Tuesday, September 4, 2012

நான் அறிந்த R.P.ராஜநாயஹம்

தற்போது டெல்லியில் வேலைபார்க்கும் என் தம்பி முன்பு திருப்பூரில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைபார்க்கும்போது தன்னோடு ஒரு எழுத்தாளர் வேலைபார்க்கிறார் என்று சொல்வான். மற்றவர்களிடம் அவ்வளவாக பேசாத அவர் அவனுடன் மட்டும் மனம் விட்டுப் பேசுவாராம். பிறகு அவன் டெல்லி வந்த பின் அவருடன் தொலைபேசியில்  பேசிக்கொண்டிருந்தான். வாங்கிப் பேசினால் அவர் தான் ஆர்.பி.ராஜநாயகம்.

எழுத்தாளர் என்ற தோரணை சிறிதும் இல்லாத சாதாரண மனிதன் போன்ற பேச்சு. அந்த குரலில் அத்தனை நேசம் இருந்தது. அவரது வலைப்பூவை முன்பு தொடர்ந்து படித்து வந்திருந்தாலும் அவருடன் பேசிய அந்த காலகட்டத்தில் - இரண்டு வருடங்களுக்கு முன்னர்- அவர் தொடர்ந்து எழுத முடியாத அளவுக்கு வேலைப் பளுவில் இருப்பதாகக் குறிப்பிட்டார். அலுவலகத்தில் கம்ப்யூட்டர் இருந்தாலும் வலைப்பூவுக்காக எழுதும் அளவுக்கு நேரம் அவருக்கு  ஒத்துழைக்கவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

அப்போது என் வலைப்பூவில் அவரது வலைப்பூவின் இணைப்பை நான் வாசிக்கும் தளங்கள் பட்டியலில் இட்டேன். எனது ஆதர்ச எழுத்தாளர் ஒருவருக்கும் இவருக்கும் ஆகாது என்று எனக்கு நன்றாகத் தெரிந்தும், அதையெல்லாம் அவர் பொருட்படுத்த மாட்டார் என்று நினைத்து அதை செய்தேன். அதற்குப் பிறகு என் ஆதர்ச எழுத்தாளர் என்னை முற்றிலும் புறக்கணித்து விட்டார். தற்போது தொடர்ந்து வலைப்பூவில் எழுதி வருகிறார் ராஜநாயகம். இலக்கியம் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நல்ல பரிச்சயமும் ஞானமும் உள்ளவர். சில படங்களில் நடித்து அந்தக் காட்சிகள் வெளிவராத விஷயங்களையும் பதிவு செய்திருக்கிறார். பல நடிகர்கள், துணை நடிகர்களுடன் நேரில் பழகியிருப்பதால் அவரது சினிமா பற்றிய பதிவுகளில் அத்தனை இயல்பும் அழகும் இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் அவரிடம் பேசினேன். தற்போது ஒரு அரசு சாரா அமைப்பு ஒன்றில் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர் இப்போது முன்பை விடவும் குறைந்த நேரமே எழுதக் கிடைப்பதாகவும் இருந்தாலும் கிடைக்கும் நேரத்தில் சில பதிவுகளையும் மீள் பதிவுகளையும் பதிவேற்றம் செய்து வருவதாகவும்  கூறினார்.

"உங்க குரல் அப்படியே சிவா (என் தம்பி) மாதிரியே இருக்கு.. அதனாலேயே கூட உங்க கிட்டே அதிக நேரம் பேசுறேன். இல்லேன்னா எனக்கு இருக்கும் வேலைப் பளுவில் யார்க்கிட்டேயும் பேசக் கூட முடியாது " என்றார். களப்பணி ஒன்றுக்காக மற்றவர்களுடன் வந்திருந்த  அவர் என்னிடம் பேசுவதற்காக ஒரு மரநிழலில் ஒதுங்கி நிற்பதாக சொன்னார். அந்தக் குரலும் காட்சியும் என்னுள் ஓடிக்கொண்டிருந்தது.தொடர்ந்து சினிமா, இலக்கியம் என்று பேசிக்கொண்டே இருந்தார். அவரது ஆங்கில வீச்சு அற்புதமாக இருக்கும். "எப்படி ஸார் இப்படி ஒரு லாங்குவேஜ் பிடிச்சீங்க?" என்றதற்கு அவர் சொன்ன பதில் " நான் எம்.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர்ங்க"!

இவருக்கு மட்டும் நேரம் கிடைத்தால் எத்தனை விஷயங்களை நாம் அறிந்துகொள்ளலாம் என்று தோன்றியது.


http://rprajanayahem.blogspot.in/


6 comments:

  1. அறிந்து கொண்டேன்...

    /// இவருக்கு மட்டும் நேரம் கிடைத்தால் எத்தனை விஷயங்களை நாம் அறிந்துகொள்ளலாம் என்று தோன்றியது. ///


    உண்மை தான்... நன்றி...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன்..

    ReplyDelete
  3. நல்ல அறிமுகம் சந்துரு... இனி அவரது வலைப்பூவையும் படிக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட்.
      அவருக்கு அறிமுகம் கொடுக்கும் அளவுக்கு நான் ஒன்றுமே இல்லை.
      பத்திரிக்கைகளில் எழுத முடியாத அளவுக்கு நேரக்குறைவு உள்ள அவரை இணைய வாசகர்கள் நன்கு அறிவார்கள். நான் அவருடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் இந்தப் பதிவை எழுத வேண்டும் என்று தோன்றியது.

      Delete
  4. சந்தனார்!
    என் பெயரை என் விருப்பப்படி R P ராஜநாயஹம் என்று எழுதவும்.
    நான் B.A.ஆங்கில இலக்கியம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தவன்.அதோடு மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் டிப்ளமோ வாங்கியிருக்கிறேன்.
    என்னிடம் ரொம்ப விஷயங்கள் பேசியிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் ஆதர்ஸ எழுத்தாளர் விஷயம் பற்றி இந்த பதிவில் தான் தெரிய வருகிறது.என்னால் உங்களுக்கு இப்படி ஒரு புறக்கணிப்பு என்பது வருத்தமும் வேதனையுமாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் ஸார். திருத்தி விடுகிறேன்.
      என் ஆதர்ச எழுத்தாளர் என்னை புறக்கணித்ததால் நிச்சயம் வருத்தமில்லை எனக்கு. இப்போதும் அவரது எழுத்துகளைப் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் இடையில் உள்ள உறவு விசித்திரமானது தானே.
      இருந்தாலும் அதை இப்படி பொதுவில் நான் சொல்லி இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது.
      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஸார்.
      உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அவையெல்லாம் கலாப்பூர்வமான ஆவணங்கள்.

      Delete