Thursday, August 14, 2014

ராபின் வில்லியம்ஸ்: உறைந்த புன்னகை





மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராபின் வில்லியம்ஸ் இறந்துவிட்டார் என்ற தகவல், ஹாலிவுட்டை மட்டுமல்லாமல், உலகமெங்கும் உள்ள திரை ரசிகர்களைத் துக்கத்தில் ஆழ்த் தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மன அழுத் தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எத்தனையோ பேரின் மனஅழுத்தத்தைத் தனது நகைச்சுவை நடிப்பால் நீக்கியவர் தற்கொலை செய்துகொண்டிருப்பாரா என்ற அதிர்ச்சியில் உலக ரசிகர்கள் உறைந்துபோயுள்ளனர்.
அவருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என்று பலரும் இணையத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல, இந்திய ரசிகர்களும் திரைக் கலைஞர்களும் அவரது மரணத்தால் அதிர்ச்சியடைந் திருக்கின்றனர். இணையத்தில் பாலிவுட் நட்சத்திரங்களின் ‘ஆர்.ஐ.பி.' அஞ்சலி செய்திகள் நிரம்பிவழிகின்றன.
பொதுவாக, அமெரிக்கர்களின் ரசனைக்கேற்ற வகையில் எடுக்கப்படும் படங்களிலும், உலகமெங்கும் உள்ள பொது ரசிகர்களின் விருப்பத்துக்குரிய படங் களிலும் நடித்து, புகழ்பெற்ற நடிகர்கள் வெகு சிலர்தான். அந்தச் சிறிய பட்டியலில், முக்கிய இடத்தில் ராபின் வில்லியம்ஸ் இருக்கிறார். அவர் நடித்த ‘தி குட்வில் ஹண்டிங்', ‘டெட் பொயெட்ஸ் சொசைட்டி', ‘குட்மார்னிங் வியட்நாம்' போன்ற படங்கள் அமெரிக்க ரசிகர்களையும், ‘ஜுமாஞ்சி', ‘ஃப்ளப்பர்', ‘மிஸஸ். டவுட்ஃபயர்', ‘நைட் அட் தி மியூசியம்' போன்ற படங்கள் உலகெங்கும் உள்ள சாதாரண ரசிகர்களையும் கவர்ந்தவை.

ரிஷிமூலன்

அதேபோல், நகைச்சுவை மிளிரும் பாத்திரங்களிலும், அமைதியான குணம் கொண்ட சாதாரணர்களின் பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்தவர் அவர். அத்துடன், அவர் நடித்த சில படங்கள் தமிழ், இந்தி படங்களின் ரிஷிமூலமாக இருந்தன. குறிப்பாக, அவர் நடித்த ‘மிஸஸ் டவுட்ஃபயர்’ - ‘அவ்வை சண்முகி’யாகவும், ‘பாட்ச் ஆடம்ஸ்’ படம் ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.’ (தமிழில் வசூல்ராஜா) ஆகவும் நம் கண்களுக்குப் பழக்கமானவை.
1951-ல் சிகாகோவில் பிறந்த ராபின், மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்டு நகரப் பள்ளியில் படித்தவர். கிளாரமண்ட் மெக்கென்னா கல்லூரியில் படித்த பின்னர், நியூயார்க்கில் உள்ள ஜுல்லியர்ட் நிகழ்த்துகலைக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். சூப்பர் மேன் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற கிறிஸ்டோபர் ரீவ்ஸ், இவரது சக மாணவர். கலிஃபோர்னியாவில் உள்ள மரின் கல்லூரியில் மேடை நாடகப் பயிற்சி பெற்றார் ராபின். 1970-களின் இறுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றார். வேற்றுக் கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் மோர்க் என்ற பாத்திரத்தில், அவர் நடித்த ‘ஹேப்பி டேஸ்' தொடர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதே பாத்திரத்தை இன்னும் விஸ்தரித்து, ‘மோர்க் அண்ட் மிண்டி' என்ற தொடர் வெளியானது. ‘கேன் ஐ டூ இட்' (1977) என்ற நகைச்சுவைப் படத்தின் மூலம், ஹாலிவுட்டில் அறிமுகமானார்.
அங்கீகாரமும் விருதுகளும்
1987-ல் ‘குட்மார்னிங் வியட்நாம்' படத்தில், வியட்நாமில் பணிபுரியும் வானொலி அறிவிப்பாளர் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்தார். ‘குட் மார்னீஈஈஈங்…வியட்நாம்' என்று அவர் பேசுவது போலவே, ‘லகே ரஹோ முன்னாபாய்’ படத்தில் வித்யாபாலன் இழுத்துப் பேசுவார். அந்த வகையில் இந்திய நடிகைகளுக்கும் ‘இன்ஸ்பிரேஷனாக' இருந்திருக்கிறார் ராபின். 'குட்மார்னிங் வியட்நாம்' படத்துக்காக, முதல் கோல்டன் குளோப் விருது பெற்றார். அதே படத்துக்காக, முதல்முறையாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ‘டெட் பொயட்’ஸ் சொசைட்டி' படத்தில், ஆங்கில ஆசிரியர் பாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். அதில், அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் ‘ஓ கேப்டன் மை கேப்டன்' என்ற கவிதை வரிகளை மாணவர்களிடம் பேசி அவர்களைக் கவரும் காட்சி வெகு பிரசித்தம். அந்தப் படத்துக்காகவும் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
நடிகர் மேட் டாமனுடன் இணைந்து நடித்த ‘குட் வில் ஹண்டிங்’(1997) படத்துக்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அந்தப் படத்தில், உளவியல் மருத்துவராக மிகச் சிறப்பாக நடித்தார். ‘ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்', ‘ஹேப்பி ஃபீட்', ‘அலாதீன்' போன்ற படங்களில் பின்னணிக் குரல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார்.
பிரபல கார்ட்டூன் பாத்திரமான ‘பாப்பய்’பாத்திரத்திலும் நடித்தார். அமெரிக்காவின் 26-வது அதிபர் தியடோர் ரூஸ்வெல்ட் பாத்திரத்திலும், ‘நைட் அட் தி மியூசியம்' படத்தில் ‘தி பட்லர்' படத்தில் 36-வது அதிபர் டுவைட் ஐசனோவர் பாத்திரத்திலும் நடித்தது, ராபின் வில்லியம்ஸின் தனிச்சிறப்பு. அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “நம்மைச் சிரிக்க வைத்தவர்; அழ வைத்தவர். அளவிட முடியாத தனது திறமையைத் தாராளமாக நமக்குத் தந்தவர்”.

-தி இந்து இதழில் வெளியான கட்டுரை.

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88/article6311160.ece?homepage=true&theme=true

Sunday, February 9, 2014

புகச்சோவ், புஷ்கின், புரட்சி மற்றும் புன்னகை

டெல்லியில் உள்ள சாஹித்ய அகாடமி கட்டிடத்துக்கு வெளியே, சாலையோரத்தில் உயரமான பீடத்தின்மீது நின்றபடி  விரையும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அலெக்ஸாண்டர் புஷ்கின். கைகளைப் பின்னால் கட்டியபடி முதுகை சற்று முன்னோக்கி சாய்த்தது போன்ற நிலையில் அந்த ரஷ்யக் கவிஞனின் சிலையைக் கடந்துசெல்லும் டெல்லிவாசிகளில் எத்தனைபேர் அவரை அறிந்திருப்பார்கள். ‘கேப்டன் மகளை’ அவர்கள் தரிசித்திருப்பார்களா என்று எண்ணம் அவ்வப்போது வந்துபோகும்.
கருப்பு நிறத்திலான அந்த சிலையை முதலில் பார்த்தபோது மனதுக்கு நெருக்கமான ஒரு ஆளுமையை முதன்முதலாக நேரில் பார்த்ததுபோன்ற பரவசம் ஏற்படுவது நிஜம். சாகித்ய அகாடமி அருகே அமைக்கப்பட்டுள்ள இலக்கியவாதியின் சிலை புஷ்கினுடையது மட்டும் தான்.  1988-ல் ஒன்று பட்ட இந்தியாவுக்கு வந்திருந்த சோவியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இந்த சிலையைத் திறந்துவைப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் வராமல் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் எடுவர்ட் ஷெவர்ட்னாட்ஸே அந்த சிலையைத் திறந்துவைத்தார் என்று ஒரு குறிப்பு சொல்கிறது. யார் திறந்துவைத்தால் என்ன? ரஷ்ய இலக்கிய பிதாமகரின் உருவச்சிலை இந்திய மண்ணில் நிலைகொண்டிருப்பதே பெருமை தானே! அந்த அற்புத எழுத்தாளனின் நினைவு நாள் இன்று.

அடிப்படையில் கவிஞரான புஷ்கின் ரஷ்ய நவீன இலக்கியத்தின் முன்னோடியாகக் கொண்டாடப்படுபவர். ரொமான்டிசிஸ காலத்திய இலக்கியப் படைப்பாளி. நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த ‘கேப்டன் மகள்’ நாவல் புஷ்கினின் மகத்தானப் படைப்புகளில் ஒன்று. அவர் எழுதிய இறுதி நாவலும் அது தான். வெள்ளையான வழவழப்பான தடித்த அட்டையில் பதிப்பிக்கப்பட்ட அந்தப் புத்தகத்தில் 18-ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் வெடித்த விவசாயப் புரட்சியின் பின்னணியில் ஒரு அற்புதமான காதல் கதை ஒளிந்திருந்தது. பிறப்பதற்கு முன்னரே தனது தந்தையால் ராணுவத்துக்கு கிட்டத்தட்ட ‘நேர்ந்துவிடப்பட்ட’ இளைஞன் பியோத்தர் ஆந்திரேயிச் தான் கதையின் நாயகன். செல்வச்செழிப்பு மிக்கக் குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளரும் அவன் தன் தந்தையின் கண்டிப்பான உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து ஓரென்பெர்க்குக்கு அருகில் உள்ள பெலகோர்ஸ்க்  கோட்டையின்  படைப்பிரிவில் சேர்வதற்காக, விசுவாசமிக்க முதிய வேலைக்காரனுடன் தனது பயணத்தைத் தொடங்குவான். செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் ராணுவ உயரதிகாரியாக உல்லாசமான வாழ்க்கை வாழலாம் என்று கற்பனையில் மிதந்தவனை, ஒரு அரதப்பழசான கோட்டைக்கு அவனது தந்தை அனுப்பிவிடுவார். அந்தக் கோட்டையில் அவனுக்கு அழகான காதலி கிடைப்பாள். கேப்டனின் மகள்!

பனிபடர்ந்த நிலத்தில் பியோத்தர் தொடங்கும் பயணத்தில் விவசாயப் புரட்சியின் தலைவன் புகச்சோவ், கேப்டனின் மகளும் நாயகியுமான மாஷா, வஞ்சக மனம் படைத்த ஷ்வாப்ரின், கேப்டனின் மனைவி என்ற பெருமையுடன் படைப்பிரிவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்மணி என்று பலரும் நம்முடன் பயணிப்பார்கள். பனிப்புயலில் சிக்கிக்கொள்ளும் பியோத்தரின் ஸ்லெட்ஜ் வண்டியை வழிநடத்தி ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லும் நாடோடி தான் பின்னாட்களில் விவசாயப் புரட்சிக்குத் தலைமையேற்று ரஷ்யாவின் பல இடங்களைக் கைப்பற்றி ஜார் மன்னனுக்கு பெரும் சவாலாக இருந்த புகச்சோவ். பத்திரமான இடத்தைக் காட்டிய அந்த நாடோடி யாரென்று தெரியாமல் விலையுயர்ந்த ஒரு மேலங்கியை அவனுக்குப் பரிசளிப்பான பியோத்தர். அந்த நன்றிக்கடனை மறக்காத புகச்சோவ், தான் கைப்பற்றும் பெலகோர் ஸ்க்  கோட்டை படைப்பிரிவில் இருக்கும் பியோத்தரை அடையாளம் கண்டு அவனைக் கொல்லாமல் விடுவிப்பதுடன், சதிகார ஷ்வாப்ரினிடமிருந்து பியோத்தரின் காதலி மாஷாவையும் மீட்டுக் கொடுப்பான். ஒரு பெரும் புரட்சிக்கே தலைவனான புகச்சோவ், பியோத்தரிடம் இத்தனை கருணை காட்ட அந்த மேலங்கி தான் காரணம். எதற்கும் அஞ்சாத ஒரு வீரனுக்குள் கருணையும் நன்றியும் கலந்திருப்பதை புஷ்கின் அற்புதமாக விவரித்திருப்பார். 

கேப்டன் மகள் மாஷா மீது காதல் கொள்ளும் பியோத்தர் அவளை வர்ணித்து எழுதிய கவிதையை ஷ்வாப்ரின் கிண்டல் செய்வதுடன் அவளது நடத்தை பற்றி இழிவாகப் பேசுவதைக் கேட்டு வெகுண்டெழும் பியோத்தர் ஷ்வாப்ரினுடன் வாட்சண்டைக்குப் போவான். அந்தக் காலத்தில் தங்கள் தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்ள எதிரிகள் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சண்டை Dual எனப்பட்டது. இருவரும் சண்டைக்குத் தயராகும்போதே, படைப்பிரிவின் மற்ற அதிகாரிகள் வந்து தடுத்துவிடுவார்கள். இருவரின் வாட்களும் பறிமுதல் செய்யப்படும். இதுவரையான சம்பவங்களை யாராலும் எழுதிவிட முடியும். அதற்குப் பிறகு பியோத்தரும் ஷ்வாப்ரினும் நடந்துகொள்வதை எழுத புஷ்கினால் தான் முடியும். தாங்கள் இருவரும் எப்படியாவது சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்று இருவரும் ரகசியமாகத் திட்டமிடுவார்கள். ஒருவரையொருவர் கொல்ல வேண்டும் என்று மனதுக்குள் பகைமை கொண்ட  இருவரும் மீண்டும் சண்டையிட்டுக் கொள்வதற்காக சந்தித்து ரகசியமாகத் திட்டமிடுவார்கள்.  பகைவர்கள் தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்ள தாங்களே திட்டமிடுவது வழக்கத்தை விட எத்தனை முரணானது.அது தான் புஷ்கினின் தனித்தன்மை. அதனால் தான் “புஷ்கின் எழுத்துக்கு முன்னால் யதார்த்தம் கூட செயற்கையாகத் தான் தெரியும்” என்று நிக்கலாய் கோகல்  குறிப்பிடுகிறார். நாவலில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் மொழிபெயர்ப்பாளர் தர்மராஜன். அந்நிய நிலத்தின் வாசனை என்றாலும் அதை உறுத்தலில்லாமல் முகரச்செய்யும் மொழி அவருடையது. இதனால், நேரடி தமிழ் நாவலைப் படிக்கும் உணர்வு தான் வாசகர்களுக்கு ஏற்படும்.

கதையில் வருவதுபோலவே, புஷ்கினும் அடிக்கடி வாட்சண்டையில் ஈடுபட்டவர்தான். 20-க்கும் மேற்பட்ட வாட்சண்டையில் அவர் ஈடுபட்டதாக ஒரு குறிப்பு சொல்கிறது.  இறுதியாக தனது மனைவியின் மீது மையல் கொண்ட பிரபுவுடன் வாட்சண்டையில் ஈடுபட்ட புஷ்கின் அந்த சண்டையிலேயே மரணமடைந்தார். ஒரு எழுத்தாளர் உடல்வலிவுடன் சண்டைத்திறனும் கொண்டிருந்தார் என்பது முற்றிலும் நம்பமுடியாத விஷயம் அல்ல. தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதியும் உடற்பயிற்சிகளில் ஆர்வம் காட்டியவர் தான். எனினும் யாருடனும் சண்டைக்கெல்லாம் சென்றதில்லை. புஷ்கின் எழுதிய பல கவிதைகள் ரஷ்ய இலக்கியத்தில் கொண்டாடப்படுகின்றன. 

புஷ்கினின் முன்னோர்கள் பற்றிய தகவல்கள் ஆச்சரியம் தருபவை. அவரது தாயின் தாத்தா ஆப்ராம் பெத்ரோவிச் கேனிபல், கருப்பின அடிமையாக இருந்தவர். அவரை 17-ம் நூற்றாண்டின் புகழ்மிக்க பேரரசரான முதலாம் பீட்டர் அடிமை வாழ்விலிருந்து மீட்டெடுத்து வளர்த்தார். பின்னாட்களில் ரஷ்ய ராணுவத்தில் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தார் ஆப்ராம் பெத்ரோவிச். அவரது வழிவந்த புஷ்கினுக்கு அடிமைகள், விவசாயிகள் உள்ளிட்ட விளிம்புநிலை மனிதர்கள் மீது கரிசனம் இருப்பதில் ஆச்சரியமில்லை. விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுபவர்கள் பற்றிய அவரது பரிவான குரல் ‘கேப்டன் மகள்’ நாவலில் ஒலிக்கிறது. “குற்றம்சாட்டப்பட்ட ஒருவன் தான் நிரபராதி என்று எத்தனை முறை சொன்னாலும் அது ஏற்கப்படுவதில்லை. ஆனால் பல சித்திரவதைகளுக்குப் பின்னர், தான் குற்றவாளி என்று அவன் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மட்டும் அது ஏற்கப்பட்டு அவனுக்கு தண்டனை வழங்கப்படுவது என்ன நியாயம்?” என்று புஷ்கினின் கேள்வி இன்றைய சூழலிலும் பொருத்தமானதாக இருப்பது  துரதிருஷ்டமானது.
அதேபோல், ரஷ்ய அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடும் புகச்சோவ் தன்னைக் கொல்லாமல் விட்டாலும் அவனைப் பாசாங்குக்காரன் என்றே கடைசிவரை சொல்கிறான் பியோத்தர். எனினும் ஒரு கட்டத்தில் புகச்சோவை அனைத்து அபாயங்களில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் என்று அவன் மனம் துடிக்கிறது. பியோத்தர் எழுதிய குறிப்புகளை அடிப்படையாக வைத்து எழுதியது தான் என்றாலும் நேர்மையும் துணிச்சலும் நிறைந்த பியோத்தரின் மன ஓட்டத்தை அதே குணங்கள் கொண்ட புஷ்கினால் தான் புரிந்துகொண்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

’கேப்டன் மகள்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 4 திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய மொழியிலேயே வெளியான அந்தத் திரைப்படங்களில் ஒன்றான Kapitanskaya Dochka என்ற ரஷ்ய மொழித் திரைப்படம்  யூடியூபில் காணக்கிடைக்கிறது. நாவலை முழுமையாக உள்வாங்கி எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் நடிகர்கள் தேர்வு பிரமிக்க வைக்கிறது. பொதுவாக நாவல்கள் திரைப்படமாக்கப்படும்போது அதுவரை ஒவ்வொரு வாசகனின் பிரத்யேகக் கற்பனையுலகில்   உலாவந்த பாத்திரங்க்ளைத் திரையில் சித்தரிப்பது என்பது திரைக்கலைஞர்களுக்கு சவாலான விஷயம். ஹாலிவுட் முதல் தமிழ் சினிமா வரை இதற்கு உதாரணங்கள் உண்டு. ஒரே நேரத்தில் பலர் காணும் கனவான சினிமாவில் அது சிரமமான காரியம் தான். வாசகன் ரசிகனாகும்போது திருப்தியடையாமல் போவதும் உண்டு. சில சமயம், தங்கள் படைப்புகள் திரையில் சரியாக சித்தரிக்கப்படவில்லை என்று அங்கலாய்க்கும் எழுத்தாளர்களும் உண்டு.

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக், அமானுஷ்யமான கதைகளுக்குப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஸ்டீஃபன் கிங்கின் ‘தி ஷைனிங்’ நாவலை அதே பெயரில் திரைப்படமாகத் தந்தபோது அப் படத்தை ஸ்டீஃபன் கிங் முற்றிலுமாகப் புறக்கணித்தார். ஆனால் அந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதுபோல் பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், புஷ்கினின் கேப்டன் மகளின் திரைவடிவம் நேர்த்தியான இயக்கம், அற்புதமான நடிகர்கள், உயிர்ப்பான பின்னணி இசை போன்ற அம்சங்களால் நாவலுக்கு முடிந்த அளவுக்கு நேர்மை செய்திருக்கிறது. 1959-ல் வெளியான இந்த கறுப்பு வெள்ளைப் படத்தில் நாவலில் வரும் பல காட்சிகள் வாசகனின் கற்பனைக்கு உயிர்கொடுத்திருக்கின்றன. குறிப்பாக ஓடன்பெர்க் கோட்டையைக் கைப்பற்றும் புகச்சோவ்  கேப்டன் உள்ளிட்டவர்களைத் தூக்கிலிட்ட பின்னர் அந்த உடல்கள் கயிற்றில் ஊசலாடும் காட்சி, ஜார் படையினரால் கைதுசெய்யப்படும் புகச்சோவ் கம்பிகளாலான கூண்டுக்குள் சிறைவைக்கப்பட்டு வண்டி ஒன்றில் வைத்து எடுத்துச்செல்லப்படும் காட்சி போன்றவை நாவலின் ஜீவனைக் கண்முன் நிறுத்துகின்றன. அதேபோல், சிரச்சேதம் செய்வதற்காகக் கொண்டு செல்லப்படும் புகச்சோவ், பலிபீடத்தின் அருகே நிற்கும் பியோத்தரைக் கண்டு தலையை உயர்த்திப் புன்முறுவல் செய்யும் காட்சியும் அற்புதம். புஷ்கின் இருந்திருந்தால்  படத்தின் இயக்குநர் விளாதிமிர் கப்லுநோவ்ஸ்கியைப்  பார்த்து, உடலில் செருகப்பட்ட வாளுடன் அதேபோன்றதொரு ஸ்னேகப் புன்னகையை சிந்தியிருப்பார். 

(இன்று ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடியான அலெக்ஸாண்டர் புஷ்கினின் நினைவுநாள். அதை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.)

Thursday, January 23, 2014

யங் அண்ட் பியூட்டிஃபுல் - இச்சை உலகில் இயங்கும் மனம்



இளம் வயதினரின் மனதுக்குள் ஆயிரம் கனவுகள் உண்டு. ஆனாலும் சமூகம், கலாச்சாரம் போன்ற கனமான விழுமியங்களின் போர்வைக்குள் இயங்கும் உலகம் அவர்களுக்கான சுதந்திரத்தை அத்தனை எளிதாக அளித்துவிடுவதில்லை. குறிப்பாக பெண்களுக்கு அது கடுமையாக மறுக்கப்படுகிறது. எனினும் துணிச்சலுடன் அந்த போர்வையை விலக்கிவிட்டு தன்னிஷ்டம் போல் சுதந்திரமாக நடக்க முயலும் பெண்கள் உண்டு. ஆனால் அந்த சுதந்திரத்தைத் தவறாகக் கையாள முடிவு செய்தால் விளைவும் விபரீதமானதாகவே அமைகிறது.
பிரெஞ்சு இயக்குநர் ஃபிரான்ஸூவா ஓஸோன் இயக்கியுள்ள ‘யங் அண்ட்பியூட்டிஃபுல்’ திரைப்படம் இது குறித்து பிரச்சார மொழியின்றிப் பேசுகிறது.
குடும்ப அமைப்பில் இருந்துகொண்டே சட்டம் மற்றும் சமூகத்தின் பார்வையில் குற்றம் என கருதப்படும் பாலியல் தொழிலில் இறங்குகிறாள் ஒரு இளம்பெண். பதின்ம வயதைப் பூர்த்தி செய்யாத அந்தப் பெண்ணின் இந்த செயலும், பொருளாதாரத் தேவைக்காகவோ, கட்டாயத்துக்காகவோ அன்றி சுய விருப்பத்தைச் சார்ந்தது என்பது தான் பார்வையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியூட்டும் விதமாக அமைகிறது. வீட்டுக்கும், கல்லூரிக்கும் தெரியாமல் இணையம் மூலம் வாடிக்கையாளர்களின் தொடர்பைப் பெற்று பாலியல் தொழிலைத் தொடர்கிறாள் அப்பெண். தனது பெயரை மாற்றி லியா என்ற புனைப்பெயருடன் (அது அவளது பாட்டியின் பெயர்) அவள் இரட்டை வாழ்க்கை வாழ்கிறாள். எதிர்பாராத விதமாக அவளது முதிய வாடிக்கையாளர் ஒருவர் உடலுறவின்போது மாரடைப்பால் மரணமடைகிறார். அங்கிருந்து பதட்டத்துடன் வெளியேறி விடுகிறாள் லியா. கசியும் புகையை கூடை போட்டு மூட முயல்வதுபோல் அந்த ரகசியம் அவளைத் துரத்துகிறது. அந்த பயங்கரத்தின் நிழல் அவளது வீடுவரை தொடர்கிறது.
போலீஸ் நடந்த உண்மைகளை அவளது தாயிடம் சொல்கிறது. மொத்தக் குடும்பமும் அதிர்வுக்குள்ளாகிறது. இளம் பெண் என்பதால் கவுன்சிலிங் தந்து அவளை அந்தப்பாதையிலிருந்து திசைதிருப்ப முயல்கின்றனர். இளம் வயது ஆணுடன் பழகவும் அவள் அனுமதிக்கப்படுகிறாள். எனினும், பாலியல் துணையில் மாற்றம் தேவைப்படும் அப்பெண் மீண்டும் பாலியல் தொழிலைத் தொடர முடிவு செய்கிறாள். மறைத்து வைத்திருந்த தனது சிம் கார்டை எடுத்து போனில் பொருத்தியவுடன் வாடிக்கையாளர்களின் குறுஞ்செய்திகள் வரிசையாக வந்து விழுகின்றன. ஒரு வாடிக்கையாளரை முடிவு செய்து ஒரு ஆடம்பர ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருக்கிறாள். அவளது முதிய வாடிக்கையாளர் இறந்தது அந்த ஹோட்டலின் ஒரு அறையில்தான்.
அங்கு வந்துசேரும் வாடிக்கையாளர் ஒரு பெண். வயதானவள். சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் அமைதியாக இருக்கிறாள் லியா. தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள் அந்த முதிய பெண். இறந்த மனிதரின் மனைவி அவள். தனது கணவர் கடைசியாக உடலுறவு கொண்ட பெண்ணை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறாள். இத்தனை வருட தாம்பத்தியத்தில் தனது கணவன் தன்னைத் தவிர வேறு பெண்களை நாடிவந்த விஷயம் தெரிந்தும் ஒரு கட்டத்தில் அதை ஜீரணித்துகொண்ட பெண் அவள். இருவரின் சந்திப்பு லியாவின் மனதில் என்னவோ ஒரு வலியைத் தருகிறது. படம் நிறைவடைகிறது.
குழந்தைகளுக்குத் தனி அறை, ஆண் - பெண் நண்பர்களுடன் தங்கள் பிள்ளைகளை இரவு நேரங்களிலும் வெளியில் அனுப்பும் இயல்பு என்று வாழும் மேற்கத்தியப் பெற்றோரும் தங்கள் குழந்தை பெரிய தவறுகள் செய்து பிரச்சினையில் உழலும்போது அதிர்ச்சியடைகின்றனர். தனது இளமைக் காலத்தில் பல காதல்கள் என்று கட்டற்ற சுதந்திரத்துடன் வளர்ந்த லியாவின் தாய் தனது மகளின் விபரீதமான இரட்டை வாழ்வு குறித்து அதிர்ச்சியடைந்தாலும், அவளை மாற்ற ஆக்கப்பூர்வமாக முயல்கிறாள். படம் அதீதமான பாலியல் இச்சை, தவறான குடும்ப உறவுகள், பெற்றோர்களின் போதிய கவனிப்பின்மையால் வழிதவறும் குழந்தைகள் என்று பல விஷயங்களைப் பேசினாலும் இது தவறு இது சரியென்று நியாயவாதம் பேசவில்லை.
எத்தனை பிரயத்தனங்களுக்குப் பிறகும் தனது மனம் விரும்பும் பாலியல் உறவை லியா நாடிச்செல்வது, அவளது மனநிலையில் பதிவாகிவிட்ட இச்சையால்தான் என்றாலும் தன் வயதையொத்த இளைஞர்களைவிட அதிக வயது கொண்ட முதியவர்களிடம் தான் அவள் தன்னை இழக்க ஒப்புக்கொள்கிறாள். இறந்துபோன ஜார்ஜஸ் பற்றி பெண் போலீஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில்சொல்லும் லியா ஒன்றைக் குறிப்பிடுகிறாள். “ஜார்ஜஸ் இனிமையான மனிதர். என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வார்”. குடும்ப உறவின் சிக்கல்கள் இளம் மனதில் ஏற்படுத்தும் வடு, வேறொரு தவறைத் தூண்டும் காரணியாக அமைகிறது என்ற விஷயம் பூடகமாகச் சொல்லப்படுகிறது.
கான் திரைப்பட விழாவில், பால்மே டி’ஓர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம், உலகமெங்கும் விமர்சகர்களின் ஏகோபித்தப் பாராட்டைப் பெற்றுள்ளது.

'தி இந்து' இதழில் வெளியான கட்டுரை 

Tuesday, January 21, 2014

மண் மணக்கும் புன்னகை மொழி

- வெ.சந்திரமோகன்




’என்னை புதுக்கோட்ட பார்ட்டியில கூப்புட்டாக..காரக்குடி பார்ட்டியில கூப்புட்டாக.. எல்லாத்தையும் விட்டுட்டு என் கெரகம் இந்தக் கரகாட்டக் கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேய்ங்’ என்று கன்னத்தில் கைவத்து கேட்டுக்கொண்டிருக்கும் கவுண்டமணியிடம் கோவை சரளா சலித்துக்கொள்ளும் காட்சியை ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது.  மண் வாசம் வீசும் மொழியுடன் அசல் நாட்டுப்புறக் கலைஞரைக் கண்முன் கொண்டு வந்த அந்தப்பாத்திரம் வெற்றி பெற மிக முக்கியக் காரணம் வட்டார மொழிதான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, பொதுவான பேச்சுமொழியில் நாயகனும் நாயகியும் பேசுவது வழக்கமாகிவிட்ட நிலையில், வட்டார வழக்கு என்ற விஷயத்தை அதிக அளவில் இன்றும் கையாள்வது நகைச்சுவை நடிகர்கள் தான். பொதுவான கிராமம் அல்லது நகரம் என்றே கதை நடக்கும் பகுதியை சித்தரிக்கும் தமிழ் சினிமாவில், நகைச்சுவைக் கலைஞர்களின் தனித்திறனால் தான்   வெவ்வேறுப் பகுதிகளில் பேசப்படும் வட்டார மொழிகள் ஓரளவு உயிர்ப்புடன் இருக்கின்றன என்றும் சொல்லலாம்.

தொடக்கத்தில் தமிழ்சினிமாவில் ஒரே படத்தில் பல மொழிகள் பேசப்பட்ட வழக்கம் இருந்தது. நாயகனும் நாயகியும் தெலுங்கில் பேச, துணை நடிகர்கள் ஹிந்தியில் பேச நகைச்சுவை நடிகர்கள் மட்டும் தமிழில் பேசிய படங்கள் உண்டு. தமிழ் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவான்களான என்.எஸ்.கிருஷ்ணன் முதல் நாகேஷ் வரை பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மொழிக்குரல் என்ற தனித்துவம் பெரிதாகக் கையாளப்படவில்லை என்றே சொல்லலாம். அப்போது மன்னர் காலத்துக் கதை அல்லது சமூகக்கதை என்ற பாகுபாடு இருந்ததே தவிர, மதுரையில் நடக்கும் கதை அல்லது திருநெல்வேலியில் நடக்கும் கதை என்றெல்லாம் பிரத்யேகமான இடங்களை மையப்படுத்தும் படங்கள் அவ்வளவாக வரவில்லை. ’பட்டணம்’ என்றால் அது சென்னை. கிராமம் என்றால் அது பூஞ்சோலை தான். எனினும், நகைச்சுவை நடிகர்களோ துணை நடிகர்களோ சென்னையின் பிரத்யேக மொழியான ‘மெட்றாஸ் பாஷை’ பேசுவதை அவ்வப்போது பார்க்க முடியும். விளிம்புநிலை மனிதர்கள் பிராமணர்கள் பேசும் பாணியில் பேசியதும் தமிழ் சினிமாவின் தொடக்கத்தில் நடந்தது.

60-களின் இறுதிகளில் வெளியான படங்களில் தேங்காய் சீனிவாசன், சுருளி போன்ற நடிகர்கள் சென்னைத் தமிழை சற்று சிரமப்பட்டுப் பேசி நடித்தனர். ஜெய்சங்கர் நடித்த ‘சி.ஐ.டி. சங்கர்’ படத்தில் அலுவலகத்தில் பொதுமொழியில் பேசும் தேங்காய் சீனிவாசன், நகைச்சுவை நாயகி நடத்தும் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடப் போகும்போது சென்னைத் தமிழில் பேசுவார். ’காசேதான் கடவுளடா’ படத்தில் சென்னை குப்பம் பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான அவர் முத்துராமன், ஸ்ரீகாந்த் போடும் திட்டப்படி  சாமியார் போல வேடமிட்டு மனோரமா வீட்டில் தங்குவார். பக்தர்களுக்கு அட்டகாசமாக அருள்மொழி வழங்கினாலும் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ‘மெட்றாஸ் பாஷை’ ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்க்கும். பிறமொழி பேசுபவர்களாக துணை நகைச்சுவை நடிகர்கள் நடித்த  படங்கள் இன்று வரை வெளியாகின்றன. மலையாள சாயலுடன் தமிழ் பேசும் டீக்கடை நாயர்கள், தலையில் குல்லா, தங்க ஜரிகை, ஜிப்பா சகிதம் ‘நம்பள்கி பணத்த எப்போ திருப்பித் தரப்போறான்?’ என்று கேட்கும் ஈட்டிக்கார சேட்டுகள் போன்ற பாத்திரங்கள் பெரும்பாலும் நகைச்சுவை காட்சிகளிலேயே பயன்படுத்தப்பட்டனர்.

முதன்முறையாக தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த குரலாக சத்தமாக ஒலித்தது கவுண்டமணியிடமிருந்து என்றே சொல்லலாம். நாடகப் பின்புலம் கொண்ட கவுண்டமணி, திரைப்படங்களில் பிறர் போல பொதுமொழியில் பேசாமல் தான் சார்ந்த கொங்கு நாட்டுப் பகுதியில் பேசப்படும் பாணியில் பேசியதாலேயே தனித்து அறியப்பட்டார்.   கிராமப் பின்னணி கொண்ட திரைப்படங்கள் என்றாலும் பொதுவான மொழி பேசும் பாத்திரங்கள் என்பதால் அவரது கொங்கு மொழி தொடக்ககாலப் படங்களில் தனித்துவம் பெறவில்லை. அதேசமயம், வித்தியாசமான முறையில் எதிராளியை (பெரும்பாலும் செந்தில்!) கிண்டல் செய்வதன் மூலம் அவரது நகைச்சுவைக்கு ஒரு பிரத்யேக பாணி அமைந்திருந்தது. 


கோவையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைப் பின்னணியாகக் கொண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘வைதேகி காத்திருந்தாள்’ கவுண்டமணிக்கு  பெரிய வாய்ப்பாக அமைந்தது. படத்தில் வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டு வீடுகள் கொங்குப் பகுதியைக் கண்முன் கொண்டுவர,  சைக்கிள் கடை வைத்திருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’வாக வரும் கவுண்டமணி பேசும் வசனங்கள் கொங்கு மண்ணின் அசல் மணத்தை ரசிகர்களுக்குத் தந்தன. ”அழகுராஜா ஒரு வல்லவரு..அவர் ஒரு .....நல்லவரு..அப்பிடீன்னு ஊருக்குள்ள இருக்கிற அம்மிணி அக்காகிட்டேயெல்லாம் போய் சொல்லோணும்” என்று செந்திலுக்கு அன்புக் கட்டளையிடும் காட்சியில் கொங்குப் பகுதியின் குறும்பு அழகாக வெளிப்படும். பின்னர் நகர்ப்புற பின்னணி கொண்ட திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும் கவுண்டமணி பேசும் பாணியில் பெரிய மாற்றமிருக்கவில்லை. அவரது குரலும் பேசும் முறையும் அவரது அடையாளங்களாகவே மாறின. 

90-களின் தொடக்கத்தில் கொங்குப் பகுதியை மையமாகக் கொண்ட கதைகளுடன் தமிழுக்கு அறிமுகமான கே.எஸ்.ரவிகுமாரின் படங்களில் கவுண்டமணி பேசும் கொங்குமொழி இன்னும் பொருத்தமானதாக அமைந்தது. பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை போன்ற இடங்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட ’சேரன் - பாண்டியன்’ திரைப்படத்தில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அதற்கு முன்னர், மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடக்கும் கதை என்றபோதிலும் கவுண்டமணி கொங்கு மொழியில் தான் பேசுவார். ‘சேரன் - பாண்டியன்’ படத்தைத் தொடர்ந்து ரவிகுமார் இயக்கிய ‘நாட்டாமை’ படத்தில் கவுண்டமணியின் கொங்கு மொழி அற்புதமாக வெளிப்பட்டது. தனது தாய் யாரென்று தெரியாமல் சொல்லாமல் மறைத்துவைத்து இளம்பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் தனது தந்தை (செந்தில்) மீது கொலைவெறியுடன் அலையும் கவுண்டமணி கடைசியில் தனது தாயைக் கண்டுகொள்வார். அம்மா வேடத்தில் வரும் கவுண்டமணி ”யேங்கோ.. நம்ம ரெண்டுபேருக்கும் பொறந்தானே ஒரு மகென். அவென் எங்கெங்கோ?” என்று கேட்கும் காட்சியில் அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘திருமதி பழனிச்சாமி’ படமும் கொங்கு பாஷையில் கவுண்டமணி பேசிய முக்கியமான படம். இதுபோன்ற பல படங்களில் அவரது நடிப்பு சிறக்க அவரது மொழி முக்கியக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. 

அதேபோல கோவை சரளாவின் கொங்கு பாஷை பிரசித்திப் பெற்றது. கோவையில் பிறந்திருந்தாலும்  மலையாளம் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். எனினும் கவுண்டமணிக்கு இணையான கொங்குக் குரல் அவருடையது. இளம்வயதிலேயே வயதான வேடங்களில் நடித்துவந்த சரளாவுக்கும் ‘வைதேகி காத்திருந்தாள்’ ஒரு பெரிய திறப்பாக அமைந்தது. மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று கவுண்டமணி சொல்லும் யோசனையை சென் தவறாகப் புரிந்துகொண்டு அவரது மனைவி கோவை சரளாவிடம் மல்லிகைபூ வாங்கித் தரும் காட்சி உச்சகட்ட நகைச்சுவை. செந்திலை துடைப்பத்தால் வெளுத்துக்கொண்டே கவுண்டமணியிடம் சரளா சொல்வார் “இவெங் கூட சகவாசம் வச்சதுக்கு ஒங்களத்தான் மொதல்ல நாலு சாத்து சாத்தோணும்”. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் கமல் நடித்த ‘சதிலீலாவதி’ படத்தில் அவரது மனைவியாக நடித்தது கோவை சரளாவின் வாழ்நாள் சாதனை. அதற்கு அவரது கொங்கு மொழி தான் காரணமாக அமைந்தது. அந்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தினார் சரளா. தனது கணவனின் தவறான உறவு குறித்து கமல்-சரளா தம்பதியிடம் புகார் சொல்லும் கல்பனாவைக் கமல் சமாதானப்படுத்தும் காட்சி ஒன்றைச் சொல்லலாம். “ஒரு ஆம்புளைக்கி இதுவா அதுவான்னு சாய்ஸ் கொடுக்கக் கூடாது. ரெண்டையும் பொறுக்கிப்புடுவானுங்க” என்று கமல் சொல்லும்போது ”கண்டிசனா செஞ்சிப்போடுவானுங்கோ..கெரகம் புடிச்சவனுங்கோ” என்று ஒரு அறச்சீற்றக் குரல் கொடுப்பார் சரளா. கமலுக்கு சப்தநாடியும் அடங்கிவிடும். 

நகைச்சுவை உலகில் கவுண்டமணிக்குப் பின்னர் கவனம் ஈர்த்த முக்கியக் குரல் மதுரையிலிருந்து ஒலித்தது. வைகைப் புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு மதுரை மண்ணின் மணத்தை திரை ரசிகர்களுக்கு அசலாகத் தந்தார். “யேப்பா..எங்க ஏரியா பக்கம் வம்பு சொல்றது?” “ஆத்தீ..விட்டாக் கொல பண்ணிடுவாய்ங்க போலருக்கே!” என்று மதுரை கிராமப் பகுதிகளில் சலம்பித் திரியும் இளைஞர்களின் பிரதிநிதியாக தமிழ்சினிமாவுக்குள் வடிவேலு நுழைந்தார். உள்ளுக்குள் உதறெடுத்தாலும் எதிராளியை வம்புக்கிழுக்கும் குறும்பு நிறைந்த பாத்திரங்கள் அவரது அடையாளமாக மாறின. ராஜ்கிரணின் கண்டுபிடிப்பு என்றாலும் அவரது முதல் வெற்றி பாரதிராஜா இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’ தான். அதில், சைக்கிளில் தன்னை இடித்துவிட்டு செல்லும் உள்ளூர் ரவுடி சற்று தொலைவுக்கு சென்று விட்ட தைரியத்தில் வடிவேலு தனது மிரட்டலைத் தொடங்குவார். “ஏண்ணே..பாத்துப் போனா என்னண்ணே?”. ரவுடி இன்னும் தொலைவு சென்ற பின்னர் ”பெல்லடிச்சி பிரேக் புடிச்சி போனா கொறஞ்சா போய்டுவ?” என்று குரல் கொடுப்பார். பின்னர் தைரியம் உச்சமடைந்த நிலையில், “ஜெயில் பறவை டா நாங்க!” என்று குரலை உயர்த்தி எச்சரிப்பார். ரவுடி சைக்கிளை நிறுத்தி திரும்பி ‘ஆயுதத்தை’ எடுத்த பின்னர் உடலெங்கும் உதறிப்பதற நடுங்கிக்கொண்டே வடிவேலு சொல்வார்” இந்த மம்பட்டியக் கூட நீங்களே வச்சிக்குங்க. நா எப்புடி ஓடுறேங்கிறத மட்டும் பாருங்க”. அந்த காட்சி அவரைப் பெரிய அளவில் அடையாளப்படுத்தியது . அதுவரை அத்தனை அசலான மதுரை வட்டார மொழியைத் திரையுலகம் கண்டதில்லை. 
கவுண்டமணி எல்லா படங்களிலும் கொங்கு பாஷை பேசியது போலவே, வடிவேலுவும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளைக் கதைக் களமாகக் கொண்ட படங்களிலும் மதுரை பாஷை தான் பேசினார். பொதுவாகவே கிராமங்களில் பேசும் மொழி கொச்சையானதாக இருக்கும் என்ற பொதுக்கருத்து கொண்ட ரசிகர்கள்,   வட்டார வழக்குகள் குறித்து அதீத கவனம் செலுத்தத் தேவையில்லை என்று பெருந்தன்மையாக விட்டுவிடுவதால் இது சாத்தியமாயிற்று என்று சொல்லலாம். வடிவேலுவின் உடல்மொழி பற்றிப் பேசுவதென்றால் அதற்கு இக்கட்டுரையில் இடமிருக்காது. தமிழுலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியக் கலைஞர் அவர். அவருக்குப் பின்னர் கஞ்சா கருப்பு, ’பரோட்டா’ சூரி போன்ற நடிகர்களிடம் மதுரை வட்டார வழக்கு காணப்படுகிறது.  எனினும், வடிவேலு அளவுக்கு அவர்கள் மொழியில் பெரிய ஈர்ப்பு இல்லை.

சென்னையில் பரவலாகப் பேசப்படும் ’மெட்றாஸ் பாஷை’ தமிழ் சினிமாவில் பலமாக ஒலிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் லூஸ் மோகன். ‘இன்னாம்மா.. எத்க்கு என்னாண்ட ராங்கு காட்டுற. அப்பால பேஜாரா பூடும் பாத்துக்க..” என்று கண்ணைச் சுருக்கிக் கொண்டு நின்ற இடத்திலிருந்தே உடலை உயர்த்தி விஸ்வரூபம் காட்டும் குடிகாரப் போக்கிரி பாத்திரங்கள் என்றால் நம் கண்முன் வருவது அவர் தான். அதேசமயம், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர் போன்ற ’அரசுப்பணிகளும்’ தமிழ் சினிமாவில் அவருக்குக் கிடைத்தன. பிரதான நகைச்சுவை நடிகர்களின் துணை நடிகராகவே வாய்ப்புகள் அமைந்தாலும் தனது பிரத்யேக மொழி பலத்தின் மூலம் அவருக்கு தனி இடம் கிடைத்தது. ’சட்டம் என் கையில்’ படத்தில் சென்னை குப்பத்து இளைஞர் வேடத்தில் நடித்த கமல்ஹாஸன் லூஸ்மோகனிடம் சென்னை தமிழ் கற்றார் என்ற செய்தி இன்றும் சினிமாவுலகில் நிலவுகிறது. ’படிக்காதவன்’ படத்தில் ஜனகராஜ் பேசும் ”தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..” என்ற புகழ்பெற்ற வசனமும் சென்னைத் தமிழ் பயன்பாட்டுக்கு ஒரு உதாரணம். 
நெல்லைத் தமிழைப் பொறுத்தவரை ஒவ்வொரு வார்த்தைக்கும் இறுதியில் ‘லே’ போட்டால் போதும் எனும் அளவுக்குத் தான் தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன. மணி ரத்னம் இயக்கும் படங்களில் நெல்லைத் தமிழ் ஸ்பஷ்டமாக ஒலிக்கும். சிம்பு நடித்த ‘ஒஸ்தி’ படம் நெல்லைத் தமிழை மிக மோசமான முறையில் கையாண்ட படம் எனலாம். நெல்லை வட்டார வழக்கு பேசும் நகைச்சுவை நடிகர்களில் நெல்லை சிவா முக்கியமானவர். ”எ.. கட்டபொம்மன் தினெவேலிக்காரன் தானே. அவென் நம்ம மாதிரி தானே பேசியிருப்பான்” என்றபடி சிவாஜி பேசிய புகழ்பெற்ற வசனங்களை நெல்லைத் தமிழில் பேசிக்காட்டும் காட்சி, தமிழ்சினிமாவில் பொதுமொழியை மட்டும் பயன்படுத்தும் படைப்பாளிகளை யோசிக்க வைத்திருக்கும்.

மதுரை வட்டார வழக்கைப் பயன்படுத்தி வடிவேலு பேசிய வசனங்கள் பிற்பாடு தமிழ் வாழ்வியலின் ஒரு அங்கமாகவே மாறின. ‘வந்துட்டா(ன்)யா...வந்துட்டான்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்கு..பேஸ்மட்டம்(!) கொஞ்சம் வீக்கு’ போன்ற சொல்லாடல்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் தாக்கம் தந்தவை. ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற கவுண்டமணியின் பொன்மொழி இந்திய அரசியல் குறித்த நுட்பமான கிண்டல். பொதுவாக நாயக நடிகர்கள் பேசும் ’பஞ்ச்’ வசனங்களை அந்தந்த படங்களுடன் ரசிகர்கள் மறந்துவிடுகின்றனர். ஆனால், நகைச்சுவை நடிகர்கள் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவதற்கான முக்கியக் காரணம் அவர்கள் மக்களின் மொழியில் பேசுவது தானன்றி வேறென்ன!
-'தி இந்து' பொங்கல் மலரில் வெளியான கட்டுரை.

Friday, January 10, 2014

கலையின்மீது குவியும் மன வெளிச்சம்

இன்று மாலை மயிலாப்பூருக்கு வேறெதோ வேலைக்காக சென்றபோது கபாலீஸ்வரர் கோயில் பக்கம் போகலாமே என்று தோன்றியது. உள்ளே மஞ்சள் விளக்கொளியில் கடவுளர்களின் சந்நிதிக்கு முன்னால் சின்ன சின்ன கூட்டம். அதிக கூட்டமில்லாத கோயில்கள் தான் ஆன்மாவுக்கு மிக நெருக்கமானவை. ஒவ்வொரு பிரகாரத்திலும் கொஞ்ச நேரம் நின்று நகர்ந்தபோது கபாலீஸ்வரர் சந்நிதிக்குள் இருந்து ஒரு குரல் தமிழில் பாடிக் கொண்டிருந்தது. உள்ளே செல்லாமல் நடைபாதையிலேயே நின்றுகொண்டு அதைக் கேட்க கேட்க மனம் லேசானது.  அந்தக் குரல் தந்த அமைதியுடன் உயர்த்திய பார்வையில் ஓங்கி நின்ற கோபுரம் பட்டது. மேகங்களற்ற மெல்லிய நீல நிற வானத்தின் பின்னணியில் கோபுரத்தில் உறைந்திருந்த சிற்பங்களின் அடர்த்தி மனதை அள்ளியது. 
கோயிலுக்குள் நுழைந்த போதே வலது புற மூலையில் சின்னதாக மேடை  அமைத்து அதில் சில இளம்பெண்கள்  பரதம் ஆடிக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது. இப்போது அதை நோக்கி சென்றோம். ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடனக் கலைஞர் தனது அடுத்த நடனத்தின் பின்னணி பற்றி ஆங்கிலத்தில் விவரித்துக் கொண்டிருந்தார். இங்கே எதற்கு  ஆங்கிலம் என்று லேசான எரிச்சல் வந்தது. அப்போது தான் கவனித்தேன். இந்திய உடைகளில் பத்து பதினைந்து வெளிநாட்டுப் பெண்கள் காலை மடக்கி கழுத்தை உயர்த்தி மேடை மீது பார்வையைப் பதித்துக் காத்திருந்தனர்.
நடனக் கலைஞரின் தலைமுடி  போலியானது என்று தெரிந்தது. பேசும் பாணியிலும்  உடல்மொழியிலும் பெண்மை மிளிர்ந்தது. பின்னர் அவர் மேடைக்கு வந்து ஆடத் தொடங்கினார். பின்னணியில் ஒருவர் ஜதி சொல்ல, அழகான குரலில் ஒரு பெண் பாடினார். வீணை, மிருதங்கத்துடன் அவ்வப்போது உடுக்கையும் ஒலித்தது. அதை வாசித்தவர் சங்கு மற்றும் மணி போன்ற ஒலிக்கருவிகளையும் இசைத்தார். நடனக் கலைஞர் நல்ல தேர்ச்சி பெற்றவர். சிவ நடனத்தை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார். இசையும், நடனமும் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனதில் தானாக உருக்கொண்டு வளர வளர அங்கே கலையின் ஆன்மா மேடையிலும் அதைச் சுற்றிலும் சூல்கொண்டது. நடனம் முடிவுபெறும் தருணம் யாரும் சொல்லாமலேயே அனைவருக்கும் விளங்கியது. நடனக் கலைஞர் தனது கடைசி முத்திரையைக் காட்டியபடி நடனத்தை முடிக்கும் தருணத்தில் கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது. ஆத்மார்த்தமான மகிழ்ச்சியுடன் நடனக்கலைஞர் மேடையிறங்கினார்.
அடுத்து நான்கு இளம்பெண்கள் மேடைக்கு வந்தனர். கல்லூரி மாணவிகளாக இருக்க வேண்டும். அவர்களது நண்பர் குழாம் கையில் விலை உயர்ந்த கேமரா, புத்தக அளவிலான டேப்லேட்டுகளுடன் நடனத்தைப் பதிவு செய்துகொண்டும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டும் இருந்தனர். ஆர்வ மிகுதியில் நண்பர் குழாம் பரபரப்புடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஒரு பெண்மணி செல்லக் கண்டிப்புடன் கைகளை மேலும் கீழும் ஆட்டி அமைதியாக இருக்குமாறு புன்னகையுடன் சைகை காட்டினார். தலையாட்டியபடி மவுனமாக கவனிக்க ஆரம்பித்தனர் இளைஞர்கள். ஆடிய நால்வரில் ஒரு பெண்ணிடம் மட்டும் பாவம் சிறப்பாக வெளிப்பட்டது. பச்சை நிற பட்டு ஜொலிக்க புன்முறுவலான முகத்தில் பாவனைகள் மிளிர அழகாக ஆடினார். அதன் பின்னர் அந்த ஆண் நடனக் கலைஞர் சிவ-பார்வதியின் காஸ்மிக் நடனமான தாண்டவம் ஆடத் துவங்கினார். பார்வதியாக அனுபவம் வாய்ந்த ஒரு பெண்மணியும் ஆடினார். கூடவே கல்லூரி மாணவிகளும் ஆடினர். உடுக்கை ஒலிக்க உச்சபட்ச உத்வேகத்துடன் ஆடிய இருவரும் பார்வையாளர்களுக்கு கடவுளர் தம்பதிகளாகவே பட்டிருக்க வேண்டும். அவ்வப்போது கைதட்டல் எழுந்து அடங்கியது. அதன் பின்னரும் நடன நிகழ்ச்சி தொடர்ந்தது. எனினும் நிறைந்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினோம்.  
எந்தக் கலையாக இருந்தாலும் எந்த மேடையாக இருந்தாலும் கலைஞர்கள் அர்ப்பணிப்பான கலைவெளிப்பாட்டுடன் இயங்கினால் அந்தக் கலை  எத்தகைய பார்வையாளரையும் சென்றடையும், அதன் தாத்பரியம் தானே நிலைபெறும்  என்று நினைத்துக்கொண்டேன். மனிதர்களுக்கிடையில் கலை என்ற அம்சம் தோன்றியதன் நோக்கம் அது தானே!

Tuesday, August 6, 2013

காபூலிவாலா: தூய அன்பின் நாயகன்

தெருவில் செல்லும் அந்நிய தேசத்து வியாபாரிகளை பார்க்கும்போது குழந்தைகளிடம் ஏற்படும் பிரமிப்பும் பயமும் பார்க்க அலாதியானவை. அந்த பயத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று வளர்ந்தவர்களான நமக்கு தெரியும் என்பதால் குழந்தைகளின் பரபரப்பு ரசிக்க வைக்கும். இப்போதெல்லாம் தெருவில் குழந்தைகளை கவரும் பொருட்களை விற்றுச் செல்லும் வியாபாரிகளை காண்பதே அரிதாகி விட்டது. அந்த மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் பற்றி பெரிதாக தெரியாமல் அம்மனிதர்கள் எங்கிருந்தோ உதித்தவர்கள் என்ற எண்ணம் பெரியவர்களுக்கே இருக்கும். குழந்தைகளுக்கு கேட்கவா வேண்டும்? தன்னை ஒருநாள் சாக்கு மூட்டையில் கட்டி அந்நிய தேசத்தில் விற்க தான் அந்த மர்ம மனிதன் வந்திருக்கிறான் என்று மனதுக்குள் பயம் கொள்ளும் அதே சமயம் உலகின் பத்திரமான இடமான தன் வீடு அல்லது தெருவில் இருந்துகொண்டு அந்த விசித்திர மனிதனை நோட்டம் இடவும் குழந்தைகள் தயங்குவதில்லை. அப்படியான ஒரு தொலைதூர தேசத்து வணிகனின் கதை தான் 'காபூலிவாலா' !
வறண்ட மலைகளும் மண் கட்டிடங்களும் நிறைந்த ஆப்கானிஸ்தான் மூலையில் எங்கோ ஒரு கிராமத்தில் தன் செல்ல மகளை விட்டுப் பிரிந்து வந்து பிழைப்புக்காக நெரிசலான கல்கத்தா வீதிகளில் திரியும் காபுலிவாலாவின் கதை அது. ரவீந்திரநாத் தாகூர் முத்திரை பதித்த கதைகளில் ஒன்று .. கதை சொல்லியின் ஐந்து வயது மகள் மினி திறந்த தன் குட்டி வாயை மூடாமல் பேசிக்கொண்டே இருப்பவள். எழுத்தாளரான தன் தந்தையிடம் ஒரு கேள்வி கேட்டு அதற்கு பதில் வரும் முன்னரே அடுத்த கேள்வியை வீசுபவள். தன்னையொத்த குழந்தைகளை போலவே தெருவில் திரியும் வித்தியாசமான மனிதர்கள் மேல் ஒரு விசித்திரமான பயத்தை கொண்டவள். ஆப்கனில் தான் விட்டு வந்த தன் மகள் வயதுள்ள மினியை பார்த்ததும் பாசம் கொள்கிறான் காபுலிவாலா அப்துர் ரஹ்மான் கான். கதையின் நாயகர்கள் இவர்கள் தான்.
மினியின் அம்மாவுக்கு எங்கே அம்மனிதன் தன் மகளை கடத்திச் சென்று விடுவானோ என்ற பயம். தாகூர் வார்த்தைகளிலேயே சொல்வதானால் "தெருவில் ஏதாவது உரத்த சத்தம் கேட்டால் இந்த உலகத்துக் குடிகாரர்கள் எல்லோரும் ஒன்று கூடி தன் வீட்டை நோக்கித் தான் ஓடிவருகிறார்கள் என்று கதி கலங்கிப் போகும் பயந்தாங்கொள்ளி !" எழுத்தாளரான மினியின் தந்தை காபூல்காரன் நல்ல மனிதன் என்பதை அறிந்தவர். தன் மகளுடனான அம்மனிதனின் நட்பையும் அவர்களது உரையாடல்களையும் ரசிப்பவர்.தான் சுமந்து செல்லும் மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று ஆர்வத்துடன் கேட்கும் மினியிடம் ரஹ்மத் சொல்வான் "அதுவா மூட்டைக்குள் பெரிய யானையை அடைத்து வைத்திருக்கிறேன் !"
நொடி தாமதிக்காமல் மினி சொல்வாள் " ஏமாற்றுக்காரா ..சின்ன மூட்டைக்குள் அவ்வளவு பெரிய யானை யை எப்படி அடைக்க முடியும்?" "சின்னப் பொண்ணு.. நீ எப்போ மாமனார் வீட்டுக்கு போவே?" "நீ எப்போ போவே காபூலிவாலா?" "நானா ..நான் மாமனாரையே கொன்று போடுவேன்" அக்குழந்தை இடி இடியென சிரிக்கும். பிழைப்புக்காக, தான் விற்கும் உலர்திராட்சை, பேரீச்சம் பழம் போன்றவற்றை தன் குட்டி சசிநேகிதிக்கு அன்பளிப்பாக தருவான் ரஹமத். அவற்றை தன் பாவாடையில் முடிந்து வைத்து பாதுகாப்பாள் அந்த குட்டி. அவளுடனான அந்த நட்பு ஊரில் உள்ள தன் மகளின் நினைவின் வலி மறக்க வைப்பதாக உணரும் ரஹமத் மிகவும் சந்தோஷமாக உணர்வான்.அப்பழுக்கற்ற அந்த நட்பில் எதிர்பாராத பிரிவு ஏற்பட்டு விடும். தன்னிடம் கடனுக்கு பொருட்கள் வாங்கிய உள்ளூர்காரன் கடன் வாங்கியதை மறுப்பதுடன் தன் குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்து அவனை கத்தியால் குத்திவிடுகிறான் ரஹமத். போலீஸ் அவன் கைகளில் விலங்கிட்டு அழைத்து செல்லும்போது மினியும் அவள் தந்தையும் அவனை கடைசி முறையாக சந்திப்பார்கள். அவ்வளவு தான். ஆறு வருடங்கள் கழித்து விடுதலையாகி வரும் ரஹமத் , மற்றொரு காபூல் வியாபாரி நண்பனிடம் கொஞ்சம் உலர்பழங்களை வாங்கிக் கொண்டு தன் சினேகிதியை பார்க்க வருவான். அந்தக் கால வழக்கப்படி சுமார் பனிரெண்டு வயதுள்ள மினிக்கு திருமணம் நடக்கும் நாள் அது. அவனை பார்த்து பரிதாபப்பட்டாலும் விசேஷ நாளில் அவன் வருகை ஒரு சங்கடத்தி உண்டுபண்ணிவிடும் என்று நினைக்கும் எழுத்தாளர், அப்புறமாக வரச் சொல்லி அவனை கேட்டுக்கொள்கிறார். உடைந்த மனதுடன் திரும்பிச் செல்லும் ரஹமத், எதோ நினைவு வந்தவனாக திரும்பி வந்து தன் அன்புப் பரிசை மினியிடம் கொடுக்குமாறு அவரிடம் கேட்கிறான். அந்த தூய அன்பை கண்டு நெகிழும் மினியின் தந்தை, உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி மினியை வரச் செய்து அவளது இளம்பிராயத்து நண்பனை சந்திக்க வைக்கிறார். சிறைத்தண்டனையின் கடுமையும் முதுமையும் மாற்றிவிட்ட தன் பரிதாபமான தோற்றத்தோடு அந்த இளம்பெண் முன் நிற்கிறான் ரஹமத். பழைய நண்பர்கள் இருவரும் காலத்தின் வலியை உணர்ந்து ஒருவர் எதிரில் ஒருவர் நிற்கின்றனர். "இப்போ நிஜமாவே மாமனார் வீட்டுக்கு போகப் போறியா ?" என்று ரஹமத் கேட்க, இளம் மணப்பெண் வெட்கத்துடன் வேறுதிசை பார்த்து நிற்கிறாள். ரஹமத்தின் அன்புக்கு பரிசாக தன் மகளின் திருமணத்துக்காக செலவிட வைத்திருந்த பணத்தின் ஒரு பகுதியை அவனுக்கு அளிக்க முடிவு செய்கிறார் எழுத்தாளர். எங்கோ தூர தேசத்தில் இருக்கும் தன் மகளை அவன் விரைவில் சந்திக்க தன்னாலான உதவியை செய்த திருப்தி அவருக்கு. அந்த தூய ஆத்மாவின் ஆசியே தன் மகளுக்கு போதுமானது என்று பூரிக்கிறார். இந்தக் கதையை வாசிக்காத இலக்கிய வாசகர்கள் இருக்க முடியாது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கதை அது. காபூலிவாலாவின் கதை, பெங்காலியில் 1951இலும், ஹிந்தியில் 1961இலும் திரைப்படமாக வெளியானது. பிமல் ராய் தயாரிப்பில் ஹேமன் குப்தா இயக்கத்தில் வெளிவந்த ஹிந்தி படத்தை சில நாட்களுக்கு முன் பார்க்க நேர்ந்தது என் வாழ்நாள் பாக்கியங்களில் ஒன்று. கதையில் வருவதை போல் அல்லாது, படம் ஆப்கானிய கிராமத்தில் ரஹமத்தின் வாழ்க்கைப் பின்னணியில் இருந்து தொடங்குகிறது. வயதான தாய், ஐந்தாறு வயதான தன் செல்ல மகளுடன் வசிக்கும் ரஹமத், கடன் தொல்லை நெருக்குவதால், வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க இந்தியாவுக்கு செல்வது என்று முடிவெடுக்கிறான். அன்னையை இழந்ததால் தந்தையின் மீது அதீத பாசத்துடன் இருக்கும் அவன் மகள் தன்னையும் இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று அடம்.பிடிக்கிறாள். ஒரு நாள் அதிகாலையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தன் மகளின் கைகளில் மை தடவி அதை ஒரு தாளில் பதிய வைத்து அதை பத்திரமாக மடித்து வைத்துக்கொள்ளும் ரஹமத், சந்தடியின்றி வெளியேறுகிறான். மகளின் கைவிரல்களின் அச்சு படிந்த அந்த காகிதம் தான் அவளை நினைவுபடுத்த அவனிடம் இருக்கும் ஒரே பொருள். தன் மகளை பிரிந்து செல்லும் அக்காட்சியில் இசைக்கும் சலில் சவுத்திரியின் இசை மனதை கனக்க செய்யும். கொல்கத்தாவில் தன்னை போன்ற மற்ற ஆப்கன் குடிமக்கள் தங்கியிருக்கும் அறையில் ரஹமத் தங்குகிறான். கதையில் இந்த விஷயம் சொல்லப்படுவதில்லை. அவன் மினியை சந்திக்கும் காட்சியும் கதையில் இருந்து வேறுபட்டது. கதையில் அவனை தன் வீட்டுக்குள் இருந்து சாலையில் செல்லும் ரஹமத்தை 'காபூலிவாலா!' என்று அழைப்பாள்.அவன் தன் வீட்டை நோக்கி வருவதை பார்த்ததும் குடுகுடுவென்று வீட்டுக்குள் ஓடி மறைந்து கொள்வாள். படத்தில் காபூளிவாலாவை மினி தெருவில் மிக அருகில் பார்ப்பாள். அவன் பேசத் தொடங்கியதும் பயந்து வீட்டுக்குள் ஓடி விடுவாள். இது போன்ற பல மாற்றங்கள் படத்தில்.
ஆனால் கதையை படிக்கும்போது நம் மனதில் உருவகம் கொள்ளும் பாத்திரங்களை மிளிரச் செய்யும் நடிகர்கள் தான் மிகப்பெரிய பலம். நம் மனதில் குடுகுவென்று ஓடி அதே வேகத்தில் வார்த்தைகளையும் கொட்டி மழலையில் கொஞ்சும் குழந்தையாக பேபி ஃபரிதா. நெடுநெடுவென்ற உயரமும் அதை விட உயர்ந்த வெள்ளை மனதும் கொண்ட காபூலிவாலாக நடிகர் பால்ராஜ் சஹானியும். அவர்கள் இருவரும் உரையாடும் காட்சிகள் யார் மனதையும் இளக வைத்துவிடும். அத்தனை தேர்ந்த நடிப்பு அது.
அதே போல் எழுத்தாளராக வரும் நடிகரும் நிறைவாக செய்திருப்பார். சிறுகதையை எப்படி திரைக்கதையாக மாற்ற வேண்டும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். அதற்கு இயக்குனர் வெகு நேர்த்தியான முறையை கையாண்டிருக்கிறார். பாத்திரங்களின் தனிப்பட்ட குணாதியம்சங்கள், அவர்கள் வாழும் சூழல் போன்ற விஷயங்களை கதையை ஒட்டியே விஸ்தரித்தால் போதுமானது. அதை மிக அழகாக செய்திருக்கிறார்கள் படத்தின் திரைக்கதை எழுத்தாளர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும் பாத்திரங்களுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

குறிப்பாக கதையில் ஒரே வரியில் வரும் வீட்டு வேலைக்காரன் தான் படத்தின் நகைச்சுவை நடிகன். காபூலிவாலாவை பார்த்ததும் பயந்து நடுங்கி ஏற்கனவே பீதியில் இருக்கும் மினியின் அம்மாவை மேலும் கலவரப் படுத்திவிடுவான்.
எங்கே குழந்தையை காபூல்காரன் கடத்திவிடுவானோ என்று அஞ்சும் தாயின் சந்தேகம் மேலும் வலுவடையும் வகையில் ஒரு காட்சி படத்தில் உண்டு. கதையில் இல்லாதது. ரஹமத் வராததால் அவனைத் தேடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவாள் மினி. அவளது வழக்கமான மறைவிடமான தந்தையின் மேஜைக்கு அடியிலும் அவளை காணாத பெற்றோர் பதறிப் போய் தேடுவார்கள். தகவல் அறிந்த ரஹமத்தும் சாலையெங்கும் "மினி பாச்சே..மினி பாச்சே.." என்று கத்திக் கொண்டே தேடியலைவான். எங்குமே அவள் கிடைக்கமாட்டாள். களைத்துப் போய், ஒரு மண்டபத்தில் அமர்ந்திருக்கும் அவன் குழந்தை மழை நீரில் பாதி நனைந்து மண்டப படிக்கட்டின் அடியில் உறங்குவதை கண்டு பதறி அவளை தூக்குவான். அதற்குள் அங்கு கூடும் அறிவற்ற கூட்டம் அவன் குழந்தையை கடத்த முயன்றான் என கூறி அவனை கடுமையாக தாக்கும். அதைப் பார்த்து குழந்தை அழுவாள். அங்கு வரும் அவள் தந்தை உண்மையை உணர்ந்து கூட்டத்தை விலக்கி ரஹமத்திடம் மன்னிப்பு கேட்பார். பெருந்தன்மையுடன் அங்கிருந்து சென்று விடுவான் ரஹமத். அற்புதமான காட்சி அது.
படத்துக்காக இயக்குனர் செய்த மாற்றம், ரஹமத் பாத்திரத்தை மேலும் வெகுளியாக காட்டியது. அது பொருத்தமாகவும் இருந்தது. ஏமாற்றிய வாடிக்கையாளனை கத்தியால் குத்தியதால் கைது செய்யப்பட்ட ரஹமத்தை காப்பாற்ற ஒரு வக்கீலை ஏற்பாடு செய்வார்கள் அவனுடன் தங்கி இருந்த மற்ற ஆப்கானியர்கள். நடந்த சம்பவத்தை அந்த வக்கீல் கோர்ட்டில் மாற்றி சொல்லும்போது பொய் சொல்ல விரும்பாத ரஹமத் தான் அம்மனிதனை கத்தியால் குத்தியதை ஒத்துக் கொள்வான். அவனது நேர்மையை கண்டு வியக்கும் நீதிபதி மரண தண்டனைக்கு பதிலாக பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கிறார். கதையில் இக்காட்சி இல்லை. அதே போல் கதையில் மினியின் தந்தையுடன் ரஷ்யர்கள் ஆங்கிலேயர்கள் மற்றும் அரசியல் பற்றியெல்லாம் பேசுகிறான் ரஹமத். கதையில் தன் முன்னே வந்து நிற்கும் இளம்பெண் தான் பத்து வருடங்களுக்கு முன் தான் பார்த்து நட்பு கொண்ட மினி என்பதை அறியாதவனாக இருக்கிறான். அவள் இன்னும் சிறு குழந்தையாகவே இருப்பாள் என்று நினைக்கும் அளவுக்கு அப்பாவியாக படத்தில் சித்தரிக்கப் படுகிறான்.
படத்தின் நாயகன் வேடத்தில் நடித்த பால்ராஜ் சஹானியின் நடிப்பை பற்றி எழுத வார்த்தைகளே இல்லை. அத்தனை யதார்த்தம் அத்தனை உருக்கம். படத்துக்கு தன் இசையால் ஜீவன் அளித்திருக்கிறார் சலில் சவுத்ரி. புகழ் பெற்ற பாடலான "கங்கா ஆயே கஹான் ஸே " இடம்பெற்ற படம் இது. கதையை படித்தவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். படத்தை பார்க்காதவர்கள் முதலில் கதையை படித்து விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். படத்தின் பல காட்சிகளில் என் மனைவி முன்னாலேயே தேம்பி அழுததை வெட்கமின்றி ஒத்துக் கொள்கிறேன். நீங்களும் அவ்வாறே செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

Wednesday, July 17, 2013

The lone ranger - இசை வழியும் சாகசம்

அனல் காற்றும் கண்ணைக்கூசும் சூரிய ஒளியும் அலைந்து திரியும் அரவமற்ற வறண்ட மலைப்பகுதிகள். மஞ்சளும் பழுப்பும் அப்பிக்கிடக்கும் பிரதேசத்தில் புழுதி பறக்க விரையும் குதிரைகளின் மேல் அழுக்கு முகம், பரட்டை தலை கசங்கிய உடைகளுடன் பாய்ந்து செல்லும் மனிதர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் மரத்தாலான கட்டிடங்கள் கொண்ட அகன்ற தெருக்களில் நேருக்கு நேர் நின்று துப்பாகியால் சுட்டுக்கொண்டு பழிதீர்த்துக்கொள்ளும் வீரர்கள், கொலைகாரர்கள், வயதான கடைக்காரர்கள்,  ரயில் பாதை அமைக்கும் பணிக்காக அமேரிக்கா சென்ற சீனர்கள், அழகிய வேலைப்பாடமைந்த கோச்சுகள் கொண்ட ரயில்கள், பழுப்பு நிலத்தில் விழும் தொப்பியின் நிழல், விலை மாதர்களின் பிதுங்கும் மார்பகங்கள் என்று நீளும் western உலக பின்னணியில் வெளியான ஹாலிவுட் மற்றும் ஸ்பாகெட்டி வெஸ்டெர்ன் படங்கள் (இவ்வகை படங்கள்  குறித்து தேசிய விருது வென்ற 'திரைச்சீலை' புத்தகத்தில்  ஜீவானந்தன் விரிவாகவே எழுதியுள்ளார்)  எத்தனை முறை எடுக்கப்பட்டாலும் பார்க்க சலிக்காதவை. அந்த வகையில் இந்த ஆண்டு இரண்டு முக்கியமான வெஸ்டேர்ன் திரைப்படங்கள் வெளிவந்தன. குவெண்டின் டாரண்டினோ இயக்கத்தில் ஜாமி   பாக்ஸ், கிறிஸ்டோபர் வால்ட்ஸ்  நடித்த  Django Unchained மற்றும் தற்போது திரையரங்கங்களில் ஓடிக் கொண்டிருக்கும் The Lone Ranger. 
படம் ரயிலில் துவங்கி ரயிலில் முடிகிறது. இடையில் கரடுமுரடான, மலை நிலங்கள், வெள்ளிக்கட்டிகள் கொண்ட நதிகள் என்று எங்கெங்கோ நம்மை  கூட்டி செல்கிறது. ஆனால் இந்தப்பயணத்தில் லாஜிக் மூட்டைகளை இறக்கி வைத்து விட்டால் தான் நாம் மன பாரமின்றி படத்தை ரசிக்க முடியும். 
1933ல் ஒரு பொருட்காட்சிக்கு செல்லும் சிறுவன் பழைய அமெரிக்கா பற்றிய கண்காட்சி கூடத்துக்கு செல்கிறான். அங்கு பாடம் செய்யப்பட்ட  பைசன் உடல் போன்ற அதிசயங்களை கண்கள் விரிய பார்க்கும் சிறுவன்,  வருடங்கள் உடலில் வரைந்த கோடுகளுடன் தொண்டு கிழமான செவ்விந்திய சிலையை உற்று பார்க்கிறான். பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த சிலையின் விழிகள் அசைகின்றன. சிறுவன் திடுக்கிடுகிறான். பின்னர் அம்மனிதனுடன் உரையாடத் துவங்குகிறான். தான் கேள்விப்பட்ட Lone Ranger பற்றி அறியும் ஆவல் கொண்ட அச்சிறுவனிடம், கிட்டத்தட்ட தொண்ணூறு வயதை தாண்டிய அந்த செவ்விந்தியன் உண்மையான அந்த ஒற்றை ரேஞ்சருடனனான  தன் சாகசக் கதையை சொல்கிறான். கதை காட்சியாய் நம் கண் முன் விரிகிறது. ஜானி டெப்  தான் அந்த செவ்விந்திய வயோதிகன். வினோதமான உடல்மொழிகளுடன், உடலில் தொங்கும் ஆபரணங்களும், முகத்தில் நிரந்தரமான வெண்ணிறப் பூச்சும், தலைக்கு மேல் இறக்கை விரிந்த நிலையில் இறந்த காகத்தின் உடலுமாக  செவ்விந்தியராக ஜானி  டெப்(ப்!) வாழ்ந்திருக்கிறார் , சற்று அம்மாஞ்சியான நேர்மை குணம் படைத்த இளம் வழக்கறிஞர் பாத்திரத்தில் ஆர்மீ ஹாமர். ரயிலில் கொண்டு செல்லப்படும் ஒரு பயங்கர குற்றவாளியை (William Fichtner) காப்பாற்ற குதிரையில் வரும் கொள்ளை கும்பல், வில்லனை வெற்றிகரமாக காப்பாற்றி செல்கிறது. அதை முறியடிக்க மற்றொரு கைதியான ஜானி டெப் முயன்றாலும் நேர்மை வழக்கறிஞர் சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையால் அது பிசுபிசுப்பதுடன், ரயில் பெட்டிகளில் இருந்து பிரிக்கப்படும் எஞ்சின் விபத்துக்குள்ளாகிறது. நம்பவே முடியாத வகையில் அவ்விபத்தில் இருந்து ஜானி டெப்பும் ஆர்மி ஹாமரும் தப்புகின்றனர்.
ரயில் கட்டுப்பாட்டை இழந்து நிற்க  வேண்டிய ஸ்டேஷனில் நிற்காமல் ஓடுவதால் , தன் சகோதரன் ஆர்மீ ஹாமருக்காக காத்திருக்கும் அவரது அண்ணன் தலைமையிலான Ranger குழுவும், தறிகெட்டு ஓடும் ரயிலை தொடர்ந்து வந்து  அவர்களை மீட்கிறது. ஜானி டேப் சிறையில் அடைக்கப்படுகிறார். 
காவல் அலுவலகத்தில் தன்னை பார்க்க வரும் தன் அண்ணனின் மனைவியிடம் தனக்கு இருக்கும் அதீத அன்பை (காதல்!) ஆர்மீ காட்டுகிறார்.
ரேஞ்சர் அண்ணன் ஆர்மீயையும் தன் குழுவில் சேர்த்துக் கொள்கிறார். தப்பிச்சென்ற வில்லன் கும்பலை தேடி செல்லும் அக்குழுவில் உள்ள மூத்த ரேஞ்சர் ஒருவர் துரோகம் செய்ய, குன்றுகள் சூழ்ந்த இடத்தில வைத்து அக்குழுவை வில்லன் கும்பல் தீர்த்துக்கட்டுகிறது. ஆர்மீ யும் சுடப்படுகிறார். நீண்டநாள் பகையை பழிதீர்க்க வரும் வில்லன், குற்றுயிராய் கிடக்கும் ஆர்மீயின்  அண்ணனின் இதயத்தை வெட்டி எடுத்து ருசிக்கிறார். அரைமயக்க நிலையில் அதை பார்க்கும் ஆர்மீ அதிர்ச்சியடைகிறார். இறந்த ரேஞ்சர் குழுவை வில்ல்லன் கும்பல் விட்டு செல்ல, சிறையில் இறந்து தப்பிய ஜானி டெப் அங்கு வந்து சேர்கிறார். இறந்தவர்களை புதைக்க ஏற்பாடு செய்கிறார். இறந்தவர்கள் உடையில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வதுடன், பண்ட மாற்றாக தன்னிடம் உள்ள இறகு போன்ற பொருட்களை உடலில் வைக்கிறார்(படம் முழுவதும் இந்த பண்ட மாற்று காட்சிகளில் திரையரங்கில் உள்ளவர்களை சிரிப்பால் அதிரவைக்கிறார் டெப்!) கடைசியில் ஆர்மீ கண் விழித்து  எழ முயற்சிக்க, என்னவோ ஏதோ என்று பயந்து 'பிணத்தை' அடித்து மீண்டும் படுக்க வைக்கிறார் டெப். அங்கு வந்து சேரும் (செவ்விந்தியரான டெப் பின் கணிப்பு படி ) அற்புத சக்தி கொண்ட வெள்ளை குதிரை, இறந்து போன ஆர்மீ மீண்டும் உயிர்பிழைத்ததாக டெப் புக்கு உணர்த்துகிறது. பிறகென்ன, அவரை காப்பாற்றும் டெப், வில்லன் கும்பலை அழிக்க நீதிமான் ஆர்மீ க்கு உதவுகிறார். இடையில் எக்கச்சக்க சண்டை காட்சிகள், சாகச நிகழ்ச்சிகள். 
படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்னைப் பொருத்தவரை, ஜானி டெப் பின் அட்டகாசமான நடிப்புக்காகவே இப்படம் குறைந்தபட்சம் ஹிட் அடிக்க வேண்டும். மனிதர் ரெண்டு நிமிடம் அசையாமல் நின்று கொண்டு உதட்டை பிதுக்கி கண்ணை சுருக்கினாலே அரங்கில் விசில் பறக்கிறது. பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் படத்தின் இயக்குனர் தான் இப்படத்துக்கும் இயக்குனர் என்பதால் இருவரின் கெமிஸ்ட்ரியும் நன்றாக வேலை செய்திருக்கிறது. பல காட்சிகளில் ஜானி டெப் எளிதாக ஸ்கோர் செய்கிறார். அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம் இது. தனது முன்னோர்கள் செவ்விந்திய இனத்தை சார்ந்தவர்கள் என்பதால் இப்பாத்திரத்தில் அர்ப்பணிப்புடன் நடித்ருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அவர் பேசும் செவ்விந்திய பாஷை பிரமாதம் இல்லை என்றாலும் திரைக்கு போதுமானது என்று செவ்விந்திய பேராசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார். 
படம் பல இடங்களில் முன்னோடி  வெஸ்டெர்ன் படங்களுக்கு tribute செய்திருக்கிறது. ஆற்று நீரில் நின்றுகொண்டு, டெப்பும் ஆர்மீயும்  பாலத்துக்கு குண்டு வைக்கும் காட்சி , The Good, the bad and the ugly யில் வரும் காட்சியை நினைவுப்படுத்துகிறது. ரயில் பாதை அமைக்கும் காட்சிகள், Once upon a time in the west உள்ளிட்ட பல படங்களில் வரும். 1850 முதல் 1880 வரையிலான காலப் பின்னணி கொண்ட படங்கள் தான் வெஸ்டெர்ன் படங்களில் பெரும்பாலானவை. இப்படமும் அப்படியே. 
படத்தின் பலவீனம் என்னவென்றால் அளவுக்கு மீறிய சாகச காட்சிகள் என்று தோன்றுகிறது. க்ளைமாக்சில் எந்த ரயிலில் யார் போகிறார் என்றே தெரியவில்லை. நம்ப முடியாத அளவிலான சாகசம். கொஞ்சம் நம்பும்படியாய் எடுத்திருந்தால் படம் நின்றிருக்கும். இப்படம் தோல்வி என்றாலும் 'அழகான தோல்வி' என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இசை. Hans Zimmer ஒவ்வொரு காட்சியையும் இசையால் மொழிபெயர்த்து கலக்கியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு Grand Symphony. நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள திரையரங்கில் பார்த்தால் கண்ணுக்கு மட்டும் அல்ல காதுக்கும் விருந்து தான்.  கதையை சிறுவனிடம் சொல்லி முடிக்கும் வயதான டெப், அகன்ற திரையில் End title credits மெல்ல ஊறி செல்ல, தடுமாறியபடி நடந்து சென்று மறையும் வரையில் நான் நின்று இசையை ரசித்துக்கொண்டு நின்றேன். The lone music lover!!





Saturday, January 5, 2013

கும்கி: அன்பைக் கொல்லும் காதல்


பிரமாண்டங்களின் மீது மனிதனுக்கு பிரமிப்பும் அச்சமும் எப்போதும் உண்டு. அதை தொலைவில் இருந்து ரசிக்கவும் அதன் ஆபத்திடம் இருந்து விலகி ஓடவும் மனிதன் என்றோ கற்றுக்கொண்டு விட்டான். என்றாலும் அந்த பிரமாண்டங்களை தன் கட்டுக்குள் கொண்டு வரவும் சிலருக்கு முடிந்திருக்கிறது. நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப்பெரிய மிருகமான யானையை மையமாக வைத்து தேவர் பிலிம்ஸ் காலத்தில் இருந்தே திரைப்படங்கள் வந்திருக்கின்றன. பாடலுக்கு ட்ரம்ஸ் வாசிக்கவும் காதலுக்கு தூது செல்லவும் திரைப்படங்களில் பயன்பட்ட அந்த பெரும் விலங்கு  தொடர்பான உருப்படியான படங்கள் தமிழில் மிகக் குறைவு. ஆகட்டும்டா தம்பி ராஜா என்று ஆரஞ்ச் கலர் கோட்டணிந்த எம்.ஜி.ஆர் குட்டிக்கரணமடிக்கும் யானைகளை வழிநடத்திச் செல்லும் படங்களை பார்த்து வந்த தமிழ் ரசிகர்களின் பார்வைக்கு காட்டு யானைகளை பழக்கவும் அவற்றிடம் இருந்து மனிதர்களை காக்கவும் பழக்கப்பட்ட கும்கி யானையை வைத்து குறிப்பிடும்படியான படத்தை தந்திருக்கிறார் பிரபு சாலமன். தலைப்பு தான் கும்கியே தவிர இந்த யானை கும்கிக்கு மாற்றாக கூட்டி செல்லப்பட்ட குழந்தை யானை என்பது தான் கதையின் சுவாரஸ்யம்.  யானைக்கும் சிவாஜி குடும்பத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது போலும். சிவாஜியின் அண்ணனான வி.சி.கணேசனின் மகன் தரன் மன்றாயர் இயக்கிய எலி மை ஃப்ரெண்ட் (1992) என்ற ஆங்கிலப்படம் யானையை மையமாகக் கொண்டது  என்பது கூடுதல் சுவாரஸ்யம். படம் பெரிதாகப் பேசப்படவில்லை.கும்கி மூலம் அறிமுகமாயிருக்கும் சிவாஜியின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுக்கு திரையுலகில் உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது. பிரபு சாலமன் கலந்து கொள்ளும் படம் தொடர்பான நிகழ்சிகளில் நாயகனின் தந்தை பிரபுவும் கலந்துகொள்கிறார். தொலைபேசியில் வாழ்த்து சொல்கிறார். குரலில் ஏக மகிழ்ச்சி அவருக்கு.

படத்தின் தொடக்கத்திலேயே யானைக்கும் நாயகனுக்கும் இருக்கும் பாசப்பிணைப்பை காட்டும் வகையிலான காட்சி ஒன்றை வைக்கிறார் இயக்குனர். பாகனான நாயகனின் தாய்மாமன் பழக்கப்படுத்திய படி கடைகளில் இருந்து சிப்ஸ் பாக்கேட்டுகளை யானை திருடுவதை கண்டுபிடிக்கும் நாயகன் யானையிடம் கடும்கோபம் கொண்டு இனி ஒரு வாரத்துக்கு தாய்மாமனே யானையைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று கோபத்துடன் அதை நடுரோட்டில் விட்டுவிட்டு சென்று விடுகிறான். பாசம் உள்ள அந்த பிராணி அவனை பின்தொடர்ந்து  சாலையில் நடந்து வருகிறது. பாகன் இல்லாமல் தனியே வரும் யானையைக் கண்டு பொதுமக்கள் பதறி ஓடுகிறார்கள் (யானை தாக்குதல்களுக்கு புகழ்பெற்ற கேரளாவில் இந்த காட்சி நடைபெறுகிறது).கடைசியில் கோபத்தோடு பேருந்தில் அமர்ந்திருக்கும் நாயகனிடம் யானை மன்னிப்பு கேட்கும் விதமாக துதிக்கையால் அவனை வருடுகிறது. ஒரு வகையில் இந்தக் காட்சி விலங்குகள் மனிதர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை காட்டுவது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் இத்தனை 'பொறுப்புடன்' ஒரு பாகன் நடந்துகொள்வானா என்ற தவிர்க்க முடியாத கேள்வி எழுகிறது. இந்த காட்சியிலேயே இந்த உறுத்தல் ஆரம்பித்து விடுகிறது. பின்னர் உரிய ஆவணங்கள் இல்லாமல் அதிகாரிகளுடன் யானை மாட்டிக் கொண்ட போது உதவிய யானை ஏஜெண்ட், கொம்பன் யானையால் பாதிப்புக்கு உள்ளாகும் கிராமத்துக்கு கும்கி யானை ஒன்றை ஏற்பாடு செய்து  அது குறித்த நேரத்துக்கு வரமுடியாமல் போக அவருக்கு உதவும் விதமாக நாயகன் தன்  யானையை அந்த மலைகிராமத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளிக்கிறான்.தற்காலிகமாகத் தான். இரண்டு நாளில் உண்மையான கும்கி யானை வந்ததும் நாங்கள் (யானையோட சேர்த்து நாங்க நாலு பேருங்க) அங்கிருந்து வெளியேறிவிடுவோம் என்று ஏஜென்டிடம் சொல்கிறான். அங்கு சென்றதும் கதை மாற காதல் காரணமாக அமைவது தான் படத்தின் முடிச்சு.

யானையும் அது சார்ந்த மலைவனப் பகுதியும்  பின்னணி என்பதால் படத்தின் நம்பகத்தன்மை கூடிவிடுகிறது. கடுமையாக உழைத்திருக்கும் தனது படக்குழுவினரின் துணையுடன் அதை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார். வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் பெண்களை  கொம்பன் யானை  தாக்கும் காட்சி மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. படம் தொடக்கத்திலேயே யானை சண்டை காட்சிகள் விஷூவல் எஃபெக்ட்ஸ் துணையுடன் உருவாக்கப்பட்டவை என்று டைட்டலில் சொல்லிவிடுகிறார்கள். தொழில்நுட்பத் தவறுகளை தவிர்க்கும் விதமாக காட்சிகளை இரவு நேரத்தில் நடைபெறுவதாகக் காட்டி யிருப்பது  பிரபு சாலமனுக்கு இருக்கும் புத்திசாலித்தனத்தைக்காட்டுகிறது. மலைகிராமத்தை சேர்ந்த ஆதிகுடிகள் கொம்பனால் தாக்கப்பட்டு இறந்துபோன பெண்களை வேதனையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யும்போது  அங்கு வரும் வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் யானை அபாயம் இருப்பதால் இங்கிருந்து காலி செய்யவேண்டியது தானே என்று கேட்கும்போது ஆதிகுடிகளின் தலைவர் கேட்கும் கேள்வி நிதர்சனமானது." நீங்கள் வனப்பகுதியில் கட்டிடங்களை கட்டி வைத்திருப்பதால் தான் யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதுவரை வன எல்லைக்கு வெளியில் வராத யானைகள் ஊருக்குள் வருகின்றன  என்றால் என்ன அர்த்தம்?" என்று அவர் கேட்கும் கேள்வி திரைக்கும் வெளியே ஒலிக்க வேண்டிய முக்கியமானக் கேள்வி. அதிகாரவர்க்கத்தின் செவிட்டு காதுகளுக்கு விழும்படி அறைந்து கேட்கப்படவேண்டிய கேள்வி அது. ச. பாலமுருகனின் சோளகர் தொட்டி நினைவு தான் வந்தது. நாவலில் தற்காப்புக்காக கரடி ஒன்றை கொன்று விட்டு பின்னர் வனக்காவலர்கள் வலையில் சிக்காமல் இருக்க என்று கடன் வாங்கி அதற்காக வாழ்ந்த இடத்தையே இழக்க நேரும் பரிதாபத்துக்கு உரிய வனக்குடியினர் போல் அல்லாது இந்த ஊர் ஆதிகுடிகள் அரசு அதிகாரிகளை கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டியிருப்பது உண்மையோ இல்லையோ ஒரு வகையில் ஆசுவாசமாக இருக்கிறது. வனப்பகுதிகளில் வெறுமே சுற்றிக்கொண்டு இருக்கும் வனத்துறையினர் கொம்பன் யானையை வைத்து ஆதிகுடிகளை மிரட்டுவது அதிகாரவர்க்கம் ஒன்றுமறியாத பழங்குடியினரை ஏமாற்ற முயல்வதை தெளிவாகக் காட்டுகிறது. என்றாலும் அதிகாரவர்க்கத்துக்கும் அப்பாவிகளுக்கும் இடையிலான போராட்டம் இல்லை இந்தக் கதை. முன்பே சொன்னது போல் காதல் தான் மையம் படத்தில்.

கொம்பன் யானையிடம் இருந்து கிராமத்தைக் காக்க வந்த கும்கி யானைக் குழுவினருக்கு அதிகபட்ச மரியாதை காட்டுகிறார்கள்  ஆதிகுடி மக்கள். அவர்கள் காலில் சந்தனம் குங்குமம் வைத்து வணங்குகிறார்கள். தாங்கள் போலி கும்கிக் குழு என்பதால் உள்ளுக்குள் சற்று கலங்கியபடியே இருக்கும் பாகன்களின் தலைவனான நாயகன் தமிழ் சினிமா வழக்கப்படி ஒரு பெண்ணைப் பார்த்த முதல் நொடியே காதலில் விழுவதாகக் காட்டியிருப்பது தான் படத்தின் மிகப்பெரிய உறுத்தல். அந்தப் பெண்ணை அடைவதற்காக தான் வளர்த்த யானை, தன் தாய்மாமன், உதவியாளன் ஆகியோரின் உயிரை பணயம் வைக்க அந்த நொடியே முடிவெடுத்து விடுகிறான். ஆனால் அந்த உறுத்தல் மீது தான் திரைக்கதையே கட்டமைக்கப் படுவதால் நாம் மேற்கொண்டு ஒன்றும் சொல்வதற்கில்லை.

கொம்பன் யானையின் தாக்குதலை நேரில் கண்டதால் யானையைக் கண்டாலே பயந்து அலறும் நாயகி 'கும்கி' யானையைக் கண்டதும் பயந்து குளத்துக்குள் விழ அவளைக் காப்பாற்ற நாயகனும் நீரில் விழ, தமிழ் சினிமாத்தனம் தன் தலையை விரித்துக் காட்டுகிறது. "ய்யேஏஏ  ...." என்று அடிவயிற்றில் இருந்து கத்துவதை பின்னணி இசையாக மாற்றிய புண்ணியவான் யாரென்று தெரியவில்லை. காதல் வந்தால் எப்போதும் இந்த "ய்யேஏஏ  ...." தான். உடனே அரங்கில் காதல் உணர்வு திரையரங்கில் பரவத் தொடங்குகிறது. துயரம் தான், வேறென்ன சொல்ல! உடுமலைப்பேட்டையில் ஒரு சாதாரணத் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தேன். காலைகாட்சிக்கு திரையரங்கம் நிரம்பி வழிந்தது. தொண்ணூறு சதவீதம் கல்லூரி மாணவர்கள். ஒரு வரிசையில் ஐந்து ஜோடிகள் வேறு. எல்லோரும் மடியில் தங்கள் புத்தகப் பைகளை வைத்திருந்தார்கள். காதல் உணர்வுக்குக் கேட்கவும் வேண்டுமா? நாயகன் உண்மையான கும்கி யானையே வந்தாலும் இங்கிருந்து போகப்போவதில்லை என்று சொல்லும்போது உடன் இருப்பவர்கள் பதறுகிறார்கள். தாய்மாமனான தம்பி ராமையா கொம்பன் யானை வந்தால் இந்த கோவில் யானையை வைத்து எப்படி சமாளிப்பது என்று கேட்கும்போது காதல் பித்தம் ஏறிய நாயகன் சொல்கிறான் "அந்தப் பொண்ண பாத்தவுடன் நூறு யான வந்தாலும் அதை கையாலப் புடிச்சி இந்தப்பக்கம் ரெண்டு அந்தப் பக்கம் ரெண்டுன்னு வீசிடலாம் போல இருக்கு"(எண்ணிக்கை கூட குறைய இருக்கலாம்!) . உடனே அரங்கத்துக்குள் குதூகலக் கூச்சல். கொம்பன் யானை வந்தால் பெரிய ஆபத்தாகி விடும் என்று சொல்லும் யாரிடமும் அந்தப் பெண்ணை தான் தீவிரமாகக் காதலிப்பதாகவும் அவளுக்காக இங்கேயே இருக்கப்போவதாகவும் சொல்கிறான் நாயகன். குறைந்தபட்சம் கும்கியா குமரியா என்று மனதுக்குள் ஒரு சிறு போராட்டம் கூட நடப்பதில்லை அவனுள். பாலாவின் சேது திரைப்படம் வந்த பின்னர் நாயகியை மிரட்டியாவது தங்கள் காதலை வெளிப்படுத்தும் நாயகர்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்து விட்டார்கள். அதன் பாதிப்பு சமீப காலமாக நடைபெறும் காதல் கொலைகளில் தெரிகிறது. தன்னை விரும்பாத காதலியைக் கொன்றே விடுவது அல்லது ஆசிட் வீசி அவள் அழகை சிதைத்து விடுவது என்று தன் 'உள்ளுலகம்' சார்ந்து வெறிப்பிடித்து அலையும் இளைஞர்களை உருவாக்கியதில் இதுபோன்ற படங்களுக்கு பங்கில்லாமல் இல்லை. முன்பெல்லாம் நாயகர்கள் காதலியிடம் காதலை சொல்லி அவள் மறுத்து விட்டால் கலங்குவார்கள். காத்திருப்பார்கள். இப்போது டாஸ்மாக்கில் குடி. நடனக் குழுவினரிடம் சேர்ந்து வெறி பிடித்த ஆட்டம். ஆறுதல் சொல்பவனை அடித்து விரட்டுவது என்று 'கொல வெறியுடன்' அலைகிறார்கள். திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இது தான் நடப்பு. இங்கே நாயகன் தன்னை நம்பி வாழ்பவர்களின் உயிருடன் விளையாடுகிறான்.

படத்தில் யானைக்கும் நாயகனுக்குமான உறவு அருமையானதாக இருந்தாலும் சிறுவயது முதல் இருவரும் சகோதரர்கள்  போல் பழகி வந்தாலும் ஒரு பெண்ணுக்காக அன்பான தன் யானையின் உயிரை பணயம் வைப்பது ஏன் என்ற கேள்விக்கு எந்த விடையும் இல்லை. அதேபோல் வறுமை காரணமாக சற்று இழிவான குணம் கொண்ட தன் தாய்மாமன் தலையில் யானை மீதிருந்து செருப்பை வேண்டுமென்றே தவற விடுவது
என்ன மனநிலை என்று புரியவில்லை. தொடர்ந்து நாயகர்கள் இதுபோல் சித்தரிக்கப்படுவது ஏன் என்பது புரியாத புதிர். இதெல்லாம் நகைச்சுவையா என்ன? படத்தில் நாயகனை விடவும் அதிகம் பேசுவதும் இயக்குனரை விட அதிகம் சிந்திப்பதும் தாய்மாமனாக வரும் தம்பி ராமையா தான். கிட்டத்தட்ட அறுபது சதவீத காட்சிகளில் அவரது 'மைண்ட் வாய்ஸ்' ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதே போல ஆதிகுடிகளைக் காணும்போது என்னவோ நரமாமிசப் பட்சிணிகளைக் கண்டது போல் அவர் பதறுவது எரிச்சல். இத்தனைக்கும் அந்த மக்கள் போலியான இந்தக் குழுவினர் மீது மிகுந்த மரியாதை காட்டுகிறார்கள். நம் சினிமாவில் திரைக்கதை என்பது செழித்து வளராமல் போனதற்கு இது போன்ற அர்த்தமற்ற காட்சிகள் தான் காரணம். நாயகனின் காதலை கேலிசெய்யும் வசனங்கள், நாயகியை நாயகன் பார்த்துக்கொண்டே நடப்பது, பிறகு ஒரு கட்டத்தில் நாயகியும் இவனைப் பார்த்துக்கொண்டே நடப்பது, கடைசியில் இருவரும் சேர்ந்தாற்போல் எங்காவது நடப்பது என்றே காட்சிகளை உருவாக்கி அறுபது சதவீத படத்தை நிறைத்து விடுகிறார்கள். கதைக்கு கால் பங்கு கூட இடம் இருப்பதில்லை. இந்தப் படத்தில் சொல்லப்படவேண்டிய பல விஷயங்கள் தவிர்க்கப்பட்டே விட்டன என்று சொல்லலாம். வெற்றியை குறிக்கோளாக கொண்டவர்கள் மத்தியில் இத்தனை தூரம் கதை சொன்ன கருணைக்காக நாம் பிரபு சாலமனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தார்மீக ரீதியாக நிறைய கேள்விகள் கேட்கலாம் என்றாலும் தர்க்க ரீதியாகப் படத்தில் பெரிய குறைகள் இல்லை என்பது பாராட்டுக்குரிய விஷயம். நாயகனும் நாயகியும் நெருங்கிப் பழகுவதை பெண்ணின் தந்தையான ஊர்த்தலைவரிடம்  வனக் காவலர்கள் சொல்லிவிட அதை அவர் அணுகும் விதம் அருமை. "வனக் காவலர்கள் தவறுதலாக சொல்லிவிட்டார்கள். நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம்" என்று நாயகனிடம் அவர் சொல்வது  எதிர்பாராத அருமையான காட்சி. மேலும் முன்புபோலவே நாயகனிடம் பேச வேண்டும் என்று தன் மகளிடம் அவர் சொல்வதும் உயர்வான விஷயம். எதிர்பாராத இந்த அன்புத் தாக்குதலால் நாயகன் தவித்து விடுகிறான். "என்னை தாக்க வந்திருந்தால் கூட எதிர்த்திருப்பேன். என் மீதான நம்பிக்கையை என் முன்னாலேயே வைத்து விட்டார் உன் தந்தை" என்று நாயகன் சொல்லும்போது பிரம்பித்து விடுகிறோம். இந்தப் படத்தின் மிக முக்கியக் காட்சி இது தான். மனித உணர்வுகளைத் துல்லியமாக கணிக்க தெரிந்த ஒருவரால் தான் இப்படியான காட்சியை அமைக்க முடியும். இருநூறு ஆண்டுகளாக வெளியாட்கள் யாரிடமும் திருமண உறவு கொண்டிராத அதற்கு எந்த விதத்திலும் சம்மதிக்காத அந்த ஆதி குடி தலைவன் புத்திசாலித்தனமாக அவர்கள் காதலை தவிர்க்கப் பார்க்கிறானா இல்லை இயல்பாகவே அத்தனை தூரம் நல்லவனா என்பது சிந்திக்க வைக்கும் கேள்வி.

அதே போல் கடைசி காட்சியில் கொம்பன் யானை தாக்க வரும்போது நாயகனின் சாதுவான யானைக்கு சங்கிலியை அறுக்கும் வலிமை எப்படி வருகிறது என்ற கேள்விக்கும் முன்பே பதில் வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த யானைக்கு சில நாட்களாக மத நீர் வடியத் தொடங்கி விட்டது என்று காட்சி வைத்திருப்பது தர்க்க ரீதியாக சரியான காட்சி. கொம்பன் யானை இவர்கள் தங்கியிருக்கும் அந்த மரப் பரணை தாக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்து வரும் யானை சண்டைக் காட்சியும் தமிழ் திரைப்படம் இதுவரை கண்டிராதது. புத்திசாலித்தனமாக அதையும் இரவு நேரக் காட்சியாக வைத்து வெற்றிபெற்றிருக்கிறார் பிரபு சாலமன். படத்தின் நாயகனான விக்ரம் பிரபு பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். நெடுநெடுவென்ற உயரமும் அம்பு போன்ற உடலும் பாகனுக்கு நல்ல பொருத்தமாக இருக்கிறது. என்றாலும் அளவுக்கு மீறி விடைத்த நாசி மற்ற படங்களில் உறுத்தலாகத் தெரிய வாய்ப்பு உண்டு. ஸ்ரீதேவி வழி சென்றால் ஜெயம் நிச்சயம். நாயகி வழக்கம் போல் மிரள்கிறார், காதல் புரிகிறார், கண்ணீர் வடிக்கிறார். இயல்பான அழகுடன் தமிழுக்கு கிடைத்திருக்கும்  இன்னொரு நாயகி. ஆதிகுடிகளின் தலைவர் மிக இயல்பாக நடித்திருக்கிறார். தொழில்நுட்பம் தான் படத்தின் பலம். ஒளிப்பதிவாளர் சுகுமார் வனத்தின் அழகை அருவியின் பிரமாண்டத்தை நம் கண்ணுக்கு அருகில் கொண்டு வந்திருக்கிறார். வனத்தின் கரும்பச்சை பின்னணியில் யானை மீதமர்ந்து நாயகன் வரும் காட்சியின் கோணமும் ஒளியமைப்பும் மிகச் சிறப்பு. இமானின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. அழகான வரிகளுடன் நிறைவான இசை தந்திருக்கிறார். "சொய்..சொய்" பாடல் தொடங்கியவுடன் மாணவச் செல்வங்கள் திரைக்கு அருகில் மேலேறி நடனமாடத் தொடங்க அவர்களை தியேட்டர்காரர்கள் அதட்டி விரட்ட வேண்டி வந்தது.என்றாலும் பின்னணி இசை என்பதில் மவுனத்துக்கும் முக்கியத்துவம் உண்டு என்பதை இமான் இன்னும் உணரவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மரங்கள் அடர்ந்த புள்ளினங்கள் நிறைந்த அந்த கானகத்தின் உண்மையான சத்தம் ஒருமுறை கூட கேட்கவில்லை. எதற்கெடுத்தாலும் "ய்யே" என்ற ஓலக்குரல். 

என்றாலும் தமிழில் நிலம் சார்ந்து வந்த படங்களில் முக்கியமானப் படம் இது என்பதில் சந்தேகம் இல்லை. காதல் காதல் என்பதையும் தாண்டி கதை சொல்ல முயற்சி செய்தால் இது போன்ற படங்களை மேலும் சிறப்புறச் செய்யலாம். இறுதியில் தன்னை நேசித்த அப்பாவி உயிர்களை  இழந்து நாயகன் தவிக்கும்போது தன் சுயநலம் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று புலம்பும்போது அந்த செய்தியைத் தெரிந்துகொள்ள திரையரங்கில் யாரும் இல்லை. எல்லோரும் காதலைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறி விடுகிறார்கள்.

- காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை 

Monday, December 10, 2012

நாளைக்கு இறந்தவன்



சிலரைப் பார்க்கையில் அவர்கள் ஏதோ ஒருவகையில் தற்காலிகமானவர்கள் என்ற கணிப்பு வரத் தொடங்கியபோது ரமணனுக்கு பதிமூன்று வயது தான் ஆகியிருந்தது. தற்காலிகம் என்றால் வாழ்க்கையிலா, படிப்பிலா வேலையிலா என்று உறுதியாக அவனுக்குத் தெரியவில்லை. வெற்றியடைந்தவர்கள் தோல்வியடைந்தவர்கள் என்ற வித்தியாசமும் இல்லை. நண்பர்கள் தெரிந்தவர்கள் உறவினர்களில் யாரைப் பற்றியேனும் திடீரென்று இந்த நினைப்பு வரும். எதிர்பாராமல் ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்களுடனான தொடர்பு என்பதே சுத்தமாக இல்லாதபடி ஏதாவது நடக்கும். பின்னர் அவர்கள் அவன் வாழ்க்கையில் ஒரு போதும் திரும்ப வருவதே இல்லை. உள்ளுணர்வு சொல்லியபடியே விஷயங்கள் சிலருக்கு நடக்க ஆரம்பித்தப் பின் ரமணன் இந்த விஷயங்களைக் கவனிக்கத் தொடங்கினான். இன்னதென்று வெளியில் சொல்ல முடியாத விசித்திரமான அந்த நினைப்பு அவனை அலைக்கழிக்கத் தொடங்கியிருந்தது.

உதாரணத்துக்கு பிரிட்டோ ஸார் பையன் லெனின். பார்ப்பதற்கு இழைத்து வைத்த பனைமரம் போல் இருப்பான். நல்ல உயரம். கருப்பு நிறமானாலும் அதில் ஒரு மின்மினுப்பு இருக்கும். பிரிட்டோ ஸார் ரமணன் படித்த நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவரும் லெனினின் அம்மாவும் நல்ல குள்ளம். அப்படி கருப்பு ஒன்றும் இல்லை. இவன் மட்டும் எப்படி இப்படி இருக்கிறான் என்று தோன்றும். ரமணனுக்கு ஏழெட்டு வயது மூத்தவன். மெட்ராசில் காலேஜில் படித்துக்கொண்டிருந்தான். அறந்தாங்கி ஹவுசிங் யூனிட்டில் இருக்கும் தன் வீட்டுக்கு மாதத்துக்கு ஒரு முறையோ இரு முறையோ வருவான். இவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை வேடிக்கைப் பார்த்தபடி பம்ப் ரூம் படிக்கட்டில் அமர்ந்திருப்பான். ரமணனிடம் மட்டுமில்லாமல் அவன் நண்பர்களிடமும் நன்றாகப் பேசுவான். இதோவரைக்கும் கேள்விப்பட்டிராத புது விஷயங்கள் சொல்வான். வெளிநாட்டு செனட்டின் மணம் நிழல் காற்றுப் போல அவன் உடலைச் சுற்றிப் படர்ந்ந்திருப்பது போல இருக்கும். நேர்த்தியான உடை அணிவான். மிருதுவான வண்ணங்களில் அவன் அணியும் சட்டைகள் நிச்சயம் உள்ளூர் கடைகளிலோ மெட்ராசிலோ கூட கிடைக்க வாய்ப்பில்லை என்று ஷேக் சொல்வான். பிரிட்டோ சாரின் அண்ணன் கனடாவில் இருந்தார். அக்காவோ தங்கையோ,அப்பாவின் சிஸ்டர் என்று தான் லெனின் சொல்வான், பிரான்சில் இருந்ததால் வசதிக்குக் குறைவில்லாத குடும்பம். நன்றாகப் படித்தானா இல்லையா என்றெல்லாம் தெரியாது. மெட்ராசில் கல்லூரியில் கம்ப்யூட்டர் படித்துக்கொண்டிருந்தான் என்று மட்டும் தெரியும். அப்போது கம்ப்யூட்டர் பற்றிப் பாடப் புத்தகத்திலேயே படித்ததில்லை. கல்கண்டில் தான் இதுபோன்ற விஷயங்கள் வரும். லெனினின் சமவயது நண்பர்கள் யாரும் இவர்களோடுப் பழகுவதில்லை. அவர்கள் எப்போதும் தனிக் குழுவாகத் தான் இருப்பார்கள். லெனின் அவர்களோடு பேசினாலும் ரமணன் குழுவிடம் உரையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவான்.

சில நாட்களாகவே ஏனோ லெனின் இங்கே நீண்டநாள் இருக்க மாட்டான் என்றே ரமணனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. ஒன்று அவன் கனடாவுக்கோ ப்ரான்சுக்கோ சென்று விடுவான் அல்லது ஏதோ ஒரு விதத்தில் நிச்சயம் இங்கிருந்து நிரந்தரமாகப் போய் விடுவான் என்றே ஏனோ ரமணன் நினைக்கத் தொடங்கினான். நாட்கள் செல்லச் செல்ல லெனினைப் பார்க்கையில் அதே எண்ணம் ஓடுவதால் பெரும்பாலும் அவன் இருக்கும் நேரங்களில் விளையாடச் செல்லமாட்டான். திடீரென்று ஒரு நாள் லெனின் இறந்து விட்டான் என்று தகவல் வந்தது. மெட்ராசில் எங்கோ மோட்டார்சைக்கிளில் போகும்போது லாரி மோதி அந்த இடத்திலேயே இறந்திருந்தான். உடல் அறந்தாங்கிக்குக் கொண்டுவரப்படும்போது அதில் காயமே இல்லை. தூங்குகிறவன் போலிருந்தான். பெருங்குரலெடுத்து அவன் குடும்பம் கதறத் தொடங்கும்போது ரமணன் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினான். அது காலாண்டு விடுமுறை நேரம். வீட்டுக்கும் போக முடியாமல் கிரவுண்டுக்கும் செல்லாமல் எங்கெங்கோ நடந்துகொண்டிருந்தான். லெனின் நிரந்தரமாக எங்கோ சென்றுவிடப்போவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டும் யாரிடமும் அதைச் சொல்லாமல் இருந்தான் என்ற எண்ணம் அவனை உறுத்திக்கொண்டிருந்தது.

ஒரு வாரத்துக்கு யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தான். பின் கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டில் மூழ்கிய பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான். என்றாலும் கிரிக்கெட் விளையாடுகையில் பம்ப்ரூம் படிக்கட்டில் லெனின் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு இவனை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. விளையாட்டில் தடுமாறத் தொடங்கினான். அணியின் ஹிட்டரான அவன் பல முறை டக் அவுட் ஆனான். கேட்சுகளைத் தவற விட்டான். பம்ப் ரூம் பக்கம் பீல்டிங் செய்யவே மறுத்து விட்டான். கொஞ்சம் கொஞ்சமாக விளையாட வருவதைக் குறைத்துக் கொண்டு விட்டான். பள்ளி விட்டால் வீடு. உலகம் சுருங்கத் தொடங்கியது.

படிப்பில் மட்டும் கவனம் சிதறவே இல்லை. பள்ளியின் முதல் மாணவன் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தான். சில நாட்களில் இவனுக்குப் பெரும் விருப்பமான இங்கிலீஷ் டீச்சர் ரோஸ்லின் மேரி இனி இந்தப் பள்ளிக்கு வரமாட்டார் என்ற நினைப்பு வரத் தொடங்கியது. ஓரிரண்டு மாதங்களில் பட்டுக்கோட்டையில் தன் கணவன் வேலை பார்க்கும் பள்ளியிலேயே அவருக்கு மாற்றல் கிடைத்துப் போய்விட்டார். அந்த நேரத்தில் தான் சீனிவாசன் அந்தப் பள்ளிக்கு வந்து சேர்ந்தான். காலாண்டு முடிந்து அட்மிஷன் ஆன பையன் ரமணனுக்குத் தெரிந்து அவன் தான். அவன் அப்பா பி.டபிள்.யூ.டியில் எஞ்சினியர் .அடிக்கடி ஊர் மாறும் உத்தியோகம். மெட்ராஸ், ஊட்டி, கோயம்பத்தூர் என்று பல இடங்களில் ஆங்கில மீடியத்தில் படித்தவன். இந்த நேரத்தில் வேறெந்த பள்ளியிலும் அட்மிஷன் கிடைக்காததால் ரமணன் படிக்கும் அரசுப் பள்ளியிலேயே சேர்ந்தான் சீனிவாசன்.

நல்ல நிறம். வெள்ளைச் சீருடையில் பொலிவாகத் தெரிவான். ரமணன் ட்யூஷன் படிக்கும் கிராண்ட் மாஸ்டர் ட்யூஷன் செண்டரிலேயே அவனும் சேர்ந்தான். வந்த சில நாட்களிலேயே பலர் அவனுக்குத் தோழர்களாகி விட்டனர். கவிதாவும் அவனிடம் அடிக்கடி சிரித்துப் பேசியது ரமணனுக்கு உறுத்தலாக இருந்தது.

ஏழாம் வகுப்பிலிருந்து அவள் மீது ரமணன் மையல் கொண்டிருந்தான். அவளும் இவனிடம் சிரித்துப் பேசினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் நெருங்காமல் தள்ளி தான் இருந்தாள். நடுநிலைப் பள்ளியாதலால் எட்டாம் வகுப்புக்குப் பின்னர் இருவரும் வெவ்வேறு பள்ளிகளுக்குப் பிரிந்து விட்டார்கள். அவள் கேர்ல்ஸ் ஹை ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தாள். ட்யூஷன் மட்டும் ஒரே இடத்தில். கடந்த சில மாதங்களாக அவளிடம் இருந்து சாதகமான சமிஞ்ஞைகள் வரத் தொடங்கியிருந்தன. அவள் வீடு இருக்கும் ப்ளாக்கின் எதிரே இருக்கும் திட்டில் ரமணன் அமர்ந்து அவள் வீட்டு ஜன்னலைப் பார்த்துக்கொண்டிருப்பான். முன்னரெல்லாம் திறக்காத ஜன்னல் இப்போது அடிக்கடித் திறந்தது. ஜன்னல் கம்பிகளூடே விவரிக்க முடியாத முகபாவனைகளோடு அவளும் இவனைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். இருவரும் வெளி இடங்களில் பேசிக்கொள்ளும்போது சகஜமாக இருந்தாலும் ஜன்னல் சந்திப்பில் முற்றிலும் புதிய நபர்களாய் இருந்தார்கள். முகக்குறிப்பும் சமிஞைகளும் இது வரை கற்பனை கூட செய்திராத பரவஸ் உணர்வை இருவருக்கும் தந்திருந்தது. உலகம் அவள் வீட்டு ஜன்னலை மையமாகக் கொண்டு சுற்றிக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஒரு மாதிரியான மயக்க நிலைக்கு ரமணன் போய்க்கொண்டிருந்தான். மற்றவர்கள் கவனிப்பதையும் கிண்டலடிப்பதையும் அவன் பொருட்படுத்தவில்லை.

இந்த நேரத்தில் நந்தி போல் சீனி வந்து விட்டதாக ரமணன் உணர்ந்தான். கவிதா மட்டுமல்லாமல் அங்குப் படிக்கும் எல்லா பெண்களுமே சீனியிடம் பேசினார்கள். முன்பு அந்த இடத்தில் தான் மட்டுமே இருந்தது ரமணனுக்கு நினைவு வந்தபோது சீனி மேல் பகையை வளர்க்கதொடங்கினான். சீனியின் அப்பா அலுவலகத்திலேயே கவிதாவின் அப்பாவும் வேலை பார்த்ததால் இரு குடும்பத்துக்கும் இடையில் புது உறவுத் தொடங்க சீனி அவள் வீட்டுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். அவனுடன் சிரித்துப் பேசினாலும் ரமணனுக்கு ஜன்னல் தரிசனம் தர கவிதா தயங்கவில்லை. எப்படியாவது அவளிடம் தான் காதலைச் சொல்லி விட வேண்டும் என்று முன்பை விடப் பதற ஆரம்பித்தான். சீனி இவனிடமும் பேசினாலும் தான் எங்கோ வெளிநாட்டில் இருந்து வந்தவன் போலவே நடந்துகொண்டான். ரமணனின் நண்பர்களுக்கும் சீனி மீது ஆத்திரம் இருந்தது. ஒரே ஒரு விஷயம் தான் ரமணனுக்கு ஆதரவாக இருந்தது. சீனிக்கு படிப்பில் அவ்வளவுப் பிடிப்பில்லை. ஆங்கிலத்தில் மட்டும் மற்ற அனைவரை விடவும் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் மற்ற பாடங்களில் சுமாராக இருந்தான். இது தெரிந்ததும் ரமணனுக்கு கொஞ்சம் தைரியம் பிறந்துவிட்டது. நன்றாகப் படிக்காதப் பையன்களை பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்ற அனுபவ உண்மை அவனுக்குக் கைகொடுத்தது. சீனியிடம் பெண்கள் பேசுவதைக் குறைத்துக் கொண்டனர். அவன் மக்கு என்று ரமணன் ரகசியமாக தகவல் பரப்பி மகிழ்ந்தான்.

சீனிக்கு இதுகுறித்து பெரிய கவலை இல்லாமல் இருப்பதை ஒருகட்டத்தில் அவன் கவனிக்க ஆரம்பித்தான். பணக்காரப் பையன் என்பதாலோ என்னவோ படிக்காவிட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன் போல் அசட்டையாகவே இருந்தான். அவன் நடவடிக்கைகளை உற்று நோக்கி வந்த ரமணன் லெனினைப் போல் இவனும் நிரந்தரமில்லாதவன் என்று தோன்ற ஆரம்பித்தது. ஏனோ ஒரு கட்டத்தில் அவன் விலகிச் சென்று விடுவான் என்று ரமணன் நம்ப ஆரம்பித்தான். ஒருவகையில் இது அவனுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. அவன் விலகி விடும் பட்சத்தில் கவிதாவின் கவனம் தன் மீது மட்டுமே இருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே சீனி தோல்வியடைந்தான். நானூறுக்கும் மேல் மதிப்பெண் எடுத்த ரமணன் மீண்டும் கவனம் பெற்றான். கவிதாவிடம் இருந்து ஒருநாள் கடிதம் கிடைத்தது. தனிமைச் சந்திப்புகளில் முத்தம் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு அவனிடம் கவிதா நெருங்கியிருந்தாள்.

இவன் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருக்கும்போது பள்ளி செல்லும் நேரங்களில் சில சமயம் சீனிவாசன் எதிர்ப்படுவான். முகத்தில் அதே அலட்சியபாவம். இவனிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு ஏதோ முக்கியமான வேலையைப் பாதியில் விட்டு வந்தவனைப் போல் சட்டென கிளம்பிவிடுவான். ரமணனுக்கு முன்பு போல் இவனிடம் கோபமோ பொறாமையோ இல்லை. சொல்லப்போனால் சீனி நிரந்தரமில்லாதவன் என்ற நினைப்பு சற்று வருத்தம் தந்தது. அசம்பாவிதம் ஏதும் நிகழக்கூடாது என்று நினைத்துக்கொண்டான். நல்லவேளையாக சீனியின் அப்பாவுக்கு விழுப்புரத்துக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்து அங்கு சென்று விட்டார்கள். அதற்கப்புறம் அறந்தாங்கிப் பக்கம் ஒரு முறைக் கூட அவன் வந்ததில்லை.

கவிதாவுடனான ரமணனின் காதல் ஊர் முழுக்கத் தெரிந்துவிட்டது. தெருவுக்குள் ரமணன் தலை மறையும் சமயத்தில் எங்கிருந்தோ ஒரு குரல் 'கவிதா' என்று கத்தும். விஷயம் அவர்கள் பெற்றோர்களுக்கு மட்டும் தெரியாமல் எப்படி இருக்கும்? ஒரு கட்டத்தில் அவள் அப்பா இவனை சந்தித்து பொதுவாக அறிவுரை செய்வதுபோல் பேசிப்பார்த்தார். இவன் வீட்டிலும் கவிதாவைப் பற்றி இவன் இருக்கும் சமயத்தில் கடும் அர்ச்சனை நடக்கும். என்றாலும் இருவரும் எதையும் பொருட்படுத்தாமல் இருந்தனர். காதல் வேகத்தில் படிப்பில் கவனம் குறைந்ததை ரமணன் அவ்வளவாக கவனிக்கவில்லை. எத்ரிபாராத விதத்தில் ப்ளஸ் டூவில் எழுநூறு சொச்சம் மார்க் தான் எடுத்தான். கவிதா ஆயிரத்தைத் தாண்டியிருந்தாள். எப்படியும் அவளுக்கு மெடிக்கல் சீட் கிடைத்துவிடும் என்று பேசிக்கொண்டார்கள்.

ரிசல்ட்டுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வருவதைக் குறைத்துக் கொண்டாள் கவிதா. அவளுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கக்கூடாது என்று கோவில்களில் முறையிடத் தொடங்கியிருந்தான் ரமணன். ஓரிரு முறை அவனைச் சந்தித்தாலும் இதற்கு முன் எதுவுமே நடக்காதது போலவும் தான் அவனுக்கு வெறும் தோழி தான் என்பது போலவும் பேசினாள் கவிதா. ஒரு கட்டத்தில் இவளும் நிரந்தரமில்லாதவள் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவன் பதற்றமடையத் துவங்கி இருந்தான். ஒருவேளை அவள் மெடிக்கல் சீட் கிடைத்து சென்று விட்டால் கூடப் படிக்கும் எவன் கூடவோ அவள் பழகத் தொடங்கிவிடுவாள் என்ற எண்ணம் அவனை தாக்கத் தொடங்கியது.

எப்படியாவது இம்ப்ரூவ்மென்ட் எழுதி நல்ல மார்க் எடுத்து தானும் மெடிக்கல் சீட் வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தான். என்றாலும் என்ன காரணத்தினாலோ கவிதாவுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை. என்ட்ரன்ஸ் எக்சாமில் மார்க் குறைவாக எடுத்துஎடுத்தால் கட் ஆப் குறைந்து அவளுக்கு மெடிக்கல் சீட் வாய்ப்பு பறிபோனது. விஷயம் தெரிந்த ரமணன் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான். தன்னை உதாசீனப்படுதியவளுக்கு இது சரியான தண்டனை என்று நினைத்துக்கொண்டான். முகத்தில் ஒரு நிரந்தரப் புன்னகை குடியேறியது.

கவிதாவுக்கு முன்பு விண்ணப்பித்திருந்த புதுக்கோட்டை அரசு கல்லூரியில் பாட்டனி சீட் கிடைத்தாலும் போக மாட்டேன் என்று அடம்பிடித்து விட்டாள். அவளால் அவமானத்தைத் தாங்க முடியவில்லை. அவள் வீட்டில் மேலும் வற்புறுத்தாமல் விட்டு விட்டனர்.

திரும்பவும் கவிதா வீட்டு ஜன்னல் திறக்கத் தொடங்கியது. என்றாலும் ரமணன் அந்தத் திட்டில் ஒருபோதும் அமரவில்லை. புதுப்புது நண்பர்களுடன் அவன் ஊரெங்கும் சுற்றித் திரிந்தான். அவ்வப்போது புதுக்கோட்டைக்கு சென்று வெஸ்ட் தியேட்டரில் ஆங்கில ஆபாசப் படங்கள் பார்த்து வந்தான். பெண்களைப் பற்றிப் பேசக்கூடிய நண்பர்களிடம் நெருங்கினான். வாணி தியேட்டர் செல்லும் வழியில் உள்ள கட்டைச் சுவரொன்றின் மீது அவனை விடப் பெரியவயது ஆட்களுடன் உட்கார்ந்து ரமணன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததாக அவன் அப்பாவிடம் சிலர் சொன்னார்கள்.

அந்த நேரத்தில் தான் கிருஷ்ணன் ஸார் அவன் இருக்கும் ப்ளாக்கில் குடி வந்தார். கலெக்டர் ஆபீசில் பெரிய உத்தியோகம். அவர் மனைவி பட்டணத்தில் வளர்ந்தவள். நல்ல நீண்ட சுருள்முடியுடன் இடுப்பில் மடிப்புடன் வளைய வந்த அவளை ஹவுசிங் யூனிட்டின் கண்கள் வெறித்துக்கொண்டே இருந்தன. தொப்புள் சற்று தெரியும் வண்ணம் எடுப்பாக சேலை கட்டும் அவளை ரமணனும் கவனிக்காமல் இல்லை. என்றாலும் மனதின் ஒரு ஓரத்தில் இன்னும் கவிதா இருப்பதால் அவளைக் கண்டுகொள்ளாமல் இருந்தான். கிருஷ்ணன் ஸார் பல சமயம் ஆபீஸ் வேலைக்கென வெளியூர் சென்று விடுவார். ஒரு முறை வீட்டில் யாரும் இல்லாத போது கிருஷ்ணன் ஸார் மனைவி பழைய பேப்பர் இருக்கிறதா என்று கேட்டு ரமணன் வீட்டுக்கு வந்தாள். அதற்கு முன் அவ்வளவு கவர்ச்சிகரமானப் பெண்ணை அருகில் பார்திரார்த்த ரமணன் அவள் அங்கு இருந்த ஐந்து நிமிடத்துக்குள் அத்தனைப் பதற்றம் அடைந்தான். அவள் அவன் கை தொட்டுப் பேசியது அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு முறை வடகரை முருகன் கோவில் தெப்பக் குலத்துக்கு அருகே சைக்கிளில் சென்ற போது பின்னாலேயே கவிதா சைக்கிள் மிதித்துக்கொண்டு வந்ததை கவனித்து நின்றான். நெருங்கி வந்த அவளின் கண்கள் கலங்கியிருந்தன. தன்னுடன் இனிமேல் பேசமாட்டானா என்று அவனிடம் கேட்டாள். தனக்கு எதிலும் பிடிப்பில்லை என்று அவளுக்கு பதில் சொன்னான் ரமணன். என்றாலும் தான் அவளை மறந்து விடவில்லை என்றான். அவள் திரும்பவும் வந்து பேசியதில் மகிழ்ச்சி என்றாலும் உடனே அவளுடன் பழகி விடக்கூடாது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். மெடிக்கல் சீட் கிடைத்துத் தன்னை விட்டுப் பிரிய அவள் தயாராய் இருந்ததை அவன் மறக்கவில்லை. இன்னொரு நாள் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். அவன் போய் வெகு நேரம் வரை சைக்கிளின் ஹேண்டில்பாரை நிமிண்டியபடி கவிதா அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.

ஒரு நாள் அவன் அம்மா கோவிலுக்கு சென்று இருந்த சமயத்தில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தாள் மெல்லிய நைட்டியுடன் கிர்சுஷ்ணன் ஸார் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் பார்வை இவனது சட்டை போடாத உடம்பின் மீது இருந்தது. வீட்டில் போரடித்ததால் ஏதேனும் பட கேசட்டுகள் கிடைக்குமா என்று கேட்டாள். தங்கள் வீட்டில் வி.சி.ஆரே இல்லை என்று ரமணன் சொன்ன போது ஆச்சரியத்துடன் சிரித்தவள் அதற்குப் பிறகும் போகாமல் நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். இந்த வயதில் என் படிக்காமல் இருக்கிறான் என்று உரிமையுடன் கண்டித்தாள். ரமணன் உள்ளே சென்று சட்டை போட்டு வருகையில் அவள் ஹாலின் சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவனை அருகில் அழைத்து படங்களில் இருப்பவர்கள் யார் யாரேன்றுக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் கை இவன் தோள்பட்டை மீது இருந்தது. ரமணனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் மெத்தென்ற அவள் உடல் அவன் மீது உராய்ந்தது பிடித்திருந்தது. சற்று நேரத்தில் அவள் அவன் உடலை அனைத்துக் கொண்டிருந்தாள். மயக்கத்துடன் அவள் இடுப்பை அவன் பிடிக்கையில் கிருஷ்ணன் ஸார் மனைவி அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டாள். வெகு நேரம் கழித்து தான் அவர்கள் எழுந்தார்கள்.

திரும்பவும் அவன் உதட்டில் அழுந்த முத்தமிடும் போகும் போது கதவு தட்டப்பட்டது. அவள் பதறாமல் அவனை மீண்டும் அணைத்து இன்னொரு முத்தம் தந்தாள். கதவைத் திறந்த போது வெளியே மாடிப் படிக்கட்டின் மேற்படியில் கைப்பிடி சுவரைப் பிடித்துக்கொண்டு கவிதா நின்று கொண்டிருந்தாள். கிருஷ்ணன் ஸார் மனைவி அவளிடம் 'நல்லா இருக்கியாம்மா?" என்று கேட்டு விட்டு சாவதானமாக மாடியேறிப் போய்விட்டாள். க���ிதா இவனைப் பார்க்காமல் வெளியில் எங்கோ பார்த்துகொண்டு நின்றாள்.பின் மெல்ல இறங்கி கீழே போய்விட்டாள். ரமணன் அவளை கூப்பிடவே இல்லை. ஒரு கையில் தாவணியின் நுனியைத் திருகிக் கொண்டே தன் ப்ளாக்குக்கு நடந்து செல்லும் அவளைப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தான். சுவாசத்தில் கிருஷ்ணன் ஸார் மனைவியின் அக்குள் வாசனை சுழன்றுகொண்டிருந்தது.

அடுத்த நாள் எல்லோரும் வெளியில் சென்று விட்ட பகல் நேரத்தில் கவிதா உத்தரத்தில் தொங்கினாள். ரமணன் புதுக்கோட்டையில் படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது அவசரமாக சென்று கொண்டிருந்த ராமையா விஷயத்தை சொன்னான். அழுது பிடித்து பேருந்தில் ஏறி ரமணன் ஊர் வருமுன்பே கவிதாவை எடுத்து விட்டிருந்தார்கள். போஸ்ட்மார்ட்டம் போலீஸ் பிரச்சனைகளை சமாளிக்க அவள் அப்பா யாரையோ பிடித்து ஏற்பாடு செய்து விட்டிருந்தார். ரமணன் சுடுகாட்டுக்கு சென்றபோது கவிதாவின் இதயம் பற்றி எரியத் தொடங்கி இருந்தது. அதன் பிறகு ரமணன் வீட்டில் தங்கிய நாட்கள் அரிதாகின. புதுக்கோட்டை, திருச்சி தஞ்சாவூர் என்று எங்கெங்கோ திரிந்துகொண்டிருந்தான். செலவுக்கு என்ன செய்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை. அவனுக்கு பாக்கெட் மணி தருவதை அவன் அப்பா எப்போதோ நிறுத்தியிருந்தார். சில வருடம் கழித்து அவன் சித்தப்பா அவனை மதுரையில் உள்ள தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். அவனுக்கு அங்கு ஒரு டெலிபோன் பூத் ஒன்று வைத்துத் தருவதாக சொன்னார். வீட்டில் சில சண்டைகள், அழுகைகள் அரங்கேறியப் பின் மதுரைக்கு பஸ் ஏறினான்.

தினமும் சாப்பிட்டுவிட்டு மூன்று தெருக்கள் தள்ளி இருக்கும் அந்த பூத்துக்கு சைக்கிளில் செல்வான் ரமணன். காலை ஏழு மணிக்கு சென்றால் இரவு பத்துப் பத்தரை ஆகி விடும். மதியம் ரம்யா கேண்டீனில் சாப்பிட்டு விடுவான். சித்தப்பா கலெக்டர் ஆபீசில் இருந்து திரும்பும் வழியில் எப்போதாவது கடைக்கு வருவார். அதிகம் பேசமாட்டார். இவன் சிகரெட் பிடிப்பது தெரிந்தும் அதைப் பற்றி கேட்கமாட்டார்.ரமணன் பிறந்த சமயத்தில் தான் அவருக்கு வேலை கிடைத்தது. அதனால் இவன் மீது பிரியமாக இருப்பார். வேலை நேரம் அதிகம் இருந்தாலும் ரமணனுக்கு அந்த இடம் பிடித்தமானதாக இருந்தது. கடை குடியிருப்புப் பகுதியிலேயே இருந்தது. மூன்று தெருக்கள் சந்திக்கும் முனையில் பூத் இருந்ததால் நிறையப் பேர் போன் பேசவென்று வருவார்கள். வெளியூரில் வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களிடம் பேச நிறைய பெண்கள் வருவார்கள். நண்பகல் நேரங்களில் தெருக்களில் பெண்களே அதிகம் தென்படுவார்கள். கிருஷ்ணன் ஸார் மனைவியின் உடல் ஸ்பரிசம் தந்திருந்த மயக்கம் கொஞ்ச நாட்களாகவே தலை தூக்க ஆரம்பித்தது.அவனது மீசை தனது வளர்ச்சியில் முழுமை கண்டிருந்தது.

வீட்டில் வேலை செய்து விட்டு வருவதால் உடை விலகுவதில் அவ்வளவாக கவனம் கொள்ளாத நடுத்தர வயது பெண்களின் உடல்களை அவர்கள் போன் பேசும்போது ரசிக்கத் தொடங்கினான். முக்கியமாக மகேஸ்வரி. மாநிறம் என்றாலும் நெடுநெடு வென்ற உயரமும் நிற்கும் மார்பகங்களும் அவள் வரும்போதெல்லாம் ரமணனை கிளர்ந்தெழச் செய்தன. அவள் கணவன் ரியாத்தில் இருந்தான். இரண்டு குழந்தைகள். பெரியவளுக்கு ரமணனை விட ஐந்தாறு வயது கம்மியாக இருக்கும். ரமணன் அவளிடம் கேலியாகப் பேசுவான். அவளும் அடிக்கடிக் கடைக்கு வர ஆரம்பித்தாள். தெருவில் ஆளில்லாத பகல் பொழுதொன்றில் அவள் போனில் பேசும்போது ஸ்டூலில் உக்கார்ந்து கொண்டு நின்று கொண்டிருக்கும் அவள் சேலைக்குள் கால் விட்டு அவள் கால்களை வருடினான். அவள் பேசி முடிக்கும் வரை வருடிக்கொண்டே இருந்தான். சில நாட்கள் கழித்து அவர்கள் இருவரும் தங்கம் தியேட்டரில் பாம்பே படம் பார்த்துக்கொண்டிருந்ததை அந்தத் தெருக்காரர் ஒருவர் பார்த்தார்.

சித்தப்பாவுக்கு விஷயம் தெரிய பல நாட்கள் ஆகியிருந்தன. அதற்குள் அந்தத் தெருவில் உள்ள வி.ஏ.ஓ மனைவி பத்மா, மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்டில் பழக் கடை வைத்திருந்த பழனிச்சாமி மனைவி பிருந்தா ஆகியோரின் உடல் வாசனையை நடமாட்டம் இல்லாத பகல் நேரத்தில் அவர்கள் வீடுகளிலேயே நுகர்ந்து கொண்டிருந்தான் ரமணன். கடை அடிக்கடி பூட்டப்பட்டிருப்பதை பார்த்த தெருக்காரகள் அவன் சித்தப்பாவிடம் தகவல் சொன்னார்கள். அப்போதும் அவன் மீது அவர் சந்தேகப் படவில்லை. சுற்றித் திரிந்த வயசுப் பையன். எத்தனை நேரம் தான் கடையில் உட்கார்ந்துகொண்டிருக்க முடியும் என்று நினைத்தார். கடையில் இவனுக்கு உதவியாக சின்னப் பையன் ஒருவனை உட்கார வைத்தார். ரமணனுக்கு இது வசதியாகப் போய் விட்டது. பகல் வேலைகளில் ஏதாவது ஒரு வீட்டில் திமிறும் உடல்களிருந்து சேலைகளை அவன் அவிழ்த்துக் கொண்டிருந்தான். மெல்லிய உடல்களில் தன்னைப் புதைத்துக் கொள்ளும்போது மனதை அழுத்தும் பாரம் கரைந்து தன்னிலிருந்து இறங்கி வழிவது போல் உணர்ந்தான். வாழ்வில் இழந்தவைகளை அந்த ஸ்பரிசமும் கிசுகிசுப்பாக காதில் வருடும் காமக் குரல்களும் ஈடுகட்டுவது போல் இருந்தது. நிரந்தரம் தற்காலிகம் பற்றி மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் தர்க்கம் அந்தப் பெண்களின் அக்குள்களுக்குள் புதைந்து பல நாட்களாகி இருந்தன.

ஒரு முறை பழனிச்சாமி கடையை அவசரமாகப் பூட்டி விட்டு ஏதோ வேலையாக வீட்டுக்கு வந்தபோது ரமணன் ஹாலில் சோபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு சற்று முன்னர் தான் பிருந்தா அவன் தலையை வருடி விட்டு குடிக்க ஏதாவது எடுத்து வர சமையலறை சென்றிருந்தாள். தன் கணவன் இவனிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவன் டி.வி மெக்கானிக் என்றும் தான் தான் அழைத்ததாகவும் பிருந்தா கூறினாள். என்றாலும் தன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து ஒரு பையன் டி.வி பார்த்துக் கொண்டிருந்ததை பழனிச்சாமியால் ஜீரணிக்க முடியவில்லை. இவனை வேறெங்கோ பார்த்தது போல் அவனுக்கு நினைவுக்கு வந்தது. கடைக்குத் திரும்பிய ரமணன் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான். அடிக்கடி வெளியே எழுந்து போய் சிகரெட் குடித்து வந்ததை கடைப் பையன் கவனித்துக் கொண்டிருந்தான். பழனிச்சாமி தன்னை சந்தேகமாகவும் ஆத்திரத்துடன் பார்த்தது ரமணனுக்கு திரும்பத் திரும்ப நினைவில் வந்து கொண்டிருந்தது.

சித்தப்பாவிடம் ஊருக்கு சென்று கொஞ்சநாள் இருந்து விட்டு வருவதாகச் சொன்னான். அவர் மறுக்கவில்லை. அறந்தாங்கி வந்தபோது தன் வயதையொத்த யாரும் ஊரில் இல்லை என்று அறிந்துகொண்டான். பனிரெண்டாம் வகுப்பில் தவறிய அப்பாஸ், எப்போதோ படிப்பை விட்டு விட்ட சரவணன் போன்ற சிலர் மட்டும் உள்ளூரில் அங்கங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் எங்கெங்கோ படித்துகொண்டும் சிலர் வேலை கிடைத்து சென்று விட்டதையும் அவர்களின் பெற்றோர்கள் பீற்றிக்கொள்வதாக ரமணன் அம்மா அவனிடம் சொன்னாள். அவனும் நன்றாகப் படித்திருந்தால் நல்ல நிலைமைக்கு வந்திருக்கலாமே என்று அழுதாள். ரமணனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை.

கொஞ்ச நாட்களிலேயே மதுரைக்குக் கிளம்பி விட்டான். பஸ்ஸில் வரும் போது கொஞ்ச காலமாக நினைவுக்கு வராத அந்த எண்ணம் திரும்ப வந்தது. அந்த மதிய வெயில் பயணத்தின் போது வந்த அரைகுறைத் தூக்கத்தில் விசித்திரமான கனவுகள் வந்தன. தன்னை சார்ந்த யாரோ நிரந்தரமில்லாத நபர் என்ற நினைப்புத் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டிருந்தது. அது யாரென்று சரியாக கணிக்க முடியவில்லை. முகம் வைக்கும் கறுப்புத் துணியால் போர்த்தப்பட்டிருந்த ஒரு உடல் மீது அம்மா புரண்டு அழுவது போல் கனவு வந்து திடுக்கிட்டு விழித்த போது பஸ் மதுரையை அடைந்திருந்தது. பஸ் நின்றதும் அது வரை உள்ளே வீசிக் கொண்டிருந்த காற்று நின்று சட்டென வெக்கை உறைந்தது.

சித்தப்பாவுக்கு பிருந்தா விஷயம் தெரிந்து விட்டது போல இவனுக்குத் தோன்றியது. அவர் சரியாகப் பேசவில்லை. கடைக்கு வந்தால் வரவு செலவைக் கூட அந்தப் பையனிடமே கேட்டு விட்டு இவனிடம் சொல்லாமல் செல்ல ஆரம்பித்தார். என்றாலும் அவர் வீட்டில் அவனுக்கான இடம் அப்படியே தான் இருந்தது. காலையிலும் இரவிலும் வழக்கம் போலவே அவனுக்கு சாப்பாடு போட்டாள் சித்தி. அவனிடம் முகம் கோணி யாரும் பேசவில்லை. என்றாலும் சித்தப்பா முன்பு போல் இவனிடம் பேசவில்லை என்பது உறுத்த ஆரம்பித்தது.

இறக்கங்களில் மிதிக்கமலேயே சுழன்று ஓடும் சைக்கிள் சக்கரங்களைப் போல் தன்னிச்சையாக இயங்கிக்கொண்டிருந்தான் ரமணன். முன்பு போல் கடைக்கு செல்வதில்லை. கடைக்கு வந்தாலும் வெளியில் வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்காவது சென்று விடுவான். அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பான். நிரந்தரமில்லாமல் போய் விடவிருக்கும் தன்னை சார்ந்த ஆள் யாரென்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. தன் நண்பர்களில் யாரும் அத்தனை எளிதாக தோற்று விடக் கூடியவர்கள் இல்லை என்று நினைத்துக்கொண்டான். அவன் அப்பா அரசு ஊழியர். கண்டிப்பானவர் அவர் அவ்வளவு சீக்கிரம் அறுந்து விடக்கூடிய அளவுக்கு நூலிழைத் தொடர்பா அவருடன் என்று தோன்றும். அவராக இருக்க வாய்ப்பில்லை என்று சமாதனம் செய்துகொண்டான். தான் சிறுவனாக இருந்தபோது என்ன கேட்டாலும் வாங்கித் தந்த அப்பாவைப் பல வகைகளில் ஏமாற்றியதாகக் குற்றவுணர்வு கொண்டான்.பல வருடம் கழித்து அவர் மீது பாசம் தோன்றியது.

திரும்பி வரும்போது நகரப் பேருந்தில் நெரிசலாக இருந்தது. நடுத்தர வயது பெண் ஒருத்தி இவன் பக்கத்தில் வந்து நின்றாள். பேருந்து ஓட்டத்தில் ப்ரேக் பல முறை விழ அவன் அவள் உடல் அருகில் நெருங்கியிருந்தான். மெல்ல அவளுக்குத் தெரியாதவண்ணம் உரசிக்கொண்டே வந்தாலும் அவள் ஒன்றும் செய்யாதவளாக நின்றுகொண்டே இருந்தாள். மெல்ல தைரியம் வரப்பெற்று உடலோடு ஒட்டினான். பஸ்சின் இயக்கமும் குலுங்கலும் இவனுக்கு சாதகமாக அவன் மேலும் அவளை நெருக்கினான். அந்தப் பெண் முகத்தை முந்தானையால் அடிக்கடித் துடைத்துக் கொண்டாலும் அங்கிருந்து நகரவில்லை. ஒரு நிறுத்தத்தில் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அவள் இறங்கி சென்று விட்டாள். ரமணனுக்கு சுகத்தின் மெல்லிழை சட்டென அறுந்தது போல் இருந்தது. அவன் உடலெங்கும் அதிர்ந்தது. கிருஷ்ணன் ஸார் மனைவியிலிருந்து பிருந்தா வரை அவனுக்கு நினைவுக்கு வந்தார்கள். பஸ்ஸில் இருந்து இறங்கியதும் நேரே பிருந்தா வீட்டுப் பக்கம் சென்று பார்த்தான். மணி மூன்றரை ஆகியிருந்தது.

வீட்டில் யாரும் இல்லாதது போல் இருந்தது. உள்பக்கம் தாழிடப்பட்ட கதவைத் தட்டினான். உள்ளிருந்து பதில் இல்லை. உடல் எப்போதும் இல்லாதவாறு நடுங்கிக் கொண்டு இருந்தது. ஏதோ முடிவுடன் திரும்ப செல்ல மனமின்றி அங்கேயே நின்றுகொண்டிருந்தான். திரும்பவும் தட்டினான். சில நிமிடங்களில் தூங்கி எழுந்த முகத்துடன் பிருந்தா கதவைத் திறந்தாள். அவனை உள்ளே வரச் சொன்னாள். கதவை சாத்தியதும் அவளைக் கட்டியணைத்தான். தன் கணவன் வெளியூர் சென்றிருப்பதாகவும் பல முறை அவனை அழைக்க கடைக்கு வந்தும் அவன் அங்கு இல்லை என்று அவள் சொன்னாள். அவன் முகமெங்கும் முத்தமிட்டு சரிந்தாள்.ரமணன் அவள் உடல் மீது வெறியுடன் இயங்கத் தொடங்கினான்.

திடீரென்று கதவை யாரோ வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டது. தன் செருப்பை வீட்டுக்கு வெளியே விட்டு வந்ததது நினைவுக்கு வர ரமணனுக்கு உடல் பதறியது. சட்டென எழுந்து உடைகளைப் பொறுக்கினான். பிருந்தா உதட்டில் கைவைத்து பேசாமலிருக்கும்படி சைகை காட்டினாள். பழனிச்சாமி 'கதவைத் திற பிருந்தா' என்று கத்தினான். ரமணனுக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. பின்புற வழியே சென்றால் பின் வீட்டுக் காரர்கள் யாரேனும் பார்த்து விட வாய்ப்ப்பிருக்கிறது. என்ன செய்வது என்று இருவரும் நின்றுகொண்டிருக்கையில் தாழ்ப்பாளை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தான் பழனிச்சாமி. திடீரென்று நெருப்பின் பிழம்பு இருட்டில் எறிவது போல் ரமணனுக்குத் தோன்றியது. பழனிச்சாமி கையில் பெரிய தடி ஒன்று இருந்தது. அவன் உள்ளே நுழைந்ததும் அலறிக்கொண்டு பிருந்தா கதவருகில் ஓடினாள். ரமணனுக்கு இது கனவாக இருக்கக் கூடாதா என்று தோன்றியது. கால்கள் கட்டுண்டு விட்டதைப் போல் நகர முடியாமல் ஸ்தம்பித்து நின்றான். பழனிசாமி பிருந்தாவை ஓங்கி உதைத்துத் தள்ளிவிட்டு இவனருகில் வந்து நின்றான். காண நேரம் இவனைப் பார்க்கையில் அவன் கண்களில் ஓடிய ரத்த வரிகள் துடித்தது ரமணனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவன் கட்டையை ஓங்கி ரமணன் தலையில் அடித்தான். தடுக்க தூக்கிய கைகளில் அடி விழுந்துகொண்டே இருந்தது. தலையில் இருந்து ரத்தம் வழிந்து அவன் முகம் சிகப்பாகி கீழே விழும்வரை அடித்துக்கொண்டே இருந்தான். உடலில் அசைவு நிற்கும் வரை அடித்துவிட்டு அவனை காலால் புரட்டிப்போட்டான் பழனிச்சாமி. வழிந்து சென்ற ரத்தம் கட்டில் காலை சுற்றி சற்றுத் தேங்கி பின் மேலும் பரவிக் கதவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

தன் நினைவில் சமீப காலமாக வந்து கொண்டிருந்த நிரந்தரமில்லாத நபர் தான் தான் என்பதை உணர்ந்துகொள்ளும் முன்னரே இறந்து விட்ட ரமணனுக்கு அப்போது இருபத்தி மூன்று வயது தான் ஆகியிருந்தது.


-வல்லினம் இணைய இதழில் வெளியான சிறுகதை