Sunday, April 29, 2012

பொன்னியின் செல்வன் - ஒரு ஓவியம்

பொன்னியின் செல்வனில் நந்தினியின் அழகைப் பார்த்து வியக்கும் வந்தியதேவனை ஓவியமாக வரைந்தேன் என் கற்பனைக்கு எட்டியவரையில். உங்கள் பார்வைக்கு..

Thursday, April 26, 2012

மகேந்திரன்: உணர்வுகளின் ஓவியன்


சிறுவயதில் படம்பேர் சொல்லி விளையாடும் விளையாட்டில் பெரும்பாலும் நான் வெற்றி பெற்று விடுவேன். யாருக்குமே தெரியாத தமிழ் படங்களை என் அண்ணன் அக்காக்கள் மூலம் தெரிந்து வைத்திருந்த தைரியத்தால் தௌ, மௌ போன்ற திகிலூட்டும் எழுத்துகளை சொல்லி எதிராளிகளைத் திணறடிப்பேன். மெ என்றால் உடனே மெல்லத் திறந்தது கதவு என்று உதார் விடும் பசங்களை மிரட்ட நான் பயன்படுத்தும் படத்தின் பெயர் 'மெட்டி'.  அப்படியெல்லாம் ஒரு படமே கிடையாது .இது அழுகுணி ஆட்டம் என்று பசங்கள் கடுப்பாகி வெளிநடப்பு செய்து விடுவார்கள்.   பஞ்சாயத்து என் சின்னக்காவிடம் போனால் அக்கா யாருடைய படம், யார் இசை, யார் நடிகர்கள் என்று ஒரு முழு விவரணையே தருவாள். பசங்கள் நம்பிக்கையில்லாத முகங்களோடு கேட்டுக்கொண்டிருப்பார்கள் . அவர்களுக்கு ரஜினி கமல் தாண்டி வேறு யாரும் தமிழ் சினிமாவில் இல்லை. பழைய படங்களென்றால் எம்ஜியார் ,சிவாஜி.உண்மையில் என் நண்பர்களின் பெற்றோர்களுக்கே அந்தப் படம் பற்றித் தெரியாது என்றே நினைக்கிறேன்.இப்போது நிலைமை சற்று மாறிவிட்டது. இணையம், தப்பித் தவறி ரசனையுடன் பணியாற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் போன்ற காரணிகளால் மகேந்திரனின் படைப்புகளை இப்போதைய தலைமுறையினர் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பணிபுரியும் இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் பலரின் ஆதர்சம் மகேந்திரன் என்பது தெளிந்த ரகசியம். அதி பிரமாண்டமான சுமார் படங்களை தரும் ஷங்கர் கூட உதிரிப்பூக்கள் பாணியில் கதை தயாரித்து வைத்திருப்பதாகவும் அதை சினிமாவாக எடுக்க தன் வணிகத் தகுதி தடையாய்  இருப்பதாகவும் அவ்வப்போது சொல்வார். 

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் மகேந்திரனைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் சினிமா கலைஞர்கள் மட்டுமல்லாது இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் கலந்துகொண்டு அவர் படைப்புகளைப் பற்றிப் பேசியதில் இருந்து தமிழ் சினிமா  இயக்குனர்களின் வரிசையில் அவருக்கென கலைநேர்த்தியான அசையா ஆசனம் இன்றும் அவரை பெருமிதத்துடன் தன் மேல் அமர்த்தி வைத்திருக்கிறது என்பது நிரூபணமானது. மகேந்திரனின் திரைப்படங்களில் கதை திரைக்கதை ஆகிய அம்சங்களையும்  தாண்டி நிற்பது. உள்ளார்ந்த உணர்வுகளை தன் பாத்திரங்கள் மிகையல்லாத இயல்பு நடிப்பால் வெளிப்படுத்தும்படியான காட்சிகளை உருவாக்கியது தான் . பசியோடும் கிழிந்த உடையோடும் ஆனால் அதை மறைக்கும் வெகுளிச் சிரிப்போடும் தன் வீட்டுக்கு சாப்பிட வரும் தங்கையை வருத்தம் தோய்ந்த மனதுடன் பார்க்கும் அஸ்வினி (உதிரிப்பூக்கள்), தீராத இருமலால் அவதியுறும் மாடி வீட்டில் வசிக்கும் தன் நண்பருக்கு நள்ளிரவில் வீட்டுக்காரரின் சந்தேகப் பார்வையை அலட்சியமாகத் தாண்டி சென்று உதவி செய்யும் அஸ்வினி (நண்டு), தன் தங்கையின் திருமணம் மூலம் மீதும் தன் வீட்டில் மெட்டி ஒலி கேட்க விரும்பும் சரத்பாபு (மெட்டி), சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தான் அடைய வந்த அழகும் இசையும் நிரம்பித் ததும்பும் ஸ்ரீதேவியின் தூய மனதை அறிந்து குற்றவுணர்ச்சியில் வெளியேறும் ரஜினி (ஜானி), தன் தங்கையைப் பட்டினி போட்டு ஊர் சுற்றுவதாக தன் அதிகாரியிடம் பொய் சொன்னவனைப் புரட்டி எடுத்துவிட்டு அந்த வார்த்தைகளைத்  தன்னால் தாங்க முடியவில்லை என்று குமுறும் ரஜினி (முள்ளும் மலரும்) என்று அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் தேவலோகப் பிரஜைகளாக அல்லாமல் நாம் அன்றாடம் சந்திக்கும் சக மனிதர்களாய் இருந்தது தான் அவர் படைப்புலகின் பலம். சிறந்த கதை வசனம் என்று சிலர் உருவாக்கினாலும்  உணர்வின் மெல்லிழையை கலையாக,  காட்சிகளாக மொழிமாற்றம் செய்ய முடிந்த அவரின்  ரகசியத்தை அவர்களால் தொடக்கூட முடியாது.அது தான் அவரை இன்றும் மனதுக்குள் ஆராதிக்க வைக்கிறது.

காதைக் கிழிக்கும் ட்ரெய்லர்கள்  மற்றும் விளம்பரங்களுக்கு நடுநடுவே அவ்வப்போது நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பும் இன்றைய தொலைக்காட்சிகளைப் போல் அல்லாது அப்போதெல்லாம் மாநில விருதுகளோ மத்திய விருதுகளோ பெற்ற சினிமாக்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவார்கள். ஞாயிறு பகல்களில் அல்லது வெள்ளி இரவுகளில் ஒளிபரப்பாகும் பிராந்திய மொழிப்படங்களில் பெரும்பான்மையான தமிழ் படங்கள் குறைந்த அளவே படம் எடுத்த மகேந்திரனின் படங்களாக இருக்கும். ஒரு வெள்ளி இரவில் இளம் வயதின் அனுபவக்குறைவும் படலமாய் கண்ணை மறைக்கும் தூக்கமும் தந்த மங்கலான மயக்கத்தில் உதிரிப்பூக்கள் பார்த்த நினைவிருக்கிறது. தன் மனைவியை முன்பு மணக்கவிருந்த சர்த்பாபுவையும் தன் மனைவியையும் சந்தேகிக்கும் விஜயன் குளக்கரையில் சரத்பாபுவிடம் சண்டைபோடும் காட்சி. இருவரும் ஒருவரை ஒருவர் விரோதமாய் பார்க்கும் காட்சியும் பின் களைப்பும் காயங்களுமாய் மூச்சிரைக்க இருவரும் தண்ணிரில் முகம் கழுவிக்கொள்ளும் காட்சியும் அடுத்தடுத்து வந்தது என்னை குழப்பியது. அந்தர்பல்டி, சுவற்றில்  கால்வைத்து பாய்ந்து உதைப்பது போன்ற வழக்கமான சண்டைக்காட்சியை பார்த்துப் பழகிய பாமரக் கண்களுக்கு இடையில் இரு மனிதர்களுக்கு இடையில் உண்மையான சண்டை நடந்திருக்கிறது என்பதை ஊகிக்க வயதும் வாசிப்பும் தேவைப்பட்டது. என்னால் மறக்க முடியாத காட்சி அது. அதே போல் பசியுடன் குறுகலான வீதிகளில் ஓடும் விஜயனின் குழந்தைகளும்  கடக்கும் வீட்டின் உயிருள்ள ஜன்னன்ல்களும் அப்போதே என்னவோ  செய்தன. அநேகமாக மகேந்திரனின் எல்லாப் படங்களுமே கிட்டத்தட்ட இது போன்ற உயிர்ப்பான காட்சியமைப்புகளால் நிறைந்தவை. 

கிட்டத்தட்ட ரஜினியின் மசாலாப் படம் என்ற வகையில் சேர்க்கப்பட்டு விடும் அபாயமுள்ள வழக்கமான ஆள்மாறாட்டக் கதை கொண்ட 'ஜானி' ஸ்ரீதேவியின் அற்புதமான நடிப்பாலும் உயிரை அள்ளும் ராஜாவின் இசையாலும் மகேந்திரனின் உணர்விழைப் பின்னல்களால் வேயப்பட்ட அற்புதமான காட்சிகளாலும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.படத்தில் ரஜினியிடம் ஸ்ரீதேவி தன் காதலை சொல்லும் காட்சி எல்லோராலும் விரும்பப்படுவது. குற்றவுணர்வுடன் ரஜினி அதை மறுக்க தன் காதலை வெளிப்படையாக சொன்னதால் தன்னை இழிவாக நினைக்கிறாரோ ரஜினி என்று எண்ணி பதற்றமும் விவரிக்க முடியாத உள்ளுனர்ச்சியும் தாக்க புலம்பும் ஸ்ரீதேவியின் அசலான நடிப்பை எத்தனை பாலிவுட் மசாலா ரசிகர்கள் அறிவார்கள். பிற்பாடு ஹிந்தி இயக்குனர்கள் பலருக்கு இந்த படக் காட்சிகளைப் போட்டு காட்டினார் ஸ்ரீதேவி என்று படித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இன்னொடு காட்சி தான் படத்தின் உயிர்மூலம்  இருக்கும் இடம் என்று நினைக்கிறேன்.இரட்டைக் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க ஜானியாக ஸ்ரீதேவி வீட்டில் நுழைந்து உன்னதமான இசையை கேட்க விரும்பாமல் சிடுசிடுப்புடன் சாப்பிட்டு உறங்கும் வித்யாசாகர் -ரஜினி சற்று தூக்கம் கலைந்து பார்க்க ஸ்ரீதேவி நடுங்கும் இதயத்தை கைகளால் அணைத்தபடி  கண்ணீர் ததும்ப அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பார். அப்படி ஒரு காட்சியை அமைக்க வேறு இயக்குனரால் முடியவே முடியாது என்று சூலம் மேல் அடித்து சத்தியம் செய்வேன். திடுக்கிடும் ரஜினியிடம் 'இன்னும் எத்தனை நேரம் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறேன்' என்று கேட்டு அழும் காட்சியில் தான் வித்யாசாகர் மனதுக்குள் அர்ச்சனா ஜானியின் காதலின் அர்த்தத்தை உணர்வார். வலுவான மிக முக்கியமான காட்சியை உணர்ச்சிகளின் மேலான, அசலான வெளிப்பாட்டால் கட்டமைப்பது எப்படி என்று இன்றிருக்கும் இயக்குனர்களுக்கு சொல்லாமல் கற்பிக்கும் காட்சி அது. மகேந்திரன் இயக்கி ரஜினி 'நடித்த' வெகு சிலப் படங்கள் அவரது வெறிப்பிடித்த ரசிகர்கள் பிறக்கும் முன்னே வெளியானவை. அதற்குப் பிறகு அவர் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு விட்டார். பிற்பாடு அவர் திரையில் தோன்றி  கை கால் அசைத்த  படங்கள் எக்கச்சக்கமாய் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது வரலாறு.
முள்ளும் மலரும் மகேந்திரன் இயக்கிய  முதல் படம் என்றாலும் எக்கச்சக்கமான எதிர்பார்த்திராத படங்களுக்கு கதை வசனம் எழுதியும் இருக்கிறார். தங்கப் பதக்கம் அவர் எழுதியது என்றால் சிவாஜியின் அதியுணர்ச்சி நடிப்பில் வெளியான படத்தை டைட்டில் பார்க்காமல் டிவியில் பார்த்தவர்கள் மலைப்பார்கள் . மகேந்திரன் ஏதோ பத்திரிக்கை அட்டைப்படத்தில் பார்த்த போலீஸ் அதிகாரியின் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கப் பதக்கம் நாடகம் எழுதினார் என்று படித்த நினைவு. அதில் எந்த பூர்விக விவரங்களும் தராமலேயே சிவாஜிக்கு வட இந்திய குலப் பெயரான 'சவுத்ரி' என்று பெயரிட்டு அதை யாரும் கேள்வி கேட்காவண்ணம் வெற்றியும் பெற்றது மகேந்திரனின் தனி சாதனை தான். அது போல் கமல் ரஜினி நடித்த ஆடுபுலி ஆட்டம் போன்ற படங்களுக்கும் எழுதி இருக்கிறார்.ஆனால் அவற்றின் எந்த சாயலும் அல்லாத அசலான படைப்பாய்  முள்ளும் மலரும் தந்த போது தமிழர்கள் அதை எப்படி தாங்கினார்கள் என்ற ஆச்சர்யம் எழுகிறது. 
ரெண்டடுக்கு பவுடர் பூசப்படாத முகங்கள், கலைந்த தலைகள், உயிருள்ள வீடுகள், காற்றில்அலையும்மரக் கிளைகள்,அரவமென  மேடுபள்ளங்களில்  படரும் மலைப்பாதைகள் என்று உண்மையான மலையோர கிராமம் ஒன்றில் வாழும்  சாமானிய மனிதனின் கோபதாபங்கள் நிறைந்த கதையை சினிமாவாக முதலில் பார்த்த தமிழ் ரசிகர்கள் பாக்கியவான்கள். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் சரத்பாபு ரஜினி இருவருக்குமான விருப்பு வெறுப்பு நிறைந்த உறவு. நிஜவாழ்வில் ஆண்கள் பெண்களால் மட்டுமல்ல ஆண்களாலும் கவரப்படுகிறார்கள். நண்பர்களை தாண்டி அன்றாடம் நாம் சாலையில் பேருந்தில் கடைவீதிகளில் பார்க்க நேரிடும் ஆண்கள் சிலரின் தோற்றம் அல்லது நடவடிக்கைகளால் கவரப்படுவதுண்டு. சிலர் மீது மரியாதையும் சிலர் மீது எரிச்சலும் வருவது  இயற்கை. ஆனால் இலக்கியத்தில் பெரும்பாலும் இந்த நுண்ணிய உணர்வு பதிவானாதாக நான் படித்ததில்லை. சினிமாவிலோ கேட்கவே வேண்டாம். ஒருவன் நல்லவன். மற்றவன் கொள்ளக்கூட்டக்காரன். படத்தில் சரத்பாபு ரஜினியை வெவ்வேறான சந்தர்ப்பங்களில் வெவ்வேறான குணங்கள் வெளிப்படும் தருணங்களில் பார்ப்பார். பணக்காரன் மீது கோபத்தில் அவன் காரின் ஹெட் லைட்டை உடைக்கும்போது பின் ஒரு வயோதிகரை குளக்கரையின் படிக்கட்டுகளில் தாங்கிக் கூட்டி செல்லும்போது இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணான குணங்களைக் கொண்ட ரஜினியின்  செய்கையால் கவரப்பட்டு அவனைப் பற்றி விசாரிக்கும் சரத்பாபு ரஜினியிடம் ஒரு வித கரிசனையுடன் தான் நடந்துகொள்வார். டிப்பார்ட்மென்ட்டுக்கு சொந்தமான வின்ச்சில் ஊர்க்கார ஏழைகளுக்கு இலவசமாக இயக்கும் ரஜினியை கண்டிக்கும் மேலதிகாரியான சரத்பாபு பிறகு தான் ஏறி வின்ச்சில் செல்லும்போது ரஜினி கடுப்புடன் வண்டியை பாதியில் நிறுத்தி இன்கி நடந்து செல்லுமாறு சொல்லும் காட்சியில் ஒரு சிரிப்பு சிரித்தவாறு நடந்து செல்வார் .அந்த காட்சி மிகவும் அபூர்வமானது. 'என்ன மாதரியான ஆளய்யா இவன்?' என்று மனதிற்குள் ரசித்தபடி அவர் நடந்து செல்வதை ஒரு காட்சியாக வைக்கலாம் என்ற தைரியம் முதல் படத்திலேயே மகேந்திரனுக்கு எப்படி வந்தது என்பது பெருமாச்சர்யம். தன் கையும் வேலையும் போக மறைமுக காரணமாய் இருந்த சரத்பாபு மீதான கோபத்தை  கடைசி வரைக்கும் ரஜினி  மாற்றிகொள்ளமாட்டார். "இப்ப கூட எனக்கு உங்களைப் பிடிக்கல ஸார்" என்று சொல்லும்போது ரஜினி எப்பேர்பட்ட நடிகராக 'இருந்தார்' !

பிற்பாடு மௌனமான ராகமாக மாற்றப்பட்ட நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் தன் பழைய காதலை மறக்காத சுகாசினி பிரதாப் போதனிடம் எதற்கெடுத்தாலும் எரிந்து விழ, அவளது அண்ணன் சரத்பாபு அவளை கண்டிக்கும் காட்சி. பிரதாப் தலையிட்டு 'உங்கள் மனைவி செய்யாத பிரச்சனையா ..எப்படி இருந்தாலும் இவள் என் மனைவி' என்று சொல்வார். தூய மனதுடன் மனைவியின் வெறுப்பூட்டும்  செயல்களை சிறு குழந்தையின் பிடிவாதமாக நினைக்கும் கணவன் கதாபாத்திரத்தை எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம் பிறகு? 'பருவமே' என்ற மறக்க முடியாத  பாடலில் அதிகாலை ஜாக்கிங் செல்லும் சுகாசினி பிற்பாடு தன் கணவனைத் தேடி விமான நிலையம் நோக்கி ஓடி வருவார். இரண்டு ஓட்டங்களுக்கும் இடையில் இருக்கும் வேகத்தின் வேறுபாடு   தான் மகேந்திரன் சொன்ன அழியாத வாழ்க்கை தத்துவம். உரத்த பிரச்சாரமாக வெறும் வசன ங்கள் மூலம் காட்சி நகர்த்தாமல் உணர்ச்சியுள்ள  ஓவியங்களின் நகர்வுகளாக காட்சிகளை அமைத்த இயக்குனர் அவர். முதல் படத்தில் பணிபுரிந்த பாலு மகேந்திரா  பிற்பாடு இயக்குநராகி மகேந்திரன் வழியிலே படங்கள் எடுத்தாலும், மகேந்திரனின் எந்தப் படத்துக்கும் பிற்பாடு ஒளிப்பதிவு  செய்யவில்லை. இயக்குனர் பாலா ஒரு முறை விகடனில் எழுதி இருந்தார். முள்ளும் மலரும் வெற்றிக்கான பார்ட்டி ஒன்றில் 'கோடி ரூபாய் கொடுத்தால் பாலுமகேந்திரா  போல் பல ஒளிப்பதிவாளர்களை கொண்டு வருவேன்' என்று  சொன்னதால் காயப்பட்ட பாலு  பிறகு அவரோடு பணிபுரிய மறுத்துவிட்டாராம். எனினும் மகேந்திரனுக்கு ஒரு அசோக்குமார் கிடைத்தார். எத்தனை படங்கள் ..என்ன அற்புதமான காட்சியமைப்புகள். ஒரு உதாரணம். நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் வரும் உயிரை உருக்கும் சுசிலாவின் குரலில் வரும் 'ஏ..தென்றலே..இனி நாளும் பாடவா' பாடலின் இரண்டாவது இடையிசை முடிவில் தேவலோகப் பெண்குரல்களின் கோரஸும் குழலிசையும் வயலின்களும் தரும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இசைக்கோர்வை வரும்  காட்சியில் சுகாசினியும் பிரதாப் போதனும் ஸ்கூட்டரில் பனிமூட்டத்துக்குள்  சென்று மறைவார்கள். இருவருக்கும் இடையிலான உறவின் சிக்கல்களையும் நெஞ்சை அழுத்தும் வேதனைகளையும் இத்தனை அழகான படிமக்காட்சியாக சொல்ல வேறு யாரால் முடியும்?
மகேந்திரனைப் பற்றி எழுதும்போது ராஜாவைப்பற்றி சொல்லாமல் இருந்தால் என் ஜென்மம் சாபல்யமடையாது. ஒவ்வொரு காட்சிக்கும் மௌனமும் மந்திரமும் கலந்த இசைமூலம் உயிர் தந்தவர் ஆயிற்றே நம் ராஜா. தான் பணிபுரியும் படங்களின் ஒட்டுமொத்த கதையையும் கதை மாந்தர்களின் உள்ளீடான உணர்ச்சிகளையும் உள்வாங்கி பாடல்களாக்கி தந்தால் அங்கு இருபது முப்பது வெள்ளுடைப் பேய்கள் மரத்தின் கிளைகளில் தொங்கி பயமுறுத்துவார்கள். எழுத்தாளர்-ஒளிப்பதிவாளர் செழியனின்  வார்த்தைகளில் சொன்னால் 'இந்த வாத்தியம் இந்த ஸ்வரம் என்று தேர்ந்தெடுத்து ராஜா எழுதும் உன்னதமான இசைக்கோர்வைக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் கதாநாயகி பின்புறத்தை  ஆட்டுவாள்'.ராஜா இயக்குனர்கள் சொல்லும் சிச்சுவேஷன்களை மனதுக்குள் உருவகித்து அதன் உச்சபட்ச மேன்மையுணர்வை தானே அடைந்து உணர்வுகளும் உயிரும் கலந்த இசையை உருவாக்குவார். ஆனால் அவரிடம் 'சிச்சுவேஷன்' சொன்ன இயக்குனர்கள் அவரின் கற்பனை வேகத்துக்கு ஈடுகொடுக்க  முடியாமல் தரையிலேயே நீச்சலடித்துக் கொண்டிருப்பார்கள். ராஜாவின் இசை வானத்தில் மிதந்து கொண்டிருக்கும். ஒரு சில இயக்குனர்கள் தான் ராஜாவின் படைப்பாற்றலின் வீர்யத்தை உணர்ந்து  அவற்றை ஓரளவுக்கு  காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மகேந்திரன் அவற்றில் ஒருவர். எப்போது கேட்டாலும் மனதையும் கண்களையும் நனைத்துவிடும் உதிரிப்பூகளின் 'அழகிய கண்ணே' ஒரு மிகச் சிறந்த உதாரணம். அதே போல் மகேந்திரனின் படங்களில் ராஜாவின் பின்னணி இசையும் உயிருருக்கும் பாடல்களும் கதையின் முக்கியக்கூறாய் அமைந்தன என்பது உலகறிந்த உண்மை. பழங்குடிகளின் இசைமொழியில் இரவின் மௌனத்தை மென்மையாய் கீறும் 'ஆசைய காத்துல தூது விட்டு' பாடலில் வரும் பெண் வாயசைக்காமல் ஆடியதில் மட்டும் 'மிஸ்டர். இளையராஜா கொஞ்சம் அப்செட் ஆனார் 'என்றார் ஒரு நேர்காணலில் மகேந்திரன். 
எல்லா தமிழ் சினிமா தீவிர ரசிகர்களுக்கும் ஒரு அங்கலாய்ப்பு உண்டு. மகேந்திரன் மட்டும் அப்போதைய சூழலில் திரும்பவும் நிகழ்ந்த வணிக மாற்றத்துக்கு வழிவிட்டு ஒதுங்கி விடாமல் ஸ்திரமாக நின்று இருந்தால் இன்று தமிழ் சினிமாவின் போக்கே மாறி இருக்கும் என்று சொல்பவர்கள் பலர். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஒரு கட்டத்தில் மகேந்திரனின் படங்களில் ஒரு தொய்வு இருந்தது உண்மை தான். பேபி அஞ்சு பிரதான பாத்திரமாக வரும் 'அழகிய கண்ணே' படத்தை அமர்ந்த நாற்காலியை விட்டு எழாமலேயே இயக்கினாரோ  என்று நினைக்கும் அளவுக்கு சோர்வாகவும் ஒட்டுதல் இல்லாமலும் உருவாக்கி  இருந்தார். மறுஜென்மம் என்ற மிகவும் வித்தியாசமான கதையையே கூட அவரால் தன் தனித்த அடையாளத்துடன் இயக்க முடியாமல் போனதின் மர்மம் என்ன என்று தெரியவில்லை. பூட்டாத பூட்டுகள் அருமையான முயற்சி என்றாலும் அதன் முழு எதிர்மறையான கதை மூலம் தோற்று விட்டதோ என்று தோன்றுகிறது. பிற்பாடு பாண்டியராஜனை வைத்து எஸ்.பி.பி யின் இசையில் ஊர்ப்பஞ்சாயத்து எடுத்தார் என்பது ஒரு செய்தியாகவே இருக்கிறது எனக்கு. 

என் மதிப்புக்கு உரிய  எழுத்தாளர் கந்தர்வனின் சாசனம் கதையை அடிப்படையாக வைத்து அதே பெயரில் பல ஆண்டுகள் தயாரிப்பில் படமாக எடுத்தார். அரவிந்த்சாமி , கௌதமி நடித்திருந்தார்கள். தொடக்கத்தில் ராஜா, பி.சி.ஸ்ரீராம் போன்ற பெரும் கலைஞர்களின் பெயர்கள் அடிபட்டாலும் பிறகு பாலபாரதியின் இசையில் யாராலும் கவனிக்கப்படாமல் வெளியாகி மறைந்தது படம். படத்தின் கதை உரிமைக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் கந்தர்வனை சந்திக்க எங்கள் புதுக்கோட்டைக்கு  வந்திருக்கிறார்.மகேந்திரன். அப்போது என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. இன்றும் கூட அவர் ஒரு படம் இயக்கி ராஜா இசை அமைத்தால் எப்படி இருக்கும் என்று நினைக்காத சினிமா ரசிர்கள் அநேகமாக இன்னும் பிறக்கவில்லை என்றே நினைக்கிறேன். 

-இளையராஜா புகைப்படம் நன்றி:  ஸ்டில்ஸ் ரவி 

Monday, April 23, 2012

காடு - ஓவியங்கள்

ஜெயமோகனின் 'காடு' என்னை பாதித்த நாவல்களில் ஒன்று. நாவலில் வரும் நீலியையும் கானகத்தின் இருளையும் வரைந்தேன்.உங்கள் பார்வைக்கு.

சமீபத்தில் வரைந்த ஓவியங்கள்..