Friday, March 12, 2010

ரசிகனின் மனம் ...


முறையான இசை பயிற்சி இல்லாத ரசனை அடிப்படையாக இசையை அணுகும் எண்ணற்றவர்களில் ஒருவனான எனக்கு தமிழ் சினிமா பாடல்களின் முக்கியமான சிலரை வானொலி சார்பாக நேர்காணல் செய்ய வாய்ப்பு கிடைத்தது. டெல்லியில் இருக்கும் எனது மதிப்புக்கும் பலவகைகளில் நன்றிக்கும் உரிய திரு. ஷாஜஹான் அவர்கள் என் சினிமா ஆர்வத்தை புரிந்து கொண்டு தன நண்பரான திரு. குருமூர்த்தியிடம் இந்த வாய்ப்பை பெற்று தந்தார். டெல்லி வரும் தமிழகத்தின் பல துறைகளை சார்ந்த பிரபலங்களை நேர்காணல் செய்த அனுபவம் உள்ள குருமூர்த்தி என்னை முதலில் மலேசியா வாசுதேவன், P.சுசீலா, திப்பு போன்றோரை பேட்டி எடுக்குமாறு கேட்டுகொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது.

அப்போது அவர்கள் டெல்லியில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்கள். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர்களை ஒரே நாளில் நேர்காணல் செய்து விடலாம் என்ற அசைக்க முடியாத அசட்டு தனத்துடன் காலை ஒன்பது மணிக்கெல்லாம் அங்கு போய் விட்டேன். அது மிதமான குளிர்கால நேரம். பத்திரிக்கைகளில் வரைவது சில சமயம் ஏதேனும் கவிதை எழுதுவது என்பதை தாண்டி பொதுவில் ஏதும் செய்யாத அதற்கான சரியான பார்வையும் கொண்டிராத நான் வழக்கமான பதட்டத்தோடும் மட்டு மீறிய ஆர்வத்தோடும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். இன்டர்காமில் P. சுசிலாவின் உதவியாளரை தொடர்புகொண்ட போது அவர் பயணக்களைப்பில் இருப்பதால் மாலை நிகழ்ச்சி நடக்கும் தல்கட்டோரா அரங்கில் பேட்டியை வைத்துகொள்ளலாம் என்று விட்டார்.

மலேசியா வாசுதேவன் வெளியில் சென்றிருந்தார். அவரை வரவேற்பறையிலேயே சந்தித்து விடலாம் என்று நினைத்திருந்தேன். எனக்கு விருப்பமான ' பூவே இளைய பூவே', 'கோடைகால காற்றே ', ஆயிரம் மலர்களே' , 'பருவகாலங்களின் கனவு (மூடுபனி),' 'பனிவிழும் பூ இரவில் , 'அள்ளி தந்த பூமி ', 'தேடினேன் (சங்கர்லால்) ' போன்ற மிக மென்மையான இளையராஜாவின் இசையில் அவர் பாடிய பாடல்களை (கடைசி பாடலில் கங்கை அமரனின் பங்குண்டு )மனதில் ஓட விட்டு கொண்டு இருந்த போது எங்கோ பார்த்த முகம் வெளியில் இருந்து உள்ளே வந்து கொண்டிருந்தது. பக்கத்துக்கு வீட்டு அண்ணன் போன்ற பரிச்சியமான தோற்றம் கொண்ட அந்த முகம் மலேசியா வாசுதேவனுடையது. அவரை அணுகி நேர்காணலுக்காக நேரம் கேட்ட போது 'இப்போ வேண்டாமே' என்றார். எனது முதல் முயற்சி என்ற போது, நடையை சற்று நிறுத்தி என்னை பார்த்தார். 'மேலே வாங்க ' என்றார்.

அறையில் நேர்காணல் துவங்கும்போது குருமூர்த்தி வந்திருக்கவில்லை. நான் நேர்காணலை துவங்கி விட்டேன். எந்த வித அலட்டலும் இல்லாமல் மிக நட்புடன் பதில் தந்து கொண்டிருந்தார் வாசுதேவன். தமிழ் சினிமா பாடல்களிலும் நடிப்பிலும் தனக்கான அழுத்தமான முத்திரையை பதித்த அவர் தன்னை பற்றியும் தற்போது இருக்கும் சினிமா இசை பற்றியும் மனம் திறந்த பேசினார். ஒரு கேள்விக்கு மிக சுவாரஸ்யமாக அவர் பதிலளித்துகொண்டிருந்தபோது திடீரென்று என் மொபைல் அலறியது.. பதட்டத்தில் நான் எழுந்தபோது மைக் இணைக்கப்பட்ட அந்த ரெகார்டர் கீழே விழுந்து விட்டது. நான் சங்கடமாய் அவரை பார்த்த போது அவர் மிக மென்மையாக புன்னகைத்தபடி ' பதட்ட படாதீங்க' என்றார். குருமூர்த்தி தான் அழைத்திருந்தார். தமிழ் நாடு இல்லத்துக்கு அப்போது வந்து சேர்ந்த அவர் நான் எங்கிருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள அழைத்திருக்கிறார். நேர்காணலுக்கு முன்பு மொபைலை அணைக்க வேண்டும் என்று நினைத்திருந்த நான் ஆர்வக்கோளாரில் அதை செய்யாமல் விட்டுவிட்ட தவறை இருவரும் பெரிதுபடுத்தவில்லை.

பின்பு குருமூர்த்தி வந்தார். அவர் முன்னிலையில் நேர்காணல் தொடர்ந்தது . இடையில் தடை பட்டுவிட்ட தனது பதிலை விட்ட இடத்திலிருந்து துவங்கிய வாசுதேவனின் நினைவாற்றலை நான் வியந்தேன். ஒரு கேள்வியில் 'பனிவிழும் பூ இரவில் ' , ' தேடினேன்' போன்ற பாடல்களை குறித்து நான் கேட்டபோது அவர் வியந்தார்." என்னிடமே இந்த பாடல்கள் இல்லை. எனக்கு மிக விருப்பமான பாடல்கள். நீங்கள் எங்கு கேட்கிறீர்கள் இவற்றை எல்லாம் ?" என்றார். நான் இணையதளத்தில் கேட்பதாக சொன்னேன். முடிந்தால் அவற்றை டவுன்லோடு செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்ட அவரின் முகவரியை என் சோம்பேறித்தனத்தால் தொலைத்துவிட்டேன். அதற்காக இன்னும் வருத்தம் உண்டு என்னிடம்.

வாசுதேவனின் பிரபலமான பல பாடல்கள் அதிரடியான பாடல்கள். எண்பதுகளில் ரஜினியும் கமலும் கோலோச்சிய சமயங்களில் ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் என்றால் மூன்று டூயட் , ஒரு சோக பாடல் , ஒரு அதிரடியான (அந்த காலகட்டத்தில் அதற்கு பெயர் 'டப்பாங்குத்து' !) பாடல் என்று இருக்கும். அந்த அதிரடியான பாடலை வாசுதேவன் தான் பாடியிருப்பார். ஆரம்பத்தில் இருந்து மிக மென்மையான பல பாடல்களை படிய அவரை ராஜா இது போன்ற பாடல்களையே மத்திய எண்பதுகளில் பாட வைத்தார். அது பற்றி கேட்டபோது தன குரலில் இருக்கும் உற்சாகதன்மை ராஜாவை கவர்ந்திருக்க வேண்டும் என்றார்.

இளையராஜாவின் தீவிர ரசிகனான நான் அவரை பற்றி கேட்காமல் இருப்பேனா? சினிமாவுக்கு வரும் முன்பே ராஜாவும் வாசுதேவனும் நண்பர்கள். சில சமயம் அறைகளில் ஒன்றாக தங்கியிருக்கும் போது ராஜா ஹார்மோனியத்தில் புது புது மெட்டுகளை போட்டு வாசுதேவனை பாட சொல்வாராம். அவரது வெற்றி தனக்கு முன்பே தெரியும் என்று சொன்னபோது வாசுதேவனின் குரல் இளகியது. எனது மனமும்.


அன்றைய மாலை இசை நிகழ்ச்சியில் "ஆசை நூறுவகை " என்று உற்சாகமாக மெல்லிய உடல் அசைவுடன் அவர் பாடிகொண்டிருந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நான் அமர்ந்து கேட்டுகொண்டிருந்தேன். நான் அமர்ந்திருக்கும் திசை நோக்கி அவர் பாடியபோது அந்த குரல் எனக்கானது என்று நினைத்து கொண்டேன். அசட்டு தனமானாலும் அந்த நேரத்தில் மறக்க முடியாத அனுபவம் அது.

8 comments:

  1. இது போன்ற அனுபவங்களை இன்னும் எழுதுங்கள்...சுவையாக இருக்கிறது!

    ReplyDelete
  2. இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில்,

    மலேசியா வாசுதேவன் அவர்களின் இந்தப் பாடல்கள் எனக்கு பிடித்தமானவை.

    கட்டி வச்சுக்கோ இந்த அன்பு மனச - படம்?(கார்த்திக் நடித்தப் படம்)

    அள்ளித் தந்த வானம் - நண்டு

    ஆகாய கங்கை - தர்மயுத்தம்

    மாரியம்மா, மாரியம்மா - கரகாட்டக்காரன்

    இன்னும் நிறைய பாடல்கள் உள்ளன.

    மெலடி, FOLK,குத்துப் பாடல்கள் எவ்விதமான பாடல்களுக்கும் இவரின் குரல் பொருத்தமாக இருக்கும்.

    ஓரு தொலைக்காட்சிப் பேட்டியில் டி.எம்.எஸ்தான் இவருக்குப் பிடித்தப் பாடகராக கூறியிருந்தார்கள்.

    இடையில் இசைஞானியோடு இவர் கருத்து வேறுபாடு கொண்டு இருந்ததாக நினைவு. சரியா ?

    இசைஞானி + மலேசியா கூட்டணியில் வெளிவந்த எல்லா பாடல்களுமே "இசைஞானி பத்மபூஷன் டாக்டர் இளையராஜா" அவர்களின் 'ஆகச்சிறந்த' படைப்புக்கள். இந்தப் படைப்புக்கள் காலம் கடந்தும் நிற்கும்.

    உங்களது இந்த ஆக்கம் சட்டென்று முடிந்து விட்டது. கொஞ்சம் நீண்டதாக இருந்திருக்கலாம்.

    சந்திரமோகன் சார் !

    வாழ்த்துகள்...!!

    தொடர்ந்து கலக்குங்கள். இசைஞானி & அவரின் இசை ஆக்கங்களில் உங்களுக்கு விருப்பமான படைப்புக்கள் பற்றி பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

    நீங்கள் அனுப்பிய மின் அஞ்சலில் 'ஹரன் பிரசன்னா' அவர்கள் ஐ.டியும் இருந்ததாக நினைவு. அவரும் உங்கள் நண்பரா? மறைந்திருக்கும் "இட்லி வடை" ஹரன் பிரசன்னா தான் என்பது தமிழ் ப்ளாக்கர் உலகில் ஒரு செய்தி. உண்மையா சந்திரமோகன் சார்?

    தொடர்ந்து கலக்குங்கள் !!

    அன்புடன்

    ஹார்ட்டா

    ReplyDelete
  3. இல்லை ஹார்டா எனக்கு அது தெரியாது..
    பெரும்பாலும் தனி மெயிலாக தான் அனுப்புவேன்.. இந்த முறை அவரது மெயில் முகவரியும் சேர்ந்து வந்து விட்டது. அவர் கதைகளுக்கு வடக்கு வாசலில் ஓவியம் வரைந்த அனுபவம் உள்ளது எனக்கு. அவர் நண்பரானால் சந்தோஷம் தான்.

    உங்கள் பாராட்டுக்கு நன்றி. இதை இன்னும் நீளமாக எழுத முடியாது. நிறைய பொய் கலந்து விடும் என்பதால் சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
  4. சந்திரமோஹன்,

    நல்ல ஒரு பதிவு. நானே மலேசியா வாசுதேவன் அவர்களுடன் உட்கார்ந்து பேசியது போன்ற ஒரு உணர்வு. வாழ்த்துக்கள்.

    வெங்கட் நாகராஜ்
    புது தில்லி

    ReplyDelete
  5. //முடிந்தால் அவற்றை டவுன்லோடு செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்ட அவரின் முகவரியை என் சோம்பேறித்தனத்தால் தொலைத்துவிட்டேன். அதற்காக இன்னும் வருத்தம் உண்டு என்னிடம்.//
    இதுபோல நம் சோம்பேறித்தனம், நேரமின்மை, கவனக்குறைவுகளால் சில அரிய பொக்கிசங்களை தொலைத்துவிட்டு பின் வருந்துவது வுண்டு. 1997ல் இளையராஜா அவர்கள் காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டிக்கு கவியரசர் கண்ணதாசன் விழாவிர்க்கு வந்தபொழுது
    இளையராஜாவின் ஓவியம் வரைந்து அதில் கைஎழுத்து வாங்கி வைத்திருந்தேன். தற்சமயம் அந்த படம் எங்கு இருக்கிறது என்று தேடிக்கொண்டு இருக்கிரேன்.
    நல்ல பதிவு, தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் ப்ற்றி எழுதுங்கள்.
    நன்றி
    ந.நவில்

    ReplyDelete
  6. முறைப்படி சங்கீதம் பயிலாமல் இருந்தாலும், இனிமையான குரல்வளம் இயற்கையாக இல்லது இருந்தாலும், கடுமையான உழைப்பினால் முன்னேறியவர் மலேசியா வாசுதேவன்.ராஜா எவ்வளவு அருமையான பாடல்களை இவருக்குத் தந்திருக்கிறார்!
    'கோவில் மணியோசையை' யாராலும் மறக்க முடியுமா?
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்'என்றென்றும் ஆனந்தமே'.பாடுவதற்கு மிகவும் எளிதாக இருப்பதுப் போல் தோன்றும்.ஆனால், இது மிகவும் கடினமான பாடல்.திஸ்ராம் சடுச்ரமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த பாடல்..
    ராஜாவின் இசையே என்றென்றும் ஆனந்தம் தானே!

    ReplyDelete
  7. இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை..அதை டவுண்லோடு செய்து என் அட்ரஸ்க்கு அனுப்பி வை. நான் அவரிடம் சேர்த்து விடுகின்றேன்.

    ReplyDelete
  8. சந்தனார், என் கதைக்கு உங்கள் ஓவியங்கள் மிக அருமை. நன்றி உங்களுக்கு.

    கட்டி வெச்சிக்கோ பாடல் இடம் பெற்ற படம் - என் ஜீவன் பாடுது

    ReplyDelete