தெருவில் செல்லும் அந்நிய தேசத்து வியாபாரிகளை பார்க்கும்போது குழந்தைகளிடம் ஏற்படும் பிரமிப்பும் பயமும் பார்க்க அலாதியானவை. அந்த பயத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று வளர்ந்தவர்களான நமக்கு தெரியும் என்பதால் குழந்தைகளின் பரபரப்பு ரசிக்க வைக்கும். இப்போதெல்லாம் தெருவில் குழந்தைகளை கவரும் பொருட்களை விற்றுச் செல்லும் வியாபாரிகளை காண்பதே அரிதாகி விட்டது. அந்த மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் பற்றி பெரிதாக தெரியாமல் அம்மனிதர்கள் எங்கிருந்தோ உதித்தவர்கள் என்ற எண்ணம் பெரியவர்களுக்கே இருக்கும். குழந்தைகளுக்கு கேட்கவா வேண்டும்? தன்னை ஒருநாள் சாக்கு மூட்டையில் கட்டி அந்நிய தேசத்தில் விற்க தான் அந்த மர்ம மனிதன் வந்திருக்கிறான் என்று மனதுக்குள் பயம் கொள்ளும் அதே சமயம் உலகின் பத்திரமான இடமான தன் வீடு அல்லது தெருவில் இருந்துகொண்டு அந்த விசித்திர மனிதனை நோட்டம் இடவும் குழந்தைகள் தயங்குவதில்லை. அப்படியான ஒரு தொலைதூர தேசத்து வணிகனின் கதை தான் 'காபூலிவாலா' !
வறண்ட மலைகளும் மண் கட்டிடங்களும் நிறைந்த ஆப்கானிஸ்தான் மூலையில் எங்கோ ஒரு கிராமத்தில் தன் செல்ல மகளை விட்டுப் பிரிந்து வந்து பிழைப்புக்காக நெரிசலான கல்கத்தா வீதிகளில் திரியும் காபுலிவாலாவின் கதை அது. ரவீந்திரநாத் தாகூர் முத்திரை பதித்த கதைகளில் ஒன்று .. கதை சொல்லியின் ஐந்து வயது மகள் மினி திறந்த தன் குட்டி வாயை மூடாமல் பேசிக்கொண்டே இருப்பவள். எழுத்தாளரான தன் தந்தையிடம் ஒரு கேள்வி கேட்டு அதற்கு பதில் வரும் முன்னரே அடுத்த கேள்வியை வீசுபவள். தன்னையொத்த குழந்தைகளை போலவே தெருவில் திரியும் வித்தியாசமான மனிதர்கள் மேல் ஒரு விசித்திரமான பயத்தை கொண்டவள். ஆப்கனில் தான் விட்டு வந்த தன் மகள் வயதுள்ள மினியை பார்த்ததும் பாசம் கொள்கிறான் காபுலிவாலா அப்துர் ரஹ்மான் கான். கதையின் நாயகர்கள் இவர்கள் தான்.
மினியின் அம்மாவுக்கு எங்கே அம்மனிதன் தன் மகளை கடத்திச் சென்று விடுவானோ என்ற பயம். தாகூர் வார்த்தைகளிலேயே சொல்வதானால் "தெருவில் ஏதாவது உரத்த சத்தம் கேட்டால் இந்த உலகத்துக் குடிகாரர்கள் எல்லோரும் ஒன்று கூடி தன் வீட்டை நோக்கித் தான் ஓடிவருகிறார்கள் என்று கதி கலங்கிப் போகும் பயந்தாங்கொள்ளி !" எழுத்தாளரான மினியின் தந்தை காபூல்காரன் நல்ல மனிதன் என்பதை அறிந்தவர். தன் மகளுடனான அம்மனிதனின் நட்பையும் அவர்களது உரையாடல்களையும் ரசிப்பவர்.தான் சுமந்து செல்லும் மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று ஆர்வத்துடன் கேட்கும் மினியிடம் ரஹ்மத் சொல்வான் "அதுவா மூட்டைக்குள் பெரிய யானையை அடைத்து வைத்திருக்கிறேன் !"
நொடி தாமதிக்காமல் மினி சொல்வாள் " ஏமாற்றுக்காரா ..சின்ன மூட்டைக்குள் அவ்வளவு பெரிய யானை யை எப்படி அடைக்க முடியும்?"
"சின்னப் பொண்ணு.. நீ எப்போ மாமனார் வீட்டுக்கு போவே?"
"நீ எப்போ போவே காபூலிவாலா?"
"நானா ..நான் மாமனாரையே கொன்று போடுவேன்"
அக்குழந்தை இடி இடியென சிரிக்கும்.
பிழைப்புக்காக, தான் விற்கும் உலர்திராட்சை, பேரீச்சம் பழம் போன்றவற்றை தன் குட்டி சசிநேகிதிக்கு அன்பளிப்பாக தருவான் ரஹமத். அவற்றை தன் பாவாடையில் முடிந்து வைத்து பாதுகாப்பாள் அந்த குட்டி. அவளுடனான அந்த நட்பு ஊரில் உள்ள தன் மகளின் நினைவின் வலி மறக்க வைப்பதாக உணரும் ரஹமத் மிகவும் சந்தோஷமாக உணர்வான்.அப்பழுக்கற்ற அந்த நட்பில் எதிர்பாராத பிரிவு ஏற்பட்டு விடும். தன்னிடம் கடனுக்கு பொருட்கள் வாங்கிய உள்ளூர்காரன் கடன் வாங்கியதை மறுப்பதுடன் தன் குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்து அவனை கத்தியால் குத்திவிடுகிறான் ரஹமத். போலீஸ் அவன் கைகளில் விலங்கிட்டு அழைத்து செல்லும்போது மினியும் அவள் தந்தையும் அவனை கடைசி முறையாக சந்திப்பார்கள். அவ்வளவு தான். ஆறு வருடங்கள் கழித்து விடுதலையாகி வரும் ரஹமத் , மற்றொரு காபூல் வியாபாரி நண்பனிடம் கொஞ்சம் உலர்பழங்களை வாங்கிக் கொண்டு தன் சினேகிதியை பார்க்க வருவான். அந்தக் கால வழக்கப்படி சுமார் பனிரெண்டு வயதுள்ள மினிக்கு திருமணம் நடக்கும் நாள் அது. அவனை பார்த்து பரிதாபப்பட்டாலும் விசேஷ நாளில் அவன் வருகை ஒரு சங்கடத்தி உண்டுபண்ணிவிடும் என்று நினைக்கும் எழுத்தாளர், அப்புறமாக வரச் சொல்லி அவனை கேட்டுக்கொள்கிறார். உடைந்த மனதுடன் திரும்பிச் செல்லும் ரஹமத், எதோ நினைவு வந்தவனாக திரும்பி வந்து தன் அன்புப் பரிசை மினியிடம் கொடுக்குமாறு அவரிடம் கேட்கிறான். அந்த தூய அன்பை கண்டு நெகிழும் மினியின் தந்தை, உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி மினியை வரச் செய்து அவளது இளம்பிராயத்து நண்பனை சந்திக்க வைக்கிறார். சிறைத்தண்டனையின் கடுமையும் முதுமையும் மாற்றிவிட்ட தன் பரிதாபமான தோற்றத்தோடு அந்த இளம்பெண் முன் நிற்கிறான் ரஹமத். பழைய நண்பர்கள் இருவரும் காலத்தின் வலியை உணர்ந்து ஒருவர் எதிரில் ஒருவர் நிற்கின்றனர். "இப்போ நிஜமாவே மாமனார் வீட்டுக்கு போகப் போறியா ?" என்று ரஹமத் கேட்க, இளம் மணப்பெண் வெட்கத்துடன் வேறுதிசை பார்த்து நிற்கிறாள். ரஹமத்தின் அன்புக்கு பரிசாக தன் மகளின் திருமணத்துக்காக செலவிட வைத்திருந்த பணத்தின் ஒரு பகுதியை அவனுக்கு அளிக்க முடிவு செய்கிறார் எழுத்தாளர். எங்கோ தூர தேசத்தில் இருக்கும் தன் மகளை அவன் விரைவில் சந்திக்க தன்னாலான உதவியை செய்த திருப்தி அவருக்கு. அந்த தூய ஆத்மாவின் ஆசியே தன் மகளுக்கு போதுமானது என்று பூரிக்கிறார்.
இந்தக் கதையை வாசிக்காத இலக்கிய வாசகர்கள் இருக்க முடியாது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கதை அது.
காபூலிவாலாவின் கதை, பெங்காலியில் 1951இலும், ஹிந்தியில் 1961இலும் திரைப்படமாக வெளியானது. பிமல் ராய் தயாரிப்பில் ஹேமன் குப்தா இயக்கத்தில் வெளிவந்த ஹிந்தி படத்தை சில நாட்களுக்கு முன் பார்க்க நேர்ந்தது என் வாழ்நாள் பாக்கியங்களில் ஒன்று.
கதையில் வருவதை போல் அல்லாது, படம் ஆப்கானிய கிராமத்தில் ரஹமத்தின் வாழ்க்கைப் பின்னணியில் இருந்து தொடங்குகிறது. வயதான தாய், ஐந்தாறு வயதான தன் செல்ல மகளுடன் வசிக்கும் ரஹமத், கடன் தொல்லை நெருக்குவதால், வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க இந்தியாவுக்கு செல்வது என்று முடிவெடுக்கிறான். அன்னையை இழந்ததால் தந்தையின் மீது அதீத பாசத்துடன் இருக்கும் அவன் மகள் தன்னையும் இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று அடம்.பிடிக்கிறாள். ஒரு நாள் அதிகாலையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தன் மகளின் கைகளில் மை தடவி அதை ஒரு தாளில் பதிய வைத்து அதை பத்திரமாக மடித்து வைத்துக்கொள்ளும் ரஹமத், சந்தடியின்றி வெளியேறுகிறான். மகளின் கைவிரல்களின் அச்சு படிந்த அந்த காகிதம் தான் அவளை நினைவுபடுத்த அவனிடம் இருக்கும் ஒரே பொருள். தன் மகளை பிரிந்து செல்லும் அக்காட்சியில் இசைக்கும் சலில் சவுத்திரியின் இசை மனதை கனக்க செய்யும். கொல்கத்தாவில் தன்னை போன்ற மற்ற ஆப்கன் குடிமக்கள் தங்கியிருக்கும் அறையில் ரஹமத் தங்குகிறான். கதையில் இந்த விஷயம் சொல்லப்படுவதில்லை. அவன் மினியை சந்திக்கும் காட்சியும் கதையில் இருந்து வேறுபட்டது. கதையில் அவனை தன் வீட்டுக்குள் இருந்து சாலையில் செல்லும் ரஹமத்தை 'காபூலிவாலா!' என்று அழைப்பாள்.அவன் தன் வீட்டை நோக்கி வருவதை பார்த்ததும் குடுகுடுவென்று வீட்டுக்குள் ஓடி மறைந்து கொள்வாள். படத்தில் காபூளிவாலாவை மினி தெருவில் மிக அருகில் பார்ப்பாள். அவன் பேசத் தொடங்கியதும் பயந்து வீட்டுக்குள் ஓடி விடுவாள். இது போன்ற பல மாற்றங்கள் படத்தில்.
ஆனால் கதையை படிக்கும்போது நம் மனதில் உருவகம் கொள்ளும் பாத்திரங்களை மிளிரச் செய்யும் நடிகர்கள் தான் மிகப்பெரிய பலம். நம் மனதில் குடுகுவென்று ஓடி அதே வேகத்தில் வார்த்தைகளையும் கொட்டி மழலையில் கொஞ்சும் குழந்தையாக பேபி ஃபரிதா. நெடுநெடுவென்ற உயரமும் அதை விட உயர்ந்த வெள்ளை மனதும் கொண்ட காபூலிவாலாக நடிகர் பால்ராஜ் சஹானியும். அவர்கள் இருவரும் உரையாடும் காட்சிகள் யார் மனதையும் இளக வைத்துவிடும். அத்தனை தேர்ந்த நடிப்பு அது.
அதே போல் எழுத்தாளராக வரும் நடிகரும் நிறைவாக செய்திருப்பார். சிறுகதையை எப்படி திரைக்கதையாக மாற்ற வேண்டும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். அதற்கு இயக்குனர் வெகு நேர்த்தியான முறையை கையாண்டிருக்கிறார். பாத்திரங்களின் தனிப்பட்ட குணாதியம்சங்கள், அவர்கள் வாழும் சூழல் போன்ற விஷயங்களை கதையை ஒட்டியே விஸ்தரித்தால் போதுமானது. அதை மிக அழகாக செய்திருக்கிறார்கள் படத்தின் திரைக்கதை எழுத்தாளர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும் பாத்திரங்களுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக கதையில் ஒரே வரியில் வரும் வீட்டு வேலைக்காரன் தான் படத்தின் நகைச்சுவை நடிகன். காபூலிவாலாவை பார்த்ததும் பயந்து நடுங்கி ஏற்கனவே பீதியில் இருக்கும் மினியின் அம்மாவை மேலும் கலவரப் படுத்திவிடுவான்.
எங்கே குழந்தையை காபூல்காரன் கடத்திவிடுவானோ என்று அஞ்சும் தாயின் சந்தேகம் மேலும் வலுவடையும் வகையில் ஒரு காட்சி படத்தில் உண்டு. கதையில் இல்லாதது. ரஹமத் வராததால் அவனைத் தேடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவாள் மினி. அவளது வழக்கமான மறைவிடமான தந்தையின் மேஜைக்கு அடியிலும் அவளை காணாத பெற்றோர் பதறிப் போய் தேடுவார்கள். தகவல் அறிந்த ரஹமத்தும் சாலையெங்கும் "மினி பாச்சே..மினி பாச்சே.." என்று கத்திக் கொண்டே தேடியலைவான். எங்குமே அவள் கிடைக்கமாட்டாள். களைத்துப் போய், ஒரு மண்டபத்தில் அமர்ந்திருக்கும் அவன் குழந்தை மழை நீரில் பாதி நனைந்து மண்டப படிக்கட்டின் அடியில் உறங்குவதை கண்டு பதறி அவளை தூக்குவான். அதற்குள் அங்கு கூடும் அறிவற்ற கூட்டம் அவன் குழந்தையை கடத்த முயன்றான் என கூறி அவனை கடுமையாக தாக்கும். அதைப் பார்த்து குழந்தை அழுவாள். அங்கு வரும் அவள் தந்தை உண்மையை உணர்ந்து கூட்டத்தை விலக்கி ரஹமத்திடம் மன்னிப்பு கேட்பார். பெருந்தன்மையுடன் அங்கிருந்து சென்று விடுவான் ரஹமத். அற்புதமான காட்சி அது.
படத்துக்காக இயக்குனர் செய்த மாற்றம், ரஹமத் பாத்திரத்தை மேலும் வெகுளியாக காட்டியது. அது பொருத்தமாகவும் இருந்தது. ஏமாற்றிய வாடிக்கையாளனை கத்தியால் குத்தியதால் கைது செய்யப்பட்ட ரஹமத்தை காப்பாற்ற ஒரு வக்கீலை ஏற்பாடு செய்வார்கள் அவனுடன் தங்கி இருந்த மற்ற ஆப்கானியர்கள். நடந்த சம்பவத்தை அந்த வக்கீல் கோர்ட்டில் மாற்றி சொல்லும்போது பொய் சொல்ல விரும்பாத ரஹமத் தான் அம்மனிதனை கத்தியால் குத்தியதை ஒத்துக் கொள்வான். அவனது நேர்மையை கண்டு வியக்கும் நீதிபதி மரண தண்டனைக்கு பதிலாக பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கிறார். கதையில் இக்காட்சி இல்லை. அதே போல் கதையில் மினியின் தந்தையுடன் ரஷ்யர்கள் ஆங்கிலேயர்கள் மற்றும் அரசியல் பற்றியெல்லாம் பேசுகிறான் ரஹமத். கதையில் தன் முன்னே வந்து நிற்கும் இளம்பெண் தான் பத்து வருடங்களுக்கு முன் தான் பார்த்து நட்பு கொண்ட மினி என்பதை அறியாதவனாக இருக்கிறான். அவள் இன்னும் சிறு குழந்தையாகவே இருப்பாள் என்று நினைக்கும் அளவுக்கு அப்பாவியாக படத்தில் சித்தரிக்கப் படுகிறான்.
படத்தின் நாயகன் வேடத்தில் நடித்த பால்ராஜ் சஹானியின் நடிப்பை பற்றி எழுத வார்த்தைகளே இல்லை. அத்தனை யதார்த்தம் அத்தனை உருக்கம். படத்துக்கு தன் இசையால் ஜீவன் அளித்திருக்கிறார் சலில் சவுத்ரி. புகழ் பெற்ற பாடலான "கங்கா ஆயே கஹான் ஸே " இடம்பெற்ற படம் இது. கதையை படித்தவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். படத்தை பார்க்காதவர்கள் முதலில் கதையை படித்து விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். படத்தின் பல காட்சிகளில் என் மனைவி முன்னாலேயே தேம்பி அழுததை வெட்கமின்றி ஒத்துக் கொள்கிறேன். நீங்களும் அவ்வாறே செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...