Saturday, November 20, 2010
இசை வெளிச்சம்..
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக எதிர்பார்த்திருந்த கால கட்டத்தில் எனக்கு சுகந்தி அக்கா பழக்கமாகி இருந்தார். என் அண்ணனின் நண்பர் வட்டத்தில் இருந்த ஒரே பெண்ணான அவருக்கும் எனக்கும் இருந்த ஒற்றுமை இசை ரசனை தான். வி.குமார், ஷ்யாம், ஜி.கே.வெங்கடேஷ் என்று அதுவரை நான் கேள்விப்பட்டிராத இசை மேதைகளின் பாடல்களை நான் சுகந்தி அக்காவின் லேபில் தான் அறிந்துகொண்டேன். அக்கா ரத்தப்பரிசோதனை நிலையம் ஒன்றை அறந்தாங்கியில் நடத்தி வந்தார். என் வாழ் நாளில் இன்று வரை அவ்வளவு துணிவான, ரசனையான,இயல்பான பெண்ணை நான் பார்த்ததில்லை. தன் கிராமத்தில் முதன் முறை மோட்டார் சைக்கிள் ஓட்டியவர், தன் தந்தையுடன் வேட்டைக்கு சென்று வருவதை மிக இயல்பான செயலாக கொண்டவர் என்று அவரிடம் நான் வியந்த விஷயங்கள் நிறைய. அவரது லேபின் உள்ளே சென்று அங்கு இருக்கும் மியூசிக் சிஸ்டத்தை எந்த நேரத்திலும் உபயோகிக்க எனக்கு உரிமை தந்திருந்தார் அக்கா.
இளையராஜாவின் காலம் தொடங்குவதற்கும் விஸ்வநாதனின் காலம் முடிவதற்கும் இடைப்பட்ட காலத்தில் வந்த பாடல்கள் பொக்கிஷங்கள். விஸ்வநாதன் எஸ்.பி.பி இணைப்பில் வெளிவந்த பாடல்கள், வி.குமார்,ஷ்யாம், வெங்கடேஷ், எம்.பி.சீனிவாசன் போன்ற கலைஞர்களின் இசையில் வந்த அபூர்வ பாடல்கள் என்று சுகந்தி அக்காவின் ரசனை தொகுப்பே அலாதியானது. மருந்து வாசனை, குதிரைகள் புளுதிப்பறக்க ஓடும் ஓவியம் என்று அந்த சின்ன அறையில் என் ரசனை என்னை அறியாமலே வளர்ந்து கொண்டிருந்தது. நான் அப்போதிலிருந்து பாடுவதற்கு முயற்சி செய்து வருகிறேன். (இன்று வரை நான் ஒரு தோல்விப்பாடகன்..!)
எஸ்.பி.பி தன் மிக இளமையான குரலில் பாடும் 'ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்து பாடினேன்' என்ற பாடலை நான் அடிக்கடி பாடுவேன். அதே போல் 'பொன்னை நான் பார்த்ததில்லை' என்ற பாடலும் என் மனம் கவர்ந்த பாடல். கேள்விப்படாத பாடல்களை நான் மட்டுமே முதன்முறயாக கேட்கிறேன் என்ற அந்தரங்க பரவசத்தோடு கேட்டு ரசித்த பாடல்கள் அவை. மோகனுக்காக கமல் பாடிய 'பொன் மானை தேடுதே' என்ற பாடல் மிக அபூர்வமானது. (இணையத்தின் சாதனை: இன்று அத்தனை 'அபூர்வ' பாடல்களும் அவற்றின் வீடியோவும் கூட இன்று மிக பரவலாக கிடைக்கின்றன. தவிர இணையத்தில் நான் படித்து ரசித்த, ரசிக்கும் தளங்கள், forum கள் இவற்றை பற்றியும் மிக சிறப்பாக இசை பற்றி எழுதும் ரசிகர்கள் பற்றியும் நிறைய எழுத நினைத்திருக்கிறேன். லக்ஷ்மி நாராயண், லலிதா ராம் தொடங்கி Orkut இல் பெரிய அளவில் எழுதி வரும் ராஜேந்திரன், நாராயணன் சுவாமிநாதன், ஹார்ட்டா, அலெக்ஸ், இணையத்தில் மிக அற்புதமான இசைக்கட்டுரைகள் வெளிவரும் சொல்வனம் இணைய இதழில் எழுதும் கிரிதரன் என்று எத்தனை பேர்....இவர்களை இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியுடன் நினைக்கிறேன்..!)
நான் ரசித்த பாடல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்வுறுவதை விட உண்டா வேறு ஒரு இன்பம்..
1. பாடல் நான் பாட ..என் பார்வை தான் தேட..
2. ஆசை .. அது யாரை கேட்டும் வருவதே இல்லை..
3. பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே..
4. ஈரத்தாமரை பூவே..உன் இதழில் எத்தனை சாரங்கள்.. (இந்த பாடலை சமீபத்தில் தான் 'பார்த்தேன்'. மெல்லிய புன்னகை அரும்பியது..!)
5. ஸ்விம் ..ஸ்விம் உனது ஊஞ்சல் நான்..
6. மதனோற்சவம்..ரதியோடு தான்..
7. எனக்கு பிடித்த ரோஜாப்பூவை எடுத்து செல்லலாமா..
8. ராஜா பொண்ணு அடி வாடியம்மா..
9. நந்தா..நீ என் நிலா..
10.பூவே.. நீ ..யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்..
11. மழை தருமோ இம்மேகம்..
என்று பல பாடல்களை எனக்கு அறிமுகப்படுத்தினார் சுகந்தி அக்கா. அந்த நேரத்தில் ஏனோ எனக்கு எஸ்.பி.பி.- எம்.எஸ்.வி இணை பாடல்கள் தான் மிகவும் பிடித்தன. அந்த பாடல்களை கேட்கும் மதிய நேரமும், மெளனமாக வியாபித்திருக்கும் வெயிலும், ஊருக்கு வெளியே மொட்டைப்பாறைகளும், வாழ்வில் துயருறும் மனிதர்களும், பிரச்சனைகளை மனதில் தாங்கி புன்னகையுடன் வளைய வரும் பெண்களும், நான் இது வரை நேரில் கண்டிராத ஆனால் கண்டது போல் புழங்கியது போல் நினைவில் மிளிரும் தூர பிரதேசங்களும் இந்த பாடல்களுடன் எதோ ஒரு விதத்தில் தொடர்புடையன என்று தோன்றுகிறது. சில விஷயங்களை வார்த்தையில் விவரிக்க முடியாது.. அப்படியான உறவு இப்பாடல்களுடன் எனக்கு.. .ருஷ்ய இலக்கியம், மேன்மையான இசை ரசனை என்று எனக்கு பெரும் ஊக்கம் தந்த சுகந்தி அக்கா இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை...அவருடன் அமர்ந்து நான் கேட்டு ரசித்த பல பாடல்கள் மட்டும் இன்றும் என்னுடன்..
Subscribe to:
Post Comments (Atom)
இந்தப் பட்டியலில் 5 பாடல்கள் அளவில் கேட்டிருக்கின்றேன், எனக்கு பிடித்தது ஈரத்தாமரைப் பூவே...
ReplyDeleteஎனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று, பாய்மரக்கப்பல் திரைப்படத்தில் இப்பாடல் காட்சியில் ஜனகராஜ் நடித்தார் என்று நினைவு.
இது போலவே ராஜாவின் வீழ்ச்சியும் ரஹ்மானின் எழுச்சியும் நிகழ்ந்த காலப் பகுதிகளில் வந்த பாடல்கள்........ குறிப்பாக பாட்டுப் பாடவா, அவதாரத்தில் ராஜாவின் இசை தரும் அனுபவம்...
அது போலவே transition period இசை அமைப்பாளார்களாக கருதக்கூடிய ஆதித்யன், சௌந்தர்யன், மரகதமணி போன்றோரின் இசை....
குறிப்பாக ஆதித்யனின் சந்திரனே சூரியனே, வசந்தமே அருகில் வா (அமரன்), கிழக்கு செவக்கையிலே (சீவலப்பேரி பாண்டி - ஆதித்யன்) போன்றவை என்னளவில் ஓர் இசை உச்சங்களே
உண்மை தான் அருண்மொழி..
ReplyDeleteரஹமானின் பாணியை பின்பற்றி வெற்றி கண்ட தேவா, வித்யாசாகரை விட..ராஜா என்ற பெரிய சக்திக்கு முன்னால் தன் சொந்த பாணியில் இசை அமைத்த சௌந்தர்யன், சிற்பி, மரகத மணி போன்றோர் பாராட்டத்தக்கவர்கள்.
ஆதித்யனின் ' வசந்தமே அருகில் வா', மரகதமணியின் ' சோகம் இனி இல்லை..அட இனி வானமே எல்லை' பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.
'ஈர தாமரை பூவே' ..ஆம் ஜனா நடித்து தான். பாய்மரக்கப்பல் பட பாடல்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
அருமையான பதிவு..
ReplyDeleteபாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் குறிப்பிட்டால் பதிவிறக்கம் செய்ய ஏதுவாக இருக்கும்..
நன்றி
சில பாடல்கள் எந்த படத்தில் இடம்பெற்றவை என்று எனக்கும் நினைவில்லை..இணையத்தில் தேடி அவற்றையும் குறிப்பிடுகிறேன்..நன்றி யோகேஷ்..
ReplyDeleteமேலே குறிப்பிட்ட பாடல்களில் சிலவற்றைக் கேட்டிருக்கிறேன். “நந்தா, நீ என் நிலா” மிகவும் ரசித்த பாடல்.
ReplyDeleteஇசை பற்றி இன்னும் எழுதுங்கள்.
5,6,9,11 இவைதான் கேட்ட பாடல்கள். பிடித்தமானவையும். நல்ல பகிர்வு.
ReplyDelete3,5,6,11 இவைகள் தான் நான் அறிந்துள்ள பாடல்கள்.. 3ம் பாடல் பஞ்சகல்யாணி என்று நினைக்கிறேன். தேவராஜன் இசை என்று நினைக்கிறேன். தவறாகவும் இருக்கலாம்
ReplyDeleteஎன்னுடைய ஞாபகம் சரி என்றால் 'பூவே.. நீ ..யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்' பாடலை இசையமைத்தது A.K. Raj.சரிதானே?
ReplyDelete@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteநந்தா நீ என் நிலாவில் எஸ்.பி.பியின் ஆலாபனை அருமையாக இருக்கும்.
நன்றி வெங்கட் சார்..இன்னும் எழுத தூண்டுகிறது உங்கள் வார்த்தை.
ராமலஷ்மி & அருணாசலம் ..இருவருக்கும் நன்றி..
என்னிடம் இருக்கும் பாடல்களை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறேன்.
@sitrodai..
மிக சரி. A.K.ராஜ் தான் இசை.
அவரை பற்றியும் இன்னும் வெளியில் தெரியாத பல இசை அமைப்பாளர்களையும் பற்றி நிறைய தெரிந்து கொள்ள dhool.com க்கு செல்லவும்.
அருமையான தளம்.