாவின் ஆக சிறந்த படத்தின் 'வெளம்பரம்' .அதில் இன்னும் பயங்கரமாக ஜிலு ஜிலு கோட் அணிந்த முதியவரான நடிகர் ரஜினி விரல்களை ஆட்டி ஏதோ எச்சரிக்க , தூக்க கலக்கத்தில் இருந்த நாங்கள் மேலும் திகைப்புற்று அறைக்குள்ளேய அங்கும் இங்கும் ஓடி பின் ஆசுவாசம் அடைந்து , பின் சம்பவம் நடந்தது எப்படி என்று ஆராய்ந்தோம். நானும் வரதராஜனும் கீழே தரையில் படுத்திருந்தோம். விஜயராகவன் மேலே கட்டிலில் சயனித்திருந்தான். தூங்கும் முன் ரிமோட் மூலம் டி.வி.யை ஆப் செய்து பின்பு அதை கட்டிலிலேயே வைத்து விட்டு தூங்கிவிட்டான். அங்கும் இங்கும் புரண்டு கடைசியில் ரிமோட்டில் அவன் கால் பட்டு டி.வி. உயிர் பெற்றதுடன் இன்னொரு தவறான அழுத்தலில் வால்யூம் அதிகமாகி அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. பிறகு எங்கு தூங்குவது?

ஞாயிற்று கிழமை காலையில் எழுந்து பழக்கம் இல்லாத நாங்கள் பின்பு கொண்டு வந்த படங்களை பார்த்து பொழுது கழித்தோம். Perfume என்ன அருமையான படம். கண், காது என்று மற்ற உறுப்புகளை பிரதானபடுத்தி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. இந்த படம் வாசனையை மையமாக கொண்ட படம்.

இதை பற்றி நிறைய எழுதி விட்டார்கள் , ஓவியரும் எழுத்தாளருமான ஜீவா அவர்கள் தனது 'திரைசீலை' என்ற புத்தகத்தில் இதை பற்றி எழுதி இருக்கிறார். ரசனை இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அந்த புத்தகம். படத்தின் ஒளிப்பதிவும் இசையும் அற்புதம். ஒரு ஞாயிறை நல்ல விதமாக கழித்தோம் என்ற சந்தோஷத்தில் இருந்த நாங்கள் ..ஒரு மாபெரும் அபத்தத்தில் சிக்குவோம் என்று எதிர்பார்க்கவில்லை.

மாலை டெல்லி தமிழ் சங்கத்தில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பேசுகிறார் என்ற செய்தி கிடைத்ததும் அங்கு சென்று அவர் பேச்சை கேட்கலாம் என்று கிளம்பினோம். நாங்கள் நினைத்தது நெல்லை கண்ணன் வழக்கமாய் தமிழ் சங்கத்தில் பேசுவது போல் போல் ஒற்றை ஆளாய் அரங்கை சிரிப்பிலும் சிந்தனையிலும் ஆழ்த்தும் பேச்சாய் இருக்கும் பேராசிரியர் பேச்சு என்று. அங்கு போனவுடன் தான் தெரிந்தது அது பட்டிமன்றம் என்று. நடு நாயகமாய் பேராசிரியர் உட்கார்ந்திருக்க அவருக்கு வலமும் இடமுமாக ஆறு பெண்கள். இரண்டு வெளியூர் பேச்சாளர்கள். பாக்கி நால்வரும் டெல்லி வாழ் தமிழர்களை தங்கள் பேச்சால் மிரள வைக்கும் (என்று நாங்கள் நம்பிய !) உள்ளூர் பேச்சாளர்கள். இரண்டாம் வரிசையில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் (!) நாங்கள் இருக்கும்போது வடக்கு வாசல் ஆசிரியர் பென்னேஸ்வரன் அங்கு வந்தார். அவர் இது போன்ற ஆபத்துகளில் சிக்காதவர் ஆயிற்றே ..என்று வியந்தபோது , பேராசிரியர் கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்ததால் வந்தேன் என்றார். எனக்கு கு.ஞானசம்பததின் மீது மதிப்பு ஏற்பட காரணம், அவர் எழுதிய 'சினிமாவுக்கு போகலாம் வாங்க' என்ற புத்தகம். சிறு வயதில் சினிமா பார்த்த அது தொடர்பான நட்பில் திளைத்த எவரும் கண்டிப்பாக படித்து சிலாகிக்க வேண்டிய புத்தகம் அது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஒருவர்.. செந்தமிழில் பேசுகிறேன் பேர்வழி என்று ..படுத்தி விட்டார். 'சிறந்த பேச்சாளராக இருக்கக்கூடிய ..', 'சிறந்த சிந்தனையாளராய் இருக்கக்கூடிய ' என்றெல்லாம் வந்தவர்களை வரவேற்று பேசிய அவர்.. தொடர்ந்து ..பேராசிரியரின் மனைவியை மேடைக்கு அழைக்கும்போதும்.. ' அவரின் துணைவியாராக இருக்கக்கூடிய ' என்று தன் தமிழ் திறமையை காட்டி எங்களை தாக்கி கொண்டிருந்தார்.

நிகழ்ச்சி தொடங்கியதும் தான் தலைப்பே தெரியவந்தது. வாழ்வில் நகைச்சுவை வெளிப்படுவது வீட்டிலா , வெளியிலா (என்று தான் நினைக்கிறேன்!) என்ற வரலாற்று சிறப்பு மிக்க தலைப்பு என்று தெரிந்தவுடன், பென்னேஸ்வரன் எளிதாக எழுந்து ஓட வசதியான இருக்கை ஒன்றை (எங்களுக்கு பின் வரிசையில்..) பார்த்து அமர்ந்துகொண்டார்.
பேராசிரியரும் சிரிப்பு வரும் வகையில் தான் பேசினார் என்றாலும், நாம் பல தடவை கேட்டு பழக்கப்பட்ட நகைச்சுவை துணுக்குகளை எந்த வருத்தமும் இல்லாமல் தந்து கொண்டிருந்தார். நான் ஏற்கனவே கேட்ட ஜோக்காக்கும் ..எனவே சிரிக்க மாட்டேன் என்றெல்லாம் அடம்பிடிக்காமல் டெல்லி வாழ் தமிழ் மக்கள் பெருந்தன்மையுடன் வாய் விட்டு சிரித்து தங்கள் வீட்டு கவலைகளை மறக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு வரிசையில் இருந்து குபீர் சிரிப்பு அடிக்கடி வர , என் மதிப்புக்குரிய ஷாஜஹானின் குடும்பத்தினர் (அவர் நீங்கலாக..! அவரும் இந்த ஆபத்துகளில் சிக்குவதில்லை .) வந்திருப்பது உறுதியானது.

பேராசிரியர் பேசியதும் பிறகு இரண்டு அணி தலைவிகளும் (வெளியூர்!) தங்கள் கணவர் குடும்பங்களை பற்றி முடிந்த வரை கேவலமாக பேசி ..அவ்வப்போது அபசுரத்தில் வேறு பாடி எங்கள் உங்கள் உயிரை எடுத்துவிட்டார்கள். எந்திரன் எம்மாத்திரம் என்று நினைக்கும் அளவுக்கு அபத்தமான ஒரு 'நிகழ்வு'.

தமிழ் சங்க வழக்கப்படி சங்க நிர்வாகிகளின் மனைவிகள் , மகன்-மகள்கள் , பேரன்- பேத்திகள் அல்லது வேறெந்த விதத்திலாவது வேண்டப்பட்டவர்கள் தான் மேடையில் ஏறி 'பெர்பார்ம்' பண்ண முடியும் என்ற மிக சிறந்த நடைமுறைப்படி சில பெண்களும் அங்கு பேசினார்கள். ஒரு பெண் எழுந்து சன்னமான குரலில் என்னவோ பேசியபடி நடுவரை பார்க்க அவரும் பெருந்தன்மையுடன் அந்த பெண்ணின் பேச்சை மொழிபெயர்த்து ..ஒலிபெருக்கி எங்களுக்கு எடுத்து சொல்லும் பெரும்பணியில் ஈடுபட்டிருக்க .. வெறுத்துப்போன நாங்கள் திரும்பி பார்க்க , பென்னேஸ்வரனின் இருக்கை ..காலியாய் இருந்தது.

பிறகு நாங்களும் பின்னங்கால் பிடரியில் அடிக்க தலைதெறிக்க ஓடி தத்தம் வீடுகளுக்குள் (ரூம்..!) சென்று தஞ்சம் அடைந்தோம்.

பி.கு: தமிழ் சங்கம் வரும் டிசம்பரில் தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் , சிந்தனாவாதிகள் ஆகியோரை கொண்டு (நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன் உட்பட )ஒரு நல்ல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.என்னை பொறுத்தவரை தமிழ் சங்கம் செய்யும் உண்மையான நற்பணி இது தான் என்று சொல்வேன்.

Thursday, September 23, 2010

சில ஓவியங்கள்..

இன்றைக்கு கிடைத்த நேரத்தை சில ஓவியங்கள் உருவாக்க செலவிட்டேன்.உங்கள் பார்வைக்கு:தனிமையின் நிழல்..

புதிர்களில் மிதவை..


நகரம்


நிழல்களின் உலகம்..விலகும் உறவு..

Tuesday, September 21, 2010

ஷாஜி பற்றிய கட்டுரையும் ,ஜெயமோகனின் எதிர்வினையும்இசை கலைஞர்கள் பற்றி எழுதுபவர் என்ற வகையில் தமிழில் வெளிவந்த கட்டுரைகளில் வெகு ஜன பரப்பை தாண்டி, அறிவுஜீவிகளையும் அடைந்து கட்டுரையின் தன்மையை சற்று மாற்றியவர் என்ற முறையிலும் அவரை நான் கடுமையாக தாக்கி எழுதிய கட்டுரைக்கு பின்னும் என்னுடன் அன்புடன் தொடர்பில் இருக்கும் மனதுக்கு நெருக்கமான மனிதர் என்ற வகையிலும் எனக்கு ஷாஜி மீது மதிப்பு உண்டு. அதே போல் எனது இலக்கிய, ஆன்மீக அறியாமையையும் பலவீனங்களையும் பெரிதுபடுத்தாமல் விவாதங்களில் கலந்துகொள்ள அனுமதித்த நான் மதிக்கும் எழுத்தாளர் என்பதாலும் ஜெயமோகன் மீது மிகுந்த மதிப்பு உண்டு. எனினும் அவர் எழுதும் சில விஷயங்களில் என்னால் உடன்பட முடிந்ததில்லை. அப்படியான விஷயங்களில் ஒன்றாக தான் சேதுபதி அருணாசலம் ஷாஜி பற்றி எழுதிய கட்டுரைக்கு அவர் செய்த எதிர்வினையும்.

இட்லிவடை வலைப்பூவில் நண்பர் சேதுபதி அருணாசலம் எழுதிய கட்டுரை மிக முக்கியமானது. இசை இலக்கிய உலகில் ஒரு அலையை ஏற்படுத்திய கட்டுரை அது. ஷாஜி எழுதும் கட்டுரைகளில் உள்ள அடிப்படை பிழைகள், இசை ரீதியான தவறுகளை இசை தெரிந்தவர் என்ற முறையில் சேதுபதி பாய்ண்ட் பை பாய்ண்ட் என்று சொல்வார்களே அப்படி பிரித்து கோர்த்து சில முக்கியமான கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார். குறிப்பாக பாடகர்கள் பாடும் முறையை பற்றி ஷாஜி எழுதும் வாக்கியங்களின் தவறுகளை சரியான குரலில் சொல்கிறார் சேது. தவிர ஒரு இசைகலைஞரின் சிறப்புகளை சொல்ல இன்னொருவரை கீழிறக்குவது ஒருவரின் தோல்விக்கு காரணமாக மற்றவர்களின் அபார வெற்றியை குறை சொல்வது என்ற தொனியில் ஷாஜி நிறைய கட்டுரைகளை எழுதி இருக்கிறார். அவற்றை கடுமையாக சாடுகிறார் சேதுபதி. இசை கற்றறியாத என் போன்றவர்களுக்கு இது ஒரு செய்தி என்றாலும் ஷாஜி செய்யும் தவறுகளை நுட்பமாக எடுத்து சொல்ல ஒருவர் இருப்பதே நல்ல விஷயம் தானே. விமர்சகனுக்கு ஒரு விமர்சகன் இருப்பதும் விமர்சனத்தை அதன் தரத்தில் இருந்து சற்று மேலே எடுத்து செல்ல உதவும் தானே. ஷாஜி இந்த கட்டுரையை படித்துவிட்டு எப்படி அதற்கு ரியாக்ட் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஷாஜியின் கட்டுரைகளை தன் எழுத்தின் மூலம் தமிழ்படுத்தி வாசகர்களை அவர் சென்றடைய மிக பெரும் ஊக்கியாக இருந்த ஜெயமோகன் இதற்கு ஒரு பதிவில் சற்று கடுமையாகவும் வேறொரு தொடர்பில்லாத பதிவில் சேதுபதியின் கட்டுரையை பற்றி சற்று கிண்டலாகவும் பேசுகிறார்.

ஷாஜியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தன் பேச்சினை தனது இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஜெ. இந்த பதிவில் முக்கியமாக சேது வைத்த எந்த கேள்விக்கும் சரியான பதிலை ஜெ சொல்லவில்லை. மாறாக பொதுப்படையாக இசை பற்றிய கட்டுரைகள் தமிழில் மிக அரிது என்பதால் ஷாஜியின் எழுத்துகளை இங்கு கொண்டுவந்ததாக சொல்கிறார். நம் இசைகலைஞர்கள் முதல் வெளிநாட்டு இசைகலைஞர்கள் வரை இது வரை எழுதப்படாதவர்கள் பற்றி முதலில் எழுதியவர் என்பதால் ஷாஜியின் கட்டுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது ஜெ.யின் கருத்து. எனக்கும் ஜெயமோகன் போலவே இசை தெரியாது. அவரைப்போல இசை மீது உணர்வுபூர்வமான காதல் கொண்ட சாதாரண ரசிகன் தான். ஆனால் இசை கலைஞர்கள் பற்றிய பார்வை ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமானது, விவரிக்க முடியாதது.

ஷாஜி எழுதிய சில கட்டுரைகள் இசை விமர்சனம் என்ற வகையை தாண்டி சில தனிப்பட்ட தாக்குதல்களை மையமாக கொண்டவை. இளையராஜா முதல் நௌஷத் வரை சாதனை புரிந்த கலைஞர்களின் சிறப்பியல்புகளை கூட விமர்சனம் என்ற பெயரில் ஷாஜி தாக்கி எழுதியது. சாதனைகள் செய்த ஹிந்தி மற்றும் மலையாள இசை அமைப்பாளர்களுள் அடங்கும் சலில் சௌத்திரியை தனது ஆதர்சம் என்பதால் மற்ற அனைவரையும் விட அதீதமாய் முன்னிறுத்தி மற்றவர்களின் சாதனைகளை வெறும் பிரம்மையோ என்று நாம் நினைக்க தூண்டும் வகையில் எழுதியது.. என்று தவறுகள் பல செய்தார். ராஜா பற்றி உயிர்மையில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றிற்கு நான் கடுமையாக எதிர்வினை செய்தேன். அதை அடுத்து ஜெ. ராஜா பக்கம் இருக்கும் நியாயங்களையும் சில சொந்த காரணங்களுக்காக ராஜாவை ஷாஜி வெறுக்கிறார் அதனால் தான் இப்படி எழுதிகிறார் என்றும் தனது தளத்தில் விரிவாக பதிவும் செய்தார். அதன் பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஷாஜி பற்றி சேது எழுதிய கட்டுரைக்கு நடுநிலைமையான stand எடுப்பார் ஜெ . என்று நான் எதிர்பார்த்த போது, நினைத்ததற்கு மாறாக் மொத்த தவறையும் சேதுபதி மற்றும் 'இந்த தளத்தில் இருந்து எழுதுபவர்கள்' மீது வைக்கிறார் ஜெ. காரணம் இந்த கட்டுரை வெறும் இளையராஜா சம்பத்தப்பட்ட ஒன்று என்ற மேம்போக்கான முடிவுக்கு ஜெ. வந்துவிட்டார்.
//
ஷாஜிக்கு வந்த எதிர்வினைகள் அதிகமும் அவர் ஒரு இசைகலைஞரை விமர்சிக்கும்போது அவரது ஆதரவாளர்களால் உருவாக்கப்படும் எதிர்ப்புகளாகவே இருந்தன, இருக்கின்றன. தர்க்கபூர்வமாக பதில்களைச் சொல்லி அவரை மறுத்திருந்தார்கள் என்றால் அது இந்த விவாதம் மேலும் விரிய வழிவகுத்து நம் இசையாராய்ச்சி சூழலை மேம்படுத்தியிருக்கும்
//
என்று ஜெ சொல்வதில் என்ன நியாயம் இருக்கும் என்று புரியவில்லை. அபத்தமாக எழுதினால் எதிர்வினைகள் வருவது சகஜம் தானே. தவிர பெரும் சாதனை புரிந்த தங்கள் ஆதர்சங்களை வெற்று கேள்விகள் மூலம் விமர்சனம் செய்யும் யாரையும் யாரும் விடுவத்ல்லை என்பதும் உண்மை தானே. தவிர அதற்கான பதிலை ஆணித்தரமாக நுடபமாக எழுதும் கட்டுரைகளை புறந்தள்ளி விட்டு இப்படி ஷாஜியை காப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை. இசை கலைஞர்கள் பற்றி படித்து தெரிந்துகொள்ள ஏராளமான புத்தகங்களும் இணையமும் விரிந்து கிடக்கும்போது ஷாஜியின் வருகை ஏன் இப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்பதும் புரியாத புதிர். இதை விளக்க ஜெ. பரப்பிசை என்ற வார்த்தை மூலம் இசைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத விஷயங்களால் விஷயத்தை வேறு 'தளத்துக்கு' கொண்டு செல்ல முயல்கிறார், நடுவில் சிறு விமர்சனங்களை ஷாஜி மீது வைத்தபடி. இது ஒரு முக்கியமான பதிவு என்றால், சம்பந்தம் இல்லாத பதிவு ஒன்றில் சேது எழுதிய கட்டுரைக்கு கிண்டலான பதில் ஒன்றை தந்த போது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.
//
பீர் அருந்திக்கொண்டே மேலே பேசலாமே என்ற கருத்து ஷாஜியால் முன்வைக்கப்பட்டது. சொந்த செலவில் சூனியம் என நான் நினைத்துக்கொண்டு கவலையுடன் கணினியை பார்த்தேன். இன்னமும் பராமரிப்பு வேலை நிகழ்ந்துகொண்டே இருந்தது. தனசேகர் குடிமறுத்தார். ஷாஜியின் கட்டுரையில் சுதிசேரவில்லை என்று சேதுபதி அருணாச்சலம் சொல்வதைக்கேட்டுத்தான் ஷாஜி முற்படுகிறரா என்ற ஐயமும் எழுந்தது.//

என்று அவர் எழுதியது அவரது வழக்கமான உயர்தர நகைச்சுவை உணர்வுக்கு முற்றிலும் மாறானது. நானெல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதது. சேது முனைப்புடன் அக்கறையுடன் எழுதிய கட்டுரையின் சாரத்தை புறக்கணிப்பதுடன் அதை மிக மோசமாக கிண்டல் செய்யும் தொனியுடன் எழுதப்பட்டது. இதை சேது படித்தாரா என்று தெரியவில்லை. இதற்கு அவரிடம் இருந்து என்ன எதிர்வினை வரும் என்று தெரியவில்லை.

ஷாஜியின் எழுத்துக்களில் சமூக அக்கறை இருக்கிறது, சில உள்ளார்ந்த விஷயங்களை அவர் சிறப்பாக தருகிறார் என்பதை தாண்டி அவரை இசை விமர்சகராக முன்வைப்பது சரியான விஷயமாக தெரியவில்லை. அவருக்கு இருக்கும் இசை அறிவின் அளவை பலர் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். சேதுபதி போல் சிலர் பல நாட்கள் பொறுமையாய் இருந்து பின் பொறுக்க முடியாமல் எதிர்வினை செய்ய தொடங்கி விட்டார்கள்.நான் எழுதியது கூட ராஜாவின் ஆளுமை , மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மீது ஷாஜி வைத்த குற்றசாட்டுகளின் எதிர்வினையே தவிர , இசை ரீதியான கட்டுடைப்பு கிடையாது. ஆனால் சேது மிக சிறப்பாக, நுணுக்கமாக ஷாஜியின் இசை சார்ந்த தவறுகளை எடுத்து வைக்கிறார். ஆனால் இதையும் 'வழக்கமான இலக்கிய பூசல்' நடையில் அமைந்த துரதிருஷ்டமான கட்டுரை என்று ஜெ சொல்லி நிராகரிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. ஷாஜி முன்பு எழுதிய கட்டுரைக்கு ஜெ. எழுதிய பதிலுக்கும் இப்போதைய அவரது நிலைபாட்டிற்கும் மிக பெரிய வித்தியாசத்தை உணர்கிறேன்.

'சாதிய துவேஷங்களை நகைச்சுவை மூலம் கடப்பது' என்பது போல் இதையும் நகைச்சுவையாய் ஜெ. கடக்க முடியாது. நான் அறிந்த வரையில் அடிப்படையில் மிக நேர்மையான குணம் கொண்ட ஷாஜியும் , இதை 'புறக்கணித்து' வேறு தளத்துக்கு செல்ல முடியாது என்று நம்புகிறேன்.

Wednesday, September 15, 2010

இளையராஜாவுக்கு தேசிய விருதுஇளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசைக்காக , பழசிராஜா படத்துக்காக , தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதன் முறையாக சிறந்த பின்னணி இசைக்கான விருது. உண்மையில் இந்த விருது முப்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு இருந்தால் அவருக்கு எப்படியும் குறைந்தது இருபது முறை இந்த விருது கிடைத்திருக்கும்.

Monday, September 13, 2010

தமிழ் சினிமா அசலும் நகல்களும்: எனது எதிர்வினைஇது நண்பர் சுரேஷ்கண்ணன் எழுதிய 'தமிழ் சினிமா அசலும் நகல்களும்' என்ற கட்டுரைக்கான எனது பதில்..

இணையத்தில் கருந்தேள் கண்ணாயிரமும், மயில்ராவணன் - கோகுலும் இந்த தலைப்பு பற்றி விவாதம் செய்கிறார்கள். கமலின் பெரும்பான்மையான படங்கள் நேர்மையாக சொல்லப்போனால் inspired படங்கள். அதற்கான சான்றை நான் பலமுறை படித்திருக்கிறேன். படங்களை பார்த்து உறுதி செய்தும் இருக்கிறேன். இது குறித்து நம்முள்ளே நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. கமல் மட்டும் அல்ல இந்தியாவின் பெரும்பான்மையான திரைக்கலைஞர்களும் இந்த 'குற்றசாட்டின்' கீழ் வருவார்கள். எத்தனை சதவீதம் என்பதில் தான் இங்கு வேறுபடுத்தி பார்க்கவேண்டும். கமல் தான் நடிக்கும் படங்களின் Ghost Director ஆக பணிபுரிவதால் (!) பெரும்பாலும் படத்தின் வெற்றி (தோல்விகள்) மற்றும் தரம் பற்றிய விமர்சனங்கள் அவரை நோக்கியே வைக்கப்படுகின்றன. நன்றாக கவனித்தீர்கள் என்றால் அவர் பெரும் அளவில் ஈடுபாட்டோடு செய்த படங்களில் எண்பது சதவீதம் inspired or copy or whatever இது ஒரு பதிவர் எழுதி எனக்கு பிடித்த வாசகம்) படங்கள்.

மிக சிறந்த நடிகர் தான் என்றாலும் அவரை உலக அளவிலான அளவீட்டில் பார்க்கப்போனால் சற்று சங்கடமாக தான் இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் originality இல்லாமல் இருக்கிறார். அதற்காக உலக அளவில் குறிப்பாக ஹாலிவுட்டில் தயாராகும் படங்கள் ஒரிஜினல் தான் என்று யாரும் சொல்ல முடியாது. ஸ்பீல்பெர்க்கின் E.T. நமது சத்யஜித் ரே எழுதிய Alien என்ற கதையின் தாக்கத்தில் உருவானது என்று உங்களுக்கு தெரியும். அந்த கதையை ஆங்கிலத்தில் படமாக்க ரே திட்டம் வைத்திருந்தார் என படிக்கையில் ஆச்சர்யம் அடைந்தேன். உலகின் பலருக்கு ஆதர்சமான அகிரா குரோசோவா விடம் இருந்து ஹாலிவுட் நிறைய கற்று கொண்டது என்பதும் நமக்கு தெரிந்தவை தான்.

ஒரு கலைஞன் , படைப்பாளி கண்டிப்பாக எதோ ஒன்றில் இருந்து inspire அடைபவன் தான். ஏற்கனவே சொன்னது போல் எத்தனை சதவீதம் தன் உண்மையான படைப்பை தருகிறான் என்பதில் தான் அவனுடைய தரம் நிச்சயிக்கப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
நம் அனைவருக்கும் விருப்பமான இளையராஜாவும் தன ஆரம்ப கட்டத்தில் ஆங்கில பாடல்களை காப்பி செய்தவர் தான் என்றாலும், அவரின் சாதனைகள் அவர் செய்த அற்புதங்களுக்கு முன்னால் அவை மிக சிறும் அளவே. தேவாவை அப்படி நாம் பார்ப்போமா? கமல் நம் மண்ணின் இலக்கியங்களை உள்வாங்கி அவற்றை தான் கற்ற தொழில் நுட்பத்தோடு வெளிக்கொண்டு வந்தார் என்றால் அவர் உண்மை கலைஞன். சரி கௌதம் மேனன் எந்த படத்தில் ஒரிஜினலுக்கு கிரெடிட் கொடுத்தார்? எனக்கு தெரியாததால் கேட்கிறேன்.

எனக்கு பெரும் விருப்பமான எழுத்தாளர் என்றாலும் ஜெ,யின் சினிமா பற்றிய பார்வையில் பெரிதும் முரண்படுகிறேன்.

Saturday, September 11, 2010

முரளிக்கு அஞ்சலி ..நடிகர்களும் முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது. சத்யராஜ் தலைமையில் ஒரு நடிகர் குழு ஒன்று முதல்வரிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறது. "அய்யா.. நீங்க ஒரு உதவி பண்ணனும். நம்ம முரளி ரொம்ப நாளா காலேஜிலேயே படிசிக்கிட்டிருக்கார் ...கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அவரை எப்படியாவது 'பாஸ்' பண்ண வச்சுருங்க.." என்றதாம் அக்குழு. முரளியும் அங்கு இருந்தாராம். வெடிச்சிரிப்பு கிளம்பியிருக்கும் என்று நான் சொல்ல தேவை இல்லை.

தலையை சாய்த்துக்கொண்டு ஹீரோயின் பின்னாலேயே காதலுடன் அலைந்த ஒரு மாணவ பாத்திரம் நம்மோடு இப்போது இல்லை. கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து படிக்கும் First Graduate கதாபாத்திரத்தை கச்சிதமாய் நடித்து கொடுத்தவர் முரளி.
மிக சிறந்த நடிகர் இல்லை தான் என்றாலும் தமிழின் குறிப்பிடதக்க நடிகராய் இருந்த முரளி அகாலத்தில் இறந்தது பெரும் அதிர்ச்சி.

கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் முரளியின் பிரேதத்தின் நம்ப முடியாத இளமை பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அவரும் தன மகன் நடித்த 'பாணா காத்தாடி' படம் வரை , மாணவனாகவே நடித்திருந்தார் என்று படிக்கும்போது ஆச்சர்யமாகவே இருந்தது. தமிழ் சினிமா சரியாக பயன்படுத்த தவறிய நடிகர்கள் லிஸ்டில் ஒருவராய் மறைந்தே விட்டார் முரளி.

Monday, September 6, 2010

அறை

புறவிசையின்

உதவியின்றி இயங்காப்

பொருள்களைக்

கொண்ட அறை.

அவற்றின்

மௌன ஏக்கங்களால்

நிரம்பியிருக்கிறது.

உள்ளே நுழைந்ததும்

உணர்கிறேன் அதை.

அவை என்னை

சூழ்ந்து கொள்கின்றன

இருக்கையிலிருந்து

எழுந்து நான்

மின்விசிறியை முடுக்கிவிட்டு

அமர்கிறேன்

அப்போதாவது

பொருள்களின்

ஏக்கங்கள் என்னைவிட்டு

அகலும் என்று.

எத்தனைதான் கலைத்துப்போட

முயன்றாலும்

மீண்டும்

ஒழுங்குக்குள் வந்தமர்கின்றன

பொருள்கள்

மீண்டும்

என்னைச் சூழ்கின்றன

அவற்றின்

மௌன ஏக்கங்கள்.

--ஜே.எஸ். அனார்கலி

மார்ச் 2008

உயிர்மை