Monday, December 10, 2012

நாளைக்கு இறந்தவன்



சிலரைப் பார்க்கையில் அவர்கள் ஏதோ ஒருவகையில் தற்காலிகமானவர்கள் என்ற கணிப்பு வரத் தொடங்கியபோது ரமணனுக்கு பதிமூன்று வயது தான் ஆகியிருந்தது. தற்காலிகம் என்றால் வாழ்க்கையிலா, படிப்பிலா வேலையிலா என்று உறுதியாக அவனுக்குத் தெரியவில்லை. வெற்றியடைந்தவர்கள் தோல்வியடைந்தவர்கள் என்ற வித்தியாசமும் இல்லை. நண்பர்கள் தெரிந்தவர்கள் உறவினர்களில் யாரைப் பற்றியேனும் திடீரென்று இந்த நினைப்பு வரும். எதிர்பாராமல் ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்களுடனான தொடர்பு என்பதே சுத்தமாக இல்லாதபடி ஏதாவது நடக்கும். பின்னர் அவர்கள் அவன் வாழ்க்கையில் ஒரு போதும் திரும்ப வருவதே இல்லை. உள்ளுணர்வு சொல்லியபடியே விஷயங்கள் சிலருக்கு நடக்க ஆரம்பித்தப் பின் ரமணன் இந்த விஷயங்களைக் கவனிக்கத் தொடங்கினான். இன்னதென்று வெளியில் சொல்ல முடியாத விசித்திரமான அந்த நினைப்பு அவனை அலைக்கழிக்கத் தொடங்கியிருந்தது.

உதாரணத்துக்கு பிரிட்டோ ஸார் பையன் லெனின். பார்ப்பதற்கு இழைத்து வைத்த பனைமரம் போல் இருப்பான். நல்ல உயரம். கருப்பு நிறமானாலும் அதில் ஒரு மின்மினுப்பு இருக்கும். பிரிட்டோ ஸார் ரமணன் படித்த நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவரும் லெனினின் அம்மாவும் நல்ல குள்ளம். அப்படி கருப்பு ஒன்றும் இல்லை. இவன் மட்டும் எப்படி இப்படி இருக்கிறான் என்று தோன்றும். ரமணனுக்கு ஏழெட்டு வயது மூத்தவன். மெட்ராசில் காலேஜில் படித்துக்கொண்டிருந்தான். அறந்தாங்கி ஹவுசிங் யூனிட்டில் இருக்கும் தன் வீட்டுக்கு மாதத்துக்கு ஒரு முறையோ இரு முறையோ வருவான். இவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை வேடிக்கைப் பார்த்தபடி பம்ப் ரூம் படிக்கட்டில் அமர்ந்திருப்பான். ரமணனிடம் மட்டுமில்லாமல் அவன் நண்பர்களிடமும் நன்றாகப் பேசுவான். இதோவரைக்கும் கேள்விப்பட்டிராத புது விஷயங்கள் சொல்வான். வெளிநாட்டு செனட்டின் மணம் நிழல் காற்றுப் போல அவன் உடலைச் சுற்றிப் படர்ந்ந்திருப்பது போல இருக்கும். நேர்த்தியான உடை அணிவான். மிருதுவான வண்ணங்களில் அவன் அணியும் சட்டைகள் நிச்சயம் உள்ளூர் கடைகளிலோ மெட்ராசிலோ கூட கிடைக்க வாய்ப்பில்லை என்று ஷேக் சொல்வான். பிரிட்டோ சாரின் அண்ணன் கனடாவில் இருந்தார். அக்காவோ தங்கையோ,அப்பாவின் சிஸ்டர் என்று தான் லெனின் சொல்வான், பிரான்சில் இருந்ததால் வசதிக்குக் குறைவில்லாத குடும்பம். நன்றாகப் படித்தானா இல்லையா என்றெல்லாம் தெரியாது. மெட்ராசில் கல்லூரியில் கம்ப்யூட்டர் படித்துக்கொண்டிருந்தான் என்று மட்டும் தெரியும். அப்போது கம்ப்யூட்டர் பற்றிப் பாடப் புத்தகத்திலேயே படித்ததில்லை. கல்கண்டில் தான் இதுபோன்ற விஷயங்கள் வரும். லெனினின் சமவயது நண்பர்கள் யாரும் இவர்களோடுப் பழகுவதில்லை. அவர்கள் எப்போதும் தனிக் குழுவாகத் தான் இருப்பார்கள். லெனின் அவர்களோடு பேசினாலும் ரமணன் குழுவிடம் உரையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவான்.

சில நாட்களாகவே ஏனோ லெனின் இங்கே நீண்டநாள் இருக்க மாட்டான் என்றே ரமணனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. ஒன்று அவன் கனடாவுக்கோ ப்ரான்சுக்கோ சென்று விடுவான் அல்லது ஏதோ ஒரு விதத்தில் நிச்சயம் இங்கிருந்து நிரந்தரமாகப் போய் விடுவான் என்றே ஏனோ ரமணன் நினைக்கத் தொடங்கினான். நாட்கள் செல்லச் செல்ல லெனினைப் பார்க்கையில் அதே எண்ணம் ஓடுவதால் பெரும்பாலும் அவன் இருக்கும் நேரங்களில் விளையாடச் செல்லமாட்டான். திடீரென்று ஒரு நாள் லெனின் இறந்து விட்டான் என்று தகவல் வந்தது. மெட்ராசில் எங்கோ மோட்டார்சைக்கிளில் போகும்போது லாரி மோதி அந்த இடத்திலேயே இறந்திருந்தான். உடல் அறந்தாங்கிக்குக் கொண்டுவரப்படும்போது அதில் காயமே இல்லை. தூங்குகிறவன் போலிருந்தான். பெருங்குரலெடுத்து அவன் குடும்பம் கதறத் தொடங்கும்போது ரமணன் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினான். அது காலாண்டு விடுமுறை நேரம். வீட்டுக்கும் போக முடியாமல் கிரவுண்டுக்கும் செல்லாமல் எங்கெங்கோ நடந்துகொண்டிருந்தான். லெனின் நிரந்தரமாக எங்கோ சென்றுவிடப்போவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டும் யாரிடமும் அதைச் சொல்லாமல் இருந்தான் என்ற எண்ணம் அவனை உறுத்திக்கொண்டிருந்தது.

ஒரு வாரத்துக்கு யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தான். பின் கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டில் மூழ்கிய பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான். என்றாலும் கிரிக்கெட் விளையாடுகையில் பம்ப்ரூம் படிக்கட்டில் லெனின் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு இவனை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. விளையாட்டில் தடுமாறத் தொடங்கினான். அணியின் ஹிட்டரான அவன் பல முறை டக் அவுட் ஆனான். கேட்சுகளைத் தவற விட்டான். பம்ப் ரூம் பக்கம் பீல்டிங் செய்யவே மறுத்து விட்டான். கொஞ்சம் கொஞ்சமாக விளையாட வருவதைக் குறைத்துக் கொண்டு விட்டான். பள்ளி விட்டால் வீடு. உலகம் சுருங்கத் தொடங்கியது.

படிப்பில் மட்டும் கவனம் சிதறவே இல்லை. பள்ளியின் முதல் மாணவன் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தான். சில நாட்களில் இவனுக்குப் பெரும் விருப்பமான இங்கிலீஷ் டீச்சர் ரோஸ்லின் மேரி இனி இந்தப் பள்ளிக்கு வரமாட்டார் என்ற நினைப்பு வரத் தொடங்கியது. ஓரிரண்டு மாதங்களில் பட்டுக்கோட்டையில் தன் கணவன் வேலை பார்க்கும் பள்ளியிலேயே அவருக்கு மாற்றல் கிடைத்துப் போய்விட்டார். அந்த நேரத்தில் தான் சீனிவாசன் அந்தப் பள்ளிக்கு வந்து சேர்ந்தான். காலாண்டு முடிந்து அட்மிஷன் ஆன பையன் ரமணனுக்குத் தெரிந்து அவன் தான். அவன் அப்பா பி.டபிள்.யூ.டியில் எஞ்சினியர் .அடிக்கடி ஊர் மாறும் உத்தியோகம். மெட்ராஸ், ஊட்டி, கோயம்பத்தூர் என்று பல இடங்களில் ஆங்கில மீடியத்தில் படித்தவன். இந்த நேரத்தில் வேறெந்த பள்ளியிலும் அட்மிஷன் கிடைக்காததால் ரமணன் படிக்கும் அரசுப் பள்ளியிலேயே சேர்ந்தான் சீனிவாசன்.

நல்ல நிறம். வெள்ளைச் சீருடையில் பொலிவாகத் தெரிவான். ரமணன் ட்யூஷன் படிக்கும் கிராண்ட் மாஸ்டர் ட்யூஷன் செண்டரிலேயே அவனும் சேர்ந்தான். வந்த சில நாட்களிலேயே பலர் அவனுக்குத் தோழர்களாகி விட்டனர். கவிதாவும் அவனிடம் அடிக்கடி சிரித்துப் பேசியது ரமணனுக்கு உறுத்தலாக இருந்தது.

ஏழாம் வகுப்பிலிருந்து அவள் மீது ரமணன் மையல் கொண்டிருந்தான். அவளும் இவனிடம் சிரித்துப் பேசினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் நெருங்காமல் தள்ளி தான் இருந்தாள். நடுநிலைப் பள்ளியாதலால் எட்டாம் வகுப்புக்குப் பின்னர் இருவரும் வெவ்வேறு பள்ளிகளுக்குப் பிரிந்து விட்டார்கள். அவள் கேர்ல்ஸ் ஹை ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தாள். ட்யூஷன் மட்டும் ஒரே இடத்தில். கடந்த சில மாதங்களாக அவளிடம் இருந்து சாதகமான சமிஞ்ஞைகள் வரத் தொடங்கியிருந்தன. அவள் வீடு இருக்கும் ப்ளாக்கின் எதிரே இருக்கும் திட்டில் ரமணன் அமர்ந்து அவள் வீட்டு ஜன்னலைப் பார்த்துக்கொண்டிருப்பான். முன்னரெல்லாம் திறக்காத ஜன்னல் இப்போது அடிக்கடித் திறந்தது. ஜன்னல் கம்பிகளூடே விவரிக்க முடியாத முகபாவனைகளோடு அவளும் இவனைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். இருவரும் வெளி இடங்களில் பேசிக்கொள்ளும்போது சகஜமாக இருந்தாலும் ஜன்னல் சந்திப்பில் முற்றிலும் புதிய நபர்களாய் இருந்தார்கள். முகக்குறிப்பும் சமிஞைகளும் இது வரை கற்பனை கூட செய்திராத பரவஸ் உணர்வை இருவருக்கும் தந்திருந்தது. உலகம் அவள் வீட்டு ஜன்னலை மையமாகக் கொண்டு சுற்றிக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஒரு மாதிரியான மயக்க நிலைக்கு ரமணன் போய்க்கொண்டிருந்தான். மற்றவர்கள் கவனிப்பதையும் கிண்டலடிப்பதையும் அவன் பொருட்படுத்தவில்லை.

இந்த நேரத்தில் நந்தி போல் சீனி வந்து விட்டதாக ரமணன் உணர்ந்தான். கவிதா மட்டுமல்லாமல் அங்குப் படிக்கும் எல்லா பெண்களுமே சீனியிடம் பேசினார்கள். முன்பு அந்த இடத்தில் தான் மட்டுமே இருந்தது ரமணனுக்கு நினைவு வந்தபோது சீனி மேல் பகையை வளர்க்கதொடங்கினான். சீனியின் அப்பா அலுவலகத்திலேயே கவிதாவின் அப்பாவும் வேலை பார்த்ததால் இரு குடும்பத்துக்கும் இடையில் புது உறவுத் தொடங்க சீனி அவள் வீட்டுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். அவனுடன் சிரித்துப் பேசினாலும் ரமணனுக்கு ஜன்னல் தரிசனம் தர கவிதா தயங்கவில்லை. எப்படியாவது அவளிடம் தான் காதலைச் சொல்லி விட வேண்டும் என்று முன்பை விடப் பதற ஆரம்பித்தான். சீனி இவனிடமும் பேசினாலும் தான் எங்கோ வெளிநாட்டில் இருந்து வந்தவன் போலவே நடந்துகொண்டான். ரமணனின் நண்பர்களுக்கும் சீனி மீது ஆத்திரம் இருந்தது. ஒரே ஒரு விஷயம் தான் ரமணனுக்கு ஆதரவாக இருந்தது. சீனிக்கு படிப்பில் அவ்வளவுப் பிடிப்பில்லை. ஆங்கிலத்தில் மட்டும் மற்ற அனைவரை விடவும் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் மற்ற பாடங்களில் சுமாராக இருந்தான். இது தெரிந்ததும் ரமணனுக்கு கொஞ்சம் தைரியம் பிறந்துவிட்டது. நன்றாகப் படிக்காதப் பையன்களை பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்ற அனுபவ உண்மை அவனுக்குக் கைகொடுத்தது. சீனியிடம் பெண்கள் பேசுவதைக் குறைத்துக் கொண்டனர். அவன் மக்கு என்று ரமணன் ரகசியமாக தகவல் பரப்பி மகிழ்ந்தான்.

சீனிக்கு இதுகுறித்து பெரிய கவலை இல்லாமல் இருப்பதை ஒருகட்டத்தில் அவன் கவனிக்க ஆரம்பித்தான். பணக்காரப் பையன் என்பதாலோ என்னவோ படிக்காவிட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன் போல் அசட்டையாகவே இருந்தான். அவன் நடவடிக்கைகளை உற்று நோக்கி வந்த ரமணன் லெனினைப் போல் இவனும் நிரந்தரமில்லாதவன் என்று தோன்ற ஆரம்பித்தது. ஏனோ ஒரு கட்டத்தில் அவன் விலகிச் சென்று விடுவான் என்று ரமணன் நம்ப ஆரம்பித்தான். ஒருவகையில் இது அவனுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. அவன் விலகி விடும் பட்சத்தில் கவிதாவின் கவனம் தன் மீது மட்டுமே இருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே சீனி தோல்வியடைந்தான். நானூறுக்கும் மேல் மதிப்பெண் எடுத்த ரமணன் மீண்டும் கவனம் பெற்றான். கவிதாவிடம் இருந்து ஒருநாள் கடிதம் கிடைத்தது. தனிமைச் சந்திப்புகளில் முத்தம் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு அவனிடம் கவிதா நெருங்கியிருந்தாள்.

இவன் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருக்கும்போது பள்ளி செல்லும் நேரங்களில் சில சமயம் சீனிவாசன் எதிர்ப்படுவான். முகத்தில் அதே அலட்சியபாவம். இவனிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு ஏதோ முக்கியமான வேலையைப் பாதியில் விட்டு வந்தவனைப் போல் சட்டென கிளம்பிவிடுவான். ரமணனுக்கு முன்பு போல் இவனிடம் கோபமோ பொறாமையோ இல்லை. சொல்லப்போனால் சீனி நிரந்தரமில்லாதவன் என்ற நினைப்பு சற்று வருத்தம் தந்தது. அசம்பாவிதம் ஏதும் நிகழக்கூடாது என்று நினைத்துக்கொண்டான். நல்லவேளையாக சீனியின் அப்பாவுக்கு விழுப்புரத்துக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்து அங்கு சென்று விட்டார்கள். அதற்கப்புறம் அறந்தாங்கிப் பக்கம் ஒரு முறைக் கூட அவன் வந்ததில்லை.

கவிதாவுடனான ரமணனின் காதல் ஊர் முழுக்கத் தெரிந்துவிட்டது. தெருவுக்குள் ரமணன் தலை மறையும் சமயத்தில் எங்கிருந்தோ ஒரு குரல் 'கவிதா' என்று கத்தும். விஷயம் அவர்கள் பெற்றோர்களுக்கு மட்டும் தெரியாமல் எப்படி இருக்கும்? ஒரு கட்டத்தில் அவள் அப்பா இவனை சந்தித்து பொதுவாக அறிவுரை செய்வதுபோல் பேசிப்பார்த்தார். இவன் வீட்டிலும் கவிதாவைப் பற்றி இவன் இருக்கும் சமயத்தில் கடும் அர்ச்சனை நடக்கும். என்றாலும் இருவரும் எதையும் பொருட்படுத்தாமல் இருந்தனர். காதல் வேகத்தில் படிப்பில் கவனம் குறைந்ததை ரமணன் அவ்வளவாக கவனிக்கவில்லை. எத்ரிபாராத விதத்தில் ப்ளஸ் டூவில் எழுநூறு சொச்சம் மார்க் தான் எடுத்தான். கவிதா ஆயிரத்தைத் தாண்டியிருந்தாள். எப்படியும் அவளுக்கு மெடிக்கல் சீட் கிடைத்துவிடும் என்று பேசிக்கொண்டார்கள்.

ரிசல்ட்டுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வருவதைக் குறைத்துக் கொண்டாள் கவிதா. அவளுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கக்கூடாது என்று கோவில்களில் முறையிடத் தொடங்கியிருந்தான் ரமணன். ஓரிரு முறை அவனைச் சந்தித்தாலும் இதற்கு முன் எதுவுமே நடக்காதது போலவும் தான் அவனுக்கு வெறும் தோழி தான் என்பது போலவும் பேசினாள் கவிதா. ஒரு கட்டத்தில் இவளும் நிரந்தரமில்லாதவள் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவன் பதற்றமடையத் துவங்கி இருந்தான். ஒருவேளை அவள் மெடிக்கல் சீட் கிடைத்து சென்று விட்டால் கூடப் படிக்கும் எவன் கூடவோ அவள் பழகத் தொடங்கிவிடுவாள் என்ற எண்ணம் அவனை தாக்கத் தொடங்கியது.

எப்படியாவது இம்ப்ரூவ்மென்ட் எழுதி நல்ல மார்க் எடுத்து தானும் மெடிக்கல் சீட் வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தான். என்றாலும் என்ன காரணத்தினாலோ கவிதாவுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை. என்ட்ரன்ஸ் எக்சாமில் மார்க் குறைவாக எடுத்துஎடுத்தால் கட் ஆப் குறைந்து அவளுக்கு மெடிக்கல் சீட் வாய்ப்பு பறிபோனது. விஷயம் தெரிந்த ரமணன் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான். தன்னை உதாசீனப்படுதியவளுக்கு இது சரியான தண்டனை என்று நினைத்துக்கொண்டான். முகத்தில் ஒரு நிரந்தரப் புன்னகை குடியேறியது.

கவிதாவுக்கு முன்பு விண்ணப்பித்திருந்த புதுக்கோட்டை அரசு கல்லூரியில் பாட்டனி சீட் கிடைத்தாலும் போக மாட்டேன் என்று அடம்பிடித்து விட்டாள். அவளால் அவமானத்தைத் தாங்க முடியவில்லை. அவள் வீட்டில் மேலும் வற்புறுத்தாமல் விட்டு விட்டனர்.

திரும்பவும் கவிதா வீட்டு ஜன்னல் திறக்கத் தொடங்கியது. என்றாலும் ரமணன் அந்தத் திட்டில் ஒருபோதும் அமரவில்லை. புதுப்புது நண்பர்களுடன் அவன் ஊரெங்கும் சுற்றித் திரிந்தான். அவ்வப்போது புதுக்கோட்டைக்கு சென்று வெஸ்ட் தியேட்டரில் ஆங்கில ஆபாசப் படங்கள் பார்த்து வந்தான். பெண்களைப் பற்றிப் பேசக்கூடிய நண்பர்களிடம் நெருங்கினான். வாணி தியேட்டர் செல்லும் வழியில் உள்ள கட்டைச் சுவரொன்றின் மீது அவனை விடப் பெரியவயது ஆட்களுடன் உட்கார்ந்து ரமணன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததாக அவன் அப்பாவிடம் சிலர் சொன்னார்கள்.

அந்த நேரத்தில் தான் கிருஷ்ணன் ஸார் அவன் இருக்கும் ப்ளாக்கில் குடி வந்தார். கலெக்டர் ஆபீசில் பெரிய உத்தியோகம். அவர் மனைவி பட்டணத்தில் வளர்ந்தவள். நல்ல நீண்ட சுருள்முடியுடன் இடுப்பில் மடிப்புடன் வளைய வந்த அவளை ஹவுசிங் யூனிட்டின் கண்கள் வெறித்துக்கொண்டே இருந்தன. தொப்புள் சற்று தெரியும் வண்ணம் எடுப்பாக சேலை கட்டும் அவளை ரமணனும் கவனிக்காமல் இல்லை. என்றாலும் மனதின் ஒரு ஓரத்தில் இன்னும் கவிதா இருப்பதால் அவளைக் கண்டுகொள்ளாமல் இருந்தான். கிருஷ்ணன் ஸார் பல சமயம் ஆபீஸ் வேலைக்கென வெளியூர் சென்று விடுவார். ஒரு முறை வீட்டில் யாரும் இல்லாத போது கிருஷ்ணன் ஸார் மனைவி பழைய பேப்பர் இருக்கிறதா என்று கேட்டு ரமணன் வீட்டுக்கு வந்தாள். அதற்கு முன் அவ்வளவு கவர்ச்சிகரமானப் பெண்ணை அருகில் பார்திரார்த்த ரமணன் அவள் அங்கு இருந்த ஐந்து நிமிடத்துக்குள் அத்தனைப் பதற்றம் அடைந்தான். அவள் அவன் கை தொட்டுப் பேசியது அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு முறை வடகரை முருகன் கோவில் தெப்பக் குலத்துக்கு அருகே சைக்கிளில் சென்ற போது பின்னாலேயே கவிதா சைக்கிள் மிதித்துக்கொண்டு வந்ததை கவனித்து நின்றான். நெருங்கி வந்த அவளின் கண்கள் கலங்கியிருந்தன. தன்னுடன் இனிமேல் பேசமாட்டானா என்று அவனிடம் கேட்டாள். தனக்கு எதிலும் பிடிப்பில்லை என்று அவளுக்கு பதில் சொன்னான் ரமணன். என்றாலும் தான் அவளை மறந்து விடவில்லை என்றான். அவள் திரும்பவும் வந்து பேசியதில் மகிழ்ச்சி என்றாலும் உடனே அவளுடன் பழகி விடக்கூடாது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். மெடிக்கல் சீட் கிடைத்துத் தன்னை விட்டுப் பிரிய அவள் தயாராய் இருந்ததை அவன் மறக்கவில்லை. இன்னொரு நாள் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். அவன் போய் வெகு நேரம் வரை சைக்கிளின் ஹேண்டில்பாரை நிமிண்டியபடி கவிதா அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.

ஒரு நாள் அவன் அம்மா கோவிலுக்கு சென்று இருந்த சமயத்தில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தாள் மெல்லிய நைட்டியுடன் கிர்சுஷ்ணன் ஸார் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் பார்வை இவனது சட்டை போடாத உடம்பின் மீது இருந்தது. வீட்டில் போரடித்ததால் ஏதேனும் பட கேசட்டுகள் கிடைக்குமா என்று கேட்டாள். தங்கள் வீட்டில் வி.சி.ஆரே இல்லை என்று ரமணன் சொன்ன போது ஆச்சரியத்துடன் சிரித்தவள் அதற்குப் பிறகும் போகாமல் நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். இந்த வயதில் என் படிக்காமல் இருக்கிறான் என்று உரிமையுடன் கண்டித்தாள். ரமணன் உள்ளே சென்று சட்டை போட்டு வருகையில் அவள் ஹாலின் சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவனை அருகில் அழைத்து படங்களில் இருப்பவர்கள் யார் யாரேன்றுக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் கை இவன் தோள்பட்டை மீது இருந்தது. ரமணனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் மெத்தென்ற அவள் உடல் அவன் மீது உராய்ந்தது பிடித்திருந்தது. சற்று நேரத்தில் அவள் அவன் உடலை அனைத்துக் கொண்டிருந்தாள். மயக்கத்துடன் அவள் இடுப்பை அவன் பிடிக்கையில் கிருஷ்ணன் ஸார் மனைவி அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டாள். வெகு நேரம் கழித்து தான் அவர்கள் எழுந்தார்கள்.

திரும்பவும் அவன் உதட்டில் அழுந்த முத்தமிடும் போகும் போது கதவு தட்டப்பட்டது. அவள் பதறாமல் அவனை மீண்டும் அணைத்து இன்னொரு முத்தம் தந்தாள். கதவைத் திறந்த போது வெளியே மாடிப் படிக்கட்டின் மேற்படியில் கைப்பிடி சுவரைப் பிடித்துக்கொண்டு கவிதா நின்று கொண்டிருந்தாள். கிருஷ்ணன் ஸார் மனைவி அவளிடம் 'நல்லா இருக்கியாம்மா?" என்று கேட்டு விட்டு சாவதானமாக மாடியேறிப் போய்விட்டாள். க���ிதா இவனைப் பார்க்காமல் வெளியில் எங்கோ பார்த்துகொண்டு நின்றாள்.பின் மெல்ல இறங்கி கீழே போய்விட்டாள். ரமணன் அவளை கூப்பிடவே இல்லை. ஒரு கையில் தாவணியின் நுனியைத் திருகிக் கொண்டே தன் ப்ளாக்குக்கு நடந்து செல்லும் அவளைப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தான். சுவாசத்தில் கிருஷ்ணன் ஸார் மனைவியின் அக்குள் வாசனை சுழன்றுகொண்டிருந்தது.

அடுத்த நாள் எல்லோரும் வெளியில் சென்று விட்ட பகல் நேரத்தில் கவிதா உத்தரத்தில் தொங்கினாள். ரமணன் புதுக்கோட்டையில் படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது அவசரமாக சென்று கொண்டிருந்த ராமையா விஷயத்தை சொன்னான். அழுது பிடித்து பேருந்தில் ஏறி ரமணன் ஊர் வருமுன்பே கவிதாவை எடுத்து விட்டிருந்தார்கள். போஸ்ட்மார்ட்டம் போலீஸ் பிரச்சனைகளை சமாளிக்க அவள் அப்பா யாரையோ பிடித்து ஏற்பாடு செய்து விட்டிருந்தார். ரமணன் சுடுகாட்டுக்கு சென்றபோது கவிதாவின் இதயம் பற்றி எரியத் தொடங்கி இருந்தது. அதன் பிறகு ரமணன் வீட்டில் தங்கிய நாட்கள் அரிதாகின. புதுக்கோட்டை, திருச்சி தஞ்சாவூர் என்று எங்கெங்கோ திரிந்துகொண்டிருந்தான். செலவுக்கு என்ன செய்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை. அவனுக்கு பாக்கெட் மணி தருவதை அவன் அப்பா எப்போதோ நிறுத்தியிருந்தார். சில வருடம் கழித்து அவன் சித்தப்பா அவனை மதுரையில் உள்ள தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். அவனுக்கு அங்கு ஒரு டெலிபோன் பூத் ஒன்று வைத்துத் தருவதாக சொன்னார். வீட்டில் சில சண்டைகள், அழுகைகள் அரங்கேறியப் பின் மதுரைக்கு பஸ் ஏறினான்.

தினமும் சாப்பிட்டுவிட்டு மூன்று தெருக்கள் தள்ளி இருக்கும் அந்த பூத்துக்கு சைக்கிளில் செல்வான் ரமணன். காலை ஏழு மணிக்கு சென்றால் இரவு பத்துப் பத்தரை ஆகி விடும். மதியம் ரம்யா கேண்டீனில் சாப்பிட்டு விடுவான். சித்தப்பா கலெக்டர் ஆபீசில் இருந்து திரும்பும் வழியில் எப்போதாவது கடைக்கு வருவார். அதிகம் பேசமாட்டார். இவன் சிகரெட் பிடிப்பது தெரிந்தும் அதைப் பற்றி கேட்கமாட்டார்.ரமணன் பிறந்த சமயத்தில் தான் அவருக்கு வேலை கிடைத்தது. அதனால் இவன் மீது பிரியமாக இருப்பார். வேலை நேரம் அதிகம் இருந்தாலும் ரமணனுக்கு அந்த இடம் பிடித்தமானதாக இருந்தது. கடை குடியிருப்புப் பகுதியிலேயே இருந்தது. மூன்று தெருக்கள் சந்திக்கும் முனையில் பூத் இருந்ததால் நிறையப் பேர் போன் பேசவென்று வருவார்கள். வெளியூரில் வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களிடம் பேச நிறைய பெண்கள் வருவார்கள். நண்பகல் நேரங்களில் தெருக்களில் பெண்களே அதிகம் தென்படுவார்கள். கிருஷ்ணன் ஸார் மனைவியின் உடல் ஸ்பரிசம் தந்திருந்த மயக்கம் கொஞ்ச நாட்களாகவே தலை தூக்க ஆரம்பித்தது.அவனது மீசை தனது வளர்ச்சியில் முழுமை கண்டிருந்தது.

வீட்டில் வேலை செய்து விட்டு வருவதால் உடை விலகுவதில் அவ்வளவாக கவனம் கொள்ளாத நடுத்தர வயது பெண்களின் உடல்களை அவர்கள் போன் பேசும்போது ரசிக்கத் தொடங்கினான். முக்கியமாக மகேஸ்வரி. மாநிறம் என்றாலும் நெடுநெடு வென்ற உயரமும் நிற்கும் மார்பகங்களும் அவள் வரும்போதெல்லாம் ரமணனை கிளர்ந்தெழச் செய்தன. அவள் கணவன் ரியாத்தில் இருந்தான். இரண்டு குழந்தைகள். பெரியவளுக்கு ரமணனை விட ஐந்தாறு வயது கம்மியாக இருக்கும். ரமணன் அவளிடம் கேலியாகப் பேசுவான். அவளும் அடிக்கடிக் கடைக்கு வர ஆரம்பித்தாள். தெருவில் ஆளில்லாத பகல் பொழுதொன்றில் அவள் போனில் பேசும்போது ஸ்டூலில் உக்கார்ந்து கொண்டு நின்று கொண்டிருக்கும் அவள் சேலைக்குள் கால் விட்டு அவள் கால்களை வருடினான். அவள் பேசி முடிக்கும் வரை வருடிக்கொண்டே இருந்தான். சில நாட்கள் கழித்து அவர்கள் இருவரும் தங்கம் தியேட்டரில் பாம்பே படம் பார்த்துக்கொண்டிருந்ததை அந்தத் தெருக்காரர் ஒருவர் பார்த்தார்.

சித்தப்பாவுக்கு விஷயம் தெரிய பல நாட்கள் ஆகியிருந்தன. அதற்குள் அந்தத் தெருவில் உள்ள வி.ஏ.ஓ மனைவி பத்மா, மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்டில் பழக் கடை வைத்திருந்த பழனிச்சாமி மனைவி பிருந்தா ஆகியோரின் உடல் வாசனையை நடமாட்டம் இல்லாத பகல் நேரத்தில் அவர்கள் வீடுகளிலேயே நுகர்ந்து கொண்டிருந்தான் ரமணன். கடை அடிக்கடி பூட்டப்பட்டிருப்பதை பார்த்த தெருக்காரகள் அவன் சித்தப்பாவிடம் தகவல் சொன்னார்கள். அப்போதும் அவன் மீது அவர் சந்தேகப் படவில்லை. சுற்றித் திரிந்த வயசுப் பையன். எத்தனை நேரம் தான் கடையில் உட்கார்ந்துகொண்டிருக்க முடியும் என்று நினைத்தார். கடையில் இவனுக்கு உதவியாக சின்னப் பையன் ஒருவனை உட்கார வைத்தார். ரமணனுக்கு இது வசதியாகப் போய் விட்டது. பகல் வேலைகளில் ஏதாவது ஒரு வீட்டில் திமிறும் உடல்களிருந்து சேலைகளை அவன் அவிழ்த்துக் கொண்டிருந்தான். மெல்லிய உடல்களில் தன்னைப் புதைத்துக் கொள்ளும்போது மனதை அழுத்தும் பாரம் கரைந்து தன்னிலிருந்து இறங்கி வழிவது போல் உணர்ந்தான். வாழ்வில் இழந்தவைகளை அந்த ஸ்பரிசமும் கிசுகிசுப்பாக காதில் வருடும் காமக் குரல்களும் ஈடுகட்டுவது போல் இருந்தது. நிரந்தரம் தற்காலிகம் பற்றி மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் தர்க்கம் அந்தப் பெண்களின் அக்குள்களுக்குள் புதைந்து பல நாட்களாகி இருந்தன.

ஒரு முறை பழனிச்சாமி கடையை அவசரமாகப் பூட்டி விட்டு ஏதோ வேலையாக வீட்டுக்கு வந்தபோது ரமணன் ஹாலில் சோபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு சற்று முன்னர் தான் பிருந்தா அவன் தலையை வருடி விட்டு குடிக்க ஏதாவது எடுத்து வர சமையலறை சென்றிருந்தாள். தன் கணவன் இவனிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவன் டி.வி மெக்கானிக் என்றும் தான் தான் அழைத்ததாகவும் பிருந்தா கூறினாள். என்றாலும் தன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து ஒரு பையன் டி.வி பார்த்துக் கொண்டிருந்ததை பழனிச்சாமியால் ஜீரணிக்க முடியவில்லை. இவனை வேறெங்கோ பார்த்தது போல் அவனுக்கு நினைவுக்கு வந்தது. கடைக்குத் திரும்பிய ரமணன் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான். அடிக்கடி வெளியே எழுந்து போய் சிகரெட் குடித்து வந்ததை கடைப் பையன் கவனித்துக் கொண்டிருந்தான். பழனிச்சாமி தன்னை சந்தேகமாகவும் ஆத்திரத்துடன் பார்த்தது ரமணனுக்கு திரும்பத் திரும்ப நினைவில் வந்து கொண்டிருந்தது.

சித்தப்பாவிடம் ஊருக்கு சென்று கொஞ்சநாள் இருந்து விட்டு வருவதாகச் சொன்னான். அவர் மறுக்கவில்லை. அறந்தாங்கி வந்தபோது தன் வயதையொத்த யாரும் ஊரில் இல்லை என்று அறிந்துகொண்டான். பனிரெண்டாம் வகுப்பில் தவறிய அப்பாஸ், எப்போதோ படிப்பை விட்டு விட்ட சரவணன் போன்ற சிலர் மட்டும் உள்ளூரில் அங்கங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் எங்கெங்கோ படித்துகொண்டும் சிலர் வேலை கிடைத்து சென்று விட்டதையும் அவர்களின் பெற்றோர்கள் பீற்றிக்கொள்வதாக ரமணன் அம்மா அவனிடம் சொன்னாள். அவனும் நன்றாகப் படித்திருந்தால் நல்ல நிலைமைக்கு வந்திருக்கலாமே என்று அழுதாள். ரமணனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை.

கொஞ்ச நாட்களிலேயே மதுரைக்குக் கிளம்பி விட்டான். பஸ்ஸில் வரும் போது கொஞ்ச காலமாக நினைவுக்கு வராத அந்த எண்ணம் திரும்ப வந்தது. அந்த மதிய வெயில் பயணத்தின் போது வந்த அரைகுறைத் தூக்கத்தில் விசித்திரமான கனவுகள் வந்தன. தன்னை சார்ந்த யாரோ நிரந்தரமில்லாத நபர் என்ற நினைப்புத் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டிருந்தது. அது யாரென்று சரியாக கணிக்க முடியவில்லை. முகம் வைக்கும் கறுப்புத் துணியால் போர்த்தப்பட்டிருந்த ஒரு உடல் மீது அம்மா புரண்டு அழுவது போல் கனவு வந்து திடுக்கிட்டு விழித்த போது பஸ் மதுரையை அடைந்திருந்தது. பஸ் நின்றதும் அது வரை உள்ளே வீசிக் கொண்டிருந்த காற்று நின்று சட்டென வெக்கை உறைந்தது.

சித்தப்பாவுக்கு பிருந்தா விஷயம் தெரிந்து விட்டது போல இவனுக்குத் தோன்றியது. அவர் சரியாகப் பேசவில்லை. கடைக்கு வந்தால் வரவு செலவைக் கூட அந்தப் பையனிடமே கேட்டு விட்டு இவனிடம் சொல்லாமல் செல்ல ஆரம்பித்தார். என்றாலும் அவர் வீட்டில் அவனுக்கான இடம் அப்படியே தான் இருந்தது. காலையிலும் இரவிலும் வழக்கம் போலவே அவனுக்கு சாப்பாடு போட்டாள் சித்தி. அவனிடம் முகம் கோணி யாரும் பேசவில்லை. என்றாலும் சித்தப்பா முன்பு போல் இவனிடம் பேசவில்லை என்பது உறுத்த ஆரம்பித்தது.

இறக்கங்களில் மிதிக்கமலேயே சுழன்று ஓடும் சைக்கிள் சக்கரங்களைப் போல் தன்னிச்சையாக இயங்கிக்கொண்டிருந்தான் ரமணன். முன்பு போல் கடைக்கு செல்வதில்லை. கடைக்கு வந்தாலும் வெளியில் வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்காவது சென்று விடுவான். அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பான். நிரந்தரமில்லாமல் போய் விடவிருக்கும் தன்னை சார்ந்த ஆள் யாரென்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. தன் நண்பர்களில் யாரும் அத்தனை எளிதாக தோற்று விடக் கூடியவர்கள் இல்லை என்று நினைத்துக்கொண்டான். அவன் அப்பா அரசு ஊழியர். கண்டிப்பானவர் அவர் அவ்வளவு சீக்கிரம் அறுந்து விடக்கூடிய அளவுக்கு நூலிழைத் தொடர்பா அவருடன் என்று தோன்றும். அவராக இருக்க வாய்ப்பில்லை என்று சமாதனம் செய்துகொண்டான். தான் சிறுவனாக இருந்தபோது என்ன கேட்டாலும் வாங்கித் தந்த அப்பாவைப் பல வகைகளில் ஏமாற்றியதாகக் குற்றவுணர்வு கொண்டான்.பல வருடம் கழித்து அவர் மீது பாசம் தோன்றியது.

திரும்பி வரும்போது நகரப் பேருந்தில் நெரிசலாக இருந்தது. நடுத்தர வயது பெண் ஒருத்தி இவன் பக்கத்தில் வந்து நின்றாள். பேருந்து ஓட்டத்தில் ப்ரேக் பல முறை விழ அவன் அவள் உடல் அருகில் நெருங்கியிருந்தான். மெல்ல அவளுக்குத் தெரியாதவண்ணம் உரசிக்கொண்டே வந்தாலும் அவள் ஒன்றும் செய்யாதவளாக நின்றுகொண்டே இருந்தாள். மெல்ல தைரியம் வரப்பெற்று உடலோடு ஒட்டினான். பஸ்சின் இயக்கமும் குலுங்கலும் இவனுக்கு சாதகமாக அவன் மேலும் அவளை நெருக்கினான். அந்தப் பெண் முகத்தை முந்தானையால் அடிக்கடித் துடைத்துக் கொண்டாலும் அங்கிருந்து நகரவில்லை. ஒரு நிறுத்தத்தில் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அவள் இறங்கி சென்று விட்டாள். ரமணனுக்கு சுகத்தின் மெல்லிழை சட்டென அறுந்தது போல் இருந்தது. அவன் உடலெங்கும் அதிர்ந்தது. கிருஷ்ணன் ஸார் மனைவியிலிருந்து பிருந்தா வரை அவனுக்கு நினைவுக்கு வந்தார்கள். பஸ்ஸில் இருந்து இறங்கியதும் நேரே பிருந்தா வீட்டுப் பக்கம் சென்று பார்த்தான். மணி மூன்றரை ஆகியிருந்தது.

வீட்டில் யாரும் இல்லாதது போல் இருந்தது. உள்பக்கம் தாழிடப்பட்ட கதவைத் தட்டினான். உள்ளிருந்து பதில் இல்லை. உடல் எப்போதும் இல்லாதவாறு நடுங்கிக் கொண்டு இருந்தது. ஏதோ முடிவுடன் திரும்ப செல்ல மனமின்றி அங்கேயே நின்றுகொண்டிருந்தான். திரும்பவும் தட்டினான். சில நிமிடங்களில் தூங்கி எழுந்த முகத்துடன் பிருந்தா கதவைத் திறந்தாள். அவனை உள்ளே வரச் சொன்னாள். கதவை சாத்தியதும் அவளைக் கட்டியணைத்தான். தன் கணவன் வெளியூர் சென்றிருப்பதாகவும் பல முறை அவனை அழைக்க கடைக்கு வந்தும் அவன் அங்கு இல்லை என்று அவள் சொன்னாள். அவன் முகமெங்கும் முத்தமிட்டு சரிந்தாள்.ரமணன் அவள் உடல் மீது வெறியுடன் இயங்கத் தொடங்கினான்.

திடீரென்று கதவை யாரோ வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டது. தன் செருப்பை வீட்டுக்கு வெளியே விட்டு வந்ததது நினைவுக்கு வர ரமணனுக்கு உடல் பதறியது. சட்டென எழுந்து உடைகளைப் பொறுக்கினான். பிருந்தா உதட்டில் கைவைத்து பேசாமலிருக்கும்படி சைகை காட்டினாள். பழனிச்சாமி 'கதவைத் திற பிருந்தா' என்று கத்தினான். ரமணனுக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. பின்புற வழியே சென்றால் பின் வீட்டுக் காரர்கள் யாரேனும் பார்த்து விட வாய்ப்ப்பிருக்கிறது. என்ன செய்வது என்று இருவரும் நின்றுகொண்டிருக்கையில் தாழ்ப்பாளை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தான் பழனிச்சாமி. திடீரென்று நெருப்பின் பிழம்பு இருட்டில் எறிவது போல் ரமணனுக்குத் தோன்றியது. பழனிச்சாமி கையில் பெரிய தடி ஒன்று இருந்தது. அவன் உள்ளே நுழைந்ததும் அலறிக்கொண்டு பிருந்தா கதவருகில் ஓடினாள். ரமணனுக்கு இது கனவாக இருக்கக் கூடாதா என்று தோன்றியது. கால்கள் கட்டுண்டு விட்டதைப் போல் நகர முடியாமல் ஸ்தம்பித்து நின்றான். பழனிசாமி பிருந்தாவை ஓங்கி உதைத்துத் தள்ளிவிட்டு இவனருகில் வந்து நின்றான். காண நேரம் இவனைப் பார்க்கையில் அவன் கண்களில் ஓடிய ரத்த வரிகள் துடித்தது ரமணனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவன் கட்டையை ஓங்கி ரமணன் தலையில் அடித்தான். தடுக்க தூக்கிய கைகளில் அடி விழுந்துகொண்டே இருந்தது. தலையில் இருந்து ரத்தம் வழிந்து அவன் முகம் சிகப்பாகி கீழே விழும்வரை அடித்துக்கொண்டே இருந்தான். உடலில் அசைவு நிற்கும் வரை அடித்துவிட்டு அவனை காலால் புரட்டிப்போட்டான் பழனிச்சாமி. வழிந்து சென்ற ரத்தம் கட்டில் காலை சுற்றி சற்றுத் தேங்கி பின் மேலும் பரவிக் கதவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

தன் நினைவில் சமீப காலமாக வந்து கொண்டிருந்த நிரந்தரமில்லாத நபர் தான் தான் என்பதை உணர்ந்துகொள்ளும் முன்னரே இறந்து விட்ட ரமணனுக்கு அப்போது இருபத்தி மூன்று வயது தான் ஆகியிருந்தது.


-வல்லினம் இணைய இதழில் வெளியான சிறுகதை