Monday, July 13, 2009

நிழல்களின் உலகம்

கரிய நிறத்தில் உங்கள் காலடியில்
தவழ்ந்து வரும் நிழலை
கவனித்ததுண்டா நீங்கள் ?

நீங்கள் நினைத்திருப்பதைப் போல்
நிழல்கள் வெறும் நிழல்களல்ல
பலர் நினைத்திருந்ததைப் போல்
இறந்தவர்களின் உயிர்களல்ல பேய்கள்
அவை இருப்பவர்களின் நிழல்கள்

பகல் முழுவதும்
உங்கள் ரொட்டி தின்ற நாய்போல்
உங்களைத் தொடர்ந்து அலையும் நிழல்கள்
உங்கள் இளைப்பாரலுக்குப்பின்
இருளில் அலைந்து திரிகின்றன
ரத்தம் குடிக்கும் பேய்களாய்.

என்னுடைய - உங்களின்
நண்பர்களின் - காதலிகளின் நிழல்கள்
ரகசியமாய் சந்தித்துக் கொள்கின்றன
ராத்திரிகளின் மெளனக் காட்டில்

அவை சந்திக்கும் இடங்களுக்கு
ஒருபோதும் சென்று விடாதீர்கள்
சங்கடமாய் இருக்கும்

உங்கள் சகோதரியின் நிழலுக்கு
நெருங்கிய நட்பு நிழல்
முத்தமிடுவதையும்
என் மனைவியின் நிழலுக்கு
முதிய நிழல் ஒன்று
முத்தமிடுவதையும்
நேரில் கண்டதால் சொல்கிறேன்
அவை பயங்கரமானவை
உடல்களுக்குத்தான் உடைகள்
நிழல்கள் என்றும் நிர்வாணமாய்த்
திரிகின்றன
இரவில் விளக்கொளிகளைக் கொன்று
இருளைக் குடித்து அலையும் நிழல்கள்
பகலில் உங்கள் காலடியில் பயத்துடன்
அலைகின்றன
பாலைவன இரவொன்றில்
நிலவின் கீழ் நெடுநேரம் நின்றிருந்தேன்
மரணம் என் கால்களை
மெளனமாய் பற்றுவதாய்ப் பட்டது
நீண்டு நெளிந்திருந்த என்
நிழலைப் பார்த்தேன்
யாதுமறியாக் குழந்தையின் பாவனையுடன்
சொட்டுச் சொட்டாய் என் உயிரை
உறிஞ்சத் தொடங்கியிருந்தது
அது.

--வெ. சந்திரமோகன்
( வடக்கு வாசல் ஆகஸ்ட் 2007 ல் வெளியான கவிதை )

1 comment:

  1. அன்பு சந்திரமோகன் - அனார்க்கலி

    வலைப்பூ உலகில் உங்களின் வரவு மிகுந்த மகிழ்வளிக்கிறது. எதையும் அழகாகச் செய்ய முயற்சிக்கும் பாங்கு அருமை.

    ஆரம்பத்தில் உள்ள உற்சாகம் இறுதி வரை நிலைக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    யதார்த்தா பென்னேஸ்வரன்

    ReplyDelete