Thursday, March 3, 2011

தோழமையின் தொலைவு


டிசம்பர் குளிரின் ஒரு நாளில் நண்பன் ஒருவனின் மின்மடல் வந்தது. டெல்லி வருவேன். பழைய டெல்லியை சுற்றிப் பார்க்க ஆசை. உன்னால் கூட வர முடியுமா? என்று கேட்டிருந்தான். ஒரு பக்கம் ஆச்சர்யம் ஒரு பக்கம் குற்ற உணர்வு. குற்ற உணர்வுக்கு காரணம் உண்டு. ஏனெனில் நண்பன் இந்த பத்து வருட இடைவெளியில் பெரிய உயரத்துக்கு வந்துவிட்டவன். தொடர்பு கொள்ளும்போதெல்லாம் பிறகு பேசுகிறேன் .. என்ற பதில் தான் வரும். பேசமாட்டான். இத்தனைக்கும் பிரபல பதிவராக இணைய வாசகர்களால் அறியப்பட்டவன்.ஒண்ணுமில்லை சும்மா என்றபடி வெளுத்துவாங்கும் எழுத்துக்கு சொந்தக்காரன். அப்துல்லா. பள்ளியில் எனக்கு ஒரு வருடம் சீனியர். நல்ல பாடகன். நெருங்கிய நண்பர்களில் ஒருவன். இளையராஜா பற்றி நாங்கள் பேசிக்கொண்டதை பக்கம் பக்கமாக எழுதலாம். புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் அவன் வீடு. அரை கிலோமீட்டர் தாண்டி என் வீடு.

எந்த காலத்துக்கும் மறக்க முடியாத படிநடந்த ஒரு சம்பவம் இன்றும் எங்கள் நினைவில் உள்ளது. ப்ளஸ் டூ தேர்வு காலத்தில் நாங்கள் நண்பர்கள் க்ரூப் ஸ்டடி செய்ததெல்லாம் அந்த ரயில்வே ஸ்டேஷனில் தான். எப்போதோ வந்து போகும் ராமேஸ்வரம் , சென்னைக்கு செல்ல சேது என்று ஒரு சில ரயில்களே தலை காட்டும் ஸ்டேஷன் என்பதால் எங்களுக்கு அவ்வளவு கட்டுப்பாடு கிடையாது. புத்தகம் போர்வை சகிதம் சைக்கிள்களில் வந்திறங்கி அதகளம் செய்வோம். படித்ததென்னவோ கொஞ்சம் தான் என்பதை முன்னாள் மாணவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவு நல்ல பையன்கள் நாங்கள். மறக்க முடியாத நாட்கள் அவை. மறு நாள் பரீட்சை என்ற பயமிருந்தாலும் படிப்பை தவிர எல்லா விஷயமும் பேசிக்கொண்டு எதோ கொஞ்சம் படித்துவிட்டு அதிகாலை மூன்று மணிக்கு தூங்கி ஐந்த மணிக்கு விழித்து ஒரு டீயை குடித்துவிட்டு தேர்வெழுதி பாஸான கும்பல். அந்த வயதுக்கே உரிய சேட்டைகள் அதிகம் தான். ரயில் ஏற , வழியனுப்ப வரும் சுமார் ஆண்ட்டிகளையும் சூப்பர் பிகர்களையும் சைட் அடிப்பது எங்கள் முக்கிய அஜென்டாவாக இருந்தது. அதையும் தாண்டி இரவில் வந்து நிற்கும் ரயில்களில் தூக்க கலக்கத்துடன் மஞ்சள் ஒளி ஜன்னல் வழி சைட் கொடுக்கும் இளம் மற்றும் பேரிளம் பெண்களை சைட் அடிப்பது சந்தர்ப்ப அஜென்டா. யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். கையில் புத்தகம் இருக்கும். பார்வை அலை பாயும். ஒரு நள்ளிரவு ரயில் வரும்போது நாங்கள் கும்பலாக மாட்டிக்கொள்வோம் என்று அறிந்திருக்கவில்லை. நாங்களாவது பரவாயில்லை. உண்மையிலேயே சின்சியராக படித்துவிட்டு பிளாட்பாரத்தின் மறு கோடியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்த அப்துல்லாவையும் நிறுத்தி அவனிடம் பேச்சு கொடுத்தவாறு எங்கள் பணியில் ஈடுபட்டிருந்தோம். சிரித்தபடியே வந்தார். அந்த ஸ்டேஷன் போலீஸ் எஸ்.ஐ. கணேசன் (பேரை மறக்க முடியுமா?!) 'பசங்களா வாங்கடா' என்று அன்புடன் அழைத்தார். நாங்களும் எதோ சுவாரசியத்தில் அவரை பின்தொடர அவரோ ஸ்டேஷன் ஊழியர்களில் ஒருவரிடம் ' வித்தவுட் கேஸ் புடிச்சி நாளாயிடுச்சு இல்லே.. இந்தா நம்ம பசங்க தான் இருக்காய்ங்களே' என்று சொல்லிக்கொண்டே கைகளை பின்னால் கட்டியவாறு விரல்களை ஆட்டிக்கொண்டே துள்ளலாக ஸ்டேஷன் (போலீஸ்!) நோக்கி நடந்தார். எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. எதுவுமே புரியாமலே அப்துல்லாவும் எங்கள் கூடவே வந்தான்.

அங்கு போனதும் அவனவன் அழுகிறான். "சார் நான் ஒன்னும் பண்ணலை சார்..", " வீட்டுக்கு தெரிஞ்சா கொன்னுடுவாங்க சார்" போன்ற ஒப்பாரிகள் சற்று நேரத்தில் ஸ்டேஷன் வெளியே நின்டிருந்தவர்கள் செவியை நிறைத்தன. நான் கையிலிருந்த Q & A வை சடாரென பூமியில் போட்டு அங்கிட்டும் இங்கிட்டுமாக அதை தாண்டி என் நியாயத்தை நிறுவிக்கொண்டிருந்தேன். "தயவு செஞ்சு வுட்டுருங்க சார்..இநத பக்கமே வரமாட்டோம்" என்று நான் சொல்லிக்கொண்டே தாண்டிக்கொண்டிருந்தாக சற்று தைரியத்துடன் 'சம்பவத்தை' கவனித்து கொண்டிருந்த வீரர்கள் பின்பு என்னிடம் தெரிவித்தார்கள். இதில் எந்த குற்றமும் செய்யாமல் 'பராசக்தி' சிவாஜி போல் குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருந்த அப்துல்லா 'விசாரணைக்கு' பின் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டு வீடு போய் சேர்ந்து விட்டான். ஒரே களேபரங்களின் முடிவில் எஸ்.ஐ.யின் ஏகவசனம் உருமாறி அறிவுரைகளும் நல்லொழுக்க விதிகளுமாக ஒரு வழியாய் முடிந்தது. ('பின்னதற்கு முன்னது தேவலை' என்று நாங்கள் பிறகு பேசிக்கொண்டோம்.)மறுநாளில் சொல்லிவைத்தாற்போல் எல்லா பயலும் முன்பு மாதிரியே வந்துவிட்டான். வழக்கம் போல் அதே அதகளம்..குதூகலம். முந்தைய இரவின் திகைப்பூட்டும் 'சம்பவம்' மறுநாளே எங்களுக்கு நகைப்பூட்டும் நிகழ்ச்சியாகி விட்டது. வாழ்க்கை தான் அப்போது எவ்வளவு எளிதாய் இருந்தது!

அப்போதே இலக்கியம் இசை சினிமா என்று நானும் அப்துல்லாவும் நிறைய பேசுவோம். கல்லூரி நாட்களில் அவன் சென்னை போய் விட்டான். விடுமுறைக்கு வரும் நாட்களில் நாங்கள் கலீப் நகர் எஸ்.எஸ். டீக்கடையில் உட்கார்ந்து பாடிக்கொண்டிருப்போம். "பூவில் வண்டு கூடும் கண்டு" என்று நான் பாடினால் அப்துல்லா " நீல வான் ஓடையில் " என்று உருகிக்கொண்டிருப்பான். எங்களை யாரும் திட்டவில்லை என்பதே எங்கள் 'இசைத்திறனுக்கு' சாட்சி எனலாம்.உண்மையில் நல்ல குரல்வளம் அவனுக்கு. பின்பு சாந்தகுமார் என்ற ஒரு இசை அமைப்பாளர் இசையில் பாடல் ஒன்று பாடினான் (பெயர் சரிதானே அப்துல்லா?).படம் பொட்டுஅம்மன் என்று நினைக்கிறேன்.

அதற்கு பிறகு அவ்வளவு தொடர்பு இல்லாமல் போய் விட்டது. அவன் கவிதை ஒன்றை விகடனில் படித்து பேசும் ஆர்வத்துடன் நம்பர் வாங்கி தொடர்பு கொண்டால் எடுப்பதே இல்லை. எப்போதோ எடுத்து பேசினாலும் அப்புறம் பேசுகிறேன் என்பான். என்னிடம் சரியாக பேசவில்லை என்பதில் ஒரு வருத்தம். சொல்லப்போனால் கோபம். டெல்லிக்கு அவன் வந்தவுடன் என் வருத்தத்தை தெரிவித்து விட்டேன். வழக்கமான புன்னைகையுடன் " நண்பன் தானே ..புரிஞ்சுக்குவேன்னு நினைச்சேன் " என்றான். என்னிடம் பதில் இல்லை. தமிழக அரசு விருந்தனனாய் இங்குள்ள தமிழ்நாடு மின்சார வாரிய விருந்தினர் மாளிகையின் ஒரு அறையில் தங்கியிருந்த அவன் பாடி பதினைந்து வருடங்களுக்கு பின் கேட்டுக்கொண்டிருந்தேன். மாற்றி மாற்றி பாடிக்கொண்டு எங்கள் பால்யத்துக்கு சற்று பக்கத்தில் போய் வந்தோம்.


அடுத்த நாள் புரானா தில்லி எனப்படும் பழைய டெல்லியை சுற்றிக்கொண்டிருந்தோம். பிரத்யேக மொகலாய அரசு உணவு கிடைக்கும் உலகப்புகழ் பெற்ற கரீம் ஹோட்டலுக்கு சென்று (உண்மையில் அப்துல்லா சொல்லி தான் இநத ஹோட்டலையே நான் தெரிந்துகொண்டேன்!) சிறந்த அசைவ உணவுகளை ருசித்தோம். டெல்லி குளிரின் வீர்யம் தெரியாமல் ஒரு டி-ஷர்டும் மெலிதான அரைக்கை ஜாக்கெட்டும் அணிந்திருந்த அப்துல்லாவுடன் நாங்கள் பழைய டெல்லியின் தெருக்களில் உலா வந்தோம்.

இநத முறை சென்னை சென்றிருந்த போது அவனை சென்று சந்தித்தேன். அப்போது தான் அவன் வேலைப்பளு தெரிந்தது. நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருப்பவன். எனக்காக நேரம் ஒதுக்கி ஸ்டேஷன் வரை வந்து வழியனுப்பினான். கார் ஒட்டிக்கொண்டு வரும்போது வழக்கம் போல் அதே இசை.. "ஒரு குண்டு மணி குலுங்குதடி கண்ணம்மா காதுலே காதுலே" என்று இருவரும் பாடிக்கொண்டு பீச் ரோட்டில் சென்றது ஒரு அனுபவம்.

21 comments:

  1. அடா அடா...என்னமா வந்திருக்கு நட்புக் கட்டுரை. இதான் இதத்தான் நான் அடிக்கடி சொல்றது... உண்மைய எழுதும்போது அது சாதாரண நடைல எழுதுனாக் கூட அற்புதமா வரும்னு.வாழ்க உங்க நட்பு.

    ReplyDelete
  2. பால்யத்தை தானே நினைவுகூற்வதைவிட நண்பனால் நினைவுகூறப்படுவது பெரும் மகிழ்ச்சி :)

    ReplyDelete
  3. // சிறந்த அசைவ உணவுகளை ருசித்தோம் //

    ருசித்தோம் இல்லை.ருசித்தாய் :)

    ReplyDelete
  4. அவருடைய செல்போன் ரிங்டோனே “அப்புறம் பேசுறேன்” அப்படித்தாம்ணே இருக்கும்..

    :)))

    ReplyDelete
  5. ///ருசித்தோம்இல்லை.ருசித்தாய் /// ///அவருடைய செல்போன் ரிங்டோனே “அப்புறம் பேசுறேன்” அப்படித்தாம்ணே இருக்கும்..///

    உங்கள் நண்பரின் இந்த காமெண்ட் எனக்குப் பிடித்திருக்கிறது.
    தோழமைகள் தொலைவதில்லை..தொலைவும் வாழ்கைச் சூழலும் ஒரு இடைவெளியை ஏற்படுத்துகிறன எனப்து தான் உண்மை நல்ல ப்திவு

    ReplyDelete
  6. good one chandru.. it really took me back to the good old times..
    keep it up

    arivu, muscat

    ReplyDelete
  7. நண்பனுடன் சுற்றும் பழைய நினைவுகள் என்றும் சந்தோசமானவையே...

    ReplyDelete
  8. நண்பேண்டா..

    வாழ்த்துக்கள் சகோதரா..

    ReplyDelete
  9. நண்பணுக்கு நண்பணாலே நமக்கும் நண்பனாம் நாடோடியில சொல்லிருக்காங்க.

    ஒகே ஃப்ரெண்ட், நெக்ஸ்ட் டைம் டெல்லி வர்றப்ப மீட் பண்றேன்.

    ReplyDelete
  10. ”நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை” பாடவில்லையா?..

    ReplyDelete
  11. நண்பனின் நண்பன் எங்களுக்கும் நண்பரே

    ReplyDelete
  12. அப்துல்லா போனுக்கு ரிங் போகுதுன்னாலே நீங்க போன ஜென்மத்தில் புன்னியம் செய்திருக்கனும்...

    இப்படிக்கு
    சுவிட்ச் ஆப் மெசேஜ்ஜை கேட்டே போனை உடைத்தோர் சங்கம்

    ReplyDelete
  13. நல்பதிவு .... என்னுடைய கமெண்டை எனக்கு முன் வந்தவர் எழுதிவிட்டார்...

    ReplyDelete
  14. //பால்யத்தை தானே நினைவுகூற்வதைவிட நண்பனால் நினைவுகூறப்படுவது பெரும் மகிழ்ச்சி :) //

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  15. நான் சொன்னது காவேரி கணேசின் கமெண்டை....

    ReplyDelete
  16. சந்துருண்ணே..(அண்ணனோட நண்பன் எனக்கும் அண்ணன் தானே..) கோவிச்சிகாதண்ணே.. இப்பல்லாம் அவருக்கு திருக்குறளே கட்டுரை சைஸ்..
    எடுத்தவுடனே, “திரும்ப கூப்பிடறேண்ணே”

    ReplyDelete
  17. //உண்மையில் அப்துல்லா சொல்லி தான் இநத ஹோட்டலையே நான் தெரிந்துகொண்டேன்//
    அடுத்தமுறை வரும் போது, டெல்லியில இருக்கும் சந்து பொந்தேல்லாம் உங்களுக்கு வழி சொல்லுவாரு பாருங்க..

    ReplyDelete
  18. //இநத முறை சென்னை சென்றிருந்த போது அவனை சென்று சந்தித்தேன்.//
    உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லறேன்.. அடுத்தமுறை வரும் போது அவர் ஆபீஸ்ல Black Tea with Lemon தர சொல்லி குடிங்க.. அசந்துடுவீங்க..

    ReplyDelete
  19. இவ்வளவு சிறந்த பாடகர் - நமது நண்பராக இருப்பதால்தான் அடுத்தகட்டமாக ச.ம.உ வாக இருக்கிறாரோ? - வாழ்த்துக்கள் சொல்வோம் சந்துரு சார்!

    ReplyDelete
  20. நல்லா எழுதியிருக்கீங்க சந்த்ரு. அப்துல் எனக்கும் நண்பன் என்பதே பெருமிதம்தான். Real gem of a guy.

    ReplyDelete
  21. பேரை மறக்காம எழுதின நீங்க,கான்ஸ்டபிளை எஸ்.ஐ என குறிப்பிட்டுள்ளீர்களே நண்பா!.

    ReplyDelete