Friday, January 10, 2014

கலையின்மீது குவியும் மன வெளிச்சம்

இன்று மாலை மயிலாப்பூருக்கு வேறெதோ வேலைக்காக சென்றபோது கபாலீஸ்வரர் கோயில் பக்கம் போகலாமே என்று தோன்றியது. உள்ளே மஞ்சள் விளக்கொளியில் கடவுளர்களின் சந்நிதிக்கு முன்னால் சின்ன சின்ன கூட்டம். அதிக கூட்டமில்லாத கோயில்கள் தான் ஆன்மாவுக்கு மிக நெருக்கமானவை. ஒவ்வொரு பிரகாரத்திலும் கொஞ்ச நேரம் நின்று நகர்ந்தபோது கபாலீஸ்வரர் சந்நிதிக்குள் இருந்து ஒரு குரல் தமிழில் பாடிக் கொண்டிருந்தது. உள்ளே செல்லாமல் நடைபாதையிலேயே நின்றுகொண்டு அதைக் கேட்க கேட்க மனம் லேசானது.  அந்தக் குரல் தந்த அமைதியுடன் உயர்த்திய பார்வையில் ஓங்கி நின்ற கோபுரம் பட்டது. மேகங்களற்ற மெல்லிய நீல நிற வானத்தின் பின்னணியில் கோபுரத்தில் உறைந்திருந்த சிற்பங்களின் அடர்த்தி மனதை அள்ளியது. 
கோயிலுக்குள் நுழைந்த போதே வலது புற மூலையில் சின்னதாக மேடை  அமைத்து அதில் சில இளம்பெண்கள்  பரதம் ஆடிக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது. இப்போது அதை நோக்கி சென்றோம். ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடனக் கலைஞர் தனது அடுத்த நடனத்தின் பின்னணி பற்றி ஆங்கிலத்தில் விவரித்துக் கொண்டிருந்தார். இங்கே எதற்கு  ஆங்கிலம் என்று லேசான எரிச்சல் வந்தது. அப்போது தான் கவனித்தேன். இந்திய உடைகளில் பத்து பதினைந்து வெளிநாட்டுப் பெண்கள் காலை மடக்கி கழுத்தை உயர்த்தி மேடை மீது பார்வையைப் பதித்துக் காத்திருந்தனர்.
நடனக் கலைஞரின் தலைமுடி  போலியானது என்று தெரிந்தது. பேசும் பாணியிலும்  உடல்மொழியிலும் பெண்மை மிளிர்ந்தது. பின்னர் அவர் மேடைக்கு வந்து ஆடத் தொடங்கினார். பின்னணியில் ஒருவர் ஜதி சொல்ல, அழகான குரலில் ஒரு பெண் பாடினார். வீணை, மிருதங்கத்துடன் அவ்வப்போது உடுக்கையும் ஒலித்தது. அதை வாசித்தவர் சங்கு மற்றும் மணி போன்ற ஒலிக்கருவிகளையும் இசைத்தார். நடனக் கலைஞர் நல்ல தேர்ச்சி பெற்றவர். சிவ நடனத்தை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார். இசையும், நடனமும் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனதில் தானாக உருக்கொண்டு வளர வளர அங்கே கலையின் ஆன்மா மேடையிலும் அதைச் சுற்றிலும் சூல்கொண்டது. நடனம் முடிவுபெறும் தருணம் யாரும் சொல்லாமலேயே அனைவருக்கும் விளங்கியது. நடனக் கலைஞர் தனது கடைசி முத்திரையைக் காட்டியபடி நடனத்தை முடிக்கும் தருணத்தில் கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது. ஆத்மார்த்தமான மகிழ்ச்சியுடன் நடனக்கலைஞர் மேடையிறங்கினார்.
அடுத்து நான்கு இளம்பெண்கள் மேடைக்கு வந்தனர். கல்லூரி மாணவிகளாக இருக்க வேண்டும். அவர்களது நண்பர் குழாம் கையில் விலை உயர்ந்த கேமரா, புத்தக அளவிலான டேப்லேட்டுகளுடன் நடனத்தைப் பதிவு செய்துகொண்டும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டும் இருந்தனர். ஆர்வ மிகுதியில் நண்பர் குழாம் பரபரப்புடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஒரு பெண்மணி செல்லக் கண்டிப்புடன் கைகளை மேலும் கீழும் ஆட்டி அமைதியாக இருக்குமாறு புன்னகையுடன் சைகை காட்டினார். தலையாட்டியபடி மவுனமாக கவனிக்க ஆரம்பித்தனர் இளைஞர்கள். ஆடிய நால்வரில் ஒரு பெண்ணிடம் மட்டும் பாவம் சிறப்பாக வெளிப்பட்டது. பச்சை நிற பட்டு ஜொலிக்க புன்முறுவலான முகத்தில் பாவனைகள் மிளிர அழகாக ஆடினார். அதன் பின்னர் அந்த ஆண் நடனக் கலைஞர் சிவ-பார்வதியின் காஸ்மிக் நடனமான தாண்டவம் ஆடத் துவங்கினார். பார்வதியாக அனுபவம் வாய்ந்த ஒரு பெண்மணியும் ஆடினார். கூடவே கல்லூரி மாணவிகளும் ஆடினர். உடுக்கை ஒலிக்க உச்சபட்ச உத்வேகத்துடன் ஆடிய இருவரும் பார்வையாளர்களுக்கு கடவுளர் தம்பதிகளாகவே பட்டிருக்க வேண்டும். அவ்வப்போது கைதட்டல் எழுந்து அடங்கியது. அதன் பின்னரும் நடன நிகழ்ச்சி தொடர்ந்தது. எனினும் நிறைந்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினோம்.  
எந்தக் கலையாக இருந்தாலும் எந்த மேடையாக இருந்தாலும் கலைஞர்கள் அர்ப்பணிப்பான கலைவெளிப்பாட்டுடன் இயங்கினால் அந்தக் கலை  எத்தகைய பார்வையாளரையும் சென்றடையும், அதன் தாத்பரியம் தானே நிலைபெறும்  என்று நினைத்துக்கொண்டேன். மனிதர்களுக்கிடையில் கலை என்ற அம்சம் தோன்றியதன் நோக்கம் அது தானே!

1 comment:

  1. சிறப்பான பகிர்வு மோகன். பாராட்டுகள்.

    ReplyDelete