Sunday, November 9, 2014

சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்


ஸ்ரீதர் இயக்கிய ‘சிவந்த மண்' திரைப்படத்தின் இந்திப் பதிப்பான ‘தர்த்தி' 1970-ல் வெளியானது. ராஜேந்திர குமார், வஹீதா ரஹ்மான் நடித்த அந்தப் படத்தில் புரட்சி வீரனாக, கவுரவ வேடத்தில் சிவாஜி தோன்றினார். இந்தப் படம்குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று உண்டு. படம் வெளியான அன்று பம்பாயில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாம். அதைக் குறிப்பிட்டு சிவாஜியிடம் ராஜேந்திர குமார் சொன்னாராம், “உங்கள் நடிப்பைப் பார்த்து பம்பாயே நடுங்கிவிட்டது!”
சிறிய வேடம் என்றாலும் சிவாஜியின் ‘திரை வீச்சு' (ஸ்கிரீன் பிரெசன்ஸ்) அத்தனை கம்பீரமானது. அதனால்தான், இன்றும் கம்பீரமான பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சிவாஜியுடன் ஒப்பிடப்பட்டே மதிப்பிடப்படுகிறார்கள்.
சிவாஜியின் நடிப்பு நிச்சயம் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல. மற்றவர்கள் இயல்பாக வசனம் பேசும் காட்சிகளில், அதீத உணர்வுடனும் அழுத்தமான உச்சரிப்புடனும் திரையில் தனிக் கவனம் பெறும் அவர் மீது காத்திரமான விமர்சனங்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் மீறி, அற்புதமான தன் நடிப்புத் திறனால், பல படங்களின் வெற்றியை உறுதி செய்தார் சிவாஜி. தன்னை விட அதிக வயதுள்ள நாயகர்கள் இளைஞர்கள் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் 13 குழந்தைகளுக்குத் தந்தையாக நடிக்கும் துணிச்சலை வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ‘திருவருட்செல்வர்' தொடங்கி எத்தனையோ வயோதிகப் பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியதில்லை.

வேறென்ன செய்ய முடியும்?

உண்மையில், நடுத்தர மற்றும் சற்றே வயதான வேடங் களில் நடித்தபோது சிவாஜியிடம் கம்பீரமும் மிடுக்கும் கூடியிருந்ததைப் பார்க்க முடியும். ‘தெய்வமகன்' படத்தின் புகழ்பெற்ற அந்த கோரமுக மகன் பாத்திரத்தைவிடத் தந்தை பாத்திரத்தில் வரும் சிவாஜிதான் சிறப்பாக நடித்திருப்
பார். மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்றவுணர்ச்சி யும், சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரமும் தன்னை அலைக்கழிப்பதை நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு காட்சியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி சிவாஜி விசும்பிக் கொண்டிருப்பார். அப்போது எதிரில் மேஜர் சுந்தர்ராஜன் அசைவற்று அவரையே பார்த்துக்கொண்டு நிற்பார். அதை ஒரு விமர்சனத்தில் இப்படி எழுதியிருந்தார்களாம்: ‘சிவாஜியின் முதுகுகூட நடித்துக்கொண்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் தேமேயென்று நின்றுகொண்டிருந்தார்’ என்று. பின்னாட்களில் அதைக் குறிப்பிட்டு மேஜர் சுந்தர்ராஜன் சொன்னார், “சிவாஜி நடித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும்!”
சிவாஜி வந்து நிற்கும் தோரணையைக் கண்டு, அதற்கு முன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள், பேச மறந்து உறைந்து நிற்கும் காட்சிகளைப் பல படங்களில் பார்க்கலாம். ‘முதல் மரியாதை' படத்தில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் சிவாஜியை, சில சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வந்து நிற்பார்கள். அந்த நிலையிலும் தன் கோபத்தைக் காட்ட ஒரு உறுமு உறுமுவார். அடுத்த கணத்தில் சிறுவர் குழாம் சிதறி ஓடும். படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் இந்தக் காட்சியே, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தனை மரியாதைக்குரியது என்பதை உணர்த்திவிடும். ‘பாசமலர்’ படத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜெமினி கணேசன் எழுப்பும் கேள்விகளைக் கேட்டுக் கொதிப்படைந்து சிவாஜி பேசும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. “யாருடைய துணையுமின்றித் தனியாகவே நான் உழைப்பேன்” என்று கர்ஜித்துவிட்டு, முத்தாய்ப்பாக ‘‘கெட் அவுட்'' என்று மெல்லிய குரலில் சொல்ல சிவாஜியால்தான் முடியும்.

எப்போதும் மரியாதை

மிகை நடிப்பு என்று அவரை விமர்சிப்பவர்கள்கூட பின்னாட்களில் ‘முதல் மரியாதை', ‘தேவர் மகன்' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை வியக்கின்றனர். குறிப்பாக, தேவர் மகன் படத்தில், முகத்தில் படர்ந்த வீர மீசையும், தோளைச் சுற்றிய சால்வையுமாக அவர் வந்து நிற்கும் கம்பீரம் அலாதியானது. சிவாஜியைப் புகைப்படம் எடுக்கும் கவுதமி, அவர் சற்று திரும்பி முறைத்ததும் தடுமாறும் காட்சியே சொல்லும் சிவாஜியின் கம்பீரத்தை.
திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிந்துகொள்வார். விமான நிலையங்களில் எங்களையெல்லாம் சோதனை செய்வார்கள். அப்பா நடந்துவரும் தோரணையைப் பார்க்கும் விமான நிலையக் காவலர்கள் அவரை ஒருபோதும் சோதித்துப் பார்க்கத் துணிந்ததில்லை.” அதுதான் சிவாஜியின் ஆளுமை!
- தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை.
21.07.2014 - சிவாஜி கணேசனின் 13-வது நினைவு நாள்


No comments:

Post a Comment