Tuesday, June 8, 2010

இந்திய சினிமாவின் நிலை..




இந்திய சினிமாவின் நிலையை நினைத்தால் உண்மையிலேயே ரத்தக்கண்ணீர் வருகிறது. ஹிந்தி படமாகட்டும் தமிழ் படமாகட்டும் சினிமா மொழியை புரிந்து கொள்ளாதவர்கள், புரிந்து கொள்ள மறுப்பவர்கள், புரியவே புரியாத புத்திசாலிகள் , தனக்கு மட்டும் புரிந்து விட்டதை போல் பீற்றி கொள்ளும் இயக்குனர்களால் தான் ஆளப்படுகின்றன. இலக்கியத்தின் காட்சி வடிவமாகவே நான் கருதும் சினிமாவை இவர்கள் கொன்று அழித்து வருகிறார்கள்.
பையா போன்ற விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட (!) படங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் தமிழ் சினிமாவில் மிஞ்சுபவை லுங்கி கட்டிய பரட்டை தலை ஹீரோக்களின் படங்கள். கையில் அரிவாள், இடுப்பில் லுங்கி, வாயில் பீடி அல்லது கஞ்சா என்று வாழும் மனிதர்கள் உண்மையில் தமிழ் நாட்டில் எங்கு இருக்கிறார்கள்?
இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய கால கட்டத்தை பிரதிபலிப்பதாக எடுக்கப்பட்ட 'சுப்ரமணியபுரம்' படத்தை நகலெடுக்கும் இயக்குனர்கள் தான் வாழும் காலத்தை உணர்ந்திருக்கிறார்களா இல்லையா? நாளிதழை புரட்டினால் தாவணி போட்ட பெண்ணும், லுங்கி கட்டிய பரட்டை தலையும் சைக்கிளில் போவது போலவே தான் சினிமா விளம்பரங்கள் வருகின்றன.

சினிமாவுக்கு உரிய எந்த அமைப்பும் இல்லாத தனுஷ் போன்றவர்களின் வெற்றி அப்போதைய காலகட்டத்தில் கொடுத்த நம்பிக்கை நல்ல சினிமாவை நேசிப்பவர்களின் மத்தியில் இப்போது தகர்ந்து வருவதற்கு யார் காரணம்? நான் பெரிதும் மதிக்கும் பாலு மகேந்திரா 'அது ஒரு கனா காலத்துக்காக தனுஷை தேர்ந்தெடுத்தபோது இன்றைய இளைஞர்களை திரையில் பிரதிபலிப்பதாலேயே தனுஷ் வெற்றி பெறுவதாக சொன்னார். ஆனால் நடப்பது என்ன? ரெண்டு படத்தில் 'யதார்த்த' மாக நடிக்கும் அந்த சாதா முக நடிகர்கள் மூன்றாவது படத்தில் 'ஓபனிங் சாங்கோடு' ஓவர் டெசிபலில் கத்துகிறார்கள். சிற்றிலக்கிய பத்திரிக்கை பின்னணியில் வரும் இயக்குனர்கள் மாற்றி யோசிக்கிறோம் என்கிற போர்வையில் ரசிகனின் மென்னியை கடித்து துப்புகிறார்கள்.
இந்த கொடுமை போதாதென்று தங்களை elite பிரதிநிதிகளாக கருதிக்கொள்ளும் அரைகுறை மற்றும் திருட்டு இயக்குனர்கள் படுத்தும் பாடு சொல்லி மாளாது. வெகு நாட்களாய் அவதானித்த பிறகு தான் இவர்களை பற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன். மிக முக்கியமாக தன்னை தமிழ் நாட்டின் அறிவு ஜீவி என்று எண்ணிக்கொண்டு அலட்டும் கௌதம் மேனன். மின்னலே என்கிற mediocre படத்தை எடுத்து விட்டு அவர் ஆரம்பித்த அலம்பல் இன்று விண்ணை தாண்டி வருவாயா எனும் அர்த்தமற்ற எரிச்சல் மூட்டும் படம் வரை வந்து நிற்கிறது. போதாத குறைக்கு செம்மொழி மாநாட்டு பாடல் வேறு. தமிழர்களுக்கு நேரும் அவலத்தை பார்த்தீர்களா? நாம் வாழும் காலத்தையோ கலாச்சாரத்தையோ எவ்விதத்திலும் பிரதிபலிக்காத இசை , படமாக்கப்பட்ட விதம் ..(கலைஞரின் கவிதை பற்றி பேச வேண்டியதில்லை (!))

கௌதம் மேனனின் எல்லா படங்களும் திருட்டு படங்கள் தான். காக்க காக்க வில் வரும் தலை வெட்டி பெட்டிக்குள் வைத்து அனுப்பும் காட்சி, அதை திறந்து பார்ப்பவர்களின் அதிர்ச்சி எல்லாம் ஆங்கில படமான seven இல் இருந்து திருடப்பட்டது. நானொன்றும் கௌதம் போல் அதை DVD யில் கூட பார்க்கவில்லை.HBO வில் வந்த போது பார்த்தது. அதே போல் ஒரு முறை தூக்கம் வராமல் ரிமோட்டை குடைந்த போது Star Movies இல் ஒரு படம் கதாநாயகன் ரயிலில் போகிறான். டிக்கெட் இல்லாத அவனுக்காக முன் பின் தெரியாத மாது ஒருத்தி உதவுகிறாள். எங்கேயோ பார்த்தது போல் இருக்க தொடர்ந்து பார்த்தேன் மக்களே. நம் அறிவு ஜீவி அய்யா கௌதம் மேனன் எடுத்த படத்தை ஒரு காட்சி விடாமல் உருவியிருந்தார்கள். படம் என்னவோ நம்மாள் எடுப்பதற்கு முந்தியே வந்து விட்டதாம். எப்பேர்பட்ட திருட்டு? இதை கேட்டால் 'Derailed' எனும் அந்த ஆங்கில படம் நாவலாக வந்ததாம். அறிவு ஜீவி அவர்கள் அந்த நாவலால் உந்தப்பட்டு (Inspiration (!)) படமாக்கினாராம். அதே நேரத்தில் ஆங்கிலத்திலும் வந்து விட்டதாம் படம். எப்படி சுற்றுகிறார்கள் பார்த்தீர்களா ரீலை?

இடையில் வாரணம் ஆயிரம் என்று ஒரு காவியம் வந்தது. கதை என்று எதுவும் இல்லாமல் நினைத்ததை எல்லாம் படமாக்கி நம்மை அறுத்தெடுத்த படம். ஒரு சாதாரண , பையன் படிப்புக்காக கடன் வாங்கும் அளவுக்கு 'வசதியான' ஆனால் குசு விட்டால் கூட ஆங்கிலத்தில் மட்டுமே விடுவேன் என அடம்பிடிக்கும் 'மேல்தட்டு' குடும்பம். சொந்த அப்பா சாக கிடந்தது பிழைத்து கட்டிலில் படுத்து கொண்டு மெலிதாய் புன்னகைத்தால் அவர் மகள் எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன் அம்மாவிடம் 'He is smiling maa..' என்கிறாள். இது தானா உங்க eliteness?

இன்னொரு கொடுமையை தமிழ் சினிமாவில் ஆரம்பித்து வாய்த்த பாக்கியவானும் அய்யா தான். அதாவது ஹீரோவுக்கு காதல் வந்து விட்டால் நெஞ்சில் குத்திக்கொண்டு ஒரு காலை தரையில் ஓங்கி ஓங்கி மிதித்துக்கொண்டு மூக்கையும் வாயையும் சுளித்துக்கொண்டு , ரெண்டு கையையும் தலைக்கு மேலே பிச்சை என்டுப்பது போல் வைத்துகொண்டு அடி வயிற்றில் வலி வந்தவன் போல் பாடுவது. கதை கூடுவாஞ்சேரியில் நடந்தாலும் பாட்டென்று வந்து விட்டால் வெள்ளைக்கார நடனர்கள் ஹீரோவுக்கு பின்னால் அதே போல் நெஞ்சை குத்திக்கொண்டு ஆடுவது. ஒரு படத்தில் அய்யாவும் சேர்ந்து ஆடினார். ஒரு முறை என் நண்பர் சொன்னார். இது போன்ற பாடல்களுக்கான 'ஆடல்களை' உணர்ச்சிபூர்வமாக வடிவமைப்பதே அய்யா தானாம். 'காக்க காக்க' விற்கு பிறகு வரும் சூர்யாவின் எல்லா பாடல்களிலும் அவர் இதே போல் தான் ஆடுகிறார். எப்பேர்பட்ட புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார் அய்யா? இந்த லெட்சணத்தில் அய்யா இனிமேல் தமிழ் படம் எடுக்க மாட்டாராம் ..ஆங்கிலத்தில் எடுத்தால் அதை பார்க்க தமிழ் நாட்டில் நூறு பேராவது இருக்க மாட்டார்களா என்று ஆதங்கத்தோடு கேட்கிறார். அந்த நூறு பேர் தான் இது போன்ற போலிகள் உருவாக காரணமாய் இருக்கிறார்கள் என்றால் அவர்களை 'சல்ப்..சல்ப்' என்று நாலு அறை விட என் போன்றவர்கள் தயாராய் இருக்கிறார்கள். நினைவிருக்கட்டும்.

இதெல்லாம் விட ஒரு கொடுமை படித்தேன். வெறும் அரங்க அமைப்பு, உடை, இட தேர்வு என்பதை தவிர ஒரு மண்ணும் இல்லாத வறண்ட படமான 'இரும்புகொட்டை முரட்டு சிங்கம்' படத்தை 'முள்ளும் மலரும்', 'உதிரிபூக்கள்' போன்ற இணை இல்லாத படங்களை தந்த மதிப்புக்குரிய மகேந்திரன் பாராட்டி எழுதிய கடிதம் என்னை மயக்கமடைய வைத்தது.என்ன கொடுமை சார் இது?

சரி ஹிந்தி படங்களாவது பார்க்கலாம் என்றால் அவர்களின் கேடு கேட்ட ரசனையும், ஜனங்களை முட்டாளாக்கும் கற்பனை வளமும் ..மூச்சை முட்டுகின்றன. சமீபத்தில் பார்த்த Rajneeti படத்தை பற்றி அடுத்த பதிவில் ..