Friday, April 22, 2011

அவன் இவன் யுவன்..


அரவிந்தன் இசை வெளியான நாட்கள். ரஹ்மானின் ராஜ்ஜியம் பிரதேச எல்லைகளை பிளந்துகொண்டுவியாபித்திருந்த நேரம் .குறுநில மன்னனாக தேவா கோலோச்சிய காலகட்டம்(ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!) . ராஜாவின் பாடல்கள் அவ்வளவாக ஒலிக்காத நேரத்தில், கார்த்திக் ராஜா வாரிசாக வந்து உல்லாசம் தந்தார். மாணிக்கம் எல்லாம் அப்படியொன்றும் நன்றாக அமையவில்லை. வெறும் டெம்ப்ளேட் இசை போல் அடுத்து வந்த படங்களில் பாடல்கள் இருந்ததால் கார்த்திக்கால் முன்னுக்கு வர முடியவில்லை. ஆனால் பின்னணி இசையில் கார்த்திக் கெட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். அரவிந்தனில் 'ஆல் தெ பெஸ்ட்' பாடல் மூலம் ஒரு நம்பிக்கையை யுவன் தந்தார். 'ஈர நிலா' எனக்கு இன்று வரை பிடித்த பாடல்களில் ஒன்று. பெருந்தன்மையுடன் யுவன் நன்றாக வருவார் என்று முன்பே ஒருமுறை ரஹ்மான் சொன்னார். யுவனும் ரஹ்மான் தனது விருப்பத்துக்குரியவர் என்று சொன்னார். (இது ராஜாவின் தீவிர ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது!)
'வேலை' படம் வரைக்கும் யுவனுக்கு பெரிய ப்ரேக் இல்லை. செல்வராகவனின் 'துள்ளுவதோ இளமை' தான் யுவனின் முதல் முத்திரை. (செல்வராகவனுக்கும் யுவனுக்கும் என்ன தான் பிரச்சனை என்று யுவனை திடீரென்று சேர்ப்பதும் நீக்குவதுமாக செல்வா குழப்புகிறார்!). அதற்குப்பிறகு நிறைய ஹிட் கொடுத்து முக்கிய இசையமைப்பாளராக இருப்பது மகிழ்ச்சி தந்தாலும், திரும்ப திரும்ப ஒரே மாதிரி இசை தருவது ஒரு குறையாக தான் தெரிகிறது. அவ்வப்போது வியாபார வெற்றிகளையும் தாண்டி சில அற்புதங்களை யுவன் தருவார். குறிப்பாக நந்தாவில் ' முன் பனியா ' என உருக வைத்தார். பாலாவின் புதிய படமான ' அவன் இவன்' பாடல்கள் கேட்ட போது யுவனுக்கு இசையில் ஒரு முதிர்ச்சி வந்திருப்பதை உணர முடிந்தது. பாலாவின் morbid மனதை பிரதிபலிக்கும் பாடல்கள். 'ராசாத்தி போல' பாடல் கதாநாயகன் ரெண்டு கையையும் தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு அவ்வப்போது நெஞ்சில் குத்திக்கொண்டு ஆடும் பாடல் வகையை சேர்ந்தது என்றாலும், பின்னணி இசையில் யுவனின் முத்திரை இருக்கிறது. 'ஒரு மலையோரம்' பாடல் மென்மையாய் வருடுகிறது. எல்லாப் பாடல்களிலும் தாள வாத்தியங்கள் தாண்டவமாடுகின்றன. 'டியா டோலே' பாடல் தாள இசையின் உச்சம். இது தீம் மியூசிக் என்று நினைக்கிறேன். கேட்டுப்பாருங்கள். உட்கார்ந்திருப்பவர்களை எழுந்து கொள்ளவும், நின்று கொண்டிருப்பவரை ஆடசொல்லும் தாளக்கட்டு. அருமை.
எனக்கு பிடித்தது 'முதல் முறை என் வாழ்வில் மரணம் பார்க்கிறேன்' என்ற பாலாவின் பிரத்யேக சோகப்பாடல். விஜய் பிரகாஷ் உருகி இருக்கிறார். நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளில் துயரம் வழிகிறது.ஆர்யாவோ - விஷாலோ யாரை பாலா கொன்றார் என்பதை வெண் திரையில் தான் பார்க்க வேண்டும்.

பாடல்களை நன்றாக கேட்டு வாங்கி விட்டு உபயோகப்படுத்தாமல் விட்டு விடுவதில் பாலாவுக்கு நிகர் அவரே. எனக்கு பிடித்த ' ஒரு காற்றில் அலையும் சிறகு' பாடலை 'நான் கடவுளில்' காணாமல் அடித்தது ஒரு பெரும் குறையாக இன்றும் எனக்குப்படுகிறது. இந்த படத்தின் பாடல்கள் சரியாய் படத்தில் உபயோகிப்பட்டால் நிச்சயம் பெரிய அளவில் சென்று சேரும்.

பி.கு: தலைப்பு என்னுடையதில்லை முகநூல் நண்பர் ஒருவர் அடித்த கமென்ட்.

Tuesday, April 19, 2011

அது.. - சிறுகதை


இருளை ஒரு பெரும்போர்வை ஆக்கி அதை குளிர்ந்த நீரில் முக்கி எடுத்து வானம் முழுதும் பரப்பி விட்டது போல் இருந்தது. மணி எப்படியும் பதினொன்றை தாண்டி இருக்கும். பைக்கின் வேகத்தில் கிழிந்த குளிர் உடலெங்கும் அப்பியது.. உடல் தோல் ஜாக்கெட்டுக்குள் நடுங்கியது. விபுல் ஏன் தான் இந்த மாதிரியெல்லாம் செய்கிறான் என்று கோபமாய் வந்தது. அவனால் தான் இந்த பேய் குளிரில் உறைந்தபடி பறக்க வேண்டியிருக்கிறது. ஆபீசிலும் அப்படி தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளில் பாதியை நானே செய்ய வேண்டி வரும். திடீரென்று ஆபீசுக்கு மட்டம் போட்டு விடுவான். புதிதாய் கல்யாணமானவன். வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி போன்ற இடங்களில்கூட பையன்களுக்கு இருபதுகளின் ஆரம்பத்திலேயே கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள். விபுலுக்கு 24 வயது தான் ஆகிறது. பார்ப்பதற்கோ பதினெட்டு வயது பையன் போல் தோற்றம். பீகாரில் தன்னுடைய கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தான் இவன் மணந்திருந்தான். அவள் இவனுக்கு சித்தி மாதிரி இருப்பாள். ஆனாலும் மற்ற எந்த பெண்ணையும் விட ஒரு அதீத கவர்ச்சி. பையனோ ஆபீஸ் என்று ஒரு சமாசாரம் இருக்கிறது என்பதை எல்லாம் மறந்து விட்டு புது பொண்டாட்டி கூடவே சுற்றிக்கொண்டிருந்தான்.

ஐந்தாறு மாதம் கழித்து எனக்கு அடுத்து தங்கியிருந்த வீட்டை காலி செய்து விட்டு..ஷாத்ரா வை தாண்டி எங்கோ வீடு பார்த்து போய்விட்டான். போன ஒன்றிரண்டு வாரத்திலேயே அவனுக்கும் அவளுக்கும் சண்டை வர ஆரம்பித்து விட்டது. தினமும் ஏதாவது பிரச்சனை. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சண்டை போடுகிறாள் என்பான். சில சமயம் அடிக்கவும் செய்திருக்கிறாள். ஒரு சண்டையில் அவன் கன்னத்தை வலுவாகஅறைந்திருக்கிறாள் . முகம் வீங்கியிருந்ததை பார்த்து எங்கள் பாஸே ஒரு மாதிரியாகிவிட்டார். உண்மையில் அவள் திருமணத்திற்கு முன்போ எங்கள் வீட்டருகில் இருக்கும்போதோ அதிர்ந்து கூட பேச தெரியாதவளாய் இருந்தாள். அங்கு போனவுடன் எப்படி இப்படியானாள் என்று புரிபடவில்லை. ரெண்டு நாட்கள் முன்பு அவள் வீட்டார் வந்து இவனை சமாதானப் படுத்தி அவளை கொஞ்ச நாட்கள் கிராமத்தில் இருக்கட்டும் என்று கூட்டி சென்று விட்டார்கள். விபுல் தனியாக தங்க ஒரு மாதிரியாய் இருக்கிறது என்று சில நாட்கள் மட்டும் கூட தங்குமாறு தொந்தரவு செய்து விட்டான்.

அலுவலகத்தில் வேலை முடிந்து கிளம்புவதற்குள் க்ளையண்ட் சொன்னான் என்று இன்னும் சில வேலைகளை முடித்து விட்டு போ என்று விட்டார் எங்கள் பாஸ். இவன் முன்கூட்டியே வீட்டுக்கு சென்று விட்டான். எல்லாம் முடிந்து கிளம்பவே பத்தரைக்கு மேலாகி விட்டது. அங்கு போய் சேர எத்தனை நேரமாகுமோ தெரியவில்லை.

இடமும் பயங்கரமாக தான் இருந்தது. டிசம்பர் குளிரில் டெல்லியே பெரும் ரஜாய்க்குள் சுருண்டு கிடந்தது. பாவி இப்படி என்னை போட்டு வதைக்கிறானே என்று தோன்றியது.அவன் வீட்டை கண்டு பிடிப்பதற்குள் உடல் உண்மையிலேயே மரத்து போய்விட்டது. நல்லவேளை பையன் வோட்கா சிக்கன் என்று தடபுடலாய் வரவேற்றான். வீடு தான் பூகம்பத்தில் தப்பிய கட்டிடம் போல் இருந்தது. வீட்டின் வெளிச்சுவர்களில் ஏதோ பச்சையம் பரவி இருந்தது போல் இருந்தது. இவன் வீட்டின் மேல் தலத்தில் இருந்தான். கீழ் வீட்டில் வீட்டு ஓனர் இருந்தார். அவரே பாதி நாட்கள் அங்கு இருப்பதில்லை என்றான். அவருக்கு ஏகப்பட்ட வீடுகளாம். அதனால் பெரும்பாலும் கீழ் வீடு பூட்டியே தான் இருக்கும் என்றான்.

சரி தான் இது நன்றாய் தான் இருக்கிறது. கொஞ்ச நாட்கள் இங்கு தங்கலாம் என்று முடிவு செய்தேன். பையன் குடிக்கவே தெரியாதவன். பெருங்குடி மகன் போல் வீட்டில் நான்கு பாட்டில்கள் வைத்திருந்தான். சந்தோசம் என்று தங்கிவிட்டேன். இரவு குடி சாப்பாடு பேச்செல்லாம் முடிந்து அதிகாலையில் தான் தூங்கவே ஆரம்பித்தோம். எத்தனை நேரம் தூங்கினேன் தெரியவில்லை. என்னவோ ஒரு கனவு. கனவை தொடர்ந்து தொந்தரவு. உடலெல்லாம் மரத்து விடுவது போல் இருந்தது. குழிக்குள் இருந்து மேலே தாவுபவன் போல் கட்டிலில் இருந்து எழுந்து விட்டேன். நைட் லாம்பின் வெளிச்சத்தில் யாரோ உட்கார்ந்திருந்தது போல் இருந்தது. திடுக்கிட்டு பார்த்தால் விபுல். ரஜாயை தலைக்கு மேல் போர்த்திக்கொண்டு தன கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தான். உண்மையிலேயே பயந்து விட்டேன். என்னை மௌனமாக பார்த்துக்கொண்டே எனக்கு பின்னால் இருந்த ஜன்னலை கை காட்டினான். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பயத்தில் 'என்னடா' என்றேன் தமிழில்.

"இந்த வீட்டில் பேய் இருக்கு .." என்றான் அவன் தெளிவான ஹிந்தியில்.கை நீட்டியபடியே இருந்தது.

"இப்ப தான் ஜன்னலை தட்டியது " என்றான் நடுங்கும் குரலில்.

திரும்பி பின்னால் பார்த்தேன். அந்த ஜன்னலுக்கு அருகில் தான் நான் படுத்திருந்தேன். மெதுவாக எழுந்து அவன் கட்டில் பக்கம் நகர்ந்தேன். அவனே பேய் மாதிரி தான் இருந்தான். அவன் பக்கத்தில் போகவும் பயம். மெல்ல அவன் கட்டிலின் மறு முனையில் அமர்ந்து கொண்டு அவனை பார்த்தேன். எனக்கு உண்மையில் நடப்பது நிஜமா கனவா என்று புரிபடவில்லை. சற்று நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தோம். குளிரா பயமா தெரியவில்லை உடல் கட கட வென்று நடுங்கியது. இத்தனை நாளாக இவன் பயந்தது இவன் மனைவிக்கா இல்லை இவன் சொல்லும் பேய்க்கா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

இவனுக்கு மட்டும் ஜன்னலை தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. அதனருகிலே படுத்திருந்த எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு வேளை அந்த சத்தத்தில் தான் நானும் எழுந்து விட்டேனோ என்று யோசித்தேன்.
"எப்பவும் இப்படி தான் நடக்குமா?" என்றேன்.
"வந்த ரெண்டாவது நாளில் இருந்தே இந்த சத்தம் கேட்கிறது.." என்றான். போனவாரம் ஒரு பக்கம் ஜன்னலையும் ஒரு பக்கம் கதவையும் மாறி மாறி தட்டியதாம். பயத்தில் மனைவியை கட்டிப்பிடித்தபடியே தான் கிடந்தானாம்.

நான் வீட்டின் ஜன்னலை மாடிப்படியில் ஏறும்போது பார்த்ததை நினைத்து பார்த்தேன். மடிப்படியிலோ அல்லது அதன் கைப்பிடி சுவற்றிலோ நின்று கொண்டு கை நீட்டினாலும் தொட முடியாத உயரத்தில் தான் இருந்தது ஜன்னல். பிறகு எப்படி இந்த மாதிரி சத்தம் வரும் என்று நினைத்தேன். என்ன தான் பேய் பிசாசை நம்பாதவன் என்றாலும் பக்கத்தில் படுத்திருந்தவன் இருட்டில் இப்படி எழுந்து உட்கார்ந்து நடுங்கி கொண்டிருந்தான் என்றால் யார்க்கு தான் பயம் வராது. அவன் பயத்தை நானும் பங்கு போட்டுக்கொண்டேன்.



விடியும் வரை அப்படியே அமர்ந்த படி தூங்கி போய் இருந்தோம். காலையில் கிளம்பும்போது கேட்டேன்." ஸாலா ..இவ்வளவு பிரச்னை இருக்கும்போது இந்த வீட்டை ஏன்டா காலி பண்ணாமல் இருக்கே?"
"இல்லை மோகன்ஜி என் மனைவி தான் வேண்டாம்..இந்த வீடு நல்லா தான் இருக்கு என்று சொல்லிவிட்டாள் " என்றான். சரிதான் அவளுக்கு பேய் தான் பிடித்திருக்கிறது. அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் தான் பையன் அல்லாடிக்கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொண்டேன்.

அதை தொடர்ந்து வந்த ஆறு நாட்களுக்கு நான் அங்கு தான் தங்கியிருந்தேன். இரவில் சரியாக பனிரெண்டு ஒரு மணிக்கெல்லாம் விழிப்பு தட்டிவிடும். ஆனாலும் எந்த சததத்தையும் நான் கேட்கவில்லை. அவனோ முதல் நாள் பார்த்த மாதிரியே தான் பயந்து போய் உட்கார்ந்திருந்தான் ஒவ்வொரு முறையும். நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று அவனை தேற்றி தூங்க வைத்து கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக ஊரில் இருந்து அவள் மனைவியும் வந்து விட்டாள். அவள் வந்தவுடன் எனக்கு முன்பாகவே அவளை தழுவிக்கொண்டான். அவளும் அவன் மேல் உயிரே வைத்திருந்தை போல் கண்ணீர் விட்டாள்.
அப்புறம் ரெண்டு மூன்று நாட்களில் வேறு வீடும் பார்த்து போய் விட்டார்கள் இருவரும். அதற்கு பிறகு அவள் சண்டை எல்லாம் போடுவதில்லை ரொம்ப அன்பாக இருக்கிறாள் என்று சொல்வான் விபுல். நான் தான் அவன் பயந்து போய் உட்கார்ந்திருந்ததை நடித்துக்காட்டி அலுவலகத்தில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தேன். விபுல் ஆபிஸ் வேலையாக இரண்டு நாள் வெளியில் சென்றிருந்த போது நான் அவன் வீட்டுக்கு சென்று வந்ததை மட்டும் யாரிடமும் சொல்லவில்லை. அழுத்தக்காரி. சுலபத்தில் உடன்படவில்லை. பிறகு தான் அவள் கட்டாயப்படுத்தி அவனை ஷாதிராவில் வீடு பார்க்க சொன்னாள் எனபதும் நான் மட்டுமே அறிந்தது.

ஒரு மாதம் கழித்து எனக்கு குர்கானில் வேறு வேலை கிடைத்து அங்கு வீடெடுத்து தங்கிவிட்டேன். நல்ல வீடு. .
மேல் தளத்தில் இருந்தது . சுற்றிலும் அழகான மரங்கள் வேறு. வேலை முடிந்து வீடு திரும்ப நேரமானாலும் பயமே இருக்காது. ரம்யமான இடம். இடையில் ஒரு முறை விபுல் தன் மனைவியுடன் இங்கு வந்து பார்த்து விட்டு " வீடு அருமையாய் இருக்கிறது மோகன். குர்கானில் ஒரு வேலை கிடைத்தால் நான் உங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே வந்து விடுவேன்.." என்றான். அவள் எதுவும் பேசவில்லை. ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த என் சட்டையை பார்த்துக்கொண்டே இருந்தாள். அன்று அணிந்திருந்தது.

போன மூன்றாவது வாரத்தில் ஓர் இரவில் ஏதோ சத்தம் கேட்டு விழித்துக்கொண்டேன். நல்ல வெயில் காலம். காற்றே இரவில் கூட கடும் வெப்பமாய் இருக்கும். எல்லா ஜன்னலையும் திறந்து வைத்திருந்தேன். யாரோ என்னை பெயர் சொல்லி அழைத்தார்கள். மெல்ல எழுந்து ஜன்னலை பார்த்தேன். ஜன்னலின் கம்பியை பிடித்துக்கொண்டு தலை முடி காற்றில் அசைய ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். " இருக்கீங்களா மோகன் பையா " என்றாள்.சற்று ஊடுருவிய பார்வையில் தெரிந்தது விபுலின் மனைவி. அவள் குரலோடு இன்னொரு ஆணும் சேர்ந்து பேசுவது போல் இருந்தது. இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாள் என்று ஒன்றுமே புரியவில்லை. அவள் தான் என்றாலும் தலைமுடியெல்லாம் கலைந்து பார்க்கவே பயங்கரமாய் இருந்தாள். என்னவோ ஆர்வமும் மித மிஞ்சிய காமமும் உந்தித்தள்ள கதவை திறந்தேன். நீண்ட நாள் திறக்கப்படாமல் இருந்த சவக்கிடங்கு திறந்தது போல் நாசிஎங்கும் ஒரு வித நாற்றம் நிறைந்தது. கதவு திறந்த வேகத்தில் ஒரு மின்னலைப்போல் பாய்ந்தவள் என்னை அணைத்துக்கொண்டு அப்படியே தரையில் சாய்த்தாள். புடைவையின் தலைப்பு சரிய, பளீரென தெரிந்த மார்புகள் மேலும் கீழும் மூச்சுக்கு ஏறி இறங்கின. " நான் வேணும்னு தானே பையா விபுலை அன்னிக்கு வெளியூருக்கு அனுப்புனீங்க ..?" என்றாள். ஆண் குரலும் கலந்திருந்தது.
அவள் என் மேல் இயங்க தொடங்கும்போது தலையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் திடீரென்று ஜன்னலுக்கு கீழே வெளிப்புறத்தில் நிற்பதற்கு இடமே இல்லை என்பது நினைவுக்கு வந்தது.

ஓவியங்கள்..


எரியும் தேகம்..


தலைமுறை..

சொல்வனம்- ஓவியங்கள்

சொல்வனம் இந்த இதழில் திருமலை ராஜன் எழுதிய வெங்கட் சாமிநாதன் பற்றிய கட்டுரைக்கு வரைந்த ஓவியங்கள்..





solvanam.com/?p=14096

Thursday, April 14, 2011

ஜே. எஸ். அனார்கலி எழுதிய கவிதை-ஒரு கடிதம்


ஜே. எஸ். அனார்கலி எழுதிய காலம் கவிதை குறித்து கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் இருந்து வந்த கடிதம்..

காலம்

கதை கேட்டுகொடிருக்கிறது.
விதவிதமான மனிதர்களுடையதும்
விலங்குகளுடையதும்கவியின் பருக்கையில் பசியாறிய பறவையினத்தினுடையதுமான கதைகள்
வளர்மரங்களினுடையதும்
அவற்றிலிருந்து கைவிடப்பட்ட
இலைகளினுடையதும் நகர சந்துகளில்
குத்த வைத்திருக்கும் குல தெய்வங்களினதும்
கதைசொல்லிகளின் கதைகளையும்
கூட
காலம் கேட்டுகொண்டிருக்கிறது.
பார்க்கையில்
காலம்
கதைகளால்
நிரம்பியிருக்கிறது.

அண்மையில் வாசித்த என் மனசில் வேர்பதித்த கவிதைகளை அனார்க்கலி எழுதியிருக்கிறர்.பிரபஞ்சமளாவிய ஆடுகளத்தில் செளிக்கிறது அனார்க்கலியின் கவி மனசு. ஆர்வம் மிக பாராட்டுகிறேன் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Tuesday, April 12, 2011

கிரிக்கெட்: ஒரு கடிதம்


கிரிக்கெட் பற்றிய என் கட்டுரைக்கு நண்பர் அகஸ்டஸ் எழுதிய கடிதம்:

பால்யகால கிரிக்கெட்: இன்றும் கூட இந்தியா வென்றுவிட்டது என்று சொன்னால் நான் அவர்கள் மனம் வருந்தக்கூடாது என்று சற்று சிரிப்பேன். மற்றபடி எனக்கு லியண்டர் பீஸ், மஹேஷ் பூபதி, சானியா மிர்ஸா, அபினவ் பிண்ட்ரா, சமீப குத்துச்சண்டை வீரர்கள் வென்றால் கிடைக்கும் மகிழ்ச்சி/புல்லரிப்பு கிரிக்கெட் வீரர்கள் பெயரில் கிடைப்பதில்லை.ஏனென்று யோசித்தபோது கிடைத்ததிந்த நதிமூலம். நான் அப்போது St. Xaviers High School, Tuticorin ல் படித்துக் கொண்டிருந்தேன். 1979-80. அங்கு football team, volleyball team, strong basket ball team எல்லாம் இருந்தது எனக்குத் தெரியும். Even Navy, NCC, NSS, etc. க்களுக்கு மாணவர்களைச் சேர்க்க அந்த அந்த வாத்தியார்கள் அலைவதைப் பார்த்திருக்கின்றேன். அவர்கள் ஒவ்வொரு வகுப்பறைக்கும் வந்து மாணவர்களை தேர்வு செய்வார்கள். Cricket Team பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். சூசை மாணிக்கம், என் தமிழ் வாத்தியார், முதல் வகுப்பு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். 1 மணிநேரம் சென்றிருக்கும். வகுப்பறை வாசலில் நின்று உட்புறமும் வெளிப்புறமும் பார்த்தபடி பாடம் எடுத்துக்கொண்டிருந்தவர், அய்யா, எல்லாரும் சத்தமின்றி எட்டிபாருங்கள் என்றார். பார்த்தோம். எங்களது சரித்திர வாத்தியார், பெயர் சொன்னால் உங்களுக்கு விஷயம் புரிந்துவிடும், ஒரு கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்தபடி தலை குனிந்தபடி ஸ்கூல் சுவரையொட்டி நடந்தபடி உள்ளேவர, அவர் பின்னே சுமார் 10 மாணவர்கள் தலை குனிந்தபடி வந்துகொண்டிருந்தனர். அத்தனை மாணவர்களூம் சின்னவர்களாக, நன்றாக டெரிகாட்டன் சட்டை டவுசர் போட்டவர்களாக இருந்தனர் (அப்போது தான் டெரிகாட்டன் துணிகள் தூத்துக்குடிக்கு வந்திருந்தன. பாலியெஸ்டர் வரவில்லை) மட்டை, பந்து, பேட் என்று ஒவ்வொருவரும் ஏதேதோ தூக்கியபடி, ஒரு போலித்தனமான துக்கத்துடன் சுவர் ஓரமாக நடந்து ஸ்கூலுக்குள் நுழைந்தனர். ’நேற்றைக்கே தோத்திட்டாங்கடா. காலைலே வந்திருக்கலாம். என்னமோ விளையாண்டு களைச்சமாதிரி இவ்வளவு நேரம் கழிச்சு வந்திருக்கான்வ. வாங்கிட்டுப்போன துட்டை கொஞ்சமாவது செலவு பண்ணனும்னு உடிப்பி ஹொட்டல்லெ காலைலே சாப்பிட்டு வந்திருக்கான்வ (உடுப்பி ஹோட்டல் ஸ்கூல் வாசல்லெ இருந்தது)என்றவர் சட்டென்று கோபத்துடன் நேராக அந்த சரித்திர வாத்தியாரை சுட்டியபடி (எங்களுக்கு மட்டுமே கேட்கும் குரலில்) ஐயா, உன்னைத்தான் கேட்கேன், ஜேம்ஸ், விக்டர், ஜெரொம், கிரியெல்லாம் பாத்தா உனக்கு எப்படித் தோணுது? (இவர்களெல்லாம் என் சக மாணவர்கள். அப்போதே 5 அடிக்கு மேலிருப்பார்கள்) விளையாடமாட்டங்கனான்னா. போய்யா, போ. பேட் உயரம்கூட இல்லை இந்த சிறுசுகள் தான் கிடைச்சதா என்று புலம்பியபடி பாடம் நடத்த ஆரம்பித்தார். சுமார் 3 வருடமாக அந்த சரித்திர வாத்தியார் எங்களுக்கு பாடம் எடுத்திருக்கின்றார். ஒருமுறை கூட cricket என்ற வார்த்தை அவரது வாயிலிருந்து வந்ததில்லை. உயரமான மாணவனை வேறு யாரும் கொத்துமுன் கொத்திக்கொள்ளும் Basketball Master மாதிரியோ, கிட்டத்தட்ட 50 மாணவர்களை மாறி மாறி விளையாடவிட்டு 5 மாணவர்களை வாலிபாலுக்குத் தேர்ந்தெடுக்கும் PT Master Xavier மாதிரியோ இல்லை. மற்ற எல்லா விளையாட்டும் PT Masters கையிலிருக்க, இவர் எப்படி இந்த விளையாட்டை மட்டும் கையிலெடுத்துக்கொண்டார் என்பது எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று. அதுவும் சர்வ வல்லமையுடன், கிரிஸ்தவ பாதிரிகள் ஆட்சி செய்யும், சேவியர்ஸ் ஸ்கூலில்.

அவர் நினைத்திருக்கலாம். என்னுடைய கிரிக்கெட் டீம் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டின் புனிதத்தைக் காப்பற்றுவது அதைவிட முக்கியமானது என்று.

இருக்கலாம். ஆனால் என்னால் அந்த நினைப்பைக் கழற்றிவுட்டு அந்த ஒரு விளையாட்டை மட்டும் பார்க்க முடியவில்லை.

---செல்வக்குமார்(அகஸ்டஸ்)

Friday, April 8, 2011

கிரிக்கெட்: நினைவில் பறக்கும் பந்துகள்


உலகக்கோப்பையை இந்தியா வென்ற நாளின் கொண்டாட்டத்தை என்னால் மறக்கவே முடியாது. அன்று எனது அறைநண்பர் டாக்டர். மணிகண்டனுக்கு பிறந்த நாள். எங்கள் குல வழக்கப்படி ஒவ்வொரு சனிக்கிழமையின் இரவை கொண்டாட்டமாய் அனுபவிப்பது ஒரு சடங்கு போல் மாறிவிட்டது. மணிகண்டனுக்கு புதன்கிழமை தான் பிறந்த நாள். எனினும் எங்கள் சட்ட நிபுணர்கள் கலந்தாலோசித்து அதை சனிக்கிழமை இரவு நாள்மாற்றம் செய்து விட்டார்கள். முநிர்காவில் தமிழர்கள் அதிகம். அதிலும் நான் தங்கியிருக்கும் கட்டிடத்தில் மட்டும் பதினைந்து தமிழ் நண்பர்கள். வெளியிலிருந்து வந்து செல்லும் நண்பர்களை கணக்கிட்டால் தொகை முப்பதை தொடும். அனைவரும் ஒரு சேர ஒரே அறையிலிருந்து சத்தம்போட்டபடி கீழ்வீட்டு காரர்கள் கூரை அவர்கள் தலை மீது விழுந்துவிடும் போல் 'தொம் தொம்மென்று' குதித்துக்கொண்டு மேட்சை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவின் ஒரே அமைதிப்புறாவான ராம் அடிக்கடி 'தடப் தப்பென்று' அமர்ந்திருப்பவர்களின் தலை கால் என்று எல்ல பாகங்களின் மீதும் கால்வைத்து தாவியபடி முன்னேறி டி.வி முன் நின்று இலங்கை வீரர்கள் (குறிப்பாக மலிங்கா!) ஐ பார்த்து 'யார்ரா நீ ..யார்ரா நீ ..' என்று சாத்வீக முறைப்படி கேட்டு சலம்பிக்கொண்டிருந்தான். வெற்றி நிச்சயம் என்ற போதே வெடி சத்தம் வெளியில் கிளம்பி விட்டது. தோனி பந்தை எல்லைக்கு அப்பால் அடித்து மட்டையை சுழற்றியதும் இந்தியா..இந்தியா என்று திடீர் தேசப்பற்று தொற்றிக்கொள்ள உற்சாகம் கரைபுரண்டு ஓடத்துவங்கியது. எத்தனை சந்தோஷம் அன்று இந்தியர்கள் முகங்களில்!

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பிறந்த பெரும்பாலோருக்கு இந்த விளையாட்டு பால்ய நாட்களின் பிரிதகற்ற முடியாத நினைவுகளை தந்து தானிருக்கிறது. பள்ளி நாட்களில் எங்கள் அறந்தாங்கி ஹவுசிங் போர்ட் கிரிக்கெட் போர்டு என்ற நாமம் கொண்டு Atonomous Body அளவுக்கு தனி சுதந்திரம் பெற்று திகழ்ந்த கிரிக்கெட் அணி உள்ளூர் பிரசித்தம். விடுமுறை நாட்களில் வேகாத வெயிலில் நாங்கள் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்டம்பை ஊன்றி விளையாட தொடங்குவோம். பந்து ஜன்னல் வழியாக வந்து விழாத வீடுகள் எனக்கு தெரிந்தவரை இல்லை என்றே சொல்வேன். அரசு ஊழியர் குடியிருப்பு என்பதால் மூடாத சாக்கடைகள் அதிகம். அங்கு விழும் பந்துகளை எந்த கூச்சமும் இல்லாமல் வலது கையாலேயே எடுத்து குடிநீர்க்குழாயில் கழுவி டவுசரில் அழுந்த துடைத்துவிட்டு நாங்கள் விளையாடுவதை கொலைவெறியுடன் பெற்றோர் பெருமக்கள் 'கவனிதுக்கொண்டிருப்பர்கள்'. இது தவிர சாலை வழியாக செல்லும் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் பயந்து பயந்து எங்கள் 'பிட்சை' கடப்பார்கள். "சீக்கிரம் போங்க அண்ணே" என்று சிரித்தபடி சொல்லும் எங்கள் நன்னப்பா கடப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டால் " போடா டேய் சட்டிதலையா " என்று பொறுமை இழந்துவிடுவான். ரோட்டின் நடுவில் ஒரு முனையில் செங்கல்லை ஸ்டெம்ப் போல் அடுக்கி எதிர்முனையில் இருந்து எறியப்படும் பந்துகள் அவர்கள் முதுகிலோ மண்டையிலோ பட்டால் சங்கம் பொறுப்பேற்காது என்று அவர்களுக்கு தெரியும். பந்து எங்கெங்கோ மாயமாய் மறைந்தாலும் எங்கள் மீட்புக்குழு அதை எப்படியேனும் எடுத்துவந்து விளையாடும். எடுக்கவே முடியாத இடங்களில் பந்து சென்று விழும் வரை எங்கள் அப்பழுக்கற்ற கிரிக்கெட் தொடரும்.

விடுமுறை நாட்களில் வருகை புரியும் பையன்களின் எண்ணிக்கையை பொறுத்து இருப்பவர்களை இரு பிரிவாகவோ அல்லது இருப்பதிலேயே சாதுவான பையனை குனியவைத்து அவன் முதுகுக்கு மேல் விரல்களை காட்டி எந்த நம்பர் வரும்போது அவன் யாரை கை காட்டுகிறானோ அதே வரிசைக்கிரமதிலோ விளையாட துவங்க்வோம். கடைசி நம்பர் பையன் பந்து வீசுவான். முதலாமவனுக்கு மட்டை பிடிக்கும் பாக்கியம் கிடைக்கும். பத்தே பத்து கட்டிடங்கள் கொண்ட அந்த சின்ன பிரதேசத்துக்குள் மட்டும் நாங்கள் ஐந்து விளையாட்டு 'மைதானங்களை' பராமரித்து வந்தோம். பம்ப்ரூம் தேவசங்கர் வீட்டு ஜன்னலுக்கு கீழ் நிறைய இடம் இருப்பதால் அந்த சுவற்றில் மூன்று கோடுகளை கரிக்கட்டையில் வரைந்து அதற்கு பத்து தப்படிகள் எதிர்முனையில் ஒரு செங்கல்லை அடையாளத்துக்கு வைத்துவிட்டு (ரன்னர் எண்ட்!) விளையாடுவோம். எங்கள் குழுவின் ஆஸ்தான Off Spinner ஜெகதீஷ் பாபு பெருமுயற்சியுடன் வீசும் சில பந்துகள் அதீத சுழற்சிக்குட்பட்டு சமையலறை ஜன்னல் வழியாக உள்ளே சென்று அங்கு இருக்கும் தட்டில் பட்டு மறுபடியும் சுழன்று கரண்டிகள் மாட்டியிருக்கும் ஸ்டாண்டை கிளீன் போல்டாக்கி கீழே விழும்போது நாங்கள் அவரவர் வீடுகளில் சாவகாசமாய் அமர்ந்து வீட்டுப்பாடம் செய்து கொண்டிருப்போம். அந்த இடத்தில் ஒரு மாபெரும் கிரிக்கெட் போட்டி நிகழ்ந்ததற்கான தடயமே இருக்காது. அதே போல் ஒன்றுக்கொன்று எதிர் எதிராக வளர்ந்திருந்த இரு மரங்களின் இடைவெளியை பிட்சாக்கி ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்துக்கு (அதில் ஸ்டெம்ப் செதுக்கப்பட்டிருக்கும் !) எறிந்து விளையாடுவோம். மேல் நோக்கி அடிக்கபப்டும் பந்துகள் சில சமயம் மரங்களில் மாட்டிக்கொள்ள பீல்டிங் அணியினர் அந்த மரத்தின் கிளைகளைப்பிடித்து உலுக்கி அதகளம் பண்ணி பந்து கீழே விழும்போது பச்சக்கென்று பிடித்துவிடுவார்கள். அதுவரை இப்போதைய 'Review' முடிவு கேட்டு காத்திருக்கும் மட்டையாளர்கள் போல் பரிதவிப்புடன் மேல் நோக்கி பார்த்தபடி நின்றிருப்பார்கள். சில சமயம் பந்து நியூட்டனாவது ஒன்றாவது என்று அலட்சியமாக மாட்டிய திசைக்கு நேரெதிர் திசையில் வேறொரு கிளையிலிருந்து படக்கென கீழே தரையில் விழுந்து விடும். அப்போது களிப்பில் மட்டையாளன் கிரண் மோரேயை கிண்டல் செய்யும் ஜாவிட் மியாண்டட் போல் தவ்விக்குதிப்பான்.

மொகாலி போன்ற ஒரு முக்கிய 'மைதானம்' இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில் இருந்தது. அதன் இடைவெளி சற்று அதிகம். எனவே பெரிய போட்டிகள் அங்கு தான் நடத்தப்பட்டன. அந்த மைதானத்தில் ரெண்டு சிக்கல்கள். ஒன்று லெக் சைடில் சற்று தள்ளி இருந்த ஹவுசிங் போர்டுக்கு தண்ணீர் சப்ளைக்கு முக்கியமான கிணறு. இன்னொன்று விக்கெட் கீப்பருக்கு பின்னால் இருந்த என் சக மாணவி கவிதா வசித்த வீட்டின் பால்கனி. பெரும்பாலும் அந்த பால்கனியில் அவள் பாட்டி அமர்ந்திருப்பாள்.எழுபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும் அந்த பாட்டிக்கு. லெக் சைடில் தூக்கி அடிக்கப்படும் பந்துகள் அந்த கிணற்றில் போய் விழுந்துவிடும். எனவே அந்த கிணற்றில் விழும்படி அடித்தவன் அவுட் என்று அறிவிக்கப்படும். கிணற்றை தாண்டி தான் முருகேசன் வீடு. அவன் வீட்டு காம்பவுண்டை தொட்டால் Four! ஒருவேளை சிக்சர் அடித்தால்? பந்தே திரும்பவராது. முருகேசன் அம்மாவுக்கு இந்த 'கிரிக்கெட் எழவெல்லாம்' ஆகவே ஆகாது. எடுக்கப்போனவன் அர்ச்சனைகளுக்கு ஆளாக நேரும் என்பதால் ஆட்டம் பாதியில் முடிந்து விடும். அல்லது அடுத்த பந்து கிடைத்த பின்பு தொடரும். அந்த கிணற்றில் விழுந்த பந்தை யார் எடுப்பது? அது நல்ல பெரிய கிணறு. அதன் உட்புற சுவற்றில் பெரிய பாறைகள் சற்று இடைவெளியில் அமைக்கப்பட்டு படிகளாக கீழிறங்கும். கிணற்றில் ஒரு ஆமை ஒன்று இருக்கும். அவ்வப்போது அது படிகளில் படுத்து ஓய்வெடுக்கும். ஹவுசிங் போர்ட் பெற்றோர்கள் கண்டிப்பானவர்கள் என்பதால் எங்களில் யாரும் இறங்க மாட்டோம். பக்கத்துக்கு தெருவில் இருந்து வரும் செந்தில் தான் அதை எடுப்பான். படிகளில் அனாயாசமாக இறங்கி கையில் ஒரு நீண்ட கம்பொன்றை வைத்து தண்ணீரின் மேற்பரப்பை அடித்து அடித்து பந்தை தன்னருகில் வரவைத்து எடுத்துவிடுவான். அதை ஒரு சாகசம் போல் பார்த்துக்கொண்டிருப்போம். அவனுக்கு நீச்சல் தெரியும் தான் என்றாலும் அவனை பந்தை எடுக்க நாங்கள் பயன்படுத்திக்கொண்டது இன்னும் ஒரு குற்றவுணர்வாக எங்கள் நினைவுகளில் படிந்திருக்கிறது. இந்த சாகசத்துக்கு பரிசாக சில சலுகைகள் அவனுக்கு கிடைத்தன. ஒப்பனிங் ஓவர் அவன் தான் போடுவான். அவன் சேட்டன் ஷர்மாவின் தீவிர ரசிகன். ஆனால் பந்து வீசுமுறை பேட்ரிக் பேட்டர்சன் (நினைவிருக்கிறதா?) போல் தான் இருக்கும். அவன் போடும் பந்துகள் பேட்ஸ்மேனின் தொப்பியை கழற்றி விட்டு ஒரு முறை பூமியில் பட்டு எழுந்து கவிதா வீட்டு பலகணி வழியாக வீட்டு வரவேற்பறைக்குள் சென்று விடும். ஒருமுறை டி.வி.யில் கிரிக்கெட் ஹைலைட்ஸ் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது போல. எங்கள் சேட்டன் வீசிய பந்து அவர்கள் வீட்டு டி.வியில் பட்டு கீழே விழ, கவிதாவின் பாட்டி பந்து டி.வி.குள்ளிருந்து தான் வெளியே வந்து விட்டது என்று பயந்து அலறி சத்தமிட , 'சங்கம் ஒடனே' கலைக்கப்பட்டு அவனவன் அடுத்த தெருக்களில் தென்பட்ட திசைகளில் ஓடிக்கொண்டிருந்தான்.

அணியின் முக்கிய வீரர்கள் என்றால் நாகராஜ் , அவன் தம்பி தேனிமலை, யோகானந்த் அவன் தம்பி கௌதமன்.. நான் என் தம்பி சிவா என்று ஸ்டீவ் - மார்க் வாவ் சகோதரர்கள் போல் எக்கச்சக்கமாய் இருந்தோம். எனவே எங்கள் டீம் A மற்றும் B என இரு அணிகளாக பிரிக்கப்பட்டது. எங்கள் டீம் பிரசத்தி பெற்றது என்று சொன்னேனே! உண்மையில் சில மேட்சுகளில் ஜெயித்திருந்தாலும் பல மேட்சுகளில் மண்ணைக்கவ்விக்கொண்டு வரும் சிறப்பணி அது. எனவே உள்ளூரில் டோர்னமென்ட் நடத்துபவர்கள் தங்கள் சொந்த அணிக்கு எதிராக லீக் மேட்சுகளில் விளையாட எங்களை தான் அழைப்பார்கள். அப்போது தானே அவர்களால் அடுத்த சுற்றுக்கு போக முடியும். ஒரு முறை நாங்களே டோர்னமென்ட் நடத்த வேண்டும் என்று அரந்தாங்கியின் புகழ்பெற்ற அரசியல்வாதி திருநாவுக்கரசுவிடம் சென்று நிதி வாங்கி போட்டி நடத்தினோம்.அப்போது தான் முதன் முறையாக கிரிக்கெட் பால் வாங்கி விளையாடினோம். அதுவரை ரப்பர் அல்லது டென்னிஸ் பந்துகள் தான். கிரிக்கெட் பால் என்பதால் 'பாதுகாப்புக்கு' அப்டமன் கார்டு , ஹெல்மெட் என்று அமர்க்களப்படுத்தியது இன்னும் நினைவிருக்கிறது. சில சமயம் B டீமில் இருந்து சிலரை சேர்த்துக்கொண்டு நாங்கள் எதிர்கொண்ட மேட்சுகளில் தம்பிகள் அணி தளராமல் விளையாடி ஜெயிக்க வைத்தது மறக்க முடியாதது. சிவா , கௌதமன் , தேனிமலை போன்றோர் எதிரணியின் மலிங்கா மண்டையர்கள் கொலைவெறியோடு வீசும் அதிவேக பந்துகளை எதிர்கொண்டு தரையோடு தரையாக படுத்தபடி பேட்டிங்கில் பின்னியெடுத்து பிழைக்க வைத்தார்கள்.

நாங்கள் விளையாட வெளியிலிருந்து கிடைத்த தொந்தரவுகளை விட அணியின் 'நெஹ்ராக்கள்' பண்ணிய சேட்டைகள் மறக்க முடியாதவை. நாகராஜிடம் சொந்தமான பேட் ஒட்ன்று இருந்தது. அவன் தான் அதை அப்படி அழைத்தானே ஒழிய அது எங்களை பொறுத்தவரை ஆப்பை(அகப்பை) தான். அதை பிடித்துக்கொண்டு அவன் பேட்டிங் செய்தான் என்றால் ஷெர்லக் ஹோம்ஸ் வந்தாலும் ஸ்டெம்ப் இருக்குமிடத்தை கண்டு பிடிக்க முடியாது. எனவே நாகராஜை அவுட் செய்வதென்பது வேர்ல்ட் கப்பில் ஹாட்ரிக் எடுப்பது போல் பெரும் சாதனை தான். அதையும் மீறி பந்து ஸ்டெம்ப் (சுவற்றில் வரையப்பட்ட கரிக்கோடுகள்) மீது மிக துல்லியமாக பட்டாலும் அவன் ஒத்துக்கொள்ளவே மாட்டான். துக்க நாளன்று துலாபாரம் படம் பார்த்தவன் போல் கண்ணீர் அருவியாக ஓட அழுது புலம்பிவிடுவான். பந்து அவன் தலைக்கு மேல் பத்தடி உயரத்தில் பறந்து சுவற்றில் பட்டதாக சொல்லி அவன் நடத்தும் 'சீரியலை' சகிக்காமலேயே நாட் -அவுட் என்று அறிவித்து நொந்து போய் விளையாடுவோம். அதே போல் நன்னப்பன் பேட்டிங் செய்து விட்டு பில்டிங் செய்ய லாங் ஆனுக்கு அனுப்பினால் சில பல நிமிடங்களில் காணாமல் போய் விடுவான். அங்கு தான் அவன் வீடு இருக்கிறது. அவனை அவன் குகையிலேயே சந்தித்து திரும்ப கொண்டு வருவது என்பது இயலாத காரியம். அவன் அம்மா ' கொதிக்கிற வெயில்லே அவனை ஏண்டா விளையாட கூப்புடுறீங்க.. போங்கடா ' என்று விரட்டி விடுவார். 'அவன் இவ்வளவு நேரம் பேட்டிங் செய்தான் அம்மா .. பீல்டிங் செய்யும் முறை வரும்போது இப்படி வீட்டுக்குள் புகுந்து வரமறுப்பது தர்மமாகுமா?' என்று நெடுநேரம் கெஞ்சி அவனை திரும்ப பெறுவதற்குள் மாலை மங்கி விடும். சண்முகவேல் என்றொரு நண்பன் இருந்தான். பெரிய தலைக்கு கீழ் காற்றிலாடும் சட்டையும் தொங்கும் கால்சட்டையும் தான் இருக்கும். அவ்வளவு ஒல்லியாக இருப்பான். ஆனால் காற்றோடு காற்றாக அவன் ஓடிவந்து வீசும் பந்துகள் உய்ரதரமானவை. அறந்தாங்கியின் பெரிய கிரிக்கெட் வீரர்களே அவனை பாராட்டி பேசுவார்கள். அவர்களோடு சேர்ந்து விளையாடவும் செய்தான், சில மேட்சுகளில்.

எப்போதும் ஆச்சர்யங்களுக்கும் சுவாரசியங்களுக்கும் குறைச்சலில்லாத கிரிக்கெட் இடையில் சூதாட்டம் -மேட்ச் பிக்சிங் என்று மலிந்து விட அதன் மீதான ஈர்ப்பு சற்று குறைந்தது என்னவோ உண்மை தான். நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு சவால் விட்டுக்கொண்டு விரல் நகங்களை பல்லுக்கு கொடுத்து பார்த்த பல மேட்சுகள் அரங்கேற்றப்பட்டவை என்ற தகவல்கள் வந்த பின்பு நான் கிரிக்கெட் அவ்வளவாக பார்ப்பதில்லை. சமீப காலமாக குதிரை ஏலம் போல் வீரர்களை விலைக்கு வாங்கி , பணம் கொழித்தவர்கள் நடத்திக்கொள்ளும் ஐ. பி. எல் போட்டிகள் ஏனோ என்னை கவரவில்லை. எனவே சில ஆண்டுகளாக அணியில் யார் விளையாடுகிறார்கள் என்றெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இந்த உலகக்கோப்பையில் முதற்கட்ட மேட்ச் ஒன்றை பார்க்கும்போது டி.வி.யில் கோட் போட்ட படி பிட்சின் நடுவில் நின்று பேசிக்கொண்டிருந்த கங்குலியை பார்த்ததும் ' ஏன்டா தம்பிகளா ..நம்ம தாதா என்ன கோட் போட்டு நிக்கிறான்.. ஒபெனிங் அவன் இல்லையா ? " என்று கேட்டு தொலைத்துவிட்டேன். சற்று நேரம் அமைதி நிலவியது. திரும்பி நம் தமிழ் நண்பர்களின் முகங்களை பார்த்தேன். பல முகங்களில் பளீரென்று எரிந்து கொண்டிருந்தது ... ரத்த வெறி!!

Wednesday, April 6, 2011

இன்னும் சில ஓவியங்கள்..





மேலும் சில ஓவியங்கள்..





உயிர்மையில் சில ஓவியங்கள்

நீண்ட நாட்களுக்குப்பிறகு உயிர்மையில் சில ஓவியங்கள் வரைந்தேன். அ. முத்துலிங்கம் எழுதிய கதை மற்றும் ஒரு மலையாள மொழிபெயர்ப்பு கதைக்கு வரைந்த ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு..







Thursday, March 3, 2011

தோழமையின் தொலைவு


டிசம்பர் குளிரின் ஒரு நாளில் நண்பன் ஒருவனின் மின்மடல் வந்தது. டெல்லி வருவேன். பழைய டெல்லியை சுற்றிப் பார்க்க ஆசை. உன்னால் கூட வர முடியுமா? என்று கேட்டிருந்தான். ஒரு பக்கம் ஆச்சர்யம் ஒரு பக்கம் குற்ற உணர்வு. குற்ற உணர்வுக்கு காரணம் உண்டு. ஏனெனில் நண்பன் இந்த பத்து வருட இடைவெளியில் பெரிய உயரத்துக்கு வந்துவிட்டவன். தொடர்பு கொள்ளும்போதெல்லாம் பிறகு பேசுகிறேன் .. என்ற பதில் தான் வரும். பேசமாட்டான். இத்தனைக்கும் பிரபல பதிவராக இணைய வாசகர்களால் அறியப்பட்டவன்.ஒண்ணுமில்லை சும்மா என்றபடி வெளுத்துவாங்கும் எழுத்துக்கு சொந்தக்காரன். அப்துல்லா. பள்ளியில் எனக்கு ஒரு வருடம் சீனியர். நல்ல பாடகன். நெருங்கிய நண்பர்களில் ஒருவன். இளையராஜா பற்றி நாங்கள் பேசிக்கொண்டதை பக்கம் பக்கமாக எழுதலாம். புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் அவன் வீடு. அரை கிலோமீட்டர் தாண்டி என் வீடு.

எந்த காலத்துக்கும் மறக்க முடியாத படிநடந்த ஒரு சம்பவம் இன்றும் எங்கள் நினைவில் உள்ளது. ப்ளஸ் டூ தேர்வு காலத்தில் நாங்கள் நண்பர்கள் க்ரூப் ஸ்டடி செய்ததெல்லாம் அந்த ரயில்வே ஸ்டேஷனில் தான். எப்போதோ வந்து போகும் ராமேஸ்வரம் , சென்னைக்கு செல்ல சேது என்று ஒரு சில ரயில்களே தலை காட்டும் ஸ்டேஷன் என்பதால் எங்களுக்கு அவ்வளவு கட்டுப்பாடு கிடையாது. புத்தகம் போர்வை சகிதம் சைக்கிள்களில் வந்திறங்கி அதகளம் செய்வோம். படித்ததென்னவோ கொஞ்சம் தான் என்பதை முன்னாள் மாணவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவு நல்ல பையன்கள் நாங்கள். மறக்க முடியாத நாட்கள் அவை. மறு நாள் பரீட்சை என்ற பயமிருந்தாலும் படிப்பை தவிர எல்லா விஷயமும் பேசிக்கொண்டு எதோ கொஞ்சம் படித்துவிட்டு அதிகாலை மூன்று மணிக்கு தூங்கி ஐந்த மணிக்கு விழித்து ஒரு டீயை குடித்துவிட்டு தேர்வெழுதி பாஸான கும்பல். அந்த வயதுக்கே உரிய சேட்டைகள் அதிகம் தான். ரயில் ஏற , வழியனுப்ப வரும் சுமார் ஆண்ட்டிகளையும் சூப்பர் பிகர்களையும் சைட் அடிப்பது எங்கள் முக்கிய அஜென்டாவாக இருந்தது. அதையும் தாண்டி இரவில் வந்து நிற்கும் ரயில்களில் தூக்க கலக்கத்துடன் மஞ்சள் ஒளி ஜன்னல் வழி சைட் கொடுக்கும் இளம் மற்றும் பேரிளம் பெண்களை சைட் அடிப்பது சந்தர்ப்ப அஜென்டா. யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். கையில் புத்தகம் இருக்கும். பார்வை அலை பாயும். ஒரு நள்ளிரவு ரயில் வரும்போது நாங்கள் கும்பலாக மாட்டிக்கொள்வோம் என்று அறிந்திருக்கவில்லை. நாங்களாவது பரவாயில்லை. உண்மையிலேயே சின்சியராக படித்துவிட்டு பிளாட்பாரத்தின் மறு கோடியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்த அப்துல்லாவையும் நிறுத்தி அவனிடம் பேச்சு கொடுத்தவாறு எங்கள் பணியில் ஈடுபட்டிருந்தோம். சிரித்தபடியே வந்தார். அந்த ஸ்டேஷன் போலீஸ் எஸ்.ஐ. கணேசன் (பேரை மறக்க முடியுமா?!) 'பசங்களா வாங்கடா' என்று அன்புடன் அழைத்தார். நாங்களும் எதோ சுவாரசியத்தில் அவரை பின்தொடர அவரோ ஸ்டேஷன் ஊழியர்களில் ஒருவரிடம் ' வித்தவுட் கேஸ் புடிச்சி நாளாயிடுச்சு இல்லே.. இந்தா நம்ம பசங்க தான் இருக்காய்ங்களே' என்று சொல்லிக்கொண்டே கைகளை பின்னால் கட்டியவாறு விரல்களை ஆட்டிக்கொண்டே துள்ளலாக ஸ்டேஷன் (போலீஸ்!) நோக்கி நடந்தார். எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. எதுவுமே புரியாமலே அப்துல்லாவும் எங்கள் கூடவே வந்தான்.

அங்கு போனதும் அவனவன் அழுகிறான். "சார் நான் ஒன்னும் பண்ணலை சார்..", " வீட்டுக்கு தெரிஞ்சா கொன்னுடுவாங்க சார்" போன்ற ஒப்பாரிகள் சற்று நேரத்தில் ஸ்டேஷன் வெளியே நின்டிருந்தவர்கள் செவியை நிறைத்தன. நான் கையிலிருந்த Q & A வை சடாரென பூமியில் போட்டு அங்கிட்டும் இங்கிட்டுமாக அதை தாண்டி என் நியாயத்தை நிறுவிக்கொண்டிருந்தேன். "தயவு செஞ்சு வுட்டுருங்க சார்..இநத பக்கமே வரமாட்டோம்" என்று நான் சொல்லிக்கொண்டே தாண்டிக்கொண்டிருந்தாக சற்று தைரியத்துடன் 'சம்பவத்தை' கவனித்து கொண்டிருந்த வீரர்கள் பின்பு என்னிடம் தெரிவித்தார்கள். இதில் எந்த குற்றமும் செய்யாமல் 'பராசக்தி' சிவாஜி போல் குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருந்த அப்துல்லா 'விசாரணைக்கு' பின் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டு வீடு போய் சேர்ந்து விட்டான். ஒரே களேபரங்களின் முடிவில் எஸ்.ஐ.யின் ஏகவசனம் உருமாறி அறிவுரைகளும் நல்லொழுக்க விதிகளுமாக ஒரு வழியாய் முடிந்தது. ('பின்னதற்கு முன்னது தேவலை' என்று நாங்கள் பிறகு பேசிக்கொண்டோம்.)மறுநாளில் சொல்லிவைத்தாற்போல் எல்லா பயலும் முன்பு மாதிரியே வந்துவிட்டான். வழக்கம் போல் அதே அதகளம்..குதூகலம். முந்தைய இரவின் திகைப்பூட்டும் 'சம்பவம்' மறுநாளே எங்களுக்கு நகைப்பூட்டும் நிகழ்ச்சியாகி விட்டது. வாழ்க்கை தான் அப்போது எவ்வளவு எளிதாய் இருந்தது!

அப்போதே இலக்கியம் இசை சினிமா என்று நானும் அப்துல்லாவும் நிறைய பேசுவோம். கல்லூரி நாட்களில் அவன் சென்னை போய் விட்டான். விடுமுறைக்கு வரும் நாட்களில் நாங்கள் கலீப் நகர் எஸ்.எஸ். டீக்கடையில் உட்கார்ந்து பாடிக்கொண்டிருப்போம். "பூவில் வண்டு கூடும் கண்டு" என்று நான் பாடினால் அப்துல்லா " நீல வான் ஓடையில் " என்று உருகிக்கொண்டிருப்பான். எங்களை யாரும் திட்டவில்லை என்பதே எங்கள் 'இசைத்திறனுக்கு' சாட்சி எனலாம்.உண்மையில் நல்ல குரல்வளம் அவனுக்கு. பின்பு சாந்தகுமார் என்ற ஒரு இசை அமைப்பாளர் இசையில் பாடல் ஒன்று பாடினான் (பெயர் சரிதானே அப்துல்லா?).படம் பொட்டுஅம்மன் என்று நினைக்கிறேன்.

அதற்கு பிறகு அவ்வளவு தொடர்பு இல்லாமல் போய் விட்டது. அவன் கவிதை ஒன்றை விகடனில் படித்து பேசும் ஆர்வத்துடன் நம்பர் வாங்கி தொடர்பு கொண்டால் எடுப்பதே இல்லை. எப்போதோ எடுத்து பேசினாலும் அப்புறம் பேசுகிறேன் என்பான். என்னிடம் சரியாக பேசவில்லை என்பதில் ஒரு வருத்தம். சொல்லப்போனால் கோபம். டெல்லிக்கு அவன் வந்தவுடன் என் வருத்தத்தை தெரிவித்து விட்டேன். வழக்கமான புன்னைகையுடன் " நண்பன் தானே ..புரிஞ்சுக்குவேன்னு நினைச்சேன் " என்றான். என்னிடம் பதில் இல்லை. தமிழக அரசு விருந்தனனாய் இங்குள்ள தமிழ்நாடு மின்சார வாரிய விருந்தினர் மாளிகையின் ஒரு அறையில் தங்கியிருந்த அவன் பாடி பதினைந்து வருடங்களுக்கு பின் கேட்டுக்கொண்டிருந்தேன். மாற்றி மாற்றி பாடிக்கொண்டு எங்கள் பால்யத்துக்கு சற்று பக்கத்தில் போய் வந்தோம்.


அடுத்த நாள் புரானா தில்லி எனப்படும் பழைய டெல்லியை சுற்றிக்கொண்டிருந்தோம். பிரத்யேக மொகலாய அரசு உணவு கிடைக்கும் உலகப்புகழ் பெற்ற கரீம் ஹோட்டலுக்கு சென்று (உண்மையில் அப்துல்லா சொல்லி தான் இநத ஹோட்டலையே நான் தெரிந்துகொண்டேன்!) சிறந்த அசைவ உணவுகளை ருசித்தோம். டெல்லி குளிரின் வீர்யம் தெரியாமல் ஒரு டி-ஷர்டும் மெலிதான அரைக்கை ஜாக்கெட்டும் அணிந்திருந்த அப்துல்லாவுடன் நாங்கள் பழைய டெல்லியின் தெருக்களில் உலா வந்தோம்.

இநத முறை சென்னை சென்றிருந்த போது அவனை சென்று சந்தித்தேன். அப்போது தான் அவன் வேலைப்பளு தெரிந்தது. நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருப்பவன். எனக்காக நேரம் ஒதுக்கி ஸ்டேஷன் வரை வந்து வழியனுப்பினான். கார் ஒட்டிக்கொண்டு வரும்போது வழக்கம் போல் அதே இசை.. "ஒரு குண்டு மணி குலுங்குதடி கண்ணம்மா காதுலே காதுலே" என்று இருவரும் பாடிக்கொண்டு பீச் ரோட்டில் சென்றது ஒரு அனுபவம்.

Sunday, February 27, 2011

ஐந்து பாட்டில் பீரும் அழுக்கடைந்த பாரும்


நாங்கள் ஆறுபேர், எம்.ஸி.ஏவின் கடைசி செமஸ்டர் ப்ராஜெக்ட்டுக்காக கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தோம் அப்போது. ஐந்தாவது செமஸ்டருக்கான மினி புராஜக்ட்டை சீனியர் மாணவன் ஒருவனின் பழைய ப்ராஜெக்ட்டை வைத்து தலைப்பு சம்பந்தப்பட்ட இடங்களை find and replace செய்து அவரவர் பெயர்களில் தனித்தனி ப்ராஜெக்ட்டாக சமர்ப்பித்து தப்பித்திருந்தோம். கடைசி செமஸ்டரில் அப்படி முடியாதாகையால் வேறு வழியின்றி சென்னையில் செய்வதென்று முடிவெடுத்து அவரவர் அப்பாக்கள் வட்டிக்கு வாங்கிய காசுடன் ட்ரஸ்ட்புரம் வந்து சேர்ந்தோம். அந்த இடத்தில் அது புதிய வீடு. கீழ் போர்ஷனில் வீட்டுக்காரரும் அவரது அழகான மனைவியும் சுமாரான அவர்களது மகளும் வசித்தனர். அவள் கல்லூரி மாணவி. ஆனால் இந்தக்கதை அந்த வீட்டைப் பற்றியதோ அவளைப் பற்றியதோ அல்ல.தலைப்பில் குறிப்பிட்டதுபோல் நாங்கள் அவ்வப்போது தாகசாந்தி செய்து கொண்ட பாரைப் பற்றியது தான்.

தங்கியிருந்த மூன்று மாதத்தில் நாங்கள் ப்ராஜெக்ட் செய்த தி.நகர் அலுவலகம் சென்றதை விட இந்த பாருக்கு சென்றது தான் அதிகம். ஆளுக்குத் தகுந்தாற்போல் குவார்ட்டர் அல்லது கட்டிங்குடன் அண்டை பிரேமா காண்டீனில் முட்டை பிரியாணி அல்லது சிக்கன் பிரியாணி அல்லது குஸ்கா சாப்பிடுவோம். லிபர்ட்டி தியேட்டர் செல்லும் வழியில் சாலையின் வலது புறத்தில் உள்ளடங்கினாற் போல் இருந்த ஒயின் ஷாப் அது. அதன் பார் ஒரு மர்மக் குகை. நுழைந்தவுடன் கவுண்டரில் காசு கொடுத்து ஓ.ஸி.யை வாங்க வேண்டியது. எதிர்படும் குடியானவர்களை இடித்துவிடாமல் இடது புறத்திலிருந்து இருட்டான வராந்தாவைக் கடந்து மங்கிய வெளிச்சத்துடன் மிதக்கும் விளக்கொளிப் பகுதிக்குள் நுழைந்தால் அது தான் பார். இடது வலது புறங்களில் கருங்கல் மற்றும் இன்ன பிறவஸ்துகளால் கட்டப்பட்ட பெஞ்சு. பானங்களை வைத்து சாப்பிட அதே கல் மற்றும் இன்ன பிறவற்றால் கட்டப்பட்ட நீளமான மேஜை. எப்போதும் ஒருவிதமான வாசனை மிதந்து கொண்டிருக்கும். பீர், பிராந்தி, ஜின் என்று பலவகை பானங்களுடன் அசைவ வகை உணவுகளின் நெடி நாசியை அடைக்கும். அழுக்கான, ஜன்னல்களே இல்லாத செவ்வக அறைஅது. டேபிளில் கிடக்கும் காலி பாட்டில்களையும் தண்ணீர் பாக்கெட்டுகளையும் அப்புறப்படுத்தி சுத்தமாகத் துடைத்துக் கொடுப்பான் பீட்டர். சின்ன பையன். பதினைந்து தாண்டியிருக்க மாட்டான். எங்களைத் தனியே ஸ்பெஷலாக கவனிப்பவன். எப்போதும் ஒரே பார்வை, ஒரே நடை வேகம். மதுரைப் பக்கம் ஏதோவொரு கிராமத்திலிருந்து வந்தவன் என்றும் வயதான தாயும் ஒரு தங்கையும் உண்டென்றும் ஒரு முறைசொன்னான். அவ்வப்போது ஐந்து பத்து என்று டிப்ஸ் தருவோம்.எங்களுக்கு ரொம்பவும் பிடித்தமான பையன் அவன். அவன் அம்மா ஒரு ஆஸ்த்மா நோயாளி யென்றும் மதுரையில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார் என்றும் சொல்லிருந்தான். கொஞ்சம் திக்குவாய். சரியாகக் காதும் கேட்காது சில சமயங்களில் என்ன சொன்னாலும் என்ன வென்று திரும்பக் கேட்பான். ஆரம்பத்தில் கோபம் வந்தாலும் போகப் போக அவனுக்கு இந்த மாதிரி பிரச்னை இருப்பது தெரிந்ததும் நாங்கள் அவனிடம் ஒட்டுதலாய் இருந்தோம். கார்த்தி அவனுக்கு தெரிந்த டாக்டர் ஒருவரிடம் கூட்டிச் செல்வதாக வந்த நாளிலிருந்து சொல்லிக் கொண்டிருந்தான். பீட்டருக்கு ஓய்வு நேரம் கிடைப்பதே பெரும்பாடாய் இருந்தது. எனவே, இது சாத்தியமில்லாமல் போயிற்று. ஹோட்டல், பார்களில் இவனைப் போன்று பல பையன்களைப் பார்த்திருந்தாலும் இவனின் வேகம், ஒழுங்கு இவற்றை வேறெவனிடமும் கண்டதில்லை. எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாலும் கண்களைச் சுற்றி ஒருவித சோகம் பசையைப் போல் அப்பியிருக்கும். அவனது கிழிந்த உடைகளில் அவனது வாழ்க்கை பரிதாபமாய் படர்ந்திருக்கும்.

நாங்கள் சென்ற பொழுதுகளில் கூட்டம் அதிகம் இருந்ததில்லை. எனவே, குடித்த பின்பு கார்த்தி பொழியும் தத்துவங்கள் ஜனங்களுக்கு பயன்படாமல் காற்றிலேயே கரைந்து விட்டன. ஒரு பீரு விழுங்கியவுடன் அவன் சமீபத்தில் கேள்வியுற்ற ஏதாவது பிரபலமாக அவதாரமெடுத்து விடுவான். ஓரிரண்டு ரவுண்டுகளுக்கு அப்புறம் அவன் தனக்குத் தானே பேச தொடங்கி விடுவதால் தொந்தர வில்லாமல் பிறகு நாங்கள் ஆரம்பிப்போம்.அந்த சமயத்தில் எல்லோரும் ஏதேனும் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருந்தோம். ஆகையால் தண்ணியடித்தால் எங்கள் பேச்சு தத்தமது காதலியைப் பற்றியதாய் தொடங்கும் அல்லது வேறெதிலோ தொடங்கி இதில் முடியும்.ரமணன் ஒருவன் தான் எங்களில் பதிலுக்கு பதில் காதலித்துக் கொண்டிருந்தான். அதாவது இருதலைக் காதல். எஞ்சிய எங்களின் காதலிகள் உள் மனசுக்குத் தெரிந்தவரை தோழிகள் தான். ஆர்வமிகுதியாலும் தன்னம்பிக்கைக் குறைவாலும் அவர்களை காதலிகளாக சித்தரிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் நாங்கள் இருந்தோம்.

எங்களில் சேகர் நல்ல அழகன். ரமணன் அவனுக்கு நேரெதிர். மிகச் சாதாரணமான தோற்றம் கொண்டவன். ஒல்லியாக அறுபதுகளின் இளைஞர்களைப் போன்றஉடலமைப்பு தலைமுடியுடன் இருப்பான். அவனுக்கு ஒரு காதலியும் காதலும் இருப்பது இயற்கையின் விநோதம் என்று தான் நினைத்தோம். அவன் பி.எஸ்.ஸி. ஃபிஸிக்ஸ் படிக்கும் போதிலிருந்தே சின்ன அளவிலான கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றைஅவன் வீட்டு மாடியில் நடத்தி வந்தான். கணிப்பொறி அறிவியலில் எங்களை விட அறிவும் அனுபவமும் கொண்டவன் அவன். ஒருமுறைஎங்கள் வகுப்புத் தோழி நிஷா வீட்டிற்கு சிஸ்டம் ஃபார்மேட் செய்ய என்று போயிருந்தானாம். நிஷாவின் தம்பி தொடங்கி மொத்தக் குடும்பத்தையும் ஒரே நாளில் கவர்ந்து விட்டானாம். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு நிஷாவும் அவனும் காதலிக்கிறார்கள் என்றசெய்தி கேட்டு எங்களுக்கு மயக்கம் வராத குறைதான். எனினும், தோழனாகையால் அவனுக்கு அவன் காதல் விஷயத்தில் நாங்கள் ஆதரவாயிருந்தோம். அவ்வப்போது அவன் அவன் தோற்றத்தைப் பற்றி நாங்கள் கிண்டல் செய்யாமலில்லை. ரமணன் இவற்றை அதிகமாக பொருட் படுத்தமாட்டான்.

அன்று பேச்சு ஒரு வழியாக நிஷாவைப் பற்றி திரும்பியது. சேகர்தான் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாக கிண்டல் செய்பவன். அவள் பற்றிய பேச்சு வந்தவுடன் ரமணன் அமைதியாகி விட்டான். போதையின் உச்சம் நெருங்க நெருங்க காதுகளில் சப்தம் அதிகமாவதையும் பார்வை நிலை கொள்ளாது அலைபாய்வதையும் கடந்து சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் மேஜைக்கு எதிரில் ஒரு வயசானவர் குடித்துக் கொண்டிருந்தார்.நிஷாவின் பெயரைக் குறிப்பிடாமல் ரமணனைக் குறிவைத்து தன் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருந்தான் சேகர். ஆதரவு வேண்டும் கண்களுடன் ரமணன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் ஏமாளிகள் என்றும் எல்லா அழகான பெண்களும் ஏன் அசிங்கமான ஆண்களையே விரும்புகிறார்கள் என்றும் எங்களைக் கேட்காமல் நேராக ரமணனையே கேட்டுக் கொண்டிருந்தான் சேகர். எக்காளச் சிரிப்பு எங்களில் யாரிடம் தோன்றியது என்று தெரியவில்லை.

ரமணன் பெஞ்ச்சை விட்டு தடுமாறி எழுந்தான். வாஷ் பேசின் சென்று காறி துப்பி விட்டு முகத்தைக் கழுவிக் கொண்டு மேஜைக்குத் திரும்பினான். சேகர் இன்னும் சிரிப்பை விடவில்லை.""என்ன ரமணா... உண்மை கசக்குதா?'' என்றான்.ரமணன் முகத்தைச் சுளித்து சிரித்தான்.""நான் உண்மையைச் சொன்னா.... உனக்கு வாந்தியே வந்துடும்....''""என்ன உண்மை... சொல்லு பாப்போம்''எங்களுக்கெல்லாம் வேடிக்கைதான். சூழலை மறந்து விஷயம் எந்த எல்லைக்குப் போகும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் போல் அமைதியாயிருந்தோம்.""சொல்லட்டுமா... சொன்னா இன்னிலேருந்து நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸô இருக்க முடியாது தெரிஞ்சுக்க...''கார்த்தி பொறுமை இழந்தான்.""அப்படி என்ன தாண்டா ஒங்களுக்குள்ள விஷயம்...? சொல்லத் தொலைங்கடா.''ரமணன், சேகரை ஒருமுறை பார்த்து விட்டு புகார் சொல்லும் தோரணையில் எங்களைப் பார்த்து சொன்னான்.""இவன் என்ன பண்ணிருக்கான் தெரியுமா? போன மாசம் செமினார் அப்ப ஏதோ டவுட் கேட்டுருக்கா நிஷா. இவன் பக்கத்துல உக்காந்து சொல்லிக் குடுத்தவன் எந்திருக்கும் போது அவ கன்னத்தைக் கிள்ளிருக்கான். சண்டே ஃப்ரீயா இருந்தா ஏதாவது சினிமா போலாமான்னு கேட்டுருக்கான். நிஷா என்கிட்ட சொல்லி எவ்ளோ அழுதா தெரியுமா?'' கடைசி வார்த்தை முடியுமுன் அருகில் பட்டாசு வெடித்தது போல் சத்தம் கேட்டது. சேகரின் வலுவான கை ரமணனை அறைந்த வேகத்தில் பீட்டர் ஓடி வந்து விட்டான்.""அண்ணே... வேணாம்ணே.... அடிச்சுக்கா தீங்கண்ணே... சேகரண்ணே.... வுடுங்க வுடுங்க பேசிக்கலாம்.''ரமணனுக்கு கோபம் தலைக்கேறியது. எழுந்த வேகத்தில் ஒல்லியான ஆனால் உறுதியான காலால் சேகரின் விலா எலும்பில் மொத்தென்னு உதைத்தான். விஷயம் இந்த எல்லைக்கு வந்து விடுமென்று அறிந்திராத நாங்கள் இருவரையும் தனித்தனியே இழுக்க வேண்டியதாயிற்று. பீட்டர் இருவரின் நடுவில் நின்று கொண்டு என்னவோ தான் தவறு செய்தது போல் கும்பிட்டுக் கொண்டிருந்தான்.



சேகர் ரமணன் மேல் பாய்ந்தான். பீட்டர் அவன் கை பிடித்து இழுத்தான். "வுடுடா டேய்.. அவன கொல்லாம வுட மாட்டேண்டா" என்று எகிறினான் சேகர். நாங்கள் அவனை இழுப்பதற்குள் பீட்டர் அவன் முன்னால் நின்றபடி "வுடுண்ணா..சேகரன்னா சொன்னா கேளு" என்றான். சேகர் ஒரு கணம் அமைதியானவன் போல் நின்று , உடம்பை சற்று பின் தள்ளி , கையை ஓங்கி பளீரென பீட்டர் கன்னத்தில் அறைந்தான். ஒரு நொடி தான். பீட்டரின் கடைவாயில் ரத்தம் துளிர்த்தது. அவன் அசையாமல் நின்றான். சேகருக்கு ரத்தம் பார்த்தவுடன் பதற்றமாகி விட்டது. தான் என்ன செய்தோம் என்பதை தாமதமாய் உணர்ந்தவனாய் , " பீட்டர் .. ஸாரிடா தம்பி ..வேணும்னு அடிக்கலை டா .." என்றான். அவன் உடம்பு முன்னும் பின்னும் ஆடியது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பீட்டர் வாயை துடைத்தவாறு நகர ஆரம்பித்தான். சேகர் பாக்கெட்டில் கை விட்டு ஐம்பது ரூபாய் நோட்டொன்றை பீட்டர் கையில் திணித்தான்.

பீட்டர் அதை பொருட்படுத்தவேயில்லை. கீழே கிடந்த பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு வேகமாய் நடந்தான். கடைசி வரை அவன் கண்ணில் கண்ணீரை பார்த்ததாக நினைவில்லை. நாங்கள் கூப்பிட கூப்பிட காதில் விழாதவன் போல் போய்க்கொண்டே இருந்தான். ரமணனும் சேகரும் ஒருமுறை பரஸ்பரம் பார்த்துகொண்டார்கள்.எதிரில் இருந்த பெரியவர் ஒரு யோகியின் பரிவுடன் எங்களை பார்த்துக்கொண்டே இருந்தார்.

அதற்கடுத்து வந்த இருபது நாட்களில் நாங்கள் கடைசி நாள் மட்டும் அந்த பாருக்குப் போயிருந்தோம். பீட்டரைக் காணவில்லை. அவனைப் பற்றிய தகவலும் யாருக்கும் தெரியவில்லை. உள்ளே மற்றபையன்களுடன் புதியவன் ஒருவன் இருந்தான். பீட்டரை விடச் சின்னவன்.""தம்பி இங்க பீட்டர்ணு ஒரு பையன் இருந்தானே...''""எனக்குத் தெரியாதுங் கண்ணா. என்னண்ணா வேணும்.... மானிட்டரா.... நெப்போலியனா?''.இவனும் அதே பரபரப்புடன் தான் இருந்தான். பிஞ்சு முகத்தில் பெரிய மனுஷன் பாவனை.நாங்கள் அன்று குடிக்கவில்லை. அழுக்கடைந்து இருள் கலந்த அந்த பாரில் எதுவும் குடிக்காமல் ஐம்பது ரூபாய் டிப்ஸ் தந்தவர்களை ஆச்சர்யம் தாளாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

-வடக்கு வாசலில் வெளியான எனது முதல் சிறுகதை..

Saturday, February 26, 2011

சில ஓவியங்கள்..

Survive..



உயிர் வாழ உயிர் மட்டும் போதவில்லை..
- காளிதாஸ்

Monday, February 7, 2011

ஈர நிழல்கள்


சிறுகதை-வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008

கரிய கம்பளிப் போர்வையின் ஒற்றை வட்டத்திட்டாய் உறைந்திருந்த நிலவை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் பிரமோத். குர்கான் நோக்கி செல்லும் சாலையின் ஓரத்தில் அவனது கார் நின்று கொண்டிருந்தது. அதிவேகத்துடன் செல்லும் வாகனங்களின் வெளிச்சங்கள் வேக வேகமாய்க் கடந்து சென்று கொண்டிருந்தன. டிசம்பர் மாதத்துக் குளிர் ஒரு முரட்டுப் பேயைப் போல் உடலை வதைத்துக் கொண்டிருந்தது. அவன் நின்றிருந்த கோலம் நிலவின் அழகில் தன்னை மறந்த ஒரு கவிஞன் போல இருந்திருக்கும், யார் கண்டிருந்தாலும்; அவன் கால்களுக்குக் கீழே, மண்டிய இந்தப் புதர்களில் சாய்ந்து கிடந்த ரத்தம் தோய்ந்த சாக்கு மூட்டையைப் பார்க்காத வரை. கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி நிலவைப் பார்த்தவாறு அசையாமல் நெடுநேரம் நின்றிருந்தான், பிரமோத். நெற்றியில் வேர்வைத்துளிகள் அரும்பியிருந்தன. குளிரின் வீர்யமா அல்லது பதற்றமா ஏதோ வொன்றினால் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தான். திரும்பவும் கீழே கிடந்த மூட்டையை ஒரு முறை பார்த்தான். பல துண்டங்களாக்கப் பட்ட தீபிகாவின் உடலிலிருந்து கசிந்த ரத்தம் அங்கங்கே தோய்ந்து போயிருந்தது. ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான்.

"ஏன் நான் ஷ்யாமாகாந்திடம் பேசக் கூடாது?''

"ஏன் பேசணும்னு நான் கேக்கறேன்... என்ன அவசியம்? அவன் தான் உங்க ஆஃபீஸ் விட்டு மூணு மாசம் முன்னாடியே நின்னுட்டானே? இப்ப என்ன பேச்சு.... ஆஃபீஸ் விஷயமா? என்னை என்ன முட்டாள்னு நினச்சியா...?''

"அது எனக்குத் தெரியாது. அவன் என்னோட ஃப்ரண்ட் அவ்வளவுதான். இதுக்கு மேல பேசினா... நானும் பேசுவேன்''

"என்ன உங்க அக்காளை... சொல்லுடி.... என்ன.. என்ன?''

"ப்ளீஸ் டோண்ட் டாக் ரப்பிஷ்...''

"என்ன பேசிட்டேன் நான்? எதுவுமே கேக்கக் கூடாதா...? என்னைப் பத்தி என்ன சொல்லணும்னே.... சொல்லு... சொல்லு...''

"பகவானே, ஏன் இப்படி தினமும் என்ன சித்ரவதை பண்ற பிரமோத்... நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறே... டோண்ட் யூ லவ் மி? டு யூ திங்க் ஐம் நாட் லவிங் யூ... டு யூ ஸஸ்பெக்ட் மீ?''

பிரமோத் அவளை மிகவும் விரும்பினான். தீபிகா பீஹாரைச் சேர்ந்தவள். இவன் உத்திரப் பிரதேசத்துக் காரன். டெல்லிலேயே பிறந்து வளர்ந்தவன். NIIT படிக்கும்போது தீபிகாவைக் காதலித்தான். பின்பு நான்கு வருடங்களுக்கு பிறகு இரு வீட்டாரையும் சம்மதிக்க வைத்து விமரிசையாகக் கல்யாணம் செய்து கொண்டான். தேன் நிலவுக்கு ஜெர்மனி சென்று வந்தான். தீபிகாவைத் திளைக்கத் திளைக்கக் காதலித்தான். அவளும் தான். கல்யாணம் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகும் அவர்களின் அந்யோன்யம் இருவரின் நண்பர்களையும் பொறாமைப் பட வைக்கும். எல்லாம் தீபிகா ஒரு எம்என்ஸியில் சேர்ந்தது வரைக்கும் தான். அது ஒரு அமெரிக்கன் கம்பெனி. நைட் ஷிஃப்ட், ஈவ்னிங் ஷிஃப்ட் என்று தீபிகா முன்பை விடவும் பரபரப்பாகிப் போனாள். ஹார்டுவேர் நெட்வொர்கிங் கம்பெனியொன்றை சொந்தமாக நடத்தி வந்தான் பிரமோத். சனி, ஞாயிறு தவிர அவளை சந்திப்பதே அபூர்வமாகிப் போனது இவனுக்கு. சில சமயம் அலுவலக பார்ட்டி, அவுட்டிங் என்று சனி, ஞாயிறுகளிலும் வெளியே செல்ல ஆரம்பித்தாள் தீபிகா.

கல்யாணம் ஆவதற்கு முன்பு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தவள் தான். எனினும், தன் வருமானம் இருவருக்கும் தாராளமாய் இருக்கும் என்பதனால், இவளை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி விட்டான். அப்போதெல்லாம் இருவரும் சுற்றாத இடங்களே கிடையாது, டெல்லியில். அதெல்லாம் திரும்ப வராத கணங்கள். தொழிலில் கொஞ்சம் அடிவாங்கியிருந்த சமயத்தில் அவள் அப்ளை செய்திருந்த வேலை கிடைத்து விட வேறு வழியின்றி அவனும் சம்மதித்தான். நான்கைந்து மாதங்களில் அவளின் கனத்த சம்பளம் அங்கங்கு வாங்கியிருந்த கடன்களை அடைக்கப் போதுமானதாக இருந்தது. பிரமோத் சற்று ஆசுவாசமாய் உணர ஆரம்பித்தான்.

அவள் வேலைக்கு சேர்ந்து நான்காவது மாதத்தில் ஷ்யாமாகாந்த் வந்து சேர்ந்தான். நேர்த்தியான உடலமைப்பும், வசீகரமான கண்களுமாய் அலுவலக பெண்களின் அன்புக்குரியவனாய் ஆனான். எல்லோருக்குமே நண்பனாய் தான் நடந்து கொண்டான். பால் வித்தியாசங்கள் துடைத்தகற்றப்பட்ட ஆடஞ க்களின் சகஜமான அலுவலக தோழனாய் தான் முதலில் பிரமோத் கண்களுக்குத் தெரிந்தான். அவ்வப்போது வீட்டுக்கு வருவான், மிக அரிதான சந்தர்ப்பங்களில் இருவருக்கும் ஃபோன் செய்து பேசுவான். ஆரம்பத்தில் சகஜமானதாகக் கருதப்பட்ட அவர்களது நட்பு ஒரு கட்டத்தில் உறுத்தத் தொடங்கியது பிரமோதுக்கு. சில சமயம் ஒரு மணிக்கணக்கில் அவனுடன் பேசிக் கொண்டிருப்பாள் தீபிகா. அவனுடன் பேசும் சமயங்களில் அவள் குரலின் குழைவு, பிரமோதுக்கு மிகக் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தத் தொடங்கின.

காதலிக்கும் காலத்தில் இவனிடம் பேசிய குரலின் அதே குழைவு. நண்பர்களிடம் இத்தனை அந்நியோன்யமாக சிரித்துப் பேச என்ன விஷயமிருக்க முடியும்? பிரமோதின் யோசனைகளுக்கு மிக மோசமான பதில் கிடைக்கத் தொடங்கின. போதாக் குறைக்கு ஆஃபீஸ் டூர் சென்றிருந்த இடத்தில் அவன் தோள் மேல் இவள் கை போட்டு சிரிக்கும் புகைப்படம் ஒன்றை இவளது கம்ப்யூட்டரின் மறைக்கப்பட்ட ஃபோல்டரில் கண்டதில் இருந்து அமைதியிழக்க ஆரம்பித்தான். பிரமோத் கேட்கும் எந்த மாதிரியான கேள்விகளுக்கும் அவளிடம் தகுந்த பதில் இருந்தது. எல்லாவற்றிலும் லாஜிக் சரியாக இருந்தது. அதுதான் தீபிகாவின் பலம்; அவள் ப்ரொக்ராமிங் வேகத்தின் பின்புலம் இப்போது இவனைத் வதைக்கத் துவங்கியது. இடையில் நொய்டாவில் வேலை கிடைத்து ஷ்யாமாகாந்த் சென்று விட்டான். ஆனாலும், முன்பைப் போலவே சனி, ஞாயிறுகளில் இவன் வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சகஜமாய் வந்து போவதையும், நேரங்கெட்ட நேரத்தில் செல்போனுக்கு அழைத்து "அலுவலக விஷயங்கள்' பேசுவதையும் சுலபத்தில் புறந்தள்ள முடியாது. அதை மீறிய ஏதோவொன்று அவர்களுக்கிடையில் இருக்கிறதென்று தவிக்க ஆரம்பித்தான் பிரமோத்.

அன்று இரவு 11 மணிக்குபோன் செய்திருந்தான் ஷ்யாமாகாந்த். இடையிடையே அட்டகாசமான சிரிப்பும், உரிமை கலந்த அந்நியோன்யமுமாய் தீபிகா நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். டிவியை பார்த்தவாறே இவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான் பிரமோத். மறுமுனையில் ஏதோ அவன் கேட்டதற்கு பதிலாய் என்ன சொல்வ தென்றே யோசனையில் சற்று சங்கோஜமாய் சிரித்தவாறு "அப்புறம் பேசறேன்.... கண்டிப்பா அப்புறம் சொல்றேன்... பை'' என்று மொபைலை ஆஃப் செய்தாள். சிரிப்பின் மிச்சம் உதட்டில் இருக்க, இவனையும் ஒருமுறை ஓரக்கண்ணால் பார்த்தபடி, எழுந்து பாத்ரூமுக்கு சென்றாள். பிறகு தான் பார்த்தான், அவள் மொபைல் ஃபோன் அங்கு இல்லை. அப்படியெனில், பாத்ரூமுக்கு எடுத்து சென்று ரகசியம் பேசுகிறாளா? தேவடியாள்... என்ன கொழுப்பு இருக்கும். வெளியில் வரட்டும் என்று காத்திருந்தான்.

"தீபிகா... பாத்ரூமுக்குள்ளே போய் யார்கிட்ட போன்ல பேசிக்கிட்டிருந்த...?'' இவன் சிரித்தபடிதான் கேட்டான். அவளின் சற்றே வெளிறிய முகத்தில் திடீர்ப்புன்னகை மலர்ந்தது.

"ஏதோ யோசனையில மொபைலையும் எடுத்துக்கிட்டு போய்ட்டேன். பாரு பிரமோத்... என்ன ஒரு யந்திர வாழ்க்கை..?''

"போதும் நிறுத்து... நீ அவன் கிட்ட தானே பேசப் போனே... உண்மையைச் சொல்லு தேவடியாள் மகளே....?''

அவளின் லாஜிக் அன்று எடுபடவில்லை.

"ஐ டோன்ட் லவ் யூ... பிட்ச்...'' என்று நெஞ்சில் ஒரு உதை உதைத்தான். அப்படியே கட்டிலில் சாய்ந்தாள், மேல் ஏறி கழுத்தை அவள் தலை தொங்கும் வரை நெரித்தான். பிறகு கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து பலங்கொண்ட மட்டும் பாகம் பாகமாய் வெட்டினான்.



இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத் தான் பிரமோத். அதிகாலை மூன்றரை மணி ஆகி இருந்தது. யாரும் பார்த்து விடுவார்களோ என்று திரும்பிப் பார்த்துக் கொண்டான். வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தது. மூட்டையை இங்கே விட்டு விட்டு செல்வதா... வேறெங்கும் கொண்டு போவதா... என்ற யோசனை வந்தது. விடிவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஒரு முறை குனிந்து அந்த மூட்டையைத் தொட்டான். தீபிகாவின் ரத்தம் பிசுபிசுத்துக் கையில் ஒட்டியது. திடீரென்று ஏதோ பேச்சுக்குரல் கேட்பது போல தோன்றியது. அருகில் இருந்த புதரின் மறைவில் சாக்கு மூட்டையை உருட்டித் தள்ளி தானும் அதன்பின் மறைந்து கொண்டான். குரல்கள் நெடுங்கி வருவது போல தோன்றியது. பரிச்சயமான குரல்கள். மெள்ள எழுந்து குரலின் திசையில் பார்த்தான்.

"ரொம்ப பயமாருக்கு... சீக்கிரம் மூட்டையை இறக்கு...''

"இரு.. இரு... இதோ முடிஞ்சாச்சு...''

அந்த இருளில் கரிய நிழல்கள் போல் ஒரு மூட்டையை ஆளுக்கொரு பக்கமாய் சுமந்து வந்த இருவரும், சற்று சிரமப்பட்டு அதை இறக்கினர்.

பிரமோத் பிரமை பிடித்தவன் போல் நின்றிருந்தான். அந்த இருளிலும் அவர்கள் யாரென அடையாளம் கண்டு கொண்டு விட்டான். தீபிகாவும், ஷ்யாமாகாந்த்தும்.

"ஆனாலும்... பிரமோதை நீ கொன்னிருக்க வேண்டாம் ஷ்யாமா... என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டான்... பாவம்...'' தீபிகாவின் குரலில் லேசான நடுக்கம் தெரிந்தது.

பிரமோத் குனிந்து மூட்டையைப் பார்த்தான். சரியாகக் கட்டப்படாத அதன் ஒரு முனையில் ரத்தம் தோய்ந்த தலை தெரிந்தது.

மணி இரவு பனிரெண்டை தொட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பிரமோத் புரண்டு படுத்தான். ஈவ்னிங் ஷிஃப்ட் முடிந்து திரும்பும் கேபில் அமர்ந்திருந்த தீபிகா ஒரு சிக்னலில்
நின்றதும் விழித்துக் கொண்டாள்.

Wednesday, February 2, 2011

சொல்வனம் இந்த இதழில்..

சொல்வனம் இந்த இதழில் நிறைய கட்டுரைகள் சிறப்பாக வந்திருக்கின்றன. நண்பர் சேதுபதி எழுதிய மறைந்த இசைமேதை பீம்சென் ஜோஷி பற்றிய கட்டுரையும் இசை பற்றி நிறைய எழுதிவரும் சுரேஷின் இசையமைப்பாளர் கே.வி.எம் பற்றிய கட்டுரையும் அருமை. ஜெயமோகனும் இதை குறிப்பிட்டிருக்கிறார். என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு கட்டுரை ..மதியழகன் சுப்பையா எழுதிய 'ஆடுகளம்' பற்றிய பார்வை அபாரம். அதே சமயத்தில் நண்பர் சுரேஷ் கண்ணன் இந்த படத்தை முக்கிய படம் என்று பாராட்டி இருப்பதை என்னால் நம்பவும் ஏற்கவும் முடியவில்லை.

களவாணி படம் வந்து ஒரு 'சரித்திரம்' படைத்தபோது நான் சொல்வனத்தில் எழுதிய கட்டுரையில் இந்த யதார்த்த போக்கை விமர்சித்திருந்தேன். நம் இயக்குனர்கள் 'யதார்த்தம்' என்ற பெயரில் செய்துவரும் அசட்டு தனங்களையும் அதன்மூலம் நிகழும் நிகழ இருக்கும் ஆபத்துகளையும் சுப்பையா சிறப்பாகவே சொல்லி இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.

Monday, January 31, 2011

தனிமையின் துணை



தனிமைத்துயர், இறந்தகால கசப்புகளின் நிழல் படிந்து கறையான நினைவுகள் தரும் அழுத்தம் என்று அழலும் மனிதர்களின் வாழ்க்கை இலக்கியங்களிலும் சினிமாவிலும் பதிவாவதுண்டு. அவற்றை காண , படிக்க நேர்கையில் மனம் அழுந்தப்பட்டு உணர்வின் வெளியீடு கண்ணீராகி விடும். அப்படி என்னை சமீபத்தில் கண்ணீர் விட வைத்த படம் ' Into Temptation'. சிறந்த இயல்பான நடிப்பு, ஒரு வலை போல் இழைக்கப்பட்ட திரைக்கதை, சாகசங்களற்ற எளிய கதை சொல்லும் விதம் என்று நம் சினிமாக்களின் தொடும் தூரத்தை விட வெகு தொலைவில் உள்ள இப்படத்தை எனக்கு அறிமுகம் செய்த நண்பன் ஓவியன் விஜயராகவனுக்கு நன்றி. (நம்மூரில் கோழிச்சண்டை பிரதான களம் என்று விட்டு லும்பன்களின் தகராறுகளை வரலாறாக்கி சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நமக்கு அதுவே பெரிய சாதனையாக தோன்றுகிறது. யதார்த்தம். இந்த வார்த்தையை கண்டுபிடித்த மகானை தேடிக்கொண்டிருக்கிறேன். )



பாவமன்னிப்பு கோரி வரும் மனிதர்களின் குறைகளை கேட்டு ஆறுதல் வார்த்தைகளை தரும் இளம்பாதிரியாரிடம் ஒரு இளம் விலைமாது கேட்கும் பாவ மன்னிப்பு அவரை உலுக்குகிறது. தன பிறந்த நாளன்று தற்கொலை செய்யப்போவதாக சொல்லும் அவள் தனது முதல் பாவமாக சொல்லும் வார்த்தைகள் இதயத்தை கனக்க செய்கின்றன. அவளின் பனிரெண்டாவது வயதிலிருந்து அவளிடம் வல்லுறவு கொண்டிருக்கிறான் அவளது வளர்ப்புதந்தை . தனது பதிமூன்றாவது வயதிலிருந்து அதை விரும்ப துவங்குகிறாள் அவள். அவ்வளவு தான். அந்த பெண் எழுந்து சென்று விடுகிறாள். குறை கேட்கும் அறையின் சிறிய ஓட்டை வழியாக தெரியும் அவளது மார்புகளும் தொங்கும் சிலவையும் மட்டும் பாதிரியாரின் கண்ணில் படுகின்றன. விதிமுறைகளையும் மீறி அந்த பெண் யாரென்று தேடி அலைகிறார் அவர் அவளை காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் . அவள் ஒரு விலைமாது என்பதால் பக்கத்தில் இருக்கும் சிவப்பு விளக்கு பகுதிகளில் அந்த பெண் பற்றிய தகவல் கிடைக்குமா என்று தேடி திரியும் அவரை அந்த சர்ச்சுக்கு வரும் 'பக்தர்கள்' சந்தேக கண்ணோடு பார்க்கிறார்கள். கடைசியில் அவள் என்னவானாள் என்று நம்மையே யூகிக்கும்படி விட்டிருப்பது தான் இயக்குனரின் பலம்.


மிக சாதாரண ஒரு துப்பறியும் கதை போன்ற கதையோட்டதிலேயே செல்லும், படம் அதன் வீர்யமான காட்சிகள் மற்றும் தத்ரூபமான நடிப்பால் மிக சிறந்த அந்தஸ்தை பெற்று விடுகிறது. தன்னை அறியா வயதில் சீரழித்த தன் வளர்ப்பு தந்தையை , தான் தற்கொலை செய்து கொள்வதற்குமுன் சென்று சந்திக்கும் காட்சி, உலக சினிமாவின் உன்னத காட்சிகளில் ஒன்று. மரணப்படுக்கையில் இருக்கும் அவன் தன் வளர்ப்பு மகள் தன்னை எதுவும் செய்து விடுவாளோ என்று பதறி ' உனக்கு என்ன வேண்டும் ?' என்று திரும்பத்திரும்ப கேட்டுகொண்டே இருக்கிறான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். 'என்னை நீ முதன் முதலில் தொட்ட போது எனக்கு வயது பனிரெண்டு ..' என்று அவள் சொல்லும்போது வரும் பதற்றம் ..நம் மாகனுபாவர்கள் தலைகீழாய் நின்றாலும் கொண்டுவரமுடியாத பதற்றம். "இத்தனை வருடங்களுக்கு பிறகு உன்னிடம் நான் சொல்ல விரும்புவது இது தான் டொனால்ட் ..நான் உன்னை மன்னித்து விட்டேன். You are forgiven" என்று சொல்லி விட்டு வெளியேறும் அவளை பார்த்துக்கொண்டே இருக்கிறான், அந்த வளர்ப்பு தந்தை. படத்தின் முழுவதும் உயிரோட்டமான ஒளிப்பதிவும் மெல்லிய சோகத்துடன் தொடரும் இசையும் அருமை. ஒரு புறம் பாதிரியார் தனக்கு நம்பிக்கை உள்ள ஆளை துணைக்கு வைத்துக்கொண்டு சிவப்பு விளக்கு பகுதிகளில் லிண்டாவை தேடிக்கொண்டிருக்கிறார். மறுபுறம் அவள் ஒரு பாலத்தில் நின்று கொண்டு கீழே குதிக்க தயாராகும் போது முன்பு ஒரு Homeless அங்கு வருகிறார். அவளிடம் ஏதும் பணம் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே முன்னே வரும் அவரிடம் லிண்டா தன் கைப்பையை திறந்து தன்னிடம் எதுவும் இல்லை என்று காட்டுகிறாள். அருகில் வரும் அந்த மனிதன் ஒரு ஜெபமாலையை அவளுக்கு தருகிறான். நெகிழும் அவள் இன்று தனக்கு பிறந்த நாள் என்று சொல்ல அவர் அவளை அன்புடன் அணைத்துக்கொள்கிறார். தனிமையின் துணையும் தனிமை தானே. அந்த காட்சியை கண்ணில் திரளும் நீர் மறைக்காமல் யாராலும் பார்த்துவிட முடியாது. அந்த ஜெபமாலை கூட முன்பு ஒரு முறை பாதிரியார் அந்த பக்கம் வரும்போது அந்த பிச்சைக்காரருக்கு பரிசாக தந்தது. பிறகு வரும் காட்சியில் அவள் குதிக்க இருந்த பாலம் கீழிருந்து காட்டப்படுகிறது. சரியான விலாசத்தை அந்த கணத்தில் அடையும் பாதிரியாருக்கு அவள் விட்டு சென்ற அவள் புகைப்படம் மட்டும் கிடைக்கிறது. அவள் பத்து வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. கண்ணீருடன் அவளுக்கு பாவ மன்னிப்பு தருகிறார். உண்மையில் அவள் வீடு திரும்பவில்லை என்றாலும் அவள் இறந்திருக்கக்கூடாது என்று மட்டும் நம் மனம் பதை பதைக்கிறது. அது தான் இந்த படத்தை பற்றி நினைக்கையில் என்னை எப்போதும் பதற்றம் கொள்ள வைக்கிறது. கலையின் வெற்றி இது தானே.

அவளை பற்றி அவளது வாடிக்கையாளர் சொல்லும் செய்தி அவள் தன் வேலையில் மிக சிறந்தவள். அவளிடம் உச்சகட்ட சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். அது தான் அவளது ஸ்பெஷல். ஆனால் அவளால் தன் பால்யத்தில் தன் வளர்ப்பு தந்தையாலே கற்பிழந்ததை மட்டும் தாள முடியவில்லை. அது அவளின் வாழ்நாள் முழுதும் வதைதுக்கொண்டே இருக்கிறது. மனதை கனக்க செய்யும் முடிவுடன் நிறைவடையும் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே இருக்கிறேன். மனிதர்களின் உணர்வுகளை , வாழ்க்கையை படமாக்க கற்றுக்கொண்ட மேதைகளின் படைப்புகளை நம்மூரில் இந்த ஜென்மத்தில் எதிர்பார்க்க முடியாது. நண்பர்களுக்கு இந்த படத்தை பரிந்துரை செய்கிறேன்.

Monday, January 24, 2011

ஓவியங்கள்...


Wild Wings..

Birth in Fire..

Deadly dried..

Thursday, January 20, 2011

பொன்னியின் செல்வன் திரையாக்கம் உண்மையெனில்..


வரலாற்றுப்படம் என்று தமிழில் வந்த படம் என்று பார்த்தால் பெரியார் திரைப்படம் கடைசி என்றாகிறது. அதிலும் அரசர் கால திரைப்படங்கள் தமிழில் வந்து வெகுகாலமாகிறது.செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் சோழர்-பாண்டியர் வரலாற்றை சொல்ல முயன்றது. சமீப காலமாக இணையத்தில் பரவலாக வெளிவரும் சந்தோஷமூட்டும் தகவல் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைப்படமாக தயாராகிறது என்பது. மணிரத்னம் என் ஆதர்சமான ஜெயமோகனுடன் இணைந்து திரையாக்க முயற்சிகள் செய்து வருகிறார் என்ற தகவல் ஒரு புறம்; நீண்ட நாட்களுக்கு பிறகு மணியுடன் இணைந்து இளையராஜா இந்த திரைப்படத்துக்கு இசை அமைக்கவிருக்கிறார் என்ற தகவல் ஒருபுறம் என்று தமிழ் சினிமா ரசிகனின் தாகத்தை தீர்க்கும் தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. எத்தனை உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் இந்த தகவல்கள் நம் மனதில் ஏற்படுத்தும் கற்பனை என்னவோ அலாதி தான். இலக்கிய வாசகர் யாருமே பொன்னியின் செல்வனை படிக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. சில காட்சிகள் திரும்ப திரும்ப வருகின்றன என்றாலும் பொன்னியின் செல்வன் திரைக்கான படைப்பே என்று தோன்றுகிறது. படம் எடுக்க்கப்படுவது உண்மை எனில் ஒரு கடைக்கோடி ரசிகனாக எனது எளிய ஆசைகள்:

பெரும் பொருட்செலவு தேவைப்படும் படம் என்பதால் காசு பற்றி கவலை இல்லாத தயாரிப்பாளர் தான் தேவை. இன்றைய காலகட்டத்தில் MGM ஏ கடனில் ஓடினாலும் பெரிய அளவில் முதலீடு செய்ய தகுதி உள்ள ஒரே நிறுவனம் 'சன்' என்பதால் அது மிக பொருத்தமான விஷயம் தான். எனினும் ஒரு பாடலுக்காக வெளிநாடு , ஒரு டான்ஸ் ஸ்டெப்புக்காக பல்வேறு கோணங்களில் படப்பிடிப்பு என்று பம்மாத்து செய்யாமல் கதைக்கு தேவைப்படும் செலவை எந்த தடங்கலும் இல்லாமல் செய்ய தயாரிப்பு நிறுவனம் தயாராக இருக்கவேண்டும். அப்போது தான் செட், ஆடை அலங்காரம், துணை நடிகர்கள், தொழில்நுட்ப துணை என்று ஒரு சிறந்த அஸ்திவாரத்தை தயார் செய்யமுடியும்.

நம்மவர்கள் எந்த காலத்திலும் கவனம் செலுத்தாத துறையான casting இல் முழு கவனம் செலுத்த வேண்டும். தென்னிந்திய நடிகர்களில் சிறந்தவர்களையும் தொலைக்காட்சி தொடர்களில் மின்னும் நல்ல நடிகர்களையும் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். வந்தியத்தேவனாக சந்தேகமில்லாமல் விக்ரம், மிக சரியான தேர்வு. கமல், சரத்குமார், மம்மூட்டி, மோகன்லால், நாகர்ஜுன் , சத்யராஜ் போன்ற நடிகர்கள் வரலாற்று படங்களுக்கு தகுதியானவர்கள். தவிர கூத்துப்பட்டறை போன்ற தியேட்டர் நவீன நாடகங்களில் தேர்ந்த நடிகர்கள் பெரும் பலமாய் இருப்பார்கள். முக்கிய பாத்திரமான நந்தினிக்கு தயவு செய்து ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்து விட வேண்டாம். (இந்த கதாபாத்திர 'இன்ஸ்பிரேஷனில்' தான் படையப்பா நீலாம்பரி உருவானார் என்று கேள்விப்பட்டதுண்டு. ) நம்பியார் போன்ற மூத்த கலைஞர்கள் சிலரை இழந்தும் விட்டோம்.
கமல் தன மூக்கை நுழைக்காமல் இயக்குனர் சொல்வதை (மட்டும்) கேட்டு நடித்தால் சந்தோஷம். அவர் தான் பொ. செல்வனை தொலைகாட்சி தொடராக தயாரிக்க திட்டமிட்டார் என்று தொன்னூறுகளில் படித்த நினைவு. அதே போல் எம்.ஜி.ஆர். இயக்குனர் மகேந்திரனை இதற்கான திரைக்கதையை எழுத பணித்திருந்தார் என்றும் கேள்விப்பட்டதுண்டு. பலரால் முடியாத பெருங்கனவு இது என்பதால் மிக சிறப்பான முயற்சி அவசியம்.

தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் நம்மவர்கள் கரைகண்டவர்கள் என்பதால் கவலை வேண்டியதில்லை. பி.சி. ஸ்ரீராம் தலைமையில் ஒரு பெரும்பட்டாளமே இருக்கிறது ஒளிப்பதிவுக்கு. குறைந்தது மூன்று சிறந்த ஒளிப்பதிவாளர்கள் தேவை.
சமீபத்தில் இளையராஜா நடித்த (!) விளம்பரத்துக்கான ஸ்ரீராமின் ஒளிப்பதிவு அபாரம். அது போன்ற ஒளியமைப்பு படத்துக்கு மிக சிறப்பாக பொருந்தும் என்று தோன்றுகிறது. கலை இயக்குனர்களின் பங்கு மிகவும் முக்கியம் என்பதால் அந்த துறையிலும் சிறந்த கலை இயக்குனர்கள் குறைந்தது மூன்று பேராவது தேவை. அதே போல் கதை நடக்கும் காலகட்டத்தை திரையில் கொண்டு வர CG மிகவும் முக்கியம். 300 படம் ஒரு சிறந்த உதாரணம். பல சவாலான காட்சிகளை வெற்றிகரமாய் கடந்து செல்ல பெரும் துணை எல்லாம் வல்ல CGயே!

ராஜா இந்த படத்துக்கு இசை அமைப்பது மிகவும் பொருந்தும் என்று ரசிகர்கள் பலரும் கருதுகிறார்கள். அவரால் நம் முன்னோர் வாழ்வை இசையால் சிறப்பாக முன்னிறுத்த முடியும். என்றாலும் ராஜா இந்த படத்தை மிக முக்கியத்துவத்துடன் அணுகவேண்டும். பெரிய இசை ஆராய்ச்சியே தேவையாய் இருக்கும். பண்டைய தமிழக இசைக்கருவிகள் சிறந்த குரல்கள் தவிர புராதனத்தை நினைவுபடுத்தும் பாடல் வரிகள் என்று தேவை இருப்பதால் வைரமுத்து இணைந்தால் பெரும்பலமாய் இருக்கும். ராஜா மனசு வைக்க வேண்டும்.

மிக முக்கியமாக மணிரத்னம் தனது வெற்று க்ளிஷேக்களை தூர எறிந்துவிட வேண்டும். ரெண்டு கதாபாத்திரங்கள் தொடர்பின்றி பேசிக்கொண்டிருக்க அவர்களை காமெரா சுற்றி சுற்றி நமக்கு மயக்கம் வரவைக்கும் அபத்த காட்சியமைப்பை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்கள் எல்லோரும் துள்ளி துள்ளி ஆடிக்கொண்டே கதாநாயகனை தொடர்ந்து ஓடும் காமெடிகள் வேண்டாம். தயவு செய்து ஹஸ்கி வாய்சில் கதாபாத்திரங்கள் முனகுவது வேண்டவே வேண்டாம். ஜெயமோகன் சார்.. நீங்கள் தான் நல்ல வசனங்களை எழுத முடியும். 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ' என்ற நெடும் (!) வசனத்தை மணி 'எப்.. இப்' என்று சுருக்கி விடுவார். விடாதீர்கள்.

மொத்தத்தில் இந்த கற்பனைகள் உண்மையாகி ஒரு சிறந்த தமிழ் படம் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... நடக்குமா?

Sunday, January 9, 2011

மௌனக்கடவுளின் முதல் வார்த்தை..


கவிதைகளை அவற்றின் திசையின் காற்றில் பறந்து நெய்யும் கவிஞர்கள் அபூர்வம். வார்த்தைகளை வெறுமே மடித்தும் கோர்த்தும் பாவனை செய்யாமல் எழுதப்படுபவை அகஸ்டசின் கவிதைகள். அவரது கவிதைப்படிகளில் ஏறும்போது தென்படும் படிமங்களை உள்வாங்கிக்கொண்டு இறுதியில் கவிதையின் உச்சவரிகளின் மேல் ஏறி நின்று பார்க்கும் போது கிடைக்கும் சப்தமற்ற பிரமாண்டம் பிரமிக்கவைக்கும். தாமாக சென்று கவிதையை துரத்தும் கவிஞர்களில் இருந்து விலகி ஒரு தவம் போல் கவிதை நிகழும் தருணத்துக்காக காத்திருந்து எழுதுவதோடு மீள்வாசிப்பு மீள்திருத்தம் என்று தன் கவிதைகளை ஒரு சிற்பியை போல் செதுக்குவது அவரது வழக்கம். 'தினமும் அவற்றின் மீது ஏறியமர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தேன். இந்த பழக்கத்தை நிறுத்திவிட வேண்டுமானால் இக்கவிதைகளை என்னிடமிருந்து தொலைத்துவிடுவது தான் சரியானது என்று தோன்றியது' என்கிறார் அகஸ்டஸ். கணையாழி காலத்திலிருந்து கவிதை எழுதிக்கொண்டிருந்தாலும் தன முதல் தொகுப்பை இப்போது தான் வெளியிட்டிருக்கிறார். வடக்கு வாசல் பென்னேஸ்வரனின் உதவியோடு தன் சொந்த பதிப்பாக வெளியிட்டிருக்கும் இத்தொகுப்பு ஆரவாரங்கள் ஏதுமின்றி அவருக்கே உரிய அமைதியுடன் வெளியாகி இருக்கிறது.

வெங்கட்சாமிநாதனின் முன்னுரையோடு வெளியாகி இருக்கும் இந்த தொகுப்பு அவரது வார்த்தைகளில் சொன்னால் " தமிழுக்கு வேண்டிய சேர்க்கை". டெல்லியில் நீண்டகாலமாக வசித்து வரும் அகஸ்டஸ் எனது நண்பர். இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது ஈடுபாடு எனக்கு பெரிய உந்துதலை தருவது. சந்திப்புகளில் யாரிடமும் தான் கவிஞர் என்று சொல்லிக்கொள்ளாத தன்மை உடையவர் அகஸ்டஸ். வாழ்க்கையின் தருணங்களை வலிகளை மர்மங்களை படிமங்களாக செதுக்கி கவிதையாக்கி தரும் அகஸ்டசின் கவிதை வரிகள் ஒப்பீடற்றவை.

கடவுளோடு செய்யும் சம்பாஷணையாகவும் சில சமயங்களில் மறுதலித்தும் ஒலிக்கும் கவியின் குரல், கடவுள் என்ற பிரமாண்டத்தை ஒரு டீக்கடையில் சந்திக்கும் கணம் தொடங்கி வாழ்வின் ஒவ்வொரு மர்மம் புரிபடும்போதும் விலகியோடும்போதும் கடவுளின் மலைகளிலிருந்து இறங்கிக்கொண்டே வருகிறது.

'அடர்ந்து இறங்கிக்கொண்டிருக்கும்
தாடியில்
கருப்பு முடி தேடி
உம்மையே
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

உமது அங்கியில் ஊரும்
சிற்றெரும்புகளை
தட்டிவிடக்
கை நினைத்தது
மனம் தட்டவில்லை' என்ற தொடங்கும் 'டீக்கடை சூரியன்' கவிதையினூடே அவர் இறங்கி செல்லும் மலை கடவுள் தந்த வாழ்க்கையன்றி வேறென்ன. 'உம்முடன் பேசி நடந்ததில்லை நான் / உம் குரலை பேசி நடப்பவர்களை / உதாசீனம் செய்யும் / அமைதி பெற்றிருக்கின்றன / இடையறாது / காற்றுடன் கற்றுக்கொண்டிருக்கும் / செடி கொடி மரங்கள்' என்ற வரிகள் மூலம் இயற்கையின் அளவிலா பிரமாண்டத்தையும் ஆதியில் இருந்து கடவுளுடன் தொடர்பில் இருக்கும் அவை கடவுள் குரலில் பேசி நடப்பவர்களின் பாவனை உணர்ந்து அலட்சியம் செய்யும் தன்மையையும் சொல்லும் அகஸ்டசின் குரலில் மனிதன் இயற்கையின் இறைவனின் பிரமாண்டத்தின் முன்பு ஒன்றுமில்லாதவன் என்று ஒரு தேவ ரகசியம் போல் நம் காதில் சொல்கிறது. 'எனது குடிசையையும் தாண்டி / ஆதரவாய் பரந்து கிடக்கின்றன / உமது கைகள் ' என்று கடவுளின் கருணையை உணரும் மனிதன் கவிதையின் இறுதியில் ' ஒரு டீக்கடையின் அழுக்கு பெஞ்சில் / காலை தம்ளரில் / ஊதியூதிக் குடித்துக் கொண்டிருப்பேன் / என் சூரியனை இனி' என்று கடவுள் தனக்களித்த பிரத்யேக சூரியனான தெளிந்த வாழ்க்கையை பருகும் காட்சி கடவுள் வெளியேறிவிட்ட டீக்கடை பெஞ்சில் தனியாக அமர்ந்திருக்கும் கவிஞனின் மோன நிலையாய் நம் முன் விரிகிறது. கவிதை திரும்பவும் முதலில் இருந்து தொடங்குகிறது. ஒரு loop போல.

வாழ்வின் தருணங்களில் யாருக்காகவோ எதற்காகவோ காத்திருக்கும் மனதின் நீர்வரிகளாக இறங்கும் 'மழை' கவிதையில் பூட்டப்பட்ட அறைக்கு வெளியில் அறைவாசிக்காக காத்திருக்கும் அகாவை காட்சிப்படுத்தும் வரிகளிலும் அப்படிஒரு பிரமாண்டம். 'கார்நிறை வானம் கனத்து / பூட்டிய வாசல் முன் திரண்டு / எதோ சொல்லத் திணறுவது போல / தெரிந்தும் அதை கேட்க / பூமி கிடந்து பரப்பது போல / ரகசியம் / பறவைகளிடம் இருந்து மரங்களுக்கு / வேகம் வேகமேனப் பறப்பது போல / சொல்வரைந்து அறிய முடியாமல் / தனிவார்த்தை மென்று கொண்டு / அகா வாசலில் அமர்ந்திருந்தான் / பொத்துக்கொண்டு பெய்தது மழை' என்ற வரிகளில் தனிமையோடு மர்ம வார்த்தைகளில் உரையாடும் மொழியற்ற இயற்கையின் குரலை அதை புரிந்து தன் பிரத்யேக வார்த்தையொன்றை coin செய்துவிட்ட திருப்தியில் ' அறைவாசி வரும்போது / மழையை நீந்தி மறுகரையில் / தெளிவானில் / தூங்கிப் போயிருந்தான் அகா'. வார்த்தை பிரயோகங்களில் காட்சிகளை தெளித்து கையுதறும் ஓவியக்கவியின் கண்ணின் வழி விரியும் காட்சிகளாய் அபாரமாய் விரிகின்றன அகஸ்டசின் வரிகள். 'பூமி கிடந்து பரப்பது', 'மழையை நீந்தி' போன்ற அவரது சொல்லாடல்கள் தமிழ் கவிதையுலகின் தொடப்படாத பக்கங்களில் எழுதப்பட்டவை.

வார்த்தைப்பாடு கவிதையிலும் கடவுள் வருகிறார். ' ஆதியில் வார்த்தை / ஆண்டவனிடம் இருந்தது / அவன் அதை மனிதனில் விதைக்க / முளைத்தது நாக்கு ' என்று தொடங்கும் கவிதை ஐந்து பகுதிகளாக விரிகிறது. வார்த்தைகளையே முதலீடாக்கி பிழைக்கும் மனிதர்களின் பிடியில் திணறும் வார்த்தைகளின் அவஸ்தைகளை , அடுத்தவனின் வார்த்தைகளை நம்பி தன் வாழ்வில் ' தரித்திரம் பெய்யும் இக்காலத்தில் / தம் கொள்கையிருட்குகையிலிருந்து / இருளாத வார்த்தைகள் கொண்டு வந்து / அவராவது தைத்து தருவார் / எம் கிழிந்த குடைகளை என்று ' காத்திருக்கும் மனிதர்களை சொல்லிக்கொண்டே வரும் கவிதை ' இக்கூட்டிலடைத்து / சற்றும் லாபமில்லையென / உணர்ந்த போது / வீசியெறியப்படும் என் வார்த்தைகள் / அவரவர்க்குப் பேசியவை / அவரவர் காதுகளையடையும் / அது வரை / ஊமையென்று என்னையழைக்கும் எவர் மீதும் கோபமில்லை / எனக்கு ' என்று முடியும்போது கடவுளில் தொடங்கி உலகம் முழுதும் சுற்றியலையும் வார்த்தைகள் ஒரு தனி மனிதனின் நிலையில் ஏற்படுத்தும் பாதிப்போடு முடிகிறது.

தொகுப்பில் சிலைகள் வளரும் காலம், கல் நட்சத்திரம், கருப்புப்பூனை போன்ற கவிதைகள் ஏற்கனவே கவனிக்கப்பட்டவை. எனினும் ஒரு தொகுப்பாக அவற்றை படிக்கும்போது கிடைக்கும் அனுபவம் அற்புதம். அகஸ்டஸ் நல்ல ஓவியரும் கூட. வடக்கு வாசல் இலக்கிய மலரில் அவரது ஓவியங்கள் பிரசுரமாயின. தேவதேவன் , ஜெயமோகன், மோகன ரங்கன் போன்ற இலக்கிய ஆளுமைகளின் கவனிப்புக்குரிய அகஸ்டசின் இந்த தொகுப்பு நிச்சயம் தமிழ் இலக்கிய உலகில் ஒரு நிகழ்வு. சொல்வனம் இணைய இதழில் வெங்கட் சாமிநாதன் தொகுப்பை பற்றி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.


டீக்கடைச்சூரியன்- கவிதைகள்

வெளியீடு: நிலா பதிப்பகம்

அச்சாக்கம் : வடக்கு வாசல்,

5A/11032, IInd Floor, Gali No :9,
Sat Nagar, Karol Bagh,
New Delhi- 110005.
augustus.tamil@gmail.com

Tuesday, January 4, 2011

ஒலக நாயகனுக்கு ஒரு கேள்வி..


சினிமாவில் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேல் இருக்கும் ஒருவர் இன்னும் சினிமா என்றால் என்னவென்றே புரிந்துகொள்ளவில்லை என்ற மாபெரும் உண்மையை நான் வைஷாலியில் உள்ள மகாகுண் பி.விஆரில் மன்மதன் அம்பு பார்க்கும்போது உறுதிப்படுத்திக்கொண்டேன். கமல் என்ற ஒரு மிக சாதாரண நடிகர் தன்னை பற்றி வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கை அதே சமயத்தில் ரசிகர்களை முட்டாள்கள் என்று பெருந்தன்மையுடன் கருதும் பேராண்மை ஆகிய முதல்களை வைத்தே இன்று வரை பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதற்கு மிக சரியான உதாரணம் மேற்கூறிய படம். இந்த படத்தின் மூலங்களை பற்றி பலர் எழுதிவிட்டார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். கமலுக்கு சொந்தமாக மூளை கிடையாது; அமெரிக்க மூளைகளை 'எடுத்தாண்டு' வாழ்ந்துவருகிறார் என்பது சிறுவர்கள், சாரு நிவேதிதா முதல் நல்ல சினிமா தெரிந்த அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.

படம் முதல் பத்து நிமிடங்களுக்கு சரியான பாதையில் போவதாக போக்கு காட்டிவிட்டு அதன் பிறகு கமலுக்கு தெரிந்த ஒரே வழியான குறுக்குப்பாதையில் பயணிக்க தொடங்கும்போது வந்த எரிச்சல் இருக்கிறதே. ச்சே. இவ்வளவு மோசமாகவா ஒரு 'ஒலக நாயகன்' படம் தருவான் என்ற முணுமுணுப்பு அரங்கில் இருந்த எட்டு பேரில் ஏழு பேரின் வாயிலிருந்து தானாக வந்தது.

கமல் மற்றும் என் மனம் கவர்ந்த வடிவேலுவின் கனவுக்கன்னி 'திரிசா' மற்றும் திறந்த வாயை மூட தெரியாத சங்கீதா நடித்த இது போன்ற படங்கள் நண்பர் சுரேஷ் கண்ணன் சொன்னது போல் கழக வாரிசுகளை திரையுலகில் மேற்கொண்டு பிரகாசிக்க விடக்கூடாது என்ற உள்குத்தோடு வெளியாகி இருக்கும் படங்களில் ஒன்று என்ற வகையில் மற்றெல்லாரையும் போலவே நானும் வரவேற்கும் ஒரு படம். துப்பறியும் நிபுணன் (முன்னாள் படை வீரன் வேறு!) என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் கமல் தன் புற்று நோய் நண்பனை காப்பாற்ற தியாகம் ஏதும் செய்யாமல் 'தகிடுதித்தம் ஆடி' பணக்கார மாதவனை பழி வாங்குகிறாராம். அதற்காக விக்ரம் காலத்திலிருந்து காப்பாற்றிவரும் தன் விதவைக்கோலத்தை 'முகமறியா கொலையாளியான' திரிசாவிடம் சொல்லி ஆறுதல் பெற்றால் கூட பரவாயில்லை. அவரையே 'பெற்றுக்கொண்டு' உண்மையிலேயே அப்பாவியான மாதவனுக்கு சங்கீதா என்ற பெருநங்கையை சேர்த்து வைக்கிறார். இதற்கு துணை போகும் கதா பாத்திரங்களாக மேற்படி வாழ்ந்து முடிந்திருக்கும் நடிகர்கள் தங்கள் முகத்தில் பூசப்பட்டிருக்கும் கமல் கரியை திரையரங்க இருட்டில் தெரிந்துகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். நடுவில் களவாணி ஓவியா (தானே!) வேறு தலை காட்டுகிறார். இவ்வளவு கேவலமான படத்தை எப்படியெல்லாம் promote செய்து பிழைக்கிறார்கள்!

ஒலக நாயகனுக்கு ஒரே கேள்வி.. நீர் எப்போது ஒரு சினிமா (சொந்தமாக!) எடுக்க போகிறீர்?