Thursday, October 21, 2010

இளையராஜாவின் படைப்பாற்றல் குறைந்து விட்டதா?- ஒரு கடிதம்



இளையராஜா பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள், கடிதங்கள் சுவாரசியமாய் இருந்தன. முக்கியமாக 'ராஜாவின் யுகம் இருபதாண்டுகளுக்கு முன்பு முடிந்து விட்டது' என்று சொன்னதில் நிறைய பேருக்கு வருத்தம். பலர் ராஜா மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறார்கள் என்று தெரியும் (பலருள் நானும் அடக்கம்!).கீதப்ரியன். ராஜ், மாயாவி போன்றோர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். எனக்கு அதில் மாற்று கருத்து உண்டு என்றாலும் அவர்கள் சொல்வதை மதிக்கிறேன். ஸ்ரீதர் எழுதிய பின்னூட்டம் விரிவானது. அது ராஜா இன்னும் தன இசை படைப்பாற்றலை இழக்கவில்லை என்கிறது.

" நண்பர் கீதப்பிரியன் நந்தலாலா படத்தின் இசை பற்றி குறிப்பிடிருந்தார். அந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. 'மெல்ல ஊர்ந்து ஊர்ந்து' பாடலில் ஒரு innocent மனநிலை பாடல் முழுதும் வெளிப்பட்டிருக்கும் , அதில் ஒரு innocent பாத்திரமானது தன் பயணத்தின் போது வெளிப்படுத்தும் குதூகலத்தை பாடல் முழுவதும் உணர்த்துகிறது.
பாடலின் மெட்டு நீளமாக இல்லாமல் குறுகி வெட்டி வெட்டி அடுத்த அடிக்கு செல்வதை உணரலாம். இது குழந்தை மனநிலையில் இருக்கும் ஒருவர் அடுத்தடுத்த விசயத்திற்கு உடனே உடனே சென்று விடுவதை உணர்த்துகிறது.

உதாரணம் வேண்டுமானால்,
வானம் ரொம்ப பழையது,
மேகம் புதியது
துள்ளிடும் நிலாவுமே
இன்று பிறந்து வந்தது
பாதை ரொம்ப நீண்டது
பயணம் சிறியது
யாத்திரை ஓயாதது
நீ செல்லும் முடிவை பொருத்தது
என்ற வரிகளில் வரும் மெட்டுக்களின் மூலமும்
தூரம் காட்டும் விளக்கொளி
காட்டிப்போகும் நம் வழி
என்ற மெட்டில் அந்த பாத்திரம் தலையை இருபுறமும் ஆட்டி ஆட்டி தன் உள்ளக்களிப்பை வெளிப்படுத்தும் உணர்வை புரிந்து கொள்ளலாம்.
இங்கே எந்த இடத்திலும் ராஜா பாடலுக்குத் தேவையான உணர்வை வெளிப்படுத்த தவறவில்லை. மேலும் அவரது முத்திரையான மெலடியையும் எங்கும் தவற விடவில்லை .

நான் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாம் என்றே நினைக்கிறேன்,முக்கியமாக ராஜாவின் "யுகம்" முடிந்து விட்டதாக சிலர் முன்வைக்கும் கூற்றுக்கள் பற்றி. ராஜாவின் படைப்புக்கள் நம் முன் விரிந்திருக்கிறது. அதில் 90 களின் பிற்பகுதில் இருந்து வெளியான சில பாடல்கள் பற்றி என் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

முதலில் பழசிராஜாவின் ஆதியுச சந்திய பூததிவிடே பாடல் .இதைப் பற்றி ராஜா விரிவாகப் பேசி பதிவு செய்திருக்கிறார். அது youtube தளத்தில் கிடைகிறது. ஒரு போர் வீரன் தன் மண் மீதான ஏக்கத்தை வெளிப்படுத்த வேண்டிய அதே நேரத்தில் அவர் மீண்டும் வெள்ளையர்களை எதிர்த்து போரிட வேண்டிய உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டும். "ஆதியுச சந்த்யா பூத்ததிவிடே" என்று உயிரை உருக்கும் மெட்டு, ராணுவ வீரர்களின் நடையைத் தாளமாகக் கொண்டு இரண்டு வித உணர்வுகையும் ஒருங்கே படைத்து ராஜா தன் முன்னால் வைக்கப்பட்ட சவால்களை அனாயசமாகக் கடக்கிறார் .

இன்னொரு மலையாளத் திரைப்படம் rasathanthiram திரைப்படத்தில் வரும் தேவாரம் நோக்கு என்ற மிகச் சிறந்த இசைக்கோர்வைகளைக் கொண்ட பாடல். இந்த திரைப்படம் பார்ப்பதற்கு முன்னரே இந்த பாடல் ஒரு travelling மனநிலையை கொண்டு செல்வதை என்னால் உணர முடிந்தது. திரைப்படம் பார்த்த பிறகு, வேலைக்கு மிதிவண்டியில் பயணிக்கும் ஆசாரிகள் பாடுவதாக அமைந்த பாடல் என்பதை நிச்சயப் படுத்திக் கொண்டேன் . இந்த பாடலின் ஒரே ஒரு நொடி கூட தொய்வு ஏற்படுவதில்லை. நான் மிகைப்படுத்தவில்லை,இந்த குறிப்பிட்ட பாடலை ஒரே மூச்சில் எத்தனை முறை வேண்டுமானாலும் என்னால் கேட்க முடிகிறது. எத்தனை விதமான கற்பனைகள்? ராஜாவின் படைப்பாற்றல் தளரவில்லை என்பதற்கு அவரது தொய்வில்லாத இசைக்கோர்வைகளே சாட்சி. இதே போல இன்னொரு மலையாளப்பாடல் அள்ளிப்பூவே மல்லிப்பூவே.

அவரது படைப்பாற்றல் பற்றி சொல்லும்பொழுது அவரது மெட்டுக்கள் மாறும் வேகம் பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது. நன்னவனு என்ற கன்னட திரைப்படத்தில் வரும் ஒரு சிவ ஆராதனை தெருப்பாடல். அதில் மேளங்கள் சங்கு மற்றும் மணியோசையுடன் துவங்கும் கோரஸ் "டண்டர டமரு டரி தண்டாரோ எல்லரு மனிகே சிவ பந்தாறு" என்ற வரிகள் இரண்டாக உடைந்து "டண்டர டமரு" என்ற வார்த்தைகள் ஒரு மெட்டிலும் "டரி தண்டாரோ" என்பது இன்னொரு மெட்டிலும் ஒலிக்கும். இப்படியே தொடரும் பாடல் வேறு வேறு மெட்டுகளுக்கு மாறி ஒரு அதிவேக தாளக்கட்டில் கோரஸ் குரல்கள் நிறைவு செய்ய S P B யின் குரலில் ஒலிக்கும் "ஓம் சிவோ ஹம் சிவோ மஹா" என்ற உச்ச ஸ்தாயி வரிகளுடைய மெட்டு, இந்த பாடலை விவரிக்க இயலாத வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. இதை அவர் முன்பும் பலமுறை செய்திருக்கிறார். எல்லோருக்கும் தெரிந்த இளமையெனும் பூங்காற்று பாடல் பல்லவியில் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு மெட்டைக் கொண்டு இசை அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு பாடல்களும் வெவேறு கால கட்டங்கள் தான். இசை வடிவங்கள் மாறி இருக்கலாம். ஆனால் ராஜாவின் கற்பனை வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா?

தமிழ் திரைப்படங்களில் நான் கடவுள் திரைப்படத்தின் ஓம் சிவோ ஹம் என்ற பாடலைப்பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த வரிகள் பொறுமையாக நிறுத்தி உச்சரிக்கும் பட்சத்தில் இது ஒரு மந்திரம் அல்லது வடக்கதியர்களுக்குப் பழக்கப்பட்ட பஜன் . ஆனால் பாலாவின் ஆண்மை திரண்ட நாயகன் அகோரிக்கு இது எப்படிப் பொருந்தும்? உணர்வுகள் பொங்கிப் பிரவாகமெடுக்கும் மெட்டு உடுக்கையுடன் சேர்ந்து கோபக் கனலைத் தெறிப்பது, ராஜாவின் கற்பனை வளத்தால் மிக இயல்பாக interprate செய்கிறது.

ராஜாவின் திருவாசகம் என் மனதுக்கு நெருக்கமானதல்ல, ஆனால் அவரது இசையிலமைந்த அக்கா மகாதேவியின் வசனங்கள் பற்றிய documentary யில் இருந்து inspiration ஆக வைத்துக்கொண்டு [நன்றி நண்பர் புலிகேசி] எந்த வித வர்ணப்பூசுகளும் இல்லாமல் மிக நேர்மையாக திருவாசகத்தைப் படைத்திருக்கிறார். இரண்டு தொகுப்புகளையும் ஒன்றாக வைத்துக் கேட்பவர்கள் இதை உணர்வார்கள் என்று நம்புகிறேன். அக்கா மகாதேவியின் தொகுப்பில் ஒவ்வொரு பாடலும் எனக்கு மிகவும் நெருக்கமாக நான் உணர்வதற்கு ராஜா அந்தப் படைப்பை எளிமைப் படுத்தி இசை அமைத்தது தான் காரணமாக இருக்க முடியும். என் விருப்பு சார்ந்து திருவாசகத்தை எடை போடுவது நியாயமாக இருக்க முடியுமா? அது போல் தான் தனிப்பட்டவரின் கருத்துக்கள் அது அவர்களுக்கானதே. தன் கருத்து என்பதை பொதுக்கருதாகத் திரிப்பவர்கள் தான் இங்கே ஏராளம்.பலருக்கும் ராஜாவின் மீது பல கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் ராஜாவின் படைப்பாற்றலைக் கொண்டு ராஜாவின் யுகத்தைக் கணக்கிட விரும்புவர்கள், அவரது காலம் முடிந்து விட்டதாக நினைக்க விரும்ப மாட்டார்கள். அவரது பாடலுக்குக் கிடைக்கும் விளம்பரங்கள், அதன் மூலம் அவர் பெரும் வர்த்தக லாபங்களை வைத்துக் கணக்கிட விரும்புவர்கள் வேண்டுமானால் அவரது "யுகம்" முடிந்து விட்டதாக உரக்க கத்திக் கொண்டிருக்கட்டும். நம்மைப் போன்ற ரசிகர்கள் நேர்மையான படைப்புகளைத் தலையில் வைத்துக் கொண்டாடலாம். வேறு என்ன செய்ய?


மிக்க நன்றி

அன்புடன்
ஸ்ரீதர்

13 comments:

  1. அண்ணே அவர் செய்ய வேண்டியது நிறைய இருக்கு .. அது எல்லாம் செய்யாமல் அமைதியாக இருக்கிறது ஏன் என்று புரியவில்லை . வாத்திய இசை தொகுப்புகள் நிறைய பண்ணலாம் . நாட்டுப்புற இசை கருவிகளின் இசை சார்ந்த தொகுப்புகள் குறிப்பாக நாதஸ்வரம் , நாயனம் , உருமி , உடுக்கை போன்றவற்றுடன் மேற்கத்திய செவ்வியல் இசை கலந்து நிறைய வேலைகள் அவர் செய்யலாம் . அவரால் மட்டும் தான் இந்த இசை கருவிகள் மேல் நாட்டுக்கு அறிமுகம் ஆகும் . அவரின் how to name it , nothing but wind தொகுப்புகளுக்கு அப்புறம் வெளியிட்ட வாத்திய தொகுப்புகள் எதுவும் சிறப்பாக இல்லை.

    ReplyDelete
  2. //அவர் பெரும் வர்த்தக லாபங்களை வைத்துக் கணக்கிட விரும்புவர்கள் வேண்டுமானால் அவரது "யுகம்" முடிந்து விட்டதாக உரக்க கத்திக் கொண்டிருக்கட்டும்.//

    100% accept it.

    ReplyDelete
  3. நன்றி மீன் துள்ளியான், இசைப்பிரியன் ..

    எனக்கு மீன் துள்ளியானின் கருத்தில் நூறு சதேவீத உடன்பாடு. கடந்த பதினைத்து வருடங்களாக ராஜா குறிப்பிடும்படியான ஒரு படைப்பை தரவில்லை என்பது தான் என் எண்ணமும். அதை பற்றி தான் ஒரு பதிவு எழுதிக்கொண்டும் இருக்கிறேன். அதில் விரிவாக என் கருத்தை முன்வைப்பேன்.

    ReplyDelete
  4. அருமையான ஆணித்தரமான பதிவு !!!நன்றி ஸ்ரீதர் அவர்களே.

    நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே அவர் ராஜா!!

    ReplyDelete
  5. நன்றி நண்பர்களே!

    உண்மையான ரசிகர்கள் தான் உயர்ந்த படைப்பாளிகளை உருவாக்குகிறார்கள், அந்த விதத்தில் உங்களது அடுத்த கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் திரு. சந்திர மோகன்.


    அன்புடன்
    ஸ்ரீதர்

    ReplyDelete
  6. சந்துரு,

    படைப்பாற்றல் வேறு,ஹிட் பாடல் தருவது வேறு. பிரமீளைவிட சுஜாதா பெரியாளும்பியா???

    ReplyDelete
  7. அப்துல்லா.. ஹிட்டை பற்றி எங்கேய்யா பேசினேன்? ராஜா பாடல்கள் பற்றி நான் எழுதியதை படிக்கவில்லையா? எனக்கு ஹிட் முக்கியமில்லை. படைப்பின் தரமே முக்கியம்.

    ReplyDelete
  8. அப்துல்லா
    உன் உதவியால் வெளிவந்த மண்ட்டோவின் புத்தகம் என்னிடம் உள்ளது. நீ செய்த நல்ல காரியம் இது என்று சொல்வேன். வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அன்புள்ள சந்த்ரு,

    ரசனை அடிப்படையில்தான் ராஜாவின் புதிய பாடல்களை நிராகரிக்கிறீர்கள் என நினைத்தேன். இளையராஜா 15 வருடங்களுக்கு முன் போட்ட பாடல்களுக்கும், இப்போதைய பாடல்களுக்கும் என்ன விதமான ‘தர’வித்தியாசம் இருக்கிறது என்று சொன்னால் தன்யனாவேன்.

    அன்புடன்,
    நலம்விரும்பி

    ReplyDelete
  10. நலம் விரும்பியின் நடை நான் அறிந்த என் நண்பர் நடை போல் இருக்கிறது.

    நண்பா.. ராஜா தந்த அந்திமழைக்கும் , தற்போது வெளிவரும் (அவரது) பாடல்களின் இடை இசை (interlude) இசைக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம். ராஜா எங்கே சென்றடைந்திருக்க வேண்டும்? எங்கே இன்னும் இருக்கிறார். இவை அனைத்தும் ராஜாவின் தீவிர ரசிகர்கள் எல்லோருக்குமே தோன்றும் விஷயங்கள் தான். ராஜாவின் தரம் பற்றி சொல்ல நான் எத்தனை பிறப்பெடுத்தாலும் முடியாது. என் வார்த்தை அப்படி தொனித்திருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  11. //ராஜா தந்த அந்திமழைக்கும் , தற்போது வெளிவரும் (அவரது) பாடல்களின் இடை இசை (interlude) இசைக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்.//

    அன்புள்ள சந்த்ரு,

    ’ஜுலி கணபதி’ திரைப்படத்தின் ‘எனக்குப் பிடித்த பாடல்’ பாட்டின் முதல் இண்டர்லூடைக் கேட்டிருக்கிறீர்கள்தானே? இளையராஜா இதுவரை கம்போஸ் செய்த அத்தனை பாடல்களிலிருந்து நூறு சிறந்த இண்டர்லூட்களை எடுத்தால் அதில் நிச்சயம் இடம்பெறக்கூடிய இண்டர்லூட் இந்த முதல் இண்டர்லூட்.வயலினும், பாஸ் கிடாரும் கேட்கும்போதெல்லாம் என் மனதை ஏதோ செய்யும். இத்தனைக்கும் அது இளையராஜா தன் மடியிலிருந்து படைப்பூக்கத்தை நழுவவிட்டு, கீழே தரையில் தவழ்ந்து, மூக்குக்கண்ணாடியை முன்னும் பின்னும் நகர்த்தி தொலைந்த படைப்பூக்கத்தைத் தேடிக்கொண்டிருக்கும் காலம் என்று பலரும் அபிப்ராயப்படும் காலத்தில் போட்டது. அதை விடுங்கள் - சென்ற வருடம் வந்த ‘பா’ படத்தின் ‘கும் சும் கும்’ பாடலின் இரண்டாம் இண்டர்லூடின் ஜாஸ் பியானோவின் சமகாலத்தன்மையும், அதையும் அவர் செவ்வியலாக மாற்றும் நுட்பத்தையும் - அவர் வயதில் பாதி இருக்கும் சமகால ‘யூத்’ யாரையாவது போடச் சொல்லுங்களேன், பார்க்கலாம்? இது இரண்டும் செவ்வியலாகிவிட்டது என்கிறீர்களா? விருமாண்டி படத்தின் ‘கொம்புல பூவச்சுத்தி’ பாட்டின் முதல் இண்டர்லூட் காற்றுக்கருவிகளின் அதகளத்தை என்னவென்று சொல்வீர்கள்? இப்பாடலுக்கான சிச்சுவேஷனுக்கு நம் ‘கும்பிடப்போன தெய்வம்’ இசையமைப்பாளர்கள் எப்படிப் பாடல் அமைத்திருப்பார்கள் என்று உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா?

    மொத்தமாக - ஒரு இசைக்கலைஞனின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும்போது கவனித்தில் கொள்ளவேண்டிய காலச்சூழல், இசை எங்கெங்கே உருமாறி வருகிறது, அதன் பின்னணியில் இருக்கும் பொருளாதாரச் சூழல், அந்த மாற்றம் அவர் கலை வெளிப்பாட்டை எப்படி பாசிட்டிவாகவோ - நெகட்டிவாகவோ பாதிக்கிறது, அவருக்குக் கிடைத்துவரும் உத்வேகமளிக்கும் திரைப்படங்கள் - இப்படி எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நம் மனதில் இருக்கும் ஏதோ பிம்பத்தை முன்வைத்தபடி இருக்கிறோம். இனியும் இந்த விவாதத்தைத் தொடர விருப்பமில்லை சந்த்ரு. இவை பெருமளவில் ஆயாசமே அளிக்கின்றன.

    அன்புடன்,
    நலம்விரும்பி.

    ReplyDelete
  12. ராசா ராசாதிராசன் இந்த ராசா,
    நேற்று இல்லை,நாளை இல்லை,
    எப்பவுமே ராசா.....டெல்லி ராசா :)

    ReplyDelete
  13. Excеllent posting! Αt last somеonе whο knοwѕ whаt they aгe talkіng
    about and сan as well proԁuce informative content fοг us гeaderѕ.

    Definitelу lоoking forward to your nеxt
    aгticle.
    Also visit my webpage : increase height surgery|increase my height

    ReplyDelete