Wednesday, September 12, 2012

பரவசமூட்டிய படம்

தில்லியில் பக்தகோடிகள் பரவசமாக தரிசிக்கும் இடங்களில் முக்கியமானது அக்ஷர்தாம் கோவில். கோடிக்கணக்கில் செலவு செய்து பண்டைய இந்தியாவையே தரிசிக்க வைக்கும் அனுபவம் தரும் இந்தக் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் பற்றி சர்ச்சைகள் கூட உண்டு. கடும் கட்டுப்பாட்டுடன் நடத்தப்படும் இந்தக் கோயிலில் பக்தி கிடைக்கிறதோ இல்லையோ ஒரு தீம் பார்க் சென்று வந்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும். சமீபத்தில் டெல்லி வந்திருந்த என் பெற்றோருடன் அங்கு சென்று வந்தோம். நான் இதற்கு முன்னரே இங்கு வந்திருக்கிறேன்.இதில் சுவாமி நாராயண் என்ற ஒரு யோகியைப் பற்றியும் பண்டைய இந்தியாவின் சிறப்புகள் பற்றியும் விளக்க ரோபோட்டிக்ஸ் முறையில் தத்ரூபமான மனித உருவங்களுக்கு அசைவும் பின்னணிக் குரலும் (ஆங்கிலம் - ஹிந்தி இரண்டிலும்) தந்து பிரமிப்பூட்டுகிறார்கள்.

ஒரு சினிமா ரசிகனாக என்னை மிகவும் கவர்ந்த அம்சம். அங்கு இருக்கும் ஐ-மேக்ஸ் திரையரங்கம் ஒன்றில் திரையிடப்படும் சுவாமி நாராயன் பற்றிய ஆவணப்படம் தான். அது ஆவணப்படமோ விளம்பரப்படமோ, அதில் சொல்லப்பட்டவை உண்மையோ பொய்யோ தெரியாது. படம் எடுக்கப்பட்ட முறை நான் இது வரை எங்குமே பார்த்திராத திரையனுபவத்தை வழங்கியது என்பது மட்டும் நிச்சயம். இதற்காகவே இரண்டாம் முறையும் சென்றேன். முதல் முறை பார்த்த போது ஏற்பட்ட அந்த சிலிர்ப்பு இப்போதும் ஏற்பட்டது.

85 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்ட பிரமாண்டமான திரை. ஐ.மேக்ஸில் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்.அது முற்றிலும் புதிய அனுபவம். திரை என்னும் பிரமாண்டமான மாய உலகுக்குள் சிறுதுரும்பாக நம்மை  மிதக்கும்படி செய்து நம் கர்வத்தைப் போக்கி விடும்  அதியற்புத அனுபவம் அது. அதுவும் ஏதாவது நல்ல படங்கள் வந்தால் மட்டுமே தியேட்டர் பக்கம் தலைவைக்கும் பேர்வழியான எனக்கு இந்த மெகா திரையனுபவம் பரவசம் தந்தது. அது வரை எல்லா காட்சிக்கூடங்களிலும் பத்து இருபது என்ற எண்ணிக்கையில் அமர்ந்து பார்க்கும் பார்வையாளர்கள் மொத்தமும் சேர்ந்து பார்க்கும்படி வசதியான திரையரங்கம். மிகச் சிறப்பான ஒலியமைப்பு.

படம் சுவாமி நாராயன் என்ற ஆன்மீக ஒளிசிந்தும் பத்து பதினொன்று  வயதுள்ள சிறுவன் தன் குடும்பத்தையும் வீட்டையும் ஊரையும் விட்டு நள்ளிரவில் தொடங்கும் ஆன்மீகத் தேடல் கொண்ட பயணம். முதல் காட்சியே இது வழக்கமான, பின்னணியில் சிதாரோ வீணையோ ஒலிக்க சூர்ய உதயம்-அஸ்தமனம் கிளிஷேக்களுடன் தொடங்கி கோவில் சிற்பங்கள் பக்தகோடிகளின் பரவச முகங்களுடன் வரும் ஆன்மீக ஆவணப்படம் இல்லை என்பதை உணர்த்தியது. சுவாமி நாராயனாக நடித்த அந்த சிறுவன் நல்ல தேர்வு. மழை பெய்த இரவின் பின்னணியில்  பதினெட்டாம் நூற்றாண்டு இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தை அவ்வளவு பெரிய திரையில் பார்க்கும்போது நம்முள் பின்னோக்கிய ஒரு காலப்பயணம் தொடங்குவது உண்மை. அந்தக் காட்சியில் அந்த சிறு வீட்டின் செட், ஒளியமைப்பு எல்லாமே இது வேறு வகை என்று உணர்த்தியது. வெளியில் வரும் சிறுவன் பார்வையில் அந்த பின்னிரவில் யாருக்காகவோ ரொட்டி செய்ய மாவரைக்கும் ஒரு மூதாட்டி படுகிறாள். அன்புக்குரிய அவளையும் பிரிந்து ஆன்மீக சஞ்சாரத்தில் நீந்த முடிவெடுக்கும் சிறுவன் இதழோரம் தெய்வீகப் புன்னைகையுடன் அங்கிருந்து நகர்கிறான். காட்சியில் அந்த மூதாட்டியின் வீட்டில் மட்டும் வெளிச்சம். சில  நூற்றாண்டுகள் பின்னே உள்ள அந்த நீண்ட தெருவில் உள்ள வீடுகள் சற்று முன் பெய்த மழையால் நனைந்து வெளிறிய பழுப்பு நிறத்தில் உறைந்திருக்க, சிறுவன் தேங்கியிருக்கும் மழை நீர் துளிகள் தெறிக்க அதில் காலடி எடுத்து வைத்து தன் பயணத்தைத் துவங்கும் அந்தக் காட்சி அதியற்புதமானது.

பிறகு அடர்ந்த காடுகள், புரண்டோடும் காட்டாறுகள், சிலிர்க்கவைக்கும் உயரம் கொண்ட பணி படர்ந்த மலைகளில் வெறும் காலுடன் பயணிக்கும் அந்த சிறுவனின் பயணத்தில் நாமும் பங்கேற்கிறோம். ஆற்றில் கால் வைக்கும் அவனை ஆற்றின் நீரோட்டம்  அப்படியே இழுத்து செல்ல, பின்னணியில் திகிலூட்டும் இசை ஒலிக்க சிறுவன் ஆற்றுடன் பயணித்து அதைக் கடக்கிறான். நமக்கு மனம் பதைக்கிறது. அத்தனை தத்ரூபம். தொடர்ந்து மலைகளின் மீது அடர்ந்து செழித்திருக்கும் கரும்பச்சை இலைகள் கொண்ட மரங்களும் ஈர மண்ணும் செடி கொடிகளும் அவன் பயணத்துக்கான பாதையாகின்றன. வெள்ளை வெளேரென்ற இமையமலைப் பனிச் சூழலில் அத்தனை உயரமாக பரந்து படர்ந்திருக்கும் அந்த பிரமாண்டத்தில் ஒரு சிறு எறும்பு போல் அவன் நடக்க நீலவானத்தின் பேரமைதியும் சூரியக் கதிரில் வெளிரும் மேகங்களும் அந்த மெகா திரையில் விரிய ..அந்த அனுபவம் ஆஹா!

சிறுவன் ஒரு கிராமத்துக்கு வெளியே கிராமத்து அரண்சுவர் இருக்கும் இடத்தில அமர்ந்திருக்க அங்குள்ள மடத்தின் தலைமை பூசாரி அவன் அங்கு அமர்ந்திருப்பது ஆபத்து என்று சொல்லி உள்ளே அழைக்கிறார். இரவில் அங்கு ஒரு சிங்கம் வருமென்றும் அது அவனைக் கொன்று விடும் என்று கூறி அவனை கிராமத்துக்குள் அழைத்தாலும் சிறுவன் தெய்வீகப் புன்னகையுடன் மறுத்து விடுகிறான். தனக்கு அந்த ஜீவனைக் கண்டு பயமேதுமில்லை என்று அவன் சொல்ல வேறு வழியின்றி சங்கடத்துடன் அந்தப் பெரியவர் சென்று விடுகிறார். மெல்லப் பரவும் இருள் அந்த கிராமத்தை சூழத் தொடங்க கிராமத்து மக்கள் பதட்டத்துடன் தங்கள் குழந்தைகள் கால்நடைகளுடன் தங்கள் வீடுகள் நோக்கி விரைகிறார்கள். இரவில் சிறுவன் அமர்ந்திருக்கும் மரத்தடிக்கு எதிரே இருக்கும் அடர்ந்த புதர்களின் உள்ளே இருந்து ஒரு சிங்கம் வருகிறது. சிங்கம் என்றால் பல்பிடுங்கப்பட்டு கட்டிப் போட்டிருப்பதால் தைரியமாக அதை புரட்டி எடுக்கும் எம்.ஜியார் காட்சி பாணி கிழச் சிங்கம் அல்ல. அத்தனை உயரத்துடன், அலையாகத் திமிரும் அடர்ந்த சிகையும் பெரிய உடலும் கொண்ட அசல் சிங்கம். அது எழுப்பிய சத்தத்தில் இங்கே அரங்கில் குழந்தைகள் அலறின. பெரியவர்களுக்கே கொஞ்சம் பீதி ஏற்பட்டிருக்கும். உள்ளே இருந்து பதைப்புடன் அந்தப் பெரியவர் பார்த்துக்கொண்டிருக்க ஆன்மீகப் பேரொளி சிந்தும் புன்னகையுடன் அமர்ந்திருக்கும் அந்த சிறுவன் முன் மண்டியிடுகிறது அந்த கம்பீர விலங்கு. சற்று நேரத்தில் அவன் காலடியிலேயே சுகமாக உறங்கவும் செய்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும் பெரியவருக்குள் ஏற்படும் சிலிர்ப்பு நமக்கும் தொற்றுகிறது. இது போன்ற 'கதைகளில்' எத்தனை உண்மை இருக்கிறது என்பது இங்கு பெரிதல்ல. அந்தக் கதைகள் தரும் ஒரு mysterious உணர்வை நம் உள்மனது எப்போதும் ரசிக்கும். அதைக் காட்சிப்படுத்திய விதம். அந்த சூழல் அந்த சத்தம் அமைதி எல்லாமே இந்த படம் எடுத்தவர்கள் அனுபவசாலிகள். அதுவும் நம்மூர் ஆட்கள் அல்ல என்று உணர்த்தின . இது போல் பல காட்சிகள் உள்ளன இந்த படத்தில்.

சுமார் 20 நிமிடம் ஓடும் அந்த ஆவணப் படத்தின் தரம் உணமையை சொன்னால் நான் பார்த்த எந்த மெகா பட்ஜெட் திரைப்படங்களை விடவும் பல மடங்கு அதிகம். நான் எதிர்பார்த்தது போலவே படம் Keith Melton என்ற இயக்குனர் படத்தை இயக்கியிருக்கிறார். ஆவணப்படங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு பெருங்குழு படத்தில் பணியாற்றியிருக்கிறது. Keith Melton பல 70 mm மற்றும் ஐ- மேக்ஸ் படங்கள் எடுத்த அனுபவம் உள்ளவர். இந்தப் படத்துக்காக நிச்சயம் பெருந்தொகை செலவாகி இருக்கும் என்று நினைக்கிறேன். நம்மூரில் பிரமாண்டம் என்று சொல்லி ஹோட்டல் வரவேற்பறையை நாயகனின் வீடாய் காட்டும் ஹை-டெக் இயக்குனர்களெல்லாம் இந்தப் படத்தைப் பார்த்தால் வெட்கித் தலைகுனிவார்கள். தரத்தில் அத்தனை உயரத்தில் இருக்கிறது படம்.

நான் முன்பே சொன்னபடி படத்தின் கருத்து, கதை இவை என்னை பெரிதாக பாதிக்காவிட்டாலும் அதன் தரம் என்னை பரவசப்படுத்தியது உண்மை.  இத்தனை குறைந்த கால அளவு கொண்ட ஒரு படத்தில் எவற்றைக் காட்சிப் படுத்தினால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று யோசித்து, சிறுபிள்ளைத்தனம் இல்லாத காட்சியமைப்புகளால் திரைக்கதைக்கு வலுசேர்த்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். டெல்லியில் உள்ள அக்ஷர்தாமில் தான் இந்தப் படம் திரையிடப்படுகிறதா இல்லை மற்ற இடங்களில் உள்ள அக்ஷர்தாமிலும் இப்படம் திரையிடப் படுகிறதா என்று தெரியவில்லை. ஒரு சினிமா ரசிகனாக சக சினிமா ரசிகர்களிடம் நான் சொல்வது இது தான். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை தவற விடாதீர்கள்.

திரையரங்கில் அமர்ந்தவுடன் பின்னால் அமர்ந்திருந்த ஒரு வடக்கத்தி குடுமபத்தின் குழந்தை ஒன்று திரையைப்  பார்த்த பிரமிப்பில் சொன்னது. "மம்மி ...கித்னீ படீ  டி.வி. ஹே!" (எத்தனை பெரிய டிவி!)

Thursday, September 6, 2012

பொன்வசந்தம் நிஜமா?

தொன்னுத்தி ரெண்டில் சிம்பனி செய்ய ராஜா வேட்டி குர்தா அங்க வஸ்திரங்களுடன்  லண்டன் சென்றிருந்த  நாட்களுக்கும் நீதானே என் பொன்வசந்தம் ரெக்கார்டிங்குக்காக கருப்பு கோட்டெல்லாம் போட்டு  சென்றிருந்த நாட்களுக்கும் இடையில் சுமார் இருபதாண்டுகள் ஓட்டம் இருக்கிறது. இந்தக் கால இடைவெளியில் ரஹ்மான் நுழைந்து வளர்ந்து அமைத்த ராஜ்ஜியம் கூட முடிந்து யுவன்ஷங்கர், ஹாரிஸ் காலம் கூட பழசாகி ஜி .வி.பிரகாஷ்குமார், சந்தோஷ் நாயணன் வரைக்கும் வந்து விட்டது.

திரைத்துறையில் ஒரு காலத்தில் ராஜா ராஜா என்று அலைந்து திரிந்த  பாலா, தங்கர்பச்சான் கும்பல் கூட அவரை விட்டு விட்டு வேறு இசையமைப்பாளர்கள் பக்கம் போய் விட்ட நிலையில், ஹாரிஸ் - ரஹ்மான் கூட்டணிகளில்  ஹைடெக் இசைக் காவியங்கள் தந்த கவுதம் மேனன் ராஜாவை வைத்து படம் பண்ணப் போவதாக வந்த செய்திகளே ஆச்சர்யப்படுத்தின. ஒரு இயக்குனராக சில நவீன தொழில்நுட்பங்களை தமிழுக்கு கொண்டு வந்தவர் என்பதைத் தாண்டி அவர் மீது பெரிய கலை மதிப்பீடு எவருக்கும் இல்லை என்றாலும் இந்த புதுக் கூட்டணி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது உண்மை.

நாளுக்கொரு செய்தி. சமூக வலைத் தளங்களில் டீசர் என்ற பெயரில் மைக்ரோ செகண்டுகளில் இசைத் துண்டுகள் என்று படத்தின் இசை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்ததில் கவுதம் மேனனுக்கு நிச்சயம் வெற்றி தான். பாடல் வெளியீட்டிலும் கூட ஹங்கேரி இசைக் குழுவை இறக்குமதி செய்து மூத்த இயக்குனர்களை வைத்து ராஜாவுக்கு பெரிய மரியாதையும் செய்தார். மகிழ்ச்சி.

என்ன சொல்லி விற்றாலும் ப்ராடக்ட் எப்படி இருக்கிறது என்று யூசர் பார்ப்பானே! நான் இசை தெரியாத எண்டு யூசர் என்பதால் பாடல்களைப் பற்றி ஒரு சினிமா இசை ரசிகனாகவே என் கருத்தை சொல்கிறேன்.ராஜா ரசிகர்களைப் பொறுத்தவரை அவரது பொற்கால இசையை நவீனத் தொழில்நுட்பங்களுடன் தந்திருப்பார் அல்லது இதுவரை அவரிடமிருந்து கேட்டிராத புது வகை பொழியும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள். நானும் அப்படியே.

கேட்டவுடன் பிடிப்பவை என்றால் காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் பாடலும், முதல் முறை பார்த்த ஞாபகம் பாடலும் தான். யுவனுக்கு ரெண்டு பாடல் கொடுத்ததன் மூலம் இந்திய வாரிசு அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களின் கெட்ட லிஸ்டில் ராஜாவும் சேர்ந்து விட்டாரே என்ற வருத்தம் தான் வந்தது . யுவனுக்கெல்லாம் பாடவே வராது என்பது யுனிவெர்சல் ட்ரூத். மாபெரும் இசைக் கலைஞனான ராஜாவுக்கு அது தெரியவே இல்லையா என்ன? என்ன மோசமான பாடும் முறை யுவனிடம்.. கொஞ்சம் செருமி விட்டு நோட்சைப் பார்த்து பாடு என்று ராஜா அவரை சொல்லவே இல்லையா? அருமையான பாடகரான கார்திக்குக்கே எல்லா பாடலையும் தந்திருக்கலாம். என்றாலும் பெரிய மாற்றம் இருந்திருக்காது தான். முழுக்க முழுக்க மேற்கத்திய முறைப்படி இசை தந்திருந்தாலும் இசையில் சுவாரஸ்யம் ரொம்பக் கம்மி. மலையாளப் படமான குரு மற்றும் நாசரின் தேவதை பாடல்களின் சாயல் நிறையவே தெரிகிறது. இதே இசைக் கருவிகளை வைத்து தான் இளம்பனி துளி விழும் நேரம், புத்தம் புது காலை முதல் ஒரு பூங்காவனம் என்று புதுமைகளின் குவியலைக் கொட்டி நம் காதுகளுக்கு இசை இனிப்புகளை ஊட்டினார் ராஜா..இதிலோ...என்ன சொல்ல?

ராஜாவிடம் தற்போது இருக்கும் மிகப் பெரிய குறை நல்ல பாடலாசிரியர் இல்லாதது தான். நா. முத்துக்குமார் கொஞ்சம் கவித்துவமாக யோசித்து எழுதி இருந்தாலும் 'தம்பி சிம்பிளா குடு..என்னைய மாதிரி பாமரனுக்கும் புரியணும்' என்று தடுத்திருப்பாரோ ராஜா? கண்கள் உள்ள காரணம்....உன்னைப் பார்க்கத் தானே என்று கேட்டுப் புளித்த வரிகள் வேறு. புடிக்கல மாமு ..நெஜமாவே புடிக்கல மாமு. அப்படி ஒரு பாடலை ஏன் வைக்க வேண்டும் என்று தெரியவில்லை.

ஒரு வேளை படத்துடன் பார்த்தால் பிடிக்குமோ என்று கூட தோன்றுகிறது.. இன்னும் பல முறை கேட்டால் ஒரு வேளை பிடிக்கலாமோ என்று சுரேஷ்கண்ணன் போலவே நானும் யோசிக்கிறேன். ஒன்றுமே இல்லை..ஜப்பானில் கல்யாண ராமனில் 'சின்னப் பூ சின்னப் பூ' என்றொரு பாடல் இருக்கிறது. அதன் முகப்பு இசையை ஒரு முறை கேளுங்கள். அந்த வசந்தம் இனி வருமா என்றிருக்கிறது.

ராஜா..... நீங்கள் தான் எங்கள் பொன் வசந்தம்!!! உங்களுக்கு அது தெரியும் தானே?

Tuesday, September 4, 2012

நான் அறிந்த R.P.ராஜநாயஹம்

தற்போது டெல்லியில் வேலைபார்க்கும் என் தம்பி முன்பு திருப்பூரில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைபார்க்கும்போது தன்னோடு ஒரு எழுத்தாளர் வேலைபார்க்கிறார் என்று சொல்வான். மற்றவர்களிடம் அவ்வளவாக பேசாத அவர் அவனுடன் மட்டும் மனம் விட்டுப் பேசுவாராம். பிறகு அவன் டெல்லி வந்த பின் அவருடன் தொலைபேசியில்  பேசிக்கொண்டிருந்தான். வாங்கிப் பேசினால் அவர் தான் ஆர்.பி.ராஜநாயகம்.

எழுத்தாளர் என்ற தோரணை சிறிதும் இல்லாத சாதாரண மனிதன் போன்ற பேச்சு. அந்த குரலில் அத்தனை நேசம் இருந்தது. அவரது வலைப்பூவை முன்பு தொடர்ந்து படித்து வந்திருந்தாலும் அவருடன் பேசிய அந்த காலகட்டத்தில் - இரண்டு வருடங்களுக்கு முன்னர்- அவர் தொடர்ந்து எழுத முடியாத அளவுக்கு வேலைப் பளுவில் இருப்பதாகக் குறிப்பிட்டார். அலுவலகத்தில் கம்ப்யூட்டர் இருந்தாலும் வலைப்பூவுக்காக எழுதும் அளவுக்கு நேரம் அவருக்கு  ஒத்துழைக்கவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

அப்போது என் வலைப்பூவில் அவரது வலைப்பூவின் இணைப்பை நான் வாசிக்கும் தளங்கள் பட்டியலில் இட்டேன். எனது ஆதர்ச எழுத்தாளர் ஒருவருக்கும் இவருக்கும் ஆகாது என்று எனக்கு நன்றாகத் தெரிந்தும், அதையெல்லாம் அவர் பொருட்படுத்த மாட்டார் என்று நினைத்து அதை செய்தேன். அதற்குப் பிறகு என் ஆதர்ச எழுத்தாளர் என்னை முற்றிலும் புறக்கணித்து விட்டார். தற்போது தொடர்ந்து வலைப்பூவில் எழுதி வருகிறார் ராஜநாயகம். இலக்கியம் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நல்ல பரிச்சயமும் ஞானமும் உள்ளவர். சில படங்களில் நடித்து அந்தக் காட்சிகள் வெளிவராத விஷயங்களையும் பதிவு செய்திருக்கிறார். பல நடிகர்கள், துணை நடிகர்களுடன் நேரில் பழகியிருப்பதால் அவரது சினிமா பற்றிய பதிவுகளில் அத்தனை இயல்பும் அழகும் இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் அவரிடம் பேசினேன். தற்போது ஒரு அரசு சாரா அமைப்பு ஒன்றில் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர் இப்போது முன்பை விடவும் குறைந்த நேரமே எழுதக் கிடைப்பதாகவும் இருந்தாலும் கிடைக்கும் நேரத்தில் சில பதிவுகளையும் மீள் பதிவுகளையும் பதிவேற்றம் செய்து வருவதாகவும்  கூறினார்.

"உங்க குரல் அப்படியே சிவா (என் தம்பி) மாதிரியே இருக்கு.. அதனாலேயே கூட உங்க கிட்டே அதிக நேரம் பேசுறேன். இல்லேன்னா எனக்கு இருக்கும் வேலைப் பளுவில் யார்க்கிட்டேயும் பேசக் கூட முடியாது " என்றார். களப்பணி ஒன்றுக்காக மற்றவர்களுடன் வந்திருந்த  அவர் என்னிடம் பேசுவதற்காக ஒரு மரநிழலில் ஒதுங்கி நிற்பதாக சொன்னார். அந்தக் குரலும் காட்சியும் என்னுள் ஓடிக்கொண்டிருந்தது.தொடர்ந்து சினிமா, இலக்கியம் என்று பேசிக்கொண்டே இருந்தார். அவரது ஆங்கில வீச்சு அற்புதமாக இருக்கும். "எப்படி ஸார் இப்படி ஒரு லாங்குவேஜ் பிடிச்சீங்க?" என்றதற்கு அவர் சொன்ன பதில் " நான் எம்.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர்ங்க"!

இவருக்கு மட்டும் நேரம் கிடைத்தால் எத்தனை விஷயங்களை நாம் அறிந்துகொள்ளலாம் என்று தோன்றியது.


http://rprajanayahem.blogspot.in/


Monday, September 3, 2012

அபத்தக் குவியல்கள்

தமிழ்ப் படங்களில் அபத்தங்கள் ஆரம்ப காலத்திலிருந்தே அதிகம் என்பதற்கு யதேச்சையாக சில தினங்களுக்கு முன் டி.வியில் கண்ட திரைக்காட்சிகள் உதாரணம். ஒரு எம்ஜியார் படம். நம்பியார் தலைமையில் ஆறேழு பேர் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ஒருவனைத் துரத்துகிறார்கள். எதிர்த்தாற்போல் எம்ஜியார். வந்தவர்கள் அத்தனை துப்பாக்கிகளையும் விட்டு விட்டு கத்தியால் அந்த மனிதன் முதுகில் குத்துகிறார்கள். அவன் கையில் இருக்கும் ரகசியங்கள் அடங்கிய பெட்டியை பறிக்குமுன் எம்ஜியார் சின்னூண்டு ரிவால்வரை உயர்த்தி வானத்தை நோக்கி சுடுகிறார். வில்லன் கூட்டம் துண்டக்காணோம் துணியக் காணோம் என்று ஓடிவிடுகிறது. இத்தனைக்கும் அனைவரிடமும் இருக்கும்  துப்பாக்கி அவர்களை விட உயரம். என்னடா இது கொடுமை என்று சேனலை திருப்பினால் அர்ஜுன் நடித்த தாயம் ஒண்ணு படம். அவ்வளவு செலவு பண்ணி துப்பாக்கிகள், ஹீரோயின்கள், அவர்கள் அழகிய உடல்கள் மேல் சூட்கேஸ் துணிகளால் தைக்கப்பட்ட போராளிச் சீருடைகள், கப்பல்கள்,கடல்கள்...என்று தயாரிப்பாளர் கந்து வட்டிக்கு கடன்வாங்கிக் கொடுத்தக் காசில்  படமெடுத்துப் பழகி இருக்கிறார்கள் போலும். ஆக்ஷன் கிங் அர்ஜுன் கப்பலில் பயணிக்க ஏதோ சோகத்தில் ஒரு பாட்டுப்பாட (மனதிலே ஒரு பாட்டு- என்ன மென்மையான பாடல்!) கப்பலின் வேறொரு தளத்தில் சாத்தப்பட்ட வேறொரு அறையில் இருந்து சுசிலா குரலில் எட்டு வயசுக் குட்டிப்பெண் ஒன்று பதிலுக்குப் பாட...தேடி வந்தக் குழந்தை கிடைத்து விட்டது என்று அர்ஜுன் போக அங்கே வில்லன் என்ட்ரி. யாரடா அது என்று பார்த்தால் லிவிங்க்ஸ்டன். ஸ்நேக் பாபு வடிவேலு ஹேர் ஸ்டைலில் அவரைப் பார்க்கவே சிரிப்பு தாளவில்லை. தடார்புடாரென்று சண்டை. கடைசியில் போலீஸ் வந்து ரெண்டு ரவுண்டு லிவிங்க்ஸ்டன் நெஞ்சைபார்த்து சுட குங்குமம் கலந்த தண்ணீர் பீய்ச்சியடித்து லிவிங்க்ஸ்டன் சரிகிறார். இடையில் குழந்தையைக் காப்பாற்ற ஓடி வரும்  மாதுரி உடலில் பல குண்டுகளை செலுத்தி விடுகிறார் லிவிங்க்ஸ்டன் ("எங்க பாதர் மாதர் எல்லாமே அங்க தானே லிவிங்க்ஸ்டன்" - ஸ்டீவ் வாவ் வடிவேலு!)

அட முடிந்து விட்டதே என்று பார்த்தால் திடீரென்று குண்டடிப்பட்ட லிவிங்க்ஸ்டன் எதிரே துப்பாக்கியுடன். பின்னர் அவர் என்ன நினைத்தாரோ தானே நெஞ்சைப் பிடித்துக் கீழே விழுந்து செத்துப் போகிறார். திரும்பவும் மனதிலே ஒரு பாட்டு. எனக்கென்னவோ அதற்க்கப்புறம் இளையராஜா அர்ஜுன் படங்களுக்கு இசை அமைக்காததற்கு தாயம் ஒண்ணு தான் காரணம் என்று தோன்றுகிறது.