Friday, August 27, 2010

The Expendables ஒரு பார்வைநான் முதன்முதலில் பார்த்த ஆங்கில படம் ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' தான். செல்லதுரை சாரும் சாந்தி டீச்சரும் வழிநடத்த பள்ளி மாணவனாய் சக 'சினிமா ஆர்வலர்களோடு' சென்று பார்த்து விட்டு அம்மாவிடம் வந்து காந்தி கதை சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. என் அண்ணனுக்கு ஆங்கில படங்களில் பெரும் விருப்பம் இருந்தது. தன நண்பர்களுடன் அந்த படங்களை பற்றி பேசிக்கொள்வதை கேட்டு நானும் பெரிய ஆளாகி ஆங்கில படங்களை பார்த்து அது பற்றி என் நண்பர்களுடன் விவாதிக்க வேண்டும் என்று 'சபதம்' எடுத்துக்கொண்டேன். பிறகு வந்தது ஜாக்கி சானின் 'The Protector'. பள்ளி நாட்களில் எல்லோருக்கும் போல் எனக்கும் பிடித்தமானவர் ஜாக்கி சான். அவரது படங்களை பார்த்து விட்டு வெளியில் வரும்போது எவனாவது சண்டைக்கு வரமாட்டானா என்று கை கால் துறுதுறுக்கும். அவை சீனா டப்பிங் ஆங்கில படங்கள் என்று தான் தெரியும். அவர் Honk-Kong படவுலகை சார்ந்தவர் என்றெல்லாம் அப்போது தெரியாது. அந்த படம் அவரது ஹாலிவுட் முயற்சி என்றெல்லாம் பின்னால் தான் தெரியவந்தது. படத்தில் நிறைய சண்டை காட்சிகள். என்னுடன் படித்த ஒரு பையன் கொஞ்சம் மங்கோலிய சாயலில் இருப்பான். அவனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். நேரடி ஜாகிசானாக 'காட்சி தந்த' அவனுக்கு எங்கள் குழுவில் ஒரு மரியாதை கிடைத்தது.

நேரடி ஹாலிவுட் ஆக்ஷன் படம் என்று நான் பார்த்தது, Hands of Steel என்றொரு சைபார்க் படம். அருமையான சண்டைகள் நிறைந்த படம் (அப்படி போஸ்டரில் எழுதும் பொற்காலம் ஒன்று இருந்தது!) . படம் முடிந்து வரும்போது அதை பற்றி சக சினிமா ஆர்வலரான என் தம்பியுடன் பேசிக்கொண்டு (சைக்கிளின் முன்னால் பாரில் தம்பியும் கேரியரில் நானும்,) வந்ததை என் அண்ணன் பொறுமையாய் கேட்டு வந்தது இன்னும் நினைவிருக்கிறது. அதற்கு பிறகு என் அண்ணன் அறிமுகம் செய்த மறக்க முடியாத ஹீரோ Silvester Stallone. அந்த மாதிரி ஒரு நடிகனை அதற்கு முன் பார்த்ததில்லை..சாதரணமாக பார்த்தால் சாமான்யன் மாதிரியும் சட்டையை கழட்டி விட்டு பார்த்தால் பயில்வான் மாதிரியும் தெரிந்த ஸ்டாலனை என் அபிமான நடிகராக ( கமலுக்கு அடுத்த இடத்தில் தான்..!) ஆராதிக்க ஆரம்பித்தேன். First blood நான் பார்த்த முதல் ஸ்டாலன் படம். அப்போதெல்லாம் ஒரு பேச்சு இருக்கும். ஜாக்கி சான் படங்கள் என்றால் ஆரம்பம் முதல் முடியும் வரை சண்டை இருக்கும். கொடுத்த காசு நிறைந்து விடும். நேரடி ஆங்கில படங்களில் முக்காலே மூணு வீசம் பேசிக்கொண்டும் (சில சமயம் முத்தம் கொடுத்துக்கொண்டும்) இருப்பார்கள். கடைசி அரைமணி நேரத்தில் அடித்து துவம்சம் செய்து விடுவார்கள். அவர்கள் வெடிக்கும் குண்டுகளில் தியேட்டர் தெறித்து விடுமோ என்று பயந்த காலங்கள் உண்டு. படத்தில் ஸ்டாலன் ட்ரக்கை ஓட்டிக்கொண்டு ஒரு காரை மோதி அதை ரெண்டாய் பிளக்கும் காட்சியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

ஆனால் அதன் sequel ஆக எடுக்கப்பட்ட Rambo படங்கள் கிட்டத்தட்ட அமெரிக்க அரசியல் பிரசார படங்கள் என்று பின்னால் தெரிய வந்த போது அந்த படங்களின் மீது ஒரு வெறுப்பு வந்தது என்னவோ உண்மை தான். லட்ச கணக்கான பேரை அமெரிக்கா கொன்று குவித்த வியட்நாம் போரில் கைதான அமெரிக்க கைதிகளை காப்பாற்றும் மாவீரனாக வரும் ராம்போவின் திரைக்கதை எழுதியது அவதார் மூலம் பூர்வ குடி மக்களின் நலன் காக்க போராடும் ஜேம்ஸ் கேமரூன் என்பது ஆச்சர்ய உண்மை..!! ஸ்டாலனே தனது பெரும்பான்மையான படங்களின் திரைக்கதையை எழுதி விடுவார் என்பது, அவரை ஒரு ஆக்க்ஷன் ஹீரோவாக மட்டும் பார்த்து வளர்ந்தவர்களுக்கு புது தகவலாக இருக்கும். இப்படத்திலும் அவர் கேமரூனுடன் இணைந்து எழுதி இருக்கிறார். இப்படி அமெரிக்க தேசபக்தி படங்களில் நடித்திருந்தாலும் என்னால் அவரை வெறுக்கவே முடியவில்லை. சிறு வயதில் மனதில் பதியும் விஷயங்களை அவ்வளவு சீக்கிரம் வெறுத்து ஒதுக்க முடியாது. அவரது Rocky பட தொடர்கள் எனக்கு மிக பிடித்தவை. மிக சாதாரண குத்து சண்டை வீரராக இருந்து உயரும் ராக்கியின் எளிய வாழ்க்கை படத்தின் மிக பெரிய பலம். அவர் நடித்த கடைசி பிரமாண்ட படம் Cliff Hanger. அதற்கு பிறகு பெரிய எதிர்பார்ப்புடன் வந்த The Specialist இல் அவர் ஹாலிவுட் கவர்ச்சி புயல் ஷரன் ஸ்டோனுடன் 'இணைந்து' ஆக்க்ஷன் செய்தார். அமெரிக்காவில் ஓடியது போல் இங்கு பெரிதாக ஓடவில்லை. அதே போல் Desperado வில் கலக்கிய அண்டோனியோ பெண்டரசுடன் நடித்த Assassins படமும். அதில் அண்டோனியோ தான் ஸ்கோர் செய்தார்.. பிறகு அவரை அதிகம் பார்க்க முடியவில்லை. இடையில் நம் உலகநாயகனின் ' பம்மல். கே. சம்மந்தம்' படத்தை சாமர்த்தியமாக உல்டா செய்து எடுக்கப்பட்ட 'கம்பக்த் இஷ்க்' என்ற அக்ஷய் குமார் நடித்த திராபையான ஹிந்தி படத்தில் ஸ்டாலன் ஒரு காட்சியில் தோன்றுவார். அதை பார்த்த போது 'மனுஷன் இப்படி ஆகிட்டாரே ' என்று நொந்து போய் விட்டேன்.

சில மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் ஸ்டாலோன் ஒரு படம் இயக்குகிறார். அதில் பல முன்னாள் ஆக்க்ஷன் ஹீரோக்கள் , என் இன்னொரு அபிமான நடிகரான Arnold Schwarzenegger உட்பட , பலர் நடித்திருக்கிறார்கள் என்ற செய்தி படித்து சந்தோஷம் அடைந்தேன். பிறகு படம் வந்து நன்றாக ஓடிகொண்டிருக்கும் தகவலும் எனக்கு மகிழ்ச்சி தந்தது. அதற்கு காரணம் உண்டு. கடந்த பதினைந்தாண்டுகளாகவே தொழிநுட்ப புரட்சியால் பெரும் தாக்கத்துக்கு ஆளாகி இருக்கும் ஹாலிவுட் படங்களில் முந்தைய படங்களை போன்ற சிலிர்ப்பூட்டும் சண்டை காட்சிகள் அபூர்வமாகி விட்டன. எதற்கெடுத்தாலும் CG தொல்லை. இந்த படம் எண்பதுகளில் எடுக்கப்பட்டது போன்ற ஆக்ரோஷமான சண்டை படம். தவிர ஸ்டாலன், ஆர்னால்ட், ப்ருஸ் வில்லிஸ் என்ற மூன்று முக்கிய அதிரடி நாயகர்கள் ஒரே காட்சியில் தோன்றி நடித்திருக்கிறார்கள் என்ற தகவல் என்னை திரை அரங்கை நோக்கி இழுத்தது.பல சொதப்பல்கள் இருந்தாலும், உண்மையிலேயே படத்தை எல்லோரும் பார்க்கும்படி எடுத்திருக்கிறார் ஸ்டாலன். தொடக்க காட்சியில் சோமாலிய கடல் கொள்ளையரிடம் இருந்து பணய கைதிகளை காப்பாற்றும் காட்சியில் தொடங்கும் ஆக்க்ஷன் கடைசி வரை தொடர்கிறது. ஜெட் லி, ஸ்டெதம் உட்பட அதிரடி நாயகர்கள் கடுமையாக சண்டை போடுவதோடு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து திரை அரங்கையே அதிர வைக்கிறார்கள். நிறைய காட்சியில் சிரிப்பலைகள். படத்தின் மிக பெரிய ஆச்சர்யம் இது ஒரு காதல் கதை. ஆம். ஒரு பெண் மீது கொண்ட பரிவு கலந்த காதலால் அவளையும் அவள் நாட்டு பிரஜைகளையும் அக்கிரமக்காரர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார் ஹீரோ, தன் சர்வ வல்லமை கொண்ட அணியின் துணையுடன்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றை போல் கற்பனையாக புனையப்பட்ட விலேனா என்ற ஒரு தீவில் நடக்கும் அக்கிரம ஆட்சியை வீழ்த்த அனுப்பப்படும் Expendables டீமின் தலைவரான ஸ்டாலோன் அந்த தீவின் ராணுவ ஆட்சியாளர் உண்மையில் ஒரு அமெரிக்க கும்பலால் வழி நடத்தப்படுவதையும் அதனால் அங்கு மக்களின் 'இயல்பு வாழ்க்கை' பாதிக்கப்பட்டு இருப்பதையும் நேரில் கண்டு நெஞ்சுருகுகிறார். ராணுவ வாகனத்தில் வரும் வீரர்கள், ஒரு கடை தெருவை ரணகளமாக்கி விட்டு மக்களை பயமுறுத்தி விட்டு போகும் காட்சியில் என்னையும் அறியாமல் ' இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாரும் இல்லையா' என்று (கிண்டலாக தான்!) கேட்டு விட்டு, ஸ்டாலோனின் அதிரடி சண்டை பார்க்க ஆயத்தம் ஆனேன்.சும்மா சொல்ல கூடாது, நிஜமாகவே, சண்டையை மட்டும் எதிர்பார்த்து போன எவரையும் ஏமாற்றாமல் படம் தந்திருக்கிறார், ஸ்டாலோன். நிறைய அதிரடி நாயகர்கள் நடித்திருப்பதால் எல்லோருக்கும் முக்கியதுவம் தந்து தானும் பிரகாசித்திருக்கிறார். ஸ்டெதம் விமானத்தின் மேல் உட்கார்ந்துக்கொண்டு குண்டு மழை பொழியும் காட்சி அட்டகாசம் என்றால், டெர்ரி க்ரூஸ் ட்டம்..ட்டம் என்று கதை செவிடாக்கும் துப்பாக்கி (விமானத்தில் அமர்ந்து கொண்டு அந்த துப்பாக்கியின் பெருமை பேசும் காட்சி அட்டகாசம்..) கொண்டு எதிரிகளை தூள் தூளாக்கும் காட்சி அதிரடிபிரியர்களுக்கு அன் லிமிடெட் மீல்ஸ் தான். மார்ஷியல் ஆர்ட்ஸ் நிபுணரான ஜெட் லி யும் எந்த வித ஈகோ (ரஜினி -ரஹ்மான் அண்ட் கோ விடம் இல்லாததது ) வும் இல்லாமல் நடித்திருக்கிறார். அவரை சைஸ் 3 என்று கிண்டல் செய்யும் படத்தின் தற்காலிக வில்லனான டால்ப் லண்ட்ஜ்ரென் அவரை அடித்து கொல்லப்போகும் சமயத்தில் ஸ்டாலோனால் காப்பாற்ற பட்டாலும் , 'விட்டிருந்தால் நான் தான் ஜெயித்திருப்பேன் ' என்று ஸ்டாலோனையும் நம்மையும் புன்னகைக்க வைக்கிறார் ஜெட் லி. இடையில் தன் காதலியை அடித்த அவளது புது துணைவனை போட்டு புரட்டி எடுக்கிறார் ஸ்டெதம்..இப்படி நகைச்சுவை, காதல் , பாசம் என்ற வெற்றி பார்முலாவை சரியாக பிரயோகம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார் ஸ்டாலோன். மிக புத்திசாலிதனமாக ஸ்டாலோன் நான்கு ஐந்து லொகேஷனிலேயே படத்தை எடுத்து வணிகரீதியாக வெற்றி பெற வைத்திருக்கிறார்.அமெரிக்க மனோபாவ கதை என்பதால், அந்த கற்பனையூர் தலைவனை சற்று சே குவேரா, காஸ்ட்ரோ கலந்த தோற்றத்தில் காட்டி இருக்கிறார்கள்.கர்ட் ரஸ்ஸல் நடித்த Escape From L.A. விலும் வில்லனை சே போலவே காட்டி பரிகசித்திருப்பார்கள். உண்மையில் கியூபாவில் அமெரிக்க அடிவருடியாக இருந்த பாடிஸ்டா நினைவு தான் வருகிறது. இவர்களே ஆள் அனுப்பி கபளீகரம் செய்து விட்டு பின்பு நல்லெண்ண அடிப்படையில் உதவும் அமெரிக்க மனப்பான்மை கொண்ட மேம்போக்கான படம் தான். இந்த படத்தில் அங்கு அட்டகாசம் செய்யும் முன்னாள் CIA ஆளான எரிக் ராபர்ட்ஸை யும் , அவனது கூட்டத்தையும் கூண்டோடு முடிக்க இந்நாள் CIA அதிகாரியான (அது பின்னால் தான் தெரிய வருகிறது..!) ஆக்க்ஷன் படவுலகின் முடி சூடா மன்னனும் அமெரிக்காவின் மோசமான கவர்னர்களில் ஒருவர் என 'பெயர் பெற்ற'வருமான ஆர்னால்ட் இன்னொரு கும்பலின் தலைவனாக வருகிறார். அவருக்கு நேரம் இல்லாததால் ஸ்டாலன்க்கு இந்த வேலையை விட்டு தருகிறார். ஒரு சர்ச்சில் இவர்கள் இருவரும் ஸ்டாலோனை சந்திக்கும் காட்சி அதிர்கிறது.. சண்டையால் அல்ல.. கட்டுக்கடங்காத சிரிப்பால். அர்னால்ட் வில்லிசிடம் ஸ்டாலோனை காட்டி ' நண்பருக்கு காட்டில் விளையாடுவது ரொம்ப பிடிக்கும்..' என்று கிண்டல் செய்ய பதிலுக்கு ஸ்டாலோன் அவரை கிண்டல் பண்ண நடந்து கொண்டே திரும்பி மர்ம கண்களால் ஆர்னால்ட் சிரிக்கும் காட்சி அழகு.

வில்லு விஜய் ஸ்டைலில் விமானத்தில் புட்-போர்ட் அடித்து ஏறுவது.. குண்டடிபட்ட டால்ப் கடைசியில் 'குணமாகி' அணியில் இணைந்து கொள்வது , TVS 50 ஐ நிறுத்தி பால் வாங்குவது போல் விமானத்தை நிறுத்தி ஒரு நாட்டுக்குள் நுழைவது என்று 'சுற்றி இருந்தாலும்' அதை எல்லாம் இந்த எவர் கிரீன் ஹீரோக்கள் செய்யும் சாகசங்கள் தூக்கி நிறுத்தி விடுகின்றன.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது , டாட்டூ குத்தும் நண்பராக வரும் ரூர்க்கி தன்னால் காப்பாற்ற முடியாமல் போன ஒரு பெண்ணை பற்றி ஸ்டாலோனிடம் சொல்லும் காட்சி. பச்சை குத்திக்கொண்டே அதை விவரிக்கும் ரூர்க்கியின் கதையை கேட்டு ஸ்டாலோன் கண் கலங்குகிறார். முதல் தடவை தப்பித்து செல்ல சந்தர்ப்பம் இருந்தும் தன் மக்களை விட்டு வர விரும்பாத அந்த தீவு தலைவனின் மகளான சாண்ட்ராவின் நினைவு வர, திரும்பவும் அந்த தீவுக்கு சென்று அவளை மீட்கிறார்.

காதலுக்கு தான் எத்தனை வலிமை..!

13 comments:

 1. //லட்ச கணக்கான பேரை அமெரிக்கா கொன்று குவித்த வியட்நாம் போரில் கைதான அமெரிக்க கைதிகளை காப்பாற்றும் மாவீரனாக வரும் ராம்போவின் திரைக்கதை எழுதியது அவதார் மூலம் பூர்வ குடி மக்களின் நலன் காக்க போராடும் ஜேம்ஸ் கேமரூன் என்பது ஆச்சர்ய உண்மை.//

  அப்படியா எனக்கும் ஆச்சரியம்தான். அருமையாக விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 2. அருமை..உங்கள் ஆங்கிலப்பட அனுபவங்களும் இந்த விமர்சனமும்.....இது இந்தியிலோ தமிழிலோ நிச்சயம் காப்பியடிக்கப்படும்...அப்போது இதன் கதியை நினைத்தால் இப்போதே வயிறு கலங்குகிறது!

  ReplyDelete
 3. இப்படத்தைப் பற்றின எதிர்மறையான விமர்சனங்களைத்தான் நிறைய வாசித்தேன். ஆக்ஷன் பிரியர்களுக்கு மலரும் நினைவுகள் போல இப்படம் பிடிக்கும் போலிருக்கிறது. ஸ்டாலனின் ராக்கி வரிசைத் திரைப்படங்களை விரும்பி வாசித்திருக்கிறேன். காமா சோமா என்றில்லாமல், சுருதி சேர்ப்பது மெதுவாக காட்சிகளை சேர்த்து அதன் உச்சக்கட்டமாக சண்டைக்காட்சிகளை அமைப்பது பிடித்திருந்தது. ஆனால் நான் வான்-டாம்மின் ரசிகன். :)

  ReplyDelete
 4. நன்றி ரகுநாதன் உண்மை தான்.. ஸ்பீல்பெர்க் , கேமரோனின் ஆரம்ப காலங்கள் நாம் எதிர்பார்க்காத சுவாரசியங்கள் கொண்டவை..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!

  ReplyDelete
 5. நன்றி ஜீவா சார்..
  நீங்கள் எழுதாத விமர்சனங்களா..எத்தனை திறமை உள்ள ஜீனியஸ் நீங்கள்..!
  உண்மை தான், இந்த படத்தை எப்படியாவது நகல் எடுத்து விடுவார்கள்.. பாலிவுட் 'ஜீனியஸ்கள்' இதில் கெட்டி..

  ReplyDelete
 6. நன்றி சுரேஷ்..
  உங்களுக்கும் சண்டை படங்கள் பிடிக்குமா? எனக்கு விருப்பமான ஆக்ஷன் ஹீரோக்களில் வான்-டாமும் ஒருவர்.

  ReplyDelete
 7. good review - I like the way you took the readers through your harboured memories and converging the trailings into the movie! keep it up! In fact it took me back to the old school days when we thronged the theatre to see Jackie's film.

  ReplyDelete
 8. Thank you Sir..Now we talk about world movies, but we started from Stallone and Jackie.They have given some unforgettable movies, that we have enjoyed a lot in our childhood.

  I'm a fan of Sammo hung too. His comedy cum action movie 'Sanghai Express'is one of my fav.

  ReplyDelete
 9. Good review..But I don't know why you people hate Rahman this much..

  ReplyDelete
 10. Dear Friend ..I never hate Rahman..I mentioned his name in this article only to show how people like Rajni, praise him beyond the limit..Nothing else..

  ReplyDelete
 11. நண்பரே, ஒரு படம் பற்றிய பார்வைன்னு அப்பிடியே எங்களை புதுக்கோட்டைக்கே அழைத்து சென்று விட்டீர்கள். நல்ல பல கோர்வையா செய்திகள் சொல்லும் யுக்தி எழுத்தில் வலு சேர்க்கிறது. வாழ்த்துக்கள்.நானெல்லாம் ‘ராம்போ’ பாத்துபோட்டு சாக்குல டிரஸ் செஞ்சு போட்டு திரிஞ்சவங்கய்....

  ReplyDelete
 12. நன்றி மயில்..நானும் அறந்தாங்கி ஹவுசிங் போர்ட் மாடியில் பால்கனி பிடித்து தொங்கி , ராம்போவாக முயற்சி செய்தவன் ...அந்த அளவுக்கு 'பாதிக்கப்பட்டு இருந்தேன்' .. என ஆச்சர்யம் எல்லாம் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நாம் பார்த்த அதே கதாநாயகன் இன்னும் நம்மை வசப்படுத்துகிறாரே என்பது தான்.. மாறாக நம் எவர்சில்வர் நடிகர்களோ நம்மை இன்னும் துன்புறுத்திகொண்டே இருக்கிறார்கள்..

  ReplyDelete
 13. saathaarana padathukku poi ivvalavu neelamaana vimarsnamaa? LoL!!
  But Nice Writing Chandru..

  -Ramesh.PC

  ReplyDelete