Monday, November 30, 2009

அய்யா சாருவின் அருமை பெருமைகள்

'தேவதைகள் கால் வைக்க தயங்கும் பிரதேசத்தில் முட்டாள்கள் குதித்தாடியபடி செல்வார்கள்' என்றார் எம்.ஜி. சுரேஷ், அருமை அண்ணன் சாருவின் ஒரு நேர்காணல் குறித்து எழுதியபோது.
எவ்வளவு அறியாமையில் இருக்கிறார், எம்.ஜி.எஸ்.
அண்ணன் சாரு எப்பேர்பட்ட ஆள். உலகெங்கும்
உள்ள மலையாளிகள் அனைவரும் காலையில் பாத்ரூம் செல்வதற்கு முன் அய்யாவின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு சென்றால் தான், எல்லாம் நல்லபடியாய் போகும் என்று அவர் , படத்தை கையிலேயே வைத்துக்கொண்டு தான் தூங்க செல்கிறார்கள். குறிப்பாக பெண்கள்.
உலகெங்கும் உள்ள(குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த) இயக்குனர்கள் தங்கள்
படங்களின் முதல் காப்பியை அய்யாவுக்கு அர்ப்பணம் செய்த பிறகே உலகெங்கும் திரையிட செல்கிறார்கள். அகிரா குரோசோவா உயிரோடிருந்திருந்தால் அய்யா அவர்களின் நாவல்களில் ஒன்றை படமாக எடுத்து அன்றே தன் வாழ்நாளை முடித்துக்கொண்டிருப்பார்.

இவ்வளவு அருமை வாய்ந்த நம் அய்யாவை அவமதித்துப் பேசிய எம்.ஜி.எஸ்ஸை நினைத்து
சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அய்யா சாரு பற்றி ஒரு எழவும் தெரியாத தற்குறி தமிழர்களுக்கு அவரின் மேன்மைகளை எடுத்து சொல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். (அய்யாவை கேரளாவில் அறியாத தெரு நாய் ஒன்று கூட இல்லையாக்கும்!)
என்னமோ சாரு சாரு என்கிறீர்களே , சாரு யாரு? என்று கேட்கும் தமிழர்களே கேளுங்கள் எங்கள் அய்யாவின் அருமை மற்றும் பெருமைகளை..

அய்யா சரியாக எழுத
துவங்கும் முன்பே சு.ரா. போன்ற சுறாக்களை விமர்சன வேட்டையாடிய பெருமை கொண்டவராக்கும். (விமர்சனத்தின் பெரும்பகுதி பிரமிள் எழுதிய கட்டுரையின் காப்பி என்று சொல்பவர்கள் நரகத்துக்கு போக. )
அய்யா நாளிதழ் ஒன்றின் sponsorship இல் காலம் கழிப்பதாய் சொல்பவர்கள் நாசமாய்ப்போக.
அய்யாவின் விமர்சனம் படித்த தமிழ் இளம் இயக்குனர்கள் அவரை ஒரு படத்திலாவது தாதா வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சோறு தண்ணியில்லாமல் வெறும் சிக்கன் பிரியாணி , பீர் பிராந்தி என்று மட்டும் உண்டு தவம் கிடக்கிறார்கள். தாதாவா தாத்தாவா என்பது இயக்குனர்களும் இவரும் மட்டுமே அறிந்த ரகசியமாக்கும்.

அய்யா அவர்கள் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளரும் கூட.
அய்யாவின் கண்டுபிடிப்புகளில் சில:
கண்டுபிடிப்பு நம்பர் 1:

பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய தேசங்களில் மருந்துக்குக்கூட கற்பழிப்புகள் நடப்பதில்லை.
(ஆதாரம் அய்யா அவர்கள் கழிப்பறைக்கு செல்லும் முன் பிரான்ஸ், ரஷ்யா, பிரேசில் போன்ற அனைத்துலக நாடுகளின் e-paper களை படிக்கிறார். அவற்றில் ஒரு கற்பழிப்பு செய்தி கூட வராததைக்கண்டு ஆச்சரியமடைந்தவாறே கழிப்பறையை நோக்கி ஒரு பெருமிதத்துடன் நடக்கிறார்!)

கண்டுபிடிப்பு நம்பர் 2 :


ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் ஒரு பின் நவீனத்துவ படமாக்கும். என்னய்யா அப்படி பார்க்கிறீர்? சொன்னது யாரு ?
அருமை அண்ணன் சாரு!

கண்டுபிடிப்பு நம்பர் 3 :


செல்வராகவனின் 'புதுப்பேட்டை
' தான் தமிழின் முதல் ஸ்பார்ல்டன் சினிமா. செல்வராகவன் தமிழின் அகிரா குரோசோவா.
கண்டுபிடிப்புகளுக்கு கணக்கேயில்லை.

அய்யா ஒரு அதிரடி நாயகனாக்கும். கலைஞர் முதல் கமல்
வரைக்கும் ஒரு பிடி பிடித்து விடுவார் தெரியுமா ? (சொந்த ஊர் குற்றாலமா எனக்கேட்கும் கஸ்மாலம் யார்?)

தமிழின் ஒரே எழுத்தாளரான அய்யா அவர்கள் , சமூக பொறுப்பாளியும் கூட.
விஜய் டிவி யின் 'நீயா நானா ?' நிகழ்ச்சியில் தம்பிடி பைசா கூட பெற்றுக்கொள்ளாமல் , சினிமாவில் தலைகாட்ட டிவி ஒரு முதல் படி என்றெல்லாம் நினைக்காமல் , தமிழ் மக்களின் நலன் ஒன்றே தன்னலம் என்ற அரிய பெருந்தன்மையுடன் , பங்கேற்றவர்.
(பின்பு ஏனய்யா பேசிய பைசா கைக்கு வரவில்லை என்று ஆனந்த விகடனில் அழுது ஒப்பாரி வைத்தீர் என்று கேட்பவன் யாரடா?)
எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோரையும் சிரிக்க வைக்கும் பணியில் தன்னை வெகு நாட்களாக அர்ப்பணித்துக்கொண்டு தனக்கு தெரிந்த தெரியாத புரிந்த புரியாத மொழி திரைப்படங்களையும் , கோடி வீட்டு குப்பனும் சுப்பனும் அறியும் படி செய்யும் விமரசனப்பணியில் ஈடுபட்டு இன்னல்பட்டு வருகிறார்.

அய்யாவுக்கு பிடித்த இசை அமைப்பாளர் ரஹ்.... ஏய் நிறுத்து நிறுத்து! பிடித்த இசை அமைப்பாளர் எதற்கு? பிடிக்காத ஒரே இசை அமைப்பாளர் இளையராஜா என்ற இசை தெரியாத
ஒருவர்.
இததகைய முடிவுக்கு அய்யா
வர காரணம்?

நீண்ட நாட்களாகவே மாபெரும் இசை மற்றும் கலை விமர்சகரான அய்யா சாரு நிவேதிதா அவர்கள் தனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் செய்து , தமிழ் சமூகத்தின் தீராத அவலமான கொடூரமான இசை தந்து வரும் ,இசை பற்றி எதுவுமே தெரியாத இளையராஜாவை புறக்கணிக்க சொல்லி தனது மேலான விமர்சனப்பணியை எவ்வித உள் மற்றும் வெளிநோக்கம் இல்லாமல் செய்துவருகிறார். எனினும் அறிவே இல்லாத ஜென்மங்களான தமிழ் மக்கள் அவர் போல் இலத்தீன் மற்றும் கிசிக்ககோ(?) இசை கேட்காமல்
இளையராஜாவின் அபசுரங்களை கேட்டு அல்லல்படுகின்றனர். அவருக்கு பிற்பாடு உலக இசை மற்றும் செவ்வாய் கிரகம் மற்றும் சனி கிரக இசை மற்றும் வாயில் நுழைய முடியாத இசை வகைகளை அறிந்தவரான இசையின் எந்திர வடிவமான ஆஸ்கார் புகழ் ரஹ்மானின்
இசையை கேட்க சொல்லியும் எந்தவித லாப நட்ட நோக்கமின்றி சேவை செய்து
வருகிறார்.
அன்னாரின் அருமையான கருத்துக்களை கேட்க விரும்பாத Existentialism என்றால்
என்ன சமாசாரம் என்று கேட்கும் பாவிகள் நிறைந்த தமிழ் மக்கள் இனிமேலாவது திருந்த வேண்டும் என்று அய்யாவின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

(கிசிக்ககோ இசை பற்றி கேள்விப்படாதவர்கள் காதை அறுத்துக்கொள்ள வேண்டும். இது டிக்சிகோ நாட்டை சேர்ந்த இசை அறிஞரும் அங்கு கஞ்சா மற்றும் அபின் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவருமான டின்ச்கி இவருப்புடுங்கி என்ற பெயர் கொண்ட அக்கக்கோ ஆராரிராரோ என்ற மயன் இனத்தை சேர்ந்த ஒருவரின் கண்டுபிடிப்பான இசையாகும். )

அய்யா அவர்கள் இரவு பகல் எந்நேரம் ஆனாலும் நகாரா இசையைக்கேட்டுக்கொண்டே வேலை பார்ப்பவராக்கும்.

அய்யா அவர்களின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :
இளையராஜா இசை அமைத்த 'பா' ஹிந்தி படத்தின் இசை ஒரு மாபெரும் நகைச்சுவை என்று பம்பாய் சினிமாக்காரர்கள் பல் தெரிய சிரிக்கிறார்களாம். பம்பாயின் பெரிய பெரிய தலைகள் எல்லாம் போன் போட்டு இவரிடம் சிரியோ சிரியென்று விலா நோக சிரிக்கிறார்களாம். எப்பேர்பட்ட கண்டு பிடிப்பு பார்த்தீர்களா? இது போன்ற ஒன்றை உங்களால் கற்பனை செய்தாவது பார்க்கமுடியுமா மக்களே? இங்கு டெல்லியில் எனது பக்கத்துக்கு வீட்டுக்கார பஞ்சாபி 'பா' இசையைக்கேட்டு வயிறு வலிக்க வலிக்க சிரித்து Safdarjung hospital இல் அட்மிட் ஆகிவிட்டார் என்று அய்யாவுக்கு எப்படித்தான் தெரிந்ததோ ? எல்லாம் ஞான திருஷ்டி தான் போங்கள்.

ஆனால் அய்யா தனது தத்துவத்தின் இறுதியில் ஒரு குண்டை தூக்கிப்போட்டிருக்கிறார்.
மேற்கண்ட தகவலை இல்லை என்று நிரூபித்தால் தான் எழுதுவதையே நிறுத்தி கொள்ளப்போவதாக அய்யா எழுதி இருந்ததை படித்தவுடன் என் இதயமே நின்று விட்டது. அய்யா எழுதவதை நிறுத்தி விட்டால் தமிழகத்துக்கு எப்பேர்பட்ட இழப்பு? தமிழகம் கிடக்குது தமிழகம் , அவருக்கு கட்-அவுட் எல்லாம் வைத்து தலையில் வைத்துக்கொண்டாடும் மலையாள இலக்கிய உலகம் மரித்துப்போய் விடாதா?
இலத்தீன் அமெரிக்கா, பிரான்ஸ் ரஷ்யா போன்ற நாடுகள் மற்றும் செவ்வாய் கிரகத்தின் இயக்குனர்கள் தங்கள் திரைப்படங்களை யாரிடம் சென்று காட்டி கருத்துப்பெறுவார்கள்?
ஐயோ.. நினைக்கவே மனம் பதறுகிறதே.
எனவே மக்களே, என்னருமை மக்களே அவர் சொல்வது போல் 'பா' இசை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நகைச்சுவை என்று கூறி (அடேய் அறிவு கெட்ட பயலே ! வட இந்தியாவில் பா படத்தின் பாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு
இருக்கிறதடா மடையா! என்றெல்லாம் எடுத்தெறிந்து பேசாமல் !) அய்யாவின் எழுதுலகப்பணி என்றென்றும் தொடர வழிவகுக்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் கைப்புள்ளை காமெடியை விட சிறந்த காமெடியை வழங்க அய்யாவை விட்டால் நமக்குதான் ஒரு நாதியுண்டா?