Wednesday, November 16, 2011
ராபின்சன் க்ரூசோ: தனிமையை எதிர்கொள்ளுதல்
தனிமையின் ருசி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி . சிலருக்கு தனிமையில் இருக்கவே பிடிக்காது. எப்போதும் நண்பர்களுடனும் குடும்பத்துடனுமே இருக்க விரும்புவார்கள். சிலர் தனிமை விரும்பிகள். யாருடனும் ஒட்டாமல் தனக்கான தீவை தானே உருவாக்கி அதில் வாழ விரும்புபவர்கள். வாழ்வின் துயரங்களுள் சுழலும் மனம் அவற்றில் இருந்து நீந்தி கரை சேர எங்கோ தனிமையில் சென்று விட வேண்டும் என்று ஏங்கும்.யாருமே இல்லாத பூங்கா ஒன்றில் தன்னந்தனியாக அமர்ந்திருக்கும்போது கிடைக்கும் அமைதியும் நிம்மதியும் தனி. பலருக்கு யாருமே இல்லாத தீவொன்றில் சென்று குடியேறிவிட வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.அந்த இடத்தில நாம் மட்டுமே இருக்கலாம். விருப்பப் பாடலை மனதுக்குள் மட்டும் ஒலிக்க விடாமல் சத்தமிட்டுப் பாடலாம். இயற்கையின் பின்னணி இசையில் பாடல் காற்றில் கரைய நம் சுயத்தின் குரல் நம்மிலிருந்து முழுமையாக வெளிவரலாம். நம்மிடம் நாமே விவாதம் செய்யலாம். கடலலையும் காற்றும் சாட்சிகள். நினைக்கவே அருமையான கற்பனை.
ஆனால் எதிர்பாராமல் ஒரு தனிமை தீவொன்றில் சென்று மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும். பல கடலோடிக் கதைகளில் இப்படியான தனிமைத்தீவுகள் பற்றி எழுதப்பட்டிருக்கின்றன. நம் சிந்துபாத் தனது எழு கடற்பயணங்களில் விபத்தாகும் கப்பலில் இருந்து தப்பித்து ஏதாவது தீவுக்கு அல்லது பெயர் தெரியாத நாட்டுக்கு செல்வான். அங்கு தனிமையில் அவன் காணும் அதிசயங்கள், எதிர்கொள்ளும் அபாயங்கள், மேற்கொள்ளும் சாகசங்கள் அற்புதமானவை. மிகப்பெரிய ருக் பறவை, பிரமாண்டமான வெள்ளை மண்டபம் போன்ற அதன் முட்டை, பயணிகளை தன் குகையில் வைத்து நாளுக்கொன்றாய் பிடித்து விழுங்கும் ஒற்றைக்கண் ராட்சஷன், தீவில் ஒதுங்குபவர்களை நடக்க இயலாதவன் போல் ஏமாற்றி அவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்து, பின்பு கால்களால் கழுத்தை நெரித்துக் கொல்லும் கடலின் முதுமகன், கடலில் ஒரு தீவு போலவே மையம் கொண்ட உயிருள்ள பிரமாண்டமான மீன் என்று சிந்துபாத் கதைகள் எழுதும் சித்திரங்கள் மனதின் உட்சுவர்களில் என்றுமே அழியாவண்ணம் பதிவானவை. யாருமற்ற தனிமையில் மனிதனின் மனம் கொள்ளும் உறுதியைப் பற்றி பேசுபவை.
பதினைந்து வருடங்களுக்கு முன் தினமணிக்கதிரில் ரா.கி.ரங்கராஜன் மொழிபயர்த்த ஆங்கிலக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. புயலில் சிக்கிய கப்பலொன்றில் இருந்து தப்பித்து தீவில் ஒதுங்கும் ஒருவனுக்கும் அந்த தீவில் இருக்கும் எலி ஒன்றுக்குமான போராட்டம் அந்தக் கதை. இவனிடம் மிஞ்சியிருக்கும் பிஸ்கட்டை கைப்பற்ற எலி எடுக்கும் முயற்சிகளும் அதை முறியடித்து தன் ஒரே உணவைக் காப்பாற்ற அந்த மனிதன் செய்யும் முறியடிப்புகளுமாய் தொடரும் அந்தக் கதை. ஒரு கட்டத்தில் இருவருமே போதிய உணவில்லாமல் மெலிந்து கொண்டு வர இருவரில் யார் முதலில் இறந்தாலும் மற்றவர்க்கு அந்த மரணம் சிறிதுகாலத்துக்கு தேவையான உணவிற்கான உத்திரவாதம் என்ற அளவில் ஆகி விடும்.எலி இறந்தால் கூட மனிதனுக்கு அது பெரிய அளவிலான உணவில்லை. ஆனால் அவன் இறந்தால் எலிக்கு கொண்டாட்டம் அல்லவா? யார் இறப்பார் யார் ஜெயிப்பார் என்று நாம் எதிர்பார்க்கும்போது ஒரு கப்பலில் வரும் மாலுமிகள் அவனைக் காப்பாற்றி கப்பலில் ஏற்றி செல்வார்கள். நினைவு திரும்பியதும் அவன் 'அந்த எலியைக் காப்பாற்றுங்கள் ..எங்கள் போட்டி பாதியில் முடிவது நியாயம் இல்லை' என்று அரற்றுவான். மாலுமிகள் அந்தத் தீவுக்கு சென்று நிறைய பிஸ்கட்டுகளை எலியின் உணவாகப் போட்டு விட்டு வருவார்கள். மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தில் தோல்விகள் தரும் வலியை மறக்கும் வண்ணம் கிடைக்கும் வெற்றிகளின் போது அந்தப் போராட்ட கணங்களை மறக்காமல் இருக்க வேண்டும் என்று தோன்றும் அந்த கதை படிக்கும்போது.
கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் எங்கிருந்தோ கிடைத்த புத்தகம் ஒன்றில் பல ஆண்டுகாலம் தனிமைத் தீவில் காலம் கழித்த மனிதனின் கதை படிக்கக் கிடைத்தது. அவன் தான் ராபின்சன் க்ரூசோ. இங்கிலாந்தில் இருந்து கப்பலில் சென்று கொண்டிருக்கும் க்ரூசோ கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்க ஆரம்பிக்க எப்படியோ நீந்தி ஒரு தீவுக்கு சென்று சேர்வான். இங்கிலாந்து கப்பல் ஒன்று வரும்வரையில் அந்த தீவிலேயே கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் வாழ்வான். இடையில் நரபலி கொடுக்கும் ஆதிவாசிகள், க்ரூசோவால் அந்த ஆதிவாசிகளிடம் இருந்து தப்புவிக்கப்பட்டு பின் நன்றிக்கடனுடன் நண்பனாகி அவனுடன் சேர்ந்து வாழும் ஃப்ரைடே (Friday) என்று சில மனிதர்களும் வருவார்கள். தனிமை விரும்பிகளின் கற்பனைகளுக்கு இந்தக்கதை எந்த குறையும் வைக்காது.
கரையில் ஒதுங்கும் க்ரூசோ தன்னோடு வந்தவர்களில் வேறுயாருமே உயிர் பிழைக்கவில்லை என்று தெரிந்தவுடன் அந்தத் தீவருகே ஒதுங்கும் கப்பலின் பாகங்களில் இருந்து சிறிது உணவு, ஒரு நாய், இரண்டு பூனைகள், தேவையான உபகரணங்கள் போன்றவற்றைக் கொண்டுவருவான்.பின் எஞ்சிய கோதுமைகளைக் கொண்டு விவசாயம் செய்வான். வேட்டையாடுவான். தன்னைக் காப்பாற்றிய கடவுளின் மீது நன்றி கொண்டு தீவிர பக்தனாகி விடுவான். பைபிளை தீவிரமாகப் படிக்க தொடங்குவான். ஃப்ரைடே மற்றும் ஃப்ரைடேயின் தந்தை போன்றவர்களின் துணையுடன் இறுதியில் ஒரு கப்பல் புரட்சியை முறியடித்து அந்த கப்பலின் கேப்டனுடன் இங்கிலாந்து சென்று சேர்வான். ஃப்ரைடேயும் கூடவே வருவான். மிக முக்கியமாக அவன் கிறிஸ்துவனாக மாற்றப்பட்டிருப்பான்.
எந்தக் கதையைப் படித்தாலும் அதை ஒரு காட்சியாக உள்வாங்கிப் படிப்பவர்கள் அது திரைப்படமாக வரும்போது தான் உள்வாங்கி கற்பனை செய்த காட்சிகள் திரைப்படத்தில் சரியாகப் பொருந்தி வந்திருக்கிறதா, கதாநாயகன் மூலக்கதாபாத்திரத்தின் ஜாடைகளை ஒத்திருக்கிறானா என்ற தேடலுடனே அந்தப் படத்தை அணுகுவார்கள்.
நாவல் சார்ந்த தங்கள் கற்பனையில் வேறொருவர் தலையிடுவதை விரும்பாதவர்கள் திரைப்படத்தை தவிர்த்துவிடுவார்கள். நான்
எனக்குப் பிடித்த சில சிறுகதைகள், நாவல்கள் திரைப்படமாக வரவேண்டும் என்ற கட்சி. ஜெயமோகனின் 'காடு', அலெக்சாந்தர் புஷ்கினின் 'கேப்டன் மகள்', சிங்கிஸ் ஐத்மாதவின் 'முதல் ஆசிரியன்' போன்ற நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டால் மிகவும் அருமையாக இருக்கும். சமீபத்தில் வெளிவந்த 'வாகை சூட வா' படத்தின் கதையை கேட்கும்போது 'முதல் ஆசிரியனின்' சாயல் தெரிந்தது. என்னை பாதித்த கதைகளில் ஒன்று.களவாணி புகழ் இயக்குனர் என்பதால் படத்தைப் பார்க்கத் துணியவில்லை.
இந்தக் கதையைப் பொறுத்தவரை மூலக் கதையைப் படித்தவர்களுக்கு அதன் திரைவடிவமான பியர்ஸ் பிராஸ்னன் நடித்த 'ராபின்சன் க்ரூசோ' மிகப் பெரிய ஆச்சர்யம் தந்திருக்கும். சிலருக்குப் பிடிக்காமல் கூடப் போயிருக்கலாம்.எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு சாகசக் கதாநாயகனாக ஏற்கனவே அறியப்பட்டிருந்தாலும் பிராஸ்னன் இந்தப் படத்தில் நிறைவாகவே செய்திருக்கிறார். கப்பல் கடல்புயலில் சிக்கி நொறுங்கும் காட்சிகளும் தீவுக் காட்சிகளும் அருமை. மிக முக்கியமாக படத்தில் ஃபிரைடேயின் பாத்திரப்படைப்பு அற்புதம். மூலக்கதை கொண்டிருக்கும் சில முரண்பாடுகளுக்கு எதிராகவோ அல்லது அதை மறைத்து வேறு விதமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடோ எடுக்கப்பட்டிருந்தாலும் நிச்சயம் பாராட்டத் தக்க மாற்றத்தைப் படத்தில் பார்க்கலாம். மூலக் கதையில் ஃப்ரைடே ஒரு க்ரூசோவால் கிறிஸ்துவனாக மதமாற்றப்பட்டு இங்கிலாந்து செல்கிறான். ஆனால் படத்தில் அவன் க்ரூசோ புகழும் அவனது கடவுளான இயேசுவை ஏற்க மறுக்கிறான்.
நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டியாக தான் கதையிலும் படத்திலும் க்ரூசோ ஃ ப்ரைடேயைப் பார்க்கிறான். கதையில் அவன் அடிமைகளை வாங்க வரும் கப்பலில் வரும்போது தான் விபத்துக்குள்ளாகிறான். ஆனால் படத்தில் அந்த விஷயங்கள் சொல்லப்படுவதில்லை. தன் காதலியை மணக்க முயலும் தன் நண்பனை நேரடி வாட்சண்டையில் கொல்ல நேர்ந்ததால் கொலைப்பழியுடன் நண்பனின் சகோதரர்களின் துரத்தலுக்கு பயந்து கொஞ்ச காலத்துக்கு தலைமறைவாக இருப்பதற்காகவே கப்பலில் பயணிக்கிறான்.
ஒரு காட்சியில் நரமாமிசம் உண்ணுவதை கடுமையாக விமர்சனம் செய்யும் க்ரூசோ ஃ ப்ரைடேயிடம் கடவுள் குறித்து நடத்தும் விவாதம் அருமை. தன் கடவுள் தான் உண்மையான கடவுள் என்று இருவரும் கடுமையாக வாதிடுவார்கள். போக்யா என்ற முதலை தான் மனிதர்களை படைத்தது என்கிறான் ஃப்ரைடே . அவனைப் பொறுத்தவரை முதலை தான் கடவுள். க்ரூசோ கொடுக்கும் பைபிளை புரட்டிவிட்டு இதில் கடவுள் எங்கே காணோமே? என்னுடன் வா என் கடவுளைக் காட்டுகிறேன் என்கிறான். இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்து பிரிகிறார்கள். படத்தில் இரண்டு முறை இப்படி வாக்குவாதத்தால் பிரிந்து பின் ஒன்று சேர்வார்கள்.
ஒரு காட்சியில் க்ரூசோவின் சொந்த நாடான பிரிட்டன் பற்றிய பேச்சு வர க்ரூசோ தான் ஒரு வெள்ளைக்காரன் என்று சொல்ல , வெள்ளை ஐரோப்பியர்களின் அடிமை முறையால் தன் உறவினர்களை இழந்த ஃப்ரைடே அப்படியென்றால் தான் அவனுக்கு அடிமையா எனக் கடுமையாக கேட்பான். அமெரிக்க ஆப்ரிக்க அடிமைகளின் வரலாறைப் படித்திருப்பவர்களுக்கு இதன் ஆழம் புரியும்.
க்ரூசோவின் வளர்ப்பு நாய் எதிர்பாராத விதமாக இறந்துவிட அதை புதைக்கும்போது 'அந்த நாயின் ஆத்மாவுக்கு உன் கடவுளின் சொர்க்கத்தில் இடம் கிடைக்குமா ?' என்று ஃப்ரைடே கேட்பான். 'மனிதர்களுக்கு மட்டும் தான் ஆன்மா இருக்கிறது. விலங்குகளுக்கு கிடையாது' என்று பதில் தருவான் க்ரூசோ. உடனே தன் கடவுளான போக்யாவிடம் அந்த நாயின் ஆன்மாவைக் காக்க ஃப்ரைடே வேண்டும் காட்சி அற்புதமானது.
படத்தில் கடைசிவரை க்ரூசோவுக்கு நன்றியுள்ள நண்பனாக இருந்தாலும் சுயகௌரவத்தை கைவிடாதவனாக வரும் ஃப்ரைடே தான் படத்தின் கதாநாயகன் என்பேன். உயிர்பிச்சையும் நல்ல நட்பும் கிடைத்த ஃப்ரைடே க்ரூசோவிடம் சொல்லும் ஒரு வசனம் மிக முக்கியமானது. வரலாற்றின் அந்தக் காலகட்டத்துக்கு மட்டுமல்லாது இப்போதும் கூட சில இடங்களில் பொருந்தக் கூடியது.
"You are not a white man.You are good man"
பின்குறிப்பு :
மூலக்கதையின் ஆசிரியர்:Daniel Defoe
படம் அடிக்கடி ஸ்டார் மூவீஸில் ஒளிபரப்பாகி இருக்கிறது. யூட்யூபில் கூட பாகங்களாகக் கிடைக்கிறது.
Subscribe to:
Posts (Atom)