Thursday, January 20, 2011
பொன்னியின் செல்வன் திரையாக்கம் உண்மையெனில்..
வரலாற்றுப்படம் என்று தமிழில் வந்த படம் என்று பார்த்தால் பெரியார் திரைப்படம் கடைசி என்றாகிறது. அதிலும் அரசர் கால திரைப்படங்கள் தமிழில் வந்து வெகுகாலமாகிறது.செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் சோழர்-பாண்டியர் வரலாற்றை சொல்ல முயன்றது. சமீப காலமாக இணையத்தில் பரவலாக வெளிவரும் சந்தோஷமூட்டும் தகவல் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைப்படமாக தயாராகிறது என்பது. மணிரத்னம் என் ஆதர்சமான ஜெயமோகனுடன் இணைந்து திரையாக்க முயற்சிகள் செய்து வருகிறார் என்ற தகவல் ஒரு புறம்; நீண்ட நாட்களுக்கு பிறகு மணியுடன் இணைந்து இளையராஜா இந்த திரைப்படத்துக்கு இசை அமைக்கவிருக்கிறார் என்ற தகவல் ஒருபுறம் என்று தமிழ் சினிமா ரசிகனின் தாகத்தை தீர்க்கும் தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. எத்தனை உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் இந்த தகவல்கள் நம் மனதில் ஏற்படுத்தும் கற்பனை என்னவோ அலாதி தான். இலக்கிய வாசகர் யாருமே பொன்னியின் செல்வனை படிக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. சில காட்சிகள் திரும்ப திரும்ப வருகின்றன என்றாலும் பொன்னியின் செல்வன் திரைக்கான படைப்பே என்று தோன்றுகிறது. படம் எடுக்க்கப்படுவது உண்மை எனில் ஒரு கடைக்கோடி ரசிகனாக எனது எளிய ஆசைகள்:
பெரும் பொருட்செலவு தேவைப்படும் படம் என்பதால் காசு பற்றி கவலை இல்லாத தயாரிப்பாளர் தான் தேவை. இன்றைய காலகட்டத்தில் MGM ஏ கடனில் ஓடினாலும் பெரிய அளவில் முதலீடு செய்ய தகுதி உள்ள ஒரே நிறுவனம் 'சன்' என்பதால் அது மிக பொருத்தமான விஷயம் தான். எனினும் ஒரு பாடலுக்காக வெளிநாடு , ஒரு டான்ஸ் ஸ்டெப்புக்காக பல்வேறு கோணங்களில் படப்பிடிப்பு என்று பம்மாத்து செய்யாமல் கதைக்கு தேவைப்படும் செலவை எந்த தடங்கலும் இல்லாமல் செய்ய தயாரிப்பு நிறுவனம் தயாராக இருக்கவேண்டும். அப்போது தான் செட், ஆடை அலங்காரம், துணை நடிகர்கள், தொழில்நுட்ப துணை என்று ஒரு சிறந்த அஸ்திவாரத்தை தயார் செய்யமுடியும்.
நம்மவர்கள் எந்த காலத்திலும் கவனம் செலுத்தாத துறையான casting இல் முழு கவனம் செலுத்த வேண்டும். தென்னிந்திய நடிகர்களில் சிறந்தவர்களையும் தொலைக்காட்சி தொடர்களில் மின்னும் நல்ல நடிகர்களையும் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். வந்தியத்தேவனாக சந்தேகமில்லாமல் விக்ரம், மிக சரியான தேர்வு. கமல், சரத்குமார், மம்மூட்டி, மோகன்லால், நாகர்ஜுன் , சத்யராஜ் போன்ற நடிகர்கள் வரலாற்று படங்களுக்கு தகுதியானவர்கள். தவிர கூத்துப்பட்டறை போன்ற தியேட்டர் நவீன நாடகங்களில் தேர்ந்த நடிகர்கள் பெரும் பலமாய் இருப்பார்கள். முக்கிய பாத்திரமான நந்தினிக்கு தயவு செய்து ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்து விட வேண்டாம். (இந்த கதாபாத்திர 'இன்ஸ்பிரேஷனில்' தான் படையப்பா நீலாம்பரி உருவானார் என்று கேள்விப்பட்டதுண்டு. ) நம்பியார் போன்ற மூத்த கலைஞர்கள் சிலரை இழந்தும் விட்டோம்.
கமல் தன மூக்கை நுழைக்காமல் இயக்குனர் சொல்வதை (மட்டும்) கேட்டு நடித்தால் சந்தோஷம். அவர் தான் பொ. செல்வனை தொலைகாட்சி தொடராக தயாரிக்க திட்டமிட்டார் என்று தொன்னூறுகளில் படித்த நினைவு. அதே போல் எம்.ஜி.ஆர். இயக்குனர் மகேந்திரனை இதற்கான திரைக்கதையை எழுத பணித்திருந்தார் என்றும் கேள்விப்பட்டதுண்டு. பலரால் முடியாத பெருங்கனவு இது என்பதால் மிக சிறப்பான முயற்சி அவசியம்.
தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் நம்மவர்கள் கரைகண்டவர்கள் என்பதால் கவலை வேண்டியதில்லை. பி.சி. ஸ்ரீராம் தலைமையில் ஒரு பெரும்பட்டாளமே இருக்கிறது ஒளிப்பதிவுக்கு. குறைந்தது மூன்று சிறந்த ஒளிப்பதிவாளர்கள் தேவை.
சமீபத்தில் இளையராஜா நடித்த (!) விளம்பரத்துக்கான ஸ்ரீராமின் ஒளிப்பதிவு அபாரம். அது போன்ற ஒளியமைப்பு படத்துக்கு மிக சிறப்பாக பொருந்தும் என்று தோன்றுகிறது. கலை இயக்குனர்களின் பங்கு மிகவும் முக்கியம் என்பதால் அந்த துறையிலும் சிறந்த கலை இயக்குனர்கள் குறைந்தது மூன்று பேராவது தேவை. அதே போல் கதை நடக்கும் காலகட்டத்தை திரையில் கொண்டு வர CG மிகவும் முக்கியம். 300 படம் ஒரு சிறந்த உதாரணம். பல சவாலான காட்சிகளை வெற்றிகரமாய் கடந்து செல்ல பெரும் துணை எல்லாம் வல்ல CGயே!
ராஜா இந்த படத்துக்கு இசை அமைப்பது மிகவும் பொருந்தும் என்று ரசிகர்கள் பலரும் கருதுகிறார்கள். அவரால் நம் முன்னோர் வாழ்வை இசையால் சிறப்பாக முன்னிறுத்த முடியும். என்றாலும் ராஜா இந்த படத்தை மிக முக்கியத்துவத்துடன் அணுகவேண்டும். பெரிய இசை ஆராய்ச்சியே தேவையாய் இருக்கும். பண்டைய தமிழக இசைக்கருவிகள் சிறந்த குரல்கள் தவிர புராதனத்தை நினைவுபடுத்தும் பாடல் வரிகள் என்று தேவை இருப்பதால் வைரமுத்து இணைந்தால் பெரும்பலமாய் இருக்கும். ராஜா மனசு வைக்க வேண்டும்.
மிக முக்கியமாக மணிரத்னம் தனது வெற்று க்ளிஷேக்களை தூர எறிந்துவிட வேண்டும். ரெண்டு கதாபாத்திரங்கள் தொடர்பின்றி பேசிக்கொண்டிருக்க அவர்களை காமெரா சுற்றி சுற்றி நமக்கு மயக்கம் வரவைக்கும் அபத்த காட்சியமைப்பை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்கள் எல்லோரும் துள்ளி துள்ளி ஆடிக்கொண்டே கதாநாயகனை தொடர்ந்து ஓடும் காமெடிகள் வேண்டாம். தயவு செய்து ஹஸ்கி வாய்சில் கதாபாத்திரங்கள் முனகுவது வேண்டவே வேண்டாம். ஜெயமோகன் சார்.. நீங்கள் தான் நல்ல வசனங்களை எழுத முடியும். 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ' என்ற நெடும் (!) வசனத்தை மணி 'எப்.. இப்' என்று சுருக்கி விடுவார். விடாதீர்கள்.
மொத்தத்தில் இந்த கற்பனைகள் உண்மையாகி ஒரு சிறந்த தமிழ் படம் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... நடக்குமா?
Subscribe to:
Post Comments (Atom)
நடக்கட்டும்...கனவு பலிதமாகும் நாள் நோக்கி நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்..
ReplyDeleteஅதற்காகவே மீண்டுமொரு தரம் பொன்னியின் செல்வன் வாசிக்கவும் ஆரம்பித்திருக்கிறேன்.இணையத்திலும் படிக்கக் கிடைக்கிறது
http://www.keetru.com/literature/Kalki/part1/1.php
கூட்டணியில் என்னால் ஏற்க முடியாத நபர் ஒருவர் உண்டு...யாரென்று பின் சொல்வேன்.
.
”பொன்னியின் செல்வன்” திரைப்படமாக வெளிவந்தால்! ---- உங்கள் கருத்துக்களை நானும் ஒத்துக்கொள்கிறேன். வந்தியத்தேவனை வெள்ளை தேவதைகள் பின்புலத்தில் இருக்க, கதாநாயகியுடன் மரத்தைச் சுற்றி ஆடவிடாமல் இருந்தால் சரி.! நல்ல இடுகை சந்திரமோகன்.
ReplyDeleteநல்ல கற்பனை....பலிக்கட்டும் ! மணிரத்னம் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வாராக!!!
ReplyDeletegood article machi - ramesh
ReplyDeleteஏனோ என்னால் பொன்னியின் செல்வனை குறைந்தது சுவாரசிய படைப்பாகக்கூட பார்க்க முடியவில்லை. எனவே இத்திரைப்படம் குறித்தும் ஆவல் எதுவும் எழவில்லை.
ReplyDeleteஅன்புள்ள சுரேஷ்..
ReplyDeleteஎனக்கும் இது இலக்கிய படைப்பு என்று தோன்றியதில்லை. ஆனால் திரைக்கான கதை, சம்பவங்கள் இருக்கின்றன. பண்டைக்கால தமிழர் வாழ்வு என்பதால் ஒரு curiosity!
Hi Chandru,
ReplyDeleteI am also excited to see vandiyadevan and pazhuvettarayar on the silver screen as u said maniratnam must refrain his regular cliches and the grapevine is he may team up with maestro for the historical epic setting high expectations about the movie.casting is extremely important and Iam sure its going to be a challenge for them to get the right crew.I hope Jayamohans dialogs would bring the chola regime without destroying the original.so we will keep exciting until the official announcement comes.
அன்புள்ள சந்திரமோகன்,
ReplyDeleteஅமரர் கல்கியே கூட 'அலை ஓசை' தான் தன் சிறந்த படைப்பு, 'பொன்னியின்
செல்வன்' அல்ல என்று சொன்னதாக எங்கோ படித்திருக்கிறேன்! ஆதித்த கரிகாலன்
மரணத்தில் பொதிந்திருக்கும் ஆழமான மர்மம்தான் பொன்னியின் செல்வனில்
அனைவரையும் கட்டி இழுக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
ஆழ்வார்க்கடியானாக விவேக்கும் (அல்லது சந்தானம்?), நந்தினியாக மல்லிகா
ஷெராவத்தும் எப்படி?!
நன்றி!
சினிமா விரும்பி