Saturday, April 30, 2011

நினைத்தாலே இனிக்கும்- அனுபவம்சிறுவயதில் அறந்தாங்கி யில் நாங்கள் இருந்தபோது வீரமாகாளியம்மன் கோவில் தெப்ப திருவிழாவில் ஒவ்வொரு சமூகமும் மண்டகப்படி நடத்தும். ஒவ்வொரு இரவும் வெவ்வேறு இசைக்குழுக்கள் கச்சேரி நடக்கும். திண்டுக்கல் அங்கிங்கு போன்ற புகழ்பெற்ற இசைக்குழுக்கள் எங்கள் ஊர் இரவுகளை இசையால் நிரப்பி ததும்ப ததும்ப பாடல்களை காதுகளில் ஊற்றி அனுப்புவார்கள். ஒன்பதாம் வகுப்பு வரை அம்மாப்பா கூடவே சென்று தெப்பத்திருவிழாவையும் கோயில் முன்பாக நடக்கும் இசைக்கச்சேரிகளையும் பத்திரமாய் பார்த்துவிட்டு பாய்ஸ் ஹைஸ்கூல் கிரவுண்டு வழியாக வீடு திரும்புவோம். வரும்போது என் சகோதரிகள் மற்றும் பக்கத்துக்கு வீட்டு பெண்கள் கச்சேரியில் கேட்ட பாடல்களை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டு வருவார்கள். "தொட்டால் பூ மலரும் ." .பாட்டை இவங்க பாடி கேக்கும்போது இன்னும் இனிமையா இருந்திச்சில்லக்கா" எனும்போது நான் ஆவென்று கேட்டுக்கொண்டே வருவேன். பாடகர்களின் பெர்சனாலிட்டி பற்றி பெர்சனல் கமென்ட் பறக்கும். "அந்த கிர்தா வச்சவனுக்கு என்னம்மோ மோகன்னு நினைப்பு , மைக்கை அப்படி இப்படி சுத்தி சுத்தி பாடுறான்.." என்பாள் மேல் வீட்டு சாந்தி அக்கா. "என்னக்கா.." என்று ஆர்வமாய் கேட்டால் .."வாய் பாக்கதடா" என்று தலையில் செல்லக்கொட்டு ஒன்று விழும். தொல்லைக்காட்சி அவ்வளவு புழக்கத்துக்கு வராத காலம் அது. இசை கேட்க காதுகள் திறந்திருக்கும். மனதும்.

அந்த இசைக்கலைஞர்கள் பற்றிய நினைவு வீடு வரை தொடரும். நீலக்கலர் சட்டை போட்டு ஒரு பெரிய கீபோர்டை வாசித்துக்கொண்டிருந்த ஒருவர் இடையில் மேடையை விட்டு கீழிறங்கி கூட்டத்துக்கு நடுவே நின்று யாரோடோ பேசிக்கொண்டிருக்கும்போது எப்படியாவது அவர் கையை தொட்டு விட வேண்டும் என்று நினைத்தது இன்றும் நினைவில் இருக்கிறது. "மருதமலை மாமணியே" முருகையா பாடலை பாடுவதற்கென்று ஒரு பாடகர் உண்டு. அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. அதே போல் " சங்கீத ஜாதி முல்லை " பாடலுக்கு ஒருவர். அறந்தை கோட்டை வீதிகளில் ரவுடிகள் போல் திரியும் சிலரை அப்போது பார்த்திருக்கிறேன். பாடலில் உருகி கைதட்டி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அவர்கள் பாடலை ரசிக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். அவர்களுக்குள் இப்படி ஒரு ரசனையா என்று வியப்பேன். எப்படியாவது பெரிய ஆளான பிறகு ஒரு மேடைப்பாடகனாக ஆக வேண்டும் என்று மனம் துடிக்கும். பள்ளி நாட்களில் விக்ரம் படத்தின் டைட்டில் பாடலான "விக்ரோம் ..விக்ரோம் " பாடலை அதன் பின்னணி இசை , ஜானகியின் ஹம்மிங் ஒன்று விடாமல் அச்சு அசலாக (!) பாடுவேன். "துடிக்குது புஜம்..டுகுடு டுகுடு டுடு டுடு " என்று பாடும்போது எனக்கும் கூட்டம் கைதட்டும்.

பின்னாளில் புதுக்கோட்டை இசைக்குழு ஒன்றில் பாட சந்தர்ப்பம் கிடைத்தது. காரைக்குடி பக்கம் ஒரு கிராம திருவிழாவில் எனது முதல் கச்சேரி. வருங்கால முதல்வர் விஜய காந்த் நடித்த "வானத்தை போல " படத்திலிருந்து " காதல் வெண்ணிலா " பாடலை அவ்வளவு பெரிய ஜனத்திரளுக்கு முன்னால் பாடினேன். நம்ப மாட்டீர்கள் நண்பர்களே..'விஜயகாந்த்' நற்பணி குழு ஒன்று நூறு ரூபாய் அன்பளிப்பு அனுப்பி ஒன்ஸ் மோர் பாட சொன்னார்கள். இசை மீதான காதலும் பாராட்டுக்கு ஏங்கும் சிறு மனதும் சுமந்து அலைந்த நாட்கள் அவை. முக்கியமாக நான் கிராம திருவிழா கச்சேரிகளை மிஸ் பண்ணவே மாட்டேன். ஒளிரும் அலங்கார விளக்குகளில் பளீரென்று மின்னும் கிராம தெருக்களில் உற்சாக முகங்களுடன் தென்படும் முகங்கள் தரும் பரவசம். அங்கு சென்றதும் ஊர் தலைகள் எங்களுக்கு தரும் அநியாய மரியாதை ஒரு புறம். ஊர் தலைவர் வீட்டிலோ அல்லது அருகில் இருக்கும் மண்டபத்திலோ விருந்து நடக்கும். சுடச்சுட இட்லி வைத்து அதற்கு மேல் கறிக்குழம்பு ஊற்றுவார்கள். அந்த சுவை கிராமங்களில் அல்லாமல் வேறு எங்குமே கிடைக்காதது. அந்த சுவைக்கு சுழலும் நாவுக்காக என்றே நான் அந்த கச்சேரிகளுக்கு செல்வேன். ஓரிரண்டு பாடல்களும் , அவ்வபோது மெயின் சிங்கர் பாடும் போது மற்றவர்களுடன் இணைந்து " ஆ..ஆ.." என்றோ " லாலா " என்றோ ஆலாபனை ( கோரஸ் தான் :) பாடக்கிடைக்கும். அதுவரை மற்றவர்கள் பாடும்போது மேடையில் பின் வரிசை நாற்காலிகளில் அமர்ந்து கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். தமக்கு விருப்பமான பாடல் பாடப்படும்போதும் பாடல் சிறப்பாக அமைந்து விடும்போதும் கண்கள் விரிய சிரித்து கைதட்டும் கிராம பெண்களின் அழகை பாட இனி மேல் தான் ஒருவர் பிறந்து வரவேண்டும்.
டெல்லி வந்த பின், அறை நண்பர் குமரன் தந்த ஊக்கத்தில் இங்குள்ள ஆர்கெஸ்ட்ரா குழுவில் ஒன்றிரண்டு பாடல்கள் பாடினேன். அது பற்றி ஒரு தனிப்பதிவே எழுதலாம். நான், வரதராஜன், குமரன் என்று எங்கள் அறையின் பிரத்யேக இசைக்குழு நடத்திய கச்சேரிகளுக்கு கணக்கே இல்லை. முனிர்காவின் ஒரு பகுதியை தூங்கவிடாமல் அடித்தோம் சில காலம்.தமிழ் சினிமாவில் இசைக்குழுக்கள் பற்றி சரியான படம் இன்னும் வரவில்லை. முழுக்குழுவும் மேடையேறி ஒரே ஒரு பாடல் பாடிவிட்டு புறப்படுவதாக தான் எல்லா படங்களும் அமைகின்றன.இதற்காகவா அவ்வளவு கூட்டம் காத்திருக்கும். இடையில் கதாநாயகனோ- கியோ பாடலை மறந்து திணறினால் அவரது ஜோடி மீதிப்பாடலை கூட்டத்துக்கு நடுவில் இருந்து பாடிக்கொண்டே மேடை நோக்கி நடந்து வரும். இருக்கும் படங்களில் இது போன்ற அபத்தங்கள் ஏதுமில்லாமல் மிகுந்த முதிர்ச்சியான நகைச்சுவையுடன் அருமையான காதல் பயண அனுபவமாக இன்றும் நினைத்தால் இனிக்கும் படம் ஒன்றே ஒன்று தான். கமல், ரஜினி, ஜெயப்ரதா பின்னியெடுத்த படம். உண்மையில் இந்த பதிவு எழுதும்போது கே.பிக்கு பால்கே விருது அறிவிக்கப்படிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. பாலச்சந்தர் படங்கள் மீது வெவ்வேறு கோணங்களில் விமர்சனம் வைக்க முடியும் என்றாலும், கதாபாத்திரங்களை அவர்களுக்குண்டான பிரத்யேக பிரச்னைகள், அவற்றை எதிர்கொள்ளும் தீவிரம் என திரையில் காட்டி தமிழ் திரையுலகில் தனித்த அடையாளங்களை அழுந்த பதித்தவர். எனக்கு அவரது நகைச்சுவை உணர்வு தான் மிகவும் பிடித்தது. நினைத்தாலே இனிக்கும் ஒரு உதாரணம்.

இளையராஜா ஒரு வேகம் கொண்ட தென்றலாய் தமிழ் திரை இசையுலகில் நுழைந்து ரசிகர்களை ஈர்த்துகொண்டிருந்தபோது தன் இருப்பை அழுத்தமாய் பதிவு செய்ய மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இந்த படம் பெரும் வாய்ப்பாக அமைந்தது. தன் நீண்டகால நண்பரின் இசையாற்றலை ரசிகர்களுக்கு காட்டவென்றே இந்த படத்தை எடுத்தார் போலும் கே.பி. டைட்டிலிலேயே எம்.எஸ்.வி மியூசிகல் என்று எழுதி இருப்பார். என்ன அருமையான இசை. என்ன ஒரு modernity! எனக்கு பாடல்களை கேட்கும்போது ராஜா-ஸ்ரீதரின் 'இளமை ஊஞ்சலாடுகிறது' பாடல்களுக்கு மெல்லிசை மன்னரின் பதிலோ என்று தோன்றும். "ஒரே நாள் உனை நான்" - "பாரதி கண்ணம்மா", " நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா "- "ஆனந்த தாண்டவமோ" , "என்னடி மீனாட்சி" - "எங்கேயும் எப்போதும்". நண்பர்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். என்னளவில் நான் நினைத்தது அப்படி தான்.
படத்தின் இசை ராஜாவுக்கும் மக்களுக்கும் மன்னர் தந்த பதில் என்றே நினைக்க தோன்றுகிறது. அதே போல் ரஹ்மானுக்கு பதில் சொல்ல இன்னும் ராஜா மனதளவில் தயாராகவில்லை என்பது தான் என் எண்ணம்.

படத்துக்கு கதை-வசனம் சுஜாதா என்று ஞாபகம். ஒவ்வொரு பிரேமிலும் இளமை தெறிக்கும். கமல் தன் குழுவை அறிமுகப்படுத்தும்போது தொடங்கும் சிரிப்பு சூட்கேஸ் மேல் நின்று கமலாகர் ராவ் தன் உயர்ந்த மனைவியிடம் 'உத்தரவு' வாங்கும் காட்சி, ரஜினி இங்கிலீசு பேசி டபாய்க்கும் காட்சி என்று அமர்க்களமாய் இருக்கும். இப்போது பார்த்தாலும் அர்த்த்ம் உணர்ந்து சிரிக்க வைக்கும் காட்சிகள். இந்த படத்தின் மிக முக்கிய அம்சம், வெளிநாடு செல்லும் தமிழ் மனதின் வெளிப்பாடு. அந்த ஊர் ஆச்சர்யங்களை அனுபவித்தபடி சொந்த அறியாமைகளை நகைச்சுவையாக்கி ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொள்வதை அதன் இயல்பிலேயே படமாக்கி இருப்பார் கே.பி. கழிவறை வாசலில் ஆண்-பெண் படங்களின் வேறுபாடு புரியாமல் விழித்து தவித்து , ஒருவர் ஆண்களுக்கான கழிவறையில் நுழைவதை பார்த்து அவர் பின்னாலே ஓடும் காட்சி ஒரு உதாரணம்.

இலக்கிலாமல் பயணித்தாலும் ஜெயப்ரதாவின் மரணம் பற்றிய எண்ணத்தை சிம்பாலிக்காக காட்டும் காட்சிகளும் , அவரது நடிப்பும் படத்தின் நாடியை கைவிடாமல் கொண்டுசெல்லும் . மாற்றி மாற்றி அவர் செய்யும் குழப்படிகளை பொறுக்காமல் கமல் வெறுப்பில் பொருமுவதும் அருமை. ஒரு காட்சியில் கோபத்தில் முதலை குட்டையில் ஜெய்ப்ரதாவை தள்ளிவிடுவது போல் பயமுறுத்தும் காட்சியில் கமல் முகபாவனை அவ்வளவு நிஜமாய் இருக்கும். "நான் சொன்னால் ஹெலிகாப்டரில் இருந்து அப்படியே குதித்து நடிப்பார் " என்று ஜேம்ஸ் கேமரோன் ஆர்னால்டை பற்றி சொன்னதாய் படித்திருக்கிறேன். அது போல் ரஜினியும் பாலசந்தர் சொன்னார் என்பதற்காக "டேப்- சுந்தரியை" தேடும் காமெடி பாத்திரத்தில் வெளுத்து வாங்கி இருப்பார். துரு துருவென பேசி சிரிக்கும் ஜெயசுதா (தானே?) பாத்திரம் அருமை. அவரது கணவனாய் வந்து காரோட்டும் நபரின் முகத்தில் என்னவொரு முரண்நகை சிரிப்பு.

முன்பே சொன்னது போல் இது எம்.எஸ்.வி.யின் படம். எனவே சண்டைக்காட்சியில் கூட "டிஷ்யூம் டிஷ்யூம் " என்று ஒரு பாட்டு. ஆஹா. எஸ்.பி.பி தான் என்னமாய் பாடி இருப்பார் ஒவ்வொரு பாடலையும். என்ன ஒரு பாவம் குரலில். "நிழல் கண்டவன்" என்று கமலுக்கு பாடும்போதும் "ராஜாவை பார்க்காமல் ரோ......ஜா" (இடையில் ஒரு பிர்கா!) என்று ரஜினிக்கு பாடும்போதும் தான் என்னவொரு வெரைட்டி. இப்போதெல்லாம் ஒரே பாடலை போர்ஷன் போர்ஷனாக பத்து பேர் பாடுகிறார்கள். ரஹ்மான் செய்த புண்ணியங்களில் புதிய பாடகர்கள் அறிமுகம் ஒரு திறப்பு என்றாலும் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தராமல் "பரிசோதனைகளை" மேற்கொண்டே இருப்பதால், எவரும் இங்கே நிலைக்கவில்லை. தொண்ணூறுகளின் இறுதி வரை நிறைய படங்கள் இசை அமைத்த தேவா தான் ரஹ்மான் அறிமுகப்படுத்தும் பாடகர்களை கப்பென்று பிடித்து வாய்ப்பு தருவார். ரஹ்மான் ஒரு பாடல் தந்தால் தேவா பத்து பாடல்களுக்கு வாய்ப்பு தருவார். இப்போது அதுவும் இல்லை. சமீபத்தில் விகடனில் மதன் பதில்களில் இந்த தலைமுறை பாடகர்கள் பற்றிய ஒரு பதில் நூற்றுக்கு நூறு உண்மை.

நினைத்தாலே இனிக்கும் நன்றாக ஓடவில்லை என்று சிலரும் இரண்டாவது ரிலீசில் படம் சக்கை போடு போட்டது என்று சிலரும் சொல்கிறார்கள். ஆனால் இன்றும் நான் சோர்வாக இருக்கும் சமயங்களில் பார்த்தால் இழந்த உற்சாகத்தை மீட்டுக்கொடுக்கும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்ற வகையில் எப்போது நினைத்தாலும் இனிக்கும் படம், of course ! இசை அனுபவம். "யாதும் ஊரே" பாடலின் கம்பீர முகப்பு இசைக்கு சிங்கப்பூரின் கடற்கரையும் இயற்கை அழகும் காட்டப்படும் போது மனம் சிலிர்க்கும். அதே போல் ஜெயப்ரதாவின் மரணம் உறுதியாகி விட்ட பின்பு அவரும் கமலும் தாங்கமுடியாத துயரம் தோய்ந்த முகங்களோடு தாம் முன்பு சுற்றி பார்த்த இடங்களை பார்த்தபடி உறைந்து நிற்க பின்னணியில் எம்.எஸ்.வி. விரலசைவில் எஸ்.பி.பி.- ஜானகியம்மா பாடும் 'நினைத்தாலே இனிக்கும்' பாடலுக்கு ஒரு மாற்று உண்டா?

கே.பிக்கு வாழ்த்துகள்..

13 comments:

 1. Vaazhtukkal, oru mini flashback maadiri irundichu, once in a while you get movies like Ninaithaale Inikkum, hats off to KB, your description about the movie was fantastic,

  ReplyDelete
 2. athu jeyasutha alla Geetha(Puthu puthu arthangal)

  ReplyDelete
 3. இல்லை..நான் சொல்வது ஒரு பெண்ணை அவரது வீட்டில் சென்று சந்திப்பாரே ரஜினி ..(நாட்டி பாய்!) அந்த பெண்ணை. அது ஜெயசுதா தான் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.

  ReplyDelete
 4. பாலச்சந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. நினைத்தாலே இனிக்கும் பற்றிய உங்கள் வர்ணனை அருமை பாஸ்...அந்த காலத்திற்கே கொண்டு சென்றது.

  ReplyDelete
 6. மிக்க நன்றி ரஹீம்..!!!!

  ReplyDelete
 7. மிக்க நன்றி சௌந்தர்!!!!

  ReplyDelete
 8. நினைத்தாலே இனிக்கும் – இனிக்க இனிக்கப் பார்த்த படம். அதிலும் ரஜினியின் காமெடி.. ரசிக்க வைத்தது அந்த படம். சென்ற முறை சென்னை சென்றபோது அதன் தகடு வாங்கிக் கொண்டு வந்தேன் – வந்ததிலிருந்து இரண்டு மூன்று முறை பார்த்து விட்டேன்…. நல்ல ரசனையுடன் எழுதிய உங்கள் பகிர்வு கண்டு மகிழ்ச்சி மோகன்.

  ReplyDelete
 9. மிக்க நன்றி வெங்கட். இன்றும் பார்த்தாலும் கமல்-ரஜினி மற்றும் நண்பர்கள் குழு செய்யும் காமெடி ஒரு கொண்டாட்டம். "டொயோட்டா கார்" சீனை மறக்க முடியுமா?

  ReplyDelete
 10. பாலச்சந்தரைப் பற்றி எனக்கென்று சில கருத்துக்கள் உண்டு.என்றாலும், ஒரு உயரிய விருதினை அவர் பெற்றிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பற்றி விமரிசனம் செய்வது நாகரீகம் இல்லை என்று கருதுவதால், ஒரு தமிழன் என்ற முறையில் அவரை வாழ்த்துவதோடு விட்டு விடுகிறேன்.

  'நினைத்தாலே இனிக்கும்' விஸ்வநாதன் அவர்களின் படம்.என்றாலும், அவர் ராஜாவிற்குப் பதில் கொடுத்த படம் என்பதெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்.விஸ்வநாதன் அவர்கள், எந்த சந்தர்ப்பத்திலும் ராஜாவை ஒரு போட்டியாக நினைத்ததில்லை(ராஜாவை மட்டுமல்ல..எந்த இசை அமைப்பாளரையும்).அதே போல் ராஜாவும், எந்த ஒரு இசையமைப்பாளருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இல்லை.

  இந்தப் படத்தை வெகுஜன பத்திரிகைகள் எல்லாம் அந்த காலத்தில் கிழி கிழி என்று கிழித்தன.படத்தின் இறுதியில், 'இளைஞர்களுக்கு சமர்ப்பணம்' என்று வரும்.
  'இளைஞர்களை அவ்வளவு மோசமாக நினைக்கிறாரா கே.பி.' என்று கேட்டது ஒரு விமர்சனம்.படத்தின் கதை திரு.சுஜாதா அவர்கள்தான்.ஆனால் படம் வெளிவந்தவுடன், 'நான் அருமையாக எழுதிய கதையை கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள்' என்று வழக்கம் போல் அழுதார்(பின்னாளில், இவர் எழுதிய 'சிவாஜி' போன்ற படங்களைப் பார்த்து நாம் அழுதது வேறு விஷயம்).


  மற்றபடி, நன்றாக எழுதப்பட்ட ஒரு பதிவு.நன்றி!

  ReplyDelete
 11. மிக்க நன்றி ராஜ்..
  சின்ன வயதில் இருந்து இந்த படத்தின் இசை ராஜாவுக்கு சவால் என்றே கேள்வி பட்டிருந்தேன்:)
  தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
  அந்த காலகட்டத்தில் விமர்சனம் எப்படி இருந்தது என்பதும் தெரியாது. வெகு நாட்களுக்கு பின் தான் சுஜாதா அந்த படத்தின் கதை என்று தெரியவந்தது. சுஜாதா எப்போதும் தன் கதைகளை சரியாக பயன்படுத்தவில்லை என்றே எழுதிவார். ஆனால் ஆவரேஜ் படங்களில் பணியாற்றியதை பற்றி சிலாகிப்பார்.

  உங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது ராஜேந்திரன்..

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete