Sunday, January 9, 2011

மௌனக்கடவுளின் முதல் வார்த்தை..


கவிதைகளை அவற்றின் திசையின் காற்றில் பறந்து நெய்யும் கவிஞர்கள் அபூர்வம். வார்த்தைகளை வெறுமே மடித்தும் கோர்த்தும் பாவனை செய்யாமல் எழுதப்படுபவை அகஸ்டசின் கவிதைகள். அவரது கவிதைப்படிகளில் ஏறும்போது தென்படும் படிமங்களை உள்வாங்கிக்கொண்டு இறுதியில் கவிதையின் உச்சவரிகளின் மேல் ஏறி நின்று பார்க்கும் போது கிடைக்கும் சப்தமற்ற பிரமாண்டம் பிரமிக்கவைக்கும். தாமாக சென்று கவிதையை துரத்தும் கவிஞர்களில் இருந்து விலகி ஒரு தவம் போல் கவிதை நிகழும் தருணத்துக்காக காத்திருந்து எழுதுவதோடு மீள்வாசிப்பு மீள்திருத்தம் என்று தன் கவிதைகளை ஒரு சிற்பியை போல் செதுக்குவது அவரது வழக்கம். 'தினமும் அவற்றின் மீது ஏறியமர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தேன். இந்த பழக்கத்தை நிறுத்திவிட வேண்டுமானால் இக்கவிதைகளை என்னிடமிருந்து தொலைத்துவிடுவது தான் சரியானது என்று தோன்றியது' என்கிறார் அகஸ்டஸ். கணையாழி காலத்திலிருந்து கவிதை எழுதிக்கொண்டிருந்தாலும் தன முதல் தொகுப்பை இப்போது தான் வெளியிட்டிருக்கிறார். வடக்கு வாசல் பென்னேஸ்வரனின் உதவியோடு தன் சொந்த பதிப்பாக வெளியிட்டிருக்கும் இத்தொகுப்பு ஆரவாரங்கள் ஏதுமின்றி அவருக்கே உரிய அமைதியுடன் வெளியாகி இருக்கிறது.

வெங்கட்சாமிநாதனின் முன்னுரையோடு வெளியாகி இருக்கும் இந்த தொகுப்பு அவரது வார்த்தைகளில் சொன்னால் " தமிழுக்கு வேண்டிய சேர்க்கை". டெல்லியில் நீண்டகாலமாக வசித்து வரும் அகஸ்டஸ் எனது நண்பர். இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது ஈடுபாடு எனக்கு பெரிய உந்துதலை தருவது. சந்திப்புகளில் யாரிடமும் தான் கவிஞர் என்று சொல்லிக்கொள்ளாத தன்மை உடையவர் அகஸ்டஸ். வாழ்க்கையின் தருணங்களை வலிகளை மர்மங்களை படிமங்களாக செதுக்கி கவிதையாக்கி தரும் அகஸ்டசின் கவிதை வரிகள் ஒப்பீடற்றவை.

கடவுளோடு செய்யும் சம்பாஷணையாகவும் சில சமயங்களில் மறுதலித்தும் ஒலிக்கும் கவியின் குரல், கடவுள் என்ற பிரமாண்டத்தை ஒரு டீக்கடையில் சந்திக்கும் கணம் தொடங்கி வாழ்வின் ஒவ்வொரு மர்மம் புரிபடும்போதும் விலகியோடும்போதும் கடவுளின் மலைகளிலிருந்து இறங்கிக்கொண்டே வருகிறது.

'அடர்ந்து இறங்கிக்கொண்டிருக்கும்
தாடியில்
கருப்பு முடி தேடி
உம்மையே
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

உமது அங்கியில் ஊரும்
சிற்றெரும்புகளை
தட்டிவிடக்
கை நினைத்தது
மனம் தட்டவில்லை' என்ற தொடங்கும் 'டீக்கடை சூரியன்' கவிதையினூடே அவர் இறங்கி செல்லும் மலை கடவுள் தந்த வாழ்க்கையன்றி வேறென்ன. 'உம்முடன் பேசி நடந்ததில்லை நான் / உம் குரலை பேசி நடப்பவர்களை / உதாசீனம் செய்யும் / அமைதி பெற்றிருக்கின்றன / இடையறாது / காற்றுடன் கற்றுக்கொண்டிருக்கும் / செடி கொடி மரங்கள்' என்ற வரிகள் மூலம் இயற்கையின் அளவிலா பிரமாண்டத்தையும் ஆதியில் இருந்து கடவுளுடன் தொடர்பில் இருக்கும் அவை கடவுள் குரலில் பேசி நடப்பவர்களின் பாவனை உணர்ந்து அலட்சியம் செய்யும் தன்மையையும் சொல்லும் அகஸ்டசின் குரலில் மனிதன் இயற்கையின் இறைவனின் பிரமாண்டத்தின் முன்பு ஒன்றுமில்லாதவன் என்று ஒரு தேவ ரகசியம் போல் நம் காதில் சொல்கிறது. 'எனது குடிசையையும் தாண்டி / ஆதரவாய் பரந்து கிடக்கின்றன / உமது கைகள் ' என்று கடவுளின் கருணையை உணரும் மனிதன் கவிதையின் இறுதியில் ' ஒரு டீக்கடையின் அழுக்கு பெஞ்சில் / காலை தம்ளரில் / ஊதியூதிக் குடித்துக் கொண்டிருப்பேன் / என் சூரியனை இனி' என்று கடவுள் தனக்களித்த பிரத்யேக சூரியனான தெளிந்த வாழ்க்கையை பருகும் காட்சி கடவுள் வெளியேறிவிட்ட டீக்கடை பெஞ்சில் தனியாக அமர்ந்திருக்கும் கவிஞனின் மோன நிலையாய் நம் முன் விரிகிறது. கவிதை திரும்பவும் முதலில் இருந்து தொடங்குகிறது. ஒரு loop போல.

வாழ்வின் தருணங்களில் யாருக்காகவோ எதற்காகவோ காத்திருக்கும் மனதின் நீர்வரிகளாக இறங்கும் 'மழை' கவிதையில் பூட்டப்பட்ட அறைக்கு வெளியில் அறைவாசிக்காக காத்திருக்கும் அகாவை காட்சிப்படுத்தும் வரிகளிலும் அப்படிஒரு பிரமாண்டம். 'கார்நிறை வானம் கனத்து / பூட்டிய வாசல் முன் திரண்டு / எதோ சொல்லத் திணறுவது போல / தெரிந்தும் அதை கேட்க / பூமி கிடந்து பரப்பது போல / ரகசியம் / பறவைகளிடம் இருந்து மரங்களுக்கு / வேகம் வேகமேனப் பறப்பது போல / சொல்வரைந்து அறிய முடியாமல் / தனிவார்த்தை மென்று கொண்டு / அகா வாசலில் அமர்ந்திருந்தான் / பொத்துக்கொண்டு பெய்தது மழை' என்ற வரிகளில் தனிமையோடு மர்ம வார்த்தைகளில் உரையாடும் மொழியற்ற இயற்கையின் குரலை அதை புரிந்து தன் பிரத்யேக வார்த்தையொன்றை coin செய்துவிட்ட திருப்தியில் ' அறைவாசி வரும்போது / மழையை நீந்தி மறுகரையில் / தெளிவானில் / தூங்கிப் போயிருந்தான் அகா'. வார்த்தை பிரயோகங்களில் காட்சிகளை தெளித்து கையுதறும் ஓவியக்கவியின் கண்ணின் வழி விரியும் காட்சிகளாய் அபாரமாய் விரிகின்றன அகஸ்டசின் வரிகள். 'பூமி கிடந்து பரப்பது', 'மழையை நீந்தி' போன்ற அவரது சொல்லாடல்கள் தமிழ் கவிதையுலகின் தொடப்படாத பக்கங்களில் எழுதப்பட்டவை.

வார்த்தைப்பாடு கவிதையிலும் கடவுள் வருகிறார். ' ஆதியில் வார்த்தை / ஆண்டவனிடம் இருந்தது / அவன் அதை மனிதனில் விதைக்க / முளைத்தது நாக்கு ' என்று தொடங்கும் கவிதை ஐந்து பகுதிகளாக விரிகிறது. வார்த்தைகளையே முதலீடாக்கி பிழைக்கும் மனிதர்களின் பிடியில் திணறும் வார்த்தைகளின் அவஸ்தைகளை , அடுத்தவனின் வார்த்தைகளை நம்பி தன் வாழ்வில் ' தரித்திரம் பெய்யும் இக்காலத்தில் / தம் கொள்கையிருட்குகையிலிருந்து / இருளாத வார்த்தைகள் கொண்டு வந்து / அவராவது தைத்து தருவார் / எம் கிழிந்த குடைகளை என்று ' காத்திருக்கும் மனிதர்களை சொல்லிக்கொண்டே வரும் கவிதை ' இக்கூட்டிலடைத்து / சற்றும் லாபமில்லையென / உணர்ந்த போது / வீசியெறியப்படும் என் வார்த்தைகள் / அவரவர்க்குப் பேசியவை / அவரவர் காதுகளையடையும் / அது வரை / ஊமையென்று என்னையழைக்கும் எவர் மீதும் கோபமில்லை / எனக்கு ' என்று முடியும்போது கடவுளில் தொடங்கி உலகம் முழுதும் சுற்றியலையும் வார்த்தைகள் ஒரு தனி மனிதனின் நிலையில் ஏற்படுத்தும் பாதிப்போடு முடிகிறது.

தொகுப்பில் சிலைகள் வளரும் காலம், கல் நட்சத்திரம், கருப்புப்பூனை போன்ற கவிதைகள் ஏற்கனவே கவனிக்கப்பட்டவை. எனினும் ஒரு தொகுப்பாக அவற்றை படிக்கும்போது கிடைக்கும் அனுபவம் அற்புதம். அகஸ்டஸ் நல்ல ஓவியரும் கூட. வடக்கு வாசல் இலக்கிய மலரில் அவரது ஓவியங்கள் பிரசுரமாயின. தேவதேவன் , ஜெயமோகன், மோகன ரங்கன் போன்ற இலக்கிய ஆளுமைகளின் கவனிப்புக்குரிய அகஸ்டசின் இந்த தொகுப்பு நிச்சயம் தமிழ் இலக்கிய உலகில் ஒரு நிகழ்வு. சொல்வனம் இணைய இதழில் வெங்கட் சாமிநாதன் தொகுப்பை பற்றி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.


டீக்கடைச்சூரியன்- கவிதைகள்

வெளியீடு: நிலா பதிப்பகம்

அச்சாக்கம் : வடக்கு வாசல்,

5A/11032, IInd Floor, Gali No :9,
Sat Nagar, Karol Bagh,
New Delhi- 110005.
augustus.tamil@gmail.com

5 comments:

  1. \\ 'தினமும் அவற்றின் மீது ஏறியமர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தேன். இந்த பழக்கத்தை நிறுத்திவிட வேண்டுமானால் இக்கவிதைகளை என்னிடமிருந்து தொலைத்துவிடுவது தான் சரியானது என்று தோன்றியது' என்கிறார் அகஸ்டஸ். //

    :) தொலைக்காமல் புத்தகமாய் சேமித்து தந்ததும் நல்ல விசயம் .

    கவிதை எழுதுவாரென்று நீங்கள் அறிமுகப்படுத்திச் சொன்னால் கூட ’எதோ இப்பத்தான் எழுத பழகிக்கிட்டிருக்கேன்’ என்பது போலத்தான் சிரிப்பார்..:)
    புத்தகத்தினை அழகாக அறிமுகம் செய்தீர்கள்..அவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இப்போதுதான் இந்திரப்பிரஸ்தம் தளத்தில் அகஸ்டஸுக்கு வாழ்த்து சொன்னேன்.
    அதற்குள் இந்தச் செய்தி.
    விரைவில் தொகுப்பை வாங்கிப்படிக்கிறேன்.
    அவருக்கும் அவர்நூலை அறிமுகம் செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வடக்கு வாசலில் அவர் கவிதைகள் பரிச்சயமானது முதலே நான் ரசித்த அவர் கவிதைகள். பழகுவதற்கு இனிமையான நண்பரை எங்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி. சீக்கிரமே கவிதைத் தொகுப்பினை வாங்கி படிக்கிறேன்.

    ReplyDelete
  4. நண்பரின் கவிதை தொகுப்பை அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete