Saturday, July 11, 2009

நெளியும் நிறக்கோடுகள்

சாத்தியப் புள்ளிகள்
ஏதுமற்ற
கோலங்களை
உன் வாசலில்
வரைகிறாய்.
நிறப்பிரிகை விரலிடுக்குகளின் வழி
கோடாகி நெளியும்
கோல நிறமிகளில்
அகச்சிவப்பு கதிர்கள்.
என் கண்களை ஊடுருவி பின்
அங்கேயே தங்கிவிடுகின்றன.
உன் கோலமயில்கள்
வான்கோழிகளாய் ஓடுகின்றன
என் பாலைவனங்களில்
உன் சித்திரமுயல்கள்
நாய்களை வேட்டையாடின.
பொங்கல் பானையில்
வெந்து கொதிக்கிறது
என் மாமிசம்.
நல்வரவுப் பெண்ணின்
நகங்கள் நீள்கின்றன
பேய் போல்.
ஒரு முறை நீ வரைந்திருந்த
மானொன்று
குடல் சரிய
குத்திக் கிழித்தது
என் வனம் புகுந்து.
உன் கோலக் கோடுகளில்
நெளியும் சர்ப்பங்களின்
தீண்டல்களில் நீலம் பூத்தது
என் நிழல்.

உன் தெருவைக் கடக்கவே
பயமாயிருக்கிறது.

---வெ.சந்திரமோகன்
பிப்ரவரி 2006
வடக்கு வாசல்

No comments:

Post a Comment