Saturday, August 28, 2010

ஒரு கடிதம்

அன்புள்ள சந்திரமோகன்

உங்கள் சொல்வனம் கட்டுரைகளைப் படித்து விட்டு தொடர்ந்து இந்த ப்ளாகிற்கு வந்தேன். ஒரு நல்ல ரசனையுள்ள பதிவரை அறிமுகப் படுத்தியதற்கு சொல்வனத்திற்கு நன்றி.

உங்களது தற்பொழுதைய கல்மாடி கட்டுரையைப் போன்ற முழுமையான உண்மைகள் கொண்ட கட்டுரைகள் நம் தமிழ் பத்திரிகைகளில் வருவது இல்லை. உங்கள் சினிமா விமர்சனங்களும் என் ரசனையை முழுமையாக பிரதிபலிப்பவையே. ஒரு நண்பரிடம் தமிழில் நல்ல நகைச்சுவைப் படங்கள் வெகு அரிதாகவே வருகின்றன என்று சொன்ன பொழுது “என்ன அப்படிச் சொல்லிப் போட்டீங்க? உடனே தமிழ் படமும், இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கமும்” பாருங்க என்றார். அவர் மட்டும் அல்ல பொதுவாகவே எந்தவொரு சராசரி தமிழருடன் பேசினாலும் இப்படித்தான் சொல்கிறார்கள். ஏற்கனவே இம்சை அரசனைப் பாதி பார்த்து விட்டு கடும் எரிச்சலில் இருந்ததினால் எச்சரிக்கையாக அவர் சொன்ன எந்த படங்களின் அருகிலேயே போகக் கூடாது என்று முடிவு செய்தேன். பருத்தி வீரன், சு புரம், களவாணி என்று இவர்களது சினிமாப் புரட்சிக்கு எல்லையே இல்லை. களவாணியில் ஒரே ஆறுதல் அந்த லும்பன் வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு தண்ணி அடிக்கிறான் கைலி தஞ்சாவூர் பக்கம் கிடையாதாம் ஆகவே ஆத்தெண்ட்டிக் தஞ்சாவூர் மூவி :) சமீபத்தில் ஒரு வித்தியாசமான தமிழ் பட இயக்குனருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது “தமிழில் சமீப காலத்தில் வேலைக்குப் போகும் இளைஞனைக் காட்டி எத்தனை படங்கள் வந்துள்ளன?” என்று கேட்டார். யோசித்ததில் ஒன்றிரண்டு தென்பட்டது. அவ்வளவுதான். தமிழின் ட்ரெண்டே வேலை வெட்டி இல்லாமல் பீடி குடித்து தண்ணி அடித்து காதலுக்காக அல்லது காதலர்களைச் சேர்த்து வைக்க அல்லது ரவுடிகளுக்காக அலையும் விடலை லும்பன்கள்தான். இவர்கள் மட்டும்தான் தமிழ் நாடா? நம் சம காலச் சமூகத்தின் பிரச்சினைகள் இவை மட்டும் தானா அல்லது இவர்கள்தான் நம் சமூகத்தின் கண்ணாடி பிம்பங்களா? காதலும், அருவாளும், copyயும் இல்லாமல் வந்த உருப்படியான தமிழ் படங்கள் மொத்தம் ஒரு பத்து கூடத் தேறாது. 75 வருடங்களாக காதலை மட்டும் சொல்லி இன்னும் தீர்ந்தபாடில்லை. இருந்தும் ஒரு உன்னதமான காதல் சினிமாவும் வந்த பாடில்லை. இப்பொழுது காதலுடன் கூடவே தொட்டுக் கொள்ள அருவாளும் வேண்டி உள்ளது, இல்லாவிட்டால் இ கோ மு சி போன்ற அசட்டுப் படைப்புக்கள். நம் மன அமைதிக்கு இவற்றில் இருந்து தள்ளி நிற்பதே நல்லது. பருத்தி வீரனையும், சு புரத்தையும், நாடோடியையும், களவாணியையும், வி தா வருவாயாவையும் நாம் இன்று விமர்சித்தால் தமிழ் பண்பாட்டின் எதிரிகளாக காலத்துடன் ஒட்டாத் பெருசுகளாக அடையாளம் காணப் பட்டு இகழப் படுகிறோம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையைச் சொல்ல உங்களைப் போல ஒருவர் இருப்பது கண்டு ஒரு திருப்தி. தொடருங்கள்

அன்புடன்
ச.திருமலைராஜன்

..........


மிக்க நன்றி ராஜன்,
உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும் தொடர்ந்து எழுதுவதற்கான உத்வேகத்தையும் தருகின்றன. நானும் உங்கள் கட்டுரைகளை சொல்வனத்திலும் மற்ற இணைய பக்கங்களிலும் படித்திருக்கிறேன். விஷய ஞானமும் அதை வீரியம் குறையாமல் அதே சமயம் மிரட்டாமலும் விஷயங்களை எங்களுக்கு தரும் முக்கிய எழுத்தாளரான நீங்கள் என்னை கவனித்திருப்பதற்கு நான் நண்பர் சேதுபதி அருணாசலத்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். என் கட்டுரைகளை அவர் சொல்வனத்தில் வெளியிட்ட பிறகு தான் என்னை நிறைய வாசகர்களும் உங்களை போன்ற எழுத்தாளர்களும் கவனித்து இருக்கிறார்கள்.

நீங்கள் மிக சரியாக சொன்னது போல் இங்கு பெரும் அளவில் வெற்றி பெரும் படங்களை பற்றி நாம் விமர்சனம் செய்தால் 'பினாத்தல் பெருசுகள்' என்று பெயர் பெற்று விடுகிறோம். எனது களவாணி பற்றிய கட்டுரையை படித்து விட்டு ஜீரணம் செய்ய முடியாத 'உயர் ரசனை' குழு (துரதிருஷ்ட வசமாக நல்ல உலக சினிமா பற்றி தெரிந்த சிலரும் இதில் அடக்கம்.) என்னை தமிழகத்தின் 'உண்மை நிலை தெரியாத' ஒருவன் என்று கிண்டல் செய்ததை அறிந்தேன். சிலர் என்னிடம் அந்த படத்தை பற்றி விவாதமும் செய்கிறார்கள். காதலியை மணக்கப்போகும் மாப்பிள்ளையை கடத்தி வைத்து கொண்டு அவள் அண்ணனிடம் ' இப்போ என்ன பண்ணுவே உன் தங்கச்சி கழுத்தில் நீயே தாலி கட்டுவியா..?' என்று கேட்கும் 'பண்புள்ள' ஒருவனை நம் தமிழ் சினிமா கொண்டாடுவதுடன் அதை நம் ரசிகர்கள் பார்த்து இந்த மாதிரி படம் வந்து எத்தனை நாள் ஆகிறது என்று சிலாகிக்கிறார்கள். இந்த படம் மட்டும் இல்லை. விருந்தாளி , பெருச்சாளி என்று யதார்த்த படங்களின் வருகை பெருத்துக்கொண்டே போகிறது. இவ்வளவு மோசமான ரசனையை நான் போஜ்புரி ரசிகர்களிடம் கூட பார்த்ததில்லை. ( பீகார் போன்ற மாநிலங்களில் தயாராகும் படங்களை பார்க்கும் துரதிருஷ்டம் உங்களுக்கு நேர வேண்டாம், நான் முன்பு வேலை பார்த்த இடத்தில அந்த மாநில மக்கள் பார்த்து ரசிக்க தயாராகும் படங்களின் எடிட்டிங் வேலை நடக்கும்..) ரசனை மேம்படாமல் படைப்பு மெருகு அடையாது.

மேலும் நம் elite இயக்குனர்களான மணிரத்னம் , கௌதம் மேனன் போன்ற மேதைகள் எடுக்கும் படங்களில் வரும் கதாபாத்திரங்களின் அலட்டலை சகிக்க முடியாது. மணியின் படங்களில் இந்த எரிச்சலூட்டும் elite lumban களை பார்க்க முடியும். நம் ரசிகர்களுக்கு இந்த படங்களை பிரித்து பார்க்கும் பக்குவமும் இருப்பதில்லை. பெரும்பான்மையான பேர் சினிமாவை வெறும் பொழுதுபோக்கு என்று தான் நினைக்கிறார்கள். இந்த படங்களின் அபத்தங்களை பற்றி பேசினால் 'எங்களுக்கு இது தான் வேலையா..போனமா பாத்தோமான்னு இல்லாம அத போட்டு நோண்ட எங்களுக்கு எது நேரம் என்று கேட்டு விட்டு' அன்றாட வேலை பார்த்து அடுத்த அபத்த படத்துக்கு தயாராகி விடுவார்கள்.

பாப்போம். ரசனையில் ஏதேனும் மற்றம் நிகழும்படியான உண்மை படங்கள் தமிழில் வருமா என்று..

மிக முக்கியமான கருத்து என்பதால் உங்கள் பின்னூட்டத்தை கடிதமாக பிரசுரித்திருக்கிறேன். கருத்துக்கும் கடிதத்துக்கும் நன்றி ராஜன்..

9 comments:

  1. Hi Chandramohan,
    Being a long time friend first of all i wish u all the best for all your endeavors.your article over the common wealth games organizers(Organizer?) whole sale scam was absolutely spot on.This is high time for the Indian government to wake up and get things right before its too late and the entire system needs to be revamped. The likes of Kalmadi has to be chucked out with out any delay and the government should come up with a new sports policy only then some how we can redeem our nations pride.I must say you are emerging one of the constructive critic in the literacy world.keep going all the best again.

    ReplyDelete
  2. ரொம்ப சந்தோசமா இருக்கு சந்திரா சார். நான் கூட கடிதம் எழுதனும்னு நெனைச்சேன். நல்ல முன்னேற்றம் தெரிகிறது உங்க எழுத்துல.தொடர்ந்து எழுதுங்கள்....நன்றி.

    ReplyDelete
  3. அன்புள்ள சந்திரமோகன்

    உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் அபிமானத்திற்கும் நன்றி. முதலில் ஒரு சிறு தன்னிலை விளக்கம். நான் எழுத்தாளன் எல்லாம் கிடையாது. அவ்வப் பொழுது மனதிற்கு சரியென்று தோன்றுபவைகளை ஒரு சில பொது தளங்களில் கட்டுரைகளாகவோ பின்னூட்டங்களாகவோ பகிர்ந்து கொள்வதோடு சரி. ஒரு சாதாரண அரட்டையாளன் மட்டுமே.

    தமிழ் சினிமா என்றில்லை பொதுவாக அனைத்துத் தளங்களிலிலுமே ஒரு விதமான மொன்னையான பொதுப்புத்தி சார்ந்த ரசனை நிலவுகிறது. அதைச் சுட்டிக் காட்டும் எவரையுமே அவர்கள் காலத்துக்கு ஒவ்வாதவர்கள் என்றோ மேட்டிமை புத்தி கொண்டவர்கள் என்றோ ஒதுக்கி விடுகிறார்கள். சந்தோஷ் சுப்ரமணியம், மொழி, நாடோடி போன்ற படங்களை என் நண்பர்கள் பலரும் ஆகா ஓகோவெனப் பாராட்டி தமிழில் வந்த முக்கியமான படங்கள் என்று சொன்ன பொழுது அவை வெறும் ஃபீல் குட் படங்கள் மட்டுமே அவை சாதாரண யதார்த்த வகைப் பட வரிசையில் கூடச் சேராது என்று சொன்ன பொழுது அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை நான் ஏதோ மேதாவித்தனத்தைக் காட்டுகிறேன் என்று எண்ணிக் கொண்டார்கள். தமிழில் ஒட்டு மொத்தமாக அடிப்படை ரசனையிலேயே கோளாறு இருக்கிறது. இதை எழுதப் போனால் பெரிய கட்டுரையாக மாறி விடும். காதல்,அதீத வன்முறை, அசட்டுத்தனமான ஜோக்குகள், ரவுடித்தனம் இவற்றைத் தாண்டி தமிழ் சினிமா இன்னும் மேலே வரவேயில்லை. டெக்னிக்கலாகவும் ஓரளவுக்கு யதார்த்த நடிப்பைக் கொணர்வதிலும் முன்னேறியிருக்கிறார்களே அன்றி இயக்குனர்களிடம் இருக்கும் ஓரிரு வன்முறை/காதல் சார்ந்த கதைகளும் கற்பனைகளும் தீர்ந்தவுடன் அதற்கு மேல் போக முடியாமல் தேங்கி விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. கொளதம் மேனன் போன்ற காப்பி இயக்குனர்களை சிறந்த இயக்குனர்கள் என்று கொண்டாடும் ஒரு மனநிலையை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை. மணிரத்தினத்தின் குரு என்ற அபத்தமான ஒரு சினிமாவை நான் காண நேர்ந்த எரிச்சலில் நண்பர்களுடன் தனி மடலில் பகிர்ந்து கொண்ட ஒரு பார்வையை இன்று இந்த பதிவில் நண்பர் ஆர் வி எடுத்துப் போட்டிருக்கிறார் பாருங்கள்
    http://awardakodukkaranga.wordpress.com/

    இதையெல்லாம் சொல்லப் போனால் எரிச்சல் அடைந்து நம்மை மேட்டிமைவாதிகள் என்கிறார்கள். தமிழ் மக்களின் ரசனை குறித்து ஜெயமோகனின் பல பதிவுகளில் அலசியிருக்கிறார். நாம் செய்யக் கூடியது நாம் காண நேர்ந்த சில உண்மையான யதார்த்தப் படங்களை அபத்தமில்லாத சினிமாக்களை அறிமுகப் படுத்தி அதற்கும் தமிழ் சினிமாக்களில் பிரபலமான சினிமாக்களுக்கும் உள்ள வித்யாசங்களை எடுத்துச் சொல்வதே. சுரேஷ்கண்ணன், ஹரன் பிரசன்னா போன்றவர்கள் அதனால் கிடைக்க நேரும் அதிகப்பிரசங்கி பட்டத்தையும் பொருட்படுத்தாமல் அதை அடிக்கடிச் செய்து வருகிறார்கள்.

    தமிழ் நாட்டில் காதல், அதீத வன்முறை, பொறுக்கித்தனம் இவைகளைத் தவிர்த்து ஏராளமான பிரச்சினைகள் உள்ளன அவற்றை அதன் இயல்பான யதார்த்தத்துடன் காண்பிக்கும் சினிமாக்கள் தான் இல்லை. காதலைக் கொண்டு வராமல் வன்முறை இல்லாமல் எதையுமே இவர்களால் காட்ட முடிவதில்லை. தமிழின் ஒட்டு மொத்த சூழலுமே ஒரு விதமான போலித்தனத்தில் ஆழ்ந்து கிடக்கும் பொழுது சினிமா மட்டும் எந்த விதத்தில் தனித்து இருக்கும்? இதையெல்லாம் பேசப் போனால் தமிழினத் துரோகி பட்டம் வேறு சேரும். மலையாளத்தில் ஒரு கணிசமான அளவு பாரலெல் சினிமாக்களை வரவேற்று ரசிக்கும் ரசனை, பக்குவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அது போன்ற ஒரு இனம் தமிழ் நாட்டில் உருவாக வேண்டும். அதற்கு உங்களைப் போன்றவர்களின் கட்டுரைகள் என்றாவது உதவக் கூடும். தமிழில் நான் கலைப் படங்களை எதிர்பார்க்கவேயில்லை. ஓரளவுக்கு நம்பகத்தன்மையுள்ள, நிஜத்தன்மையுடன் கூடிய இயல்பான நடிப்புடன் கூடிய, அபத்தங்கள் இல்லாத யதார்த்த சினிமாக்கள் வர வேண்டும். அத்தி பூத்தாற் போல மிக அபூர்வமாக ஒரு சில படங்களுடன் அவை நின்று போகின்றன. அவை உருவாகும் ஒரு சூழல் வரும் வரை மலையாளப் படங்களுடன் திருப்தி அடைந்து கொள்ள வேண்டியதுதான்.

    தொடர்ந்து எழுதுங்கள் சந்திரமோகன். என் கருத்துக்களை நேரம் கிடைக்கும் பொழுது பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் எழுத்தில் நல்ல ரசனையும், அங்கத உணர்வும், நல்ல நடையும் அமைந்துள்ளன. தொடருங்கள்.

    அன்புடன்
    ராஜன்

    ReplyDelete
  4. அன்புள்ள ராஜன்

    உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

    மிக சிலர் மீது நான் மரியாதை வைத்து அவர்களை பின் தொடர்கிறேன். அவர்களில் நீங்களும் ஒருவர். உங்களை அரட்டை எழுத்தாளன் என்று நான் எப்போதும் சொல்ல மாட்டேன். அபத்தங்களை ஒதுக்கி அவற்றை கடுமையாய் விமர்சனம் செய்யும் முக்கிய எழுத்தாளர் நீங்கள்.

    நீங்கள் தந்த பதிவை வாசித்தேன். மணிரத்னத்தின் அபத்தங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள்.. பல இடங்களில் வாய் விட்டு சிரித்தேன்..உண்மையில் வேதனையாகவும் இருக்கிறது. இது போன்ற விமர்சனங்கள் சம்பதப்பட்டவர்களுக்கு போய் சேர வேண்டும்.

    பாருங்கள் அவர் இந்தியாவின் ஸ்பீல்பெர்க் போல் கருப்பு பழுப்பு பின்னணியில் குறுந்தாடியில் கைவைத்து அறிவுஜீவி புன்னகை சிந்தி புகைப்படங்களுக்கு போஸ் தருகிறார். அதற்கும் வலுவான காரணம் உண்டு. மணி ஸ்பீல்பெர்கின் பல படங்களை உருமாற்றி தமிழில் தந்தவர். E.T ஐ அஞ்சலியாகவும், Artificial Intelligence ஐ கன்னத்தில் முத்தமிட்டாலாகவும் பிரதி எடுத்து இங்கு பெரும் புகழ் ஈட்டிய அறிஞர் அவர். ஆனால் நம் உயர ரசனை குழு அவரை எந்த உயரத்தில் வைத்திருக்கிறது என்று பார்த்தீர்களா? நம் 'விமர்சகர்கள் ' ஒளிப்பதிவு டக்கர், 'மீசிக்' சூப்பர் , என்று (இப்போது ) எடிட்டிங் casting பற்றியெல்லாம் சிலாகித்து எழுதுகிறார்கள். நாமெல்லாம் அதை பற்றி பேசப்போனால் ஒன்று மேட்டிமைவாதிகள் அல்லது பழமைவாதிகள் அல்லது போலி அறிவுஜீவிகள் போன்ற பாராட்டுரைகளுக்கு ஆளாகி பரிதாபமாய் நிற்கவேண்டியது தான்.

    சுரேஷ்கண்ணன், ஹரன்பிரசன்னா போன்றோர் மிக சரியாக விமர்சனங்களை எழுதுகிறார்கள். எனக்கு சுரேஷின் எழுத்துக்கள் மிகவும் பிடித்தமானவை. ஹரன் களவாணி பற்றிய எனது கட்டுரையை சரியாக புரிந்து கொள்ளாமல் எதிர்வினை செய்தார் என்பது எனக்கு பெரும் ஆச்சர்யத்தை தந்தது.

    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ராஜன்..

    ReplyDelete
  5. என் அன்பு நண்பன் சரவணனுக்கு..
    அன்பின் மிகுதியால் என்னை அதிகமாகவே பாராட்டி விட்டாய்.. அதை தக்க வைத்துகொள்வது என் முன்னிருக்கும் மிக பெரிய சவால்.
    நன்றி நண்பா..

    ReplyDelete
  6. @மயில் ராவணன்
    நன்றி மயில்.. உங்கள் வார்த்தைக்கும் வருகைக்கும் !!

    ReplyDelete
  7. அன்புள்ள சந்திரமோகன்

    ஹரன் பிரசன்னா, கீதைகிருஷ்ணன் போன்ற பிற மொழிப் படங்களைப் பார்ப்பவர்கள் கூட எந்தக் கோணத்தில் களவாணி போன்ற திரைப்படங்களை அணுகுகிறார்கள், ஏன் வரவேற்கிறார்கள் என்பதை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிகிறது.

    தமிழில் நிஜத்தன்மையுடன் கூடிய படங்கள் அபூர்வமாகவே வருகின்றன. தமிழில் ஜியாகரஃபி உள்ள படங்களே மிகக் குறைவு. சரியான வட்டார வழக்கு, யதார்த்தமான உடைகள், பேச்சுக்கள், பாவனைகள், சம்பவங்கள் இவை யாவும் ஒரு படத்தில் இருந்து விட்டாலே தமிழில் அது ஒரு அபூர்வமான படைப்பாகி விடுகிறது. ஆகவே அவை போன்ற படங்களை சிறப்பான படங்கள் என்று வரவேற்று விடுகிறார்கள். பருத்தி வீரன், காதல், சுப்ரமணியபுரம், களவாணி இவை யாவுமே அந்த வகையில் நிஜமான களத்துடனும், வட்டார வழக்குகள், பின்புலன்களுடனும் திறம்பட அமைக்கப் பட்ட திரைப்படங்கள். இவற்றில் சாதாரணத் தமிழ் திரைப்படங்களில் நாம் காண நேரும் அபத்தமான நகைச்சுவைக் காட்சிகள், நடனங்கள், சண்டைகள் இருப்பதில்லை. ஆகவே இவையே தமிழின் ஆகச் சிறந்த கலைப் படங்கள் என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்து இவை போன்ற படங்களை வரவேற்க ஆரம்பித்து விடுகிறார்கள். இவை போன்ற யதார்த்தங்கள் இவற்றில் காணப்படும் ஸ்டீரியோடைப் பாணிகளை மறைத்து கண்களைக் கட்டி விடுகின்றன. மீண்டும் மீண்டும் ஒரே வகைப் படங்களே யதார்த்த முலாம் பூசிக் கொண்டு வருகின்றன என்பதை நம் பார்வையாளர்கள் புரிந்து கொள்வதில்லை. எப்படி தமிழின் மசாலா சினிமா ஒரு விஷ வட்டமோ அதே போலவே இவை போன்ற காதலையும், பொறுக்கித்தனத்தையும், வன்முறையையும் யதார்த்தப் பூச்சுடன் மீண்டும் மீண்டும் பல வட்டாரப் பின்புலன்களில் முன்வைக்கும் சினிமாக்கள் இன்னொரு விஷ வட்டம். ஆக தமிழ் சினிமா என்பது இந்த இரண்டு சுழல்களில் மட்டுமே செக்கு மாடுகள் போலச் சுற்றி சுற்றி வருகின்றன. ஒரு சில அபூர்வமான விதிவிலக்குகள் தவிர தமிழில் உண்மையான யதார்த்தப் படங்களுக்கு யாரும் முயல்வதில்லை. சுப்ரமண்ய புரத்தில் காட்சிகள் வெகு இயல்பானவை, பாத்திரங்கள் அனைவருமே கச்சிதமான நிஜத்தன்மையுடன் இருந்தனர். இருந்தாலும் அவை எல்லாம் ஒரு மேல் பூச்சு மட்டுமே அவர்கள் விற்க முயன்றதும் தெரிந்ததும் வன்முறையும் காதல் சார்ந்த கதைகளும் மட்டுமே. அந்த குறுகிய வட்டத்தைத் தாண்டி இந்த இயக்குனர்கள் வெளி வருவதில்லை.

    ReplyDelete
  8. சொல்ல அலுப்பாக இருக்கிறது இருந்தாலும் எங்கோயிருக்கும் ஸ்பானிஷ், ஈரானியப் படங்களுக்குப் போவதை விட அருகில் இருக்கும் மலையாள பட உதாரணங்களைக் காட்டுவது எளிதாக இருக்கும்.

    அங்கு உதாரணத்திற்கு தமிழின் புது இயக்குனர்கள் போலவே சமீப காலங்களில் வந்த ஒரு சில இயக்குனர்களை எடுத்துக் கொள்ளலாம். ஷ்யாம் பிரசாத், லால் ஜோஸ், ரெஞ்சித், அக்கு அக்பர், ப்ளஸி போன்ற இயக்குனர்கள் தங்களது ஒவ்வொரு சினிமாவிலும் வெவ்வேறு விதமான பிரச்சினைகளைக் கதைக் கருவாகக் கொள்கின்றனர். வெறும் காதலிலும், வன்முறையிலும் பொறுக்கித்தனத்திலும் மட்டுமே அவர்கள் தேங்கி நிற்பதில்லை. ஷ்யாம் பிரசாத் போன்ற இயக்குனர்கள் மிகவும் சிக்கலான கதைகளை சினிமாவாக மாற்றுகின்றார்கள். அவர்களது ஒவ்வொரு முயற்சியும் மிகவும் வேறுபட்ட தளங்களில் அமைபவை, வித்தியாசமானவை அதே சமயத்தில் யதார்த்தமும், அழகுணர்ச்சியும், கலையுணர்வும், நிஜமும் நிரம்பியவை. ப்ளஸ்ஸியின் முதல் படம் காழ்ச்ச, ஒரு சில மெலோடிராமா காட்சிகள் இருந்த போதிலும் அற்புதமான ஒரு சினிமா. அவரது இரண்டாவது படம் தன்மாத்ரா, பத்மராஜனின் ஓர்ம என்ற சிறுகதை. இரண்டு படங்களும் வெவ்வேறு தளங்கள். மூன்றாவது படமான பலுங்கு முற்றிலும் வேறொரு தளம் கதை. நான்காவது மட்டுமே படு அபத்தமானதொரு சினிமாவாக அமைந்து விட்டது. மீண்டும் ஐந்தாவது படமான பிரம்மரத்தில் முற்றிலும் வேறான ஒரு புதிய தளத்திற்குச் சென்றார். அவர்கள் எடுப்பதும் முழுக் கலைப் படங்கள் கிடையாதுதான். அதிலும் சில சமரசங்களும் எரிச்சல்களும் இருக்கவே செய்கின்றன. இருந்தாலும் அவர்கள் ஒரே வண்டித் தடத்தில் சிக்கிச் சுழவதில்லை. ப்ளஸியின் 5 படங்களில் ஒன்று கூட காதல் கதை கிடையாது. மனித உறவுகளின் நுட்பங்கள், மறதி நோயால் பாதிக்கப் படும் குடும்பம், நகரமயமாக்கலின் அவலம் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்யாசமான கருக்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வருவதில்லை என்பதற்காக இந்த உதாரணங்களைச் சொன்னேன். ஆனால் தமிழில் ஒரு பருத்தி வீரன் புகழடைந்து விட்டால் அடுத்து வரும் நூறு படங்கள் அதே பாணியிலேயே எடுக்கப் படுகின்றன. வித்யாசமாக இருப்பதினால் மட்டுமே களவாணிகளும், நாடோடிகளும், மொழிகளும் சிறந்த படங்களாக அமைவதில்லை. இதை நம் நுட்பமான பார்வையாளர்கள் கூட கவனிக்கத் தவறி விடுகிறார்கள் என்பதுதான் கூட்டு மனோநிலை ஏற்படுத்தும் சக்தி. ஹரன் பிரசன்னா சந்தோஷ் சுப்ரமணியம் என்றொரு குப்பைப் படத்தை புகழ்ந்த பொழுதே நான் அவருடன் இது குறித்து முன்பு ஒரு முறை கடுமையாக விவாதம் செய்துள்ளேன். முன்பு ஒரு முறை ஒட்டு மொத்த தமிழ் நாடுமே சின்னத் தம்பி என்றொரு படத்தின் பின்னால் பித்துப் பிடித்து அலைந்தது. அப்பொழுது நான் சரியான மனநிலையில் உள்ள எவரும் பார்க்கக் கூடிய படம் அது அல்ல என்று அடித்த கமெண்ட்டினால் என்னை கிட்டத்தட்ட ஊர் விலக்கம் செய்யாத குறை :)) நல்ல படங்களை அடிக்கடி அறிமுகம் செய்யுங்கள்

    அன்புடன்
    ராஜன்

    ReplyDelete
  9. கடிதமும் விவாதங்களும் பயனுள்ளவகையில் அமைந்துள்ளது. சினிமா குறித்து எனக்கு அதிகம் தெரியாது. பொதுவாக தமிழ் படங்கள் தாண்டி அதிகம் பார்ப்பதில்லை. அடிப்படையில் நான் ஒரு சினிமா ரசிகன், விமர்சகன் அல்ல. அதனால் இப்பார்வைகள் சினிமாவை புரிந்துகொள்ள பயனுள்ளதாக உள்ளது. இது குறித்து விரிவாக எழுத வேண்டும்.

    ReplyDelete