
தனிமைத்துயர், இறந்தகால கசப்புகளின் நிழல் படிந்து கறையான நினைவுகள் தரும் அழுத்தம் என்று அழலும் மனிதர்களின் வாழ்க்கை இலக்கியங்களிலும் சினிமாவிலும் பதிவாவதுண்டு. அவற்றை காண , படிக்க நேர்கையில் மனம் அழுந்தப்பட்டு உணர்வின் வெளியீடு கண்ணீராகி விடும். அப்படி என்னை சமீபத்தில் கண்ணீர் விட வைத்த படம் ' Into Temptation'. சிறந்த இயல்பான நடிப்பு, ஒரு வலை போல் இழைக்கப்பட்ட திரைக்கதை, சாகசங்களற்ற எளிய கதை சொல்லும் விதம் என்று நம் சினிமாக்களின் தொடும் தூரத்தை விட வெகு தொலைவில் உள்ள இப்படத்தை எனக்கு அறிமுகம் செய்த நண்பன் ஓவியன் விஜயராகவனுக்கு நன்றி. (நம்மூரில் கோழிச்சண்டை பிரதான களம் என்று விட்டு லும்பன்களின் தகராறுகளை வரலாறாக்கி சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நமக்கு அதுவே பெரிய சாதனையாக தோன்றுகிறது. யதார்த்தம். இந்த வார்த்தையை கண்டுபிடித்த மகானை தேடிக்கொண்டிருக்கிறேன். )

பாவமன்னிப்பு கோரி வரும் மனிதர்களின் குறைகளை கேட்டு ஆறுதல் வார்த்தைகளை தரும் இளம்பாதிரியாரிடம் ஒரு இளம் விலைமாது கேட்கும் பாவ மன்னிப்பு அவரை உலுக்குகிறது. தன பிறந்த நாளன்று தற்கொலை செய்யப்போவதாக சொல்லும் அவள் தனது முதல் பாவமாக சொல்லும் வார்த்தைகள் இதயத்தை கனக்க செய்கின்றன. அவளின் பனிரெண்டாவது வயதிலிருந்து அவளிடம் வல்லுறவு கொண்டிருக்கிறான் அவளது வளர்ப்புதந்தை . தனது பதிமூன்றாவது வயதிலிருந்து அதை விரும்ப துவங்குகிறாள் அவள். அவ்வளவு தான். அந்த பெண் எழுந்து சென்று விடுகிறாள். குறை கேட்கும் அறையின் சிறிய ஓட்டை வழியாக தெரியும் அவளது மார்புகளும் தொங்கும் சிலவையும் மட்டும் பாதிரியாரின் கண்ணில் படுகின்றன. விதிமுறைகளையும் மீறி அந்த பெண் யாரென்று தேடி அலைகிறார் அவர் அவளை காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் . அவள் ஒரு விலைமாது என்பதால் பக்கத்தில் இருக்கும் சிவப்பு விளக்கு பகுதிகளில் அந்த பெண் பற்றிய தகவல் கிடைக்குமா என்று தேடி திரியும் அவரை அந்த சர்ச்சுக்கு வரும் 'பக்தர்கள்' சந்தேக கண்ணோடு பார்க்கிறார்கள். கடைசியில் அவள் என்னவானாள் என்று நம்மையே யூகிக்கும்படி விட்டிருப்பது தான் இயக்குனரின் பலம்.
மிக சாதாரண ஒரு துப்பறியும் கதை போன்ற கதையோட்டதிலேயே செல்லும், படம் அதன் வீர்யமான காட்சிகள் மற்றும் தத்ரூபமான நடிப்பால் மிக சிறந்த அந்தஸ்தை பெற்று விடுகிறது. தன்னை அறியா வயதில் சீரழித்த தன் வளர்ப்பு தந்தையை , தான் தற்கொலை செய்து கொள்வதற்குமுன் சென்று சந்திக்கும் காட்சி, உலக சினிமாவின் உன்னத காட்சிகளில் ஒன்று. மரணப்படுக்கையில் இருக்கும் அவன் தன் வளர்ப்பு மகள் தன்னை எதுவும் செய்து விடுவாளோ என்று பதறி ' உனக்கு என்ன வேண்டும் ?' என்று திரும்பத்திரும்ப கேட்டுகொண்டே இருக்கிறான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். 'என்னை நீ முதன் முதலில் தொட்ட போது எனக்கு வயது பனிரெண்டு ..' என்று அவள் சொல்லும்போது வரும் பதற்றம் ..நம் மாகனுபாவர்கள் தலைகீழாய் நின்றாலும் கொண்டுவரமுடியாத பதற்றம். "இத்தனை வருடங்களுக்கு பிறகு உன்னிடம் நான் சொல்ல விரும்புவது இது தான் டொனால்ட் ..நான் உன்னை மன்னித்து விட்டேன். You are forgiven" என்று சொல்லி விட்டு வெளியேறும் அவளை பார்த்துக்கொண்டே இருக்கிறான், அந்த வளர்ப்பு தந்தை. படத்தின் முழுவதும் உயிரோட்டமான ஒளிப்பதிவும் மெல்லிய சோகத்துடன் தொடரும் இசையும் அருமை. ஒரு புறம் பாதிரியார் தனக்கு நம்பிக்கை உள்ள ஆளை துணைக்கு வைத்துக்கொண்டு சிவப்பு விளக்கு பகுதிகளில் லிண்டாவை தேடிக்கொண்டிருக்கிறார். மறுபுறம் அவள் ஒரு பாலத்தில் நின்று கொண்டு கீழே குதிக்க தயாராகும் போது முன்பு ஒரு Homeless அங்கு வருகிறார். அவளிடம் ஏதும் பணம் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே முன்னே வரும் அவரிடம் லிண்டா தன் கைப்பையை திறந்து தன்னிடம் எதுவும் இல்லை என்று காட்டுகிறாள். அருகில் வரும் அந்த மனிதன் ஒரு ஜெபமாலையை அவளுக்கு தருகிறான். நெகிழும் அவள் இன்று தனக்கு பிறந்த நாள் என்று சொல்ல அவர் அவளை அன்புடன் அணைத்துக்கொள்கிறார். தனிமையின் துணையும் தனிமை தானே. அந்த காட்சியை கண்ணில் திரளும் நீர் மறைக்காமல் யாராலும் பார்த்துவிட முடியாது. அந்த ஜெபமாலை கூட முன்பு ஒரு முறை பாதிரியார் அந்த பக்கம் வரும்போது அந்த பிச்சைக்காரருக்கு பரிசாக தந்தது. பிறகு வரும் காட்சியில் அவள் குதிக்க இருந்த பாலம் கீழிருந்து காட்டப்படுகிறது. சரியான விலாசத்தை அந்த கணத்தில் அடையும் பாதிரியாருக்கு அவள் விட்டு சென்ற அவள் புகைப்படம் மட்டும் கிடைக்கிறது. அவள் பத்து வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. கண்ணீருடன் அவளுக்கு பாவ மன்னிப்பு தருகிறார். உண்மையில் அவள் வீடு திரும்பவில்லை என்றாலும் அவள் இறந்திருக்கக்கூடாது என்று மட்டும் நம் மனம் பதை பதைக்கிறது. அது தான் இந்த படத்தை பற்றி நினைக்கையில் என்னை எப்போதும் பதற்றம் கொள்ள வைக்கிறது. கலையின் வெற்றி இது தானே.
அவளை பற்றி அவளது வாடிக்கையாளர் சொல்லும் செய்தி அவள் தன் வேலையில் மிக சிறந்தவள். அவளிடம் உச்சகட்ட சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். அது தான் அவளது ஸ்பெஷல். ஆனால் அவளால் தன் பால்யத்தில் தன் வளர்ப்பு தந்தையாலே கற்பிழந்ததை மட்டும் தாள முடியவில்லை. அது அவளின் வாழ்நாள் முழுதும் வதைதுக்கொண்டே இருக்கிறது. மனதை கனக்க செய்யும் முடிவுடன் நிறைவடையும் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே இருக்கிறேன். மனிதர்களின் உணர்வுகளை , வாழ்க்கையை படமாக்க கற்றுக்கொண்ட மேதைகளின் படைப்புகளை நம்மூரில் இந்த ஜென்மத்தில் எதிர்பார்க்க முடியாது. நண்பர்களுக்கு இந்த படத்தை பரிந்துரை செய்கிறேன்.