Tuesday, June 8, 2010

இந்திய சினிமாவின் நிலை..




இந்திய சினிமாவின் நிலையை நினைத்தால் உண்மையிலேயே ரத்தக்கண்ணீர் வருகிறது. ஹிந்தி படமாகட்டும் தமிழ் படமாகட்டும் சினிமா மொழியை புரிந்து கொள்ளாதவர்கள், புரிந்து கொள்ள மறுப்பவர்கள், புரியவே புரியாத புத்திசாலிகள் , தனக்கு மட்டும் புரிந்து விட்டதை போல் பீற்றி கொள்ளும் இயக்குனர்களால் தான் ஆளப்படுகின்றன. இலக்கியத்தின் காட்சி வடிவமாகவே நான் கருதும் சினிமாவை இவர்கள் கொன்று அழித்து வருகிறார்கள்.
பையா போன்ற விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட (!) படங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் தமிழ் சினிமாவில் மிஞ்சுபவை லுங்கி கட்டிய பரட்டை தலை ஹீரோக்களின் படங்கள். கையில் அரிவாள், இடுப்பில் லுங்கி, வாயில் பீடி அல்லது கஞ்சா என்று வாழும் மனிதர்கள் உண்மையில் தமிழ் நாட்டில் எங்கு இருக்கிறார்கள்?
இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய கால கட்டத்தை பிரதிபலிப்பதாக எடுக்கப்பட்ட 'சுப்ரமணியபுரம்' படத்தை நகலெடுக்கும் இயக்குனர்கள் தான் வாழும் காலத்தை உணர்ந்திருக்கிறார்களா இல்லையா? நாளிதழை புரட்டினால் தாவணி போட்ட பெண்ணும், லுங்கி கட்டிய பரட்டை தலையும் சைக்கிளில் போவது போலவே தான் சினிமா விளம்பரங்கள் வருகின்றன.

சினிமாவுக்கு உரிய எந்த அமைப்பும் இல்லாத தனுஷ் போன்றவர்களின் வெற்றி அப்போதைய காலகட்டத்தில் கொடுத்த நம்பிக்கை நல்ல சினிமாவை நேசிப்பவர்களின் மத்தியில் இப்போது தகர்ந்து வருவதற்கு யார் காரணம்? நான் பெரிதும் மதிக்கும் பாலு மகேந்திரா 'அது ஒரு கனா காலத்துக்காக தனுஷை தேர்ந்தெடுத்தபோது இன்றைய இளைஞர்களை திரையில் பிரதிபலிப்பதாலேயே தனுஷ் வெற்றி பெறுவதாக சொன்னார். ஆனால் நடப்பது என்ன? ரெண்டு படத்தில் 'யதார்த்த' மாக நடிக்கும் அந்த சாதா முக நடிகர்கள் மூன்றாவது படத்தில் 'ஓபனிங் சாங்கோடு' ஓவர் டெசிபலில் கத்துகிறார்கள். சிற்றிலக்கிய பத்திரிக்கை பின்னணியில் வரும் இயக்குனர்கள் மாற்றி யோசிக்கிறோம் என்கிற போர்வையில் ரசிகனின் மென்னியை கடித்து துப்புகிறார்கள்.
இந்த கொடுமை போதாதென்று தங்களை elite பிரதிநிதிகளாக கருதிக்கொள்ளும் அரைகுறை மற்றும் திருட்டு இயக்குனர்கள் படுத்தும் பாடு சொல்லி மாளாது. வெகு நாட்களாய் அவதானித்த பிறகு தான் இவர்களை பற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன். மிக முக்கியமாக தன்னை தமிழ் நாட்டின் அறிவு ஜீவி என்று எண்ணிக்கொண்டு அலட்டும் கௌதம் மேனன். மின்னலே என்கிற mediocre படத்தை எடுத்து விட்டு அவர் ஆரம்பித்த அலம்பல் இன்று விண்ணை தாண்டி வருவாயா எனும் அர்த்தமற்ற எரிச்சல் மூட்டும் படம் வரை வந்து நிற்கிறது. போதாத குறைக்கு செம்மொழி மாநாட்டு பாடல் வேறு. தமிழர்களுக்கு நேரும் அவலத்தை பார்த்தீர்களா? நாம் வாழும் காலத்தையோ கலாச்சாரத்தையோ எவ்விதத்திலும் பிரதிபலிக்காத இசை , படமாக்கப்பட்ட விதம் ..(கலைஞரின் கவிதை பற்றி பேச வேண்டியதில்லை (!))

கௌதம் மேனனின் எல்லா படங்களும் திருட்டு படங்கள் தான். காக்க காக்க வில் வரும் தலை வெட்டி பெட்டிக்குள் வைத்து அனுப்பும் காட்சி, அதை திறந்து பார்ப்பவர்களின் அதிர்ச்சி எல்லாம் ஆங்கில படமான seven இல் இருந்து திருடப்பட்டது. நானொன்றும் கௌதம் போல் அதை DVD யில் கூட பார்க்கவில்லை.HBO வில் வந்த போது பார்த்தது. அதே போல் ஒரு முறை தூக்கம் வராமல் ரிமோட்டை குடைந்த போது Star Movies இல் ஒரு படம் கதாநாயகன் ரயிலில் போகிறான். டிக்கெட் இல்லாத அவனுக்காக முன் பின் தெரியாத மாது ஒருத்தி உதவுகிறாள். எங்கேயோ பார்த்தது போல் இருக்க தொடர்ந்து பார்த்தேன் மக்களே. நம் அறிவு ஜீவி அய்யா கௌதம் மேனன் எடுத்த படத்தை ஒரு காட்சி விடாமல் உருவியிருந்தார்கள். படம் என்னவோ நம்மாள் எடுப்பதற்கு முந்தியே வந்து விட்டதாம். எப்பேர்பட்ட திருட்டு? இதை கேட்டால் 'Derailed' எனும் அந்த ஆங்கில படம் நாவலாக வந்ததாம். அறிவு ஜீவி அவர்கள் அந்த நாவலால் உந்தப்பட்டு (Inspiration (!)) படமாக்கினாராம். அதே நேரத்தில் ஆங்கிலத்திலும் வந்து விட்டதாம் படம். எப்படி சுற்றுகிறார்கள் பார்த்தீர்களா ரீலை?

இடையில் வாரணம் ஆயிரம் என்று ஒரு காவியம் வந்தது. கதை என்று எதுவும் இல்லாமல் நினைத்ததை எல்லாம் படமாக்கி நம்மை அறுத்தெடுத்த படம். ஒரு சாதாரண , பையன் படிப்புக்காக கடன் வாங்கும் அளவுக்கு 'வசதியான' ஆனால் குசு விட்டால் கூட ஆங்கிலத்தில் மட்டுமே விடுவேன் என அடம்பிடிக்கும் 'மேல்தட்டு' குடும்பம். சொந்த அப்பா சாக கிடந்தது பிழைத்து கட்டிலில் படுத்து கொண்டு மெலிதாய் புன்னகைத்தால் அவர் மகள் எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன் அம்மாவிடம் 'He is smiling maa..' என்கிறாள். இது தானா உங்க eliteness?

இன்னொரு கொடுமையை தமிழ் சினிமாவில் ஆரம்பித்து வாய்த்த பாக்கியவானும் அய்யா தான். அதாவது ஹீரோவுக்கு காதல் வந்து விட்டால் நெஞ்சில் குத்திக்கொண்டு ஒரு காலை தரையில் ஓங்கி ஓங்கி மிதித்துக்கொண்டு மூக்கையும் வாயையும் சுளித்துக்கொண்டு , ரெண்டு கையையும் தலைக்கு மேலே பிச்சை என்டுப்பது போல் வைத்துகொண்டு அடி வயிற்றில் வலி வந்தவன் போல் பாடுவது. கதை கூடுவாஞ்சேரியில் நடந்தாலும் பாட்டென்று வந்து விட்டால் வெள்ளைக்கார நடனர்கள் ஹீரோவுக்கு பின்னால் அதே போல் நெஞ்சை குத்திக்கொண்டு ஆடுவது. ஒரு படத்தில் அய்யாவும் சேர்ந்து ஆடினார். ஒரு முறை என் நண்பர் சொன்னார். இது போன்ற பாடல்களுக்கான 'ஆடல்களை' உணர்ச்சிபூர்வமாக வடிவமைப்பதே அய்யா தானாம். 'காக்க காக்க' விற்கு பிறகு வரும் சூர்யாவின் எல்லா பாடல்களிலும் அவர் இதே போல் தான் ஆடுகிறார். எப்பேர்பட்ட புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார் அய்யா? இந்த லெட்சணத்தில் அய்யா இனிமேல் தமிழ் படம் எடுக்க மாட்டாராம் ..ஆங்கிலத்தில் எடுத்தால் அதை பார்க்க தமிழ் நாட்டில் நூறு பேராவது இருக்க மாட்டார்களா என்று ஆதங்கத்தோடு கேட்கிறார். அந்த நூறு பேர் தான் இது போன்ற போலிகள் உருவாக காரணமாய் இருக்கிறார்கள் என்றால் அவர்களை 'சல்ப்..சல்ப்' என்று நாலு அறை விட என் போன்றவர்கள் தயாராய் இருக்கிறார்கள். நினைவிருக்கட்டும்.

இதெல்லாம் விட ஒரு கொடுமை படித்தேன். வெறும் அரங்க அமைப்பு, உடை, இட தேர்வு என்பதை தவிர ஒரு மண்ணும் இல்லாத வறண்ட படமான 'இரும்புகொட்டை முரட்டு சிங்கம்' படத்தை 'முள்ளும் மலரும்', 'உதிரிபூக்கள்' போன்ற இணை இல்லாத படங்களை தந்த மதிப்புக்குரிய மகேந்திரன் பாராட்டி எழுதிய கடிதம் என்னை மயக்கமடைய வைத்தது.என்ன கொடுமை சார் இது?

சரி ஹிந்தி படங்களாவது பார்க்கலாம் என்றால் அவர்களின் கேடு கேட்ட ரசனையும், ஜனங்களை முட்டாளாக்கும் கற்பனை வளமும் ..மூச்சை முட்டுகின்றன. சமீபத்தில் பார்த்த Rajneeti படத்தை பற்றி அடுத்த பதிவில் ..

Saturday, March 13, 2010

இசையின் கவிதை ..



ஒவ்வொரு இரவும் ராஜாவின் ஏதாவொரு பாடலோடும் 'தேரே பினா ஜிந்தகி மே கோயி' போன்ற மனதை உருக்கும் ஹிந்தி பாடலோடும் தான் உறங்க செல்வேன். அதுவும் ராஜாவும் வைரமுத்துவும் தவமிருந்து செய்த பல பாடல்களை கேட்கும்போது மனம் இசையாலும் வார்த்தைகளாலும் நிரம்பியிருக்கும். அவர்கள் இருவரும் இணைவது சாத்தியமே இல்லை என்று விட்ட பிறகு அந்த பாடல்கள் இன்னும் முக்கியத்துவம் பெற்றுவிடும். தமிழ் சினிமா இசையின் முக்கிய கவிஞரான வைரமுத்துவை அகில இந்திய வானொலியின் 'திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்' சார்பாக நான் நேர்காணல் செய்த அனுபவம் மறக்க முடியாதது.
தனது புத்தக அறிமுக நிகழ்ச்சிக்காக டெல்லி தமிழ் சங்கம் வந்திருந்த அவரை முதல் நாள் காலை தமிழ் நாடு இல்லத்தில் சந்தித்தேன். என்னை தன காரில் அழைத்து சென்று எனக்கு உற்சாகமூட்டினார் அகில இந்திய வானொலியை சேர்ந்த குருமூர்த்தி. நேர்காணல் சிறப்பாக அமைய சில நுணுக்கங்களை எனக்கு சொல்லி கொண்டே வந்தார்.

முதல் தடவை சென்றபோது கவிஞர் சற்று பிஸியாக இருந்தார். 'நாளை காலையில் பார்க்கலாமே ' என்றார் மிடுக்குடன். அவர் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஒரு சின்ன புத்தகத்தை தந்தார். அது எனக்கு தேவைப்படவில்லை என்றாலும் வாங்கிக்கொண்டேன். அவர் எழுதிய சினிமா பாடல்கள் மீதான மதிப்பு அவரின் தனி தொகுதிகள் மீது இல்லை என்றாலும் அவற்றை படிக்காமல் யாரும் எண்பதுகளை கடந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

எண்பதுகளின் மத்தியில் முடிவுக்கு வந்த ராஜா-வைரமுத்து சகாப்தம் இன்றுவரை யாராலும் கடக்க முடியாத ஒரு தொலைவாகவே தோன்றுகிறது.
எத்தனையோ பாடல்களை சொல்லலாம். நடுவில் ராஜா அவரை தவிர்த்து விட்ட பிறகு , ரஹ்மான் வருவதுற்கு முன்பு வரை வைரமுத்து தாக்கு பிடித்திருந்ததற்கு அவரது உண்மையான கவித்துவம் தான் காரணம் என்று நினைக்கிறேன். ரஹ்மான் இசையில் நல்ல பாடல்களை தர கவிஞர் தவறவில்லை.

இடைப்பட்ட காலத்தில் அவர் தனது தனி கவிதை தொகுப்புகள் நிறைய கொண்டுவந்தார். சரியான விமர்சகப்பார்வையில் அவை சற்று கீழிறங்கும் என்றாலும் அவர் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கண்டிப்பாக உதவியாய் இருந்தன எனலாம். அப்போது வந்த தெலுங்கு டப்பிங் படங்களுக்கு பாடல்களும் , வசனமும் எழுதிகொண்டிருந்தார் கவிஞர். காரணம் எதுவாய் இருந்தாலும் ராஜா செய்த தவறு இது என்பேன் நான். ஏனெனில் அந்த தவறு ஒரு நல்ல சினிமா கவிஞனை ராஜாவின் மனம் தொடும் இசையில் கேட்டு ரசித்த ரசிகர்களை வெறுமையில் ஆழ்த்தியது. அதற்கு பிறகு ஒருவரை ஒருவர் இல்லாமல் தனிப்பட்ட முறையில் இருவரும் வெற்றி பெற்றிருந்தாலும் அந்த வெறுமை இன்னும் நிரப்பப்படாமல் தான் இருக்கிறது. நேரில் அவரை முதன் முதலாய் பார்க்கும்போதே நேர்காணல் எனும்போது மிகவும்சந்தோஷப்பட்டேன்.

அவர் அறிமுகம் செய்யவிருந்த புத்தகம் குமுதம் இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் தந்திருந்த பதில்களின் தொகுப்பு. அவற்றை முன்பே குமுதத்தில் படித்திருந்ததால் அது பற்றிய பிரதான கேள்விகளை தயாரித்துக்கொண்டு அவரை சந்தித்தேன்.

வெள்ளை குர்தா, பைஜாமாவில் முகத்தில் பளீரிடும் சிரிப்புடனும் சற்று ஏகாந்தமான கண்களோடும் கவிஞர் வரவேற்பறையில் அமர்ந்தார். முதல் நாள் இருந்த உற்சாகம் இப்பொழுது பதட்டமாக மாறியிருந்தது. எனது குரலின் பலவீனத்தை என்னால் உணர முடிந்தது. ஆனாலும் கேள்விகளை தொடர்ந்தேன். எந்த ஒரு கேள்வியையும் உள்வாங்கி விரிவாக பதில் சொல்லும் அவர் திறனை மனதுக்குள் வியந்தேன். 'நேனோ டெக்னாலஜி' பற்றி ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்விக்கு அவர் சொல்லியிருந்த பதில் எனக்கு பிடித்திருந்தது. அதை வைத்து முதல் கேள்வியை துவங்கினேன். கவிஞர் உற்சாகமாகி விட்டார். அது என்னையும் தொற்றியது. நிறைய கேள்விகள். அழகான பதில்கள்.

திடீரென்று ஒரு கேள்வியை வீசினேன். "நீங்கள் எழுதிய பாடல்களை இசையோடு கேட்கும் ரசிகனுக்கு மனதில் காட்சிகள் அற்புதமாய் விரிகின்றன. ஆனால் அவை படமாக்கப்படும் போது அவை எங்கேயோ தொலைந்து விடுகின்றன. ஒரு படைப்பாளியாக உங்கள் கவிதை வரிகள் படமாக்கப்படுவதில் உங்களுக்கு திருப்தி இருக்கிறதா? " கவிஞர் என்னை நிமிர்ந்து பார்த்தார். சற்று நிதானித்து விட்டு " இது ஒரு நல்ல கேள்வி உங்களுக்கு. தர்மசங்கடமான கேள்வி எனக்கு " என்று வெடித்து சிரித்தார். தன பாடல் வரிகள் காட்சியமைப்புகளில்வீணாக்கபடுவதில் அவருக்குள் இருந்த வருத்தம் எனக்கு துல்லியமாக தெரிந்தது. ராஜாவின் பல பாடல்களுக்கும் நிகழ்ந்த துயரம் இது. ராஜாவின் ஒற்றை வயலின் உயிரை அறுக்கும் இசைக்கு கதாநாயகியின் இடுப்பு நெளிந்து கொண்டிருக்கும். "இருந்தாலும் நான் நினைத்ததை விட சிறப்பாக படமாக்கப்பட்ட பாடல்களில் எனக்கு பிடித்தவை 'ஆயிரம் தாமரை மொட்டுகளே',' உயிரே உயிரே (பாம்பே) ' போன்ற பாடல்கள் .." என்றார்.

தொடர்ந்து என் மனதுள் பல வருடமாய் சுழன்று கொண்டிருக்கும் ஒரு கேள்வியை கேட்டேன். " நீங்களும் இளையராஜாவும் இணைந்து செய்த பல பாடல்கள் மறக்க முடியாதவை ..மீண்டும் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா? " கவிஞர் சற்று நிதானமாய் யோசித்து விட்டு சொன்னார்.
"காலம் தான் பதில் சொல்ல வேண்டும் " .
அந்த காலத்திற்காக காத்திருக்கிறோம் நாம், நம்பிக்கை குறைவுதான் என்றாலும்.

Friday, March 12, 2010

ரசிகனின் மனம் ...


முறையான இசை பயிற்சி இல்லாத ரசனை அடிப்படையாக இசையை அணுகும் எண்ணற்றவர்களில் ஒருவனான எனக்கு தமிழ் சினிமா பாடல்களின் முக்கியமான சிலரை வானொலி சார்பாக நேர்காணல் செய்ய வாய்ப்பு கிடைத்தது. டெல்லியில் இருக்கும் எனது மதிப்புக்கும் பலவகைகளில் நன்றிக்கும் உரிய திரு. ஷாஜஹான் அவர்கள் என் சினிமா ஆர்வத்தை புரிந்து கொண்டு தன நண்பரான திரு. குருமூர்த்தியிடம் இந்த வாய்ப்பை பெற்று தந்தார். டெல்லி வரும் தமிழகத்தின் பல துறைகளை சார்ந்த பிரபலங்களை நேர்காணல் செய்த அனுபவம் உள்ள குருமூர்த்தி என்னை முதலில் மலேசியா வாசுதேவன், P.சுசீலா, திப்பு போன்றோரை பேட்டி எடுக்குமாறு கேட்டுகொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது.

அப்போது அவர்கள் டெல்லியில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்கள். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர்களை ஒரே நாளில் நேர்காணல் செய்து விடலாம் என்ற அசைக்க முடியாத அசட்டு தனத்துடன் காலை ஒன்பது மணிக்கெல்லாம் அங்கு போய் விட்டேன். அது மிதமான குளிர்கால நேரம். பத்திரிக்கைகளில் வரைவது சில சமயம் ஏதேனும் கவிதை எழுதுவது என்பதை தாண்டி பொதுவில் ஏதும் செய்யாத அதற்கான சரியான பார்வையும் கொண்டிராத நான் வழக்கமான பதட்டத்தோடும் மட்டு மீறிய ஆர்வத்தோடும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். இன்டர்காமில் P. சுசிலாவின் உதவியாளரை தொடர்புகொண்ட போது அவர் பயணக்களைப்பில் இருப்பதால் மாலை நிகழ்ச்சி நடக்கும் தல்கட்டோரா அரங்கில் பேட்டியை வைத்துகொள்ளலாம் என்று விட்டார்.

மலேசியா வாசுதேவன் வெளியில் சென்றிருந்தார். அவரை வரவேற்பறையிலேயே சந்தித்து விடலாம் என்று நினைத்திருந்தேன். எனக்கு விருப்பமான ' பூவே இளைய பூவே', 'கோடைகால காற்றே ', ஆயிரம் மலர்களே' , 'பருவகாலங்களின் கனவு (மூடுபனி),' 'பனிவிழும் பூ இரவில் , 'அள்ளி தந்த பூமி ', 'தேடினேன் (சங்கர்லால்) ' போன்ற மிக மென்மையான இளையராஜாவின் இசையில் அவர் பாடிய பாடல்களை (கடைசி பாடலில் கங்கை அமரனின் பங்குண்டு )மனதில் ஓட விட்டு கொண்டு இருந்த போது எங்கோ பார்த்த முகம் வெளியில் இருந்து உள்ளே வந்து கொண்டிருந்தது. பக்கத்துக்கு வீட்டு அண்ணன் போன்ற பரிச்சியமான தோற்றம் கொண்ட அந்த முகம் மலேசியா வாசுதேவனுடையது. அவரை அணுகி நேர்காணலுக்காக நேரம் கேட்ட போது 'இப்போ வேண்டாமே' என்றார். எனது முதல் முயற்சி என்ற போது, நடையை சற்று நிறுத்தி என்னை பார்த்தார். 'மேலே வாங்க ' என்றார்.

அறையில் நேர்காணல் துவங்கும்போது குருமூர்த்தி வந்திருக்கவில்லை. நான் நேர்காணலை துவங்கி விட்டேன். எந்த வித அலட்டலும் இல்லாமல் மிக நட்புடன் பதில் தந்து கொண்டிருந்தார் வாசுதேவன். தமிழ் சினிமா பாடல்களிலும் நடிப்பிலும் தனக்கான அழுத்தமான முத்திரையை பதித்த அவர் தன்னை பற்றியும் தற்போது இருக்கும் சினிமா இசை பற்றியும் மனம் திறந்த பேசினார். ஒரு கேள்விக்கு மிக சுவாரஸ்யமாக அவர் பதிலளித்துகொண்டிருந்தபோது திடீரென்று என் மொபைல் அலறியது.. பதட்டத்தில் நான் எழுந்தபோது மைக் இணைக்கப்பட்ட அந்த ரெகார்டர் கீழே விழுந்து விட்டது. நான் சங்கடமாய் அவரை பார்த்த போது அவர் மிக மென்மையாக புன்னகைத்தபடி ' பதட்ட படாதீங்க' என்றார். குருமூர்த்தி தான் அழைத்திருந்தார். தமிழ் நாடு இல்லத்துக்கு அப்போது வந்து சேர்ந்த அவர் நான் எங்கிருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள அழைத்திருக்கிறார். நேர்காணலுக்கு முன்பு மொபைலை அணைக்க வேண்டும் என்று நினைத்திருந்த நான் ஆர்வக்கோளாரில் அதை செய்யாமல் விட்டுவிட்ட தவறை இருவரும் பெரிதுபடுத்தவில்லை.

பின்பு குருமூர்த்தி வந்தார். அவர் முன்னிலையில் நேர்காணல் தொடர்ந்தது . இடையில் தடை பட்டுவிட்ட தனது பதிலை விட்ட இடத்திலிருந்து துவங்கிய வாசுதேவனின் நினைவாற்றலை நான் வியந்தேன். ஒரு கேள்வியில் 'பனிவிழும் பூ இரவில் ' , ' தேடினேன்' போன்ற பாடல்களை குறித்து நான் கேட்டபோது அவர் வியந்தார்." என்னிடமே இந்த பாடல்கள் இல்லை. எனக்கு மிக விருப்பமான பாடல்கள். நீங்கள் எங்கு கேட்கிறீர்கள் இவற்றை எல்லாம் ?" என்றார். நான் இணையதளத்தில் கேட்பதாக சொன்னேன். முடிந்தால் அவற்றை டவுன்லோடு செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்ட அவரின் முகவரியை என் சோம்பேறித்தனத்தால் தொலைத்துவிட்டேன். அதற்காக இன்னும் வருத்தம் உண்டு என்னிடம்.

வாசுதேவனின் பிரபலமான பல பாடல்கள் அதிரடியான பாடல்கள். எண்பதுகளில் ரஜினியும் கமலும் கோலோச்சிய சமயங்களில் ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் என்றால் மூன்று டூயட் , ஒரு சோக பாடல் , ஒரு அதிரடியான (அந்த காலகட்டத்தில் அதற்கு பெயர் 'டப்பாங்குத்து' !) பாடல் என்று இருக்கும். அந்த அதிரடியான பாடலை வாசுதேவன் தான் பாடியிருப்பார். ஆரம்பத்தில் இருந்து மிக மென்மையான பல பாடல்களை படிய அவரை ராஜா இது போன்ற பாடல்களையே மத்திய எண்பதுகளில் பாட வைத்தார். அது பற்றி கேட்டபோது தன குரலில் இருக்கும் உற்சாகதன்மை ராஜாவை கவர்ந்திருக்க வேண்டும் என்றார்.

இளையராஜாவின் தீவிர ரசிகனான நான் அவரை பற்றி கேட்காமல் இருப்பேனா? சினிமாவுக்கு வரும் முன்பே ராஜாவும் வாசுதேவனும் நண்பர்கள். சில சமயம் அறைகளில் ஒன்றாக தங்கியிருக்கும் போது ராஜா ஹார்மோனியத்தில் புது புது மெட்டுகளை போட்டு வாசுதேவனை பாட சொல்வாராம். அவரது வெற்றி தனக்கு முன்பே தெரியும் என்று சொன்னபோது வாசுதேவனின் குரல் இளகியது. எனது மனமும்.


அன்றைய மாலை இசை நிகழ்ச்சியில் "ஆசை நூறுவகை " என்று உற்சாகமாக மெல்லிய உடல் அசைவுடன் அவர் பாடிகொண்டிருந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நான் அமர்ந்து கேட்டுகொண்டிருந்தேன். நான் அமர்ந்திருக்கும் திசை நோக்கி அவர் பாடியபோது அந்த குரல் எனக்கானது என்று நினைத்து கொண்டேன். அசட்டு தனமானாலும் அந்த நேரத்தில் மறக்க முடியாத அனுபவம் அது.

Sunday, February 28, 2010

'மை நேம் இஸ் கானை' முன்வைத்து..




கான் பதட்டமான நடையுடன் பெரிய பை ஒன்றை முதுகில் சுமந்தபடி ஏர்போர்டில் நுழையும் முதல் காட்சி் , படம் ஒரு சீரியசான தளத்தில் இருக்கப்போவதை சொல்லிவிடுகிறது. 'அஸ்பர்கெர் ஸிண்ட்ரோம் ' எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, கூட்டம், மஞ்சள் நிறம் போன்றவற்றால் கலவரம் அடையும் மனது கொண்ட கான் பயணிகள் வரிசையில் பிரார்த்தித்தபடி நின்று கொண்டிருக்க அவனை தீவிரவாதி என ஒரு பெண் சந்தேகப்படுகிறாள் .உடனே அமெரிக்க காவலாளிகள் கானை தனியறையில் சோதனை போடுகின்றனர்.கான் அபாயகரமான எந்த பொருளும் சுமந்திராத அப்பாவி என சோதனையில் தெரியவர அவரை விடுவிக்கும் அதிகாரிகளில் ஒருவர் அவர் வாஷிங்டன் DC க்கு போக காரணம் கேட்கிறார். ' அமெரிக்க அதிபரை' சந்திக்கபோவதாக சொல்கிறான் கான். "ஒசாமா இருக்கும் இடத்தை சொல்லப்போகிறாயா" என ஒரு அதிகாரி கிண்டல் சிரிப்புடன்கேட்க , அதை மறுக்கும் கான் தான் அதிபரிடம் சொல்லபோகும் செய்தியை கான் உறுதியுடன் சொல்கிறான். " My name is Khan and i'm not a terrorist". அதிகாரியின் முகம் சிந்தனையில் உறையும் காட்சி மறைய கான் எலிவேட்டரில் மேலே செல்கிறான். அருகில் , கீழ்நோக்கி இறங்கும் படிக்கட்டில் யாருமே இல்லை. மதத்தின் பெயரால் மனிதத்தை இழந்து வரும் பலர் அந்த படிக்கட்டில கட்புலனாகாமல் இருப்பதாக தோன்றியது எனக்கு. இந்த படம் சொல்லவந்த செய்தி இது தான். இந்த ஒரு காட்சியை மட்டும் குறும்படமாக எடுத்திருந்தால் ஆக சிறந்த குறுமபடமாக பல விருதுகளை வென்றிருக்கும். இந்திய குறிப்பாக ஹிந்தி சினிமா செண்டிமெண்ட் பலவற்றை கலக்கி அடித்திருப்பதால் , சொல்லவந்த செய்தி நீர்த்து போய்விடுகிறது.

படம் கான் தன மனைவி மந்திராவுக்கு எழுதும் கடிதத்தின் குரலாக நீள்கிறது. அஸ்பர்கெர் ஸிண்ட்ரோம் ' குறைபாடுள்ள சிறுவன் கானை அவன் தாய் அவனை மிகவும் நேசிக்கிறாள். மனிதர்களில் இருவகை தான் உண்டு. நல்லவன் அல்லது கெட்டவன் என்று சொல்லி அவனை மனிதத்துடன் வளர்க்கிறாள். அவனை ஒரு படித்த , வேலையில்லாத ஒரு பார்சி மனிதரிடம் படிக்க ஏற்பாடு செய்கிறாள். அவனது புத்திக்கூர்மையை உணரும் அம்மனிதர் அவனுக்குள் ஆங்கில அறிவை வளர்க்கிறார். தன்னை விட அண்ணனுக்கு தான் தாய் முக்கியத்துவம் தருகிறாள் என நினைக்கும் கானின் தம்பி பதினெட்டாவது வயதிலேயே அமரிக்க பல்கலை கழகம் ஒன்றில் படிக்க சென்றுவிட , தாய் மனமுடைகிறாள். பிறகு தாயும் மறைந்துவிட தன தம்பி இருக்கும் அமெரிக்காவுக்கே செல்கிறான் கான்.

அங்கு காதல் திருமணம். இடையில் 9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கர்களால் தாக்குதலுக்கும் வெறுப்புக்கும் ஆளாகும் இஸ்லாமியர்களின் துயரம் என்று பயணிக்கும் படம், எந்த தொடர்பும் இல்லாமல் ஜியார்ஜியா புயலில் தவிக்கும் மக்களை 'காப்பாற்றும்' super hero போல் கானை சித்தரிக்கிறது. தொடர்ந்து மீடியாவின் பரபரப்புகளும் மக்களின் ஓவர் அக்டிங் ரியாக்ஷன்களும்
விக்ரமனை நினைவுபடுத்துகின்றன. தேவைக்கும் மீறிய நீளம் படத்தின் செய்தியை எங்கோ அடித்து சென்று விடுகிறது.

இதே plot இல் அமைந்த New York போன்ற சில படங்களின் மிக பெரிய குறைபாடே சொல்ல படத்தின் தவிர தன்மையை Entertainment elements ஐ கொண்டு கொன்று புதைக்கும் 'விக்ரமன்' பாணி தான். New York இல் முதல் பாதி முக்கோண காதல் கதையாகவும் இரண்டாம் பாதி த்ரில்லர் டைப்பாகவும் அமைந்து விடுகிறது. 9/11 க்கு பிறகு அமெரிக்காவில் இஸ்லாமியர் சந்திக்கும் அடக்குமுறைகளையும் துவேஷத்தையும் முழுமையாக காட்ட முடிவதில்லை இவர்களால். இந்த விஷயத்தை ஓரளவு தொட்டு செல்கிறது My name is Khan. கானின் தம்பி மனைவி உட்பட , ஆப்கானியராக பார்க்கப்படும் சீக்கியர்கள் வரை இவ்வாறு தாக்கபடுவதை படம் பதிவு செய்கிறது. எனினும் வீர்யமாக இல்லை.

சில விதிவிலக்குகள் உண்டு .90 களின் பாம்பே குண்டு வெடிப்பு, அதற்கு முக்கிய காரணமாக இருந்த பாபர் மசூதி இடிப்பு ஆகியவற்றை தைரியமாக கையாண்ட அனுராக் காஷ்யப்பின் ' Black Friday' ஒரு நல்ல உதாரணம். சம்பத்தப்பட்ட அரசியல்வாதிகள், பிரமுகர்களின் உண்மையான பெயர்களை பயன்படுத்துவதில் இருந்து பிரச்னையின் பின்னணியையும் , விசாரணையின் நிஜ முகத்தையும் உண்மைக்கு மிக அருகில் சென்று பதிவு செய்யும் வரையில் முடிந்தவரை சிறப்பாக எடுக்கப்பட்டஇப்படம் பரவலாக கவனம் பெறவில்லை. நமக்கு ஹிந்து- முஸ்லிம் ஒருமைப்பாடை வலியுறுத்தும் 'பாம்பே' போன்ற படங்களில் கூட 'ஹம்மா..ஹம்மா' தேவையாய் இருக்கிறது. அப்போது தான் நாம் திரையரங்கை நோக்கியே திரும்புவோம். யாருக்கு வேண்டும் 'செய்தி?'
திரைப்படத்திலேயே தீர்வு சொல்ல முடியாது தான் என்றாலும் சிந்திக்க வைத்து விட கண்டிப்பாக முடியும். அதற்கு தேவை ஆழமான பார்வை..இந்தியாவின் பல இயக்குனர்களிடம் இல்லாத விஷயம் அது தான்.

படத்தில் கானின் ஹிந்து மனைவியான மந்திரா தன மகனின் இறப்புக்கு, கானின் மதப்பெயரை சுமந்தது தான் காரணம் என்று அபத்தமாக சிந்திப்பது மட்டுமல்லாமல் எந்த பாவமும் அறியாத கானை கரித்துகொட்டுவது தேவையில்லாத காட்சி. ஈடு செய்யமுடியாத இழப்பு என்று வரும்போது மனம் தடுமாறுவது உண்மை தான் என்றாலும் அதற்கான சரியான base இல்லாமல் அவர் கானிடம் கடுமையாக நடந்து கொள்வது மிக பெரிய குறை. ஆனால் கரன் ஜோகர் இதை முக்கிய காரணமாக எடுத்து தான் திரைக்கதையையே புனைகிறார். மேலும் ஒரு நாட்டின் அதிபரை சந்தித்து 'நான் தீவிரவாதி அல்ல' சொல்வதன் மூலம் அல்லது அதிபர் 'வெரி ஸாரி' என்று சொல்வதன் மூலம் பிரச்சனை தீந்து விடுமா? ஒபாமா போல் தோற்றமளிக்கும் அந்த அதிபர் தன உரையை தொடங்கியவுடன் அவர் குரல் mute செய்யப்பட்டுமந்திராவின் ' எண்ணக்குரல்' ஒலிக்கத் தொடங்கிவிடுகிறது. 'என் கோபத்தால் சாதிக்க முடியாததை உன் அன்பால் சாதித்து விட்டாய் என்று ' என்று கானை பற்றி மந்திரா நினைப்பதாக படம் முடிகிறது. அதிபர் என்ன பேசினார் என்று காட்டாமலேயே அவர் பேச்சை கேட்டு ஆரவாரிக்கும் கூட்டத்தின் நடுவே பெருமிதத்துடன் கானும் மந்திராவும் நடந்து செல்கையில் படம் தான் சொல்ல வந்த செய்தியை விட்டு எங்கோ போய் விட்டதை இறுதியாய் உணர்கிறோம். கரை வேட்டி கட்டி மேடையில் முழங்கும் நம்மூர் அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் நாம் திட்டமிட்டு சிறுபான்மையினர் மீது அடக்குமுறை செய்யும் ஒரு நாட்டின் அதிபர் மேடையில் பேசினாலே பிரச்னை தீர்ந்து விடும் என்று நினைக்கும்படி கதை அமைக்கும் புத்திசாலி இயக்குனர்களிடம் சரணடைகிறோம். தீராத சாபம் தான் இது.


படத்தை அதன் plot ஐ தவிர்த்து பார்த்தால் மிக அழகான காதல் கதை கிடைக்கிறது. ஷாருக்கின் அற்புதமான நடிப்பும், கஜோலின் உயிர்ப்பான கதாபாத்திரமும் உடல்மொழியும் மிக அழகாக வெளிப்பட்டிருக்கின்றன.பாராட்டப்பட வேண்டிய இன்னொரு பாத்திரம் கானின் தம்பி மனைவியாக வரும் பெண்ணுடையது. கணவனின் அண்ணனை ஒரு தாயின் பரிவுடன் கவனித்துக்கொள்ளும் அவள் காதலித்து திருமணம் செய்யும் கான்- மந்திரா திருமணத்துக்கு தன கணவனின் எதிர்ப்பையும் மீறி வந்து.. கானை மணமகனாக அலங்கரித்து பூரிக்கிறாள். தம்பியாக வரும் ஜிம்மி ஷெர்கில் , அம்மாவாக நடித்திருக்கும் பெண் பக்கத்துக்கு வீட்டு அமெரிக்க குடும்பம், என பலர் சிறப்பாக நடித்திருக்கின்றனர் . படத்தின் பின்னணி இசையை விட அவ்வபோது பாடல்களே ஒலிக்கின்றன. காட்சியின் தீவிர தன்மையை பாதிக்கும் முக்கிய குறைபாடு இது. ரவிசந்திரனின் நேர்த்தியான ஒளிப்பதிவு சிறப்பு.

எனினும் எந்த பிரச்னையை பேச வேண்டுமோ அதை பேசாமல் தடம் மாறிவிடுவதால் படம் தன பொலிவை இழக்கிறது.




Saturday, February 6, 2010





என்றோ
எழுதித்
தொலைத்த கவிதைஎன
மீளாதிருக்கிறது கனவு.
நிலவற்ற இரவின் நட்சத்திரங்கள்
மறைந்திருக்கும்
சில்வண்டுகளின் பாடலைத தனதென
சொந்தம் கொண்டாடுகின்றன
உந்தி எழும் பறவையின்
மீண்டெழும் இறகுகள்
பயம் கொள்ள செய்கின்றன
உடம்பில் கட்டப்பட்ட நூலுடன்
கடலை நோக்கிப் பறக்கிறது பட்டாம்பூச்சி
தன வாழ்நாள் அறியாது.....



ஜே. எஸ். அனார்கலி
பிப்ரவரி 2010
வடக்கு வாசல்
ஒன்றிரண்டு தானியங்களோடு
கூடு சேர்கின்றன பறவைகள்
வழியனுப்பிய மரங்களும்
வரவேற்று
வழியனுபவங்களைக
கேட்டுக்கொள்கின்றன
எப்போதும்
கைமாற்றி விடப்படும்
அரிதாரங்களை ஏற்று
ஒவ்வாமைகளுடன்
புலப்படாது பிணைந்திருக்கும்
ஏதோ ஒன்றுள்
அறுபடக காத்திருக்கிறது
மனித உறவு.


-
ஜே. எஸ். அனார்கலி

Friday, January 22, 2010

ஷாஜிக்கு ஒரு பதில் ...


வன்மத்தோடு சிலரை குறிவைத்து எறியப்படும் விஷ அம்புகளின் வீர்யத்தை பார்க்கும்போது எய்தவனின் மன விகாரம் எப்படிப்பட்டது என்று தெரியும். அவ்வாறு குறி வைத்து தாக்கப்படும் மனிதர்களில் இளையராஜா முக்கியமானவர். என் வாழ் நாளில் நான் கண்டு பிரமித்த , பல ஆயிரம் பாடல்களாலும், திரைப்படத்திற்கான பின்னணி இசையாலும் என்னை போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களை மனம் உருக வைத்த, மிக சிறந்த ஒரு படைப்பாளியின் படைப்புகளை இன்று வரை யாரும் சரியான பார்வையோடு பார்க்கவில்லை என்பது என் வருத்தம். தங்களை தாங்களே அறிவு ஜீவிகள் என்று கருதிக்கொண்டு அவரின் இசையை இலத்தீன் அமெரிக்க இசை ஞானத்தோடு அணுகி எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் சில ஜீவன்களுக்கு மத்தியில் (இந்த அறிவு ஜீவிகள் சென்னை புத்தக கண்காட்சியில் அல்பேனிய புத்தகங்கள் கிடைப்பதில்லை என்று அங்கலாய்க்கும் புத்திசாலிகள் ! அல்பேனிய புத்தக கண்காட்சியில் தமிழ் புத்தகங்கள் கிடைக்குமா என்றெல்லாம் கூட யோசிக்க தெரியாத அல்லது அதற்கு நேரம் இல்லாத அறிவு ஜீவிகள்..!) ஷாஜி எனும் மனிதர் வேறு பட்டவராக இருக்கிறார். அவரும் இசை பற்றிய கட்டுரைகளை எழுதுவதில்லை இசை அமைப்பாளர்கள் , பாடகர்கள் பற்றிய குறிப்புகளில் மட்டுமே அவர் சிறந்தவர் என்பது அவரை படிக்கும் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இளையராஜா பற்றிய கட்டுரை ஒன்றை உயிர்மை இதழில் எழுதியிருக்கிறார் ஷாஜி. உண்மையில் அது கட்டுரை அல்ல.. ஒரு படைப்பாளியை அவரது பிறப்பையும் பின்னணியையும் சுட்டிக்காட்டி 'உன் அளவோடு இரு' என்று எடுத்தியம்பும் மிக வன்மையான கருத்து கொண்ட எரிச்சல் தெறிக்கும் ஒரு அறிக்கை.

ஷாஜி பற்றி இங்கு சொல்ல வேண்டும்..மிக மென்மையான மனம் கொண்ட , இளம் பிராயத்தில் தன சொந்த தந்தையாலே பல முறை தாக்கப்பட்டு ..வாழ்வை மிக துயரத்துடன் கழித்தவர். இப்போதும் கூட அவர் வாழ்வின் துயரம் நீங்கிவிடவில்லை. பல்வேறு துயரங்களை தாங்கிக்கொண்டு வாழும் அவர்க்கு இசை மீது தீராத காதல். ஷாஜி எனக்கும் இணையத்தால் நண்பரானவர்.

ஆனாலும் ஷாஜியின் சமீபத்திய கட்டுரையின் உள்ளடக்கத்தை படித்த பின்பு அதை எழுதியது ஷாஜி தானா அல்லது அவர் டீ குடிக்க வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அறிவுஜீவி சாரு தான் இடையில் தன கருத்தக்களை அள்ளி விட்டிருக்கிறாரா என்று தான் நினைக்கதோன்றுகிறது.
கட்டுரையின் சில பாகங்களை அவர் என்ன மன நிலையோடு எழுதினார் என்று என்னால் கணிக்கவே முடியவில்லை.. ஷாஜி தன வாழ்நாளில் இவ்வளவு துவேஷம் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதியதில்லை.

முதலில் அவர் வைக்கும் விமர்சனங்களின் மீதான ஒரு சாதாரண ரசிகனின் கேள்விகள்:

முதலில் பழசிராஜா பற்றிய அவரது 'எண்ணங்கள்'. ஷாஜி முதற்கொண்டு ராஜாவிடம் முன்பு வேலை பார்த்த அவுசப்பச்சன் போன்ற அனைவரும் அப்படத்தின் இசை தோல்வியடைந்தாக சொல்கிறார்கள். ஆதி உஷ, குன்னத்தே, அம்பும் கொம்பும் போன்ற சிறந்த பாடல்கள் கொண்ட ஒரு படத்தின் இசையை தோல்வி என்று இவர்கள் என்ன அளவீட்டில் சொல்கிறார்கள்? பழசிராஜாவை பார்த்த பலர் சொன்ன கருத்து ஆஸ்கார் 'புகழ்' பூக்குட்டி தனது மேதைமையை பயன்படுத்தி ராஜாவின் இசையை தன 'சத்தத்தால்' பல இடங்களில் அமுக்கியிருக்கிறார் என்று . சமீபத்தில் தான் நானும் அப்படத்தை பார்த்தேன்.. தனக்கு கிடைத்த ஆஸ்காருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பூக்குட்டி ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். அந்த அவதியில் படத்தின் பின்னணி இசையை பல இடங்களில் தன சத்தம் கொண்டு அடக்கியிருக்கிறார். இது ராஜாவின் தோல்வியா? மிக முக்கியமாக , ஷாஜி போகிறபோக்கில் படத்தின் இசையின் தோல்விக்கு காரணமாக O.N.V குருப் பின் பாடல் வரிகள் அமைந்ததாக ராஜாவே சொன்னதாக குறிப்பிடுகிறார். இது அக்கிரமம். படத்தின் பாடல்கள் தோல்வி என்று ராஜாவே முடிவுகட்டியதாக நினைக்கிறாரா ஷாஜி? அவர் பேசிய பேச்சின் வீடியோ Youtube இல் கிடைக்கும்.கேட்டுப்பாருங்கள். வெள்ளையரை எதிர்த்ததால் இன்னல்களுக்கு ஆளாகி காட்டில் மறைந்து அங்கிருந்து போர் வியூகம் அமைக்கும் ஒரு மன்னரின் சோகத்தையும் அந்த பாடலில் கொடுக்க தெரிந்த ராஜாவையா நீங்கள் குற்றம் சொல்லுகிறீர்கள்? அந்த பாடலின் composing இல் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லும் நேரத்தில் O.N.V. குருப் தன tune க்கு எழுத முடியாமல் சிரமப்பட்டார் என்றார். இத்தனைக்கும் தன இசையில் புகழ் பெற்ற 'தும்பி வா' பாடலை எழுதியவர் அவர் என்று அந்த நேரத்திலும் குறிப்பிட்ட ராஜாவின் வார்த்தைகளை இப்படியா ஷாஜி திரிப்பீர்கள்? அதை தொடர்ந்து அங்கு வந்திருந்த அனைவரையும் 'நீளம்' கருதாமல் மலையாள 'பழசிராஜாவை' பார்க்குமாறும் வேண்டிக்கொண்ட ராஜாவை நீங்கள் அந்த வீடியோவில் பார்க்கலாம். இதற்கு அவருக்கு கிடைத்த சன்மானம் என்ன தெரியுமா ? படத்தின் இயக்குனரான ஹரிஹரன் . O.N.V. விவகாரத்தில் ராஜா கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை ..அது தனக்கும் M.T.V. நாயருக்குமான பொறுப்பு என்று திருவாய் மலர்ந்தார். என்ன ஒற்றுமை பார்த்தீர்களா? அதை தொடர்ந்து ஒரு சினிமா விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்தும் இளையராஜா குறித்தும் , கேரளா அமைச்சர்கள் முதற்கொண்டு விமர்சனம் செய்ததை இங்கு உள்ளவர்கள் அறியவில்லை என்று நினைக்கிறாரா ஷாஜி? தொடர்ந்து மலையாள மனோரமா இளையராஜாவின் 'பா' இசையை ' recycle' செய்யப்பட்டவை என்ற 'உண்மையை' கண்டு பிடித்து எழுதுகிறது? எதற்காக? தன மண்ணின் கவிஞரான O.N.V பற்றி ராஜா விமர்சித்து விட்டாராம்? என்ன ஒரு ஒற்றுமை?
'பா' படத்தின் பாடல்கள் பால்கியின் விருப்பத்திற்காக ராஜாவால் திரும்ப உபயோகிக்கப்பட்டன என்று படத்தின் இசை வெளியிடுவதற்கு முன்பிருந்தே பால்கியாலேயே அறிவிக்கப்பட்டு வந்த செய்தி. இதை ஒரு விமர்சனமாக இவர்கள் எழுதுகிறார்கள் என்றால் இவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?

அடுத்து ஷாஜி குறி வைக்கும் ராஜாவின் மறுக்க முடியாத மென் பகுதி அவரது பின்னணி. ராஜாவை 'King of folk' (மட்டும் தான்) என்று தன நல்ல முகத்தின் பின் மறைந்திருக்கும் துவேஷதைக்கொண்டு குத்தி காட்டுகிறார். ராஜாவின் பின்னணி அறியாதவர்களா இசை ரசிகர்கள் ? அவரை பற்றி நீங்கள் ஆப்ரிக்க நாட்டிற்கா அறிமுகம் செய்கிறீர்கள்? ராஜா ஒரு தலித் என்று சொல்லி காட்டி அவரை பெருமைப்படுத்துவது போல் , 'பாருங்கள் ஒரு தலித் கூட இசை அமைக்கிறார்' என்று மறைமுகமாக அவரை தாழ்த்தும் சில 'பெருந்தன்மையாளர்களின்' பட்டியலில் நீங்களும் சேர்ந்து விட்டீர்களா ஷாஜி?

தவிர்க்க முடியாமல் ரஹ்மானை இங்கு இழுக்க வேண்டியிருக்கிறது. ரஹ்மான் முஸ்லிம் மதத்திற்கு மாறிய ஹிந்து என்பதை தாண்டி .. இந்துவில் அவர் என்ன ஜாதியில் பிறந்தார் என்ற தகவல் யாருக்காவது தெரியுமா ? அதை பற்றி யாரேனும் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இளையராஜா ஒரு தலித் என்று மட்டும் தகவல் எழுதும் 'மனிதர்கள்' எல்லா கலைஞர்களின் பின்னணியையும் தானே எழுத வேண்டும்? ஆனால் இக்கட்டுரையில் ஷாஜி 'தலித்' என்னும் வார்த்தையை மட்டும் கவனமாக தவிர்த்து , அவர் தினக்கூலியாக இருந்தார் என்கிற வரைக்கும் எழுதுகிறார்? இப்போது தான் முதல் படத்திற்கு இசை அமைத்த ஒரு புது இசை அமைப்பாளரையா நீங்கள் எங்களுக்கு அறிமுகம் செய்கிறீர்கள்? ராஜாவை பற்றிய கட்டுரையில் அவரது பின்னணி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் என்னவந்தது?

மேலும் அவரது மேற்கத்திய இசைக்கு மூலம் அவர் 'ஒரு காலத்தில்' தலித் கிறித்துவராக இருந்ததாம். இதை நேரடியாக சொல்லாமல் பல வார்த்தைகளை போட்டு எழுதிகிறார் ஷாஜி. இது வன்மம் அல்லாமல் வேறென்ன?

இதை தவிர தன வன்மத்தை சமன் செய்ய ராஜா பற்றி அனைவரும் அறிந்த (அவர் ஒரே வருடத்தில் பல படங்களுக்கு இசை அமைத்தவர். 'நூற்றுக்கணக்கான' (!) அற்புதமான பாடல்களை தந்தவர்) போன்ற 'புத்தம் புதிய' தகவல்களை நமக்கு 'அளிக்கிறார்' ஷாஜி. ராஜாவின் பாடல்களையும் அவற்றின் தரத்தையும் அனைவரும் அறிந்திருப்பதால் அவற்றை பற்றி எழுத வேண்டியதில்லை என்றும் அதுவல்ல தனது கட்டுரையின் நோக்கம் என்று ' தன எண்ணத்தையும் நோக்கத்தையும்' தன்னை அறியாமேலேயே வெளிப்படுத்திவிட்டார் ஷாஜி. அவரது நோக்கம் ராஜாவின் 'அடாவடி தனங்களை' அம்பல படுத்துவது. அவரை ஒரு கொடுங்கோலராக சித்தரிப்பது.
வெளிநாட்டு இசை கலைஞன் ஒருவன் கொலை செய்து விட்டு வந்து ஆல்பம் போட்டாலும், "அந்த மாதிரியான ஒரு மன நிலைமையிலும் அவருக்கு எங்கிருந்து இசை வந்ததோ!" என்று சிலாகிக்கும் பாணி ஷாஜியுடையது. அவருக்கு பிடிக்க வேண்டுமென்றால் ஒரு இசை கலைஞன் , அகாலத்தில் இறந்திருக்க வேண்டும் அல்லது.. வாழ் நாள் முழுதும் துயரத்தை அனுபவித்து பின்பு மாண்டிருக்க் வேண்டும். அவரது இசை (கலைஞர்கள்!) பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இது எளிதில் புரியும். வெற்றிகரமாக வாழும் இசை கலைஞர்கள் அவரை பொறுத்தவரை 'வணிக ரீதியில் வெற்றி பெற்றவர்கள்' .
(அதிலும் அவருக்கென பிரத்தியேக விதிவிலக்கு ரஹ்மான்! )

இங்கே ராஜா ரசிகர்களை எல்லாம் ஒரு சேர கேவலப்படுத்துகிறார் ஷாஜி. அவரது ரசிகர்கள் அவரை 'கடவுளாக' நினைக்கிறார்களாம். அவரது பொற்காலமான எண்பதுகளில் இசை அமைத்ததை போன்று அல்லாமல் அவ்வளவு தரமில்லாமல் தற்போது இசை அமைக்கும் பாடல்களையும் கண்மூடித்தனமாக ரசிக்கிறார்களாம். என்னை போன்ற பலரும் அவற்றின் அவர் தகுதிக்கு தரமில்லாத பாடல்களை ரசிப்பதில்லை என்றும் , அவருக்கு சரியான படங்கள் அமைந்தால் அக்குறைகளையும் அவ்வப்போது அவர் நிவர்த்தி செய்யும் போது சந்தோசம் அடைவதையும் இவர் அறிவாரா? இளையராஜா ரசிகர்கள் எவ்வளவு திறந்த மனதுடன் அவரை விமர்சனம் செய்த படி இசை பற்றி பேசிக்கொள்ளுகிறார்கள் என்று இணைய தளங்களில் சாதாரணமாக பார்க்கலாமே? வலைப்பூ எழுதும் ஷாஜி இவற்றை எல்லாம் படிக்கிறாரா இல்லையா?
தனது வன்ம வெளிப்பாட்டுக்கு சிகரம் வைத்தாற்போல் பழசிராஜாவின் 'அம்பும் கொம்பும்' பாடல் பாடகி தேர்வு காரணமாக தோல்வியடைந்ததாக குறிப்பிடும் ஷாஜி, அப்பாடல் யார் கவனத்துக்கும் வரவில்லை என்பதிலும் உள்ளூர சந்தோசம் கொள்கிறார்.

பா படத்தின் 'முடி முடி' பாடல் சத்தத்தால் கவனம் கவரும் வீண் முயற்சி என்று சொல்ல அவருக்கு உண்மையிலேயே மனசாட்சி உறுத்தவில்லையா? வெற்றி பெற்று (நினைவுகளில் இருந்து மறைந்த !) ரஹ்மானின் பல பாடல்கள் கவித்துவமான பாடல் வரிகளாலா வெற்றி பெற்றன ? கவனம் கவரும் சத்தங்கள் ஆபிரிக்க , அரேபிய குரல் சத்தங்களை வைத்து 'வித்தியாசமாக' இசை அமைத்த ரஹ்மானின் பாடல்கள் மட்டும் இவருக்கு இனிக்கின்றன. 'பா' பாடலில் அவர் கவித்துவ தரம் பார்க்கிறார். 'Slumdog Millionaire' படத்தில் போலிஸ் துரத்த ஓடும் சேரி சிறுவர்களின் மன ஓட்டத்தை புறக்கணித்து 'லபோ திபோ' என்று ஆபிரிக்க தாளம் தெறிக்க ரஹ்மான் கத்தி ஆஸ்கார் வாங்கினால் சந்தோஷப்பட்டு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கட்டுரை எழுதுகிறார். 'அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை ' என்ற தமிழ் பழைய பாடலை நினைவுபடுத்தும் ' ஜெய் ஹோ' இவருக்கு அரிய புதிய (!) பொக்கிஷம். ஆனால் தும்பி வா ஒரு வெளி நாட்டு பாடலின் 'நகல்' என்று இணைய தளங்கள் சொல்வதாக அள்ளி விடுகிறார். இப்பாடலும் youtube இல் கிடைக்கிறது. கேட்டுப்பார்த்தேன். ராஜா இந்த பாட்டை தன வாழ்நாளிலே ஒரு முறை கூட கேட்டிருக்க மாட்டார். அவ்வளவு பொருத்தம் கொண்ட அசல் (!) பாடல் இது.

'ராஜா ' என்று தன்னை தானே 'ராஜா' புகழ்ந்து கொள்வதற்காக விசனம் அடைகிறார் ஷாஜி. (அவர் பேர் ராஜா தானே. பின்னே என்ன மந்திரியா? )பாருங்கள் மொசார்ட் தன்னை 'ராஜா' என்று சொல்லி கொள்வாரா என்று கேட்கிறார். மொசார்டும் விதிவ்சத்தில் 'ராசையா' வாக பிறந்திருந்தால் தனது தலித் அடையாளத்தையும் மீறி , இசை துறையில் தவம் போல் உழைத்து , பல வெற்றிகளை கண்ட பின்பும், ராமராஜனுக்கும் மணிரத்னத்துக்கும் ஒரே நாளில் இசை அமைத்தாலும் அதிலும் variety காட்ட தெரிந்து ' பின்பு 'புகழ் ' கொடுத்த மமதையில் தன்னை 'ராஜா ' என்று சொல்லிக்கொண்டு 'திரிந்திருப்பாரோ' என்னவோ? இதெல்லாம் ஒரு இசை விமர்சகன் செய்யும் வேலையா?

முக்கியமான கட்டம் இது தான். இளையராஜா பாப மார்லி , பாப் டிலான் இருவரையும் 'குப்பை' என்று சொன்னதாக கொதிக்கிறார். இதே 'கருத்தை' நம் அறிவு ஜீவி சாரு தூக்கி 'சொமந்தார்.'. நான் கேட்கிறேன். ராஜா அவர்கள் இருவரையும் 'குப்பை' என்று எந்த பேட்டியில் சொன்னார். அல்லது எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ..மேடையில்.. தனது புத்தகங்களில் .. எந்த இடத்தில இந்த மாதிரி சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதற்கான ஆதாரம் என்ன? இது கண்டிப்பாக தெளிவாக்கப்படவேண்டும். ஏனென்றால் இந்த குற்ற சாட்டை சொல்லி பல 'குப்பைகள்' குதித்துக்கொண்டிருக்கின்றன.

மேலும் அவர் விரும்பினால் மக்களுக்கு சேவை செய்வார் ஷாஜி. கோவிலுக்கு கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். இதை மனதில் வைத்து அவரை 'மனிதம்' இல்லாதவர் என்று கதை கட்டாதீர்கள். ஒரு படத்துக்கு கோடி கணக்கில் வாங்கும் ஹாலிவுட் புகழ் இசை அமைப்பாளர்கள் மட்டும் ஏழை பங்காளர்களா? என்ன மாதிரியான பார்வை இது. இதுவும் உங்கள் இசை புலமையின் வழி வரும் சமூக அக்கறையா?

அவரது ஆன்மீக வாழ்க்கையை குறை சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தனது இசை வெளியீட்டு விழாவுக்கு இருபது பெண்களை நிர்வாணமாக சைக்கிள் ஓட்ட வைத்து 'புரட்சி' செய்யும் வெளிநாட்டு இசை கலைஞனை வானளாவ புகழ தெரிந்த உங்களுக்கு இசை மீதும் இறை மீதும் பக்தி கொண்டு கட்டுக்கோப்பான முறையில் வாழ பழகிக்கொண்ட ராஜா உங்களுக்கு ஜீரணம் ஆக மாட்டார் தான் .

என்னவோ 1992 இல் தான் ராஜா 56 படங்களுக்கு இசை அமைத்ததாக புது கதை விடுகிறார். அவரது 80 களில் பல மொழிகளில் 50 க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு ஆண்டு தோறும் இசை அமைத்தார் என்பது.. இசை (கலைஞர்கள் !) கட்டுரையாளரான ஷாஜிக்கு யாராவது எடுத்து சொல்லுங்கள்.

தவிர கஸ்தூரிமான் படத்திற்கான இசை அமைப்பு சமயத்தில் வந்த இரு பெண்களிடம் , அவர்கள் வேறு இசை அமைப்பாளர்கள் இசை பாடியிருந்ததன் காரணமாகவே கடுமையாக நடந்து கொண்டார் என்று எழுதுகிறார். காரணம் தான் அல்லாத மற்ற இசை அமைப்பாளர்களின் இசையை அவர் ஒத்துக்கொள்ள மறுப்பவர் என்கிறார் ஷாஜி.
இங்கும் எனக்கு தவிர்க்க முடியாமல் ரஹ்மானை இழுக்க வேண்டியிருக்கிறது.. தன முதல் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு 'குமுதம்' நேர்காணலில் தான் சிலரின் (வேறு யார்?) இசையை கேட்பதில்லை என்று சொல்லிவிட்டு தனக்கு பிடித்த இசை அமைப்பாளர்களின் பெயர்களை பட்டியலிடும்போது தமிழ் திரை உலகின் இசை சிகரமான (!) விஜய .T. ராஜேந்தரையும் அதில் சேர்க்கிறார், விடுபட்ட ஒரே பெயர் 'இளையராஜா' .யாரிடம் இசை வாசித்து வந்தாரோ அவர் பெயரை தன ஒரே வெற்றி கொண்டு
புறம் தள்ளிய ரஹ்மானை புகழும் ஷாஜி .. இவ்வளவு வெற்றிக்கு பிறகு ராஜா யாரை மதிக்க வேண்டும் ..ரசிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லி தர தேவை இல்லை. தனது முன்னோர்கள் மீது அவர் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.

சினிமா போன்ற தொழில் இடங்களில் ஆயிரம் நடக்கும். உங்கள் ஆதர்சம் மறைந்த லோகிதாஸ் , நடிகை ஒருவரை தன கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று யாரவது எழுதினால் நீங்கள் கொதிக்க மாட்டீர்களா? இவற்றை எல்லாம் எழுத உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

இன்னொரு முரணாக தன்னை 'ராஜா' என்று தற்பெருமை பேசினார் என்று பிதற்றும் ஷாஜி, கட்டுரையின் இறுதியில் அவர் தன்னை குறைவாக மதிப்பிட்டுக்கொண்டார் என்கிறார். ராஜா என்று சொல்லிகொள்வது மரியாதை குறைவான விஷயமா? எதோ ஒரு ஆத்திரத்தில் ராஜாவை பற்றி எதிர்மறையான விஷயங்களை சொல்ல வேண்டும் என்று முனைந்திருக்கிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது.

கடைசியாக ...
அன்புள்ள ஷாஜி

சாருவை பற்றி நான் எழுதிய கட்டுரையை கண்ணில் கண்ணீர் வருமளவுக்கு சிரித்துகொண்டே படித்ததாக சொன்னீர்கள் நான்கு நாட்களுக்கு முன்பு. இன்றோ உங்களை பற்றியே ஒருகட்டுரை எழுத வேண்டி எனை தூண்டியது உங்களது வழக்கத்துக்கு மாறான , வன்மம் மட்டுமே நிறைந்த ..இளையர்ஜாவை பற்றிய சமீபத்திய கட்டுரை தான்..வேறெந்த உள்நோக்கமும் அல்ல..

ஏனெனில் நீங்களே என்னிடம் சொன்னது போல் நீங்கள் ஒன்றும் சாரு நிவேதிதா அல்ல..!






Monday, November 30, 2009

அய்யா சாருவின் அருமை பெருமைகள்

'தேவதைகள் கால் வைக்க தயங்கும் பிரதேசத்தில் முட்டாள்கள் குதித்தாடியபடி செல்வார்கள்' என்றார் எம்.ஜி. சுரேஷ், அருமை அண்ணன் சாருவின் ஒரு நேர்காணல் குறித்து எழுதியபோது.
எவ்வளவு அறியாமையில் இருக்கிறார், எம்.ஜி.எஸ்.
அண்ணன் சாரு எப்பேர்பட்ட ஆள். உலகெங்கும்
உள்ள மலையாளிகள் அனைவரும் காலையில் பாத்ரூம் செல்வதற்கு முன் அய்யாவின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு சென்றால் தான், எல்லாம் நல்லபடியாய் போகும் என்று அவர் , படத்தை கையிலேயே வைத்துக்கொண்டு தான் தூங்க செல்கிறார்கள். குறிப்பாக பெண்கள்.
உலகெங்கும் உள்ள(குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த) இயக்குனர்கள் தங்கள்
படங்களின் முதல் காப்பியை அய்யாவுக்கு அர்ப்பணம் செய்த பிறகே உலகெங்கும் திரையிட செல்கிறார்கள். அகிரா குரோசோவா உயிரோடிருந்திருந்தால் அய்யா அவர்களின் நாவல்களில் ஒன்றை படமாக எடுத்து அன்றே தன் வாழ்நாளை முடித்துக்கொண்டிருப்பார்.

இவ்வளவு அருமை வாய்ந்த நம் அய்யாவை அவமதித்துப் பேசிய எம்.ஜி.எஸ்ஸை நினைத்து
சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அய்யா சாரு பற்றி ஒரு எழவும் தெரியாத தற்குறி தமிழர்களுக்கு அவரின் மேன்மைகளை எடுத்து சொல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். (அய்யாவை கேரளாவில் அறியாத தெரு நாய் ஒன்று கூட இல்லையாக்கும்!)
என்னமோ சாரு சாரு என்கிறீர்களே , சாரு யாரு? என்று கேட்கும் தமிழர்களே கேளுங்கள் எங்கள் அய்யாவின் அருமை மற்றும் பெருமைகளை..

அய்யா சரியாக எழுத
துவங்கும் முன்பே சு.ரா. போன்ற சுறாக்களை விமர்சன வேட்டையாடிய பெருமை கொண்டவராக்கும். (விமர்சனத்தின் பெரும்பகுதி பிரமிள் எழுதிய கட்டுரையின் காப்பி என்று சொல்பவர்கள் நரகத்துக்கு போக. )
அய்யா நாளிதழ் ஒன்றின் sponsorship இல் காலம் கழிப்பதாய் சொல்பவர்கள் நாசமாய்ப்போக.
அய்யாவின் விமர்சனம் படித்த தமிழ் இளம் இயக்குனர்கள் அவரை ஒரு படத்திலாவது தாதா வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சோறு தண்ணியில்லாமல் வெறும் சிக்கன் பிரியாணி , பீர் பிராந்தி என்று மட்டும் உண்டு தவம் கிடக்கிறார்கள். தாதாவா தாத்தாவா என்பது இயக்குனர்களும் இவரும் மட்டுமே அறிந்த ரகசியமாக்கும்.

அய்யா அவர்கள் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளரும் கூட.
அய்யாவின் கண்டுபிடிப்புகளில் சில:
கண்டுபிடிப்பு நம்பர் 1:

பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய தேசங்களில் மருந்துக்குக்கூட கற்பழிப்புகள் நடப்பதில்லை.
(ஆதாரம் அய்யா அவர்கள் கழிப்பறைக்கு செல்லும் முன் பிரான்ஸ், ரஷ்யா, பிரேசில் போன்ற அனைத்துலக நாடுகளின் e-paper களை படிக்கிறார். அவற்றில் ஒரு கற்பழிப்பு செய்தி கூட வராததைக்கண்டு ஆச்சரியமடைந்தவாறே கழிப்பறையை நோக்கி ஒரு பெருமிதத்துடன் நடக்கிறார்!)

கண்டுபிடிப்பு நம்பர் 2 :


ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் ஒரு பின் நவீனத்துவ படமாக்கும். என்னய்யா அப்படி பார்க்கிறீர்? சொன்னது யாரு ?
அருமை அண்ணன் சாரு!

கண்டுபிடிப்பு நம்பர் 3 :


செல்வராகவனின் 'புதுப்பேட்டை
' தான் தமிழின் முதல் ஸ்பார்ல்டன் சினிமா. செல்வராகவன் தமிழின் அகிரா குரோசோவா.
கண்டுபிடிப்புகளுக்கு கணக்கேயில்லை.

அய்யா ஒரு அதிரடி நாயகனாக்கும். கலைஞர் முதல் கமல்
வரைக்கும் ஒரு பிடி பிடித்து விடுவார் தெரியுமா ? (சொந்த ஊர் குற்றாலமா எனக்கேட்கும் கஸ்மாலம் யார்?)

தமிழின் ஒரே எழுத்தாளரான அய்யா அவர்கள் , சமூக பொறுப்பாளியும் கூட.
விஜய் டிவி யின் 'நீயா நானா ?' நிகழ்ச்சியில் தம்பிடி பைசா கூட பெற்றுக்கொள்ளாமல் , சினிமாவில் தலைகாட்ட டிவி ஒரு முதல் படி என்றெல்லாம் நினைக்காமல் , தமிழ் மக்களின் நலன் ஒன்றே தன்னலம் என்ற அரிய பெருந்தன்மையுடன் , பங்கேற்றவர்.
(பின்பு ஏனய்யா பேசிய பைசா கைக்கு வரவில்லை என்று ஆனந்த விகடனில் அழுது ஒப்பாரி வைத்தீர் என்று கேட்பவன் யாரடா?)
எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோரையும் சிரிக்க வைக்கும் பணியில் தன்னை வெகு நாட்களாக அர்ப்பணித்துக்கொண்டு தனக்கு தெரிந்த தெரியாத புரிந்த புரியாத மொழி திரைப்படங்களையும் , கோடி வீட்டு குப்பனும் சுப்பனும் அறியும் படி செய்யும் விமரசனப்பணியில் ஈடுபட்டு இன்னல்பட்டு வருகிறார்.

அய்யாவுக்கு பிடித்த இசை அமைப்பாளர் ரஹ்.... ஏய் நிறுத்து நிறுத்து! பிடித்த இசை அமைப்பாளர் எதற்கு? பிடிக்காத ஒரே இசை அமைப்பாளர் இளையராஜா என்ற இசை தெரியாத
ஒருவர்.
இததகைய முடிவுக்கு அய்யா
வர காரணம்?

நீண்ட நாட்களாகவே மாபெரும் இசை மற்றும் கலை விமர்சகரான அய்யா சாரு நிவேதிதா அவர்கள் தனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் செய்து , தமிழ் சமூகத்தின் தீராத அவலமான கொடூரமான இசை தந்து வரும் ,இசை பற்றி எதுவுமே தெரியாத இளையராஜாவை புறக்கணிக்க சொல்லி தனது மேலான விமர்சனப்பணியை எவ்வித உள் மற்றும் வெளிநோக்கம் இல்லாமல் செய்துவருகிறார். எனினும் அறிவே இல்லாத ஜென்மங்களான தமிழ் மக்கள் அவர் போல் இலத்தீன் மற்றும் கிசிக்ககோ(?) இசை கேட்காமல்
இளையராஜாவின் அபசுரங்களை கேட்டு அல்லல்படுகின்றனர். அவருக்கு பிற்பாடு உலக இசை மற்றும் செவ்வாய் கிரகம் மற்றும் சனி கிரக இசை மற்றும் வாயில் நுழைய முடியாத இசை வகைகளை அறிந்தவரான இசையின் எந்திர வடிவமான ஆஸ்கார் புகழ் ரஹ்மானின்
இசையை கேட்க சொல்லியும் எந்தவித லாப நட்ட நோக்கமின்றி சேவை செய்து
வருகிறார்.
அன்னாரின் அருமையான கருத்துக்களை கேட்க விரும்பாத Existentialism என்றால்
என்ன சமாசாரம் என்று கேட்கும் பாவிகள் நிறைந்த தமிழ் மக்கள் இனிமேலாவது திருந்த வேண்டும் என்று அய்யாவின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

(கிசிக்ககோ இசை பற்றி கேள்விப்படாதவர்கள் காதை அறுத்துக்கொள்ள வேண்டும். இது டிக்சிகோ நாட்டை சேர்ந்த இசை அறிஞரும் அங்கு கஞ்சா மற்றும் அபின் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவருமான டின்ச்கி இவருப்புடுங்கி என்ற பெயர் கொண்ட அக்கக்கோ ஆராரிராரோ என்ற மயன் இனத்தை சேர்ந்த ஒருவரின் கண்டுபிடிப்பான இசையாகும். )

அய்யா அவர்கள் இரவு பகல் எந்நேரம் ஆனாலும் நகாரா இசையைக்கேட்டுக்கொண்டே வேலை பார்ப்பவராக்கும்.

அய்யா அவர்களின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :
இளையராஜா இசை அமைத்த 'பா' ஹிந்தி படத்தின் இசை ஒரு மாபெரும் நகைச்சுவை என்று பம்பாய் சினிமாக்காரர்கள் பல் தெரிய சிரிக்கிறார்களாம். பம்பாயின் பெரிய பெரிய தலைகள் எல்லாம் போன் போட்டு இவரிடம் சிரியோ சிரியென்று விலா நோக சிரிக்கிறார்களாம். எப்பேர்பட்ட கண்டு பிடிப்பு பார்த்தீர்களா? இது போன்ற ஒன்றை உங்களால் கற்பனை செய்தாவது பார்க்கமுடியுமா மக்களே? இங்கு டெல்லியில் எனது பக்கத்துக்கு வீட்டுக்கார பஞ்சாபி 'பா' இசையைக்கேட்டு வயிறு வலிக்க வலிக்க சிரித்து Safdarjung hospital இல் அட்மிட் ஆகிவிட்டார் என்று அய்யாவுக்கு எப்படித்தான் தெரிந்ததோ ? எல்லாம் ஞான திருஷ்டி தான் போங்கள்.

ஆனால் அய்யா தனது தத்துவத்தின் இறுதியில் ஒரு குண்டை தூக்கிப்போட்டிருக்கிறார்.
மேற்கண்ட தகவலை இல்லை என்று நிரூபித்தால் தான் எழுதுவதையே நிறுத்தி கொள்ளப்போவதாக அய்யா எழுதி இருந்ததை படித்தவுடன் என் இதயமே நின்று விட்டது. அய்யா எழுதவதை நிறுத்தி விட்டால் தமிழகத்துக்கு எப்பேர்பட்ட இழப்பு? தமிழகம் கிடக்குது தமிழகம் , அவருக்கு கட்-அவுட் எல்லாம் வைத்து தலையில் வைத்துக்கொண்டாடும் மலையாள இலக்கிய உலகம் மரித்துப்போய் விடாதா?
இலத்தீன் அமெரிக்கா, பிரான்ஸ் ரஷ்யா போன்ற நாடுகள் மற்றும் செவ்வாய் கிரகத்தின் இயக்குனர்கள் தங்கள் திரைப்படங்களை யாரிடம் சென்று காட்டி கருத்துப்பெறுவார்கள்?
ஐயோ.. நினைக்கவே மனம் பதறுகிறதே.
எனவே மக்களே, என்னருமை மக்களே அவர் சொல்வது போல் 'பா' இசை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நகைச்சுவை என்று கூறி (அடேய் அறிவு கெட்ட பயலே ! வட இந்தியாவில் பா படத்தின் பாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு
இருக்கிறதடா மடையா! என்றெல்லாம் எடுத்தெறிந்து பேசாமல் !) அய்யாவின் எழுதுலகப்பணி என்றென்றும் தொடர வழிவகுக்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் கைப்புள்ளை காமெடியை விட சிறந்த காமெடியை வழங்க அய்யாவை விட்டால் நமக்குதான் ஒரு நாதியுண்டா?

Thursday, October 1, 2009

ஈர நிழல்கள்

ஈர நிழல்கள்

வெ.சந்திரமோகன்
ஒவியங்கள்: வெ.சந்திரமோகன்

கரிய கம்பளிப் போர்வையின் ஒற்றை வட்டத்திட்டாய் உறைந்திருந்த நிலவை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் பிரமோத். குர்கான் நோக்கி செல்லும் சாலையின் ஓரத்தில் அவனது கார் நின்று கொண்டிருந்தது. அதிவேகத்துடன் செல்லும் வாகனங்களின் வெளிச்சங்கள் வேக வேகமாய்க் கடந்து சென்று கொண்டிருந்தன. டிசம்பர் மாதத்துக் குளிர் ஒரு முரட்டுப் பேயைப் போல் உடலை வதைத்துக் கொண்டிருந்தது. அவன் நின்றிருந்த கோலம் நிலவின் அழகில் தன்னை மறந்த ஒரு கவிஞன் போல இருந்திருக்கும், யார் கண்டிருந்தாலும்; அவன் கால்களுக்குக் கீழே, மண்டிய இந்தப் புதர்களில் சாய்ந்து கிடந்த ரத்தம் தோய்ந்த சாக்கு மூட்டையைப் பார்க்காத வரை. கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி நிலவைப் பார்த்தவாறு அசையாமல் நெடுநேரம் நின்றிருந்தான், பிரமோத். நெற்றியில் வேர்வைத்துளிகள் அரும்பியிருந்தன. குளிரின் வீர்யமா அல்லது பதற்றமா ஏதோ வொன்றினால் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தான். திரும்பவும் கீழே கிடந்த மூட்டையை ஒரு முறை பார்த்தான். பல துண்டங்களாக்கப் பட்ட தீபிகாவின் உடலிலிருந்து கசிந்த ரத்தம் அங்கங்கே தோய்ந்து போயிருந்தது. ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான்.

"ஏன் நான் ஷ்யாமாகாந்திடம் பேசக் கூடாது?''

"ஏன் பேசணும்னு நான் கேக்கறேன்... என்ன அவசியம்? அவன் தான் உங்க ஆஃபீஸ் விட்டு மூணு மாசம் முன்னாடியே நின்னுட்டானே? இப்ப என்ன பேச்சு.... ஆஃபீஸ் விஷயமா? என்னை என்ன முட்டாள்னு நினச்சியா...?''

"அது எனக்குத் தெரியாது. அவன் என்னோட ஃப்ரண்ட் அவ்வளவுதான். இதுக்கு மேல பேசினா... நானும் பேசுவேன்''

"என்ன உங்க அக்காளை... சொல்லுடி.... என்ன.. என்ன?''

"ப்ளீஸ் டோண்ட் டாக் ரப்பிஷ்...''

"என்ன பேசிட்டேன் நான்? எதுவுமே கேக்கக் கூடாதா...? என்னைப் பத்தி என்ன சொல்லணும்னே.... சொல்லு... சொல்லு...''

"பகவானே, ஏன் இப்படி தினமும் என்ன சித்ரவதை பண்ற பிரமோத்... நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறே... டோண்ட் யூ லவ் மி? டு யூ திங்க் ஐம் நாட் லவிங் யூ... டு யூ ஸஸ்பெக்ட் மீ?''

பிரமோத் அவளை மிகவும் விரும்பினான். தீபிகா பீஹாரைச் சேர்ந்தவள். இவன் உத்திரப் பிரதேசத்துக் காரன். டெல்லிலேயே பிறந்து வளர்ந்தவன். NIIT படிக்கும்போது தீபிகாவைக் காதலித்தான். பின்பு நான்கு வருடங்களுக்கு பிறகு இரு வீட்டாரையும் சம்மதிக்க வைத்து விமரிசையாகக் கல்யாணம் செய்து கொண்டான். தேன் நிலவுக்கு ஜெர்மனி சென்று வந்தான். தீபிகாவைத் திளைக்கத் திளைக்கக் காதலித்தான். அவளும் தான். கல்யாணம் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகும் அவர்களின் அந்யோன்யம் இருவரின் நண்பர்களையும் பொறாமைப் பட வைக்கும். எல்லாம் தீபிகா ஒரு எம்என்ஸியில் சேர்ந்தது வரைக்கும் தான். அது ஒரு அமெரிக்கன் கம்பெனி. நைட் ஷிஃப்ட், ஈவ்னிங் ஷிஃப்ட் என்று தீபிகா முன்பை விடவும் பரபரப்பாகிப் போனாள். ஹார்டுவேர் நெட்வொர்கிங் கம்பெனியொன்றை சொந்தமாக நடத்தி வந்தான் பிரமோத். சனி, ஞாயிறு தவிர அவளை சந்திப்பதே அபூர்வமாகிப் போனது இவனுக்கு. சில சமயம் அலுவலக பார்ட்டி, அவுட்டிங் என்று சனி, ஞாயிறுகளிலும் வெளியே செல்ல ஆரம்பித்தாள் தீபிகா.

கல்யாணம் ஆவதற்கு முன்பு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தவள் தான். எனினும், தன் வருமானம் இருவருக்கும் தாராளமாய் இருக்கும் என்பதனால், இவளை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி விட்டான். அப்போதெல்லாம் இருவரும் சுற்றாத இடங்களே கிடையாது, டெல்லியில். அதெல்லாம் திரும்ப வராத கணங்கள். தொழிலில் கொஞ்சம் அடிவாங்கியிருந்த சமயத்தில் அவள் அப்ளை செய்திருந்த வேலை கிடைத்து விட வேறு வழியின்றி அவனும் சம்மதித்தான். நான்கைந்து மாதங்களில் அவளின் கனத்த சம்பளம் அங்கங்கு வாங்கியிருந்த கடன்களை அடைக்கப் போதுமானதாக இருந்தது. பிரமோத் சற்று ஆசுவாசமாய் உணர ஆரம்பித்தான்.

அவள் வேலைக்கு சேர்ந்து நான்காவது மாதத்தில் ஷ்யாமாகாந்த் வந்து சேர்ந்தான். நேர்த்தியான உடலமைப்பும், வசீகரமான கண்களுமாய் அலுவலக பெண்களின் அன்புக்குரியவனாய் ஆனான். எல்லோருக்குமே நண்பனாய் தான் நடந்து கொண்டான். பால் வித்தியாசங்கள் துடைத்தகற்றப்பட்ட ஆடஞ க்களின் சகஜமான அலுவலக தோழனாய் தான் முதலில் பிரமோத் கண்களுக்குத் தெரிந்தான். அவ்வப்போது வீட்டுக்கு வருவான், மிக அரிதான சந்தர்ப்பங்களில் இருவருக்கும் ஃபோன் செய்து பேசுவான். ஆரம்பத்தில் சகஜமானதாகக் கருதப்பட்ட அவர்களது நட்பு ஒரு கட்டத்தில் உறுத்தத் தொடங்கியது பிரமோதுக்கு. சில சமயம் ஒரு மணிக்கணக்கில் அவனுடன் பேசிக் கொண்டிருப்பாள் தீபிகா. அவனுடன் பேசும் சமயங்களில் அவள் குரலின் குழைவு, பிரமோதுக்கு மிகக் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தத் தொடங்கின.

காதலிக்கும் காலத்தில் இவனிடம் பேசிய குரலின் அதே குழைவு. நண்பர்களிடம் இத்தனை அந்நியோன்யமாக சிரித்துப் பேச என்ன விஷயமிருக்க முடியும்? பிரமோதின் யோசனைகளுக்கு மிக மோசமான பதில் கிடைக்கத் தொடங்கின. போதாக் குறைக்கு ஆஃபீஸ் டூர் சென்றிருந்த இடத்தில் அவன் தோள் மேல் இவள் கை போட்டு சிரிக்கும் புகைப்படம் ஒன்றை இவளது கம்ப்யூட்டரின் மறைக்கப்பட்ட ஃபோல்டரில் கண்டதில் இருந்து அமைதியிழக்க ஆரம்பித்தான். பிரமோத் கேட்கும் எந்த மாதிரியான கேள்விகளுக்கும் அவளிடம் தகுந்த பதில் இருந்தது. எல்லாவற்றிலும் லாஜிக் சரியாக இருந்தது. அதுதான் தீபிகாவின் பலம்; அவள் ப்ரொக்ராமிங் வேகத்தின் பின்புலம் இப்போது இவனைத் வதைக்கத் துவங்கியது. இடையில் நொய்டாவில் வேலை கிடைத்து ஷ்யாமாகாந்த் சென்று விட்டான். ஆனாலும், முன்பைப் போலவே சனி, ஞாயிறுகளில் இவன் வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சகஜமாய் வந்து போவதையும், நேரங்கெட்ட நேரத்தில் செல்போனுக்கு அழைத்து "அலுவலக விஷயங்கள்' பேசுவதையும் சுலபத்தில் புறந்தள்ள முடியாது. அதை மீறிய ஏதோவொன்று அவர்களுக்கிடையில் இருக்கிறதென்று தவிக்க ஆரம்பித்தான் பிரமோத்.

அன்று இரவு 11 மணிக்குபோன் செய்திருந்தான் ஷ்யாமாகாந்த். இடையிடையே அட்டகாசமான சிரிப்பும், உரிமை கலந்த அந்நியோன்யமுமாய் தீபிகா நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். டிவியை பார்த்தவாறே இவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான் பிரமோத். மறுமுனையில் ஏதோ அவன் கேட்டதற்கு பதிலாய் என்ன சொல்வ தென்றே யோசனையில் சற்று சங்கோஜமாய் சிரித்தவாறு "அப்புறம் பேசறேன்.... கண்டிப்பா அப்புறம் சொல்றேன்... பை'' என்று மொபைலை ஆஃப் செய்தாள். சிரிப்பின் மிச்சம் உதட்டில் இருக்க, இவனையும் ஒருமுறை ஓரக்கண்ணால் பார்த்தபடி, எழுந்து பாத்ரூமுக்கு சென்றாள். பிறகு தான் பார்த்தான், அவள் மொபைல் ஃபோன் அங்கு இல்லை. அப்படியெனில், பாத்ரூமுக்கு எடுத்து சென்று ரகசியம் பேசுகிறாளா? தேவடியாள்... என்ன கொழுப்பு இருக்கும். வெளியில் வரட்டும் என்று காத்திருந்தான்.

"தீபிகா... பாத்ரூமுக்குள்ளே போய் யார்கிட்ட போன்ல பேசிக்கிட்டிருந்த...?'' இவன் சிரித்தபடிதான் கேட்டான். அவளின் சற்றே வெளிறிய முகத்தில் திடீர்ப்புன்னகை மலர்ந்தது.

"ஏதோ யோசனையில மொபைலையும் எடுத்துக்கிட்டு போய்ட்டேன். பாரு பிரமோத்... என்ன ஒரு யந்திர வாழ்க்கை..?''

"போதும் நிறுத்து... நீ அவன் கிட்ட தானே பேசப் போனே... உண்மையைச் சொல்லு தேவடியாள் மகளே....?''

அவளின் லாஜிக் அன்று எடுபடவில்லை.

"ஐ டோன்ட் லவ் யூ... பிட்ச்...'' என்று நெஞ்சில் ஒரு உதை உதைத்தான். அப்படியே கட்டிலில் சாய்ந்தாள், மேல் ஏறி கழுத்தை அவள் தலை தொங்கும் வரை நெரித்தான். பிறகு கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து பலங்கொண்ட மட்டும் பாகம் பாகமாய் வெட்டினான்.

இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத் தான் பிரமோத். அதிகாலை மூன்றரை மணி ஆகி இருந்தது. யாரும் பார்த்து விடுவார்களோ என்று திரும்பிப் பார்த்துக் கொண்டான். வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தது. மூட்டையை இங்கே விட்டு விட்டு செல்வதா... வேறெங்கும் கொண்டு போவதா... என்ற யோசனை வந்தது. விடிவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஒரு முறை குனிந்து அந்த மூட்டையைத் தொட்டான். தீபிகாவின் ரத்தம் பிசுபிசுத்துக் கையில் ஒட்டியது. திடீரென்று ஏதோ பேச்சுக்குரல் கேட்பது போல தோன்றியது. அருகில் இருந்த புதரின் மறைவில் சாக்கு மூட்டையை உருட்டித் தள்ளி தானும் அதன்பின் மறைந்து கொண்டான். குரல்கள் நெடுங்கி வருவது போல தோன்றியது. பரிச்சயமான குரல்கள். மெள்ள எழுந்து குரலின் திசையில் பார்த்தான்.

"ரொம்ப பயமாருக்கு... சீக்கிரம் மூட்டையை இறக்கு...''

"இரு.. இரு... இதோ முடிஞ்சாச்சு...''

அந்த இருளில் கரிய நிழல்கள் போல் ஒரு மூட்டையை ஆளுக்கொரு பக்கமாய் சுமந்து வந்த இருவரும், சற்று சிரமப்பட்டு அதை இறக்கினர்.

பிரமோத் பிரமை பிடித்தவன் போல் நின்றிருந்தான். அந்த இருளிலும் அவர்கள் யாரென அடையாளம் கண்டு கொண்டு விட்டான். தீபிகாவும், ஷ்யாமாகாந்த்தும்.

"ஆனாலும்... பிரமோதை நீ கொன்னிருக்க வேண்டாம் ஷ்யாமா... என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டான்... பாவம்...'' தீபிகாவின் குரலில் லேசான நடுக்கம் தெரிந்தது.

பிரமோத் குனிந்து மூட்டையைப் பார்த்தான். சரியாகக் கட்டப்படாத அதன் ஒரு முனையில் ரத்தம் தோய்ந்த தலை தெரிந்தது.

மணி இரவு பனிரெண்டை தொட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பிரமோத் புரண்டு படுத்தான். ஈவ்னிங் ஷிஃப்ட் முடிந்து திரும்பும் கேபில் அமர்ந்திருந்த தீபிகா ஒரு சிக்னலில் நின்றதும் விழித்துக் கொண்டாள்.

Monday, September 28, 2009

ஐந்து பாட்டில் பீரும் அழுக்கடைந்த பாரும்

நாங்கள் ஆறுபேர், எம்.ஸி.ஏவின் கடைசி செமஸ்டர் ப்ராஜெக்ட்டுக்காக கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தோம் அப்போது. ஐந்தாவது செமஸ்டருக்கான மினி புராஜக்ட்டை சீனியர் மாணவன் ஒருவனின் பழைய ப்ராஜெக்ட்டை வைத்து தலைப்பு சம்பந்தப்பட்ட இடங்களை find and replace செய்து அவரவர் பெயர்களில் தனித்தனி ப்ராஜெக்ட்டாக சமர்ப்பித்து தப்பித்திருந்தோம். கடைசி செமஸ்டரில் அப்படி முடியாதாகையால் வேறு வழியின்றி சென்னையில் செய்வதென்று முடிவெடுத்து அவரவர் அப்பாக்கள் வட்டிக்கு வாங்கிய காசுடன் ட்ரஸ்ட்புரம் வந்து சேர்ந்தோம். அந்த இடத்தில் அது புதிய வீடு. கீழ் போர்ஷனில் வீட்டுக்காரரும் அவரது அழகான மனைவியும் சுமாரான அவர்களது மகளும் வசித்தனர். அவள் கல்லூரி மாணவி. ஆனால் இந்தக்கதை அந்த வீட்டைப் பற்றியதோ அவளைப் பற்றியதோ அல்ல.தலைப்பில் குறிப்பிட்டதுபோல் நாங்கள் அவ்வப்போது தாகசாந்தி செய்து கொண்ட பாரைப் பற்றியது தான். தங்கியிருந்த மூன்று மாதத்தில் நாங்கள் ப்ராஜெக்ட் செய்த தி.நகர் அலுவலகம் சென்றதை விட இந்த பாருக்கு சென்றது தான் அதிகம். ஆளுக்குத் தகுந்தாற்போல் குவார்ட்டர் அல்லது கட்டிங்குடன் அண்டை பிரேமா காண்டீனில் முட்டை பிரியாணி அல்லது சிக்கன் பிரியாணி அல்லது குஸ்கா சாப்பிடுவோம். லிபர்ட்டி தியேட்டர் செல்லும் வழியில் சாலையின் வலது புறத்தில் உள்ளடங்கினாற் போல் இருந்த ஒயின் ஷாப் அது. அதன் பார் ஒரு மர்மக் குகை. நுழைந்தவுடன் கவுண்டரில் காசு கொடுத்து ஓ.ஸி.யை வாங்க வேண்டியது. எதிர்படும் குடியானவர்களை இடித்துவிடாமல் இடது புறத்திலிருந்து இருட்டான வராந்தாவைக் கடந்து மங்கிய வெளிச்சத்துடன் மிதக்கும் விளக்கொளிப் பகுதிக்குள் நுழைந்தால் அது தான் பார். இடது வலது புறங்களில் கருங்கல் மற்றும் இன்ன பிறவஸ்துகளால் கட்டப்பட்ட பெஞ்சு. பானங்களை வைத்து சாப்பிட அதே கல் மற்றும் இன்ன பிறவற்றால் கட்டப்பட்ட நீளமான மேஜை. எப்போதும் ஒருவிதமான வாசனை மிதந்து கொண்டிருக்கும். பீர், பிராந்தி, ஜின் என்று பலவகை பானங்களுடன் அசைவ வகை உணவுகளின் நெடி நாசியை அடைக்கும். அழுக்கான, ஜன்னல்களே இல்லாத செவ்வக அறைஅது. டேபிளில் கிடக்கும் காலி பாட்டில்களையும் தண்ணீர் பாக்கெட்டுகளையும் அப்புறப்படுத்தி சுத்தமாகத் துடைத்துக் கொடுப்பான் பீட்டர். சின்ன பையன். பதினைந்து தாண்டியிருக்க மாட்டான். எங்களைத் தனியே ஸ்பெஷலாக கவனிப்பவன். எப்போதும் ஒரே பார்வை, ஒரே நடை வேகம். மதுரைப் பக்கம் ஏதோவொரு கிராமத்திலிருந்து வந்தவன் என்றும் வயதான தாயும் ஒரு தங்கையும் உண்டென்றும் ஒரு முறைசொன்னான். அவ்வப்போது ஐந்து பத்து என்று டிப்ஸ் தருவோம்.எங்களுக்கு ரொம்பவும் பிடித்தமான பையன் அவன். அவன் அம்மா ஒரு ஆஸ்த்மா நோயாளி யென்றும் மதுரையில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார் என்றும் சொல்லிருந்தான். கொஞ்சம் திக்குவாய். சரியாகக் காதும் கேட்காது சில சமயங்களில் என்ன சொன்னாலும் என்ன வென்று திரும்பக் கேட்பான். ஆரம்பத்தில் கோபம் வந்தாலும் போகப் போக அவனுக்கு இந்த மாதிரி பிரச்னை இருப்பது தெரிந்ததும் நாங்கள் அவனிடம் ஒட்டுதலாய் இருந்தோம். கார்த்தி அவனுக்கு தெரிந்த டாக்டர் ஒருவரிடம் கூட்டிச் செல்வதாக வந்த நாளிலிருந்து சொல்லிக் கொண்டிருந்தான். பீட்டருக்கு ஓய்வு நேரம் கிடைப்பதே பெரும்பாடாய் இருந்தது. எனவே, இது சாத்தியமில்லாமல் போயிற்று. ஹோட்டல், பார்களில் இவனைப் போன்று பல பையன்களைப் பார்த்திருந்தாலும் இவனின் வேகம், ஒழுங்கு இவற்றை வேறெவனிடமும் கண்டதில்லை. எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாலும் கண்களைச் சுற்றி ஒருவித சோகம் பசையைப் போல் அப்பியிருக்கும். அவனது கிழிந்த உடைகளில் அவனது வாழ்க்கை பரிதாபமாய் படர்ந்திருக்கும்.நாங்கள் சென்ற பொழுதுகளில் கூட்டம் அதிகம் இருந்ததில்லை. எனவே, குடித்த பின்பு கார்த்தி பொழியும் தத்துவங்கள் ஜனங்களுக்கு பயன்படாமல் காற்றிலேயே கரைந்து விட்டன. ஒரு பீரு விழுங்கியவுடன் அவன் சமீபத்தில் கேள்வியுற்ற ஏதாவது பிரபலமாக அவதாரமெடுத்து விடுவான். ஓரிரண்டு ரவுண்டுகளுக்கு அப்புறம் அவன் தனக்குத் தானே பேச தொடங்கி விடுவதால் தொந்தர வில்லாமல் பிறகு நாங்கள் ஆரம்பிப்போம்.அந்த சமயத்தில் எல்லோரும் ஏதேனும் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருந்தோம். ஆகையால் தண்ணியடித்தால் எங்கள் பேச்சு தத்தமது காதலியைப் பற்றியதாய் தொடங்கும் அல்லது வேறெதிலோ தொடங்கி இதில் முடியும்.ரமணன் ஒருவன் தான் எங்களில் பதிலுக்கு பதில் காதலித்துக் கொண்டிருந்தான். அதாவது இருதலைக் காதல். எஞ்சிய எங்களின் காதலிகள் உள் மனசுக்குத் தெரிந்தவரை தோழிகள் தான். ஆர்வமிகுதியாலும் தன்னம்பிக்கைக் குறைவாலும் அவர்களை காதலிகளாக சித்தரிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் நாங்கள் இருந்தோம்.எங்களில் சேகர் நல்ல அழகன். ரமணன் அவனுக்கு நேரெதிர். மிகச் சாதாரணமான தோற்றம் கொண்டவன். ஒல்லியாக அறுபதுகளின் இளைஞர்களைப் போன்றஉடலமைப்பு தலைமுடியுடன் இருப்பான். அவனுக்கு ஒரு காதலியும் காதலும் இருப்பது இயற்கையின் விநோதம் என்று தான் நினைத்தோம். அவன் பி.எஸ்.ஸி. ஃபிஸிக்ஸ் படிக்கும் போதிலிருந்தே சின்ன அளவிலான கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றைஅவன் வீட்டு மாடியில் நடத்தி வந்தான். கணிப்பொறி அறிவியலில் எங்களை விட அறிவும் அனுபவமும் கொண்டவன் அவன். ஒருமுறைஎங்கள் வகுப்புத் தோழி நிஷா வீட்டிற்கு சிஸ்டம் ஃபார்மேட் செய்ய என்று போயிருந்தானாம். நிஷாவின் தம்பி தொடங்கி மொத்தக் குடும்பத்தையும் ஒரே நாளில் கவர்ந்து விட்டானாம். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு நிஷாவும் அவனும் காதலிக்கிறார்கள் என்றசெய்தி கேட்டு எங்களுக்கு மயக்கம் வராத குறைதான். எனினும், தோழனாகையால் அவனுக்கு அவன் காதல் விஷயத்தில் நாங்கள் ஆதரவாயிருந்தோம். அவ்வப்போது அவன் அவன் தோற்றத்தைப் பற்றி நாங்கள் கிண்டல் செய்யாமலில்லை. ரமணன் இவற்றை அதிகமாக பொருட் படுத்தமாட்டான்.

பேச்சு ஒரு வழியாக நிஷாவைப் பற்றி திரும்பியது. சேகர்தான் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாக கிண்டல் செய்பவன். அவள் பற்றிய பேச்சு வந்தவுடன் ரமணன் அமைதியாகி விட்டான். போதையின் உச்சம் நெருங்க நெருங்க காதுகளில் சப்தம் அதிகமாவதையும் பார்வை நிலை கொள்ளாது அலைபாய்வதையும் கடந்து சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் மேஜைக்கு எதிரில் ஒரு வயசானவர் குடித்துக் கொண்டிருந்தார்.நிஷாவின் பெயரைக் குறிப்பிடாமல் ரமணனைக் குறிவைத்து தன் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருந்தான் சேகர். ஆதரவு வேண்டும் கண்களுடன் ரமணன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் ஏமாளிகள் என்றும் எல்லா அழகான பெண்களும் ஏன் அசிங்கமான ஆண்களையே விரும்புகிறார்கள் என்றும் எங்களைக் கேட்காமல் நேராக ரமணனையே கேட்டுக் கொண்டிருந்தான் சேகர். எக்காளச் சிரிப்பு எங்களில் யாரிடம் தோன்றியது என்று தெரியவில்லை.ரமணன் பெஞ்ச்சை விட்டு தடுமாறி எழுந்தான். வாஷ் பேசின் சென்று காறி துப்பி விட்டு முகத்தைக் கழுவிக் கொண்டு மேஜைக்குத் திரும்பினான். சேகர் இன்னும் சிரிப்பை விடவில்லை.""என்ன ரமணா... உண்மை கசக்குதா?'' என்றான்.ரமணன் முகத்தைச் சுளித்து சிரித்தான்.""நான் உண்மையைச் சொன்னா.... உனக்கு வாந்தியே வந்துடும்....''""என்ன உண்மை... சொல்லு பாப்போம்''எங்களுக்கெல்லாம் வேடிக்கைதான். சூழலை மறந்து விஷயம் எந்த எல்லைக்குப் போகும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் போல் அமைதியாயிருந்தோம்.""சொல்லட்டுமா... சொன்னா இன்னிலேருந்து நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸô இருக்க முடியாது தெரிஞ்சுக்க...''கார்த்தி பொறுமை இழந்தான்.""அப்படி என்ன தாண்டா ஒங்களுக்குள்ள விஷயம்...? சொல்லத் தொலைங்கடா.''ரமணன், சேகரை ஒருமுறை பார்த்து விட்டு புகார் சொல்லும் தோரணையில் எங்களைப் பார்த்து சொன்னான்.""இவன் என்ன பண்ணிருக்கான் தெரியுமா? போன மாசம் செமினார் அப்ப ஏதோ டவுட் கேட்டுருக்கா நிஷா. இவன் பக்கத்துல உக்காந்து சொல்லிக் குடுத்தவன் எந்திருக்கும் போது அவ கன்னத்தைக் கிள்ளிருக்கான். சண்டே ஃப்ரீயா இருந்தா ஏதாவது சினிமா போலாமான்னு கேட்டுருக்கான். நிஷா என்கிட்ட சொல்லி எவ்ளோ அழுதா தெரியுமா?'' கடைசி வார்த்தை முடியுமுன் அருகில் பட்டாசு வெடித்தது போல் சத்தம் கேட்டது. சேகரின் வலுவான கை ரமணனை அறைந்த வேகத்தில் பீட்டர் ஓடி வந்து விட்டான்.""அண்ணே... வேணாம்ணே.... அடிச்சுக்கா தீங்கண்ணே... சேகரண்ணே.... வுடுங்க வுடுங்க பேசிக்கலாம்.''ரமணனுக்கு கோபம் தலைக்கேறியது. எழுந்த வேகத்தில் ஒல்லியான ஆனால் உறுதியான காலால் சேகரின் விலா எலும்பில் மொத்தென்னு உதைத்தான். விஷயம் இந்த எல்லைக்கு வந்து விடுமென்று அறிந்திராத நாங்கள் இருவரையும் தனித்தனியே இழுக்க வேண்டியதாயிற்று. பீட்டர் இருவரின் நடுவில் நின்று கொண்டு என்னவோ தான் தவறு செய்தது போல் கும்பிட்டுக் கொண்டிருந்தான்.

சேகர் ரமணன் மேல் பாய்ந்தான். பீட்டர் அவன் கை பிடித்து இழுத்தான். "வுடுடா டேய்.. அவன கொல்லாம வுட மாட்டேண்டா" என்று எகிறினான் சேகர். நாங்கள் அவனை இழுப்பதற்குள் பீட்டர் அவன் முன்னால் நின்றபடி "வுடுண்ணா..சேகரன்னா சொன்னா கேளு" என்றான். சேகர் ஒரு கணம் அமைதியானவன் போல் நின்று , உடம்பை சற்று பின் தள்ளி , கையை ஓங்கி பளீரென பீட்டர் கன்னத்தில் அறைந்தான். ஒரு நொடி தான். பீட்டரின் கடைவாயில் ரத்தம் துளிர்த்தது. அவன் அசையாமல் நின்றான். சேகருக்கு ரத்தம் பார்த்தவுடன் பதற்றமாகி விட்டது. தான் என்ன செய்தோம் என்பதை தாமதமாய் உணர்ந்தவனாய் , " பீட்டர் .. ஸாரிடா தம்பி ..வேணும்னு அடிக்கலை டா .." என்றான். அவன் உடம்பு முன்னும் பின்னும் ஆடியது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பீட்டர் வாயை துடைத்தவாறு நகர ஆரம்பித்தான். சேகர் பாக்கெட்டில் கை விட்டு ஐம்பது ரூபாய் நோட்டொன்றை பீட்டர் கையில் திணித்தான்.

பீட்டர் அதை பொருட்படுத்தவேயில்லை. கீழே கிடந்த பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு வேகமாய் நடந்தான். கடைசி வரை அவன் கண்ணில் கண்ணீரை பார்த்ததாக நினைவில்லை. நாங்கள் கூப்பிட கூப்பிட காதில் விழாதவன் போல் போய்க்கொண்டே இருந்தான். ரமணனும் சேகரும் ஒருமுறை பரஸ்பரம் பார்த்துகொண்டார்கள்.

அதற்கடுத்து வந்த இருபது நாட்களில் நாங்கள் கடைசி நாள் மட்டும் அந்த பாருக்குப் போயிருந்தோம். பீட்டரைக் காணவில்லை. அவனைப் பற்றிய தகவலும் யாருக்கும் தெரியவில்லை. உள்ளே மற்றபையன்களுடன் புதியவன் ஒருவன் இருந்தான். பீட்டரை விடச் சின்னவன்.""தம்பி இங்க பீட்டர்ணு ஒரு பையன் இருந்தானே...''""எனக்குத் தெரியாதுங் கண்ணா. என்னண்ணா வேணும்.... மானிட்டரா.... நெப்போலியனா?''நாங்கள் அன்று குடிக்கவில்லை. அழுக்கடைந்து இருள் கலந்த அந்த பாரில் எதுவும் குடிக்காமல் ஐம்பது ரூபாய் டிப்ஸ் தந்தவர்களை ஆச்சர்யம் தாளாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
-vadakkuvaasal

Monday, July 13, 2009

நிழல்களின் உலகம்

கரிய நிறத்தில் உங்கள் காலடியில்
தவழ்ந்து வரும் நிழலை
கவனித்ததுண்டா நீங்கள் ?

நீங்கள் நினைத்திருப்பதைப் போல்
நிழல்கள் வெறும் நிழல்களல்ல
பலர் நினைத்திருந்ததைப் போல்
இறந்தவர்களின் உயிர்களல்ல பேய்கள்
அவை இருப்பவர்களின் நிழல்கள்

பகல் முழுவதும்
உங்கள் ரொட்டி தின்ற நாய்போல்
உங்களைத் தொடர்ந்து அலையும் நிழல்கள்
உங்கள் இளைப்பாரலுக்குப்பின்
இருளில் அலைந்து திரிகின்றன
ரத்தம் குடிக்கும் பேய்களாய்.

என்னுடைய - உங்களின்
நண்பர்களின் - காதலிகளின் நிழல்கள்
ரகசியமாய் சந்தித்துக் கொள்கின்றன
ராத்திரிகளின் மெளனக் காட்டில்

அவை சந்திக்கும் இடங்களுக்கு
ஒருபோதும் சென்று விடாதீர்கள்
சங்கடமாய் இருக்கும்

உங்கள் சகோதரியின் நிழலுக்கு
நெருங்கிய நட்பு நிழல்
முத்தமிடுவதையும்
என் மனைவியின் நிழலுக்கு
முதிய நிழல் ஒன்று
முத்தமிடுவதையும்
நேரில் கண்டதால் சொல்கிறேன்
அவை பயங்கரமானவை
உடல்களுக்குத்தான் உடைகள்
நிழல்கள் என்றும் நிர்வாணமாய்த்
திரிகின்றன
இரவில் விளக்கொளிகளைக் கொன்று
இருளைக் குடித்து அலையும் நிழல்கள்
பகலில் உங்கள் காலடியில் பயத்துடன்
அலைகின்றன
பாலைவன இரவொன்றில்
நிலவின் கீழ் நெடுநேரம் நின்றிருந்தேன்
மரணம் என் கால்களை
மெளனமாய் பற்றுவதாய்ப் பட்டது
நீண்டு நெளிந்திருந்த என்
நிழலைப் பார்த்தேன்
யாதுமறியாக் குழந்தையின் பாவனையுடன்
சொட்டுச் சொட்டாய் என் உயிரை
உறிஞ்சத் தொடங்கியிருந்தது
அது.

--வெ. சந்திரமோகன்
( வடக்கு வாசல் ஆகஸ்ட் 2007 ல் வெளியான கவிதை )

Saturday, July 11, 2009

நெளியும் நிறக்கோடுகள்

சாத்தியப் புள்ளிகள்
ஏதுமற்ற
கோலங்களை
உன் வாசலில்
வரைகிறாய்.
நிறப்பிரிகை விரலிடுக்குகளின் வழி
கோடாகி நெளியும்
கோல நிறமிகளில்
அகச்சிவப்பு கதிர்கள்.
என் கண்களை ஊடுருவி பின்
அங்கேயே தங்கிவிடுகின்றன.
உன் கோலமயில்கள்
வான்கோழிகளாய் ஓடுகின்றன
என் பாலைவனங்களில்
உன் சித்திரமுயல்கள்
நாய்களை வேட்டையாடின.
பொங்கல் பானையில்
வெந்து கொதிக்கிறது
என் மாமிசம்.
நல்வரவுப் பெண்ணின்
நகங்கள் நீள்கின்றன
பேய் போல்.
ஒரு முறை நீ வரைந்திருந்த
மானொன்று
குடல் சரிய
குத்திக் கிழித்தது
என் வனம் புகுந்து.
உன் கோலக் கோடுகளில்
நெளியும் சர்ப்பங்களின்
தீண்டல்களில் நீலம் பூத்தது
என் நிழல்.

உன் தெருவைக் கடக்கவே
பயமாயிருக்கிறது.

---வெ.சந்திரமோகன்
பிப்ரவரி 2006
வடக்கு வாசல்

கவிதை

சுதந்திரத்தின்

முதல் காற்றை நுகர்ந்தபடி

பசித்தவனுக்கு

கனிகளை கொடுத்திருந்தேன்

தூவி பழக்கப்பட்டவன்

விதைகளை விட்டுச்சென்றான்

நிறைந்த கனிகளுடன்

கல்லடிகளை

வாங்கும்

என்னிடம்

உயிர்நீர் வேண்டி நிற்கின்றன

விதைகள்...

இன்னும் நிரம்பி

வழிகிறது

ஏவாளின்

அட்சய பாத்திரம்.

--- ஜே.எஸ். அனார்கலி

Friday, July 10, 2009

காலம்

காலம்
கண்கொட்டாமல்
பார்த்து கொண்டிருக்கிறது.
பகல் விழித்திருப்பது பற்றியோ
இரவு விழித்திருப்பது பற்றியோ
கவலை இல்லை அதற்கு
யுகயுகங்களாக
கணம் கணமாக
காலம்
கண்கொட்டாமல்
கதை கேட்டுகொடிருக்கிறது.
விதவிதமான மனிதர்களுடையதும்
விலங்குகளுடையதும்கவியின் பருக்கையில் பசியாறிய பறவையினத்தினுடையதுமான கதைகள்
வளர்மரங்களினுடையதும்
அவற்றிலிருந்து கைவிடப்பட்ட
இலைகளினுடையதும் நகர சந்துகளில்
குத்த வைத்திருக்கும் குல தெய்வங்களினதும்
கதைசொல்லிகளின் கதைகளையும்
கூட
காலம் கேட்டுகொண்டிருக்கிறது.
பார்க்கையில்
காலம்
கதைகளால்
நிரம்பியிருக்கிறது.
----ஜே. எஸ். அனார்கலி


கவிதை

நிகழ்வின் பிரதிஎதுமற்ற
சந்தோஷத்தில்
குன்டியாட்டியபடி
நடக்கிறார்கள்
மனிதர்கள்.

- வெ. சந்திரமோகன்