Saturday, August 28, 2010

ஒரு கடிதம்

அன்புள்ள சந்திரமோகன்

உங்கள் சொல்வனம் கட்டுரைகளைப் படித்து விட்டு தொடர்ந்து இந்த ப்ளாகிற்கு வந்தேன். ஒரு நல்ல ரசனையுள்ள பதிவரை அறிமுகப் படுத்தியதற்கு சொல்வனத்திற்கு நன்றி.

உங்களது தற்பொழுதைய கல்மாடி கட்டுரையைப் போன்ற முழுமையான உண்மைகள் கொண்ட கட்டுரைகள் நம் தமிழ் பத்திரிகைகளில் வருவது இல்லை. உங்கள் சினிமா விமர்சனங்களும் என் ரசனையை முழுமையாக பிரதிபலிப்பவையே. ஒரு நண்பரிடம் தமிழில் நல்ல நகைச்சுவைப் படங்கள் வெகு அரிதாகவே வருகின்றன என்று சொன்ன பொழுது “என்ன அப்படிச் சொல்லிப் போட்டீங்க? உடனே தமிழ் படமும், இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கமும்” பாருங்க என்றார். அவர் மட்டும் அல்ல பொதுவாகவே எந்தவொரு சராசரி தமிழருடன் பேசினாலும் இப்படித்தான் சொல்கிறார்கள். ஏற்கனவே இம்சை அரசனைப் பாதி பார்த்து விட்டு கடும் எரிச்சலில் இருந்ததினால் எச்சரிக்கையாக அவர் சொன்ன எந்த படங்களின் அருகிலேயே போகக் கூடாது என்று முடிவு செய்தேன். பருத்தி வீரன், சு புரம், களவாணி என்று இவர்களது சினிமாப் புரட்சிக்கு எல்லையே இல்லை. களவாணியில் ஒரே ஆறுதல் அந்த லும்பன் வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு தண்ணி அடிக்கிறான் கைலி தஞ்சாவூர் பக்கம் கிடையாதாம் ஆகவே ஆத்தெண்ட்டிக் தஞ்சாவூர் மூவி :) சமீபத்தில் ஒரு வித்தியாசமான தமிழ் பட இயக்குனருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது “தமிழில் சமீப காலத்தில் வேலைக்குப் போகும் இளைஞனைக் காட்டி எத்தனை படங்கள் வந்துள்ளன?” என்று கேட்டார். யோசித்ததில் ஒன்றிரண்டு தென்பட்டது. அவ்வளவுதான். தமிழின் ட்ரெண்டே வேலை வெட்டி இல்லாமல் பீடி குடித்து தண்ணி அடித்து காதலுக்காக அல்லது காதலர்களைச் சேர்த்து வைக்க அல்லது ரவுடிகளுக்காக அலையும் விடலை லும்பன்கள்தான். இவர்கள் மட்டும்தான் தமிழ் நாடா? நம் சம காலச் சமூகத்தின் பிரச்சினைகள் இவை மட்டும் தானா அல்லது இவர்கள்தான் நம் சமூகத்தின் கண்ணாடி பிம்பங்களா? காதலும், அருவாளும், copyயும் இல்லாமல் வந்த உருப்படியான தமிழ் படங்கள் மொத்தம் ஒரு பத்து கூடத் தேறாது. 75 வருடங்களாக காதலை மட்டும் சொல்லி இன்னும் தீர்ந்தபாடில்லை. இருந்தும் ஒரு உன்னதமான காதல் சினிமாவும் வந்த பாடில்லை. இப்பொழுது காதலுடன் கூடவே தொட்டுக் கொள்ள அருவாளும் வேண்டி உள்ளது, இல்லாவிட்டால் இ கோ மு சி போன்ற அசட்டுப் படைப்புக்கள். நம் மன அமைதிக்கு இவற்றில் இருந்து தள்ளி நிற்பதே நல்லது. பருத்தி வீரனையும், சு புரத்தையும், நாடோடியையும், களவாணியையும், வி தா வருவாயாவையும் நாம் இன்று விமர்சித்தால் தமிழ் பண்பாட்டின் எதிரிகளாக காலத்துடன் ஒட்டாத் பெருசுகளாக அடையாளம் காணப் பட்டு இகழப் படுகிறோம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையைச் சொல்ல உங்களைப் போல ஒருவர் இருப்பது கண்டு ஒரு திருப்தி. தொடருங்கள்

அன்புடன்
ச.திருமலைராஜன்

..........


மிக்க நன்றி ராஜன்,
உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும் தொடர்ந்து எழுதுவதற்கான உத்வேகத்தையும் தருகின்றன. நானும் உங்கள் கட்டுரைகளை சொல்வனத்திலும் மற்ற இணைய பக்கங்களிலும் படித்திருக்கிறேன். விஷய ஞானமும் அதை வீரியம் குறையாமல் அதே சமயம் மிரட்டாமலும் விஷயங்களை எங்களுக்கு தரும் முக்கிய எழுத்தாளரான நீங்கள் என்னை கவனித்திருப்பதற்கு நான் நண்பர் சேதுபதி அருணாசலத்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். என் கட்டுரைகளை அவர் சொல்வனத்தில் வெளியிட்ட பிறகு தான் என்னை நிறைய வாசகர்களும் உங்களை போன்ற எழுத்தாளர்களும் கவனித்து இருக்கிறார்கள்.

நீங்கள் மிக சரியாக சொன்னது போல் இங்கு பெரும் அளவில் வெற்றி பெரும் படங்களை பற்றி நாம் விமர்சனம் செய்தால் 'பினாத்தல் பெருசுகள்' என்று பெயர் பெற்று விடுகிறோம். எனது களவாணி பற்றிய கட்டுரையை படித்து விட்டு ஜீரணம் செய்ய முடியாத 'உயர் ரசனை' குழு (துரதிருஷ்ட வசமாக நல்ல உலக சினிமா பற்றி தெரிந்த சிலரும் இதில் அடக்கம்.) என்னை தமிழகத்தின் 'உண்மை நிலை தெரியாத' ஒருவன் என்று கிண்டல் செய்ததை அறிந்தேன். சிலர் என்னிடம் அந்த படத்தை பற்றி விவாதமும் செய்கிறார்கள். காதலியை மணக்கப்போகும் மாப்பிள்ளையை கடத்தி வைத்து கொண்டு அவள் அண்ணனிடம் ' இப்போ என்ன பண்ணுவே உன் தங்கச்சி கழுத்தில் நீயே தாலி கட்டுவியா..?' என்று கேட்கும் 'பண்புள்ள' ஒருவனை நம் தமிழ் சினிமா கொண்டாடுவதுடன் அதை நம் ரசிகர்கள் பார்த்து இந்த மாதிரி படம் வந்து எத்தனை நாள் ஆகிறது என்று சிலாகிக்கிறார்கள். இந்த படம் மட்டும் இல்லை. விருந்தாளி , பெருச்சாளி என்று யதார்த்த படங்களின் வருகை பெருத்துக்கொண்டே போகிறது. இவ்வளவு மோசமான ரசனையை நான் போஜ்புரி ரசிகர்களிடம் கூட பார்த்ததில்லை. ( பீகார் போன்ற மாநிலங்களில் தயாராகும் படங்களை பார்க்கும் துரதிருஷ்டம் உங்களுக்கு நேர வேண்டாம், நான் முன்பு வேலை பார்த்த இடத்தில அந்த மாநில மக்கள் பார்த்து ரசிக்க தயாராகும் படங்களின் எடிட்டிங் வேலை நடக்கும்..) ரசனை மேம்படாமல் படைப்பு மெருகு அடையாது.

மேலும் நம் elite இயக்குனர்களான மணிரத்னம் , கௌதம் மேனன் போன்ற மேதைகள் எடுக்கும் படங்களில் வரும் கதாபாத்திரங்களின் அலட்டலை சகிக்க முடியாது. மணியின் படங்களில் இந்த எரிச்சலூட்டும் elite lumban களை பார்க்க முடியும். நம் ரசிகர்களுக்கு இந்த படங்களை பிரித்து பார்க்கும் பக்குவமும் இருப்பதில்லை. பெரும்பான்மையான பேர் சினிமாவை வெறும் பொழுதுபோக்கு என்று தான் நினைக்கிறார்கள். இந்த படங்களின் அபத்தங்களை பற்றி பேசினால் 'எங்களுக்கு இது தான் வேலையா..போனமா பாத்தோமான்னு இல்லாம அத போட்டு நோண்ட எங்களுக்கு எது நேரம் என்று கேட்டு விட்டு' அன்றாட வேலை பார்த்து அடுத்த அபத்த படத்துக்கு தயாராகி விடுவார்கள்.

பாப்போம். ரசனையில் ஏதேனும் மற்றம் நிகழும்படியான உண்மை படங்கள் தமிழில் வருமா என்று..

மிக முக்கியமான கருத்து என்பதால் உங்கள் பின்னூட்டத்தை கடிதமாக பிரசுரித்திருக்கிறேன். கருத்துக்கும் கடிதத்துக்கும் நன்றி ராஜன்..

Friday, August 27, 2010

The Expendables ஒரு பார்வை



நான் முதன்முதலில் பார்த்த ஆங்கில படம் ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' தான். செல்லதுரை சாரும் சாந்தி டீச்சரும் வழிநடத்த பள்ளி மாணவனாய் சக 'சினிமா ஆர்வலர்களோடு' சென்று பார்த்து விட்டு அம்மாவிடம் வந்து காந்தி கதை சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. என் அண்ணனுக்கு ஆங்கில படங்களில் பெரும் விருப்பம் இருந்தது. தன நண்பர்களுடன் அந்த படங்களை பற்றி பேசிக்கொள்வதை கேட்டு நானும் பெரிய ஆளாகி ஆங்கில படங்களை பார்த்து அது பற்றி என் நண்பர்களுடன் விவாதிக்க வேண்டும் என்று 'சபதம்' எடுத்துக்கொண்டேன். பிறகு வந்தது ஜாக்கி சானின் 'The Protector'. பள்ளி நாட்களில் எல்லோருக்கும் போல் எனக்கும் பிடித்தமானவர் ஜாக்கி சான். அவரது படங்களை பார்த்து விட்டு வெளியில் வரும்போது எவனாவது சண்டைக்கு வரமாட்டானா என்று கை கால் துறுதுறுக்கும். அவை சீனா டப்பிங் ஆங்கில படங்கள் என்று தான் தெரியும். அவர் Honk-Kong படவுலகை சார்ந்தவர் என்றெல்லாம் அப்போது தெரியாது. அந்த படம் அவரது ஹாலிவுட் முயற்சி என்றெல்லாம் பின்னால் தான் தெரியவந்தது. படத்தில் நிறைய சண்டை காட்சிகள். என்னுடன் படித்த ஒரு பையன் கொஞ்சம் மங்கோலிய சாயலில் இருப்பான். அவனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். நேரடி ஜாகிசானாக 'காட்சி தந்த' அவனுக்கு எங்கள் குழுவில் ஒரு மரியாதை கிடைத்தது.

நேரடி ஹாலிவுட் ஆக்ஷன் படம் என்று நான் பார்த்தது, Hands of Steel என்றொரு சைபார்க் படம். அருமையான சண்டைகள் நிறைந்த படம் (அப்படி போஸ்டரில் எழுதும் பொற்காலம் ஒன்று இருந்தது!) . படம் முடிந்து வரும்போது அதை பற்றி சக சினிமா ஆர்வலரான என் தம்பியுடன் பேசிக்கொண்டு (சைக்கிளின் முன்னால் பாரில் தம்பியும் கேரியரில் நானும்,) வந்ததை என் அண்ணன் பொறுமையாய் கேட்டு வந்தது இன்னும் நினைவிருக்கிறது. அதற்கு பிறகு என் அண்ணன் அறிமுகம் செய்த மறக்க முடியாத ஹீரோ Silvester Stallone. அந்த மாதிரி ஒரு நடிகனை அதற்கு முன் பார்த்ததில்லை..சாதரணமாக பார்த்தால் சாமான்யன் மாதிரியும் சட்டையை கழட்டி விட்டு பார்த்தால் பயில்வான் மாதிரியும் தெரிந்த ஸ்டாலனை என் அபிமான நடிகராக ( கமலுக்கு அடுத்த இடத்தில் தான்..!) ஆராதிக்க ஆரம்பித்தேன். First blood நான் பார்த்த முதல் ஸ்டாலன் படம். அப்போதெல்லாம் ஒரு பேச்சு இருக்கும். ஜாக்கி சான் படங்கள் என்றால் ஆரம்பம் முதல் முடியும் வரை சண்டை இருக்கும். கொடுத்த காசு நிறைந்து விடும். நேரடி ஆங்கில படங்களில் முக்காலே மூணு வீசம் பேசிக்கொண்டும் (சில சமயம் முத்தம் கொடுத்துக்கொண்டும்) இருப்பார்கள். கடைசி அரைமணி நேரத்தில் அடித்து துவம்சம் செய்து விடுவார்கள். அவர்கள் வெடிக்கும் குண்டுகளில் தியேட்டர் தெறித்து விடுமோ என்று பயந்த காலங்கள் உண்டு. படத்தில் ஸ்டாலன் ட்ரக்கை ஓட்டிக்கொண்டு ஒரு காரை மோதி அதை ரெண்டாய் பிளக்கும் காட்சியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

ஆனால் அதன் sequel ஆக எடுக்கப்பட்ட Rambo படங்கள் கிட்டத்தட்ட அமெரிக்க அரசியல் பிரசார படங்கள் என்று பின்னால் தெரிய வந்த போது அந்த படங்களின் மீது ஒரு வெறுப்பு வந்தது என்னவோ உண்மை தான். லட்ச கணக்கான பேரை அமெரிக்கா கொன்று குவித்த வியட்நாம் போரில் கைதான அமெரிக்க கைதிகளை காப்பாற்றும் மாவீரனாக வரும் ராம்போவின் திரைக்கதை எழுதியது அவதார் மூலம் பூர்வ குடி மக்களின் நலன் காக்க போராடும் ஜேம்ஸ் கேமரூன் என்பது ஆச்சர்ய உண்மை..!! ஸ்டாலனே தனது பெரும்பான்மையான படங்களின் திரைக்கதையை எழுதி விடுவார் என்பது, அவரை ஒரு ஆக்க்ஷன் ஹீரோவாக மட்டும் பார்த்து வளர்ந்தவர்களுக்கு புது தகவலாக இருக்கும். இப்படத்திலும் அவர் கேமரூனுடன் இணைந்து எழுதி இருக்கிறார். இப்படி அமெரிக்க தேசபக்தி படங்களில் நடித்திருந்தாலும் என்னால் அவரை வெறுக்கவே முடியவில்லை. சிறு வயதில் மனதில் பதியும் விஷயங்களை அவ்வளவு சீக்கிரம் வெறுத்து ஒதுக்க முடியாது. அவரது Rocky பட தொடர்கள் எனக்கு மிக பிடித்தவை. மிக சாதாரண குத்து சண்டை வீரராக இருந்து உயரும் ராக்கியின் எளிய வாழ்க்கை படத்தின் மிக பெரிய பலம். அவர் நடித்த கடைசி பிரமாண்ட படம் Cliff Hanger. அதற்கு பிறகு பெரிய எதிர்பார்ப்புடன் வந்த The Specialist இல் அவர் ஹாலிவுட் கவர்ச்சி புயல் ஷரன் ஸ்டோனுடன் 'இணைந்து' ஆக்க்ஷன் செய்தார். அமெரிக்காவில் ஓடியது போல் இங்கு பெரிதாக ஓடவில்லை. அதே போல் Desperado வில் கலக்கிய அண்டோனியோ பெண்டரசுடன் நடித்த Assassins படமும். அதில் அண்டோனியோ தான் ஸ்கோர் செய்தார்.. பிறகு அவரை அதிகம் பார்க்க முடியவில்லை. இடையில் நம் உலகநாயகனின் ' பம்மல். கே. சம்மந்தம்' படத்தை சாமர்த்தியமாக உல்டா செய்து எடுக்கப்பட்ட 'கம்பக்த் இஷ்க்' என்ற அக்ஷய் குமார் நடித்த திராபையான ஹிந்தி படத்தில் ஸ்டாலன் ஒரு காட்சியில் தோன்றுவார். அதை பார்த்த போது 'மனுஷன் இப்படி ஆகிட்டாரே ' என்று நொந்து போய் விட்டேன்.

சில மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் ஸ்டாலோன் ஒரு படம் இயக்குகிறார். அதில் பல முன்னாள் ஆக்க்ஷன் ஹீரோக்கள் , என் இன்னொரு அபிமான நடிகரான Arnold Schwarzenegger உட்பட , பலர் நடித்திருக்கிறார்கள் என்ற செய்தி படித்து சந்தோஷம் அடைந்தேன். பிறகு படம் வந்து நன்றாக ஓடிகொண்டிருக்கும் தகவலும் எனக்கு மகிழ்ச்சி தந்தது. அதற்கு காரணம் உண்டு. கடந்த பதினைந்தாண்டுகளாகவே தொழிநுட்ப புரட்சியால் பெரும் தாக்கத்துக்கு ஆளாகி இருக்கும் ஹாலிவுட் படங்களில் முந்தைய படங்களை போன்ற சிலிர்ப்பூட்டும் சண்டை காட்சிகள் அபூர்வமாகி விட்டன. எதற்கெடுத்தாலும் CG தொல்லை. இந்த படம் எண்பதுகளில் எடுக்கப்பட்டது போன்ற ஆக்ரோஷமான சண்டை படம். தவிர ஸ்டாலன், ஆர்னால்ட், ப்ருஸ் வில்லிஸ் என்ற மூன்று முக்கிய அதிரடி நாயகர்கள் ஒரே காட்சியில் தோன்றி நடித்திருக்கிறார்கள் என்ற தகவல் என்னை திரை அரங்கை நோக்கி இழுத்தது.



பல சொதப்பல்கள் இருந்தாலும், உண்மையிலேயே படத்தை எல்லோரும் பார்க்கும்படி எடுத்திருக்கிறார் ஸ்டாலன். தொடக்க காட்சியில் சோமாலிய கடல் கொள்ளையரிடம் இருந்து பணய கைதிகளை காப்பாற்றும் காட்சியில் தொடங்கும் ஆக்க்ஷன் கடைசி வரை தொடர்கிறது. ஜெட் லி, ஸ்டெதம் உட்பட அதிரடி நாயகர்கள் கடுமையாக சண்டை போடுவதோடு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து திரை அரங்கையே அதிர வைக்கிறார்கள். நிறைய காட்சியில் சிரிப்பலைகள். படத்தின் மிக பெரிய ஆச்சர்யம் இது ஒரு காதல் கதை. ஆம். ஒரு பெண் மீது கொண்ட பரிவு கலந்த காதலால் அவளையும் அவள் நாட்டு பிரஜைகளையும் அக்கிரமக்காரர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார் ஹீரோ, தன் சர்வ வல்லமை கொண்ட அணியின் துணையுடன்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றை போல் கற்பனையாக புனையப்பட்ட விலேனா என்ற ஒரு தீவில் நடக்கும் அக்கிரம ஆட்சியை வீழ்த்த அனுப்பப்படும் Expendables டீமின் தலைவரான ஸ்டாலோன் அந்த தீவின் ராணுவ ஆட்சியாளர் உண்மையில் ஒரு அமெரிக்க கும்பலால் வழி நடத்தப்படுவதையும் அதனால் அங்கு மக்களின் 'இயல்பு வாழ்க்கை' பாதிக்கப்பட்டு இருப்பதையும் நேரில் கண்டு நெஞ்சுருகுகிறார். ராணுவ வாகனத்தில் வரும் வீரர்கள், ஒரு கடை தெருவை ரணகளமாக்கி விட்டு மக்களை பயமுறுத்தி விட்டு போகும் காட்சியில் என்னையும் அறியாமல் ' இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாரும் இல்லையா' என்று (கிண்டலாக தான்!) கேட்டு விட்டு, ஸ்டாலோனின் அதிரடி சண்டை பார்க்க ஆயத்தம் ஆனேன்.



சும்மா சொல்ல கூடாது, நிஜமாகவே, சண்டையை மட்டும் எதிர்பார்த்து போன எவரையும் ஏமாற்றாமல் படம் தந்திருக்கிறார், ஸ்டாலோன். நிறைய அதிரடி நாயகர்கள் நடித்திருப்பதால் எல்லோருக்கும் முக்கியதுவம் தந்து தானும் பிரகாசித்திருக்கிறார். ஸ்டெதம் விமானத்தின் மேல் உட்கார்ந்துக்கொண்டு குண்டு மழை பொழியும் காட்சி அட்டகாசம் என்றால், டெர்ரி க்ரூஸ் ட்டம்..ட்டம் என்று கதை செவிடாக்கும் துப்பாக்கி (விமானத்தில் அமர்ந்து கொண்டு அந்த துப்பாக்கியின் பெருமை பேசும் காட்சி அட்டகாசம்..) கொண்டு எதிரிகளை தூள் தூளாக்கும் காட்சி அதிரடிபிரியர்களுக்கு அன் லிமிடெட் மீல்ஸ் தான். மார்ஷியல் ஆர்ட்ஸ் நிபுணரான ஜெட் லி யும் எந்த வித ஈகோ (ரஜினி -ரஹ்மான் அண்ட் கோ விடம் இல்லாததது ) வும் இல்லாமல் நடித்திருக்கிறார். அவரை சைஸ் 3 என்று கிண்டல் செய்யும் படத்தின் தற்காலிக வில்லனான டால்ப் லண்ட்ஜ்ரென் அவரை அடித்து கொல்லப்போகும் சமயத்தில் ஸ்டாலோனால் காப்பாற்ற பட்டாலும் , 'விட்டிருந்தால் நான் தான் ஜெயித்திருப்பேன் ' என்று ஸ்டாலோனையும் நம்மையும் புன்னகைக்க வைக்கிறார் ஜெட் லி. இடையில் தன் காதலியை அடித்த அவளது புது துணைவனை போட்டு புரட்டி எடுக்கிறார் ஸ்டெதம்..இப்படி நகைச்சுவை, காதல் , பாசம் என்ற வெற்றி பார்முலாவை சரியாக பிரயோகம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார் ஸ்டாலோன். மிக புத்திசாலிதனமாக ஸ்டாலோன் நான்கு ஐந்து லொகேஷனிலேயே படத்தை எடுத்து வணிகரீதியாக வெற்றி பெற வைத்திருக்கிறார்.



அமெரிக்க மனோபாவ கதை என்பதால், அந்த கற்பனையூர் தலைவனை சற்று சே குவேரா, காஸ்ட்ரோ கலந்த தோற்றத்தில் காட்டி இருக்கிறார்கள்.கர்ட் ரஸ்ஸல் நடித்த Escape From L.A. விலும் வில்லனை சே போலவே காட்டி பரிகசித்திருப்பார்கள். உண்மையில் கியூபாவில் அமெரிக்க அடிவருடியாக இருந்த பாடிஸ்டா நினைவு தான் வருகிறது. இவர்களே ஆள் அனுப்பி கபளீகரம் செய்து விட்டு பின்பு நல்லெண்ண அடிப்படையில் உதவும் அமெரிக்க மனப்பான்மை கொண்ட மேம்போக்கான படம் தான். இந்த படத்தில் அங்கு அட்டகாசம் செய்யும் முன்னாள் CIA ஆளான எரிக் ராபர்ட்ஸை யும் , அவனது கூட்டத்தையும் கூண்டோடு முடிக்க இந்நாள் CIA அதிகாரியான (அது பின்னால் தான் தெரிய வருகிறது..!) ஆக்க்ஷன் படவுலகின் முடி சூடா மன்னனும் அமெரிக்காவின் மோசமான கவர்னர்களில் ஒருவர் என 'பெயர் பெற்ற'வருமான ஆர்னால்ட் இன்னொரு கும்பலின் தலைவனாக வருகிறார். அவருக்கு நேரம் இல்லாததால் ஸ்டாலன்க்கு இந்த வேலையை விட்டு தருகிறார். ஒரு சர்ச்சில் இவர்கள் இருவரும் ஸ்டாலோனை சந்திக்கும் காட்சி அதிர்கிறது.. சண்டையால் அல்ல.. கட்டுக்கடங்காத சிரிப்பால். அர்னால்ட் வில்லிசிடம் ஸ்டாலோனை காட்டி ' நண்பருக்கு காட்டில் விளையாடுவது ரொம்ப பிடிக்கும்..' என்று கிண்டல் செய்ய பதிலுக்கு ஸ்டாலோன் அவரை கிண்டல் பண்ண நடந்து கொண்டே திரும்பி மர்ம கண்களால் ஆர்னால்ட் சிரிக்கும் காட்சி அழகு.

வில்லு விஜய் ஸ்டைலில் விமானத்தில் புட்-போர்ட் அடித்து ஏறுவது.. குண்டடிபட்ட டால்ப் கடைசியில் 'குணமாகி' அணியில் இணைந்து கொள்வது , TVS 50 ஐ நிறுத்தி பால் வாங்குவது போல் விமானத்தை நிறுத்தி ஒரு நாட்டுக்குள் நுழைவது என்று 'சுற்றி இருந்தாலும்' அதை எல்லாம் இந்த எவர் கிரீன் ஹீரோக்கள் செய்யும் சாகசங்கள் தூக்கி நிறுத்தி விடுகின்றன.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது , டாட்டூ குத்தும் நண்பராக வரும் ரூர்க்கி தன்னால் காப்பாற்ற முடியாமல் போன ஒரு பெண்ணை பற்றி ஸ்டாலோனிடம் சொல்லும் காட்சி. பச்சை குத்திக்கொண்டே அதை விவரிக்கும் ரூர்க்கியின் கதையை கேட்டு ஸ்டாலோன் கண் கலங்குகிறார். முதல் தடவை தப்பித்து செல்ல சந்தர்ப்பம் இருந்தும் தன் மக்களை விட்டு வர விரும்பாத அந்த தீவு தலைவனின் மகளான சாண்ட்ராவின் நினைவு வர, திரும்பவும் அந்த தீவுக்கு சென்று அவளை மீட்கிறார்.

காதலுக்கு தான் எத்தனை வலிமை..!

Monday, August 23, 2010

சொல்வனம் இந்த இதழில் ..




சொல்வனம் இந்த இதழில் காமன்வெல்த் ஊழல்கள் பற்றிய எனது கட்டுரை வெளியாகி இருக்கிறது..
உங்கள் பார்வைக்கு:
காமன்வெல்த் : கல்மாடி கட்டும் மண்மாடி

Monday, August 16, 2010

ஜெயமோகனுக்கு கனடா தமிழ் இலக்கிய தோட்ட விருது..




என் அபிமான எழுத்தாளரும் இலக்கிய உலகில் விருதுகளுக்கு தகுதி ஏற்படுத்தி தரும் அளவுக்கு உண்மையான தகுதி உள்ளவருமான ஜெயமோகனுக்கு இந்த வருடத்திற்கான கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் சிறந்த புனைவுக்கான விருது அவரது 'கொற்றவை' புதினதுக்காக வழங்கப்பட்டுள்ளது..இலக்கிய வாசகர்கள் சார்பில் அவரை மனமார வாழ்த்துகிறோம்..

http://www.jeyamohan.in/?p=7748

Wednesday, August 11, 2010

படித்ததில் ரசித்தது...



'ஓவியம் உயிர் பெற்று வந்தது போல்' என்று காதலியை வர்ணிக்காத காதலன் உண்டா என்ன? ஆனால் ஒரே மாதிரியான உருவம் அதன் பல்வேறு கோணங்கள் என்று ஒரு ஓவியத்தை உயிர் பெறவைத்து அதை நடிக்க , பாட, ஓட ஏன் பறக்கவும் வைக்க வேண்டுமானால் எவ்வளவு உழைப்பு தேவை..? அனிமேஷன் ஒரு அற்புத உலகம்.

நான் அடிப்படையில் ஒரு இரு பரிமாண அனிமேட்டர். என் துறை சார்ந்த விஷயங்களை படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று..சொல்வனத்தில் ரவி நடராஜன் எழுதும் அனிமேஷன் பற்றிய கட்டுரை அற்புதம். இன்று கணினி வசதியுடன் ஓரளவுக்கு சுலபமாகி விட்ட இந்த கலையின் தொடக்கக் கட்டத்தில் அனிமேஷன் கலைஞர்கள் சந்தித்த சவால்கள்; அவற்றை வெற்றிகரமாக அவர்கள் கடந்து சாதனை படைத்தது என்று பல்வேறு தகவல்களை சுவையுடன் எழுதுகிறார் ரவி நடராஜன்.. கலையுடன் தொடர்புடைய ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய தொடர் இது..

அனிமேஷன் திரைப்பயணம்: 02 - இரு பரிமாண உலகம்

அனிமேஷன் திரைப்பயணம்: ஒரு பருந்துப்பார்வை

Friday, August 6, 2010

'சொல்வனம்' இந்த இதழில்...

சொல்வனம் இந்த இதழ் 31 | 06-08-2010 இல் 'களவாணிகள்: யதார்த்த சினிமாவின் இறங்குமுகம்' எனும் என் கட்டுரை வெளியாகி இருக்கிறது. உங்கள் பார்வைக்கு :

களவாணிகள் : யதார்த்த சினிமாவின் இறங்குமுகம்

மகாகவிக்கு ஒரு சமர்ப்பணம் ..



இந்த மாத 'வடக்கு வாசல்' இதழ் மஹாகவி ரவீந்திர நாத் தாகூரின் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சத்யஜித் ரே வரைந்த தாகூரின் கோட்டோவியத்துடன் அட்டையில் துவங்கும் இதழ் இந்தியாவின் மிகப்பெரும் கவியான தாகூரை பற்றி நிறைவான தகவல்கள், வங்காள மொழி உட்பட பல மொழிகளில் தேர்ந்தவரும் தாகூரின் படைப்புகளை தமிழுக்கு தந்தவருமான திரு. கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி யின் செறிவான நேர்காணல், தமிழில் இது வரை முழுமையாக அறியப்படாத கவியின் பல்வேறு முகங்கள் என்று நேர்மையான படைப்பாக வெளிவந்திருக்கிறது. தாகூரின் படைப்புகளில் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள், கட்டுரைகள் அவற்றை மொழியாக்கம் செய்தவர்கள் பற்றியும் ஒரு அட்டவணையே வெளியிடப்பட்டிருக்கிறது. வ.வே.சு அய்யர், பாரதி முதல் கிருஷ்ணமூர்த்தி வரை நிறைய பேர் அவர் படைப்புகளை மொழி பெயர்த்திருக்கிறார்கள். எனினும் அவர் படைப்புகளில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை மிக குறைவே என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. எனில் தாகூரின் படைப்புலகத்தின் பிரமாண்டத்தை நம்மால் உணர முடிகிறது.

ஒரு சில சமகால இலக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்தி கட்டுரைகளை தவிர, மற்ற அனைத்தும் தாகூரை பற்றியவை. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் தீவிரம் குறையாமல் அதே சமயம் 'அறிவு ஜீவி' தனமான மிரட்டலும் இல்லாமல் எளிமையாக இருக்க வேண்டும் எழுத்து என்னும் எண்ணமுடையவர் வடக்கு வாசல் ஆசிரியர் யதார்த்தா .பென்னேஸ்வரன். குறுகிய கால தயாரிப்பாக இதை சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்.
தாகூரின் புகழ்பெற்ற காபூலிவாலா சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. தாகூரை மட்டுமல்ல இலக்கியத்தை விரும்பும் அனைவரும் தவற விடக்கூடாத சிறப்பிதழ் இது.

தொடர்புக்கு:

Vadakku Vaasal,
5A/11032, IInd Floor, Gali No:9,
Sat Nagar,
Karol Bagh,
New Delhi-11005.
Ph: 65858656, 9910031958.
vadakkuvaasal@gmail.com
www.vadakkuvaasal.com

Wednesday, August 4, 2010

ஓவியங்கள் ..

பெருவானத்தின் கீழொரு தனிமை..





காத்திருப்பு




மரணம்

Tuesday, August 3, 2010

எந்திரனும் சித்தர்களும் ..



நாலைந்து டிவி பொட்டிகளை கம்பியூட்டர் போல் பாவித்து அதன் முன் நின்று சத்யராஜ் 'நெசமா.. நெசமா' என்று கேட்கும் விக்ரம் படம் வருவதற்கு முன்பிருந்தே கம்பியூட்டர் என்றாலே ரோபாட் தான் என்றொரு மயக்கம் நிறைய பேருக்கு இருந்தது. ஆங்கில படங்களும் சரி நாவல்களும் சரி அல்லது அவற்றை பிரதி எடுத்த நம்மவர்களும் சரி கி.பி. ரெண்டாயிரத்தில் எல்லா இடங்களிலும் ரோபாட் தான் புழங்கும்.. மனிதர்களுக்கு அவற்றால் தீங்கு ஏற்படும் என்கிற அளவுக்கு 'தொலைநோக்கு பார்வையில்' திளைத்தார்கள். அது ஒரு ஆர்வம் என்ற வகையில் ரசிக்கத்தக்கது தான். பிறகு நம் தமிழ் மக்கள் கணினி துறையில் மற்ற எவரையும் விட அதீதமாய் தேர்ச்சி பெற்று இன்று அமெரிக்காவின் மென்பொருள் பொறியியலில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். கம்பியூட்டரை யார் வேண்டுமானலும் உபயோகிக்கலாம், உதாரணத்துக்கு நம் சாரு நிவேதிதா கூட கம்பியூட்டர் உபயோகம் செய்து 'கருத்து' எழுதும் அளவுக்கு கணினி சல்லிசாகி விட்டது. நிற்க.
அதுபோக இந்த ரோபாட் மீதான ஆர்வம் இன்னும் தீர்ந்தபாடில்லை. பழைய (இப்போதும்) கல்கண்டு இதழ்களில் ரோபாட், மனிதன் எங்கு சென்றாலும் எடுத்து சென்று பேசும் தொலைபேசி (செல்போன் தான்!) போன்றவற்றை பற்றிய தகவல்களை படித்து ஆச்சர்யப்படாமல் யாரும் இருந்திருக்க முடியாது ..!

நம் 'ஹாலிவுட்' டின் (வருங்கால) முதல் தமிழ் இயக்குனர் (கருத்து உபயம் தத்துவஞானி ரஜினி அவர்கள்) திரு ஷங்கர் அவர்கள் சுஜாதாவின் உதவியோடு ஆரமபித்த கதை தான் ரோபோ. முதலில் கமல் நடிப்பதாக சொல்லப்பட்டு , பின்பு ஷாருக் கான், அஜீத் வரை போய் பின்பு ரஜினியிடம் முடிவடைந்தது(!) ஷங்கரின் தேடல். இந்தியனில் 'அக்கடான்னு நாங்க ஒட போட்டா' என்ற பெண் விடுதலைக்கான சிறந்த பாடல் நினைவிருக்கும். அதில் கமல் ஒரு ரோபோ நாயை கட்டி கூட்டி வருவார். அதில் இருந்து தான் ஷங்கருக்கு இந்த ரோபோ மேல் ஒரு 'இது' வந்திருக்கும் என்பது என் அபிமானம்.

மிஷ்கினின் (இன்னும்) வெளிவராத 'நந்தலாலா' பார்த்து மாலை மாலையாக கண்ணீர் விட்டு , பின்பு அதை காரணம் காட்டி அவரை மிரட்டி நம் சாரு அவரது அடுத்த படத்தில் 'பொட்டி' தூக்குவது நம் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்த துக்க செய்தி. அந்த படத்தின் ஸ்டில்லை பார்த்தே அது Kikujiro என்ற ஜப்பானிய படம் என்று ஒரு இணைய வாசகர் சொன்னார். முதலில் ஒத்துக்கொள்ள மறுத்த மிஷ்கின் பின்பு அதை 'ஒருமாதிரி' ஒத்துகொண்டார். நான் உடனே எந்திரன் , ஸ்பீல்பெர்க் போன்றோரின் முன்னோடியான ஸ்டார் வார்ஸ் புகழ் ஜார்ஜ் லூகாஸ் எடுத்த THX 1138 படத்தின் நகல் என்று சொல்வேன் என்று நினைக்காதீர்கள். விஷயம் தெரிந்த என் நண்பர் ஒருவர் எதற்கெடுத்தாலும் அதை சொல்லிக்கொண்டே இருப்பதால் உங்களுக்கு இந்த தகவலை சொல்கிறேன். ஆனால் அந்த ஆங்கில படத்தின் trailer ஐ பார்க்கும் போது ஒன்று தான் தோன்றியது. இதை போல் ஷங்கரால் காப்பி அடிக்க கூட முடியாது என்று..அந்த ஆங்கில படம் வந்தது எழுபதுகளின் ஆரம்பத்தில். இந்த மாதிரி ஆங்கில படம், உலக படம் இவற்றை தமிழில் காப்பி அடிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வது மூளை சிலும்பல் என்று ஜெயமோகன் சொல்கிறார். இந்த இயக்குனர்கள் யாருக்கும் தெரியாது என்று அங்கங்கு உருவி இங்கு பிழைத்தால் கூட பரவாயில்லை , பெரிய ஜீனியஸ் என்று புகழ் பெறுவது அயோக்யத்தனம் என்று கண்டிப்பாக அவர் ஒத்துக்கொள்வார்.

நிற்க. இந்த படத்தின் இசை ஒரு கலக்கு கலக்குகிறது என்று எல்லோரும் வயிற்றை பிடித்துக்கொண்டு சொல்கிறார்கள். இங்கெல்லாம் இசையை வெளியிட்டால் என்ன மதிப்பு என்று பொதுக்குழு கூடி தீர்மானித்து (அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்) மலேஷியா சென்று ரிலீஸ் செய்யப்பட அந்த படத்தின் பாடல்களை ரெண்டு நாட்களாக யாரும் சோறு தண்ணி இல்லாமல் கேட்டு விட்டு 'ஒண்ணுமே பிரியலேப்பா' என்று ஆங்காங்கு சூனியம் வைக்கப்பட்ட்வர்களைப் போல் குறுக்கும் மறுக்கும் சென்றபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரே பாட்டு 'காதல் அணுக்கள்' என்று தொடங்கும் பாடலில் ரஹ்மானுக்கு ஜனங்களின் மேல் உள்ள (கொஞ்சம்) பரிதாபம் தெரிகிறது.. பாட்டு கேட்க கேட்க தான் நல்லா இருக்கும் ..அதுக்குள்ளே ஏன்யா இப்படி காய்ச்சுகிறீர் என்று என் மீது பாய்பவர்களிடம் நான் கேட்பது ஒன்று தான். ரஹ்மான் பாட்டு என்றால் அதை நூறாயிரம் முறை எப். எம். இன்டர்நெட் டிவி என்று தொடர்ந்து போட்டு போட்டு கேட்டு பின்பு நாளடைவில் ஒருமாதிரி புரிந்து அது ஹிட் என்று அலறி தீர்ப்பது தான் ஒரு இசை அமைப்பாளரின் வெற்றியா? ஒரு முறை கேட்டால் அது 'பச்சக்கென' மெல்லப்பட்ட பபிள் கம் போல் ஒட்டிக்கொள்ளவேண்டாமா?

ரஜினி ரசிகர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை. அவர்கள் முறையே முத்து, படையப்பா, பாபா போன்ற படங்களின் பாடல்களை கேட்டு 'கவுண்டமணி' போல் காதில் கைவத்து கடுப்பாகி ரஹ்மான் வீட்டை தாக்க முற்பட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பின்பு நான் முன்பு சொன்னது போல் பல்லாயிரக்கணக்கான முறையில் எல்லா தகவல் தொடர்பு சாதனங்களையும் பிரம்ம அஸ்திரம் போல் பிரயோகித்து பாடல்களை ரீச் ஆக செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். படம் வரட்டும் என்று எல்லோரும் காத்திருப்பதை போல் நானும் காத்திருக்கிறேன். என் அபிப்ராயப்படி ஷங்கர் இந்தியாவிலேயே (ஏன் நம்ம வோர்ல்டிலேயே..!) சிறந்த ஆல்பம் இயக்குனர் எனலாம். நீங்கள் பார்த்து 'கற்பனை' வளர்க்கும் சீன்கள் ஒரு பாடலில் வந்து விடும் என்று நினைக்கிறேன்..

இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பல தத்துவங்களை உதிர்த்தார். ரஹ்மான் இவ்வளவு (?) சாதனை செய்து விட்டு இன்னும் எவ்ளோ அடக்கமா இருக்கார் பாருங்கள். அவர் ஒரு சித்தர். ஏனென்றால் ஆன்மீகவாதியான ஒருவருக்கு எந்த ஈகோவும் இருக்கக்கூடாது(!?) இவரிடம் ஈகோ இல்லை எனவே யோகி , சித்தர் என்று ஒரே புகழ்மாலை தான். எனக்கு ஒரு சந்தேகம் ஈகோ என்பது 'திமிராய்' நடந்து கொள்வது தான் என்று நீங்களாகவே எப்படி முடிவு செய்யலாம்? எவன் ஒருவன் புகழுக்கும், விருதுக்கும் , பணத்துக்கும் ஆசைப்பட்டு ஏஜென்ட் மூலம் வேலை செய்ய துவங்குகிறானோ அவன்தான் மிகப்பெரிய egoist!!
சரி இதை எல்லாம் சொன்னால் புரிந்து கொள்வார் என்று ரஜினியிடம் எதிர்பார்ப்பது தவறு தானே..ரைட் வுடு!