Saturday, March 13, 2010

இசையின் கவிதை ..



ஒவ்வொரு இரவும் ராஜாவின் ஏதாவொரு பாடலோடும் 'தேரே பினா ஜிந்தகி மே கோயி' போன்ற மனதை உருக்கும் ஹிந்தி பாடலோடும் தான் உறங்க செல்வேன். அதுவும் ராஜாவும் வைரமுத்துவும் தவமிருந்து செய்த பல பாடல்களை கேட்கும்போது மனம் இசையாலும் வார்த்தைகளாலும் நிரம்பியிருக்கும். அவர்கள் இருவரும் இணைவது சாத்தியமே இல்லை என்று விட்ட பிறகு அந்த பாடல்கள் இன்னும் முக்கியத்துவம் பெற்றுவிடும். தமிழ் சினிமா இசையின் முக்கிய கவிஞரான வைரமுத்துவை அகில இந்திய வானொலியின் 'திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்' சார்பாக நான் நேர்காணல் செய்த அனுபவம் மறக்க முடியாதது.
தனது புத்தக அறிமுக நிகழ்ச்சிக்காக டெல்லி தமிழ் சங்கம் வந்திருந்த அவரை முதல் நாள் காலை தமிழ் நாடு இல்லத்தில் சந்தித்தேன். என்னை தன காரில் அழைத்து சென்று எனக்கு உற்சாகமூட்டினார் அகில இந்திய வானொலியை சேர்ந்த குருமூர்த்தி. நேர்காணல் சிறப்பாக அமைய சில நுணுக்கங்களை எனக்கு சொல்லி கொண்டே வந்தார்.

முதல் தடவை சென்றபோது கவிஞர் சற்று பிஸியாக இருந்தார். 'நாளை காலையில் பார்க்கலாமே ' என்றார் மிடுக்குடன். அவர் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஒரு சின்ன புத்தகத்தை தந்தார். அது எனக்கு தேவைப்படவில்லை என்றாலும் வாங்கிக்கொண்டேன். அவர் எழுதிய சினிமா பாடல்கள் மீதான மதிப்பு அவரின் தனி தொகுதிகள் மீது இல்லை என்றாலும் அவற்றை படிக்காமல் யாரும் எண்பதுகளை கடந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

எண்பதுகளின் மத்தியில் முடிவுக்கு வந்த ராஜா-வைரமுத்து சகாப்தம் இன்றுவரை யாராலும் கடக்க முடியாத ஒரு தொலைவாகவே தோன்றுகிறது.
எத்தனையோ பாடல்களை சொல்லலாம். நடுவில் ராஜா அவரை தவிர்த்து விட்ட பிறகு , ரஹ்மான் வருவதுற்கு முன்பு வரை வைரமுத்து தாக்கு பிடித்திருந்ததற்கு அவரது உண்மையான கவித்துவம் தான் காரணம் என்று நினைக்கிறேன். ரஹ்மான் இசையில் நல்ல பாடல்களை தர கவிஞர் தவறவில்லை.

இடைப்பட்ட காலத்தில் அவர் தனது தனி கவிதை தொகுப்புகள் நிறைய கொண்டுவந்தார். சரியான விமர்சகப்பார்வையில் அவை சற்று கீழிறங்கும் என்றாலும் அவர் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கண்டிப்பாக உதவியாய் இருந்தன எனலாம். அப்போது வந்த தெலுங்கு டப்பிங் படங்களுக்கு பாடல்களும் , வசனமும் எழுதிகொண்டிருந்தார் கவிஞர். காரணம் எதுவாய் இருந்தாலும் ராஜா செய்த தவறு இது என்பேன் நான். ஏனெனில் அந்த தவறு ஒரு நல்ல சினிமா கவிஞனை ராஜாவின் மனம் தொடும் இசையில் கேட்டு ரசித்த ரசிகர்களை வெறுமையில் ஆழ்த்தியது. அதற்கு பிறகு ஒருவரை ஒருவர் இல்லாமல் தனிப்பட்ட முறையில் இருவரும் வெற்றி பெற்றிருந்தாலும் அந்த வெறுமை இன்னும் நிரப்பப்படாமல் தான் இருக்கிறது. நேரில் அவரை முதன் முதலாய் பார்க்கும்போதே நேர்காணல் எனும்போது மிகவும்சந்தோஷப்பட்டேன்.

அவர் அறிமுகம் செய்யவிருந்த புத்தகம் குமுதம் இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் தந்திருந்த பதில்களின் தொகுப்பு. அவற்றை முன்பே குமுதத்தில் படித்திருந்ததால் அது பற்றிய பிரதான கேள்விகளை தயாரித்துக்கொண்டு அவரை சந்தித்தேன்.

வெள்ளை குர்தா, பைஜாமாவில் முகத்தில் பளீரிடும் சிரிப்புடனும் சற்று ஏகாந்தமான கண்களோடும் கவிஞர் வரவேற்பறையில் அமர்ந்தார். முதல் நாள் இருந்த உற்சாகம் இப்பொழுது பதட்டமாக மாறியிருந்தது. எனது குரலின் பலவீனத்தை என்னால் உணர முடிந்தது. ஆனாலும் கேள்விகளை தொடர்ந்தேன். எந்த ஒரு கேள்வியையும் உள்வாங்கி விரிவாக பதில் சொல்லும் அவர் திறனை மனதுக்குள் வியந்தேன். 'நேனோ டெக்னாலஜி' பற்றி ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்விக்கு அவர் சொல்லியிருந்த பதில் எனக்கு பிடித்திருந்தது. அதை வைத்து முதல் கேள்வியை துவங்கினேன். கவிஞர் உற்சாகமாகி விட்டார். அது என்னையும் தொற்றியது. நிறைய கேள்விகள். அழகான பதில்கள்.

திடீரென்று ஒரு கேள்வியை வீசினேன். "நீங்கள் எழுதிய பாடல்களை இசையோடு கேட்கும் ரசிகனுக்கு மனதில் காட்சிகள் அற்புதமாய் விரிகின்றன. ஆனால் அவை படமாக்கப்படும் போது அவை எங்கேயோ தொலைந்து விடுகின்றன. ஒரு படைப்பாளியாக உங்கள் கவிதை வரிகள் படமாக்கப்படுவதில் உங்களுக்கு திருப்தி இருக்கிறதா? " கவிஞர் என்னை நிமிர்ந்து பார்த்தார். சற்று நிதானித்து விட்டு " இது ஒரு நல்ல கேள்வி உங்களுக்கு. தர்மசங்கடமான கேள்வி எனக்கு " என்று வெடித்து சிரித்தார். தன பாடல் வரிகள் காட்சியமைப்புகளில்வீணாக்கபடுவதில் அவருக்குள் இருந்த வருத்தம் எனக்கு துல்லியமாக தெரிந்தது. ராஜாவின் பல பாடல்களுக்கும் நிகழ்ந்த துயரம் இது. ராஜாவின் ஒற்றை வயலின் உயிரை அறுக்கும் இசைக்கு கதாநாயகியின் இடுப்பு நெளிந்து கொண்டிருக்கும். "இருந்தாலும் நான் நினைத்ததை விட சிறப்பாக படமாக்கப்பட்ட பாடல்களில் எனக்கு பிடித்தவை 'ஆயிரம் தாமரை மொட்டுகளே',' உயிரே உயிரே (பாம்பே) ' போன்ற பாடல்கள் .." என்றார்.

தொடர்ந்து என் மனதுள் பல வருடமாய் சுழன்று கொண்டிருக்கும் ஒரு கேள்வியை கேட்டேன். " நீங்களும் இளையராஜாவும் இணைந்து செய்த பல பாடல்கள் மறக்க முடியாதவை ..மீண்டும் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா? " கவிஞர் சற்று நிதானமாய் யோசித்து விட்டு சொன்னார்.
"காலம் தான் பதில் சொல்ல வேண்டும் " .
அந்த காலத்திற்காக காத்திருக்கிறோம் நாம், நம்பிக்கை குறைவுதான் என்றாலும்.

Friday, March 12, 2010

ரசிகனின் மனம் ...


முறையான இசை பயிற்சி இல்லாத ரசனை அடிப்படையாக இசையை அணுகும் எண்ணற்றவர்களில் ஒருவனான எனக்கு தமிழ் சினிமா பாடல்களின் முக்கியமான சிலரை வானொலி சார்பாக நேர்காணல் செய்ய வாய்ப்பு கிடைத்தது. டெல்லியில் இருக்கும் எனது மதிப்புக்கும் பலவகைகளில் நன்றிக்கும் உரிய திரு. ஷாஜஹான் அவர்கள் என் சினிமா ஆர்வத்தை புரிந்து கொண்டு தன நண்பரான திரு. குருமூர்த்தியிடம் இந்த வாய்ப்பை பெற்று தந்தார். டெல்லி வரும் தமிழகத்தின் பல துறைகளை சார்ந்த பிரபலங்களை நேர்காணல் செய்த அனுபவம் உள்ள குருமூர்த்தி என்னை முதலில் மலேசியா வாசுதேவன், P.சுசீலா, திப்பு போன்றோரை பேட்டி எடுக்குமாறு கேட்டுகொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது.

அப்போது அவர்கள் டெல்லியில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்கள். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர்களை ஒரே நாளில் நேர்காணல் செய்து விடலாம் என்ற அசைக்க முடியாத அசட்டு தனத்துடன் காலை ஒன்பது மணிக்கெல்லாம் அங்கு போய் விட்டேன். அது மிதமான குளிர்கால நேரம். பத்திரிக்கைகளில் வரைவது சில சமயம் ஏதேனும் கவிதை எழுதுவது என்பதை தாண்டி பொதுவில் ஏதும் செய்யாத அதற்கான சரியான பார்வையும் கொண்டிராத நான் வழக்கமான பதட்டத்தோடும் மட்டு மீறிய ஆர்வத்தோடும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். இன்டர்காமில் P. சுசிலாவின் உதவியாளரை தொடர்புகொண்ட போது அவர் பயணக்களைப்பில் இருப்பதால் மாலை நிகழ்ச்சி நடக்கும் தல்கட்டோரா அரங்கில் பேட்டியை வைத்துகொள்ளலாம் என்று விட்டார்.

மலேசியா வாசுதேவன் வெளியில் சென்றிருந்தார். அவரை வரவேற்பறையிலேயே சந்தித்து விடலாம் என்று நினைத்திருந்தேன். எனக்கு விருப்பமான ' பூவே இளைய பூவே', 'கோடைகால காற்றே ', ஆயிரம் மலர்களே' , 'பருவகாலங்களின் கனவு (மூடுபனி),' 'பனிவிழும் பூ இரவில் , 'அள்ளி தந்த பூமி ', 'தேடினேன் (சங்கர்லால்) ' போன்ற மிக மென்மையான இளையராஜாவின் இசையில் அவர் பாடிய பாடல்களை (கடைசி பாடலில் கங்கை அமரனின் பங்குண்டு )மனதில் ஓட விட்டு கொண்டு இருந்த போது எங்கோ பார்த்த முகம் வெளியில் இருந்து உள்ளே வந்து கொண்டிருந்தது. பக்கத்துக்கு வீட்டு அண்ணன் போன்ற பரிச்சியமான தோற்றம் கொண்ட அந்த முகம் மலேசியா வாசுதேவனுடையது. அவரை அணுகி நேர்காணலுக்காக நேரம் கேட்ட போது 'இப்போ வேண்டாமே' என்றார். எனது முதல் முயற்சி என்ற போது, நடையை சற்று நிறுத்தி என்னை பார்த்தார். 'மேலே வாங்க ' என்றார்.

அறையில் நேர்காணல் துவங்கும்போது குருமூர்த்தி வந்திருக்கவில்லை. நான் நேர்காணலை துவங்கி விட்டேன். எந்த வித அலட்டலும் இல்லாமல் மிக நட்புடன் பதில் தந்து கொண்டிருந்தார் வாசுதேவன். தமிழ் சினிமா பாடல்களிலும் நடிப்பிலும் தனக்கான அழுத்தமான முத்திரையை பதித்த அவர் தன்னை பற்றியும் தற்போது இருக்கும் சினிமா இசை பற்றியும் மனம் திறந்த பேசினார். ஒரு கேள்விக்கு மிக சுவாரஸ்யமாக அவர் பதிலளித்துகொண்டிருந்தபோது திடீரென்று என் மொபைல் அலறியது.. பதட்டத்தில் நான் எழுந்தபோது மைக் இணைக்கப்பட்ட அந்த ரெகார்டர் கீழே விழுந்து விட்டது. நான் சங்கடமாய் அவரை பார்த்த போது அவர் மிக மென்மையாக புன்னகைத்தபடி ' பதட்ட படாதீங்க' என்றார். குருமூர்த்தி தான் அழைத்திருந்தார். தமிழ் நாடு இல்லத்துக்கு அப்போது வந்து சேர்ந்த அவர் நான் எங்கிருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள அழைத்திருக்கிறார். நேர்காணலுக்கு முன்பு மொபைலை அணைக்க வேண்டும் என்று நினைத்திருந்த நான் ஆர்வக்கோளாரில் அதை செய்யாமல் விட்டுவிட்ட தவறை இருவரும் பெரிதுபடுத்தவில்லை.

பின்பு குருமூர்த்தி வந்தார். அவர் முன்னிலையில் நேர்காணல் தொடர்ந்தது . இடையில் தடை பட்டுவிட்ட தனது பதிலை விட்ட இடத்திலிருந்து துவங்கிய வாசுதேவனின் நினைவாற்றலை நான் வியந்தேன். ஒரு கேள்வியில் 'பனிவிழும் பூ இரவில் ' , ' தேடினேன்' போன்ற பாடல்களை குறித்து நான் கேட்டபோது அவர் வியந்தார்." என்னிடமே இந்த பாடல்கள் இல்லை. எனக்கு மிக விருப்பமான பாடல்கள். நீங்கள் எங்கு கேட்கிறீர்கள் இவற்றை எல்லாம் ?" என்றார். நான் இணையதளத்தில் கேட்பதாக சொன்னேன். முடிந்தால் அவற்றை டவுன்லோடு செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்ட அவரின் முகவரியை என் சோம்பேறித்தனத்தால் தொலைத்துவிட்டேன். அதற்காக இன்னும் வருத்தம் உண்டு என்னிடம்.

வாசுதேவனின் பிரபலமான பல பாடல்கள் அதிரடியான பாடல்கள். எண்பதுகளில் ரஜினியும் கமலும் கோலோச்சிய சமயங்களில் ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் என்றால் மூன்று டூயட் , ஒரு சோக பாடல் , ஒரு அதிரடியான (அந்த காலகட்டத்தில் அதற்கு பெயர் 'டப்பாங்குத்து' !) பாடல் என்று இருக்கும். அந்த அதிரடியான பாடலை வாசுதேவன் தான் பாடியிருப்பார். ஆரம்பத்தில் இருந்து மிக மென்மையான பல பாடல்களை படிய அவரை ராஜா இது போன்ற பாடல்களையே மத்திய எண்பதுகளில் பாட வைத்தார். அது பற்றி கேட்டபோது தன குரலில் இருக்கும் உற்சாகதன்மை ராஜாவை கவர்ந்திருக்க வேண்டும் என்றார்.

இளையராஜாவின் தீவிர ரசிகனான நான் அவரை பற்றி கேட்காமல் இருப்பேனா? சினிமாவுக்கு வரும் முன்பே ராஜாவும் வாசுதேவனும் நண்பர்கள். சில சமயம் அறைகளில் ஒன்றாக தங்கியிருக்கும் போது ராஜா ஹார்மோனியத்தில் புது புது மெட்டுகளை போட்டு வாசுதேவனை பாட சொல்வாராம். அவரது வெற்றி தனக்கு முன்பே தெரியும் என்று சொன்னபோது வாசுதேவனின் குரல் இளகியது. எனது மனமும்.


அன்றைய மாலை இசை நிகழ்ச்சியில் "ஆசை நூறுவகை " என்று உற்சாகமாக மெல்லிய உடல் அசைவுடன் அவர் பாடிகொண்டிருந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நான் அமர்ந்து கேட்டுகொண்டிருந்தேன். நான் அமர்ந்திருக்கும் திசை நோக்கி அவர் பாடியபோது அந்த குரல் எனக்கானது என்று நினைத்து கொண்டேன். அசட்டு தனமானாலும் அந்த நேரத்தில் மறக்க முடியாத அனுபவம் அது.