கலையின் பல வடிவங்கள் நம் வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. எனவே, கலைஞர்களின் இழப்பு ஏற்படுத்தும் பாதிப்பு மிக அதிகம். அதிலும் திரைக்கலைஞர்களின் மரணங்கள் ஆறாத வடுவை ஏற்படுத்திவிடுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடிகர் ராபின் வில்லியம்ஸ் இறந்தார். தற்போது, ரிச்சர்டு அட்டன்பரோ. ராபின் வில்லியம்ஸைப் போலவே இவரும் இந்திய ரசிகர்களுக்கு நெருக்கமானவர். ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் டைனோசர்களின் உலகை மீண்டும் படைக்கும் தொழிலதிபராக வெண் தாடி, கைத்தடி என்று நட்புணர்வு கொண்ட தாத்தாவாக அவர் நடித்த பாத்திரம் சராசரி இந்திய ரசிகரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்தியர்களுக்கும் அட்டன்பரோவுக்கும் இடையே அதையும் தாண்டி ஒரு வலுவான பிணைப்பு உண்டு. அவர் இயக்கிய ‘காந்தி’ திரைப்படம்தான் அது.
20 ஆண்டுகள் தவம்
“1960-களில் என்னிடம் ஒருவர் மகாத்மா காந்தியின் சுயசரிதையைக் கொடுத்து, ‘இவரைப் பற்றித் திரைப் படம் எடுப்பீர்களா?’ என்று கேட்டார். ‘இல்லை… எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லையே’என்றேன். ‘நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல்கொடுப்பவர் அல்லவா? உங்களால் கண்டிப்பாக முடியும். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்’என்று அவர் வற்புறுத்தினார். அதன் பிறகுதான் அந்த மனிதரின் கதையைப் படித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார் அட்டன்பரோ. அந்தப் புத்தகம், அமெரிக்க எழுத்தாளரான லூயிஸ் பிஷர் எழுதிய ‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை’. ‘காந்தி’ படத்தை எடுக்க அட்டன்பரோவைத் தூண்டியவர், மோதிலால் கோத்தாரி என்ற இந்தியர்.
ஒரு வரலாற்று நாயகரின் வாழ்க்கையை எப்படி திரைப்படமாக்குவது என்பதற்கு உதாரணம் அந்தப் படம். காந்தியின் கதையை இந்திய சுதந்திரம், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, அதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையின் வலி என்று கலைபூர்வமாக ஆவணப் படுத்தியிருந்தார் அட்டன்பரோ. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் உழைத்ததன் பலன் அது.
படத்தை இயக்க வேண்டும் என்று முடிவுசெய்தவுடன், பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனின் உதவியுடன் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவையும், இந்திராவையும் சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார் அட்டன்பரோ. “நேருவின் தாக்கம், ஆலோசனை, நம்பிக்கை ஆகியவற்றின் துணை இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது” என்று படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அட்டன்பரோ. அத்துடன் மோதிலால் கோத்தாரி, மவுண்ட்பேட்டன், நேரு ஆகிய மூவருக்கும் இந்தப் படத்தை அவர் சமர்ப் பித்திருக்கிறார்.
‘காந்தி’ படத்துக்காக அட்டன்பரோ பட்ட சிரமங்கள் கணக்கற்றவை. அந்தப் படத்தைத் தயாரிக்க ஹாலிவுட்டில் யாரும் முன்வரவில்லை. “இடுப்பில் துண்டுத் துணியுடன் தடியை ஊன்றிச் செல்லும் அந்த மனிதரின் கதையைப் படமாக எடுத்தால் யார் பார்ப்பார்கள்?” என்று ஒரு தயாரிப்பாளர் கேட்டாராம். ஒருகட்டத்தில் தனது சேகரிப்பில் இருந்த கலைப் பொருட்களை விற்று நிதி திரட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டாராம் அட்டன்பரோ. சமையல் எரிவாயு சிலிண்டருக்குப் பணம் கட்ட முடியாத அளவுக்குக் கடும் நிதி நெருக்கடியை அவர் சந்தித்தார்.
அர்ப்பணிப்பின் கலை
“ஒருவரது வாழ்க்கையை ஒரே கதையில் முற்றிலுமாகச் சொல்லிவிட முடியாது. ஒரு ஆவணத்தின் ஆன்மாவுக்கு உண்மையாக இருப்பதும், சம்பந்தப்பட்ட அந்த மனிதரின் இதயத்தை நோக்கிச் செல்வதற்கான பாதையைக் கண்டுபிடிப்பதும்தான் நமக்கு இருக்கும் சாத்தியங்கள்” என்றும் படத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார் அட்டன்பரோ. தனது வார்த்தைகளுக்கு ஏற்ப காந்தி எதிர்கொண்ட முக்கியமான தருணங்களை முடிந்தவரை ஆவணப்படுத்தியிருந்தார் அந்தப் படத்தில். கோட்சேயால் சுடப்பட்டு காந்தி இறப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களால் ரயில் பெட்டியிலிருந்து தூக்கியெறியப்படும் காந்தி, அந்த நிகழ்வின் தாக்கத்தை உணர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட உத்வேகம் பெறும் காட்சிதான் கதையின் தொடக்கப் புள்ளியாகவும் அமைந்தது. லூயிஸ் பிஷர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களை இயன்றவரை, நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்துவதிலும் அட்டன்பரோ வெற்றி பெற்றிருக்கிறார் என்று திரைப்பட ஆர்வலர்கள் குறிப்பிடு கின்றனர். காந்தியின் இறுதி ஊர்வலம் குறித்து பிஷர் எழுதிய வாசகங்களைத் திரையில் செறிவுடன் சித்தரித்திருந்தார் அட்டன்பரோ. ஜாலியன் வாலாபாக் படுகொலைக் காட்சி, அந்தக் கொடூரத்தின் உச்சத்தைப் பதிவுசெய்திருந்தது. ஜெனரல் டயரின் தலைமையில் வீதிகளைக் கடந்து சென்ற காவலர்களின் அணிவகுப்பை பிரம்மாண்டமாகவும் அதிர்வுடனும் அவர் பதிவுசெய்திருந்தார்.
பத்து வரலாற்று நூல்கள் ஏற்படுத்தாத விழிப்புணர் வையும் தாக்கத்தையும் ஒரு திரைப்படம் தந்துவிட முடியும் என்பதற்கு உதாரணமாக இந்தப் படம் அமைந்தது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை இந்தப் படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றதுடன், வணிகரீதியான வெற்றியையும் பெற்றது. காந்தியின் வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வையும், இந்த உலகுக்கு அவர் விட்டுச் சென்ற மகத்தான செய்தி யையும் பரப்பும் வகையில் மேற்கத்திய நாடுகளில் பல அறக்கட்டளைகளும் நிறுவனங்களும் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகவும் இந்தப் படம் அமைந்தது. 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த நடிகர் (பென் கிங்ஸ்லி), சிறந்த இயக்குநர் உட்பட மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. ஒரு இயக்குநராக ஒருவர் பெறும் அதிகபட்ச வெற்றிகளை அந்த ஒரு படத்திலேயே பெற்றார் அட்டன்பரோ.
“நம் தேசத் தந்தையைப் பற்றிய திரைப்படம் எடுக்க, நம்மை ஆண்ட பிரிட்டனிலிருந்துதான் ஒருவர் வரவேண்டியிருந்தது” என்ற ஆற்றாமையுடன் கூடிய சுயவிமர்சனத்தை இந்தியர்களிடையே ஏற்படுத்திய படமாக ‘காந்தி’ அமைந்தது. “காந்தியை ஹாலிவுட் பார்வையில் பதிவுசெய்த படம் என்றுதான் முதலில் எனக்குத் தோன்றியது. என்றாலும், ஆப்பிரிக்காவின் பல போராளிக் குழுக்கள், இந்தப் படம் தங்களுக்கு மிகுந்த தாக்கத்தையும் போராட்ட வழிமுறையையும் தந்ததாகக் குறிப்பிட்டது முக்கியமான விஷயம்” என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குறிப்பிட்டார். அட்டன் பரோவின் மற்றொரு இந்தியத் தொடர்பு சத்யஜித் ராய் இயக்கிய ‘சத்ரஞ்ச் கே கிலாடி’ படம். 1857-ல் நடந்த சிப்பாய்க் கலகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஆங்கிலேய ராணுவ அதிகாரியான ஜெனரல் அவுட்ரம் பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
ஒடுக்கப்பட்டோருக்காக ஒலித்த குரல்
காந்தியின் வாழ்க்கையைப் படமாக்கியது போலவே, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய ஸ்டீவ் பீக்கோ என்ற கருப்பினப் போராளியின் வாழ்க்கை வரலாற்றை ‘க்ரை ஃப்ரீடம்’ (1987) என்ற படத்தில் ஆவணப்படுத்தியிருந்தார் அட்டன்பரோ. ஸ்டீவ் பீக்கோ பாத்திரத்தில் நடிகர் டென்சல் வாஷிங்டன் நடித்திருந்தார். அந்தப் படமும் வணிகரீதியான வெற்றியையும் விமர்சனரீதியான வரவேற்பையும் பெற்றது. நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்காக ஒலித்த குரல்களில் அட்டன்பரோவின் குரலும் ஒன்று.
பிரிட்டிஷ் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ‘தி கிரேட் எஸ்கேப்’ மூலம் ஹாலிவுட்டிலும் புகழ்பெற்ற அட்டன்பரோவுக்கு ஒருகட்டத்தில், ‘பிறரது கற்பனைகளுக்கு ஏற்ப நடிப்பதில்’ ஒரு வெறுமை ஏற்பட்டது. அதுதான் அவரை ஒரு இயக்குநராக்கியது. பல படங்களை இயக்கியும் தயாரித்துமிருக்கும் அட்டன் பரோ பிரிட்டனின் உயரிய விருதுகளைப் பெற்றவர். உயர் பதவிகள் பலவற்றிலும் இருந்தவர். எனினும், அதிகார மட்டத்தில் இருந்துகொண்டே அதன் அத்துமீறல்கள் குறித்து கேள்வி எழுப்பியவர். தனது சாதனைகள் மற்றும் வாழ்வு மூலம், திரைக் கலைஞர் என்ற வார்த்தையை மரியாதைக்குரியதாக மாற்றியவர் என்ற அடையாளம் அட்டன்பரோவுக்கு என்றும் நிலைத்திருக்கும்.
தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை.
தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை.