
சனிக்கிழமை என் நண்பர் வரதராஜன் வீட்டுக்கு சென்றிருந்தேன். முனிர்காவில் வீடெனப்படுவது 'ரூம்' என கருத்தில் கொள்க. மிக சிறந்த இசை ரசிகரும் அரசியல் மீது தனித்த பார்வை கொண்டவருமான வரதராஜனின் அறையில் தான் நான் முன்பு தங்கி இருந்தேன். எங்களுடன் குமரன் என்ற மறக்க முடியாத நண்பர் ஒருவரும் இருந்தார். மேடை பேச்சிலும் நகைச்சுவையிலும் சிறந்த அவர் நல்ல நாடக நடிகர். இப்போது விசாகப்பட்டினத்தில் இருக்கிறார்.
சனிக்கிழமை இரவு என் நண்பன் ஓவியன் விஜயராகவனும் வந்திருந்தான். இன்னொரு ஓவிய நண்பன் முத்துசாமி எனக்கு கொடுத்த The Pianist, Perfume மற்றும் Clint Eastwood இன் கிளாசிக் அதிரடியான Pale Rider ஆகிய படங்களை திரும்பவும் ஒருமுறை நண்பர்களோடு பார்க்கலாம் என்ற ஐந்தாண்டு திட்டத்தோடு ஆசையாய் சென்றிருந்த நாங்கள் பேசிப்பேசியே இரவைப்போக்கி பிறகு தூங்கியும் விட்டோம்.
அதிகாலை (எங்களை பொறுத்தவரை )ஒன்பது மணி இருக்கும். திடீரென்று முனிர்காவே நடுங்கும்படி 'எந்திர்றா...எந்திர்றா' என்று ஒரே அலறல். ஆளாளுக்கு விலுக் விலுக்கென்று பதறியபடி எழுந்து ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்து பயந்து (!) அலறி ..பிறகு குரல் வந்த திசை பார்த்தால்..வரதராஜன் வீட்டு டி.வி. ஆன் ஆகி இருந்தது. எந்திரன் என்ற இந்தியாவின் ஆக சிறந்த படத்தின் 'வெளம்பரம்' .அதில் இன்னும் பயங்கரமாக ஜிலு ஜிலு கோட் அணிந்த முதியவரான நடிகர் ரஜினி விரல்களை ஆட்டி ஏதோ எச்சரிக்க , தூக்க கலக்கத்தில் இருந்த நாங்கள் மேலும் திகைப்புற்று அறைக்குள்ளேய அங்கும் இங்கும் ஓடி பின் ஆசுவாசம் அடைந்து , பின் சம்பவம் நடந்தது எப்படி என்று ஆராய்ந்தோம். நானும் வரதராஜனும் கீழே தரையில் படுத்திருந்தோம். விஜயராகவன் மேலே கட்டிலில் சயனித்திருந்தான். தூங்கும் முன் ரிமோட் மூலம் டி.வி.யை ஆப் செய்து பின்பு அதை கட்டிலிலேயே வைத்து விட்டு தூங்கிவிட்டான். அங்கும் இங்கும் புரண்டு கடைசியில் ரிமோட்டில் அவன் கால் பட்டு டி.வி. உயிர் பெற்றதுடன் இன்னொரு தவறான அழுத்தலில் வால்யூம் அதிகமாகி அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. பிறகு எங்கு தூங்குவது?
ஞாயிற்று கிழமை காலையில் எழுந்து பழக்கம் இல்லாத நாங்கள் பின்பு கொண்டு வந்த படங்களை பார்த்து பொழுது கழித்தோம். Perfume என்ன அருமையான படம். கண், காது என்று மற்ற உறுப்புகளை பிரதானபடுத்தி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. இந்த படம் வாசனையை மையமாக கொண்ட படம்.
இதை பற்றி நிறைய எழுதி விட்டார்கள் , ஓவியரும் எழுத்தாளருமான ஜீவா அவர்கள் தனது 'திரைசீலை' என்ற புத்தகத்தில் இதை பற்றி எழுதி இருக்கிறார். ரசனை இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அந்த புத்தகம். படத்தின் ஒளிப்பதிவும் இசையும் அற்புதம். ஒரு ஞாயிறை நல்ல விதமாக கழித்தோம் என்ற சந்தோஷத்தில் இருந்த நாங்கள் ..ஒரு மாபெரும் அபத்தத்தில் சிக்குவோம் என்று எதிர்பார்க்கவில்லை.
மாலை டெல்லி தமிழ் சங்கத்தில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பேசுகிறார் என்ற செய்தி கிடைத்ததும் அங்கு சென்று அவர் பேச்சை கேட்கலாம் என்று கிளம்பினோம். நாங்கள் நினைத்தது நெல்லை கண்ணன் வழக்கமாய் தமிழ் சங்கத்தில் பேசுவது போல் போல் ஒற்றை ஆளாய் அரங்கை சிரிப்பிலும் சிந்தனையிலும் ஆழ்த்தும் பேச்சாய் இருக்கும் பேராசிரியர் பேச்சு என்று. அங்கு போனவுடன் தான் தெரிந்தது அது பட்டிமன்றம் என்று. நடு நாயகமாய் பேராசிரியர் உட்கார்ந்திருக்க அவருக்கு வலமும் இடமுமாக ஆறு பெண்கள். இரண்டு வெளியூர் பேச்சாளர்கள். பாக்கி நால்வரும் டெல்லி வாழ் தமிழர்களை தங்கள் பேச்சால் மிரள வைக்கும் (என்று நாங்கள் நம்பிய !) உள்ளூர் பேச்சாளர்கள். இரண்டாம் வரிசையில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் (!) நாங்கள் இருக்கும்போது வடக்கு வாசல் ஆசிரியர் பென்னேஸ்வரன் அங்கு வந்தார். அவர் இது போன்ற ஆபத்துகளில் சிக்காதவர் ஆயிற்றே ..என்று வியந்தபோது , பேராசிரியர் கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்ததால் வந்தேன் என்றார். எனக்கு கு.ஞானசம்பததின் மீது மதிப்பு ஏற்பட காரணம், அவர் எழுதிய 'சினிமாவுக்கு போகலாம் வாங்க' என்ற புத்தகம். சிறு வயதில் சினிமா பார்த்த அது தொடர்பான நட்பில் திளைத்த எவரும் கண்டிப்பாக படித்து சிலாகிக்க வேண்டிய புத்தகம் அது.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஒருவர்.. செந்தமிழில் பேசுகிறேன் பேர்வழி என்று ..படுத்தி விட்டார். 'சிறந்த பேச்சாளராக இருக்கக்கூடிய ..', 'சிறந்த சிந்தனையாளராய் இருக்கக்கூடிய ' என்றெல்லாம் வந்தவர்களை வரவேற்று பேசிய அவர்.. தொடர்ந்து ..பேராசிரியரின் மனைவியை மேடைக்கு அழைக்கும்போதும்.. ' அவரின் துணைவியாராக இருக்கக்கூடிய ' என்று தன் தமிழ் திறமையை காட்டி எங்களை தாக்கி கொண்டிருந்தார்.
நிகழ்ச்சி தொடங்கியதும் தான் தலைப்பே தெரியவந்தது. வாழ்வில் நகைச்சுவை வெளிப்படுவது வீட்டிலா , வெளியிலா (என்று தான் நினைக்கிறேன்!) என்ற வரலாற்று சிறப்பு மிக்க தலைப்பு என்று தெரிந்தவுடன், பென்னேஸ்வரன் எளிதாக எழுந்து ஓட வசதியான இருக்கை ஒன்றை (எங்களுக்கு பின் வரிசையில்..) பார்த்து அமர்ந்துகொண்டார்.
பேராசிரியரும் சிரிப்பு வரும் வகையில் தான் பேசினார் என்றாலும், நாம் பல தடவை கேட்டு பழக்கப்பட்ட நகைச்சுவை துணுக்குகளை எந்த வருத்தமும் இல்லாமல் தந்து கொண்டிருந்தார். நான் ஏற்கனவே கேட்ட ஜோக்காக்கும் ..எனவே சிரிக்க மாட்டேன் என்றெல்லாம் அடம்பிடிக்காமல் டெல்லி வாழ் தமிழ் மக்கள் பெருந்தன்மையுடன் வாய் விட்டு சிரித்து தங்கள் வீட்டு கவலைகளை மறக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு வரிசையில் இருந்து குபீர் சிரிப்பு அடிக்கடி வர , என் மதிப்புக்குரிய ஷாஜஹானின் குடும்பத்தினர் (அவர் நீங்கலாக..! அவரும் இந்த ஆபத்துகளில் சிக்குவதில்லை .) வந்திருப்பது உறுதியானது.
பேராசிரியர் பேசியதும் பிறகு இரண்டு அணி தலைவிகளும் (வெளியூர்!) தங்கள் கணவர் குடும்பங்களை பற்றி முடிந்த வரை கேவலமாக பேசி ..அவ்வப்போது அபசுரத்தில் வேறு பாடி எங்கள் உங்கள் உயிரை எடுத்துவிட்டார்கள். எந்திரன் எம்மாத்திரம் என்று நினைக்கும் அளவுக்கு அபத்தமான ஒரு 'நிகழ்வு'.
தமிழ் சங்க வழக்கப்படி சங்க நிர்வாகிகளின் மனைவிகள் , மகன்-மகள்கள் , பேரன்- பேத்திகள் அல்லது வேறெந்த விதத்திலாவது வேண்டப்பட்டவர்கள் தான் மேடையில் ஏறி 'பெர்பார்ம்' பண்ண முடியும் என்ற மிக சிறந்த நடைமுறைப்படி சில பெண்களும் அங்கு பேசினார்கள். ஒரு பெண் எழுந்து சன்னமான குரலில் என்னவோ பேசியபடி நடுவரை பார்க்க அவரும் பெருந்தன்மையுடன் அந்த பெண்ணின் பேச்சை மொழிபெயர்த்து ..ஒலிபெருக்கி எங்களுக்கு எடுத்து சொல்லும் பெரும்பணியில் ஈடுபட்டிருக்க .. வெறுத்துப்போன நாங்கள் திரும்பி பார்க்க , பென்னேஸ்வரனின் இருக்கை ..காலியாய் இருந்தது.
பிறகு நாங்களும் பின்னங்கால் பிடரியில் அடிக்க தலைதெறிக்க ஓடி தத்தம் வீடுகளுக்குள் (ரூம்..!) சென்று தஞ்சம் அடைந்தோம்.
பி.கு: தமிழ் சங்கம் வரும் டிசம்பரில் தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் , சிந்தனாவாதிகள் ஆகியோரை கொண்டு (நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன் உட்பட )ஒரு நல்ல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.என்னை பொறுத்தவரை தமிழ் சங்கம் செய்யும் உண்மையான நற்பணி இது தான் என்று சொல்வேன்.