Monday, December 10, 2012

நாளைக்கு இறந்தவன்



சிலரைப் பார்க்கையில் அவர்கள் ஏதோ ஒருவகையில் தற்காலிகமானவர்கள் என்ற கணிப்பு வரத் தொடங்கியபோது ரமணனுக்கு பதிமூன்று வயது தான் ஆகியிருந்தது. தற்காலிகம் என்றால் வாழ்க்கையிலா, படிப்பிலா வேலையிலா என்று உறுதியாக அவனுக்குத் தெரியவில்லை. வெற்றியடைந்தவர்கள் தோல்வியடைந்தவர்கள் என்ற வித்தியாசமும் இல்லை. நண்பர்கள் தெரிந்தவர்கள் உறவினர்களில் யாரைப் பற்றியேனும் திடீரென்று இந்த நினைப்பு வரும். எதிர்பாராமல் ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்களுடனான தொடர்பு என்பதே சுத்தமாக இல்லாதபடி ஏதாவது நடக்கும். பின்னர் அவர்கள் அவன் வாழ்க்கையில் ஒரு போதும் திரும்ப வருவதே இல்லை. உள்ளுணர்வு சொல்லியபடியே விஷயங்கள் சிலருக்கு நடக்க ஆரம்பித்தப் பின் ரமணன் இந்த விஷயங்களைக் கவனிக்கத் தொடங்கினான். இன்னதென்று வெளியில் சொல்ல முடியாத விசித்திரமான அந்த நினைப்பு அவனை அலைக்கழிக்கத் தொடங்கியிருந்தது.

உதாரணத்துக்கு பிரிட்டோ ஸார் பையன் லெனின். பார்ப்பதற்கு இழைத்து வைத்த பனைமரம் போல் இருப்பான். நல்ல உயரம். கருப்பு நிறமானாலும் அதில் ஒரு மின்மினுப்பு இருக்கும். பிரிட்டோ ஸார் ரமணன் படித்த நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவரும் லெனினின் அம்மாவும் நல்ல குள்ளம். அப்படி கருப்பு ஒன்றும் இல்லை. இவன் மட்டும் எப்படி இப்படி இருக்கிறான் என்று தோன்றும். ரமணனுக்கு ஏழெட்டு வயது மூத்தவன். மெட்ராசில் காலேஜில் படித்துக்கொண்டிருந்தான். அறந்தாங்கி ஹவுசிங் யூனிட்டில் இருக்கும் தன் வீட்டுக்கு மாதத்துக்கு ஒரு முறையோ இரு முறையோ வருவான். இவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை வேடிக்கைப் பார்த்தபடி பம்ப் ரூம் படிக்கட்டில் அமர்ந்திருப்பான். ரமணனிடம் மட்டுமில்லாமல் அவன் நண்பர்களிடமும் நன்றாகப் பேசுவான். இதோவரைக்கும் கேள்விப்பட்டிராத புது விஷயங்கள் சொல்வான். வெளிநாட்டு செனட்டின் மணம் நிழல் காற்றுப் போல அவன் உடலைச் சுற்றிப் படர்ந்ந்திருப்பது போல இருக்கும். நேர்த்தியான உடை அணிவான். மிருதுவான வண்ணங்களில் அவன் அணியும் சட்டைகள் நிச்சயம் உள்ளூர் கடைகளிலோ மெட்ராசிலோ கூட கிடைக்க வாய்ப்பில்லை என்று ஷேக் சொல்வான். பிரிட்டோ சாரின் அண்ணன் கனடாவில் இருந்தார். அக்காவோ தங்கையோ,அப்பாவின் சிஸ்டர் என்று தான் லெனின் சொல்வான், பிரான்சில் இருந்ததால் வசதிக்குக் குறைவில்லாத குடும்பம். நன்றாகப் படித்தானா இல்லையா என்றெல்லாம் தெரியாது. மெட்ராசில் கல்லூரியில் கம்ப்யூட்டர் படித்துக்கொண்டிருந்தான் என்று மட்டும் தெரியும். அப்போது கம்ப்யூட்டர் பற்றிப் பாடப் புத்தகத்திலேயே படித்ததில்லை. கல்கண்டில் தான் இதுபோன்ற விஷயங்கள் வரும். லெனினின் சமவயது நண்பர்கள் யாரும் இவர்களோடுப் பழகுவதில்லை. அவர்கள் எப்போதும் தனிக் குழுவாகத் தான் இருப்பார்கள். லெனின் அவர்களோடு பேசினாலும் ரமணன் குழுவிடம் உரையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவான்.

சில நாட்களாகவே ஏனோ லெனின் இங்கே நீண்டநாள் இருக்க மாட்டான் என்றே ரமணனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. ஒன்று அவன் கனடாவுக்கோ ப்ரான்சுக்கோ சென்று விடுவான் அல்லது ஏதோ ஒரு விதத்தில் நிச்சயம் இங்கிருந்து நிரந்தரமாகப் போய் விடுவான் என்றே ஏனோ ரமணன் நினைக்கத் தொடங்கினான். நாட்கள் செல்லச் செல்ல லெனினைப் பார்க்கையில் அதே எண்ணம் ஓடுவதால் பெரும்பாலும் அவன் இருக்கும் நேரங்களில் விளையாடச் செல்லமாட்டான். திடீரென்று ஒரு நாள் லெனின் இறந்து விட்டான் என்று தகவல் வந்தது. மெட்ராசில் எங்கோ மோட்டார்சைக்கிளில் போகும்போது லாரி மோதி அந்த இடத்திலேயே இறந்திருந்தான். உடல் அறந்தாங்கிக்குக் கொண்டுவரப்படும்போது அதில் காயமே இல்லை. தூங்குகிறவன் போலிருந்தான். பெருங்குரலெடுத்து அவன் குடும்பம் கதறத் தொடங்கும்போது ரமணன் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினான். அது காலாண்டு விடுமுறை நேரம். வீட்டுக்கும் போக முடியாமல் கிரவுண்டுக்கும் செல்லாமல் எங்கெங்கோ நடந்துகொண்டிருந்தான். லெனின் நிரந்தரமாக எங்கோ சென்றுவிடப்போவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டும் யாரிடமும் அதைச் சொல்லாமல் இருந்தான் என்ற எண்ணம் அவனை உறுத்திக்கொண்டிருந்தது.

ஒரு வாரத்துக்கு யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தான். பின் கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டில் மூழ்கிய பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான். என்றாலும் கிரிக்கெட் விளையாடுகையில் பம்ப்ரூம் படிக்கட்டில் லெனின் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு இவனை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. விளையாட்டில் தடுமாறத் தொடங்கினான். அணியின் ஹிட்டரான அவன் பல முறை டக் அவுட் ஆனான். கேட்சுகளைத் தவற விட்டான். பம்ப் ரூம் பக்கம் பீல்டிங் செய்யவே மறுத்து விட்டான். கொஞ்சம் கொஞ்சமாக விளையாட வருவதைக் குறைத்துக் கொண்டு விட்டான். பள்ளி விட்டால் வீடு. உலகம் சுருங்கத் தொடங்கியது.

படிப்பில் மட்டும் கவனம் சிதறவே இல்லை. பள்ளியின் முதல் மாணவன் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தான். சில நாட்களில் இவனுக்குப் பெரும் விருப்பமான இங்கிலீஷ் டீச்சர் ரோஸ்லின் மேரி இனி இந்தப் பள்ளிக்கு வரமாட்டார் என்ற நினைப்பு வரத் தொடங்கியது. ஓரிரண்டு மாதங்களில் பட்டுக்கோட்டையில் தன் கணவன் வேலை பார்க்கும் பள்ளியிலேயே அவருக்கு மாற்றல் கிடைத்துப் போய்விட்டார். அந்த நேரத்தில் தான் சீனிவாசன் அந்தப் பள்ளிக்கு வந்து சேர்ந்தான். காலாண்டு முடிந்து அட்மிஷன் ஆன பையன் ரமணனுக்குத் தெரிந்து அவன் தான். அவன் அப்பா பி.டபிள்.யூ.டியில் எஞ்சினியர் .அடிக்கடி ஊர் மாறும் உத்தியோகம். மெட்ராஸ், ஊட்டி, கோயம்பத்தூர் என்று பல இடங்களில் ஆங்கில மீடியத்தில் படித்தவன். இந்த நேரத்தில் வேறெந்த பள்ளியிலும் அட்மிஷன் கிடைக்காததால் ரமணன் படிக்கும் அரசுப் பள்ளியிலேயே சேர்ந்தான் சீனிவாசன்.

நல்ல நிறம். வெள்ளைச் சீருடையில் பொலிவாகத் தெரிவான். ரமணன் ட்யூஷன் படிக்கும் கிராண்ட் மாஸ்டர் ட்யூஷன் செண்டரிலேயே அவனும் சேர்ந்தான். வந்த சில நாட்களிலேயே பலர் அவனுக்குத் தோழர்களாகி விட்டனர். கவிதாவும் அவனிடம் அடிக்கடி சிரித்துப் பேசியது ரமணனுக்கு உறுத்தலாக இருந்தது.

ஏழாம் வகுப்பிலிருந்து அவள் மீது ரமணன் மையல் கொண்டிருந்தான். அவளும் இவனிடம் சிரித்துப் பேசினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் நெருங்காமல் தள்ளி தான் இருந்தாள். நடுநிலைப் பள்ளியாதலால் எட்டாம் வகுப்புக்குப் பின்னர் இருவரும் வெவ்வேறு பள்ளிகளுக்குப் பிரிந்து விட்டார்கள். அவள் கேர்ல்ஸ் ஹை ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தாள். ட்யூஷன் மட்டும் ஒரே இடத்தில். கடந்த சில மாதங்களாக அவளிடம் இருந்து சாதகமான சமிஞ்ஞைகள் வரத் தொடங்கியிருந்தன. அவள் வீடு இருக்கும் ப்ளாக்கின் எதிரே இருக்கும் திட்டில் ரமணன் அமர்ந்து அவள் வீட்டு ஜன்னலைப் பார்த்துக்கொண்டிருப்பான். முன்னரெல்லாம் திறக்காத ஜன்னல் இப்போது அடிக்கடித் திறந்தது. ஜன்னல் கம்பிகளூடே விவரிக்க முடியாத முகபாவனைகளோடு அவளும் இவனைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். இருவரும் வெளி இடங்களில் பேசிக்கொள்ளும்போது சகஜமாக இருந்தாலும் ஜன்னல் சந்திப்பில் முற்றிலும் புதிய நபர்களாய் இருந்தார்கள். முகக்குறிப்பும் சமிஞைகளும் இது வரை கற்பனை கூட செய்திராத பரவஸ் உணர்வை இருவருக்கும் தந்திருந்தது. உலகம் அவள் வீட்டு ஜன்னலை மையமாகக் கொண்டு சுற்றிக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஒரு மாதிரியான மயக்க நிலைக்கு ரமணன் போய்க்கொண்டிருந்தான். மற்றவர்கள் கவனிப்பதையும் கிண்டலடிப்பதையும் அவன் பொருட்படுத்தவில்லை.

இந்த நேரத்தில் நந்தி போல் சீனி வந்து விட்டதாக ரமணன் உணர்ந்தான். கவிதா மட்டுமல்லாமல் அங்குப் படிக்கும் எல்லா பெண்களுமே சீனியிடம் பேசினார்கள். முன்பு அந்த இடத்தில் தான் மட்டுமே இருந்தது ரமணனுக்கு நினைவு வந்தபோது சீனி மேல் பகையை வளர்க்கதொடங்கினான். சீனியின் அப்பா அலுவலகத்திலேயே கவிதாவின் அப்பாவும் வேலை பார்த்ததால் இரு குடும்பத்துக்கும் இடையில் புது உறவுத் தொடங்க சீனி அவள் வீட்டுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். அவனுடன் சிரித்துப் பேசினாலும் ரமணனுக்கு ஜன்னல் தரிசனம் தர கவிதா தயங்கவில்லை. எப்படியாவது அவளிடம் தான் காதலைச் சொல்லி விட வேண்டும் என்று முன்பை விடப் பதற ஆரம்பித்தான். சீனி இவனிடமும் பேசினாலும் தான் எங்கோ வெளிநாட்டில் இருந்து வந்தவன் போலவே நடந்துகொண்டான். ரமணனின் நண்பர்களுக்கும் சீனி மீது ஆத்திரம் இருந்தது. ஒரே ஒரு விஷயம் தான் ரமணனுக்கு ஆதரவாக இருந்தது. சீனிக்கு படிப்பில் அவ்வளவுப் பிடிப்பில்லை. ஆங்கிலத்தில் மட்டும் மற்ற அனைவரை விடவும் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் மற்ற பாடங்களில் சுமாராக இருந்தான். இது தெரிந்ததும் ரமணனுக்கு கொஞ்சம் தைரியம் பிறந்துவிட்டது. நன்றாகப் படிக்காதப் பையன்களை பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்ற அனுபவ உண்மை அவனுக்குக் கைகொடுத்தது. சீனியிடம் பெண்கள் பேசுவதைக் குறைத்துக் கொண்டனர். அவன் மக்கு என்று ரமணன் ரகசியமாக தகவல் பரப்பி மகிழ்ந்தான்.

சீனிக்கு இதுகுறித்து பெரிய கவலை இல்லாமல் இருப்பதை ஒருகட்டத்தில் அவன் கவனிக்க ஆரம்பித்தான். பணக்காரப் பையன் என்பதாலோ என்னவோ படிக்காவிட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன் போல் அசட்டையாகவே இருந்தான். அவன் நடவடிக்கைகளை உற்று நோக்கி வந்த ரமணன் லெனினைப் போல் இவனும் நிரந்தரமில்லாதவன் என்று தோன்ற ஆரம்பித்தது. ஏனோ ஒரு கட்டத்தில் அவன் விலகிச் சென்று விடுவான் என்று ரமணன் நம்ப ஆரம்பித்தான். ஒருவகையில் இது அவனுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. அவன் விலகி விடும் பட்சத்தில் கவிதாவின் கவனம் தன் மீது மட்டுமே இருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே சீனி தோல்வியடைந்தான். நானூறுக்கும் மேல் மதிப்பெண் எடுத்த ரமணன் மீண்டும் கவனம் பெற்றான். கவிதாவிடம் இருந்து ஒருநாள் கடிதம் கிடைத்தது. தனிமைச் சந்திப்புகளில் முத்தம் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு அவனிடம் கவிதா நெருங்கியிருந்தாள்.

இவன் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருக்கும்போது பள்ளி செல்லும் நேரங்களில் சில சமயம் சீனிவாசன் எதிர்ப்படுவான். முகத்தில் அதே அலட்சியபாவம். இவனிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு ஏதோ முக்கியமான வேலையைப் பாதியில் விட்டு வந்தவனைப் போல் சட்டென கிளம்பிவிடுவான். ரமணனுக்கு முன்பு போல் இவனிடம் கோபமோ பொறாமையோ இல்லை. சொல்லப்போனால் சீனி நிரந்தரமில்லாதவன் என்ற நினைப்பு சற்று வருத்தம் தந்தது. அசம்பாவிதம் ஏதும் நிகழக்கூடாது என்று நினைத்துக்கொண்டான். நல்லவேளையாக சீனியின் அப்பாவுக்கு விழுப்புரத்துக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்து அங்கு சென்று விட்டார்கள். அதற்கப்புறம் அறந்தாங்கிப் பக்கம் ஒரு முறைக் கூட அவன் வந்ததில்லை.

கவிதாவுடனான ரமணனின் காதல் ஊர் முழுக்கத் தெரிந்துவிட்டது. தெருவுக்குள் ரமணன் தலை மறையும் சமயத்தில் எங்கிருந்தோ ஒரு குரல் 'கவிதா' என்று கத்தும். விஷயம் அவர்கள் பெற்றோர்களுக்கு மட்டும் தெரியாமல் எப்படி இருக்கும்? ஒரு கட்டத்தில் அவள் அப்பா இவனை சந்தித்து பொதுவாக அறிவுரை செய்வதுபோல் பேசிப்பார்த்தார். இவன் வீட்டிலும் கவிதாவைப் பற்றி இவன் இருக்கும் சமயத்தில் கடும் அர்ச்சனை நடக்கும். என்றாலும் இருவரும் எதையும் பொருட்படுத்தாமல் இருந்தனர். காதல் வேகத்தில் படிப்பில் கவனம் குறைந்ததை ரமணன் அவ்வளவாக கவனிக்கவில்லை. எத்ரிபாராத விதத்தில் ப்ளஸ் டூவில் எழுநூறு சொச்சம் மார்க் தான் எடுத்தான். கவிதா ஆயிரத்தைத் தாண்டியிருந்தாள். எப்படியும் அவளுக்கு மெடிக்கல் சீட் கிடைத்துவிடும் என்று பேசிக்கொண்டார்கள்.

ரிசல்ட்டுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வருவதைக் குறைத்துக் கொண்டாள் கவிதா. அவளுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கக்கூடாது என்று கோவில்களில் முறையிடத் தொடங்கியிருந்தான் ரமணன். ஓரிரு முறை அவனைச் சந்தித்தாலும் இதற்கு முன் எதுவுமே நடக்காதது போலவும் தான் அவனுக்கு வெறும் தோழி தான் என்பது போலவும் பேசினாள் கவிதா. ஒரு கட்டத்தில் இவளும் நிரந்தரமில்லாதவள் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவன் பதற்றமடையத் துவங்கி இருந்தான். ஒருவேளை அவள் மெடிக்கல் சீட் கிடைத்து சென்று விட்டால் கூடப் படிக்கும் எவன் கூடவோ அவள் பழகத் தொடங்கிவிடுவாள் என்ற எண்ணம் அவனை தாக்கத் தொடங்கியது.

எப்படியாவது இம்ப்ரூவ்மென்ட் எழுதி நல்ல மார்க் எடுத்து தானும் மெடிக்கல் சீட் வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தான். என்றாலும் என்ன காரணத்தினாலோ கவிதாவுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை. என்ட்ரன்ஸ் எக்சாமில் மார்க் குறைவாக எடுத்துஎடுத்தால் கட் ஆப் குறைந்து அவளுக்கு மெடிக்கல் சீட் வாய்ப்பு பறிபோனது. விஷயம் தெரிந்த ரமணன் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான். தன்னை உதாசீனப்படுதியவளுக்கு இது சரியான தண்டனை என்று நினைத்துக்கொண்டான். முகத்தில் ஒரு நிரந்தரப் புன்னகை குடியேறியது.

கவிதாவுக்கு முன்பு விண்ணப்பித்திருந்த புதுக்கோட்டை அரசு கல்லூரியில் பாட்டனி சீட் கிடைத்தாலும் போக மாட்டேன் என்று அடம்பிடித்து விட்டாள். அவளால் அவமானத்தைத் தாங்க முடியவில்லை. அவள் வீட்டில் மேலும் வற்புறுத்தாமல் விட்டு விட்டனர்.

திரும்பவும் கவிதா வீட்டு ஜன்னல் திறக்கத் தொடங்கியது. என்றாலும் ரமணன் அந்தத் திட்டில் ஒருபோதும் அமரவில்லை. புதுப்புது நண்பர்களுடன் அவன் ஊரெங்கும் சுற்றித் திரிந்தான். அவ்வப்போது புதுக்கோட்டைக்கு சென்று வெஸ்ட் தியேட்டரில் ஆங்கில ஆபாசப் படங்கள் பார்த்து வந்தான். பெண்களைப் பற்றிப் பேசக்கூடிய நண்பர்களிடம் நெருங்கினான். வாணி தியேட்டர் செல்லும் வழியில் உள்ள கட்டைச் சுவரொன்றின் மீது அவனை விடப் பெரியவயது ஆட்களுடன் உட்கார்ந்து ரமணன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததாக அவன் அப்பாவிடம் சிலர் சொன்னார்கள்.

அந்த நேரத்தில் தான் கிருஷ்ணன் ஸார் அவன் இருக்கும் ப்ளாக்கில் குடி வந்தார். கலெக்டர் ஆபீசில் பெரிய உத்தியோகம். அவர் மனைவி பட்டணத்தில் வளர்ந்தவள். நல்ல நீண்ட சுருள்முடியுடன் இடுப்பில் மடிப்புடன் வளைய வந்த அவளை ஹவுசிங் யூனிட்டின் கண்கள் வெறித்துக்கொண்டே இருந்தன. தொப்புள் சற்று தெரியும் வண்ணம் எடுப்பாக சேலை கட்டும் அவளை ரமணனும் கவனிக்காமல் இல்லை. என்றாலும் மனதின் ஒரு ஓரத்தில் இன்னும் கவிதா இருப்பதால் அவளைக் கண்டுகொள்ளாமல் இருந்தான். கிருஷ்ணன் ஸார் பல சமயம் ஆபீஸ் வேலைக்கென வெளியூர் சென்று விடுவார். ஒரு முறை வீட்டில் யாரும் இல்லாத போது கிருஷ்ணன் ஸார் மனைவி பழைய பேப்பர் இருக்கிறதா என்று கேட்டு ரமணன் வீட்டுக்கு வந்தாள். அதற்கு முன் அவ்வளவு கவர்ச்சிகரமானப் பெண்ணை அருகில் பார்திரார்த்த ரமணன் அவள் அங்கு இருந்த ஐந்து நிமிடத்துக்குள் அத்தனைப் பதற்றம் அடைந்தான். அவள் அவன் கை தொட்டுப் பேசியது அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு முறை வடகரை முருகன் கோவில் தெப்பக் குலத்துக்கு அருகே சைக்கிளில் சென்ற போது பின்னாலேயே கவிதா சைக்கிள் மிதித்துக்கொண்டு வந்ததை கவனித்து நின்றான். நெருங்கி வந்த அவளின் கண்கள் கலங்கியிருந்தன. தன்னுடன் இனிமேல் பேசமாட்டானா என்று அவனிடம் கேட்டாள். தனக்கு எதிலும் பிடிப்பில்லை என்று அவளுக்கு பதில் சொன்னான் ரமணன். என்றாலும் தான் அவளை மறந்து விடவில்லை என்றான். அவள் திரும்பவும் வந்து பேசியதில் மகிழ்ச்சி என்றாலும் உடனே அவளுடன் பழகி விடக்கூடாது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். மெடிக்கல் சீட் கிடைத்துத் தன்னை விட்டுப் பிரிய அவள் தயாராய் இருந்ததை அவன் மறக்கவில்லை. இன்னொரு நாள் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். அவன் போய் வெகு நேரம் வரை சைக்கிளின் ஹேண்டில்பாரை நிமிண்டியபடி கவிதா அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.

ஒரு நாள் அவன் அம்மா கோவிலுக்கு சென்று இருந்த சமயத்தில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தாள் மெல்லிய நைட்டியுடன் கிர்சுஷ்ணன் ஸார் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் பார்வை இவனது சட்டை போடாத உடம்பின் மீது இருந்தது. வீட்டில் போரடித்ததால் ஏதேனும் பட கேசட்டுகள் கிடைக்குமா என்று கேட்டாள். தங்கள் வீட்டில் வி.சி.ஆரே இல்லை என்று ரமணன் சொன்ன போது ஆச்சரியத்துடன் சிரித்தவள் அதற்குப் பிறகும் போகாமல் நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். இந்த வயதில் என் படிக்காமல் இருக்கிறான் என்று உரிமையுடன் கண்டித்தாள். ரமணன் உள்ளே சென்று சட்டை போட்டு வருகையில் அவள் ஹாலின் சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவனை அருகில் அழைத்து படங்களில் இருப்பவர்கள் யார் யாரேன்றுக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் கை இவன் தோள்பட்டை மீது இருந்தது. ரமணனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் மெத்தென்ற அவள் உடல் அவன் மீது உராய்ந்தது பிடித்திருந்தது. சற்று நேரத்தில் அவள் அவன் உடலை அனைத்துக் கொண்டிருந்தாள். மயக்கத்துடன் அவள் இடுப்பை அவன் பிடிக்கையில் கிருஷ்ணன் ஸார் மனைவி அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டாள். வெகு நேரம் கழித்து தான் அவர்கள் எழுந்தார்கள்.

திரும்பவும் அவன் உதட்டில் அழுந்த முத்தமிடும் போகும் போது கதவு தட்டப்பட்டது. அவள் பதறாமல் அவனை மீண்டும் அணைத்து இன்னொரு முத்தம் தந்தாள். கதவைத் திறந்த போது வெளியே மாடிப் படிக்கட்டின் மேற்படியில் கைப்பிடி சுவரைப் பிடித்துக்கொண்டு கவிதா நின்று கொண்டிருந்தாள். கிருஷ்ணன் ஸார் மனைவி அவளிடம் 'நல்லா இருக்கியாம்மா?" என்று கேட்டு விட்டு சாவதானமாக மாடியேறிப் போய்விட்டாள். க���ிதா இவனைப் பார்க்காமல் வெளியில் எங்கோ பார்த்துகொண்டு நின்றாள்.பின் மெல்ல இறங்கி கீழே போய்விட்டாள். ரமணன் அவளை கூப்பிடவே இல்லை. ஒரு கையில் தாவணியின் நுனியைத் திருகிக் கொண்டே தன் ப்ளாக்குக்கு நடந்து செல்லும் அவளைப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தான். சுவாசத்தில் கிருஷ்ணன் ஸார் மனைவியின் அக்குள் வாசனை சுழன்றுகொண்டிருந்தது.

அடுத்த நாள் எல்லோரும் வெளியில் சென்று விட்ட பகல் நேரத்தில் கவிதா உத்தரத்தில் தொங்கினாள். ரமணன் புதுக்கோட்டையில் படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது அவசரமாக சென்று கொண்டிருந்த ராமையா விஷயத்தை சொன்னான். அழுது பிடித்து பேருந்தில் ஏறி ரமணன் ஊர் வருமுன்பே கவிதாவை எடுத்து விட்டிருந்தார்கள். போஸ்ட்மார்ட்டம் போலீஸ் பிரச்சனைகளை சமாளிக்க அவள் அப்பா யாரையோ பிடித்து ஏற்பாடு செய்து விட்டிருந்தார். ரமணன் சுடுகாட்டுக்கு சென்றபோது கவிதாவின் இதயம் பற்றி எரியத் தொடங்கி இருந்தது. அதன் பிறகு ரமணன் வீட்டில் தங்கிய நாட்கள் அரிதாகின. புதுக்கோட்டை, திருச்சி தஞ்சாவூர் என்று எங்கெங்கோ திரிந்துகொண்டிருந்தான். செலவுக்கு என்ன செய்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை. அவனுக்கு பாக்கெட் மணி தருவதை அவன் அப்பா எப்போதோ நிறுத்தியிருந்தார். சில வருடம் கழித்து அவன் சித்தப்பா அவனை மதுரையில் உள்ள தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். அவனுக்கு அங்கு ஒரு டெலிபோன் பூத் ஒன்று வைத்துத் தருவதாக சொன்னார். வீட்டில் சில சண்டைகள், அழுகைகள் அரங்கேறியப் பின் மதுரைக்கு பஸ் ஏறினான்.

தினமும் சாப்பிட்டுவிட்டு மூன்று தெருக்கள் தள்ளி இருக்கும் அந்த பூத்துக்கு சைக்கிளில் செல்வான் ரமணன். காலை ஏழு மணிக்கு சென்றால் இரவு பத்துப் பத்தரை ஆகி விடும். மதியம் ரம்யா கேண்டீனில் சாப்பிட்டு விடுவான். சித்தப்பா கலெக்டர் ஆபீசில் இருந்து திரும்பும் வழியில் எப்போதாவது கடைக்கு வருவார். அதிகம் பேசமாட்டார். இவன் சிகரெட் பிடிப்பது தெரிந்தும் அதைப் பற்றி கேட்கமாட்டார்.ரமணன் பிறந்த சமயத்தில் தான் அவருக்கு வேலை கிடைத்தது. அதனால் இவன் மீது பிரியமாக இருப்பார். வேலை நேரம் அதிகம் இருந்தாலும் ரமணனுக்கு அந்த இடம் பிடித்தமானதாக இருந்தது. கடை குடியிருப்புப் பகுதியிலேயே இருந்தது. மூன்று தெருக்கள் சந்திக்கும் முனையில் பூத் இருந்ததால் நிறையப் பேர் போன் பேசவென்று வருவார்கள். வெளியூரில் வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களிடம் பேச நிறைய பெண்கள் வருவார்கள். நண்பகல் நேரங்களில் தெருக்களில் பெண்களே அதிகம் தென்படுவார்கள். கிருஷ்ணன் ஸார் மனைவியின் உடல் ஸ்பரிசம் தந்திருந்த மயக்கம் கொஞ்ச நாட்களாகவே தலை தூக்க ஆரம்பித்தது.அவனது மீசை தனது வளர்ச்சியில் முழுமை கண்டிருந்தது.

வீட்டில் வேலை செய்து விட்டு வருவதால் உடை விலகுவதில் அவ்வளவாக கவனம் கொள்ளாத நடுத்தர வயது பெண்களின் உடல்களை அவர்கள் போன் பேசும்போது ரசிக்கத் தொடங்கினான். முக்கியமாக மகேஸ்வரி. மாநிறம் என்றாலும் நெடுநெடு வென்ற உயரமும் நிற்கும் மார்பகங்களும் அவள் வரும்போதெல்லாம் ரமணனை கிளர்ந்தெழச் செய்தன. அவள் கணவன் ரியாத்தில் இருந்தான். இரண்டு குழந்தைகள். பெரியவளுக்கு ரமணனை விட ஐந்தாறு வயது கம்மியாக இருக்கும். ரமணன் அவளிடம் கேலியாகப் பேசுவான். அவளும் அடிக்கடிக் கடைக்கு வர ஆரம்பித்தாள். தெருவில் ஆளில்லாத பகல் பொழுதொன்றில் அவள் போனில் பேசும்போது ஸ்டூலில் உக்கார்ந்து கொண்டு நின்று கொண்டிருக்கும் அவள் சேலைக்குள் கால் விட்டு அவள் கால்களை வருடினான். அவள் பேசி முடிக்கும் வரை வருடிக்கொண்டே இருந்தான். சில நாட்கள் கழித்து அவர்கள் இருவரும் தங்கம் தியேட்டரில் பாம்பே படம் பார்த்துக்கொண்டிருந்ததை அந்தத் தெருக்காரர் ஒருவர் பார்த்தார்.

சித்தப்பாவுக்கு விஷயம் தெரிய பல நாட்கள் ஆகியிருந்தன. அதற்குள் அந்தத் தெருவில் உள்ள வி.ஏ.ஓ மனைவி பத்மா, மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்டில் பழக் கடை வைத்திருந்த பழனிச்சாமி மனைவி பிருந்தா ஆகியோரின் உடல் வாசனையை நடமாட்டம் இல்லாத பகல் நேரத்தில் அவர்கள் வீடுகளிலேயே நுகர்ந்து கொண்டிருந்தான் ரமணன். கடை அடிக்கடி பூட்டப்பட்டிருப்பதை பார்த்த தெருக்காரகள் அவன் சித்தப்பாவிடம் தகவல் சொன்னார்கள். அப்போதும் அவன் மீது அவர் சந்தேகப் படவில்லை. சுற்றித் திரிந்த வயசுப் பையன். எத்தனை நேரம் தான் கடையில் உட்கார்ந்துகொண்டிருக்க முடியும் என்று நினைத்தார். கடையில் இவனுக்கு உதவியாக சின்னப் பையன் ஒருவனை உட்கார வைத்தார். ரமணனுக்கு இது வசதியாகப் போய் விட்டது. பகல் வேலைகளில் ஏதாவது ஒரு வீட்டில் திமிறும் உடல்களிருந்து சேலைகளை அவன் அவிழ்த்துக் கொண்டிருந்தான். மெல்லிய உடல்களில் தன்னைப் புதைத்துக் கொள்ளும்போது மனதை அழுத்தும் பாரம் கரைந்து தன்னிலிருந்து இறங்கி வழிவது போல் உணர்ந்தான். வாழ்வில் இழந்தவைகளை அந்த ஸ்பரிசமும் கிசுகிசுப்பாக காதில் வருடும் காமக் குரல்களும் ஈடுகட்டுவது போல் இருந்தது. நிரந்தரம் தற்காலிகம் பற்றி மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் தர்க்கம் அந்தப் பெண்களின் அக்குள்களுக்குள் புதைந்து பல நாட்களாகி இருந்தன.

ஒரு முறை பழனிச்சாமி கடையை அவசரமாகப் பூட்டி விட்டு ஏதோ வேலையாக வீட்டுக்கு வந்தபோது ரமணன் ஹாலில் சோபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு சற்று முன்னர் தான் பிருந்தா அவன் தலையை வருடி விட்டு குடிக்க ஏதாவது எடுத்து வர சமையலறை சென்றிருந்தாள். தன் கணவன் இவனிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவன் டி.வி மெக்கானிக் என்றும் தான் தான் அழைத்ததாகவும் பிருந்தா கூறினாள். என்றாலும் தன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து ஒரு பையன் டி.வி பார்த்துக் கொண்டிருந்ததை பழனிச்சாமியால் ஜீரணிக்க முடியவில்லை. இவனை வேறெங்கோ பார்த்தது போல் அவனுக்கு நினைவுக்கு வந்தது. கடைக்குத் திரும்பிய ரமணன் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான். அடிக்கடி வெளியே எழுந்து போய் சிகரெட் குடித்து வந்ததை கடைப் பையன் கவனித்துக் கொண்டிருந்தான். பழனிச்சாமி தன்னை சந்தேகமாகவும் ஆத்திரத்துடன் பார்த்தது ரமணனுக்கு திரும்பத் திரும்ப நினைவில் வந்து கொண்டிருந்தது.

சித்தப்பாவிடம் ஊருக்கு சென்று கொஞ்சநாள் இருந்து விட்டு வருவதாகச் சொன்னான். அவர் மறுக்கவில்லை. அறந்தாங்கி வந்தபோது தன் வயதையொத்த யாரும் ஊரில் இல்லை என்று அறிந்துகொண்டான். பனிரெண்டாம் வகுப்பில் தவறிய அப்பாஸ், எப்போதோ படிப்பை விட்டு விட்ட சரவணன் போன்ற சிலர் மட்டும் உள்ளூரில் அங்கங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் எங்கெங்கோ படித்துகொண்டும் சிலர் வேலை கிடைத்து சென்று விட்டதையும் அவர்களின் பெற்றோர்கள் பீற்றிக்கொள்வதாக ரமணன் அம்மா அவனிடம் சொன்னாள். அவனும் நன்றாகப் படித்திருந்தால் நல்ல நிலைமைக்கு வந்திருக்கலாமே என்று அழுதாள். ரமணனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை.

கொஞ்ச நாட்களிலேயே மதுரைக்குக் கிளம்பி விட்டான். பஸ்ஸில் வரும் போது கொஞ்ச காலமாக நினைவுக்கு வராத அந்த எண்ணம் திரும்ப வந்தது. அந்த மதிய வெயில் பயணத்தின் போது வந்த அரைகுறைத் தூக்கத்தில் விசித்திரமான கனவுகள் வந்தன. தன்னை சார்ந்த யாரோ நிரந்தரமில்லாத நபர் என்ற நினைப்புத் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டிருந்தது. அது யாரென்று சரியாக கணிக்க முடியவில்லை. முகம் வைக்கும் கறுப்புத் துணியால் போர்த்தப்பட்டிருந்த ஒரு உடல் மீது அம்மா புரண்டு அழுவது போல் கனவு வந்து திடுக்கிட்டு விழித்த போது பஸ் மதுரையை அடைந்திருந்தது. பஸ் நின்றதும் அது வரை உள்ளே வீசிக் கொண்டிருந்த காற்று நின்று சட்டென வெக்கை உறைந்தது.

சித்தப்பாவுக்கு பிருந்தா விஷயம் தெரிந்து விட்டது போல இவனுக்குத் தோன்றியது. அவர் சரியாகப் பேசவில்லை. கடைக்கு வந்தால் வரவு செலவைக் கூட அந்தப் பையனிடமே கேட்டு விட்டு இவனிடம் சொல்லாமல் செல்ல ஆரம்பித்தார். என்றாலும் அவர் வீட்டில் அவனுக்கான இடம் அப்படியே தான் இருந்தது. காலையிலும் இரவிலும் வழக்கம் போலவே அவனுக்கு சாப்பாடு போட்டாள் சித்தி. அவனிடம் முகம் கோணி யாரும் பேசவில்லை. என்றாலும் சித்தப்பா முன்பு போல் இவனிடம் பேசவில்லை என்பது உறுத்த ஆரம்பித்தது.

இறக்கங்களில் மிதிக்கமலேயே சுழன்று ஓடும் சைக்கிள் சக்கரங்களைப் போல் தன்னிச்சையாக இயங்கிக்கொண்டிருந்தான் ரமணன். முன்பு போல் கடைக்கு செல்வதில்லை. கடைக்கு வந்தாலும் வெளியில் வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்காவது சென்று விடுவான். அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பான். நிரந்தரமில்லாமல் போய் விடவிருக்கும் தன்னை சார்ந்த ஆள் யாரென்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. தன் நண்பர்களில் யாரும் அத்தனை எளிதாக தோற்று விடக் கூடியவர்கள் இல்லை என்று நினைத்துக்கொண்டான். அவன் அப்பா அரசு ஊழியர். கண்டிப்பானவர் அவர் அவ்வளவு சீக்கிரம் அறுந்து விடக்கூடிய அளவுக்கு நூலிழைத் தொடர்பா அவருடன் என்று தோன்றும். அவராக இருக்க வாய்ப்பில்லை என்று சமாதனம் செய்துகொண்டான். தான் சிறுவனாக இருந்தபோது என்ன கேட்டாலும் வாங்கித் தந்த அப்பாவைப் பல வகைகளில் ஏமாற்றியதாகக் குற்றவுணர்வு கொண்டான்.பல வருடம் கழித்து அவர் மீது பாசம் தோன்றியது.

திரும்பி வரும்போது நகரப் பேருந்தில் நெரிசலாக இருந்தது. நடுத்தர வயது பெண் ஒருத்தி இவன் பக்கத்தில் வந்து நின்றாள். பேருந்து ஓட்டத்தில் ப்ரேக் பல முறை விழ அவன் அவள் உடல் அருகில் நெருங்கியிருந்தான். மெல்ல அவளுக்குத் தெரியாதவண்ணம் உரசிக்கொண்டே வந்தாலும் அவள் ஒன்றும் செய்யாதவளாக நின்றுகொண்டே இருந்தாள். மெல்ல தைரியம் வரப்பெற்று உடலோடு ஒட்டினான். பஸ்சின் இயக்கமும் குலுங்கலும் இவனுக்கு சாதகமாக அவன் மேலும் அவளை நெருக்கினான். அந்தப் பெண் முகத்தை முந்தானையால் அடிக்கடித் துடைத்துக் கொண்டாலும் அங்கிருந்து நகரவில்லை. ஒரு நிறுத்தத்தில் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அவள் இறங்கி சென்று விட்டாள். ரமணனுக்கு சுகத்தின் மெல்லிழை சட்டென அறுந்தது போல் இருந்தது. அவன் உடலெங்கும் அதிர்ந்தது. கிருஷ்ணன் ஸார் மனைவியிலிருந்து பிருந்தா வரை அவனுக்கு நினைவுக்கு வந்தார்கள். பஸ்ஸில் இருந்து இறங்கியதும் நேரே பிருந்தா வீட்டுப் பக்கம் சென்று பார்த்தான். மணி மூன்றரை ஆகியிருந்தது.

வீட்டில் யாரும் இல்லாதது போல் இருந்தது. உள்பக்கம் தாழிடப்பட்ட கதவைத் தட்டினான். உள்ளிருந்து பதில் இல்லை. உடல் எப்போதும் இல்லாதவாறு நடுங்கிக் கொண்டு இருந்தது. ஏதோ முடிவுடன் திரும்ப செல்ல மனமின்றி அங்கேயே நின்றுகொண்டிருந்தான். திரும்பவும் தட்டினான். சில நிமிடங்களில் தூங்கி எழுந்த முகத்துடன் பிருந்தா கதவைத் திறந்தாள். அவனை உள்ளே வரச் சொன்னாள். கதவை சாத்தியதும் அவளைக் கட்டியணைத்தான். தன் கணவன் வெளியூர் சென்றிருப்பதாகவும் பல முறை அவனை அழைக்க கடைக்கு வந்தும் அவன் அங்கு இல்லை என்று அவள் சொன்னாள். அவன் முகமெங்கும் முத்தமிட்டு சரிந்தாள்.ரமணன் அவள் உடல் மீது வெறியுடன் இயங்கத் தொடங்கினான்.

திடீரென்று கதவை யாரோ வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டது. தன் செருப்பை வீட்டுக்கு வெளியே விட்டு வந்ததது நினைவுக்கு வர ரமணனுக்கு உடல் பதறியது. சட்டென எழுந்து உடைகளைப் பொறுக்கினான். பிருந்தா உதட்டில் கைவைத்து பேசாமலிருக்கும்படி சைகை காட்டினாள். பழனிச்சாமி 'கதவைத் திற பிருந்தா' என்று கத்தினான். ரமணனுக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. பின்புற வழியே சென்றால் பின் வீட்டுக் காரர்கள் யாரேனும் பார்த்து விட வாய்ப்ப்பிருக்கிறது. என்ன செய்வது என்று இருவரும் நின்றுகொண்டிருக்கையில் தாழ்ப்பாளை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தான் பழனிச்சாமி. திடீரென்று நெருப்பின் பிழம்பு இருட்டில் எறிவது போல் ரமணனுக்குத் தோன்றியது. பழனிச்சாமி கையில் பெரிய தடி ஒன்று இருந்தது. அவன் உள்ளே நுழைந்ததும் அலறிக்கொண்டு பிருந்தா கதவருகில் ஓடினாள். ரமணனுக்கு இது கனவாக இருக்கக் கூடாதா என்று தோன்றியது. கால்கள் கட்டுண்டு விட்டதைப் போல் நகர முடியாமல் ஸ்தம்பித்து நின்றான். பழனிசாமி பிருந்தாவை ஓங்கி உதைத்துத் தள்ளிவிட்டு இவனருகில் வந்து நின்றான். காண நேரம் இவனைப் பார்க்கையில் அவன் கண்களில் ஓடிய ரத்த வரிகள் துடித்தது ரமணனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவன் கட்டையை ஓங்கி ரமணன் தலையில் அடித்தான். தடுக்க தூக்கிய கைகளில் அடி விழுந்துகொண்டே இருந்தது. தலையில் இருந்து ரத்தம் வழிந்து அவன் முகம் சிகப்பாகி கீழே விழும்வரை அடித்துக்கொண்டே இருந்தான். உடலில் அசைவு நிற்கும் வரை அடித்துவிட்டு அவனை காலால் புரட்டிப்போட்டான் பழனிச்சாமி. வழிந்து சென்ற ரத்தம் கட்டில் காலை சுற்றி சற்றுத் தேங்கி பின் மேலும் பரவிக் கதவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

தன் நினைவில் சமீப காலமாக வந்து கொண்டிருந்த நிரந்தரமில்லாத நபர் தான் தான் என்பதை உணர்ந்துகொள்ளும் முன்னரே இறந்து விட்ட ரமணனுக்கு அப்போது இருபத்தி மூன்று வயது தான் ஆகியிருந்தது.


-வல்லினம் இணைய இதழில் வெளியான சிறுகதை

Wednesday, November 14, 2012

'தழும்புள்ள மனிதன் '-மொழிபெயர்ப்பு சிறுகதை






(பள்ளிநாட்களில் துணைப்பாட நூலில் படித்த இந்தக் கதை மனதில் பதிந்துவிட்டது. என்னால் முடிந்தவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.)

'தழும்புள்ள  மனிதன் '
சாமர்செட் மாம்
தமிழில்: வெ.சந்திரமோகன் 

பெரிய பிறைப் போல நெற்றியின் ஓரத்திலிருந்து தாவாங்கட்டை வரை ஓடிய பெரிய சிவப்புத் தழும்பு தான் அவனை கவனிக்கச் செய்தது. கடுமையான காயம் ஒன்று தான் இந்தத் தழும்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒரு பட்டாக் கத்தி அல்லது செல்லின் ஒரு துண்டாக இருக்கக்கூடும். வட்டவடிவமான, பெருத்த,  நல்ல சிரிப்புடன் கூடிய முகத்துக்கு அது பொருத்தமாயில்லை. சிறிய, கவனம் ஈர்க்காத தன்மைகளுடன் அவன் இருந்தான். கபடமில்லாத முகக் குறிப்பு. 

அவனது பெருத்த உடலுக்கு அந்த முகம் பொருந்தாமல் தோன்றியது. நல்ல வலுவான மனிதனாக அசாதாரண உயரத்தோடு இருந்தான். கந்தலான சாம்பல் சூட், ஒரு காக்கி சட்டை மற்றும் நைந்து போன சொம்ப்ரேரோ தவிர வேறெதையும் அவன் அணிந்து நான் பார்த்ததில்லை. சுத்தத்துக்கும் அவனுக்கும் நெடுந்தொலைவு இருக்கும். ஒவ்வொரு நாளும் கவுதமாலா நகரத்தின் பேலஸ் ஹோட்டலுக்கு காக்டெயில் நேரத்துக்கு அவன் வருவான். பாரை சுற்றி அமைதியாக உலாத்திக்கொண்டு லாட்ட்டறி டிக்கெட்டுகளை விற்பான். 
ஒருவேளை இது தான் அவனுக்கு வாழ்வாதாரம் என்றால் நிச்சயம் அவன் ஏழையாகத் தான் இருக்க முடியும். ஏனென்றால் ஒருவரும் அவனிடம் லாட்டரி டிக்கெட் வாங்கி நான் பார்த்ததேயில்லை. என்றாலும் அவ்வப்போது அவனுக்கு குடிக்க மது தருவதைப்  பார்த்திருக்கிறேன். அவன் ஒருபோதும் மறுத்ததே இல்லை. ஏதோ நீண்ட தூரம் நடக்கப் பழப்பட்டவன் போல் ஒரு சுழலும் நடையுடன் ஒவ்வொரு மேஜையாகக் கடப்பான். தன்னிடம் இருக்கும் லாட்டரியின் எண்களை ஒரு புன்னகையுடன் சொல்லிக்கொண்டே செல்வான். ஒருவரும் வாங்கவில்லைஎன்றாலும் அதே புன்னகையுடனே கடந்துபோவான். அற்பக் குடிக்காக தான் அவன் அலைகிறான் என்று நினைத்தேன்.

ஒரு மாலை நேரத்தில் நான் அந்த பாரில் பழகிய நண்பர் ஒருவருடன் நின்றுகொண்டிருந்தேன்.  நல்ல வறுத்த மார்டினி அந்த கௌதமாலா நகர் பேலஸ் ஹோட்டலில் கிடைக்கும். அப்போது அந்த தழும்புடைய மனிதன் அங்கு வந்தான். அவனது லாட்டரி சீட்டு வேண்டாம் என்று நான் இருபதாவது முறையாக நான் தலையை அசைத்து மறுத்தேன். ஆனால் என் நண்பர் இணக்கமாக தலையசைத்தார். 

'குவா டால், ஜெனெரல்? வாழ்க்கை எப்படிப் போகிறது?'

' ஒன்றும் மோசமில்லை. வியாபாரம் ஒன்றும் பெரிதாக இல்லை. என்றாலும் மோசம் ஒன்றுமில்லை' 

'என்ன குடிப்பீர்கள், ஜெனெரல்?'
'பிராந்தி.'

அதை குடித்துவிட்டு கிளாசை பாரின் மீது திரும்ப வைத்தான். எனது நண்பரைப் பார்த்து தலையசைத்தான். 'கிரேஷியஸ். ஹாச்டா லியூகோ'

பிறகு திரும்பி எங்களுக்கு அடுத்து நின்று கொண்டிருந்தர்வர்களிடம் லாட்டரி டிக்கெட்டுகளை விற்கலானான்.

'யார் இந்த ஆள்?' என்று என் நண்பரிடம் கேட்டேன். 'முகத்தில் கொடூரமானத் தழும்பு இருக்கிறதே!'

'அது அவன் முகத்துக்கு அழகு சேர்க்கவில்லை, இல்லையா? அவன் நிகராகுவாவில் இருந்து நாடுகடதப்பட்டவன். ஆள் முரடன், கொள்ளைக் காரன் தான் என்றாலும் மோசமானவனில்லை. அவ்வப்போது நான் சில பெசொக்களை அவனுக்குத் தருவேன். அவன் ஒரு புரட்சிகரமான ஜெனெரல். ஒருவேளை அவனது ஆயுதத்தடவாள கள்ள விற்பனை வெளியில் தெரிந்து அரசை சங்கடப்படுத்தாமல் இருந்திருந்தால் அவன் கவுதமாலாவில் லாட்டரி விற்றுக் கொண்டிராமல் போர் அமைச்சராகி இருப்பான். அவனையும் அவனது உதவியாளர்களையும் அவர்கள் பிடித்து நீதிமன்றம் முன் நிறுத்தினார்கள். இதெல்லாம் அந்த நாடுகளில் பெரியவிஷயம், உனக்குத் தெரியும், அவனை சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். பிடிபடும்போதே தனக்கு என்ன நேரப்போகிறது என்று அவனுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். மற்றவர்களுடன் சேர்ந்து முந்தைய இரவில் போக்கர் விளையாடிக் கொண்டிருந்தான். அவனோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர். தீப்பெட்டி அட்டைகளை நோட்டுகளாக அவர்கள் பயன்படுத்தினார்கள். தன் வாழ்வில் அது போன்ற துரதிருஷ்டம் நேரவில்லை என்ற அவன் என்னிடம் சொன்னான்'. 

விடிந்ததும் படைவீரர்கள் அவர்களை தண்டனைக்காக கூட்டி செல்ல செல்லுக்கு வந்தார்கள். அதற்குள் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை தீப்ப்ட்டிகளை உபயோகிக்க முடியுமோ அவ்வளவு தீப்ப்ட்டிகளைத் இழந்திருந்தான். 

அவர்கள் காலின் வராந்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்கத்துப் பக்கத்தில் சுவற்றைப் பார்த்து நிற்க வைக்கப்பட்டனர். சுடுபவர்கள் அவர்களைப் பார்க்கும்படி அவர்கள் நிறுத்தப்பட்டனர். கொஞ்ச நேரத்துக்கு ஒன்றுமே நடக்கவில்லை.  என்ன இழவுக்கு இப்படிக் காக்க வைக்கிறார்கள் என்று இன்சார்ஜ் ஆபீசரிடம் நம் ஆள் கேட்டான். அரசின் கமாண்டிங் ஜெனெரல் தண்டனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக சொன்னான் அந்த ஆபீசர். அவருக்காக தான் எல்லோரும் காத்திருந்தார்கள். 


"அப்போ இன்னொரு சிகரெட் பிடிக்க எனக்கு நேரமிருக்கு" என்றான் நம்மாள். "அந்தாள் எப்பவுமே லேட் தான்".

என்றாலும் அதைப் பற்றவைப்பதற்குள் அந்த ஜெனெரல் -அவர் பெயர் சான் இக்னேஷியோ, அவனை நீ சந்தித்திருக்கிறாயா என்று எனக்குத் தெரியவில்லை- அந்த வராந்தாவுக்கு வந்துவிட்டான். பின்னாலேயே ஏ.டி.சி.யும். வழக்கமான நடைமுறைகள் முடிந்தவுடன் இக்னேஷியோ குற்றவாளிகளிடம் மரணதண்டனைக்கு முன் கடைசி ஆசை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டான். ஐந்தில் நான்கு பேர் தலையசைத்து மறுத்தனர். நம்மாள் மட்டும் பேசினான். 

"ஆமாம், என் மனைவியிடம் விடைபெற விரும்புகிறேன்"

"பியூனோ. எனக்கு ஆட்சேபனையில்லை. அவள் எங்கே இருக்கிறாள்?" என்று கேட்டான் ஜெனெரல்.

"அவள் சிறையின் கதவுக்கருகில் காத்துக்கொண்டிருக்கிறாள்" 

" அப்போ ஐந்து நிமிடத்துக்கு மேல் தாமதமாகாது."

"அவ்வளவு தான், செனார் ஜெனரல்"

" அவனை ஒரு பக்கம் நிறுத்தி வையுங்கள்" 

இரு வீரர்கள் முன்னே செல்ல அவர்களுக்கிடையில் அந்த குற்றவாளி புரட்சிக்காரன் காண்பிக்கப்பட்ட இடத்தை நோக்கி நடந்தான். ஜெனரல் தலையசைத்தவுடன் அந்த கமாண்டிங் ஆபீசர் சுடும் ஆணையைப் பிறப்பித்தான். ஒரே சத்தம். நான்கு பேரும் விழுந்தனர். அவர்கள் விநோதமாக விழுந்தனர், எல்லோரும் சேர்ந்தாற்போல் விழவில்லை. ஒருவர் பின் ஒருவராக, ஒழுங்கற்ற முறையில் ஏதோ கைப்பாவைக் கூத்தில் பொம்மைகள் போல் விழுந்தார்கள். அவர்கள் அருகில் சென்ற ஆபீசர் இன்னும் உயிரோடிருந்தவன் மீது இரண்டு சேம்பர் குண்டுகளை தன் ரிவால்வர் மூலம் சுட்டான். நம்மாள் சிகரெட்டை முடித்து அதன் அடிப்பாகத்தை தூர எறிந்தான்.

நுழைவாயிலில் ஏதோ குழப்பம். ஒரு பெண் வராந்தாவுக்கு துரிதமான நடையுடன் வந்தாள். தன் கையை நெஞ்சின் மேல் வைத்தவாறு வந்தவள் சட்டென்று நின்றாள். பிறகு கைகளை விரித்து நீட்டியபடி அழுதுகொண்டே ஓடி வந்தாள். 

"கரம்பா" என்றான் ஜெனெரல்.

அவள் கருப்பு நிறத்தில் உடையணிந்திருந்தாள். கூந்தலை ஒரு முக்காடால் மூடியிருந்தாள்.முகம் வெளுத்து பிரேதக்களையில் இருந்தது. ஒரு சிறுமியை விட கொஞ்சம் தான் பெரியவளாயிருந்தாள். மெலிந்து சாதாரண உடலமைப்பில் இருந்தாலும் கண்கள் விசாலமாய் இருந்தன. ஆனால் அவை வேதனையால் அலோங்கோலமாய் தெரிந்தன. அவள் ஓடி வருகையில் சிறிது திறந்திருந்த வாயும் வேதனை நிறைந்த முகமும் அவளை அத்தனை அழகாய் காட்டின. வீரர்கள் ஆச்சர்யத்தில்   மூச்சுத் திணற  அவளைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.

கலகக்காரன் ஓரிரு அடிகள்  முன்னால் வந்து அவளை எதிர்கொண்டான். அடைக்கும் குரலில் கத்திக்கொண்டே அவனது கரங்களுக்குள் தன்னை அவள் புதைத்துக்கொண்டாள். 'அல்மா டி மி கோரோசான், என் இதயத்தின் ஆன்மாவே' என்றபடி அவளது உதடுகளின் மேல் தன் உதடுகளை வைத்து அழுத்தினான். அதே கணம் கிழிந்து கசங்கிய தன் சட்டைக்குள் இருந்து ஒரு கத்தியை எடுத்தான் .அதை வைத்திருக்க அவன் என்ன செய்து சமாளித்தான் என்று எனக்குப் புரியவில்லை. அவளது கழுத்தில் குத்தினான். வெட்டப்பட்ட நரம்பிலிருந்து ரத்தம் வெளிப்பட்டு அவனது சட்டையை நனைத்தது. பின் அவளது உடலை கரங்களால் அணைத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை அவளது உதட்டில் தன் உதடைப் பதித்தான். 

அத்தனை சீக்கிரம் அது நடந்துவிட்டது. பலருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. என்றாலும் சிலர் பயங்கரமாக அலறினர். அவன் மீது பாய்ந்து அவனைப் பிடித்துக்கொண்டனர். அவர்கள் அவன் மூச்சு விடும்படி தங்கள் பிடியைத் தளர்த்தினர். ஏ.டி.சி மட்டும் பிடிக்கவில்லைஎன்றால் அந்தப் பெண் கீழே விழுந்திருப்பாள். அவள் நினைவிழந்தாள். அவளை தரையில் படுக்கவைத்த வீரர்கள் துயரம் நிறைந்த முகங்களுடன் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தனர். கலகக்காரனுக்குத்  எங்கு தாக்கவேண்டும் என்று தெரிந்திருக்கிறது. ரத்தத்தை நிறுத்தமுடியாது என்று அவன் அறிந்திருந்தான். சிறிது நேரத்தில் அவள் பக்கம் முழங்காலிட்டு அமர்ந்திருந்த ஏ.டி.சி எழுந்தான். 

"இறந்துவிட்டாள்" என்று அவன் முணுமுணுத்தான்.கலகக்காரன் சிலுவையிட்டுக்கொண்டான்.

"ஏன் இப்படி செய்தாய்?" என்றான் ஜெனரல். 

"நான் அவளை நேசித்தேன்."

அந்த கூட்டத்தில் இருந்தவர்களிடையே ஒரு பெருமூச்சு எழுந்தது. விசித்திரமான முகங்களோடு அவர்கள் கொலைகாரனைப் பார்த்தனர். ஜெனரல் மெளனமாக அவனை உற்றுப்பார்த்தான்.

"மேன்மையான செயல் இது" என்றான் கடைசியாக." என்னால் இவனைக் கொல்ல முடியாது. எனது காரை எடுத்துக்கொள்ளுங்கள். இவனை எல்லையில் சென்று விட்டு விடுங்கள். செனார், ஒரு வீரனுக்கு இன்னொரு வீரன் தர வேண்டிய  மரியாதையை உனக்கு அளிக்கிறேன்."

இதைக் கேட்டவர்களிடம் அமோதிப்பான முணுமுணுப்பு எழுந்தது.கலகக்காரனின் தோளில் தட்டினான்  ஏ.டி.சி.

ஒரு வார்த்தை பேசாமல் இரு வீரர்களுக்கு நடுவே காத்திருக்கும் காரை நோக்கி நடை போடத் தொடங்கினான் கலகக்காரன்.


எனது நண்பர் நிறுத்தியதும் நான் அமைதியாக இருந்தேன். இதைக் கண்டிப்பாக விளக்க வேண்டும். அவர் ஒரு கவுதமாலாக் காரர். என்னிடம் ஸ்பானிஷில் தான் பேசினார். என்னால் முடிந்தவரை அவர் சொன்னதை மொழிபெயர்த்திருக்கிறேன். என்றாலும் அவரது உணர்ச்சிமிகுந்த உரத்த பேச்சை குறைக்க  ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. உண்மையை சொன்னால் அது அந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்தது. 

"சரி. எப்படி அவன் முகத்தில் அந்தத் தழும்பு வந்தது?" என்று நீட்டி முழக்கி கேட்டேன்.

"அதுவா , ஒரு முறை பாட்டில் ஒன்றை திறக்கும்போது அது வெடித்ததால் ஏற்பட்டது. இஞ்சி பான பாட்டில் அது."

"அது எனக்குப் பிடிக்கவே இல்லை" என்றேன் நான்.


-The man with the scar
William Somerset Maugham

Friday, November 9, 2012

லூஸ் மோகன் : குரலால் வாழும் நடிகன்



ஓய்வுபெற்ற பெரிய நடிகர்கள் திரும்பவும் செய்திகளில் தென்பட வேண்டுமென்றால்  அவர்கள் மறுபடியும்  சினிமாவில் நடிக்க வேண்டும் அல்லது ஏதாவது படம் தயாரிக்க வேண்டி இருக்கும். குறைந்த பட்சம் தற்போதைய நட்சத்திர நடிகர்களின் படங்களின் வெற்றிவிழாக்களில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் வழங்கவேண்டி வரும். நகைச்சுவை நடிகன் அதுவும் நகைச்சுவைத் துணை நடிகன் திரும்பவும் செய்திகளில் அடிபட அவன் தன் சுவாசத்தையே நிறுத்தவேண்டி வரும். சினிமாவில் சமீபத்தில் காலமான நகைச்சுவை நடிகர் லூஸ் மோகனைப் பற்றிய தகவல் திரட்ட கூகிளில் அவர் பெயரில் தேடியபோது அவரது இறப்பைப் பற்றிய செய்திகள் பதிவுகளே கண்ணில்பட்டன. ஒரு வகையில் கொஞ்சம் ஆறுதலாகக் கூட இருந்தது. பல துணை நடிகர்கள், உதவி இயக்குனர்கள் சந்தடியில்லாமல் அமைதியாக மரணம் அடைந்த செய்திகள் சினிமா ரசிகர்கள் பார்வைக்கு வராமலேயே போய்  விடுகின்றன. பானுசந்தர் சுமன் நடித்த எனக்காக காத்திரு என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் அமைந்த 'தாகம் எடுக்கிற நேரம்' பாடலில் அழகிய சின்ன நாசியுடன் மலர்ந்த கண்களோடு வரும்  நிஷா என்ற நடிகை சில வருடங்களுக்கு முன்னர் எய்ட்ஸ்  வந்து இறந்து போன தகவல் அறிந்திராமல் அந்தப் பாடலை அவளுக்காகவே பார்த்துக்கொண்டிருந்தேன். என் நண்பன் சொல்லித் தான் அந்தப் பெண் இறந்த தகவலே எனக்குத் தெரியும். பிறகு அந்த காதல் பாடல் கூட மனதை கனக்க வைக்கும் பாடலாகி அதை கொஞ்ச நாட்கள் கேட்காமலேயே இருந்தேன். 

இறப்பு செய்திக்கு முன்னர் ஒருமுறை செய்தியில் வந்தார் லூஸ் மோகன் . அவரது மகனும் மருமகளும்  அவரை பராமரிக்க மறுக்கிறார்கள் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த செய்தியும் தளர்ந்து ஒடுங்கிய அவரது தோற்றமும் என்னவோ செய்தது. பிறகு அவர் குடும்பத்தினர் சமாதானம் ஆகி விட்டதாகவும் அவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதாகவும் செய்திகள் வந்தன. அந்தப் பரிதாபத்துக்கு உரிய நடிகன் புகார் கொடுக்க போலீஸ் அலுவலகம் வரும் வரை என்ன நினைத்துக்கொண்டு வந்திருப்பாரோ. திரையுலகம் என்ன வாழ்க்கையே பெரிய சின்ன நடிகர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் புறக்கணித்து விடும் என்பது நாம் அறிந்தது தானே. லூஸ் மோகன் எனக்கு என் அண்ணன் மூலம் தான் அறிமுகம் ஆனார். அறந்தாங்கி த.மு.எ.ச கூட்டங்களில் கூட்டம் சேர்க்க என் அண்ணன் பலகுரல் நிகழ்ச்சி செய்வார். அவ்வப்போது புது நடிகர்கள் குரலில் அவர் பேசிக் காட்டினாலும் நிரந்தரமான மிமிக் குரலாக உசிலை மணியும், லூஸ்மோகனும் தான் இருந்தார்கள். முன்னவரை விட அடுத்தவரின் குரல் மிகவும் பிரத்யேகமானது. மேலும் அது பிராந்தியம் சார்ந்தது. காலம் காலமாக சென்னையில் வாழ்ந்த ஒரு குடிகார வழிப்போக்கன் குரல் அது. " அ ..வந்துக்கின்னு இருந்தேனா..திடீர்னு ஒரு நாயி எதுக்க வந்து கொல்ச்சிச்சி... நா இன்னா பண்ணேன்..ஒரு கல்ல எட்த்து வீசுனேன்  பாரு ..அது டபார்னு காலப் புட்ச்சி கட்ச்சி வச்சீச்சு பா!" என்று பேசி வளராத மிமிக்ரி கலைஞர்கள் இருக்க மாட்டார்கள். திரையுலகம் தராத அங்கீகாரத்தை அவர்களது தனித்த குரல்கள் மிமிக்ரி கலைஞர்களின் வழியாக மக்களிடம் பெற்றுத் தந்தன என்று சொல்லலாம். இன்றும் அவரது குரலில் பலர் பேசுகிறார்கள்.வேலைக்காரன், ரிக்ஷாக் காரன், வாட்ச்மேன் போன்ற அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் சாதாரண மனிதனின் வேடங்களை அவர் மிக எளிதாக செய்தார். 

கண்ணை சுருக்கி சுருக்கி அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தன. மனோரமா,பிந்துகோஷ் போன்ற நாயகிகளுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். கமலஹாசன் சட்டம் என் கையில் படத்தில் நடிக்கும்போது சென்னைத் தமிழ் உச்சரிப்புக்காக லூஸ் மோகனிடம் மொழி பயின்றார் என்பது வரலாறு. அந்த அளவுக்கு சென்னை தமிழின் வீச்சை திரையில் பாய்ச்சியவர் லூஸ் மோகன். நான் சென்னை ட்ரஸ்ட்புரம்  பகுதியில்  சில காலம் தங்கியிருந்தபோது அங்கு பல டிபிக்கல் சென்னை மக்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு நபரின் பெயர் ங்கோத்தா கோயிந்தன் என்று சொன்னார்கள். ஒரு வார்த்தையை தொடங்கு முன் பிள்ளையார் சுழி போல ங்கோத்தா என்று சொல்லி தான் பேசுவார் என்பதால் அவருக்கு இந்த அடைமொழியை வழங்கி இருந்தார்கள் அங்கு உள்ளவர்கள். ஒடிசலான உருவம், கலைந்த தலை, வாயில் பீடி, விளையாடும் சென்னை தமிழ்  என்று கோயிந்தன் எனக்கு லூஸ் மோகன் மாதிரியே தோற்றமளித்தார். திரையில் பார்த்த ஒரு கதாபாத்திரத்தை நேரில் கண்டது போல் இருந்தது அந்த நடிகன் எவ்வளவு தத்ரூபமாக அந்தப் பாத்திரத்தின்  தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று எனக்கு உணர்த்தியது. என்றாலும் இது போன்ற நடிகர்களுக்கு திரையில் பெரிய முக்கியத்துவம் இருக்காது. பிரபலமான நகைச்சுவை நடிகர்களுக்கு துணையாக வரும் பாத்திரங்களிலேயே நடித்து மறைந்து போன நடிகர்களுள் ஒருவராகி விட்டார்லூஸ்மோகன். எனினும் சில சிறு பட்ஜெட் படங்களில் சின்ன சின்ன நடிகர்களுடன் பிரதான நகைச்சுவை நடிகனாகவும் நடித்திருக்கிறார். 

அவரது தந்தை லூஸ் ஆறுமுகம் கூட ஒரு நடிகர் என்பது தான் நான் அறிந்திராத செய்தி. அதுவும்லூஸ்மோகனின் இறப்பு செய்திகளின் ஊடாக கிடைத்த செய்தி தான். சிவாஜி நடித்த நீலவானம் படத்தில் ஒரு காட்சியில் குடும்பம் சகிதமாக தியேட்டருக்கு படம் பார்க்க வருவார் லூஸ் ஆறுமுகம். டிக்கெட் கிழிப்பவராக வரும் சிவாஜியிடம் தன் குடும்ப நபர்களின் எண்ணிக்கையை சொல்லும்போது "அஞ்சி பொண்டாட்டி ஒரு கொழந்தைங்க" என்று சொல்லிவிட்டு பிறகு சுதாரித்துக்கொண்டு "அஞ்சி புள்ளைங்க ..ஒரு பொண்டாட்டி" என்று சொல்வார். பார்ப்பதற்கு லூஸ் மோகன் மாதிரியே இருப்பது பெரிய ஆச்சர்யம். அதே குரலும் கூட. லூஸ்அண்ட் டைட் என்ற நாடகத்தில் நடித்தால் லூஸ் ஆறுமுகம் என்ற பெயர் அவருக்கு வந்தது என்று சொல்கிறது ஒரு செய்தி. அந்தப் பெயர் மோகனிடமும் ஒட்டிக் கொண்டு விட்டது. என்றாலும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் அவரது பிராக்கெட் மோகன் என்று தான் டைட்டிலில் காட்டப்படுகிறது. தொடர்ந்து பல படங்களில் நடித்தார். குறுக்கில் கோடுபோட்ட பனியன், கட்டம்போட்ட கைலி, இடுப்பில் பச்சை கலர் பட்டை பெல்ட் போன்றவை அவரது பெரும்பாலான படங்களின் பாத்திர உடைகளாக இருந்தன. எல்லா நகைச்சுவை நடிகர்களையும் போலவே லூஸ் மோகனுக்கும் சோகக் காட்சிகளில் சிறப்பாக நடிக்க முடிந்தது. சிவாஜி இயக்குனராக நடித்த 'சாதனை' படத்தில் உதவி இயக்குனராக வருவார். ஒரு காட்சியில் படப்பிடிப்பு சமயத்தில் அப்செட்டாக இருக்கும் சிவாஜி தவறான ஷாட் எண் சொல்லிவிட்டதாக எண்ணி லூஸ் மோகனைஅடித்துவிடுவார். பின்னர் தன தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்பார் சிவாஜி. அந்தக் காட்சியில் சிவாஜிக்கு முன்னாலேயே 'அழுது' நடித்து கண்கலங்க வைப்பார் லூஸ் மோகன்.

நன்றாக நினைவில் இருக்கும்படியாக கடைசியாக அவர் செய்த பாத்திரம் தங்கர்பச்சானின் அழகி படத்தில் அமைந்தது. கால்நடை மருத்துவமனை உதவியாளராக வரும் பாண்டுவின் தாய்மாமனாக வந்து விவேக் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவார். தின வசூலில் பெரும்பங்கை டாக்டர் விவேக் எடுத்துக்கொள்ள  கடுப்பான பாண்டு லூஸ் மோகனை அழைத்து வந்து விவேக்கை மிரட்டுவார். மண்ணடி  மன்னாரு  என்ற அந்த பாத்திரத்தில் லூஸ் மோகன் கலக்கி இருப்பார். விவேக்கிடம் பிச்சுவா கத்தியை காட்டி மிரட்ட, அவர் அரிவாளை எடுப்பார். உடனே "ந்தா ..இதையும் நீயே வச்சிக்க" என்று ஜகா வாங்கி விடுவார் லூஸ்மோகன். பிறகு கால்நடைத்துறை அமைச்சராகவே ஆகிவிட்ட பாண்டுவிடம் விவேக் தகராறு செய்ய அவருக்கு டிஸ்மிஸ் ஆர்டர் டைப் பண்ணும் காட்சியில் அனாயாசமாக செய்திருப்பார் மோகன். பாண்டுவை மாட்டி விட நினைக்கும் விவேக் முதலமைச்சரின் போன் அழைப்பை மறைத்து வேறொருவர் பேசுவதாக சொல்லி பாண்டுவிடம் கொடுப்பார். பாண்டு கன்னாபின்னா என்று எகிற கொந்தளிக்கும் லூஸ்மோகன் போனை வாங்கி சொல்வார் " என் மாப்ளைய நீ மினிஸ்டர் ஆக்கினியா ? உன்ன அலேக்கா தூக்கி மல்லாக்க போட்டுடுவேன்". 

அவருக்கு என்று பெரிய இடம் சினிமாவில் அமையவில்லை என்றாலும் அவர் விட்டுச் சென்ற அந்த சிறிய இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பது உண்மை. மேலும் மிமிக்ரி கலைஞர்கள் அவரது குரலில் வெவ்வேறு வசனங்களை உருவாக்கி அவரை உலவ விட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பது நிச்சயம் என்பதால் அந்திமக் காலத்தில் கஷ்டப்பட்ட அவரது ஆத்மா சற்று நிம்மதியடையும்.

-காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை 

Tuesday, November 6, 2012

ராஜன் குறை: நேர்காணல்

உலக சினிமா மற்றும் தமிழ் சினிமா மீதான தெளிவான பார்வையோடு இயங்கி வருபவர்களில் முக்கியமானவர் ராஜன் குறை. தமிழ் வணிக சினிமாவின் சாத்தியங்களையும் அதன் உள்ளீடான விஷயங்களையும் பற்றி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். தில்லியில் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் அவருடன் த சன்டே இந்தியன் பத்திரிக்கையின் சார்பில் செய்த நேர்காணல்...
 


 உங்கள் கல்வி மற்றும் இளமைப்பருவம் பற்றி..

விசேஷமாக சொல்லக்கூடிய  இளமைப்பருவம் கிடையாது. சாதாரண நடுத்தரக் குடும்பம் தான். சாதாரண பள்ளிகளில் தான் கல்வி. ஆனால் என் மிக இளைய வயதிலேயே நாவல்கள் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அறுபத்தெட்டாம்  ஆண்டு ஆடிப்பெருக்கு சமயம் என்று நினைக்கிறேன். எனக்கு அப்போது ஆறு வயது இருக்கும். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வாசிக்க தொடங்கினேன். பதினொன்றாம் வகுப்பு முடிக்கும் முன்னர் சுமார் முன்னூறு தமிழ் நாவல்கள் வாசித்திருப்பேன். வாரம் ஒன்று அல்லது இரண்டு நாவல்கள் வாசித்திருப்பேன். உள்ளூர் நூலகங்களில் நாவல்கள்  படிக்கக் கிடைத்தன. என் அண்ணன் எடுத்துத் தருவார் . அடிப்படையில் அந்த நாவல்கள் படித்தது தான் என்னை உருவாக்கியது என்று நம்புகிறேன். அது தான் எனக்குள் ஒரு சிந்தனையை உருவாக்கியது என்று நினைக்கிறேன். கல்லூரி சென்ற பின்னர் ஆங்கில நாவல்களை வாசிக்கத் தொடங்கினேன். அப்போது உலக இலக்கியங்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது. 82' இல் கல்லூரி முடித்த பின்னர் திருச்சி வாசகர் அரங்கம் என்ற சிறுபத்திரிக்கை சார்ந்த குழு ஒன்றுடனும்  சினி ஃபோரம்  திருச்சி என்ற அமைப்புடனும் தொடர்பு ஏற்பட்டது. பி.யூ. சி வரைக்கும் கோவையில் தான் படித்தேன். திருச்சி நேஷனல் கல்லூரியில் இளங்கலை இலக்கியம் படித்தேன்.

திரைப்பட சங்கம் பற்றி..

நாவல் படிப்பதிலும் சினிமா பார்ப்பதிலும் ஆர்வம் இருந்தது. ஒரு கட்டத்தில் ராஜம் கிருஷ்ணன், ஜெயகாந்தன், அசோகாமித்திரன் போன்றோரின்  நாவல்கள் வாசிக்கத் தொடங்கிய பின்னர்  நம் திரைப்படங்களில் அது போன்ற நாவல்களின் பண்பு இல்லையே  என்று பட்டது. நாவல்களில் கிடைத்த அனுபவத்துக்கும் சினிமாவில் கிடைத்த அனுபவத்துக்கும் ஒரு இடைவெளி இருந்தது போல் எனக்குத் தோன்றியது. திரைப்பட சங்க பரிச்சயதுக்குப் பின்னர் என்ற Bitter Love ஒரு இத்தாலிய திரைப்படம் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் இதற்காகத் தான் ஏங்கிக்கொண்டிருந்தேன் என்று தோன்றியது. விஷூவலாக அந்தப்படம் என்னை ஈர்த்தது.  ஹாலிவுட் படங்களில் ஒரு சாகசத் தனம் தான் இருக்கும். அதில் அன்றாட வாழ்க்கை பதிவாவதில்லை. இந்தப் படம் நான் எதிர்பார்த்தவற்றை தந்தது.  நல்ல இலக்கியங்களில் நாம் காண்பது போல இந்தப் படம் அன்றாட வாழ்வின் மனித உணர்வுகளின் நுட்பங்களை அழகாகக் கையாண்டிருந்தது அந்தப் படம்.. அதன் தாக்கத்தில் பிறகு தீவிரமாக திரைப்பட சங்கத்தில் இயங்க ஆரம்பித்தேன். திருச்சி சினி ஃபோரத்தில் உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரமாகப் பங்காற்றினேன். அது டிவிடிக்களுக்கு முன்பான காலம். வெளிநாடுகளின் தூதரகங்களின் மூலமாக உலகப் படங்களை வாங்கித் திரையிடுவோம்.

மானுடவியலில் முனைவர் பட்ட ஆய்வு செய்திருக்கிறீர்கள். சினிமா பின்னணி கொண்டதா அந்த ஆய்வு?

திரைப்பட சங்கத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் எனக்கு அரசியல் ஈடுபாடு இருந்தது. சமூகம் மேம்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இளம் வயதில் இருந்தே இருந்து லட்சியம். பாரதியாரை படித்ததனால் ஏற்பட்ட சிந்தனை அது. மக்களுக்காக நக்சலைட்டாக மாறிவிடலாமா என்றெல்லாம் எண்ணம் இருந்தது. மார்க்சியத்தின் மீது ஈடுபாடு இருந்தது. கட்சிகளில் சேராமல் இருந்தாலும் அரசியல் மற்றும் சமூக அக்கறை இருந்தது. '69 இல் என்று துக்ளக் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பத்து  வருடங்கள் அதை வாசித்து வந்தேன். பிறகு அந்த பத்திரிக்கையுடன் எனக்கு ஒரு விலக்கம் ஏற்பட்டது. வலது சாரி இடது சாரி கருத்து முரண்பாடுகளால் உண்டான ஒரு விலக்கம் அது. எம்.ஜி.ஆர் முதல்வரான பின்னர் ஒரு சினிமா நடிகர் ஆட்சிக்கு வரலாமா என்ற பேச்சு இருந்தது. உலக சினிமாக்கள் பார்த்த அனுபவத்தில் தமிழ் சினிமாக்களை பார்க்கும்போது மக்களுக்குத் தேவையான சினிமாவாக அது இல்லையே என்று தோன்றியது. ஆனால் மக்கள் தங்களுக்கு உண்மையில் அவசியம் உள்ள, விழிப்புணர்வு தரக்கூடிய படங்களை பார்க்காமல் தமிழில் வெளியான வழக்கமான படங்களையே பார்த்துக்கொண்டிருந்தது எனக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது. திரைப்பட சங்கம் மூலமாக குடிசைப் பகுதி மக்களுக்கு நல்ல சினிமாக்களை எடுத்து சென்றோம். நாம் அவர்களிடம் கொண்டு செல்லும் நல்ல படங்களை அவர்களும் பார்த்தார்கள். ஆனால் அவர்களாகத் தேடி சென்று பார்த்த படங்கள் வணிகப் படங்களாகவே இருந்தன. அவர்களுக்கு என்ன தேவை என்று நாம் நினைக்கிறோமோ அதற்கு மாறாக அவர்களுக்கு வேறு வகையான சினிமா தேவையாக இருந்தது. இதில் ஒரு முரண்பாடு  இருக்கிறது அல்லவா? இதை எப்படி புரிந்துகொள்வது என்ற கேள்வி எனக்கு இருந்தது. அந்த சமயத்தில் கலாச்சார ஆய்வு தொடர்பான படிப்புகள் கல்விப்புலங்களில் பிரபலமாக ஆரம்பித்தன.  வெகுஜனக் கலாச்சாரத்தை எப்படி புரிந்துகொள்வது..இந்திய வெகு ஜன சினிமா  பற்றி கட்டுரைகள் எழுதப்படுகின்றன என்ற தகவல்கள் நண்பர்கள் மூலம் தெரியவந்தன. ஆசிஷ் நந்தி போன்றோர் இது பற்றி நிறைய எழுதினார்கள். அவர் தொகுத்த The Secret Politics of Our Desires புத்தகம் முக்கியமானது. சுந்தர் காளி போன்றோர் அதில் கட்டுரை எழுதி இருந்தார்கள்.அவர் எனக்கு நல்ல நண்பர். எம்.எஸ்.எஸ். பாண்டியன் பராசக்தி படம்  பற்றி எழுதிய புத்தகமும் ரம்.ஜி.ஆர் பற்றி எழுதிய Image Trap ஆர்வம் தந்தது. பிறகு வெகுஜன சினிமாவை புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. எனவே அது தொடர்பாக படிக்க வேண்டும் என்று உத்வேகம் ஏற்பட்டது. அதே போல கிராம்ஷி எழுதிய புத்தகங்கள் இந்த சிந்தனையை வலுப்படுத்தின. அப்போது ஏற்பட்ட ஆர்வம் வெகு ஜன சினிமா பக்கம் செல்ல வைத்தது. எனவே இது தொடர்பான ஆய்வு செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.

தமிழ் சினிமா குறித்த ஆய்வை தொடர்ந்து செய்து வருகிறீர்கள். உலக சினிமா மீது பார்வை கொண்ட உங்களுக்கு தமிழ் சினிமாவின் போதாமைகள் பற்றிய விமர்சனம் என்ன?

போதாமை என்பதை யார் முடிவு செய்வது என்பது தான் முக்கியமான கேள்வி. முந்திரிப் பருப்பு இல்லாத உணவை சாப்பிடாமல் இருக்கவே முடியாது என்று நாம் இருந்தால் முந்திரிப் பருப்பு இல்லாதது ஒரு போதாமை மாதிரி தான் தெரியும். நம்முடைய பழக்கம், தேர்வுகள் போன்றவற்றை வைத்தே விஷயங்களை அணுகினால் அப்படித் தெரியலாம். சமூக ரீதியாக ஐரோப்பிய கலைப் படங்கள் போல தமிழில் ஏன் வரவில்லை என்ற கேள்வி இருக்கிறது. இது ஒரு சமூகவியல் கேள்வியா என்றே எனக்கு சந்தேகம் இருக்கிறது. இதுபற்றி பல கருத்தரங்களில் பேசியிருக்கிறேன். ஆனால் யாரும் இதை கவனிக்கவில்லை. ஒரு உதாரணம், நமது பக்கத்துக்கு மாநிலமான கேரளாவில் வெறும் கலைப்படங்கள் தான் பார்ப்பார்கள் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. ஆனால் அங்கும் விஜய் நடித்த தமிழ் படங்கள் தான் பார்க்கிறார்கள். சிவாஜி, எம்.ஜி.,ஆர் காலத்திலும் அவர்கள் படங்கள் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றன.இங்கே உள்ள ரசனை தான் அங்கேயும். ஆனால் அங்கே அரவிந்தன் நல்ல படம் எடுக்க முடிந்தது. எப்படிஎன்றால் அவர் நல்ல கார்டூன் வரைபவர், சினிமா பற்றி பேசுபவர். அவரது அறைக்கு பல நண்பர்கள் வருவார்கள். அவர்களில் ஒரு பணக்கார நண்பர்  "நான் பணம் தருகிறேன்..படம் எடுங்கள்" என்றார். அரவிந்தன் படங்கள் எடுக்கத் தொடங்கினார். அவரது படங்களுக்கு வெளிநாடுகளில் திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் உள்ளூரில் யாரும் அரவிந்தன் படம் தான் பார்ப்பேன் என்று அலையவில்லை. அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது. இது தமிழ்நாட்டிலும் நடக்க முடியும். ஆனால் யார் இங்கே இதுபோன்ற படங்களுக்கு பணம் போட  முன்வருவார்கள்? எனக்கும் அருமையான படம் எடுக்க முடியும். ஆனால் எனக்கு வாய்த்த நண்பர்கள் அப்படி அமையவில்லையே. அது தற்செயலாக நடக்க வேண்டும். இங்கே தமிழில் ஜெயகாந்தனுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது. அவரும் படம் எடுத்தார். ஆனால் அவ்வளவு சிறப்பாக அவர் படம் எடுத்துவிடவில்லை .  ஏனென்றால் அவருக்கு சினிமா தெரியாது. எனவே தமிழில் நல்ல படங்கள் வராததற்கு  சங்க இலக்கியங்களில் இருந்து உதாரணம் சொல்வது, ஒட்டுமொத்த  சமூகமும் காரணம், திராவிட இயக்கம் காரணம் என்று சொல்லும் போக்கு உள்ளது. திராவிட இயக்கத்தை குறை சொல்ல என்றே ஒரு ஆசை உள்ளது சிலருக்கு. வெகுஜன அரசியல் படித்தவர்களுக்கு பிடிக்காது. அடுக்குமொழி அரசியல் சரியில்லை என்றால் வர்க்க அரசியல் பேசும் கேரளாவின் சி.பி.எம் கட்சி மட்டும் உயர்வானதா என்ன? அரசியல் என்று வந்து விட்டால் எல்லா கட்சியும் ஒன்று தான். சில வேறுபாடுகள்  இருக்கலாம். ஆனால் திராவிட இயக்கத்தை மட்டும் குறைசொல்லும் போக்கு இங்கு உள்ளது. பார்ப்பனர்கள் திராவிட இயக்கத்தை இகழ்வதில் முன்னணியில் இருக்கிறார்கள். எனவே தமிழ் சினிமாவின் நிலைக்கு இது போன்ற காரணங்கள் சொல்வது சரியல்ல. உண்மை என்னவென்றால் எல்லா ஊரிலும் சினிமா என்பது இப்படித் தான் இருக்கிறது. வெகுஜன  ரசனை என்பது வேறுமாதிரியும் கலைப்படங்கள் சார்ந்த ரசனை என்பது  வேறு மாதிரியும் இருப்பது உலகில் எல்லா இடத்திலும் நடக்கிறது.

சினிமா ஒரு குறைந்த வயதுகொண்ட கலை என்ற கருத்து  உள்ளவர்கள் நீங்கள் என்றாலும் தொழில்நுட்பம் என்பதையும் தாண்டி ஹாலிவுட் மற்றும் பல நாடுகளில் சினிமா கதை சொல்லலில் நல்ல தேர்ச்சியும் முதிர்ச்சியும் கொண்டுள்ளன. தமிழ் சினிமாவில் அவ்வாறு தெரியவில்லையே..

இது தொடர்பாக வித்தியாசமான சிந்தனை நிறைய வந்திருக்கிறது. காட்சிப்பிழை திரையில் நாங்கள் எழுதி வருவது அதைத் தான். கதை சொல்லும் முறைமை ஹாலிவுட் அல்லது ஐரோப்பிய சினிமா முறைமையில் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ் சினிமாவுக்கு என்று கதை சொல்லும் முறைமை உண்டு. அதற்குள் அது எவ்வாறு சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். உதாரணமாக எம்.ஜி .ஆரின் வேட்டைக் காரன் படத்துக்கும் படகோட்டி படத்துக்கும் இடையே உள்ள தரம் வித்தியாசம் பற்றி பேசினால் அது சரி என்று சொல்லலாம். எனவே அந்த அழகியலுக்குள் அது எவ்வாறு சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். வேட்டைக்காரன் படம் நன்றாக இல்லை என்பதுடன் அது நன்றாக ஓடவும் இல்லை. விமர்சகர்கள் அல்ல மக்களே அந்த படத்தை புறக்கணிக்கிறார்கள். எனவே இங்கே நல்ல படங்கள் வரவில்லை என்று புலம்புவதில் அர்த்தமில்லை. நல்ல படங்கள் வேறு மொழியில் இருக்கும்போது  பிறகு அந்த தரம் தமிழில் இல்லையே என்று புலம்ப வேண்டியதில்லை. அது பற்றிய தேவை இங்கு இருந்திருந்தால் இந்நேரம் இங்கேயும் நல்ல படங்கள் உருவாகியிருக்குமே! தமிழில் நல்ல படங்கள் வரவில்லை என்றால் ரஜினிகாந்தை திட்டுவது வணிக வெற்றியை குறை சொல்வது போன்ற போக்கு சரியானது அல்ல.  வணிக சினிமா பக்கம் அவர்கள் யாரையும் கையைப் பிடித்து இழுக்கவில்லையே..அரவிந்தனும் அடூர் கோபால கிருஷ்ணனும் பிரேம் நசீரை திட்டிக்கொண்டே இருந்தார்களா என்ன? அவர்கள் தங்கள் வேலையை செய்துகொண்டு தானே இருந்தார்கள்..! தமிழில் அம்ஷன் குமார் எடுத்த 'ஒருத்தி', ஜான் ஆபிரஹாம் எடுத்த 'அக்ரகாரத்தில் கழுதை' போன்ற படங்கள் வந்தன.  ஒன்றுமே இங்கு நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. எனவே தமிழ் சினிமாவில் போதாமைகள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

தீவிர சினிமா ஆர்வலர்களும்  வணிக சினிமாவை வழி நடத்துபவர்களும் ஒரே நேர்கோட்டில் வர வாய்ப்பே இல்லையா?

இயக்குனர் ஷங்கர் தரமான படங்களை தயாரிக்கிறார். பாலாஜி ஷக்தி வேலின் காதல், வழக்கு எண் போன்ற படங்கள் வெகுஜன உரையாடல் சார்ந்த படங்கள் தான். வெகுஜன மனோவியலுக்கு உள்ளே உள்ள படங்கள் அவை. அதைத் தாண்டிய படங்களுக்கு பணம் போடுவது என்பது அரிதானது. வெகுஜன மனோவியலுக்கு உள்ளேயே நல்ல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. காதல்கொண்டேன், ஆடுகளம், காதல் போன்ற பல படங்கள் முக்கியமானவை. அவை வெற்றிபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அவற்றை பாராட்ட நமக்கு மனம் வருவதில்லை. அப்படி  செய்தால் வெங்கட் சாமிநாதன் திட்டுவாரோ என்று யோசிக்க வேண்டியதில்லை. அவர் செய்வது தான் விமர்சனம் என்றில்லை. விமர்சனம் என்பது வளர்ந்து வரும் ஒன்று. எனவே கூர்ந்து நோக்கி விமர்சனம் செய்யும் திறனும் மொழியும் நமக்கு தேவை. அதை காட்சிப்பிழை திரை இதழ் மூலம் செய்ய முயன்று வருகிறோம்.

காட்சிப்பிழை திரை இதழ் மூலம்  தமிழ் சினிமா பற்றி தமிழ் வாசகர்கள் மத்தியில் என்ன மாதிரியான பார்வை தர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..?

முதலில் தமிழ்நாட்டில் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை நீக்க வேண்டியிருக்கிறது.ஓ..தாழ்ந்த தமிழகமே என்ற நினைப்பை மாற்ற முயற்சி செய்கிறோம்.சமீபத்தில் ஒரு சந்திப்பில் பேசும்போது ஒருவர் தமிழ் சினிமா ஐ.க்யூ பற்றி கவலைப்படுவதில்லை என்றார். ஹாலிவுட்டில் அவ்வளவு செலவு செய்து இண்டிபெண்டன்ஸ் டே என்றொரு படம் எடுத்தார்கள். பூமிக்கு வந்த ஏலியன்களை அமெரிக்க அதிபர் நேரடியாக சென்று அழிக்கிறார். எத்தனை அபத்தமான படம். அங்கே கல்வியறிவு பெற்றவர்கள் அதிகம். அவர்கள் அந்த படத்தை ரசிக்கவில்லையா. இங்கே அறிவுக்கும் கேளிக்கைக்கும் தொடர்பே இல்லை. சினிமா கண்டுபிடிக்கப்பட்டது பிரான்சில். பெரிய மாற்றம் தந்தது இத்தாலி. நியோ ரியலிச பாணி படங்கள் தந்த பல இயக்குனர்கள் அங்கே இருந்து வந்தவர்கள். இப்போது பாருங்கள் அங்கே எல்லாம் ஹாலிவுட் படங்கள் தான் பார்க்கிறார்கள். இத்தாலியன் சினிமா என்று இப்போது இல்லவே இல்லை. அது பற்றி யாருமே பேசுவதில்லை. இங்கே ஹாலிவுட் படங்களால் நம் படங்கள் முடங்கியா போய்விட்டன? தமிழனுக்கும் தமிழ் சினிமாவுக்கும் இருக்கும் உறவு மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். உலகில் வேறு எங்கும் இப்படி இல்லை. எனவே நம் மக்களின் தாழ்வு மனப்பான்மையை போக்க வேண்டும் என்பது தான் காட்சிப்பிழையின் நோக்கம். நிறைவேறுமா என்று தெரியவில்லை. என்றாலும் எங்களால் ஆனவரை முயற்சி செய்கிறோம்.

பொதுவாக இங்குள்ள சில இயக்குனர்கள் நடிகர்கள் உலக சினிமா பற்றிய பார்வை கொண்டவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் வணிக சினிமா வெற்றியையே நம்பி இருப்பதன் காரணம் என்ன?

அப்படி சொல்ல முடியாது. முதலில் இது தொடர்பான மொழியை நாம் உடைக்க வேண்டி இருக்கிறது. கமல் அன்பே சிவம் என்று ஒரு படம் எடுத்தார். உண்மையில் அது அற்புதமான படம். அதை ஏன் கொண்டாட நம்மவர்களுக்கு மனம் வரவில்லை. குஜராத் கலவரத்துக்கு பிறகு வந்த படம் அது . அதில் கிறித்துவ மதம் பற்றிய ஒரு குறியீடு வரும். தலைப்பே அன்பே சிவம். மதங்களை கடந்து அன்பு என்றால் என்ன என்று சொன்ன படம். யார் தீவிரவாதி, கம்யூனிசத்தின் வீழ்ச்சி, முதலாளித்துவத்தின் எழுச்சி என்று பல விஷயங்களை உள்ளடக்கிய முக்கியமான படம் அது. ஆனால் அதன் முக்கியத்துவத்தை யாரும் பேசவில்லை. அரவிந்தன் நீலகண்டன் என்ற ஒரு ஆர்.எஸ்.எஸ், காரர் படத்தைப் பற்றி தீவிரமாக சிந்தித்து இந்த படம் இந்து மதத்தை எப்படியெல்லாம்  புண்படுத்துகிறது என்று விளக்கி எழுதினார். கம்யூனிஸ்டுகள் கூட படத்தை தீவிரமாக அணுகினார்களா என்று தெரியவில்லை. எனவே நம்மிடம் நல்ல விஷயங்கள் நடக்கும்போது அதை கொண்டாடும் மனப்பக்குவம் நமக்கு வரவேண்டும். அதைப் பேசுவதற்கான மொழி நம்மிடம் இல்லை எனது தான் உண்மை. காதல் போன்ற படங்கள் மீடியாவால் முதலில் கொண்டாடப் படவில்லை. மக்கள் அந்த படங்களுக்கு தந்த வரவேற்புக்கு பிறகு தான் மீடியா அந்த படங்களை கொண்டாடியது.

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா முழுவதிலும் அனுமதி இல்லாமல் நகலெடுக்கும் கலாசாரம் சர்வசாதாரணமாக காணப்படுகிறதே..

இந்த விஷயத்தில்  மூன்று வகை இருக்கிறது. Another version என்று ஒரு கான்செப்ட் இருக்கிறது. சற்று மாறுபட்ட கதைகளில் ஒரே படம் வேறு மாதிரியாக எடுக்கப்படுவது. அப்புறம் remake என்ற வகை. உதாரணத்துக்கு கிங்காங் படங்கள் திரும்ப திரும்ப எடுக்கப்பட்டன,ஒரே கதையில். மூன்றாவது Adaptation. செவன் சாமுராயைப் பார்த்து மேக்னிஃபிசியன்ட் செவன் படம் எடுக்கப்பட்டது ஒரு உதாரணம். சினிமாவில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டவை. சினிமாவின் பலம் என்று கதையை மட்டும் பார்க்கக் கூடாது. எப்படி அது எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் முக்கியம். எனவே இது போன்ற விஷயங்களை நகல் எடுத்தல் என்று பேசுவது சரியல்ல. சட்டப்பூர்வமாக அது சரியா இல்லையா என்பது வேறு விஷயம். அவற்றை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்.

மானுடவியல் ஆய்வாளர் என்ற வகையில் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?தமிழ்நாட்டில் கலை இலக்கியம் சார்ந்த ரசனை எவ்வாறு இருக்கிறது?

பொதுவாக உலகில் எல்லா சமூகமும் மோசமான நிலையில் தான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் நான் பார்க்கும் நல்ல விஷயம் இங்கே இருக்கும் அதிகாரப் பரவல், ஜனநாயகம் பற்றிய பார்வை இவை பற்றி தமிழர்கள் பெருமைப்பட கற்றுக்கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்ற விஷயத்தை தமிழர்கள் தான் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்தியா சுதந்திரம் வாங்கிய பிறகு இந்த அறுபத்தைந்து வருடங்களில் தமிழ்நாட்டில் நல்ல விஷயங்கள் பல நடந்துள்ளன. உலகில் இருக்கும் வேறு எந்த பிரதேசத்தை விடவும் தமிழகம் பலவகைகளில் முன்னேறியுள்ளது. சிகாகோவில் நடக்கும் முறைகேடுகள், மாபியா நடவடிக்கைகள் பற்றி இங்கு யாருமே எழுதுவதில்லை. தமிழ் நாட்டில் மட்டும் தான் எல்லா ஜாதியினரின் பங்களிப்பும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு நல்ல நிலையில் இருப்பதை பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். எனவே தாழ்வு மனப்பான்மையை முதலில் கைவிட வேண்டும். அமெரிக்காவில் உள்ள மக்களின் அரசியல் அறியாமை பிரசித்தம். நம்மூரில் டீக்கடைகளில் கூட அரசியல் பற்றி நிறைய பேசுவார்கள். அங்கு  படித்தவர்கள் நல்ல வேலையில்  இருப்பவர்கள் கூட அரசியல் பற்றி சிறிதளவு பிரக்ஞை கூட  இல்லாமல் இருப்பதை பார்த்தேன். கார், சாப்பாடு, செக்ஸ் பற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். அரசியல் என்று ஆரம்பித்துவிட்டால் உடனே அங்கிருந்து ஓடி விடுவார்கள். இங்கே எவ்வளவோ பரவாயில்லை என்பதை சொல்ல வேண்டும். மானுடவியல் துறை இங்கிருந்து ஆய்வாளர்களை  அனுப்பி அமெரிக்க வாழ்க்கையை பதிவு செய்ய வேண்டியது தானே? அவர்கள் இங்கு வந்து ஆய்வு செய்கிறார்கள் அல்லவா? நமக்கு அவர்களை விமர்சனம் செய்ய தைரியம் வரவில்லையே..


தமிழக அரசியலில் திராவிட கட்சிகளின் தாக்கம் தேசிய அரசியலில் அதன் தாக்கம் இவை பற்றி சொல்லுங்கள்..

முக்கியமான தாக்கம் தான். அதன் உள்ளடக்கம் சரியானது. ஆனால் அது சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. இந்தியா பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. அதில் வாழும் மக்களின் ஏற்றத்தாழ்வுகளை சரியாக புரிந்து கொண்டு தீர்வு காண்பது என்பது முடியாத ஒன்று.  எனில் ஒவ்வொரு மாநிலங்களிலும் தனிப்பட்ட முறையில் அரசியல் கட்சிகள் உருவாகும்போதுதான் மக்களிடையே சமத்துவம் உருவாகும்.  பல மாநிலங்கள் இருக்கும் இந்தியாவில் தனிப்பட்ட அடையாளம் சார்ந்த அரசியல் உருவானால் தான் ஜனநாயகம் வலுப்படும். கூட்டாட்சி முறையில் தான் நமது ஜனநாயகத்தை செழுமை படுத்த முடியும். ஆனால் இதன் மூலம் பிரிவினை வந்து விடுமோ என்ற அச்சமும் உண்டு.  இந்தியா முழுவதும் ஒரே மொழி, ஒரே கட்சி என்பது தவறான கருத்து. இதனால்தான் ஹிந்தி திணிப்பு போன்ற விஷயங்கள் நடந்தன. ஆனால் தமிழ் நாட்டில் அது சரியாக புரிந்து கொள்ளப் பட்டது. நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம் ஆனால் நாங்கள்  தமிழர்கள் என்ற தெளிவான பார்வை இருக்கிறது. இந்த பார்வை கிட்டத்தட்ட இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வரத் தொடங்கிவிட்டது.  எதிர்காலத்தில் இது முழுமையாக இருக்கும்.  உத்தரகண்ட் தனிதான் ஜார்கண்ட் தனிதான் என்ற அரசியல் பார்வை தொடங்கிவிடும். எல்லா கட்சிகளும் , மாநிலங்களும் சேர்ந்த ஒரு கூட்டாச்சி இருக்கலாமே தவிர அந்தந்த மாநிலங்களின் அரசியல் என்பது தனித்தனிதான். இதுதான் அறிவார்த்தமாக இருக்கும். (sensible) ஆனால் தீடிரென்று எந்த மாற்றமும்  இந்தியாவில் வந்துவிடாது. அதற்கு நூறு வருடங்கள் ஆகலாம்.  தமிழ் நாட்டில் நடந்த அரசியல் செயல்பாடுகள் தான் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. அந்த விதத்தில் திராவிட கட்சிகளின் தாக்கம் முக்கியமானது. திராவிட இயக்கத்தில் பல பலவீனங்கள் இருக்கிறது.  எல்லா கட்சிகளிலும் பலவீனம் இருக்கிறது. பலவீன இல்லாத கட்சி என்பது கற்பனையான ஒன்று. ஆட்சிக்கு வராத கட்சியை வேண்டுமானால் அப்படி கூறலாம்.  ஆட்சிக்கு வந்துவிட்டால்தான்  தெரியும். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் சென்று CPM பற்றி கேட்டால் தான் தெரியும். அவர்கள் எப்படியென்று. அதிகாரத்திற்கு வந்துவிட்டால் தான் நல்லவர்களா கெட்டவர்களா என்று தெரியும். ஒப்பிட்டு முறையில் ஆட்சியை மதிப்பிடலாம். எனக்கு தெரிந்த நண்பர்கள் இதனை செய்கிறார்கள். பிரேர்னா சிங்   என்பவர் இதை போல ஒரு ஆய்வை செய்தார். வட   மாநிலங்கள் இரண்டையும் தென்மாநிலங்கள் இரண்டையும் எடுத்து கொண்டு ஆய்வு செய்தார். அதில் தமிழ் நாடும் கேரளமும் பலமடங்கு வட  மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய  பிரதேசம் ஆகியவற்றை காட்டிலும் ஜனநாயக ரீதியில் முன்னேறி இருக்கிறது. அந்த ஆய்வாளர் political science  இல் அதற்க்கான சில அலகுகளை  வைத்து செய்தார்கள். அதில் தென் மாநிலங்கள் இரண்டும் வடமாநிலங்கள் இரண்டைக் காட்டிலும் நல்ல முன்னேற்றத்தில் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார். கேரளாவைப் பொறுத்த அளவில் அங்கு கல்வியின் காரணமாக அந்த முன்னேற்றம் இருப்பதாக கூறுகிறார். தமிழ் நாட்டை பொறுத்த அளவில் திராவிட அரசியல்  ஒரு முக்கிய காரணம்  என்கிறார். நானும் அதைப் பற்றிய ஆய்வில்தான் இருக்கிறேன். ஆனால் முக்கிய காரணமாக மாநில அரசியலைத்தான் கூறுவேன். மாநில அரசியல் தான் ஜனநாயக சிந்தனையை பலப்படுத்துகிறது. ராஜஸ்தானில் என்ன மாநில உணர்வு இருக்கிறது? அங்கு ஹிந்தி தான் பேசுகிறார்கள். பழமையான மரபை  கொண்டது அந்த மாநிலம்.

தமிழ் நாட்டின் இந்த அரசியல் விழிப்புணர்வுக்கு கல்வி எந்த அளவுக்கு கரணம் என்று கருதுகிறீர்கள்?

கல்வி விழிப்புணர்வு இருக்கிறது, ஆனால் இன்று ஊடகங்கள் அதில் முதன்மை பெறுகின்றன. இன்று அச்சு ஊடகம் என்பது பின்னடைந்து விட்டது. மாறாக காட்சி ஊடகங்கள் முன்னுள்ளன. எடுத்துக்காட்டாக தொலைக்காட்சி.  இன்று புதிய தலைமுறை இருக்கிறது. அதில் எல்லாமும் விமர்சிக்கப்படுகிறது. எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறார்கள். அதைப்  பார்த்தாலே போதுமே. ஆனால் கல்வி எத்தனை  முக்கியம் என்பதற்கு சில உதாரனங்களும் இருக்கின்றன. காமராசர் கொண்டுவந்த கல்வித் திட்டங்களினால் பயனடைந்தவர்கள் எத்தனயோ பேர்.  சிலர் காமராசர் பெயர் சொல்லியே அவர் தான் தான் கல்வி கற்பதற்கு காரணம் என்று சொல்லி கேட்டிருக்கிறேன்.

மரண தண்டனை குறித்தான உங்கள் பார்வை என்ன? குற்றங்களுக்கு தண்டனை அவசியம் என்ற வகையில் எந்த அளவுக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை தரப்படலாம்?

இதைப்பற்றி நிறைய இடங்களில் கட்டுரையாகவும் பேசியும் நான் பதிவு செய்திருக்கிறேன். Retributive justice என்று ஒன்று உண்டு. Retributive என்றாலே ஒருவர் செய்த தவறுக்கு அதேபோல வலிக்கும் படியாக தண்டனை கொடுப்பது. இன்று தண்டனை என்பது குடும்பத்திலிருந்து பிரித்து வைப்பது, சிறைச்சாலையில் போடுவது என்று இருக்கிறது. அவனை தனிமை படுத்துவதன் மூலம் அவமானப்படுத்துவதன் மூலம் ஒரு பயத்தை உண்டாக்குவது. இதுதான்  Retributive. இதற்கு ஒரு எல்லை இருக்கிறது.  இந்த நாட்டில் ஒரு நாகரிகம் இருக்கிறது. அதாவது கொல்லாமை. மனிதனை மனிதன் கொல்வதோ, அல்லது மனிதனை அரசாங்கம் கொல்வதோ இருக்கக் கூடாது.  ஆனால் மனிதனை அரசாங்கம் கொல்லலாம்  என்பது இங்கு ஒரு முரண். மரண தண்டனை என்பது அரசாங்கம் செய்யும் கொலை. நாகரீகம் என்று சொல்லிக் கொள்கிறோம். தூக்கில் போடுவதும், கை, கால் காலை  வெட்டுவது என்பது எப்படி நாகரீகம் அடைந்த ஒரு சமூகத்தில் நடக்கும் தண்டனையாக இருக்க முடியும். நாகரீகம் என்ற பெயரால் தான் நம் இன்று அறிவியல் போன்ற விசயங்களில் முதன்மை பெறுகிறோம். சுற்றுச் சூழலைப் பற்றி கவலை கொள்ளாமல் ஏவுகணைகள் விடுகிறோம். ஆனால் நாகரீகம் என்ற பெயரால் அரசாங்கம் மரதண்டனை வழங்க முடியும் என்று சொன்னால் அது எப்படி நாகரீகம் ஆகா முடியும்? எது ஒரு முரண். தவறு செய்வதை தடுக்கலாம்.  அவன் திருந்துவதற்கு சந்தர்ப்பமோ கொடுக்கலாம். ஆனால் மரண தண்டனை என்பது அதீதமானது. ஒருவரை ஒருவர் மனிதர்கள் வெட்டிக் கொள்வது இருந்திருக்கிறது. அது உணர்ச்சி வசப்பட்டு செய்வது. அது குரூரமானது . மனிதன் ஒரு விலங்கு என்பதால் அதை தடுக்க முடியாமல் வரலாற்றில்இருந்து வந்திருக்கிறது. ஆனால் நீதியின் பெயரால் ஒருவனை தூக்கில் போடுவது அதே போல மிக கொடுமையானது. இது இந்தியா போன்ற நாட்டில்  இருப்பது ஏற்க முடியாதது. காந்தி வாழ்ந்த நாட்டில் அவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மரண  தண்டனையை எதிர்த்து இன்னும் ஒருமித்த குரல் வரவில்லை என்பது துரதிஷ்டவசமானது. மரணதண்டனை இந்தியாவில் இருப்பது தவறானது. ஒருவர் வாழ்வைப் பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது.
உலக வெப்பமயமாதல் குறித்த கருத்துகளை பதிவு செய்திருக்கிறீர்கள். அது தொடர்பாக அரசும் மக்களும் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

சிந்தனையில்  ஒரு மற்றம் வந்தால் தான் இதை  சரி செய்ய முடியும். ஒரு அவசர நிலையில் இருக்கிறோம். வீடு பற்றி எரியும் போது  நாம் வெளிப் பூச்சு செய்ய முடியாது. அதை போல மனித வாழ்க்கை முறையில் மாற்றம் வந்தால் தான் உலக வெப்பமயமாதலை தவிர்க்க முடியும். வேறு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அதிகாரம் இப்போது  முதலீட்டியத்தின் கையில் தான் இருக்கிறது. வளர்ச்சி தான் அரசியல் என்றாகி விட்டது. வளர்ச்சி அளவு எவ்வளவு இருக்கிறதோ அதை பொறுத்துதான் அரசியல் இருக்கிறது. உலக வெப்பமாதலை பற்றி தலைவர்கள் ஒன்று கூடி  பேசினார்கள். ஆனால்  ஒன்றும் நடக்க வில்லை.பூனைக்கு யார்  மணி கட்டுவது என்பதிப் போலத்தான் அது. எல்லோருக்கும் பொருளாதாரம், வளர்ச்சி தான் முக்கியம். வளர்ச்சிதான் இன்று ஒரே மொழி.
செயல்பாட்டு அளவில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் கிடைத்து விட்டன என்று நினைக்கிறீர்களா? இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் நிலை எவ்வாறு இருக்கிறது?

கடந்த  15, 20 வருடங்களில் பெரிய பின்னடைவு தான். முதலில் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்கள் இருந்தன. அப்போது ஒரு உள்ளடக்கம் இருந்தது. ஆனால் அதற்க்கு பிறகு நடந்தது எல்லாம் ஏமாற்று வேலைதான். அடிப்படி தொழில் செய்பவர்கள் எல்லோரும் சுரண்டப் படுகிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு அந்த சுரண்டலே போதுமானது என்று நினைக்கும் அளவுக்கு அவர்கள் பொருளாதார நிலை இருக்கிறது. குறிப்பாக தலித் மக்கள் நிலை. குறைந்த கூலி பெறுகிறார்கள் என்பதுடன்  குழந்தைகள் படிப்பு மற்றும் தங்கும் இடம் எல்லாம் மோசமாக இருக்கிறது. ஆனால் முந்தைய நிலையைக் காட்டிலும் இது முன்னேற்றம் என்று அவர்கள் நினைக்குமளவு நிலை இருக்கிறது. இன்று மோசமாக சுரண்டலுக்கு தொழிலாளர்கள் ஆளாகிறார்கள். இதை எந்த தொழிலாளர் சங்கம் கேள்வி கேட்கப்  போகிறது? தொழிலாளர்களை சுரண்டி பெரிய கட்டுமானங்கள் உருவாகின்றன. எல்லோரும் ஒரு ரகசிய உடன்பாட்டில்தான் இந்த வேலையை செய்கிறார்கள்.  யாரும் இதைப் பற்றி பேசக்கூடாது என்று இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்கள் கூட அதை செய்வதில்லை. அவர்களால் தொழிலாளர்களை ஒன்று திரட்ட முடிவதில்லை. அசாமில் உள்ளவர்கள் இங்கு வருகிறார்கள் இங்கு உள்ளவர்கள் உத்திர பிரதேசத்தில் வேலை செய்கிறார்கள். சொந்த மாநிலத்தில் மொழி தெரிந்தவனை அடிமையாக்க முடியாது. வேற்று மாநிலத்தவனை அதனால் அடிமையாக்கி  வேலை வாங்குகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தலித்கள் அல்லது அவர்களைப் போன்றே பொருளாதார நிலைமையில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டவர்கள். இவர்களை ஒன்று திரட்ட தொழிற்சங்கங்கள் இல்லை. அவை தமது செயல்பாடுகளை  நிறுத்திக் கொண்டன.   முதலாளித்துவத்தின் செயல்பாடே தொழிலாளர்களை சுரண்டுவது தானே.. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
மானுடவியல் ஆய்வு தொடர்பாக பல்வேறு பிரதேசங்களில் தங்கியிருப்பீர்கள். தனி மனித வாழ்வு பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுவது எவ்வாறு என்று சொல்லுங்களேன்..

ஒரு சமூகம் உயர்ந்தது ஒரு சமூகம் தாழ்ந்தது என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு ஊருக்கும்  ஒவ்வொரு சிறப்பு உண்டு. மேற்கத்திய சமூகத்தை பொறுத்த  அளவில் அங்கு தனிமனித வாழ்வு என்பது முக்கியத்துவம் பெறுகிறது. அனால் அங்கே தனிமனித வாதத்தினால் மிகப் பெரிய சிக்கல் வந்திருக்கிறது. பெரிய வெறுமையும் தேக்கமும் இருக்கிறது. அவர்களை பற்றிய மானிடவியல் ஆய்வு செய்யும் அளவுக்கு   நாம் இன்னும் முயற்சி எடுக்கவில்லை. எடுக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு பல உண்மைகள் தெரிய வரும். இங்கு உள்ள பண்பாட்டு விழுமியங்கள் தனித்துவமானவை. இங்கு சாதி, ஆண் மைய சமூகம் என்று பல பிரச்சனைகள் இருக்கிறது.  இங்கு உள்ள தனிப்பட்ட அம்சங்களில் இன்னும் தனிமைப் பட்ட மனிதர்களாக இல்லாமல் இருப்பது , எளிதாக ஒன்று கூடுவது என்று  பல அம்சங்கள் இருக்கிறது. அதனை  காப்பாற்றுவது முக்கியம்.மேற்கத்திய முதலீட்டிய சமூகங்களில் மிகவும் தனிமைப் படுத்தல்கள் இருக்கிறது. அதை  இங்கு பார்ப்பது கடினம். ஆனால் அது இங்கும் சீக்கிரம்  நடக்கும். ஏனெனில் வளர்ச்சி என்பது தான் முக்கியம்; பணம் சம்பாதிப்பது தான் முக்கியம் என்ற சிந்தனை வந்து விட்டது. மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி எடுத்து பள்ளி மாணவன் சுடுகிறான். இங்கு மாணவன் கத்தி எடுக்கிறான். படித்து  பணம் சம்பாதிப்பது தான் முக்கியம் என்று நினைக்கும் போது நிலைமை இப்படித்தான் மாறும். பெருமாள் முருகன் போன்றோர் இதை பற்றி நிறைய  எழுதுகிறார்கள்.
கூடங்குளம் விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் நிலைப்பாடுகளும் அங்கு நிறுவப்படும் அணு உலைக்கு எதிரான போராட்டங்களும் பற்றிய உங்கள் பார்வை என்ன? அங்கு அணு உலையைத் தொடங்க வேண்டும் என்றே செயற்கையான மின்வெட்டை அரசு செயல்படுத்துவதாக வெளியாகும் செய்திகள் பற்றி..

எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. ஆனால் செயற்கையான மின் தட்டுப்பாடு என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. என்றாலும் கூடங்குளம் போராட்டம் இடையில் நிறுத்தினார்கள். அப்போது மின்சார தட்டுப்பாடு கொஞ்சம் குறைந்தது. 8 மணி நேர மின் வெட்டு 4 மணி  நேரமாக ஆனது. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புக்கு ஆதரவு பெருகக் கூடாது என்பதற்காக இந்த மின்வெட்டு தொடர்கிறதா என்று கூட நினைக்க தோன்றுகிறது. ஒவ்வொரு ஊரிலும் மக்கள் கூடங்குளத்திற்கு  ஆதரவாக போராட  தொடங்கிவிட்டால் அரசியல் கட்சிகள் அதை விரும்பாது. ஆளும் வர்க்கமும் விரும்பாது. சிறிது காலம் சென்ற பிறகு நீதிமன்றங்கள் அந்த 17 அம்ச பாதுகாப்பு குறித்து ஏதாவது ஆலோசனைகள் கூறலாம். அதற்குள் தமிழக அரசு தான் சொன்னது போல  500 கோடி  செலவில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தினால் கூட எதிர்ப்பு போராட்டம் நின்று விடும் என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் அங்கு அணு மின் நிலையம்  திறக்கப்படலாம். கூடங்குளத்தை  நிறுத்தவும் அரசு முடிவெடுக்காது. அதற்காக அந்த மக்களை ஒடுக்கவும் முடியாது.  எனவே பொறுத்திருந்து ஏதாவது தந்திரங்களை செய்துதான் அரசு இதை செய்யும் . அந்த பகுதி மக்கள் இதனை எதிர்கொள்ள விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள்  என்பது  நிச்சயம்.
ஆய்வு மற்றும் எழுத்து தொடர்பாக எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?

இது மிகவும் சிக்கலான கேள்வி. தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய எழுத வேண்டும். ஆனால் நிறைய திட்டங்கள் இருப்பதினால் தெளிவான முடிவுக்கு இன்னும் வரவில்லை.  நான் கடந்த 3 வருடங்களாக வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஆய்வில் இருக்கிறேன். கடந்த 2 வருடங்களாக தலித் மக்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக கள  ஆய்வில் இருந்தேன். படிக்கவும் செய்தேன். இது தொடர்பாக புத்தகம் அல்லது கட்டுரை எழுத வேண்டும் . தமிழிலும் ஆங்கிலத்திலும்  முக்கியமாக கிருத்துவ தலித்துகள் பற்றி எழுத வேண்டும். அதைப் பற்றி பல படித்திருக்கிறேன். இது அவசியம் செய வேண்டிய வேலை. இவை தவிர சினிமா மற்றும் அரசியல் பற்றியும் எழுதுகிறேன். மிக தாமதமாக எழுத்து உலகில் வந்ததினால் எழுத்தில் வேகம் குறைவு. 93 இல் பெரியார் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதினேன். அதன் பிறகுதான் எழுதவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.நாடகம்  போடுதல், திரைப்பட சங்கம் என்ற நடவடிக்கைகளில் இருந்ததினால் எழுத வேண்டும் என்று யோசிக்கவில்லை. நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது; செய்திகளும் இருக்கின்றன.

Sunday, October 14, 2012

கல்லாப்பெட்டி: நிறைந்த நகையுணர்வு


கறுத்து மெலிந்த தேகம், திகிலடைந்த ஆனால் சுயதைரியம் அளித்துக் கொள்வதன்மூலம் திடீர் பிரகாசமடையும் கண்கள், திறந்த வாய், தோரணையான நடை  என்ற அடையாளங்களுடன் நகைச்சுவை கலந்த குணச்சித்திரப் பாத்திரங்களில் வலம் வந்தவர் கல்லாப்பெட்டி சிங்காரம். காணாமல் போன குட்டியை தேடும் ஆடு  தமிழில் பேசி அழைத்தால்  வரும் குரல் அவருடையது. எண்பதுகளில் அவர் பங்கேற்ற படங்களில் நகைச்சுவை ஏரியாவை கலகலக்க செய்தவர். 

தமிழ் வணிக சினிமாவின் வெற்றிகரமான திரைக்கதையாளரான பாக்யராஜ் முதன் முதலில் இயக்கிய சுவர் இல்லாத சித்திரங்களில் கல்லாப்பெட்டி சிங்காரத்தை அறிமுகம் செய்தார். அந்தப் படத்தின் டைட்டில் இதை சொன்னாலும் கிட்டத்தட்ட நாற்பது வயதைத் தாண்டி அவர் சினிமாவில் வந்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. அறுபதுகளிலேயே  மோட்டார் சுந்தரம்பிள்ளை போன்ற படங்களில் சிறு வேடங்களில் சிங்காரம் வந்திருந்தாலும் முக்கியத்துவம் பெற்ற வேடம் என்ற வகையில் இது தான் முதல் படம் என்பதால், ஒருவேளை அறிமுகம் என்று பாக்யராஜ் குறிப்பிட்டிருப்பார் போலும்.  சில இயக்குனர்களுக்கு என்று கம்பெனி ஆர்டிஸ்ட் மாதிரி சில நடிகர்கள் உண்டு.பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சின்ன சின்ன வேடங்கள் அவர்களுக்குத் தொடர்ந்து தருவார்கள்.  மகேந்திரனுக்கு சாமிக்கண்ணு, குமரிமுத்து, வெண்ணிறாடை மூர்த்தி. பாரதிராஜாவின் பல படங்களில் அவரது உதவியாளர்கள் எங்காவது தலைகாட்டிக் கொண்டே இருப்பார்கள். பாலுமஹேந்திரா படங்களில் பெரியவர் சொக்கலிங்க பாகவதர் அடிக்கடி வருவார். அது போல் பாக்யராஜ், சிறு வேடம் என்றாலும் கதையுடன் ஒட்டிய பாத்திரங்களை கல்லாப்பெட்டிக்கு தன் பல  படங்களில் தந்தார். அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே இயக்குனர் பாக்யராஜ் தான் என்று சொல்லவேண்டும். அவர் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, டார்லிங் டார்லிங் டார்லிங், இன்று போய் நாளை வா போன்ற படங்களில் கல்லாப்பெட்டி  ஏற்று நடித்தப் பாத்திரங்கள் தனித்த நகைச்சுவைக்காக இன்றும் பேசப்படுகின்றன. 

சோகமயமான க்ளைமாக்ஸ் கொண்ட சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் முதல் பாதி முழுவதும் நகைச்சுவையால் நிரம்பியிருக்கும். கல்லாப்பெட்டி சிங்காரம், காந்திமதி இவர்களுடன் கவுண்டமணியும் நடித்திருந்த அந்தப் படத்தில் சிறு நகரம் ஒன்றில் வாழும் மனிதர்களின் அன்றாட நிகழ்வுகளில் தெறிக்கும் நகைச்சுவைத் தருணங்களை மிக இயல்பாகக் காட்டியிருப்பார் பாக்யராஜ். அமெச்சூர் நாடகம் போடும் கதாநாயகனின் அப்பாவாக காக்கி டவுசரும் கைவைத்த பனியனும் அணிந்து படம் முழுக்க வருவார் கல்லாப்பெட்டி . வெளியிடங்களில் சரளமாகப் பேசி சிரித்தாலும் மனைவியைப் பார்த்ததும் சப்த நாடியும் அடங்கி நிற்கும் பாத்திரம் அவருக்கு. கவுண்டமணியின் கடையில் உட்கார்ந்து "கண்ணடிச்சா வராத பொம்பளை..கையப் புடிச்சி இழுத்தா மட்டும் என்ன வந்துடவா போறா?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் காந்திமதி வந்து நிற்க வெலவெலத்துப் போய் அவரைப் பார்க்கும் காட்சியில் தியேட்டர் சற்று இடைவெளி விட்டு சிரித்து மாயந்திருக்கும். படத்தில் பாக்யராஜ் நடத்தும் நாடக ஒத்திகையின் போது நடிகையின் அம்மாவை சைட் அடித்து பாக்யராஜை வெறுப்பேற்றுவார். அந்த அம்மாவுக்கு கலர் வாங்கிக் கொடுப்பார். அந்தப் படத்தில் மறக்க முடியாத பல நகைசுவு காட்சிகள் உண்டு. கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம் இருவரும்  வெவ்வேறு வகைகளில் பாக்யராஜை வெறுப்பேற்றுவார்கள். சரியாக நடிக்க வராத ஒருவனை 'தகுதி நீக்கம்' செய்து விட்டு தானே அந்த பாத்திரத்தை பாக்யராஜ் நடிதுக்காட்டும்போது கவுண்டமணி அந்த நடிகரிடம் சொல்வார், " அவென் நடிப்புக்கு ஒன்நடிப்பு எவ்வளவோ தேவலை!" போதாதக் குறைக்கு சொந்தத் தந்தை இப்படி நடிகையின் அம்மாவிடம் வழிவதைக் கண்டு நொந்து விடுவார் பாக்யராஜ். அந்தக் காட்சியில் மகனின் கண்டிப்புக்கு பயந்தாலும் தன் காதல் உணர்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத பாத்திரத்தின் பாவனைகளை அருமையாகச் செய்திருப்பார் கல்லாப்பெட்டி சிங்காரம். 

எண்பதுகளில் குறிப்பிட்ட சில இயக்குனர்களால் கீழ் மத்தியத் தர மக்களின் வாழ்க்கை திரையுலகில் அசலாய் கொண்டு வரப்பட்டபோது எதார்த்தமான முகம் கொண்ட புதிய நடிகர்களின் வருகை முக்கியத்துவம் பெற்றது. அன்றாடம் எதிர்ப்படும் முகங்கள் அறிமகமான சமயத்தில் திரையில் தோன்றிய கல்லாப்பெட்டி மிக அருமையாக அந்த மக்களின்  வாழ்க்கையை திரையில் பிரதிபலித்தார். எளிய மக்களின் மொழியை திரைக்கு ஏற்றவாறு சற்று மெருகேற்றிப் பேசி நடித்த நடிகர்களில் அவரும் ஒருவர். முதல் படத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் பாத்திரத்தில் நடித்த அவருக்கு பின்னாளில் தோரணையான குஸ்தி வாத்தியார் வேடம் கொடுத்தார் பாக்யராஜ் . மனிதர் அதிலும் வெளுத்து வாங்கினார். 

தமிழில் வந்த நகைச்சுவைப் படங்களில் மிக முக்கியமானப் படமான 'இன்று போய் நாளை வா' வில் அவர் செய்த பாத்திரம் இன்று வரை யாராலும் பிரதி கூட எடுக்க முடியாதது. உடற்பயிற்சி ஆசிரியர்களின் உடல்மொழியை உள்வாங்கிக்கொண்டு அதை இயல்பாக அதே சமயம் நகைச்சுவை கலந்து நடித்து அந்தப் பாத்திரத்தை மெருகேற்றினார். படத்தில் ராதிகாவை காதலிக்கும் வெங்கிட்டு, அதற்காக ராதிகாவின் தாத்தா கல்லாப்பெட்டியைக் கவர முடிவு செய்து அவரைப் பற்றி அந்த ஏரியாவின் துணி வெளுக்கும் தொழிலாளியிடம் விசாரிக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. அந்தத் தொழிலாளி சொல்வார் "காலையிலயும் சாயங்காலமும் இந்தாளு லொங்கு லொங்குன்னு ஓடுறாரு..எங்கே ஓடுறாரு..எதுக்கு ஓடுறாரு ன்னே புரியல". திருச்சி நகரத்தில் இருந்து உடுமலைப்பேட்டை போன்ற டவுனுக்குள் குடிவந்த பயில்வான் ஜாகிங் செய்யும் விஷயம் அந்தூர் தொழிலாளிக்கு எப்படித் தெரியும்? அப்பாவித்தனமான அதே சமயம் குறும்பான அந்த விவரிப்பு வார்த்தைகளாக செல்லும்போதே  கல்லாப்பெட்டி 'எங்கோ' ஓடிக்கொண்டிருக்கும் காட்சி விரியும். இயக்குனரின் புத்திசாலிதனமான காட்சியமைப்பு என்றாலும் அதற்கு முன் கல்லாப்பெட்டி சிங்காரம்  ஒரு கண்டிப்பான ஆனால் நகைப்பு தரக்கூடிய பாத்திரம் என்று பார்வையாளர்களுக்கு  முன்கூட்டியே பதிவாகி இருப்பதால் அந்தக் காட்சி இன்றும் வெடிச் சிரிப்பைப் பார்வையாளர்களிடம் தோற்றுவிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. 

அவரை அடிக்க அடியாட்கள் ஏற்பாடு செய்து 'காப்பாற்ற' வெங்கிட்டு காத்திருக்க, கல்லாப்பெட்டி அந்த உள்ளூர் ரவுடிகளை பந்தாடும் காட்சியில் அவரே சண்டையிட்டு நடித்திருப்பார் போலும் . பாய்ந்து பாய்ந்து அவர் தரும் உதை தாளாமல் ரவுடிகள் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு தலைதெறிக்க ஓடும் காட்சி அபாரமான ஒன்று. தன்னை சந்திக்க வந்து விட்டு தன் பேத்தி ராதிகாவிடம் விடைபெறும் வெங்கிட்டுவிடம்  ' ஏன் எனக்கு பை சொல்லலை?' என்று அதட்டுவார். 'சாரி ஸார்..பை ஸார்' என்று பம்மி விடைபெறும் அவனிடம் 'ஓக்கே பை..ஓக்கே பை' என்பார் பிரகாச முகத்துடன். தன்னை மதித்து விடைபெற்ற  குதூகலத்தில்  நாற்காலியில் அமர்ந்து கொண்டே கைகளை முழங்கால்களில் பெருமையுடன்  வைத்து கண்களை மகிழ்ச்சியுடன் உருட்டுவார். காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் சோமா பயில்வானான  தனக்கு உரிய மரியாதையை மிரட்டியாவது வாங்கி விடும் பாத்திரம் அது. அதற்கு அத்தனை நியாயம் செய்யும் நடிப்பு கல்லாப்பெட்டியுடையது. 

தன்னிடம் குஸ்தி கற்க வைத்தவனை தலைகீழாக நிற்கவைத்து வயிற்றில் குத்தி அவனைப் படாத பாடு படுத்தும்போது முகத்தில் இருக்கும் கண்டிப்பு. அத்தனை தோரணையுடன் அதிகாரம் செய்யும் அவர் தன்னிடம் 'பாடம்' கற்ற மாணவனிடமே அடிவாங்கிப் பிச்சைக்காரனைப் போல் வரும் காட்சியில் அவரது உடல்மொழி அனாயாசமாக இருக்கும்.  'நீ நாசமாகப் போக' என்று யாரிடமும் எரிந்து விழுந்தாலும் எதிராளி வாய் விட்டு சிரித்துவிடும் வகையிலான நகைப்பூட்டும் குரல் அவருக்கு. எனவே அந்தக் காட்சி நகைச்சுவையின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும். ராதிகாவை காதலித்து ஏமாந்த மற்றொரு வாலிபன் ராஜேந்திரனிடம் (புகழ் பெற்ற 'ஏக் காவ் மேய்ன் ஏக் கிஸ்ஸ்ஸ்ஸ்ஸான்' வசனம் நினைவிருக்கும்!) அடிபட்டு கட்டிலில் படுத்திருக்கும் தன் ஹிந்தி பண்டிட் மருமகனைப் பார்த்து ' இவன் அந்தப் பயல அந்தத் தூண்ல வச்சி ச்சொத்து ச்சொத்து னு மோதும்போதே நெனச்சேன்..இப்படி ஏதாவது நடக்கும்ன்னு' என்று சொல்வார். வார்த்தைகளை கடித்து அவர் உச்சரிக்கும் விதம் சிறப்பாக இருக்கும். பிற நடிகர்களிடம் இருந்து நகைச்சுவை நடிகர்கள் பார்வையாளனை நெருங்கி வரக் காரணம், எழுதப்பட்ட வசனங்களை அப்படியே ஒப்பிக்காமல், சாதாரண மக்களின் மொழியிலேயே பேசி நடிப்பதால் தான். சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்துப் படங்களில்  நாயகர்கள் "கடவுளே..இவ்வாறு நடந்து விட்டதே... இனி என் எதிர்காலம் என்ன ஆகுமோ?" என்று தூய தமிழில் துக்கப்படும்போது  நகைச்சுவை நடிகர்கள் "அட இதுக்கெல்லாம் கவலைப்படாதய்யா..எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாப்போவும்" என்று எளிய வார்த்தைகளில் ஆறுதல் தருவார்கள். முக்கியத்துவம் பெற்ற நடிகர் இல்லையென்றாலும் கல்லாப்பெட்டி சிங்காரம் இன்றும் நினைவுகொள்ளப்பட அவரது வசன உச்சரிப்பும் முகபாவனையும் பிரத்யேகக் குரலுமே காரணம். 

டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் இன்னும் உச்சமாக என்னியோ மோரிக்கொன் இசையமைத்த    த குட் த பேட் த அக்லி தீம் இசை பின்னணியில் ஒலிக்க குளியல் தொட்டியில் இருந்து கம்பீரமாக எழுந்து சென்று கோட் சூட் அணியும் காட்சியில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த புதுப் பணக்காரர் போலவே இருப்பார். அடுத்த காட்சியில் அவர் வெறும் வாட்ச்மேன் தான் என்று பார்வையாளர்களுக்குப் போட்டு உடைத்து விடுவார் மகன் பாக்யராஜ். " அப்பா..மொதலாளி கோட்டை போட்டு சேரில் உக்காந்தாலும் நீ வாட்ச்மேன் தான்" என்று சொல்லும்போது குட்டுடைந்த கல்லாப்பெட்டியின் முகபாவனை சிறப்பாக இருக்கும். உண்மை தான் என்றாலும் 'அதுக்கென்ன' என்பது போலும் ஒரு பார்வைப் பார்ப்பார் முழித்துக் கொண்டே. அந்தப் படத்தில் மகன் முதலாளியின் மகளைக்  காதலிக்க வேண்டுமே என்று எதிர்பார்க்கும் அல்ப அப்பா பாத்திரத்தை தன் நடிப்பால் மிளிரச் செய்தார். மகனுக்கும் முதலாளி மகளுக்கும் திருமணம் நடக்கும் என்ற பெரு நம்பிக்கையில் சேட்டிடம் கடன் வாங்கி விடுவர் கல்லாப்பெட்டி. ஏற்கனவே கடன்வாங்கி சேட்டிடம் 'கைதியாக' இருக்கும் வாய் பேச முடியாதவரைப் பார்த்து கல்லாப்பெட்டி கேட்பார் " என்ன தைரியத்துலே நீ எல்லாம் கடன் வாங்கணும்? ஒண்ணு கடன் திரும்பக் குடுக்க வக்கிருக்கணும்..இல்லேன்னா அதுக்கான அதிர்ஷ்டமாவது இருக்கணும்  " என்பார் எகத்தாளமாக . சேட்டிடம் சிக்கிய கைதி இவரைப் பார்த்து ஒரு கெக்கலிப்பு சிரிப்பார். "அடுத்து நீதான்" என்ற பொருள்படும்படியாக. 

ஒரு காட்சியில் பூர்ணிமா அறையில் எதையோ தேடும் பாக்யராஜை அவர் பூர்ணிமாவுடன் சரசத்தில் இருப்பதாக நினைத்து எல்லையில்லா  சந்தோஷமும் பொய்க்கோபமும் கொப்பளிக்க அவர்கள் இருவரையும் கண்டிக்கும் காட்சி அவரது நடிப்புத் திறனுக்கு ஒரு சான்று. ஒருபுறம் முதலாளியின் மகள் தன் மகனுக்குத் தான் என்ற குதூகலம்,  அதே சமயம் தான் பொறுப்பான தகப்பன் என்பதைக் காட்ட வேண்டிய ஆர்வம் இரண்டும் கலக்க துள்ளலுடன் முன்னும் பின்னும் நடந்து திட்டிக்கொண்டே இருப்பார். பெரும்பாலான படங்களில் மகனின் செயல்கள்  மீது எரிச்சல் கொண்ட தகப்பனாகவே தோன்றினார் கல்லாப்பெட்டி. உதயகீதத்தில் கவுண்டமணியின் தந்தையாக வந்து அவரைக் கரித்துக் கொட்டிக்கொண்டே இருப்பார். அப்படி திட்டிய பின்னர்,  உத்திரத்தில் இருந்து  தொங்கும் கால்களையும் சிந்திக் கிடக்கும் சிவப்பு பெயின்டையும் வைத்து கவுண்டமணி தன் கண்டிப்பால் தற்கொலை செய்துகொண்டு விட்டாரோ என்று அதிர்ச்சியடைவார். கவுண்டமணியின் ஜெயில் சிநேகிதத்தை வைத்து செந்தில் கல்லாப்பெட்டி வீட்டில் கன்னம் வைத்து பொருட்களைக் களவாடி சென்ற  பின்னர், கட்டிய துண்டுடன்  சிறையில் இருக்கும் மகனை சந்திக்க வருவார் "நல்லவேளை துண்ட விட்டுட்டுப் போய்ட்டான்..இல்லேன்னா என் கதி என்ன?" என்பார். பாக்யராஜின் வீட்டு ஓனராக நடித்த அந்த ஏழு நாட்களிலும் தன் தனிச் சிறப்பை அவர் பதிவு செய்தார். வீடு பார்க்க பாக்யராஜிடம் அவரது உயர்த்திய வேட்டியை கீழே சொல்லும் காட்சி இயல்பான நகைச்சுவைக்கு ஒரு சான்று. "பொண்ணை மட்டுமில்லாமல் பொண்ணோட அம்மாவையும் சேத்துத் தள்ளிக்கிட்டுப் போய்விடுவானுங்கள்" என்ற பயத்தில்  பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கும் வீடு சொந்தக் காரர் வேடம். சிறிய வேடங்கள் என்றாலும் தனக்குரிய பாணியில் முத்திரை பதிக்க கல்லாபெட்டி தயங்கியதே இல்லை. காக்கிசட்டையில் கமலுக்கு அப்பாவாக நடித்திருந்தார். கவுண்டமணி கதாநாயனாக நடித்த ஒரு படத்தில் அவருக்குத் தந்தையாக வருவார். தன் மகனைப் புறக்கணிக்கும் பணக்காரத் தந்தையாக எதிர்மறையான வேடத்தில் நடித்தார். 

ஒரு படத்தில் காது கேளாத பாத்திரத்தில் கல்லாப்பெட்டியும் கரிக்கோல் ராஜும் வருவார்கள். சுற்றி பூகம்பமே வந்தாலும்  காதுகளுக்கு சத்தம் எட்டாமல் தங்களுக்குள் சந்தோஷமாக உரையாடிக்கொண்டே இருப்பார்கள். எங்க ஊருப் பாட்டுக்காரன் படத்தில் அதிர்ஷ்டமற்ற செந்தில் எங்கு வேலைக்கு சென்றாலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும். அந்தப் படத்தில் பண்ணையார் வேடத்தில் வரும் கல்லாப்பெட்டி சிங்காரத்திடம் வேலைக்கு சேர்வார் செந்தில். சேர்ந்த முதல் நாளே வாயில் மாங்காயைக் கடித்தபடியே இறந்து விடுவார் கல்லாப்பெட்டி சிங்காரம். அவர் மனைவி செந்திலை ஆத்திரத்தில் அடிபின்னிவிடுவார். பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் இருவரும் நடித்த, மலையாள ரீமேக் படமான் கதாநாயகன் என்ற படத்தில் அவர்களின் வீட்டு உரிமையாளராக  வருவார். கோனார் வேடத்தில் நடித்த கல்லாப்பெட்டியிடம் சேகர் கேட்பார் " நீங்க தானே கோனார் நோட்ஸ் எழுதுனீங்க?". ஏற்கனவே வாடகை தராமல் இழுத்தடிக்கும் அவர்களின் கிண்டலை கேட்டு கடுப்பாகி திட்டுவார் கல்லாப்பெட்டி. இது போன்ற சிறு பாத்திரங்களில் பல படங்களில் நடித்தார்.  என்றாலும் அவரது பிரத்யேகக் குரல் அந்த சிறு பாத்திரங்களையும் மிளிரச் செய்தது. 

இன்றும் டீக்கடைகளில் நேற்றைய மனிதர்கள் தங்கள் வயதையொத்த மற்றவர்களுடன் எஞ்சிய தங்கள் வாழ்க்கையின் நினைவுகளை தேநீருடன் பகிர்ந்துகொண்டிருக்கும்போது கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். சுற்றியிருப்பவர்கள் வெடித்து சிரிக்கும்படி பேசி விட்டு சிரிக்கும் நண்பர்களைப் பெருமிதத்துடன் பார்த்து ரசிக்கும்  ஏதேனும் பெரியவரிடம்  கல்லாபெட்டியின் சாயலைக் காணலாம்.

-காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை