Friday, May 27, 2011

வார்த்தைகளில் மிளிரும் வண்ணங்கள்: ஜீவானந்தன்


தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நாள். செறந்த நடிகர் விருதை மிகப்பெரும் நடிகர் திலகமான தனுஷுக்கு வழங்கி பேரதிர்ச்சி கொடுத்தது தேசிய விருது தேர்வுக்குழு . என்ன நிர்பந்தமோ முந்தைய ஒப்பந்தமோ தெரியவில்லை!!! திரைக்கதை என்றே பார்த்தாலும் மிக சுமாரான படமான ஆடுகளத்துக்கு ஆறு விருதுகள் என்று அபத்த தேர்வுகள் ஆத்திரத்தை விட ஆச்சர்யத்தை தான் தந்து கொண்டிருந்தன. திடீரென்று முகநூல் நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி கிடைத்தது. ஓவியரும் எழுத்தாளருமான ஜீவானந்தம் எழுதிய 'திரை சீலை' என்ற புத்தகத்துக்கு சினிமா பற்றிய சிறந்த புத்தகத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நண்பர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிழ்ச்சிக்கு காரணம் எப்போதாவது மலரும் அரிய தருணம் போல் உண்மையில் தகுதியானவருக்கு அந்த விருது கிடைத்திருப்பது. 'ரசனை' இதழ்களில் சினிமா பற்றி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அந்த புத்தகம்.

ஜீவானந்தம் என் ஓவிய, எழுத்துலக வளர்ச்சியில் மிக பெரிய ஆதர்சமாக இருப்பவர். என்னை போன்ற ஓவியம், இலக்கியம் ஆர்வம் கொண்ட எத்தனையோ பேருக்கு பெரும் வழிகாட்டியாக இருப்பவர். புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான மணிகண்டன் இவரது சகோதரர். ஜீவாவின் மகனான ஆனந்தும் ஒரு ஒளிப்பதிவாளர் தான். மிக சிறந்த ஓவியரான ஜீவாவின் சினிமா அறிவு வெறும் ரசனை சார்ந்தது மட்டும் அல்ல. அது சுவாசம் போல் அவருக்கு இயல்பிலேயே இருப்பது. கோவை நகரின் பிரசித்தி பெற்ற ஓவியரான ஜீவாவின் தனித்தன்மை மிக்க சினிமா பேனர்கள் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதையல். வெறுமே நாயகன் நாயகிகளை பிரதானபடுத்தாமல் படத்தின் முக்கிய காட்சிகளை இயக்குனர்களை தன் கற்பனை கலந்து பிரமிக்கத்தக்க ஓவியமாய் படைப்பவர். கோவை நகரின் பல ஓவியர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர்.

அவருடனான என் நட்புக்கு காரணம் இளையராஜாவின் இசை தான். சில வருடங்களுக்கு முன் ஒரு இணையத்தில் நான் தத்துபித்தென்று ராஜா பற்றி எழுதிய பதிவுக்கு பிறகு அவரது அறிமுகம் கிடைத்தது.ராஜா மட்டும் அல்ல பல சிறந்த இசைக்கலைஞர்களை ஆராதிப்பவர். முக்கிய ஓவியர் (பல இலக்கிய படைப்புகளுக்கு தன் ஓவியங்கள் மூலம் உயிரூட்டியவர்) எண்பதுகளிலேயே பத்திரிக்கைகளில் சினிமா விமர்சனம் எழுதியவர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாய் பழகுபவர். திறமைசாலிகள் பலரிடம் இல்லாத குணம் அது. ஒரு சுவாரசியமான விஷயம். அவர் பள்ளியிலோ கல்லூரியிலோ தமிழை பாடமாக படிக்காதவர். அவரது கட்டுரைகளை வாசித்தவர்களுக்கு இது நிச்சயம் ஆச்சர்யமாய் தான் இருக்கும். சரளமான, நேரடியான சந்திப்புகளில் பகிரப்படும் தொனியில் அதே சமயத்தில் உள்ளார்ந்ததாகவும் அமையும் ஜீவாவின் எழுத்து.

முகநூலில் அவரது பல பதிவுகள் கருத்துகள் ஆராதிக்கப்படுபவையாயும் விவாதத்துக்கு உரியவையாயும் இருப்பவை. எனினும் எந்த காலத்திலும் எதிராளி மனம் நோகும்படி பேசியதே இல்லை அவர். நானெல்லாம் 'கருத்து மோதல்' செய்கிறேன் பேர்வழி என்று என் ஆதர்சங்கள் பலரிடம் சற்று அதிகப்படியாய் பேசி புண்படுத்தி இருக்கிறேன். ஜீவாவிடமே அப்படி சில விவாதங்களில் 'கருத்து சுதந்திரத்தோடு' பேசி இருக்கிறேன். அவர் சிறு புன்னகையுடன் " கருத்து மோதல் என்ற பெயரில் நண்பர்களை நான் காயப்படுத்துவதில்லை " என்பார். மேன்மக்கள் மேன்மக்கள் தானே!

ஜீவாவுக்கு கிடைத்த விருது பற்றி ஆங்கில தினசரிகளில், பத்திரிக்கைகளில், எழுத்தாளர்களின் இணைய தளங்களில் கட்டுரைகள் வெளியாகின்றன. சந்தோஷம் என்பது சாதாரண வார்த்தை. அதற்கு மேல் ஒரு வார்த்தை இருக்கும் எனில் அது என் எண்ணத்தின் பிரதிபலிப்பாக தான் இருக்கும்.
அவரது ஓவியங்களில் சில:



ஜீவாவின் வலைப்பூ
http://jeevartistjeeva.blogspot.com/

10 comments:

  1. சூப்பர் வாழ்த்து. சமீபத்தில் கோவை சென்றிருந்த போதும் அவரைச் சந்த்திக்க இயலவில்லை. :(
    நன்றி சந்திரமோகன்...!

    ReplyDelete
  2. உங்க ஸ்டைல்ல அவரோட கோட்டோவியம் ஒண்ணூ வரைஞ்சிருக்கலாம்...இன்னும் முழுமை அடைந்திருக்கும் பதிவு...

    ReplyDelete
  3. நன்றி, சந்திரமோகன்!!!!!

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி மோகன். பகிர்ந்த இரண்டு ஓவியங்களும் அழகாய் இருக்கிறது..

    ReplyDelete
  5. ஓவிய அழகிற்கு எழுத்தில் மேலும் அழகு சேர்த்ததற்கு நன்றி.

    ReplyDelete
  6. சந்திரா .. நன்றி சந்திரா ஜீவாவின் சார்பாக .நான் செய்து இருக்க வேண்டும் .. என் சம வயது தோழர்.. நானும் அவரும் ஒன்றாக திசைகள் மூலம் வெளி உலகிற்கு அறிமுகம்.. நான் எழுதி இருக்க வேண்டும் இப்படி ஒரு கட்டுரை.. வாழ்த்துகள் சந்திரா..

    ReplyDelete
  7. அருமை சந்திரா.. நல்ல மண்மகுடம்.. வாழ்த்துக்கள் ஜீவா..:)

    ReplyDelete
  8. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களே ஜீவாவிற்கு கிடைத்தது "நல்ல மண்மகுடம்" அல்ல மாணிக்க மணிமகுடம்...

    ReplyDelete
  9. நன்றி மகி..அது அவரது தவறு அல்ல. google transilteration இல் எழுதும்போது இடம்பெறும் எழுத்து பிழை !! நாம் மணி என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..

    ReplyDelete
  10. வாழ்த்துக்களை வாழ்த்தும்படி மிகக் கச்சிதமாக சொல்லி இருக்கிறீர்கள் !வாழ்த்துக்கள்

    ReplyDelete