Monday, September 13, 2010

தமிழ் சினிமா அசலும் நகல்களும்: எனது எதிர்வினைஇது நண்பர் சுரேஷ்கண்ணன் எழுதிய 'தமிழ் சினிமா அசலும் நகல்களும்' என்ற கட்டுரைக்கான எனது பதில்..

இணையத்தில் கருந்தேள் கண்ணாயிரமும், மயில்ராவணன் - கோகுலும் இந்த தலைப்பு பற்றி விவாதம் செய்கிறார்கள். கமலின் பெரும்பான்மையான படங்கள் நேர்மையாக சொல்லப்போனால் inspired படங்கள். அதற்கான சான்றை நான் பலமுறை படித்திருக்கிறேன். படங்களை பார்த்து உறுதி செய்தும் இருக்கிறேன். இது குறித்து நம்முள்ளே நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. கமல் மட்டும் அல்ல இந்தியாவின் பெரும்பான்மையான திரைக்கலைஞர்களும் இந்த 'குற்றசாட்டின்' கீழ் வருவார்கள். எத்தனை சதவீதம் என்பதில் தான் இங்கு வேறுபடுத்தி பார்க்கவேண்டும். கமல் தான் நடிக்கும் படங்களின் Ghost Director ஆக பணிபுரிவதால் (!) பெரும்பாலும் படத்தின் வெற்றி (தோல்விகள்) மற்றும் தரம் பற்றிய விமர்சனங்கள் அவரை நோக்கியே வைக்கப்படுகின்றன. நன்றாக கவனித்தீர்கள் என்றால் அவர் பெரும் அளவில் ஈடுபாட்டோடு செய்த படங்களில் எண்பது சதவீதம் inspired or copy or whatever இது ஒரு பதிவர் எழுதி எனக்கு பிடித்த வாசகம்) படங்கள்.

மிக சிறந்த நடிகர் தான் என்றாலும் அவரை உலக அளவிலான அளவீட்டில் பார்க்கப்போனால் சற்று சங்கடமாக தான் இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் originality இல்லாமல் இருக்கிறார். அதற்காக உலக அளவில் குறிப்பாக ஹாலிவுட்டில் தயாராகும் படங்கள் ஒரிஜினல் தான் என்று யாரும் சொல்ல முடியாது. ஸ்பீல்பெர்க்கின் E.T. நமது சத்யஜித் ரே எழுதிய Alien என்ற கதையின் தாக்கத்தில் உருவானது என்று உங்களுக்கு தெரியும். அந்த கதையை ஆங்கிலத்தில் படமாக்க ரே திட்டம் வைத்திருந்தார் என படிக்கையில் ஆச்சர்யம் அடைந்தேன். உலகின் பலருக்கு ஆதர்சமான அகிரா குரோசோவா விடம் இருந்து ஹாலிவுட் நிறைய கற்று கொண்டது என்பதும் நமக்கு தெரிந்தவை தான்.

ஒரு கலைஞன் , படைப்பாளி கண்டிப்பாக எதோ ஒன்றில் இருந்து inspire அடைபவன் தான். ஏற்கனவே சொன்னது போல் எத்தனை சதவீதம் தன் உண்மையான படைப்பை தருகிறான் என்பதில் தான் அவனுடைய தரம் நிச்சயிக்கப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
நம் அனைவருக்கும் விருப்பமான இளையராஜாவும் தன ஆரம்ப கட்டத்தில் ஆங்கில பாடல்களை காப்பி செய்தவர் தான் என்றாலும், அவரின் சாதனைகள் அவர் செய்த அற்புதங்களுக்கு முன்னால் அவை மிக சிறும் அளவே. தேவாவை அப்படி நாம் பார்ப்போமா? கமல் நம் மண்ணின் இலக்கியங்களை உள்வாங்கி அவற்றை தான் கற்ற தொழில் நுட்பத்தோடு வெளிக்கொண்டு வந்தார் என்றால் அவர் உண்மை கலைஞன். சரி கௌதம் மேனன் எந்த படத்தில் ஒரிஜினலுக்கு கிரெடிட் கொடுத்தார்? எனக்கு தெரியாததால் கேட்கிறேன்.

எனக்கு பெரும் விருப்பமான எழுத்தாளர் என்றாலும் ஜெ,யின் சினிமா பற்றிய பார்வையில் பெரிதும் முரண்படுகிறேன்.

13 comments:

 1. எந்தப் படத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது என்று சொன்னால் காப்பி ரைட் பிரச்சினை வரும் என்றோ, அல்லது தன் மேதாவித்தனத்தைக் காப்பாற்றிக் கொள்ளவோ இப்படி செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் தனி மனிதர்களைத் தாக்குவதற்கு, "ஐயோ! காபி அடிச்சுட்டாரு!" என்ற விவாதம் பயன்படலாமே தவிர, உலக சினிமா குறித்த பார்வையில் இந்த மாதிரியான பேச்சே இல்லை போலிருக்கிறதே?

  Zhang Yimou எடுத்த "A Woman, a Gun and a Noodle Shop" என்றத் திரைப்படத்தின் இந்த இரண்டு விமரிசனங்களையும் பாருங்கள்-

  http://www.salon.com/entertainment/movies/andrew_ohehir/2010/09/03/woman_gun_noodle/index.html
  http://movies.nytimes.com/2010/09/03/movies/03woman.html?th=&emc=th&pagewanted=all

  "Twenty-five years ago Joel and Ethan Coen, rising stars of American independent cinema, made their debut with “Blood Simple,” a twisty tale of adultery and revenge with an obvious debt to “The Postman Always Rings Twice.” Six years later Zhang Yimou, a star of China’s rising fifth generation of filmmakers, contributed his own variation on the “Postman” theme with “Ju Dou,” his second feature as sole director. And now, for no good reason but with reasonably happy (which is to say grisly) results, Mr. Zhang has honored the unlikely affinity between himself and the Coens with a faithful remake of their first movie, a replica of “Blood Simple” called (in America) “A Woman, a Gun and a Noodle Shop.”
  என்று A.O. Scott அப்பட்டமான காப்பியை "faithful remake " என்று மெச்சி எழுதினால்,

  salonல் Andrew O 'Hehir கூட,
  "Zhang, an operatic visual stylist who has directed "Hero" and "Raise the Red Lantern" and numerous other international art-house hits in a career that reaches back to the '80s, has now made an oddly faithful remake of "Blood Simple," the American indie hit that marked Joel and Ethan Coen's 1984 debut ,"

  என்று புகழ்ந்து எழுதி விட்டு- oddly faithful remake, காப்பி அடிப்பதில் கூட Zhang ஒழுங்காகக் காப்பி அடித்திருப்பதாய் இவரும் பாராட்டுகிறார் பாருங்கள்.

  நெத்தியடியாய் Andrew O 'Hehir இப்படி எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது-

  "I haven't gone back and compared "Woman/Gun/Noodle" shot for shot with "Blood Simple" or anything, largely because I don't even want to know that kind of person, let alone be one."

  இந்த மாதிரி ஷாட் பை ஷாட் கம்பேர் செய்கிறவர்களை யார் என்னன்னு தெரிஞ்சுக்கக் கூட அவருக்குப் பிடிக்கலையாம்!

  உலக சினிமாவில் காப்பி அடிப்பது என்பதெல்லாம் ஒண்ணுமே இல்லையோ என்னவோ? இங்கே நாம்தான் அது தெரியாமல் அடித்துக் கொண்டிருக்கிறோமோ என்னவோ?

  இந்த இரு கட்டுரைகளில் செய்யப்பட்டிருக்கும் பாராட்டுகளை (appreciation) வைத்துப் பார்க்கும்போது இந்த விவாதம் குறித்து உங்கள் கருத்து என்ன என்று அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

  ReplyDelete
 2. பின்னூட்டத்தைப் பிரசுரித்ததற்கு நன்றி. ஆனாலும் இதை விடறதா இல்லை- என்ன கொடுமை சார்!

  “The Postman Always Rings Twice” என்கிற படத்தை அமேரிக்காவுல Coen Brothers, Blood Simpleன்னு பிட் அடிச்சாங்களாம், சீனாவுல Zhang Yimou, அதே படத்தை “Ju Dou "ன்னு பிட் அடிச்சாராம். இவங்கெல்லாம் சினிமா எடுக்கறாங்களாம் சினிமான்னு கோவப்பட்டு முடிக்கறதுக்குள்ள, “The Postman Always Rings Twice”ஐ பிட் அடிச்சு Coens எடுத்த Blood Simple படத்தையும் விடாம பிட் அடிச்சு Zhang Yimou “A Woman, a Gun and a Noodle Shop” அப்படின்னு மறுபடியும் ஒரு காப்பி பேஸ்ட் படம் எடுத்துட்டாராம்! இப்படி துரத்தித் துரத்தி காப்பி அடிக்கற இவங்களுக்குதான் மனசாட்சி இல்லைன்னா, இதையெல்லாம் பாராட்டி எழுதற திரை விமரிசகர்களுக்கு புத்தி எங்கே போச்சு?

  ஒண்ணும் சரியில்லை சார், அவ்வளவுதான் இப்போதைக்கு சொல்ல முடியும்.

  ReplyDelete
 3. அன்புள்ள பாஸ்கர்,
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, இப்போது சற்று வேலையாய் இருப்பதால் சற்று நேரம் கழித்து பதில் எழுதுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம்.

  ReplyDelete
 4. அன்புள்ள சந்திரமோகன்,

  plagiarism எனும் சமாச்சாரம் உலகம் பூராவும் நிகழ்ந்து கொண்டிருப்பவைதாம் என்பதை என் பதிவிலியே குறிப்பிட்டிருக்கிறேன். ஹாலிவுட்களில் இந்தக் குற்றச்சாட்டு நிருபீக்கப்பட்டால் மிக அதிக நஷ்டஈடு தரப்பட வேண்டும் என்பதால் அங்கு குறைவு. சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடமிருந்தே இதற்கான உரிமையை வாங்கி விடுவார்கள். இங்கு அது குறித்த விழிப்புணர்வு குறைவாகவும் அலட்சிய மனோபாவம் அதிகமிருப்பதால் பொதுவி்ல் யாரும் இதை விவாதிப்பதில்லை. மேலும் அசல்-நகல் குறித்தான இந்த மாதிரியான விவாதங்களும் உரையாடல்களும் உலக சினிமா பார்வையாளர்கள்' எனும் மிகச்சிறிய குழுமத்தில் நிகழ்வது குறித்து அவர்களை அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இதைப் பற்றி ஒன்றும் அறியாத வெகுஜன பார்வையாளர்களோடு ஒப்பிடும் போது இந்த வட்டம் மிகச் சிறிது.

  தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுவிஷயத்தில் கமல்ஹாசனை மாத்திரம் மையப்படுத்தி உரையாடுவது சரியல்ல. பெரும்பாலான இயக்குநர்கள் இதுவிஷயமாக குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்களே. ஆனால் ஆஸ்கர் போன்ற உலகத்தரமான விருதுகள் பெரிதும் கமல்ஹாசனை சம்பந்தப்படுத்தி பேசுவதாலும், இந்தியாவின் மிகச் சிறந்த சினிமா கலைஞனாக கமல் மதிக்கப்படுவதாலும்,அவர் இந்த விஷயத்தில் சற்று வெளிப்படையாகவே நடந்து கொள்வது நல்லது.

  கமல் கோஸ்ட் டைரக்டராக சில படங்களில் பணிபுரிந்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள். மிகச்சரி. ஆனால் ஏன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என்பது எனக்குப் புரியவில்லை. ஏதேனும் தவறு நிகழ்ந்தால் பலியாடுகள் தேவை என்பதற்காக இவ்வாறு நிகழ்கிறது அல்லது வணிக ரீதியான காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்பது யோசிக்கப்பட வேண்டியது. இன்ஸ்பிரேஷன், இமிட்டேஷன் சர்ச்சை காலங்காலமாக நிகழ்வதுதான். சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தங்களின் மனச்சாட்சியோடு இயங்க வேண்டிய தளமிது. இன்னொருவரின் திறமைக்காக நம்மை யாராவது புகழும் போது அதை முழுவதும் அனுபவிக்க முடியாமல் ஏற்படுத்தும் உறுத்தல்தான் இதற்கான தண்டனையாக இருக்க முடியும்.

  ReplyDelete
 5. plagiarism சினிமாவின் சாபக்கேடு ! பெரும்பாலான படங்கள் காப்பி அல்லது inspiration வகை படங்களே. இதில் தமிழ் சினிமாவில் அதிகம் செய்தவர் திரு. ரஜினிகாந்த் அவர்கள். இவரது பல படங்கள் திரு. அமிதாப் பச்சன் அவர்களின் படங்களின் remakes. மேலும் வரும் ௨௪ ஆம் திகதி வெளிவரவிருக்கும் ரோபோட் வரை! அனைத்தும் so called inspirations!

  ReplyDelete
 6. நான் சொல்ல நினைத்ததை நண்பர் சுரேஷ் கண்ணன் மிக சிறப்பாக எழுதி இருக்கிறார். ஹாலிவுட் போன்ற பெரிய சினிமா உலகில் காப்பி என்பது மிக அரிதானது. அப்படி செய்து கண்டுபிடிக்கப்பட்டால் பெரிய அளவில் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி வரும். ஆனால் அங்கு ரீமேக் உண்டு. பல classics ரீமேக் செய்யப்பட்டவை. என் பள்ளி நாட்களில் Shaft என்ற படம் முதலில் எழுபதுகளில் வந்து பின்பு ரீமேக் செய்யப்பட்டது என்று படித்து நான் ஆச்சர்ய பட்டேன். பொதுவாக ஒரு படம் வேற்று மொழியில் இருந்து ரீமேக் செய்யப்படுவது நாம் அறிந்தது தான். ஒரே மொழியின் பழைய படங்கள் புதிதாய் உருவாக்கப்படுவது என்பது இப்போது இங்கு (மலையூர் மபட்டியான், நான் அவனில்லை) சகஜமாகி வருகிறது. ஆனால் யாருக்கும் தெரியாது என்று வேற்று மொழியில் இருந்து படங்களை தழுவி இங்கு மகத்தான படைப்பாக வெற்றி காண்பவர்கள் நிச்சயம் கடும் விமர்சனத்துக்கு உரியவர்கள். சில அடிப்படை விஷயங்களை சொல்லியாக வேண்டும் என்று நினைக்கிறேன். வேற்றுமொழி , முக்கியமாய் ஆங்கிலத்தில் இருந்து நிறைய படைப்புகள், மூலக்கரு போன்றவற்றை எந்த வித உரிமையும் பெறாமல் இங்கு உருவாக்கி பெரிய ஜீனியஸ் என்று புகழ் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் கமலும், மணிரத்னமும். இவர்களின் முதல் கூட்டணியில் வெற்றி பெற்ற 'நாயகன்' (யார் என்ன சொல்லி மழுப்பினாலும் ) Coppola வின் Godfather ஐ அப்பட்டமாக , காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம். எப்படி அது படு மட்டமாக காப்பி அடிக்கப்பட்டது என்பதற்கு உதாரணம் , கமல் பேசும் தமிழை ஹிந்தியில் மொழி பெயர்த்து சொல்ல டெல்லி கணேஷ் என்ற interpreter பாத்திரம். கமல் பம்பாய், தாராவியில் தன சிறுவயதில் இருந்து வளர்ந்து வந்தாலும் அவருக்கு ஹிந்தி பேச வராது. கேட்டால் அது தமிழர்களின் பகுதி என்று சொல்லி தப்பிக்க பார்ப்பார்கள். அது சிறிதளவுக்கு கூட சாத்தியம் இல்லை என்பதை தமிழகத்தை தாண்டி வேறு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் உணர்ந்திருப்பார்கள். இந்த அபத்தத்தின் மூலத்தை ஆராய்ந்தால் , Godfather இல் அல் பாசினோ சிறிது காலம் வேறு நாட்டில் (சிசிலி) இருக்கும்போது மொழி தெரியாமல் இன்னொருவரின் துணையோடு அங்கிருப்பவர்களிடம் உரையாடுவார். அதை எந்த வித அடிப்படை அறிவும் இல்லாமல் நகலெடுத்து பெரிய அளவில் பெயர் வேறு பெற்றனர், இருவரும். டைம்ஸ் பத்திரிக்கை உலகின் சிறந்த நூறு படங்களில் ஒன்றாக நாயகனை தேர்வு செய்தபோது எனக்கு சிரிப்பதை தவிர வேறெதுவும் தெரியவில்லை. இது போல் பல அபத்தங்களை இருவரும் அதிகமாக செய்தார்கள். ஆனால் கமலுக்கோ மணிரத்னதுக்கோ அதை பற்றி இம்மி கூட குற்ற உணர்வு இல்லை. கமல் ஒரு முறை Tom Hanks நடித்த Forrest Gump படத்தை பார்க்கும்போது தனக்கு சிப்பிக்குள் முத்தின் நினைவு வருவதாக சொன்னார். (இங்கிருந்து அங்கு 'போய்விட்டதாம்!') அவரது விக்ரம் படத்தின் சாயலுடன் James Cameron இன் True Lies வந்த போது ஆச்சர்யமாக தான் இருந்தது. ஆனால் அது சுஜாதா செய்த தழுவல் என்று பிற்பாடு தெரியவந்தது. மிக முக்கியமாக எந்திரன் புகழ் ஷங்கர் கைவண்ணத்தில் உருவான 'இந்தியன்' திரைப்படம் ,சிவாஜி , கமல் நடித்த 'நாம் பிறந்த மண்' மற்றும் 'பாலம்' புகழ் கார்வண்ணனின் , மறைந்த நடிகர் முரளி நடித்த ' எதிர்காற்று' என்ற இருபடங்களின் கலவை என்று நிறைய பேருக்கு தெரியாது. ரஜினியை பொறுத்தவரை அவர் அமிதாபின் தமிழ் நகல் எனும் அளவுக்கு அவரது படங்களின் ரீமேக் படங்களில் நடித்தவர். எனவே அவர் 'எதிலும் சேராதவர்'. கமலுக்கு கிடைக்கும் புகழ் அவரது நடிப்புக்காக தான் இருக்க முடியுமே தவிர (அதிலும் மாறுபட்ட கருத்துகள் உண்டு!) அவரது படைப்புகளுக்காக அவரை எக்காலத்திலும் புகழ முடியாது. எத்தனை படங்கள்! எனக்கு மிகவும் பிடித்த அவரது 'மகாநதி' யின் மூலக்கரு 'Innocent Man' என்ற ஆங்கில படம். நிறைய சொல்லலாம். பட்டியல் நீண்டு கொண்டே தான் போகும்.

  ReplyDelete
 7. சுரேஷ் மிக முக்கியமான கருத்து ஒன்றை சொன்னார். கமல் தனக்கு மிகவும் நெருக்கமான சிங்கீதம் சீனிவாசராவ், சந்தான பாரதி ஆகியோரை 'இயக்குனர்கள்' என்று சொல்லி , தானே படங்களை இயக்கினார். அதற்கு என்ன காரணம் என்று எனக்கும் புரியவில்லை. தோற்றால் பழியை அவர்கள் தலையில் போட நினைத்தாரோ என்னவோ.
  அவரை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காமல் 'தட்டிக்கொடுக்கும்' விகடன் அவர் படங்களை விமர்சனம் செய்யும்போது மருந்துக்குக்கூட படத்தின் 'இயக்குனர்' பெயரை குறிப்பிடாது. மாறாக , கமல் இப்படி எடுத்திருக்கிறார், அப்படி எடுத்திருக்கிறார் என்று எல்லா புகழையும் கமல் தலையில் தான் வைக்கும் அந்த பத்திரிக்கை. அதில் உண்மை இல்லாமல் இல்லை என்பதால் யாரும் அதை பெரிது படுத்துவதும் இல்லை. சமீபத்தில் 'அன்பே சிவம்' பெரும்பகுதி கமலால் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுவது உண்மை இல்லை என்று குஷ்பு-சுந்தர்.சி. தம்பதி புலம்பியதை படித்திருக்கலாம். தமிழை விட ஹிந்தியில் வரும் படங்கள், இசை ஆகியவை மிக அதிகமாக வெளிநாட்டு படங்கள், ஆல்பங்களில் இருந்து காப்பி அடிக்கப்படுகின்றன. மகேஷ் பட் முதல் கொண்டு கரன் ஜோகர் வரை இதில் கரை கண்டவர்கள். உண்மையில் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் நொடியில் ஒரு படத்தின் 'மூலத்தை' நம்மால் கண்டறிய முடிகிறது. நம் நடிகர்கள், இயக்குனர்கள் இவற்றை தான் ஆரம்ப காலத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். உதாரணத்துக்கு பாலு மகேந்திரா வின் 'மூடுபனி' , ஹிட்ச்காக்கின் புகழ் பெற்ற சைக்கோ படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். பாசிலின் ' பூவிழி வாசலிலே' Witness , (Horrison Ford , Predator-2 புகழ் Danny Glover நடித்தது) படத்தின் தழுவல் என்று நாம் ரசித்த நிறைய படங்கள் ஆங்கில மூலங்களை தழுவி எடுக்கப்பட்டவை எனில் சற்று ஏமாற்றமாக இருப்பது உண்மை தானே.
  இந்த கட்டுரையே சுரேஷின் கட்டுரைக்கு ஒரு பதிலாக எழுதப்பட்டது என்றாலும் பெருந்தன்மையுடன் எனது தளத்தில் விவாதத்தில் அவர் பங்கேற்பது மகிழ்ச்சி தருகிறது.
  என் கருத்துகளில் முரண்படுபவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

  ReplyDelete
 8. நீங்கள் கூறிய இன்னசன்ட் மேன் படக்கதையும் மகாநதி கதையும் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் போகின்றன.
  ஜெயிலில் நடக்கும் சின்ன சம்பவம் மட்டுமே அதில் ஒற்றுமை.

  ஜேம்ஸ் கேமரூன் true lies ம் விக்ரமும் சம்பந்தமே இல்லாத கதைகள். ராக்கெட்டைக் கடத்தும் வில்லன் மட்டுமே ஒற்றுமை.
  ஆனால் விக்ரம் படத்தில் கடைசி கிளைமாக்ஸ் பாராசூட் சண்டை ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் intro சண்டைகாட்சி.

  நாயகனைவிட தேவர் மகனே காட்ஃபாதரின் வாரிசு எனக்கருதலாம்.

  ReplyDelete
 9. உங்கள் வலைப்பதிவு தீமில் தமிழ் எழுத்துரு (font) என் உபுண்டு ஃபயர்பாக்ஸ் உலாவியில் ஒழுங்காகத் தெரியவில்லை. கொஞ்சம் கவனிக்கவும்.

  ReplyDelete
 10. அன்புள்ள வஜ்ரா

  நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் Innocent man படத்தின் மூலக்கரு (தலைப்பிலே உள்ளது போல்!) மகாநதியின் மூல்க்கதையோடு ஒத்துப்போவது தான். கமல் அந்த படத்தை இன்னும் நன்றாக டெவெலப் செய்திருப்பார். ( பார்த்தீர்களா நான் கூட 'இயக்குனர்' சந்தான பாரதியை சொல்லவில்லை:-) )
  அதனால் தான் அது எனக்கு பிடித்த படம் என்றும் சொன்னேன்.

  True Lies படத்தின் மூலக்கதையும் விக்ரம் மூலக்கதையும் , நீங்கள் குறிப்பிட்டது போல், வில்லன் ராக்கெட்டை கடத்துவதில் தானே முக்கியத்துவம் பெறுகிறது. தவிர கதாநாயகன் வில்லன் கூடாரத்துக்குள்ளேயே சென்று அந்த 'திட்டத்தை' முறியடிப்பதும் இரண்டு படங்களுக்கும் பொதுவான முக்கிய பொருத்தம். (ஜேம்ஸ் பான்ட் படங்களில் இது சகஜம் என்றாலும் இந்த இரு படங்களையும் நான் சற்று ஒப்பீடு செய்தே பார்த்து வந்தேன்).

  நீங்கள் சொன்னதில் நான் முழுமையாக உடன்படுவது தேவர் மகன் விஷயத்தில் தான். நாயகனில் மார்லன் பிராண்டோ , அல் பாசினோ இருவரையும் ஒற்றை கேரக்டராய் கமலே சுமந்திருப்பார். அந்த தாதா மீட்டிங் வரும்போது கமல் அணிந்திருக்கும் கோட் கூட அல் பாசினோ அணிந்தது போலவே இருக்கும்.
  ஆனால் தேவர் மகனில் சிவாஜி (தென்னகத்து மார்லன் பிராண்டோ !) மற்றும் கமல் இருவரின் பாத்திரப்படைப்பும் காட்பாதரை நிச்சயம் நினைவுபடுதிறது. அவர் 'போனதும்' இவர் பொறுப்பேற்பது , பேர குழந்தைகள் மூலம் 'பெரியவர்' இறப்பது என்று காட்பாதரை தமிழில் மொழி பெயர்த்திருந்தார் கமல் ( ஸாரி .. பரதன் ..இவரும் பாதியில் கடுப்புடன் 'கழண்டு கொண்டார் ' என்று படித்திருக்கிறேன் ). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  நீங்கள் சொல்வது போல் FireFox இல் எனது வலைப்பூ படிக்க முடியவில்லை தான். நானே google chrome தான் உபயோகிக்கிறேன். குறையை நிவர்த்தி செய்து விடுவேன். மிக்க நன்றி வஜ்ரா..

  ReplyDelete
 11. இன்னசென்ட் மேன் படத்தின் மூலக்கருவை வைத்தே கமல் மகாநதியின் கதையை டெவலப் செய்தார் என்பது அவரே ஏதாவது பேட்டியில் ஒப்புக்கொண்டாலொழிய நமக்கு அது புதிராகவே இருக்கும்.

  True lies படத்தின் மூலக்கதை, சி.ஐ.ஏ ஏஜண்ட் தன் மனைவிக்குக் கூடத் தெரியாமல் சி.ஐ.ஏ ஏஜண்டாக பணிபுரிகிறார். அவர் எப்படி ராக்கெட் மற்றும் அவனது மனைவி குழந்தையை கடத்தி மிரட்டும் வில்லனை சமாளிக்கிறார் என்பது தான்.

  விக்ரம் படத்தின் மூலக்கதை, ராக்கெட்டைக் கண்டுபிடித்து அழிக்க கராரான ஆஃபிசர் விக்ரம் தான் சரி என்று பணிக்கு நியமிக்கிறார்கள். அதை அவர் எவ்வாறு முடிக்கிறார் என்பது தான். இரண்டு கதைகளும் வெவ்வேறானவை.

  ReplyDelete
 12. சந்திரமோகன்

  வழக்கம் போலவே ஏதோ ஒரு உறக்கமில்லா நள்ளிரவில் டி வி யை முடுக்கி ஏ எம் சி சேனலில் அடைக்கலமான பொழுது அதில் ஹாரிசான் ஃபோர்ட் நடித்த ஏதோ ஒரு பழைய படம் ஓடிக் கொண்டிருந்தது. நமக்கெல்லாம் பிரபலமான இண்டியானா ஜோன்ஸோ, ஸ்டார் வார்சோ, ஏர் ஃபோர்ஸ் ஒன்றோ அல்ல. ஃப்ரிஸ்கோ கிட் என்ற படம் அது. ஒரு வங்கிக் கொள்ளைக்காரரான ஹாரிசான் ஃபோர்டும் ஒரு யூத ராபியும் சேர்ந்து நீண்ட தூரம் பல்வேறு தடைகளைக் கடந்து சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரை அடைய வேண்டும் 1850 வருடத்தில். ஸ்டிரேஞ் பெட் ஃபெல்லோஸ் இருவரும் சேர்ந்து கடக்கும் தூரமும் அவர்கள் படும் பாடுகளுமே படம். எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? 1979ல் வந்த படம் ஆகவே அன்பே சிவத்தைப் பார்த்து இதை எடுத்தார்கள் என்று கமல் ரசிகர்கள் யாரும் பாய்ந்து வர வேண்டாம். இதைப் போன்ற வித்தியாசமான இருவர் அல்லது பலர் சேர்ந்து பயணிக்க நேரிடும் படங்கள் பல வந்துள்ளன ஆகையினால் இது காப்பி ஆகாது. நானும் கமலஹாசன் காப்பி அடித்தார் என்றும் சொல்லவில்லை. அன்பே சிவத்தில் ஒரு காட்சி வரும் பஸ்ஸின் மேல் கூரையில் அமர்ந்து பயணிக்கும் கமல் மாதவனிடத்து ஒரு கிராமத்துக்காரர் ஏதோ போதை வஸ்துவைக் குடுக்க அதை கமலஹாசன் எச்சரித்தும் மீறி சாப்பிட்டு விடும் மாதவன் ஆட்டம் பாட்டம் பஸ்ஸின் கூரை மேலே போடுவார். நானும் ரசித்துப் பார்த்தேன். ஆனா பாருங்க இந்த ஃப்ரிஸ்கோ கிட்டில் அந்த ராபியும், ஹாரிசான் ஃபோர்டும் ஒரு செவ்விந்திய குடியிருப்பில் மாட்டிக் கொள்வார்கள். ஒரு செவ்விந்தியர் ஃபோர்டிடம் ஏதோ உருண்டையாகக் கொடுப்பார். ராபி வேண்டாம் சாப்பிடாதே என்று எச்சரிப்பார். மீறி சாப்பிடும் ஃபோர்டுக்கு போதை தலைக்கேற அப்புறம் என்ன ஒரே ஆட்டம் பாட்டுத்தான். இரண்டு பேருக்கும் இதே கற்பனை தற்செயலாக உதித்திருக்கும் இல்ல? என்ன ஒரு ஒற்றுமை பார்த்தீர்களா? இதையெல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷன் என்று எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதான் இல்ல :))

  இப்பொழுதெல்லாம் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் பரவி போய் ராத்திரிகளில் தூக்கம் வரமால் நெட் ஃப்ளிக்ஸில் இருந்து நேரேயே படங்களை டி வி டிக்களில் இறக்கியோ, ஹெச் பி ஓ, மாக்ஸ், ஏ எம் சி யிலோ கண்ட கண்ட ஆங்கிலப் படங்களையும் பார்த்துத் தொலைவதால் இனிமேல் நம் இயக்குனர்கள் செவ்வாய் கிரகத்துப் படங்களை மட்டுமே காப்பியடிக்கப் பயன் படுத்துவது அவர்களுக்கு நல்லது :))

  அன்புடன்
  ராஜன்

  ReplyDelete
 13. //இப்பொழுதெல்லாம் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் பரவி போய் ராத்திரிகளில் தூக்கம் வரமால் நெட் ஃப்ளிக்ஸில் இருந்து நேரேயே படங்களை டி வி டிக்களில் இறக்கியோ, ஹெச் பி ஓ, மாக்ஸ், ஏ எம் சி யிலோ கண்ட கண்ட ஆங்கிலப் படங்களையும் பார்த்துத் தொலைவதால் இனிமேல் நம் இயக்குனர்கள் செவ்வாய் கிரகத்துப் படங்களை மட்டுமே காப்பியடிக்கப் பயன் படுத்துவது அவர்களுக்கு நல்லது :))
  //
  செமத்தியான கிண்டல் ராஜன்..
  கமல் இதில் வல்லவர். ஏற்கனவே சொன்னது போல் நிறைய வெளிநாட்டு படங்களை , காட்சிகளை நம் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு பயனளிக்கும் வகையில் 'மொழிபெயர்த்தவர்'. (முறையான அனுமதி இல்லாமல் !) திரைகடல் ஓடியும் திரைப்படம் தேடும் சகலகலா வல்லவர் அவர். ஒரு முறை ஜனகராஜை 'தேங்காய் சீனிவாசனின் நகல்' என்று சொல்ல போக , ஜனா அவரை வலுவாக பிடித்துக்கொண்டார். இவர் அல்பசினோ, மார்லன் பிராண்டோ இவர்களை 'நகலெடுத்து' நடிப்பது எனக்கு தெரியாதா என்று பதிலுக்கு அவர் பேச ரெண்டு பெரும் முட்டிகொண்டதாக , படித்திருக்கிறேன். இவ்வளவு வயது வரை அவர் 'சொந்தமாக' ஒரு படம் எடுக்க வேண்டும் என்று முயலாதது எனக்கு வருத்தமே.

  முன்பு யதார்த்த சினிமாவை பற்றி நாம் விவாதித்த , பதிவை தொடர முடியாமல் போய் விட்டது. மன்னிக்கவும். ஒரு விஷயம் சொல்வேன். பசங்க படத்தில் குடும்ப உறவின் முக்கியத்துவம், பக்கத்துக்கு வீட்டுக்காரரின் நற்பண்பு என்று சில வாழ்க்கை அனுபவங்களை முடிந்த வரை இயல்பாக சொன்ன பண்டிராஜின், 'வம்சம்' பார்த்து மனம் நொந்தேன். அந்த படத்தில் நடித்த அரசியல் வாரிசின் தலையீடு அதிகம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 'திராபையான' படம் ஒன்றை தனது அடுத்த படைப்பாக தருவார் பண்டிராஜ் என்று நான் நினைக்கவே இல்லை. சமீபத்திய வருத்தம் இது.

  ReplyDelete